ஈரான் கூட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

தி கார்டியன் - தமிழில்: வெண்பா

ஈரான் கூட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

1. 10 ஆண்டுகள் பழமையான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவிக்கிறது. நாட்டின் அணுசக்தி திட்டத்தின் மீதான கட்டுப்பாடுகளுக்கு ஈடாக தடைகள் நீக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஈரான் அரசு முடிவுக்குக் கொண்டு வருகிறது. அது அணு ஆயுதங்கள் பரவுவதில் இருந்து உலகைப் பாதுகாக்கும் நோக்கில் ஈரானுடன் போடப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும்.  தசாப்த கால இந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரான் அரசு அறிவித்ததன் மூலம், அது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கூட்டு செயல்பாடு குறித்த விரிவான திட்டம் (JCPOA) என்று அறியப்படும் இந்த ஒப்பந்தத்தால், இனி தான் கட்டுப்படப்போவதில்லை என்று ஈரான் கூறியது.

2. "இன்று முதல், ஈரான் அணுசக்தி திட்டத்தின் மீதான கட்டுப்பாடுகளையும் அதனுடன் தொடர்புடைய வழிமுறைகளையும் உள்ளடக்கிய [2015 ஒப்பந்தத்தின்] அனைத்து விதிகளும் ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படுகின்றன" என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், "இராஜதந்திர உறவுகளில் தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்" என்றும் அது மேலும் கூறியது. ஈரான், சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் வியன்னாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், பல ஆண்டுகளாக நீடித்த இராஜதந்திர முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், ஈரானுக்கும் மேற்குலகிற்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் நம்பப்பட்டது.

3. இந்த ஒப்பந்தம் 18.10.2025 அன்று அதிகாரப்பூர்வமாக காலாவதியானாலும், பல ஆண்டுகளாக அது குழப்பத்தில் இருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்ப் தனது முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில், ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை ஒருதலைப்பட்சமாக வெளியேற்றியதோடு, தடைகளை மீண்டும் விதித்ததன் மூலம் தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கினார். முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரான பராக் ஒபாமாவால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை அவர் விரும்பவில்லை, மேலும் ஈரானின் முக்கிய எதிரியான இஸ்ரேலால் அவர் இராஜதந்திர உறவுகளில் இருந்து ஊக்கமிழந்தார். அமெரிக்கா விலகியதன் விளைவாக, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை வேகப்படுத்தத் தொடங்கியது. ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஐரோப்பிய தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன, மேலும் இந்த கோடையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் மீது நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்கள், ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான நம்பிக்கையை வரலாற்று ரீதியாக இல்லாத அளவிற்கு குறைத்துவிட்டன..

4. ஜூன் மாதத்தில் நடந்த அந்த 12 நாள் போருக்குப் பிறகு, ஈரானிய பாராளுமன்றம், ஐ.நா.வின் அணுசக்தி ஆய்வுக் குழுவான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒத்துழைக்க மறுக்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. இது, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் "மீள்-செயல்பாட்டுக்கு (snapback)" வழிவகுத்தது, இதனால் ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன. ஈரான் தனது அணுசக்தி உறுதிப்பாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மீறினால், ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட அனைத்து ஐ.நா. தடைகளையும் விரைவாகவும் தானாகவும் மீண்டும் விதிப்பதற்கு இந்த மீள்-செயல்பாடு விதி அனுமதிக்கிறது.

5. அந்த மீள்-செயல்பாடு தடைகள், அக்டோபர் 18 அன்று நிர்ணயிக்கப்பட்ட "ஒப்பந்த முடிவுக்கு வரும் நாளை" நடைமுறையில் வெறும் சடங்காக ஆக்கின; இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231 ஏற்றுக்கொள்ளப்பட்டதன், பத்தாம் ஆண்டு தினமாகும். கடந்த மாதம், மீள்-செயல்பாடு தடைகள் நடைமுறைக்கு வந்தபோது, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் விடுத்த கூட்டு அறிக்கையில், "ஈரான் அணு ஆயுதம் பெறுவதை உறுதி செய்ய, புதிய இராஜதந்திர தீர்வை" தேடுவோம் என்று தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் இராஜதந்திரி கஜா கல்லாஸ், இந்தத் தடைகள் "இராஜதந்திரத்தின் முடிவாக இருக்கக்கூடாது" என்றும், "ஈரானிய அணுசக்தி பிரச்சினைக்கு நிலையான தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே அடைய முடியும்" என்றும் கூறினார்.

6. 13.10.2025 அன்று, ட்ரம்ப் ஈரானுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகக் கூறினார், அதே வேளையில், அமெரிக்கா எத்தகைய பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தரவாதங்களை வழங்கினால், அமெரிக்காவுடனான இராஜதந்திரத்திற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக ஈரான் அரசு மீண்டும் கூறியுள்ளது. அந்த மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் கடந்த வாரம், "விரிவான, நீடித்த ஒப்பந்தம் ஒன்றை" கண்டறிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முயல்வதாக அறிவித்தன. இருப்பினும், மேற்குலகிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாகவே உள்ளன. அமெரிக்கா ஏற்கனவே பெரிய தடைகளை விதித்துள்ளது, இதில் அனைத்து நாடுகளையும் ஈரானிய எண்ணெயைத் தவிர்க்கும்படி கட்டாயப்படுத்தும் முயற்சிகளும் அடங்கும். இந்த ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஓமன் நாட்டால் முன்னெடுக்கப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தத்தை எட்டுவதில் தோல்வியடைந்தன.

7. ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரி, அப்பாஸ் அரக்சி, ஐரோப்பிய வல்லரசுகள் மீள்-செயல்பாடு தடைகளை கருத்தில் கொண்டு, அவர்களுடன் "பேச்சுவார்த்தை நடத்த எந்த காரணத்தையும் ஈரான் அரசு காணவில்லை" என்று கடந்த வாரம் கூறினார். மேற்குலக அரசாங்கங்களும் இஸ்ரேலும் நீண்ட காலமாக ஈரான் அணு ஆயுதங்களை வாங்க முயல்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன, ஆனால் ஈரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அதன் திட்டம் எரிசக்தி மற்றும் சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது என்று கூறுகிறது. 18.10.2025 அன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வில், அறிக்கையின் மூலம் ஒப்பந்த முடிவுக்கு வரும் நாளை ஈரான் குறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.theguardian.com/world/2025/oct/18/iran-announces-official-end-to-10-year-old-nuclear-agreement

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு