டிரம்பின் மாபெரும் தவறு - அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
தமிழில்: விஜயன்

"‘டிரம்பின் மாபெரும் தவறு’: இந்தியா மீதான வரி விதிப்புகள், இந்தியாவைப் போட்டி நாடுகளின் பக்கம் தள்ளிவிடும், எச்சரிக்கும் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்."
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த வர்த்தக வரிகள் குறித்துக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போல்டனின் கூற்றுப்படி, ரஷ்யாவை இலக்காகக் கொண்டவை எனக் கூறப்படும் இந்த வரிகள், உண்மையில் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளையே விளைவிக்கக்கூடும். ரஷ்யாவை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, அவை இந்தியாவை ரஷ்ய- சீன வல்லரசுகளின் பக்கம் தள்ளுவதற்கு வாய்ப்புள்ளது.
சமீப காலங்களில், டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக 25 சதவிகித வரியை விதிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவின் அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயைத் தொடர்ந்து கொள்முதல் செய்ததன் விளைவாக, இந்தியாவை தண்டிக்கும் விதிமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிஎன்என்(CNN) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய ஜான் போல்டன், டிரம்ப்பின் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்தினார். உலக அரசியலில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதே டிரம்ப்பின் பிரதான நோக்கம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால், இந்த வரி விதிப்புகள் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும்: ஏனெனில் இந்தியா, இதற்குப் பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவிற்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான தனது ஒத்துழைப்பை மேற்கொண்டு வலுப்படுத்தக்கூடும் என்றும் போல்டன் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டிரம்ப் சீனாவிடம் மென்மையானப் போக்கினைக் கையாண்டதாகவும், ஆனால் இந்தியா மீது கடும் வரிகளை விதித்து கறாராக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார். இக்கொள்கை, அமெரிக்கா பல பத்தாண்டுகளாக இந்தியாவைத் தன்பக்கம் ஈர்த்து, ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து விலக்கி வைக்க மேற்கொண்ட பெருமுயற்சிகளையும், அதன் மூலம் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் அடியோடு சிதைத்துவிடும் என அவர் எச்சரித்தார். 'தி ஹில்' இதழில் கருத்துரைப் பக்கத்தில் அவர் எழுதிய கட்டுரையில், இந்தியாவுக்கு வழங்கியதை விட சீனாவுக்கு அதிக வர்த்தகச் சலுகைகளை அளித்த டிரம்பின் அணுகுமுறை ஒரு பெரும் பிழை என்றும், அது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கே எதிரானது என்றும் ஜான் போல்டன் திட்டவட்டமாகக் கூறினார். நெருங்கிய நட்பு நாடுகளையும், கடுமையான போட்டி நாடுகளையும் ஒரே தராசில் வைத்து ஒரே சீரான வரிகளை விதிப்பது, அமெரிக்காவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கை இலக்குகளுடன் ஒருபோதும் பொருந்தாது என்று அவர் விளக்கினார்.
இதுவரை கண்ட உலகளாவிய எதிர்வினைகளை ஆராயும்போது, அமெரிக்கா தனது நண்பர்கள் மீதும் பகைவர்கள் மீதும் எவ்வித பாகுபாடுமின்றி ஒரே விதமான வரிகளைச் சுமத்தியதன் விளைவாக, பிற நாடுகளின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் ஏற்கெனவே வெகுவாக இழந்துவிட்டது என்று போல்டன் மேலும் குறிப்பிட்டார். இதற்கு ஈடாக, அமெரிக்கா எந்தவொரு குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பயன்களையும் ஈட்டவில்லை; மாறாக, வருங்காலத்தில் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், வெள்ளை மாளிகை தற்போது வரி விதிப்புகள் மற்றும் வர்த்தக விதிமுறைகள் விவகாரத்தில் சீனாவிடம் மென்மையான அணுகுமுறையைக் கையாளவும், அதேவேளையில் இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான விதிகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் ஆயத்தமாகி வருவதாகத் தோன்றுகிறது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அவ்வாறு நடந்தால், அது வியூக ரீதியாக மிகப்பெரிய தவறு என்பதோடு, அமெரிக்காவிற்கு நீண்டகால அளவில் தீங்கு விளைவிக்கும் என்றும் போல்டன் உறுதிபடத் தெரிவித்தார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கைக்குரிய வகையில் உடன்பாடு காணுகிற பட்சத்தில், சீனாவின் காலக்கெடு(ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கான) நீட்டிக்கப்படலாம் என்று அமெரிக்கக் நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தெளிவுபடுத்தினார்.
போல்டன் தனது கட்டுரையில் குறிப்பிட்டவாறு, ஜூலை 30 அன்று, இந்தியாவின் காப்பு வரி விகிதத்தை டிரம்ப் 26 சதவீதமாக நிர்ணயித்திருந்தார். ஏப்ரல் 2 அன்று முன்மொழியப்பட்டதை விட 1 சதவீதம் குறைவு என்றபோதிலும், முன்னதாக இருந்த 2.4 சதவீத சராசரி விகிதத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு கணிசமான ஏற்றமாக அமைந்தது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிய காரணத்திற்காக இந்தியாவை டிரம்ப் கடுமையாகச் சாடினார். ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா கொள்முதல் செய்தென்பது, உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறிய செயல் என்றும் அவர் வலியுறுத்தினார். BRICS கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்க 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்று தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா BRICS கூட்டமைப்பில் அங்கம் வகித்த போதிலும், டிரம்ப் இந்தியாவை தனிப்பட்ட முறையில் குறிவைத்து அதிக வரியை சுமத்தியுள்ளதாக போல்டன் விளக்கினார்.
சீனாவிற்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தம் வழங்கப்படுமேயானால், இந்தியாவின் அதிருப்தி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று போல்டன் எச்சரித்தார். இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைவிட, சீனாவுடன்தான் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களைத் திருடுவது, தனது நிறுவனங்களுக்கு நியாயமற்ற அரசு ஆதரவை வழங்குவது, மட்டுமல்லாது பலமுறை சந்தையைத் திறப்பதாக உறுதியளித்த பின்னரும் கூட, வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவின் உள்நாட்டுச் சந்தைகளில் நுழைவதைத் தடுப்பது போன்ற நியாயமற்ற வர்த்தகச் செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா நீண்டகாலமாக சீனாவைக் குற்றம் சாட்டி வருகிறது.
டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு ஐம்பது விழுக்காடு சுங்க வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த காரணத்தால், இந்தியாவைப் பழிவாங்கும் நோக்குடனேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். தற்போது, அமெரிக்காவின் சுங்க வரி விதிப்புப் பட்டியலில் இந்தியாவும் பிரேசிலும் முதலிடத்தில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் இருந்த சமயத்தில், டிரம்பின் இந்தச் சுங்க வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் பொருளாதாரம் 'சீரழிந்துவிட்டது' என்றும், அதன் சுங்க வரிக் கட்டுப்பாடுகள்'அருவருப்பானவை', நியாயமற்றவை என்றும் டிரம்ப் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார். இந்தக் கருத்துக்களும் செயல்பாடுகளும் அமெரிக்க-இந்தியா உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா விதித்துள்ள புதிய சுங்க வரிகள் எக்காலத்திலும் யாருக்கும் நடக்கக்கூடாத ஒன்று' என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு இதர நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு கொண்டுள்ளன என்பதையும் இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு