ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் ஜிபிஎஸ் தில்லுமுல்லு: கார்கில் போரில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவும் இதே வேலையைத்தான் செய்ததா?
இஸ்ரேல் மீது ஈரான் முதன்முதலாக இராணுவத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஈரான் ஏவுகனைகளின் குறியைத் மடைமாற்றுவதற்காக இஸ்ரேலில் உள்ள ஜிபிஎஸ் தடங்காட்டிகளின் செய்லபாடுகளை இஸ்ரேலிய உளவுத்துறை முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. - பாஷ்கர் குமார்
சனிக்கிழமையன்று இரவோடு இரவாக ஈரான் தாக்குதல் தொடுப்பதற்கு சிறிது முன்பாகத்தான் ஈரான் ஏவுகனைகளின் குறியை திசைத்திருப்பும் நோக்குடன் ஜிபிஎஸ் தடங்காட்டிகளின் செயல்பாடுகளை முடக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் இந்தியாவின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை முடிறியடிப்பதற்கு அமெரிக்காவும் இதே ஜிபிஎஸ் தில்லுமுல்லு வேலைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் புவியிடங்காட்டி(அமெரிக்காவிற்கு சொந்தமான ஜிபிஎஸ்) அனுப்பும் சமிக்ஞைகளை சிதைப்பது, சீர்குலைப்பது அல்லது முடக்குவதன் மூலம் எதிரி நாடுகளின் இராணுவ தாக்குதல்களை மழுங்கடிப்பதோடு ஏவுகனைகள், ட்ரோன்களின் (ஆளில்லாமல் இயக்கப்படும் வானூர்தி) குறிவைக்கும் திறனையும் மட்டுப்படுத்த முடியும். ஜிபிஎஸ் இடங்காட்டி முறை மட்டுமல்லாது, முடுக்கம், சுழல்வேகம், திசைவேகத்தைக் கொண்டு இலக்கின் இருப்பிடத்தை அறியும் inertial guidance முறை, ஏற்கனவே வரைபடமாக்கப்பட்டிருக்கும் மேடுபள்ள வடிவங்களைக் கொண்டு தாக்குதல் சமயங்களின் மாறுபடும் நிலைமைகளுக்கேற்ப தனது இலக்குகளை அடையாளங்காணுவது(terrain contour matching) போன்ற தொழில்நுட்பங்கள் இந்த தில்லுமுல்லு வேலைகளைச் செய்வதற்கு கூட்டாக பயன்படுத்தப்படுகிறது.
சனிக்கிழமை இரவன்று, ஈரானின் முதல் நேரடியான இராணுவத் தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பாகவே இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை பிராந்திய எல்லைக்குள் புவியிடங்காட்டி(GPS) சமிக்ஞைகளை முடக்கிவிட்டது; ஈரானின் ஏவுகனைத் தாக்குதல்களை மடைமாற்றுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கும் என்று பரபரப்பு செய்திகளை வெளியிடும் மஞ்சள் பத்திரிக்கையான டெய்லி மிரர் எனும் பிரட்டிஷ் நாளிதழில் தகவல் வெளியாகியிருந்தது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1999-ல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி கார்கில் பகுதிகளை ஆக்கிரமித்தபோது, இந்திய ராணுவம் அப்பகுதிக்கான ஜிபிஎஸ் தரவைக் தருமாறு அமெரிக்காவிடம் கேட்டதாகவும், அதற்கு அமெரிக்கா தர மறுத்துவிட்டதாகவும் இந்திய நாளிதழ் ஒன்று அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் நேவல் இன்ஸ்டிடியூட் சார்பாக 2021ல் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையின் படி, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் விமானப்படை ஆரம்பக் காலங்களில் "ஜிபிஎஸ் சேவையை தேவைக்கேற்ப மாற்றியமைத்தல்" என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக கூறியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வேண்டுமென்றே இராணுவம் சாராத ஜிபிஎஸ் பயனர்களுக்கு பிழைநிறைந்த ஜிபிஎஸ் சேவையை வழங்கிய நிலையில் இராணுவ பயன்பாட்டிற்காக பிரத்தியேகமான அதி துல்லியமான ஜிபிஎஸ் சேவையை வழங்கி வந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலமாகத்தான் கார்கில் போரில் “இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகளை” அமெரிக்காவால் உருவாக்க முடிந்ததாக அந்த ஆய்வுக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையொட்டியே, வேறுவழியின்றி இந்தியாவும் இன்னப்பிற நாடுகளும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு புவியிடங்காட்டி தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு மூலக் காரணமாக அமைந்தது.
அதன்படி, இஸ்ரோ தற்சார்பாக தனித்தியங்கவல்ல நேவிக் (Navigation with Indian Constellation) எனும் புவியிடங்காட்டி தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இடங்காணுதல், வழிகாணுதல், நேரங்காணுதல் போன்ற சேவைகளை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் நேவிக் தொழில்நுட்பத்தைப் பயனப்டுத்திப் பெற முடியும். இந்திய எல்லைப் பரப்பிற்கு அப்பால் 1500 கி.மீ வரையும்கூட இதன் சேவையை பயன்படுத்த முடியுமென கூறப்படுகிறது. நேவிக் தொழில்நுட்பத்தின் மூலம் இராணுவம் சாராத பணிகளுக்கு அடிப்படை புவியிடங்காணுதல் சேவைகளையும், இராணுவத் தேவைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன்கூடிய சேவைகளையும் வழங்கிவருவதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் பதில் தாக்குதல் நீண்ட நாட்களுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டு வந்ததாகவும், இஸ்ரேலிய மக்களின் ஜிபிஎஸ் எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருப்பது போலவோ அல்லது லெபனானில் உள்ள பெய்ரூட்டில் இருப்பது போலவோ காண்பித்ததாக கூறியுள்ளனர் என்று டெய்லி மிர்ரர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகனைத் தாக்குதல்களை திசைத்திருப்புவதற்காக செய்யப்பட்ட ஜிபிஎஸ் தில்லுமுல்லு வேலைகளால்தான் மக்கள் பயன்படுத்தும் ஜிபிஎஸ் சேவையில் இதுபோன்ற குழப்படிகள் ஏற்பட்டதாக அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
ட்ரோன்கள், பாலிஸ்டிக் ரக ஏவுகனைகள், க்ரூஸ் ரக ஏவுகனைகள் போன்ற 300க்கும் மேற்பட்ட வான்வெளித் தாக்குதல்களை சனிக்கிழமை இரவன்று இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்திருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்துமே வைத்த குறியை தாக்க முடியாமல் முறியடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு முன்பாகவே 99 சதவீத ஏவுகனைகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
“வெகு சில” எண்ணிக்கையிலான ஏவுகனைகள் மட்டுமே இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவையும் எந்தவித உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தவில்லையாம்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலிய நாடுகளின் போர் விமானமும், அமெரிக்க கடற்படையின் அதிநவீன தற்காப்பு சாதனங்களும், இஸ்ரேலின் பல்நோக்கு தற்காப்பு சாதனங்களும்கூட ஈரானின் ஏவுகனைத் தாக்குதல்களை முறியடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று இரவோடு இரவாக, மொத்தம் 170 ட்ரோன்கள், 30 க்ரூஸ் ரக ஏவுகனைகள், 120 பாலிஸ்டிக் ரக ஏவுகனைகள் இஸ்ரேலை நோக்கி ஈரானால் ஏவப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்கப்படும், ஈரானின் பாலிஸ்டிக் ரக ஏவுகனைகள் மற்றும் ட்ரோன்களில் ரஷ்யாவின் GLONASS புவியிடங்காட்டி தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதால் இஸ்ரேலின் ஜிபிஎஸ் தில்லுமுல்லு வேலைகளையும் மீறி தாக்குதல் தொடுக்க முடியும் என்பதையும் சேர்த்தே டெய்லி மிர்ரர் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட GLONASS முறை அந்தளவிற்கு துல்லியமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இருந்தபோதிலும், இஸ்ரேலின் ஜிபிஎஸ் முடக்கத்தையும் சமாளித்து ஓரளவிற்கு ஈரானால் தாக்குதல் தொடுக்க முடியும் என டெய்லி மிர்ரர் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
- சகா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு