2023 இல் ஒர் உலகளாவிய மந்தநிலை ஏன் தவிர்க்க முடியாததாக இருக்கிறது

தமிழில் : விஜயன்

2023 இல் ஒர் உலகளாவிய மந்தநிலை ஏன் தவிர்க்க முடியாததாக இருக்கிறது

இக்கட்டுரை உலக மந்தநிலைக்கு காரணமாக ரஷ்ய -சீன ஏகாதிபத்தியங்களை மட்டும் குற்றம் சாட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. இது தவறான பார்வை, விமர்சனத்துக்குரியது. மந்தநிலைக்கு காரணமான ஏகாதிபத்திய மறுபங்கீட்டு போட்டிகளை வெளிப்படுத்துவதால் இத்தளத்தில் விவாதத்திற்காகவும் செய்திக்காகவும் வெளியிடுகிறோம்

- செந்தளம் செய்திப்பிரிவு

புவிசார் அரசியல் பிரச்சினை, ஆற்றல் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலை முதலான பலத்த அடிகளை வாங்கிய உலகம் தடுமாறி வருகிறது.

காலின்ஸ் ஆங்கில அகராதியின் ஆசிரியர் குழு 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக "நிரந்தர நெருக்கடி – பெர்மாக்ரிசிஸ்(permacrisis)" என்ற வார்த்தையை அறிவித்துள்ளனர். "உறுதியின்மையும், உத்திரவாதமின்மையும் நீடித்து நிலைபெற்று விட்ட காலக்கட்டத்தை" இவ்வாறு வரையறுக்கிறார்கள். இது 2023-ம் வருடம் துவங்கயிருக்கிற நிலையில் இன்றைய உலக நிலையை மிகச் சரியாக விளக்கும் ஒரு மட்டமான ஒட்டுச் சொல்லாகும். உக்ரைன் மீது விளாதிமிர் புதின் தொடுத்த ஆக்கிரமிப்பு போர் என்பது 1945 க்கு பிறகு ஐரோப்பாவில் ஒரு மிகப்பெரிய தரைவழிப் போருக்கு வழிவகுத்துள்ளது; கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு இன்னொரு அணுஆயுதப் போர் ஏற்படுவதற்கான ஆபத்தும் உருவாகியுள்ளது. மேலும், 1930 களுக்கு பிறகு பாரதூரமான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய வகையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. 1980 களுக்கு பிறகு, உணவுப் பொருள்களின் விலையும், எரிபொருள்களின் விலையும் அதிகரித்ததால் பல நாடுகளில் பணவீக்கம் பன்மடங்கு அதிகமாகியுள்ளது. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த முயலும் மத்திய வங்கிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை நிலைபடுத்துவதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது எனலாம். நாட்டின் எல்லைகள் பரஸ்பரம் மதிக்கப்படும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது, பணவீக்கம் குறைவாகவே இருக்கும், பணக்கார நாடுகளில் மின்வெட்டு என்பதே இராது என்பன போன்று பல பத்தாண்டுகளாக இருந்து வந்த கற்பிதங்கள் அனைத்தும் ஒரே நொடியில் நொறுங்கிபோனது.

இத்தகையதொரு முரண்பாடு தோன்றுவதற்கு மூன்று  காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் புவிசார் அரசியல் ஏற்படுத்திய தாக்கமே பிரதானமானதாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட உலகை, மிகவும் வெளிப்படையாக புதின் தலைமையிலான ரஷ்யா எதிர்த்து வருகிறது, மேலும் ஜி ஜின்பிங் தலைமையிலான சீனாவோ அதிதீவிரமாக எதிர்த்து வருவதால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீர்மானகரமான பதிலடி கொடுத்துள்ளதென்பது "மேற்குலகு நாடுகள்", குறிப்பாக அட்லாண்டிக் கூட்டமைப்பு நாடுகளின் ஒற்றுமை உணர்வை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. எனினும், அது மேற்குலக நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்திவிட்டது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளை ஆதரிக்காத நாடுகளில் தான் வாழ்கின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமான உலக ஒழுங்கையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சர்வதேச விதிகளையும் சீனா வெளிப்படையாக மறுத்து வருகிறது. மிகப் பெரிய பொருளாதாரங்களை கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியிலான பிணைப்பில் தொடர்ச்சியாக விரிசல் ஏற்பட்டு வருகிறது; தைவான் மீது சீனா ஆக்கிரமிப்பு போர் தொடுக்கும் என்ற கூற்று இனியும் நம்புதற்கு அரிய விசயமாக இருக்காது. அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத கூட்டணி போன்ற நீண்டகால புவிசார் அரசியல் நலன்களை கொண்ட நம்பிக்கை உடன்படிக்கைகளிலும் விரிசல்கள் உருவாகியுள்ளன.

உக்ரைன் போர், 1970 களுக்கு பிறகு கடுமையான விலையேற்றத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச எரிசக்தி கட்டமைப்பை மின்னல் வேகத்தில் மறுசீரமைக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. உணவுப் பொருள் ஏற்றுமதியில் மிக முக்கிய நாடாக விளங்கிய உக்ரைனில் ஒடெசா துறைமுகம் மீதான முடக்கம் நீங்கும் வரை, ஒரு உலகளாவிய பஞ்சம் ஏற்படும் அபாயம் நீடித்து வந்தது என்றே சொல்லலாம். இப்போதும் கூட, பல நாடுகளுக்கு எங்கோ வெடித்த போரின் உடனடி விளைவாக தங்களது நாட்டில் உணவுப் பொருள்களின் விலையும், உரப்பொருள்களின் விலையும் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து விடுகிறது. எரிசக்தி ஏற்றுமதியை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவதற்கே புதின் விரும்புகிறார். ரஷ்யாவின் ஹைட்ரோகார்பன் எரிவாயுவையே ஐரோப்பா பெரிதும் சார்ந்துள்ளது என்பதே தற்போது அம்பலமாகியுள்ளது. மின்னாற்றல் அதிகம் பயன்படுத்தும் ஐரோப்பாவின் தொழில்துறையை ஒரே நாளில் முடக்கிப்போட்டதோடு, அந்நாட்டு அரசாங்கங்கள் பாதிக்கப்படும் மக்களுக்காக பல பில்லியன்களை செலவழிக்க வேண்டிய நிர்பந்தமும் எழுந்துள்ளது. மேலும் பிற நாடுகளிலிருந்தும் பிற வழிகளிலிருந்தும் தங்களுக்கு தேவையான எரிசக்தியை பெறுவதற்கான போராட்டத்தில் குதித்துள்ளனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு முதல் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்பத் தாக்க அலைகள் வரை ஒரு வருடத்திற்குள்ளாக மட்டுமே காலநிலை மாற்றத்தின் விளைவுகள் அனைத்தும் கண்கூடாக தெரிகின்றன. எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி பேசி வந்த ஐரோப்பிய அரசியல்வாதிகளை கூட முடக்கி வைத்திருந்த நிலக்கரி ஆலைகளை மீண்டும் இயக்கத் தூண்டியுள்ளது. குறைந்த விலையில், தொடர்ச்சியாக எரிசக்தி பெறுவது, சுற்றுச்சூழலை பாதிக்காமால் தக்கவைப்பது என்ற போராட்டத்திற்கு இடையேதான் கடுமையான வர்த்தக தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

தொற்றுநோய் பாதிப்பு முதல் தொட முடியாத விலையேற்றம் வரை

விலையேற்றம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை சீர்குலைத்ததோடு மூன்றாவது பாதிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது. தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் ஏற்பட்ட விநியோக சுணக்கத்தால் அரசு முதலீட்டை கொண்டு உருவாக்கப்பட்ட தேவையும்(demand) இந்த(2022)ஆண்டின் தொடக்கத்தில் நுகர்வுப் பொருட்களின் விலையேற்றத்திற்கே இட்டுச் சென்றது. எனினும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் ராக்கெட் வேகத்தில் ஏறியதால், அவ்வப்போது காணப்பட்ட பணவீக்கம் ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் உயரத் தொடங்கியது. உலகிலேயே மிகப்பெரிய மத்திய வங்கியான அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி தனது முன்னாள் ஆளுநரான வோல்கர் வகுத்துத் தந்த அணுகுமுறை தாமதமாகவே கையிலெடுத்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவரால் தடாலடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகித அணுகுமுறையை பயன்படுத்தி தற்போதும் உயர்த்தி வருகிறார்கள். எனினும் இந்த(2022) வருடம் முடியப்போகிறது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான நம்பிக்கை ஒளியோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தாலும் கூட தென்படவில்லை: உலகளாவிய பணவீக்கம் இரட்டை இலக்கங்களிலே இருந்து வருகிறது என்றாலும் கூட 1970களின் தேக்கவீக்க நெருக்கடியோடு ஒப்பிடுவது கவலையளிப்பதாக இருந்தாலும் அதுவே மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்? புவிசார் அரசியல், எரிசக்தி நெருக்கடி மற்றும் பொருளாதாரம் தேக்கம் என்ற இந்த மூன்று பாதிப்புகளும் எவ்வாறு உருவாகின்றன, மேலும் அவை எவ்வாறு ஒன்றையொன்று பாதிக்கின்றன என்பதைப் பொறுத்தே அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியும். குறுகிய காலத்தில் பாதிப்பு என்பது மிகக் கடுமையானதாகவே இருக்கும். 2023 இல் உலகின் பெரும்பாலான பகுதியில் பொருளாதார மந்தநிலையே நீடிக்கும், மேலும் பல இடங்களில் பொருளாதார பலவீனம் புவிசார் அரசியல் முரண்பாடுகளை தீவிரப்படுத்தலாம். இது போன்றதொரு கோரமான நிலைமையே ஐரோப்பா முழுவதும் நீடிக்கிறது. லேசான இலையுதிர் காலத்தில் ஏற்பட்ட எரிசக்தி விலையின் சரிவைக்கூட தாக்குப்பிடிக்க முடியாத ஐரோப்பிய நாடுகள் இந்த ஆண்டும்(2022-23) அடுத்த ஆண்டும்(2023-24) கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்கிற போது நிலைமை இன்னும் மோசமானதாகவே இருக்கும். பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே மந்தநிலையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன. பணவீக்கத்தைக் குறைப்பதற்கு வட்டி விகிதங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும். எனினும் இது மக்களின் வாங்கும் திறனை மேலும் குறைப்பதோடு வேலையின்மையையும் அதிகரிக்கச் செய்யும்.

ரஷ்யா நினைத்தமாத்திரத்தில் எரிசக்தி விலையை அதிகப்படுத்தவும், தொடர் மின்வெட்டு என்ற நிலையைக் கூட உருவாக்க முடிகிறது. இதுவரையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் பெருமளவில் மானியங்கள் கொடுத்தும், விலை கட்டுப்பாடுகள் விதித்தும் மக்களை மிக மோசமான எரிசக்தி விலையேற்ற பாதிப்பிலிருந்து பாதுகாத்து வந்தன. இது நீண்ட காலத்திற்கு தொடராது. இங்கிலாந்தின் நிலைமையோ மிகவும் மோசமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட நிரந்தர சீர்குலைவும், பிரதமர் லிஸ் டிரூஸ் அவர்களின் அதிரடியான வருவாயில்லா வரிக் குறைப்புத் திட்டத்தால் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது. இந்த பிரதமரின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு பிறகு சந்தை சக்திகளின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய நிர்பந்தத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இந்த நாடு மிக மோசமான மந்தநிலையைச் எதிர்கொண்டு வந்தாலும் கூட பணக்கார நாடுகளின் G7 கூட்டமைப்பில் மிகப்பெரிய நிதி சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டே ஆக வேண்டும். பிரிட்டனுக்குப் போட்டியாகவும் நீண்டகாலமாக ஐரோப்பிய கண்டத்தில் பின்னடைவை சந்தித்து வரும் நாடான இத்தாலியின் நிலைமையும் கவலையளிப்பதாகவே உள்ளது.

போர்க்களத்தில் வெற்றிபெற முடியாத புதின், இந்த ஐரோப்பிய நாடுகளின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ள கடினமாக முயற்சி செய்கிறார். இது மிகப் பெரிய புவிசார் அரசியல் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது, இதுவே ரஷ்யாவின் போர் தந்திரம் என்பது உக்ரைன் போரில் முன்னமே தெளிவாகத் தெரிந்தது. உக்ரைனில் குளிர்காலம் நெருங்கி வருவதால் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைப்பதற்கு ரஷ்யா இரண்டு மடங்கு தீவிரமாக வேலை செய்து வருகிறது. எரிசக்தி விநியோகத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதன் மூலம் மேற்கு ஐரோப்பாவில் உக்ரைன் நாட்டிற்கு துணை நிற்கும் நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்கு புதின் அவர்கள், இதுவரை எடுத்து வந்த முயற்சிகள் தோல்வியையே சந்தித்துள்ளன. இதுமட்டுமல்லாது புதின் ஒரு படி மேலே சென்று எல்லா (சிலவற்றைக் மட்டுமல்லாமல்) எரிசக்தி விநியோகத்தையும் துண்டிப்பதன் மூலமோ அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான எரிசக்தி குழாய்களை நாசப்படுத்துவதற்கும் கூட துணியலாம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி உலக நாடுகள் மத்தியில் அவப்பெயரை சந்திப்பதை விட இதுபோன்ற தந்திரமான வழியில் தாக்குதல் தொடுப்பதென்பது மிகக் குறைவான கண்டனத்தை பெறும். எவ்வாறிருந்தாலும் ஐரோப்பாவில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருகின்றன என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

இரண்டாவதாக, அடுத்த ஆண்டு பொருளாதார பலவீனம் காரணமாக புவிசார் அரசியல் முரண்பாடுகள் கூர்மையடையும் இடம் ஒன்று உருவாகுமென்றால் அது சீனாவாகத்தான் இருக்கும். ஜி ஜின்பிங் தனது கோவிட் ஒழிப்பு யுத்தியை கறாராக பின்பற்றவதும் பெருமளவில் சீர்குலைவை உருவாக்கிய சொத்து நெருக்கடியைச் சமாளிக்கத் தவறியது என்பன போன்ற கொள்கை ரீதியிலான தவறுகளால் பலவீனமான பொருளதார செயல்பாடுகளுடன்தான் சீனாவும் 2023 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. அதே நேரத்தில் ஜி ஜின்பிங் தனது ஆக்கிரமிப்பு நோக்கங் கொண்ட, தேசியவாத வெறியை, குறிப்பாக தைவான் விவகாரத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அக்டோபரில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் கட்சி மாநாட்டில், தனது கட்டுப்பாடுகளற்ற அதிகாரக் குவிப்பை முறையாகப் கைப்பற்றிக்கொண்ட ஜி ஜின்பிங், பொங்கி எழவிருக்கும் "ஆபத்தான புயல்கள்" பற்றி எச்சரிக்கை செய்ததோடு தைவானில் "அந்நிய நாடுகளின் தலையீடு" தொடர்புடைய "கீழ்த்தரமான சீண்டிப் பார்க்கும் நடவடிக்கைகளை" குறிப்பிட்டு பேசியிருந்தார். திறமையை விட அவர் விசுவாசத்தையே பெரிதும் மதிப்பவராக இருக்கிறார். அவரைச் சுற்றி அனுபவம் வாய்ந்த பொருளாதார தொழில்நுட்ப வல்லுநர்கள் எவருமே இல்லை. 2023 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரச் சிக்கல்கள் மோசமடைந்தால், தைவான் பிரச்சினை கையிலெடுக்கப்பட்டு போர்வெறிக் கூச்சல்கள் மூலம் மக்களின் கவனம் பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து சிதறடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது 2023 ஆம் ஆண்டில் சீனா அல்லது ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு நாட்டையும் விட அடிப்படையில் வலுவானதாகவே இருக்கும். ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அதிரடியான வட்டி விகித அதிகரிப்பு அமெரிக்காவின் பொருளாதார செயல்பாடுகளை மந்தப்படுத்தியிருந்தாலும் தொழிலாளர் சந்தை இன்னும் வலுவாகவும், உள்நாட்டுச் சேமிப்புகள் ஏராளமாகவும் இருப்பதால், இதன் பாதிப்பு குறைவான ஒன்றாகவே இருக்கும். பெட்ரோல் விலைவாசி அதிகரிப்பு பணவீக்க விகித்தை உயர்த்தி பைடன் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. என்றாலும் கூட அமெரிக்காவில் அதிக அளவில் எரிசக்தி உற்பத்தி செய்யப்டுவதால் இந்த ஆண்டு நுகர்வுப் பொருட்களின் விலையேற்ற பாதிப்பினால் பெரும் பயனடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பலவீனத்தை விட அந்நாட்டின் ஒப்பீட்டளவிலான பொருளாதார வலிமை உலக நாடுகளுக்கு ஒரு சிக்கலையே உருவாக்கக்கூடும். பணவீக்க பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி மென்மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியுள்ளது. இதன் மூலம் டாலரின் வலிமையை வலுப்படுத்துவதோடு, பிற நாடுகளின் மத்திய வங்கிகளையும் அவ்வாறே செய்யத் தூண்டுகிறது. உள்நாட்டில், பொருளதாரம் சிறிதளவு வீழ்ச்சி கண்டாலும் கூட அமெரிக்காவில் வழக்கம்போல சட்டமன்ற முடக்கப்படுவதோடு நின்றுவிடாமல் ஒரு படி மேலே சென்று எதிர்க்கட்சியினர் விஷத்தை கக்கும் அரசியலில் ஈடுபடும் பேராபத்தும் இருக்கவே செய்கிறது. இப்படியொரு நிலைமையில், உக்ரைனுக்காக நீண்ட உதவும் கரங்கள் குறுக்கப்படும். மேலும் தைவான் விவகாரத்தில் களத்தில் இறங்கி விடாப்பிடியாக போராடுவதற்கான கோரிக்கைள் எழுவது அதிகமாகும். உக்ரைனுக்கான உதவிகள் குறைந்தால் அது புதினுக்கு ஆனந்தமளிக்கும்; தைவான் விவகாரத்தில் களமிறங்கினால் ஜி ஜின்பிங்கை சன்டைக்கு அழைப்பது போன்று அமைந்துவிடும்.

ஒவ்வொரு நெருக்கடியும் புதிய வாய்ப்புகளை தோற்றுவிப்பதால், இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சில நல்ல செய்திகள் உள்ளன.

சுருக்கமாக சொல்வதென்றால், 2023 கடினமான, நெருக்கடி நிறைந்த ஆண்டாக இருப்பதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. ஆனால் ஒவ்வொரு நெருக்கடியும் புதிய வாய்ப்புகளை தோற்றுவிப்பதால், இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சில நல்ல செய்திகள் உள்ளன. சில நாடுகள் பெருமந்தக் காலத்திலும் செழித்து வளரும். எடுத்துக்காட்டாக வளைகுடா நாடுகள் அதிக விலைக்கு விற்கப்படும் எரிசக்தியில் பெறும் லாபம் பார்ப்பது மட்டுமல்லாது, நிதி மூலதனத்திற்கான பணிமனையாக செயலாற்றி வரும் அந்நாடுகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாலும் செழித்து வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் சீனாவை முந்திச் சென்று உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; தள்ளுபடி விலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை பெறுவதற்கு இந்தியா ஆர்வம் காட்டுவது, வளர்ந்து வரும் உள்நாட்டு முதலீடு மற்றும் சீனாவை சார்ந்த விநியோகச் சங்கிலியை பலதரப்பட்டதாக மாற்ற விரும்பும் வெளிநாட்டினரின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்புவதாக சொல்லப்படுவதெல்லாம் வளர்ச்சிக்கான நம்பிக்கை மையமாக இந்தியா விளங்கக்கூடும். பரந்த அளவில் பார்த்தோமானால், அதிகரித்த வட்டி விகிதங்களும் உலகளாவிய மந்தநிலையும் ஏற்பட்ட முந்தைய காலங்களை விட ஒப்பீட்டளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கும்.

உலகை உலுக்கி வரும் பொருளாதார நெருக்கடி நீண்டகாலமாக சொல்லப்பட்டு வந்த சில நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பணவீக்கம் படிப்படியாக, பெரும் போராட்டத்திற்கு பிறகு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதால், மத்திய வங்கி நிர்வாகிகள் தங்கள் சாதூரியத்தின் மூலம் எவ்வளவு காலம் இவ்வாறு தள்ளிப்போட முடியும் என்று கேள்விக்குறியுடன் நிற்கிறார்கள். பணவீக்கத்தை  2% வைத்திருக்க வேண்டும் என்று அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு அருகில் கூட சில நாடுகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இது உண்மையில் சரியான இலக்கு தானா என்பது குறித்து அதிகரித்த அளவில் வெளிப்படையாக வாத விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

உக்ரைன் வசம் இருக்கும் நம்பிக்கை சுடர்

இதற்கிடையில், எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை நோக்கி மாறிச் செல்வதற்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது: சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல், "எரிசக்தி விநியோக வரலாற்றில் ஒரு திருப்புமுனை" என்று வர்ணித்துக் கூறியதோடு இது "மாசில்லா ஆற்றலை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். அதே நேரத்தில், நெருக்கடியானது புதைபடிவ எரிபொருட்களின் தற்போதைய பங்கு பற்றியும் குறிப்பாக மாசில்லா எதிர்காலத்தை நோக்கி மாறிச்செல்வதற்கான இடைக்கால எரிபொருளாக இயற்கை எரிவாயு முக்கிய பங்கு வகிக்கிறது என்ற மறுக்கமுடியாத உண்மைகளை எடுத்துக்காட்டுகிறது. தங்களது நாட்டின் தேவைக்காக கூட எரிபொருள் பெறுவதற்கு முடியாமல் தத்தளித்து வருவதை பார்க்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி ஏழை நாடுகளில் எரிசக்தி திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு நீண்ட காலமாக மறுத்து வந்த ஐரோப்பிய நாடுகளின் வெளிவேஷம் களைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால், அம்பலப்பட்டு போன முரண்பாட்டின் விளைவாக மாசில்லாத, மிகவும் மாறுபட்ட, மிகவும் பாதுகாப்பான சர்வதேச எரிசக்தி கட்டமைப்பு உருவாகட்டும்.

இந்த ஆண்டு(2022) நெருக்கடிகளால் ஏற்பட்ட நீண்டகால புவிசார் அரசியல் பாதிப்புகளை முன்கூட்டியே ஊகிப்பதென்பது கடினமான காரியமாகும். உக்ரைனில் என்ன நடந்தாலும், அந்நாட்டையே அழித்தொழிக்க நினைக்கும் புதினின் மூலயுக்தி மண்ணைக் கவ்வும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு மாறாக, உக்ரைன் இராணுவமோ மேற்குலக நாடுளைச் சார்ந்து நின்று ஐரோப்பிய கண்டத்திலே மிகப்பெரிய இராணுவமாகவும், போரில் கைதேர்ந்த இராணுவமாகவும் உருவாகி நிற்கும். அது நேட்டோவிற்கு வெளியே இருந்தாலும் கூட, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ரீதியிலான பலாபலன்களை தலைகீழாக மாற்றிவிடும் என்பதே  உண்மை. உக்ரைனின் வெற்றி இன்னொரு ஆக்கிரமிப்பு வெறி கொண்ட நாட்டிற்கு அச்சத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறிருக்க, ரஷ்யாவிற்கு எதிரான மேற்குல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதற்கு பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகள் மறுத்துள்ளது; இது ஜனநாயகத்தின் பாற்பட்ட சுதந்திரம், சுயநிர்ணய உரிமைக்காக போராடும் உலக மக்களின் உரிமைகளுக்கு வேட்டுவைப்தாகவே உள்ளது. 2023 வரவிருக்கிறது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலைமை இன்னும் ஒழியவில்லை மாறாக அது வேறு வடிவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

- ஜானி மிண்டன் பெடோஸ்: தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர்

இந்தக் கட்டுரை எகனாமிஸ்ட் பத்திரிகையின் செய்தி பிரிவான தி வேர்ல்ட் அஹெட் 2023 என்ற அச்சு நாளிதழில், தலைவர்கள் பகுதியில் “உலகை உலுக்கிய மூன்று பாதிப்புகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.economist.com/the-world-ahead/2022/11/18/why-a-global-recession-is-inevitable-in-2023?utm_medium=social-media.content.np&utm_source=facebook&utm_campaign=editorial-social&utm_content=discovery.content