காசாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களை இஸ்ரேல் அழித்ததற்கு இஸ்ரேல் மீது நடவடிக்கை தேவை
வெண்பா (தமிழில்)
பாலஸ்தீன பிரதேசம் – காசா முனையில் இஸ்ரேலின் இரண்டாண்டு கால இனப்படுகொலையின்போது, ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் முழுமையான அல்லது பகுதி நிதியுதவியுடன் கட்டப்பட்ட திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகளை இஸ்ரேல் அழித்துள்ளதை யூரோ-மெட் கண்காணிப்பகம் (Euro-Med Monitor) கண்டிக்கிறது. பாலஸ்தீன சிவில் சமூக அமைப்புகள் அல்லது ஐ.நா நிறுவனங்கள், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமை (UNRWA) மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.
பௌதீக சொத்துக்களை மட்டுமல்லாமல், நீர், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி ஆகிய அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் முக்கியமான கட்டமைப்புகளையும் இஸ்ரேலின் குறிவைத்து அழித்துள்ளது. இத்தகைய இலக்கு வைத்தல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் வரம்புகளை வெளிப்படையாக மீறுவதாகும். யூரோ-மெட் கண்காணிப்புக் குழுவினால் ஆவணப்படுத்தப்பட்ட ஆரம்ப சேதங்களில், நீர் சுத்திகரிப்பு வசதிகள் (desalination facilities), மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்கள், பள்ளிகள், ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் கூடிய புனரமைப்பு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகள் ஆகியவை அடங்கும்.
குடிநீர் மற்றும் சுகாதார கட்டமைப்புகள் மீதான இத்தகைய சீர்குலைவு, தனிநபரின் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான உரிமையை நேரடியாக மீறுகிறது. பள்ளிகளை அழிப்பது குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. இதற்கிடையில், குடியிருப்புகள் இடிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடற்றவர்களாகி, கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். மிக முக்கியமான எடுத்துக்காட்டுகளில், வடக்கு காசா முனையில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ஏற்பட்ட கடுமையான சேதமும் அடங்கும். இது UNICEF-ன் நீர் திட்டங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் கட்டப்பட்டது. மேலும், Deir al-Balah-ல் உள்ள மற்றொரு ஆலையும் இதில் அடங்கும், இது பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நீர் திட்டத்தின் கீழ் (மத்திய தரைக்கடல் கூட்டமைப்பு முன்முயற்சி) நிறுவப்பட்டு UNICEF-ஆல் செயல்படுத்தப்பட்டது.
ஐ.நா அறிக்கைகள் காசா முனையில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளன அல்லது செயல்படாதவையாகிவிட்டன என்பதைக் குறிக்கின்றன. இதில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கணிசமான நிதியுதவி பெறும் UNRWA பள்ளிகளும் அடங்கும், அவை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவைகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக காசாவின் நீர் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நிதியளித்து வருகிறது. இதில் மத்திய நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் விநியோக கட்டமைப்புகளும் அடங்கும். கடலோரக் கிணறுகள், கடத்து குழாய்கள் (transmission lines), நீர்த்தேக்கங்கள் (reservoirs), மற்றும் நீரேற்று நிலையங்கள் (pumping stations) போன்ற நீர் மற்றும் சுகாதார சொத்துக்கள் பரவலான சேதத்தை அடைந்துள்ளன. இது இந்த அத்தியாவசியத் துறையில் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி திட்டங்களை நேரடியாகப் பாதிக்கிறது.
வேண்டுமென்றே நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் அளவிட முடியாத மனித துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜெனிவா உடன்படிக்கைகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கொள்கைகளின் கீழ் பாதுகாக்கப்படும் சிவில் உள்கட்டமைப்பை நேரடியாக குறிவைப்பதை கட்டுப்படுத்துகின்றன. காசா முனையில் இஸ்ரேலின் இரண்டாண்டு கால இனப்படுகொலையைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயங்குவதும் - நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே பேசி வருவதும்தான், அமைதிக்கும் நீதிக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமான நடைமுறைகளை தீவிரப்படுத்த இஸ்ரேலைத் துணிவு பெறச் செய்துள்ளது. ஐரோப்பா இஸ்ரேலின் முக்கிய வர்த்தக பங்காளியாகவும், ஆயுதங்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் இருக்கும் அதே வேளையில், இஸ்ரேலிய ஆயுத ஏற்றுமதிக்கான முதன்மை சந்தையாகவும் செயல்படுகிறது.
ஐரோப்பிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் பற்றிய அறிக்கைகள், இனப்படுகொலைக்கு இணையானவை என ஒப்புக்கொள்ளும் பொது அறிக்கைகள் ஆகியவை இருந்தபோதிலும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் செயலற்ற தன்மை மூலம் இஸ்ரேலின் மீறல்களுக்கு அரசியல் மற்றும் சட்டரீதியான மறைமுக ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இஸ்ரேலின் கொள்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து மௌனம் காப்பது, அதன் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் அது நீண்ட காலமாக உறுதிப்படுத்திய சட்டரீதியான, அரசியல் மற்றும் தார்மீகக் கடமைகளைப் புறக்கணிப்பதைக் காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-இஸ்ரேல் கூட்டு ஒப்பந்தத்தின் (EU–Israel Association Agreement) பிரிவு 2-இன் படி, மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இருதரப்பு உறவுகளின் அடிப்படை நிபந்தனையாகும்.
