சீனா இந்தியா மீது கணிசமான வரிகளை விதிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் - ஜி7 நாடுகளுக்கு அமெரிக்க கருவூலம் வலியுறுத்தல்
வெண்பா (தமிழில்)

"சீனா, இந்தியா மீது கணிசமான வரிகளை விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகளுக்கு அமெரிக்க கருவூலம் வலியுறுத்தல்; போர் நடவடிக்கைகளுக்கு ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிதியளிப்பதாகக் குற்றச்சாட்டு
உக்ரைனில் புடினின் போருக்கான நிதியுதவியைத் துண்டிக்கும் நோக்கில், சீனா மற்றும் இந்தியா இறக்குமதி செய்யும் ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிக்குமாறு அமெரிக்க கருவூலம் ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை வலியுறுத்தி வருகிறது. டிரம்ப் ஏற்கனவே இந்தியப் பொருட்கள் மீது வரி விதித்திருந்தாலும், சீனாவுடனான வர்த்தக உறவுகளின் நுட்பமான தன்மை காரணமாக, அந்நாட்டின் மீது அதேபோன்ற நடவடிக்கையை எடுக்க அவர் தயங்குகிறார்.
சீனா மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல்களை எதிர்கொள்ளும் வகையில், அவற்றின் இறக்குமதிகள் மீது "கணிசமான வரிகளை" விதிக்குமாறு அமெரிக்க கருவூலம் ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மோதல் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக, அமெரிக்க கருவூலம் அவசர ஜி7 மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிகள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இது, இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மீதான மொத்த இறக்குமதி வரிகளை 50% உயர்த்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் பாதித்துள்ளது.
சீனா ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்த போதிலும், டிரம்ப் நிர்வாகம் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், சீனாவுடன் பேணப்படும் நுட்பமான வர்த்தக சமநிலையே ஆகும்; இந்த சமநிலை காரணமாக பரஸ்பர வரிகள் 100%க்கும் மேலாக உயர்ந்த நிலையில் இருந்து மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. "சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்வது புடினின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதுடன், உக்ரைன் மக்களின் அர்த்தமற்ற படுகொலைகள் நீடிப்பதற்கும் காரணமாகிறது" என்று அமெரிக்க கருவூலப் பிரதிநிதி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.
அந்த கருவூல அதிகாரி மேலும் குறிப்பிடுகையில், "தங்கள் அருகிலேயே நடக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் எங்களுடன் இணைந்து கணிசமான வரிகளை விதிக்க வேண்டும் என்பதை இந்த வாரத் தொடக்கத்தில் நாங்கள் தெளிவுபடுத்தினோம். போர் முடிவடையும் நாளிலேயே அந்த வரிகள் நீக்கப்படும்" என்றார்.
கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட், சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங்கை சந்திப்பதற்காக வெள்ளிக்கிழமை மாட்ரிட் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார். வர்த்தகப் பிரச்சினைகள், சீன நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விற்க வேண்டுமென்ற அமெரிக்காவின் நிபந்தனை, மற்றும் பணமோசடி தடுப்பு தொடர்பான சிக்கல்கள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதிப்பார்கள்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியபோது, கூடுதல் தடைகளை விதிப்பது குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், புடின் மீது தனது பொறுமை குறைந்து வருவதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டார். டிரம்பின் இராஜதந்திர முயற்சிகள் எடுத்தும், போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் விரும்பாதது குறித்து அந்த நேர்காணலின்போது டிரம்ப் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக வங்கி நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் துறைகள் மீது கடுமையாக்கப்பட்ட தடைகள், அத்துடன் அதிகரிக்கப்பட்ட வரிகள் போன்ற சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
"நாம் மிகவும், மிகவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்," என்று டிரம்ப் கூறினார். ரஷ்யாவிற்கு எதிராக ஜி7 நட்பு நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கருவூல செய்தித் தொடர்பாளர் ஒருவர் வலியுறுத்தினார். “அதிபர் டிரம்பின் 'அமைதி மற்றும் செழிப்பு நிர்வாகம்' தயாராக உள்ளது, ஜி7 நாடுகளும் நம்முடன் இணைந்து முன்னேற வேண்டும்" என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு