DOGE’ன் அடுத்த தாக்குதல், USIPக்கு மூடுவிழா
தமிழில்: விஜயன்

கடந்த வாரம், வாஷிங்டன், டி.சி.-யில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனைக் கூடமான ஐக்கிய அமெரிக்க அமைதி நிறுவனம் (United States Institute of Peace - USIP), எலான் மஸ்கின் அரசாங்கச் செயல்திறன் துறையால் (Department of Government Efficiency - DOGE) திடீர் முற்றுகைக்கு உள்ளானது. USIP அமைப்பானது ஆராய்ச்சி, பண்பாடு மற்றும் தேசியப் பாதுகாப்பு போன்ற இன்றியமையாத துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று, USIP வளாகத்தில் காவலுக்கு நின்ற துப்பாக்கி ஏந்தியிருந்த பாதுகாப்புப் படையினர், DOGE குழுவினர் உள்ளே நுழைவதைத் தடுத்தனர். இருப்பினும், திங்கள்கிழமை, மார்ச் 17ஆம் தேதியன்று, DOGE குழுவினர் ஒன்றிய புலனாய்வுப் பணியகம் (FBI) மட்டுமல்லாது வாஷிங்டன் டி.சி. பெருநகரக் காவல்துறையினரின் உதவியுடன் மீண்டும் வந்தனர். அங்கு நிலவிய பதற்றமான சூழலுக்குப் பின்னர், அவர்கள் பலவந்தமாக உள்ளே நுழைந்தனர்.
கட்டுப்பாட்டைத் தம் வசப்படுத்தியவுடன், DOGE குழுவினர் USIP-யின் தற்காலிகத் தலைவரும், முன்னாள் தூதருமான ஜார்ஜ் ஈ. மூஸ் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கியதுடன், உடனடியாக அந்தக் கட்டிடத்தையும் மூடினர். இயக்குநர் குழுவால் நியமிக்கப்பட்ட கென்னத் ஜாக்சனை புதிய தற்காலிகத் தலைவராக அவர்கள் நியமித்தனர்.
USIP பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கென்னத் ஜாக்சன் மற்றும் சில DOGE ஊழியர்கள் மட்டுமே கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தத் தனியார் இலாப நோக்கற்ற நிறுவனத்தின் தலைவர் மூஸ், தங்கள் நிறுவனத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் அல்லது ஒன்றிய அரசின் எந்தவொரு அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தினார். அவ்வகையில், அரசு உள்ளே நுழைந்து தங்கள் நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு எந்த "உரிமையும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும், DOGE அமைப்பின் கையகப்படுத்தல் "சட்டவிரோதமானது", ஏனெனில் தனியார் நிறுவனத்தின் மீது அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால் இவ்வாறு நடப்பதற்கு சாத்தியமேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பிரபலமான கட்டிடத்தின் அனைத்துப் பூட்டப்பட்ட நுழைவு வாயில்களிலும் தற்போது "தனிப்பட்ட சொத்து" என்ற அறிவிப்புப் பலகைகள் ஒட்டப்பட்டுள்ளன. முறையான அனுமதியின்றி நுழைய முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றன. அலுவலகத்திற்குள் இருந்த நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இன்று அந்தப் பரந்த, பெரும்பாலும் காலியாக இருந்த கட்டிடத்திற்குள் ஒரு சில நபர்கள் மட்டுமே காணப்பட்டனர். அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் செயல்படும் அந்தத் தனியார், அரசு சாரா நிறுவனத்தை "மேலும் நிர்வாகத் திறன்மிக்கதாக" மாற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் USIP அமைப்பை மூடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தால் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய அமெரிக்க அமைதி நிறுவனம் (USIP), அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கட்சி சார்பற்ற அதே நேரத்தில் தன்னாட்சி பெற்ற ஓர் அமைப்பாகும். பிற நாடுகளில் நிகழும் வன்முறை மோதல்களைத் தடுத்து நிறுத்துவதோடு, அமைதி உடன்படிக்கைகளை எட்டுவதற்கு உதவி செய்வதன் மூலமும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்கா அதிக பொருட்செலவு மிக்க அயல்நாட்டுப் போர்களில் அதாவது பெரும்பாலும் தீவிரவாதம், குற்றவாளி கும்பல்கள் மட்டுமல்லாது பாரிய இடப்பெயர்வுகளுக்கும் காரணமாக அமையும் போர்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதன் மூலம், இவ்வமைப்பின் முயற்சிகள் அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவும்கூட துணை செய்துள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், USIP தனது பணியை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்திடமிருந்து $55,459,000 நிதியுதவி கோரியுள்ளது. ஜனநாயகக் கோட்பாடுகள் மூலம் மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அமெரிக்க எதிரிகளின் தீங்கு விளைவிக்கும் செல்வாக்கைக் குறைப்பதற்கும் எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் எடுத்துக்காட்டுவதன் மூலம், தங்களுடைய குறைந்த செலவிலான திட்டங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று அவ்வமைப்பு குறிப்பிடுகிறது.
போர் மற்றும் வன்முறையினால் ஏற்படும் மிக அதிக செலவுகளுடன் ஒப்பிடும்போது, அவற்றைத் தடுப்பதற்காகக் கோரப்படும் இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானதாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய இழப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு காப்பீட்டுத் திட்டம் போல, அமைதியை மேம்படுத்தவும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கவும் இது குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த வழியாகக் கருதப்படலாம்.
அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரையும் கருத்தில் கொள்ளும்போது, ஒரு அமைதிக்கான நிறுவனத்தை எந்தச் சூழலிலும் முழுமையான செயல்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்காவின் உயரிய நலன்களுக்கு இன்றியமையாதது ஆகும். அமெரிக்காவின் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் போர்கள் மற்றும் வன்முறை மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கெனவே அர்ப்பணிக்கப்பட்டுள்ள இத்தகையதொரு மதிப்புமிக்க நிறுவனத்தை மூடுவது, 'அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்' (Making America Great Again) என்ற குறிக்கோளுக்கு முற்றிலும் முரணானது.
அமெரிக்க அமைதி நிறுவனம் (USIP) உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் சிலவற்றில் செயல்பட்டு வருகிறது. வன்முறை மோதல்களைத் தடுக்க அல்லது குறைக்கப் பணியாற்றுவோருக்குப் பயிற்சி, வழிகாட்டுதல் வழங்குவதோடு வளங்களையும், பகுப்பாய்வுகளையும் வழங்குவதன் மூலம் இது இன்றியமையாத நிபுணத்துவத்தை அளிக்கிறது. விரிவான ஆய்வு, ஆழமான பகுப்பாய்வு மட்டுமல்லாது களத்தில் பெற்ற நடைமுறை அனுபவங்களை ஒருங்கிணைத்து, 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சவாலான சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த USIP அமைப்பு துணை செய்கிறது. இதன் பணி உண்மையில் அளப்பரியது.
"இந்த உன்னத நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த அமைப்பு தொடர்ச்சியாகவும் மிகச் சரியான வகையிலும் பொதுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறது, மேலும் விரிவான தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வுகளிலும் வெளியீடுகளிலும் அரசாங்கப் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் மட்டுமல்லாது அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்; இவர்கள் இந்த அமைப்பின் அதிகார வரம்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் பங்கு கொண்டவர்கள்.
வாஷிங்டனில் மட்டுமல்லாமல் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களுக்கும் இந்தத் தனியார் அமைப்பின் பணி மிகவும் இன்றியமையாததாக விளங்கியுள்ளது. குறிப்பாக, சர்வதேச நிகழ்வுகள் அதிவிரைவாகவும், கணிக்க முடியாத வகையிலும் தொடர்ந்து மாறிவரும் இன்றைய சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பினை முடக்குவது அதன் அடிப்படையான செயல்பாடுகளை வெகுவாகப் பாதிக்கும்."
"USIP-ஐ மூடுவதில் DOGE கடைப்பிடிக்கும் விவேகமற்ற 'முரட்டுத்தனமான துடைத்தெறியும்' அணுகுமுறை, இந்த அமைப்பின் மதிப்புமிக்க மற்றும் சிக்கலான செயல் வரம்பு பற்றியும், இன்றைய நிலையற்ற, மோதல்கள் நிறைந்த உலகில் அதன் முக்கியத்துவம் குறித்த தெளிவான புரிதல் இன்மையையும் எடுத்துக்காட்டுகிறது."
இதுவரை, திட்டமிட்ட விளம்பர நாடகங்கள் அதாவது மரம் அறுக்கும் சங்கிலி ரம்பத்துடன் படோடாபமான படப்பிடிப்பு நடத்துவது போன்றவைத் தவிர DOGE அமைப்பின் முயற்சிகளில் சாதித்தித்தவை என்று சொல்வதற்கு பெரிதாக என்ன இருக்கிறது(?). எண்ணற்ற பொய்ச் செய்திகளை பரப்புவது, செலவுகளை மிச்சப்படுத்தியிருப்பதாக காட்டும் சேமிப்பு மதிப்பீடுகளில் பெரும் கணக்கியல் பிழைகளை உருவாக்கியிருப்பது, எங்குபார்த்தாலும் சீர்குலைவு-முடக்கும் நடவடிக்கைகள், அளவிட முடியாத தனிமனித பாதிப்புகளோடு, நாட்டின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம் ஆகியவற்றை வேண்டுமானால் டாகி(DOGE) அமைப்பின் சாதனைகளாக சேர்த்துக் கொள்ளலாம். இதன் மிக குறிப்பிடத்தக்க "வெற்றி" என்னவென்றால், நமது அரசாங்க அமைப்பை ஏறக்குறைய முழுமையாகச் சிதைத்ததுதான். பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமித்ததாக DOGE கூறும் ஆதாரமற்ற தற்பெருமைகளும், வெற்று வாக்குறுதிகளும், மிகைப்படுத்தப்பட்ட வாய்ச்சவடாலேயன்றி வேறில்லை — அவை முற்றிலும் கற்பனையான திட்டங்களே ஆகும்.
முன்னாள் இயக்குனர் மூஸ், USIP-இன் மூடுதலை சட்ட ரீதியாக எதிர்க்கப் போவதாக உறுதியளித்துள்ளார். இருப்பினும், நீதிமன்றம் தலையிட்டு DOGE-இன் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு (injunction) பிறப்பிக்காத வரை — அல்லது ஒரு நீண்டகால சட்டப் போராட்டம் தொடராத வரை— ஈடுசெய்ய முடியாத சேதம் விளைவது உறுதி. சர்வதேச அமைதியை உருவாக்குவது, வன்முறை மோதல்களைக் குறைப்பது மட்டுமல்லாது போர்களைத் தடுப்பது நோக்கி ஏற்பட்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி.
- விஜயன் (தமிழில்)
https://countercurrents.org/2025/03/usip-attacked-and-shuttered-by-doge/