இஸ்ரேலால் சர்வதேச மனிதாபிமான சட்டம் தீவிரமாக மீறப்பட்டதற்கான வலுவான - தெளிவான ஆதாரங்களை ஐரோப்பிய ஆய்வுகள் மீண்டும் மீண்டும் கண்டறிந்த போதிலும், ஐரோப்பிய ஆணையம், கவுன்சில் அல்லது பாராளுமன்றம் வர்த்தக சலுகைகளை நிறுத்தி வைப்பது, ஒத்துழைப்பு கட்டமைப்புகளை முடக்குவது அல்லது சர்ச்சை தீர்வு வழிமுறையில் ஈடுபடுவது போன்ற வாய்ப்புள்ள எந்தவொரு வழிமுறைகளையும் செயல்படுத்தவில்லை. இத்தகையப் போக்கு இஸ்ரேலிய மீறல்களுக்கு நன்றாக உதவுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்ட சட்ட மற்றும் தார்மீகக் கடமைகளை இது அப்பட்டமாக மீறுவதாகும்.
இஸ்ரேலுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த ஐரோப்பா தவறியதானது ஆபத்தான செய்தியை அனுப்புகிறது: ஐரோப்பிய நிதியுதவி சொத்துக்களை அழிப்பது, பொதுமக்களை அச்சுறுத்துவது போன்றவை அரசியல் அல்லது சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதுமில்லாமல் மேலும் தொடரக்கூடும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பேணுவதற்கான அதன் கோரிக்கையை பலவீனப்படுத்துகிறது. அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த ஒவ்வொரு ஐரோப்பிய நிதியுதவி திட்டத்திற்கும், மாற்றுச் செலவுகள் மற்றும் தற்காலிக இயக்கச் செலவுகள் உட்பட, இஸ்ரேல் முழுமையான நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட வேண்டும். காசாவில் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி சொத்துக்களின் இழப்புகளுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பது குறித்த விரிவான பொது அறிக்கையுடன், அதிகாரப்பூர்வ ஐரோப்பிய விசாரணை தொடங்கப்பட வேண்டும். இதுபோன்ற உத்தரவுகளை வழங்கிய அல்லது செயல்படுத்திய சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது உரிய மன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். மேலும், தொடர்புடைய சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் யூரோ-மெட் கண்காணிப்பகம் அழைப்பு விடுக்கிறது.
இந்த சூழலில் இழப்பீடு என்பது வெறும் நிதி இழப்பீடு மட்டுமல்ல; இது சர்வதேச ரீதியில் சட்டவிரோத செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. மேலும், மீண்டும் மீண்டும் குண்டுவீச்சு, புல்டோசர் மூலம் இடித்தல் மற்றும் குறிவைத்தல் ஆகியவற்றால் முடமாக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான பாலஸ்தீனியர்களின் அணுகலை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். ஐரோப்பிய ஆணையம் மற்றும் உறுப்பு நாடுகள் மூலம் நேரடியாகவோ அல்லது UNRWA, ஐ.நா நிறுவனங்கள் மற்றும் கூட்டு அமைப்புகள் மூலம் மறைமுகமாகவோ ஐரோப்பிய பொது நிதியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் முழுமையான - உடனடி இழப்பீடு வழங்க இஸ்ரேலை ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயப்படுத்த வேண்டும்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் வெற்று கண்டனங்களை கடந்து, வாய்ப்புள்ள கருவிகளைப் பயன்படுத்தி உறுதியான நடவடிக்கைக்கு மாற வேண்டும். அவற்றில் முதன்மையானது இஸ்ரேலுடனான கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது ஆகும். அத்துடன், பாதுகாக்கப்பட்ட சிவில் சொத்துக்களை குறிவைத்ததற்கும், மனிதாபிமான உதவிகளைத் தடுத்ததற்கும் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதை உறுதிசெய்ய சர்வதேச மற்றும் ஐரோப்பிய விசாரணைகளை ஆதரிக்க வேண்டும். யூரோ-மெட் கண்காணிப்பகம், பாலஸ்தீனிய வளர்ச்சியில் முதலீட்டைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இத்தகைய அழிவினை சாக்குப் போக்க்காக்கி, நிவாரணம் மற்றும் சேவை திட்டங்களைக் குறைப்பதன் மூலம் மக்களைத் தண்டிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பாதிக்கப்பட்டவர்களை இருமுறை தண்டிப்பதாகும். அத்தியாவசிய சிவில் உள்கட்டமைப்பிற்கான ஆதரவைக் குறைப்பதற்குப் பதிலாக, விரிவான பொருளாதார, அரசியல் மற்றும் சட்டரீதியான அழுத்தம் மூலம் ஆக்கிரமிப்பாளரை தண்டிக்க வேண்டும் என்பதில் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய துறைகளான நீர், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி ஆகியவற்றில் உடனடி மீட்பு மற்றும் புனர்வாழ்வு திட்டங்களுக்கு அவசர நிதி தேவைப்படுகிறது. அத்தகைய வசதிகளின் தொடர் சேவையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/10/eu-must-hold-israel-accountable-for-destruction-of-european-funded-projects-in-gaza/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு