ஐரோப்பாவில் விலைவாசி ஏற்றத்திற்கு கார்ப்பரேட்டுகளின் கொள்ளை இலாபமே பிரதான காரணம்” – IMF ஒப்புதல் வாக்குமூலம்.
செந்தளம் செய்திப்பிரிவு
“கூலி உயர்வுக்கான கோரிக்கையை எந்தளவிற்கு கார்ப்பரேட்களின் இலாபம் உள்வாங்கிக் கொள்கிறதோ அதை பொறுத்தே ஐரோப்பாவில் விலைவாசி ஏற்ற இறக்கத்திற்கான போக்குகள் இருக்கும்” என்ற தலைப்பில் கடந்த மாதம் ஐ.எம்.எப் தளத்தில் விவாதத்திற்கான ஆய்வுக் கட்டுரை (working paper) ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. Europe’s Inflation Outlook Depends on How Corporate Profits Absorb Wage Gains (imf.org)
விலைவாசி ஏற்றத்தை அளப்பதற்கு நமது நாட்டில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (CPI) பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில பொருட்களின் விலைவாசியையும், அதை நுகரும் குறிப்பிட்ட மக்களின் வாங்கும் திறனையும் தெரிந்து கொள்வதற்கு இந்த தரவரிசை பயன்படுத்தப்படுகிறது எனலாம். IMF-ஐ சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் ஒட்டுமொத்த நாட்டிலும் விலைவாசி ஏற்றத்தை அளப்பதற்கு ஒட்டுமொத்த நுகர்விலும் விலையேற்றத்திற்கான காரணிகளை (Consumption deflator) கழிப்பதன் மூலம் கணக்கிட முயற்சித்துள்ளனர். வரி, இலாபம், இறக்குமதிக்கான செலவு, கூலிக்கான செலவு உள்ளிட்ட நான்கு அடிப்படை காரணிகள் விலைவாசி ஏற்றத்திற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அந்தந்த நாடுகளின் தேசிய அளவிலான புள்ளி விவரங்களையும், அங்குள்ள நாடுகளுக்கென பொதுவான நுகர்வோர் விலை குறியீட்டு எண் போன்றவற்றை உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் போரின் காரணமாக எரிசக்தி இறக்குமதிக்கான செலவு அதிகமானதால்தான் ஐரோப்பாவில் விலைவாசி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததென முதலாளித்துவ ஊடகங்களில் முன்பு கூறப்பட்டு வந்தது. IMF வெளியிட்ட செய்தி குறிப்பின்படி பார்த்தால், 40 சதவீத விலையேற்றம் இறக்குமதிக்கான செலவினால் உந்தப்பட்டுள்ளது. அதைவிட அதிகமாக அதாவது 45 சதவீத விலையேற்றம் கார்ப்பரேட் கம்பனிகள் தங்களின் இலாப விகிதத்தை அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர். “கார்ப்பரேட் இலாபமும், ஐரோப்பாவில் விலையேற்றமும்: IMF வெளியிட்ட விவாதத்திற்கான செய்தி குறிப்பு மற்றும் அதன் கொள்கை சார்ந்த பரிந்துரைகள் மீதான விமர்சனப்பூர்வமான மதிப்பாய்வு” என்ற தலைப்பில் GERG (Geopolitical Economic Research Group) என்ற ஆய்வு நிறுவனம் IMFன் சொந்த தகவல்களை ஆய்வுக்கெடுத்துக்கொண்டு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் சில கூடுதலான தகவல்களும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. “எந்தெந்த துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, எங்கெல்லாம் போட்டி மிகவும் குறைவாக இருக்கிறதோ அந்த துறைகளில்தான் விலையேற்ற விகிதம் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற துறைகள் தான் அரசின் மானிய உதவிகளை பெற்றுள்ளது; கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் சேமிப்பை கொண்டு அதிகளவிற்கு நெருக்கடியிலிருந்து கைதூக்கிவிடப்பட்ட துறைகளும் இவைதான்; இதே துறையை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பவர்கள்தான் முறையாக வரியைக்கூட செலுத்தாமல் ஏய்த்து வருகின்றனர்” என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பொதுவாக, விலையேற்றம் என்பது உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது(cost-push inflation); பற்றாக்குறையான உற்பத்தி - மிதமிஞ்சிய தேவை இருப்பதனால் விலையேற்றம் ஏற்படுகிறது என்றெல்லாம் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் கூறிவந்த நிலையில், தொழிலாளர்களிடமிருந்து உச்சபட்ச இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கு சந்தையை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ள வெகுசில ஏகபோகங்கள் இலாப விகிதங்களை உயர்த்துவதனாலும் விலையேற்றம் விண்ணைத் தொடும் என்பதையே மேற்கண்ட தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது இலாப விகிதங்களை முன்பிருந்ததை விட 1.6 புள்ளி சதவீதம் உயர்த்தியுள்ள அதே நிலையில், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த கூலியை முன்பிருந்ததை விட 0.2 சதவிதம் குறைத்துள்ளனர் என அந்த ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. “2025 ஆம் ஆண்டிற்குள் உண்மையான கூலி அளவை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்துவதற்கு முன்பிருந்த நிலைக்கு இணையாக திருப்ப வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண்டிலும் கூலிக்காக ஒதுக்கப்படும் செலவினத்தை 5.5 சதவீதம் அதிகரிக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்குள் விலையேற்ற விகிதத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவதற்கு கார்ப்பரேட் கம்பனிகளின் இலாப விகிதத்தை 1990களின் நடுப்பகுதியில் இருந்த அளவிற்கு இணையாக குறைத்தாக வேண்டும்.” என்று IMF-ன் ஒப்புதல் வாக்கு மூலம் வாசிக்கப்படுகிறது. சிக்கன நடவடிக்கைள், கூலி விகிதங்களை குறைத்தல், தொழிலாளர் சட்டங்களில் அடிமைத்தனமான திருத்தங்களை கொண்டு வருதல், பொதுக் துறைக்கான செலவினங்களை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே நிதி நெருக்கடியை தவிர்க்க முடியும் என்று உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு IMF-ஆல் பரிந்துரை செய்யப்பட்ட கொள்கைகளெல்லாம் இந்த ஒப்பதல் வாக்குமூலம் பொய்யாக்கியுள்ளது.
போர்சுகல் நாட்டில் நடந்த ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் IMF-ன் துனை மேலாண்ம இயக்குநராக இருந்து வரும் கீதா கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு பேசியபோது, IMF தளத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை வெறுமனே விவாதத்திற்கானதாக பார்க்க முடியாது என்பதை உறதிபடுத்துகிறது. நிறுவனங்கள் லாப விகிதத்தை குறைக்க மறுத்தாலோ அல்லது தொழிலாளர்கள் கூலியேற்றத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்தாலோ, இந்த விலைவாசியேற்ற பிரச்சனை நீடித்த ஒன்றாக மாறிவிடும் என எச்சரிக்கை செய்யும் வகையில் பேசியுள்ளார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று“தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரிக்கையை முன்னெடுப்பார்கள் என்பதையே கடந்தகால வரலாறு காட்டுகிறது. இவ்வாறு நடந்தால் கூலிக்கும்-விலையேற்றத்திற்கு இடையிலான சிக்கலான வலைப்பின்னலில் தீர்க்க முடியாத முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றுவிடும்” என்று பேசியுள்ளார்.
- செந்தளம் செய்திப்பிரிவு