டிரம்ப்பின் பல இலக்குகள் இந்தியாவிற்கு சாதகமானவை - ஜெய்சங்கர்

தி ஹிந்து

டிரம்ப்பின் பல இலக்குகள் இந்தியாவிற்கு சாதகமானவை - ஜெய்சங்கர்

மாறி வரும் உலக அரசியல் நிலவரங்கள், எரிசக்தித் துறை, தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் நாடுகளுக்கிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து லண்டனில் புதன்கிழமை (மார்ச் 5, 2025) உரையாற்றிய போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அரசாங்கத்தின் பல முக்கிய இலக்குகள் இந்தியாவிற்கு நற்பயன் அளிப்பவை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

"பல் துருவ உலக ஒழுங்கை நாடிச் செல்லும் ஒரு அமெரிக்க அதிபரின் ஆட்சியை நாம் காண்பதாகக் கருதுகிறேன். இத்தகைய ஒரு நிலைப்பாடு இந்தியாவிற்கு மிகவும் ஏற்றதாக அமையும்," என்று அவர் கூறினார். இந்த அணுகுமுறையின் மூலம், டிரம்ப் நிர்வாகம் உண்மையில் இத்தகைய உலக ஒழுங்கிற்கு ஊக்கமளிப்பதாக அவர் விளக்கினார்.

ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ இங்கிலாந்து பயணத்தின்போது லண்டனில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆய்வு மையமான Chatham House-ல் உரையாற்றினார்.

1945 ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா ஒரு தனி நாடாகக் கருதப்படாமல், மேற்கத்திய முகாமின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது, அமெரிக்கா தன்னை ஒரு தனித்த தேசமாக அதிகளவில் அடையாளப்படுத்த முனைகிறது.

"அதிபர் டிரம்ப்பின் பார்வையில், நாங்கள் அனைவரும் இணைந்து செயலாற்றும் மிகவும் முக்கியமான கூட்டமைப்பாக குவாட் [Quadrilateral Security Dialogue] அமைந்துள்ளது," என்று ஜெய்சங்கர் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பே குவாட் ஆகும்.

குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடும் தமது நியாயமான பங்களிப்பைச் செவ்வனே வழங்கி வருவதால், யார் அதிகப் பொறுப்பேற்க வேண்டும் அல்லது அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேசமயம், நேட்டோ ராணுவக் கூட்டணியில் உள்ள சில ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே செலவுகளைப் பகிர்ந்து கொள்வது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிரம்ப், "குறிப்பாக இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்கும் நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆர்வத்துடன் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது," என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார். "எங்களைப் பொறுத்தவரை அது மிகுந்த ஆர்வமூட்டும் விஷயம்," என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் டிரம்ப்பைச் சந்தித்த பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இடையேயான பொருளாதாரப் பெருஞ்சாலைத் திட்டம் (IMEC) குறித்து அமைச்சர் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்தும் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும், அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் போர்த்தந்திர கூட்டணி(Indian Ocean Strategic Venture) போன்றவை பற்றியும் அந்த கூட்டறிக்கை எடுத்துரைக்கிறது.

எரிசக்தி வளம் குறித்துப் பேசிய ஜெய்சங்கர், எரிபொருள் விலைகளை சீராகவும், அனைவருக்கும் கட்டுப்படியக்கூடிய விலையிலும் வைத்திருப்பதற்கான டிரம்ப்பின் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்றார். டிரம்ப் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை உறுதியாக ஆதரிப்பது மட்டுமல்ல அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவின் கொள்கைகளை மாற்றியமைத்து வருகிறார்.

மேலும், டிரம்ப் அரசாங்கத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முனைப்பும், அதை "உலக அரசியலின் போக்கையே புரட்டிப் போடக்கூடிய ஒரு கருவியாக" பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையும் இந்தியாவிற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது என்று ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தற்போது டிரம்ப் அரசாங்கத்துடன் ஒரு வணிக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வாஷிங்டன் சென்றுள்ளார் என்பதை ஜெய்சங்கர் நினைவூட்டினார்.

அமெரிக்க டாலரை வலுவிழக்கச் செய்வதில் துளியும் விருப்பமில்லை’

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த நிலையில் உள்ளது என்று ஜெய்சங்கர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

"ஆகவே, டாலரின் மதிப்பை குறைப்பதில் எங்களுக்கு சிறிதளவும் நாட்டமில்லை," என்று திட்டவட்டமாக கூறிய அவர், இந்தியப் பிராந்தியத்தில் அமெரிக்க டாலர்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுவதே முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்திய ரூபாயை சர்வதேச அளவில் அதிக பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், உலகின் முதன்மை நாணயமாக அமெரிக்க டாலரை இந்தியா ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்திய அரசு ரூபாயை மேலும் சர்வதேசமயமாக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றும், இது உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் விளக்கமளித்தார். இந்தியாவின் வணிகப் பெருக்கம், அந்நிய முதலீடுகளை அதிகம்  ஈர்ப்பது, வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றை இதற்கு அவர் உதாரணமாகக் காட்டினார். சில சமயங்களில், குறிப்பாக அமெரிக்க டாலர்கள் போன்ற கட்டாய நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் விளைவாக, வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக பிற முறைகளை நாட வேண்டியது அல்லது இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பணமில்லா பரிவர்த்தனை முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது என்று அமைச்சர் விளக்கினார்.

விவாதத்தின் இறுதிப் பகுதியில், அமெரிக்க டாலர் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆதாரமாக விளங்குகிறது என்றும், தற்போதைய நிலையில் அத்தகைய ஸ்திரத்தன்மையின் அவசியம் மிக மிக அதிகமாக உள்ளது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதத்தில், டிரம்ப் அவர்கள், பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) "டாலரை முறைகேடாகப் பயன்படுத்தவோ அல்லது தவறான வழியில் கையாளவோ முயன்றால், குறைந்தபட்சம் 100% காப்பு வரியை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

பிரிக்ஸ் நாடுகளிடையே டாலரைப் பற்றி மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன என்று ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.

"டாலருக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன என்ற வாதம் உண்மையில்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

பன்னாட்டு நிதி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதே இந்தியாவின் தலையாய முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் மேலும் வலியுறுத்தினார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/international/many-trump-priorities-work-for-india-jaishankar/article69296192.ece