கல்வியில் சிறந்த தமிழ்நாடும் நடிகர்களும்...
சிவப்பிரியன் செம்பியன்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் & இயக்குநர்களுக்கு பதிலாக பேரா.ஜவஹர் நேசன் போன்ற கல்வியாளர்களை அழைத்து பேச வைத்திருக்கலாம். பேரா. ஜவகர் அவர்கள் அளித்த 232 பக்க இடைக்கால அறிக்கையையும் & ஆய்வு ஆவணத்தையும் எங்கே தொலைத்தனர் என்றே தெரியவில்லை...
1950-1980களின் இறுதிவரை கட்சியின் மாநில மாநாடுகளில் டிக்கெட் விற்று அரசியல் விழிப்புணர்வு பிரச்சார நாடகங்களைப் போட்ட திமுகவினர் இப்போது அரசாங்கத்தின் செலவில் விளம்பரத்திற்கு சினிமாக்காரர்களை கூப்பிட்டு நாடகமாடுகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்விக்கடனை ரத்து செய்வோம் என பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம், இதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மீண்டும் வேஷம் கட்ட மேடையேறி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் திமுக.
தமிழ்நாட்டில் எத்தனையோ மாணவிகளுக்கு வன்கொடுமை நடந்த போதெல்லாம் 2026 தேர்தலில் யாரை ஆதரிக்கப்பது தனது நல்லது என இரகசியமாக ஆய்வு நடத்திய
இந்த சிவ கார்த்திகேயன் போன்றவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.
ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசின் காவி பயங்கரவாத சனாதன புதிய கல்விக் கொள்கைக்கு கருப்பு - சிவப்பு சாயம் பூசி தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை என ஏமாற்றிவிட்டு, ஏகலைவன் கதைகளை சொல்கிறார்கள்.
"சோறு போடுகிறார்கள்... சோறு போடுகிறார்கள்..." என வந்தவர்கள் போனவர்கள் எல்லோரும் மேடையில் புகழ்கிறார்கள். சோறு போட வேண்டியது அரசின் கடமை. நீதிக்கட்சி நடேசனார் & காங்கிரஸ் காமராஜர் காலத்து திட்டத்திற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினே வெட்கப்படும் அளவுக்கு வாழ்த்திய சமூக ஆர்வங்கொண்ட இயக்குநர்களே...
கடந்த 4 ஆண்டுகளில், மூடப்பட்ட அரசு பள்ளிகள் குறித்து உங்களுக்கு எல்லாம் தெரியுமா? தமிழ்நாடு கல்வியில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அந்த வீழ்ச்சி தற்போது இந்த ஆட்சியில் வேகம் பெற்றுள்ளது என்பதையும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் 1990 களுக்கு பிறகு எத்தனை புதிய அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன? அனேகமாக எதுவுமில்லை. ஆனால், எத்தனை அரசுப் பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன என்பதற்கு தமிழக அரசே செப்டம்பர் 2022 மதுரை உயர்நீதிமன்றத்திற்கு தந்துள்ள தகவல்களின் படி, தமிழகத்தில் மொத்தம் 5,553 அரசு பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவ்வளவு ஏன்? திமுக அரசு பதவியேற்ற முதல் கல்வி ஆண்டில், அதாவது, 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய நிகழாண்டு மட்டுமே 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இன்னும் தமிழ்நாட்டில் ஓராசிரியர் பள்ளிகள், இரண்டு ஆசிரியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. அங்கெல்லாம் பணியாற்ற படித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஏன் பணி நியமனம் அளிக்கப்பெறவில்லை என கேட்கும் திராணி உங்களுக்கு இருக்கிறதா?
மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறோம் என்று சொல்லி
மதிய உணவுக்கு ஒதுக்கிய மான்யத்தை பெரும்பாலும் காலை உணவுக்கு ஒதுக்கி
மதிய உணவுக்கான மான்யத்தை சுத்தமாக குறைத்தது யார்? உணவு சமைக்கும் தாய்மார்களை பணிநிரந்தரம் செய்யாது, சுரண்டும் போக்கும் தொடர்கிறது. அவர்களை சாதிய ரீதியாக அணுகுவோர் மீதும் சட்ட நடவடிக்கையும், அவற்றை தடுப்பதற்கு இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
அரசுப்பள்ளிகளில் எங்கும் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள்,
குடிநீர் வசதிகள், ஆய்வக மற்றும் கணினி வசதிகள் இல்லை. மாணவர்களுக்கிடையே ஏற்படும் ஜாதி பிரச்னைகளை களைய ஆணையம் அளித்த 12 பரிந்துரைகளில் ஒன்றுகூட இதுவரை எங்கும் முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை.
"சமூக நீதி கண்காணிப்பு குழு" என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கும் இதே அரசில்தான் மாணவர்களுக்கிடையே சாதி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே சாதி கயிற்றை கையில் கட்டிக்கொண்டு தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மாணவர்கள் இடைநிறுத்தல் கூடிக் கொண்டிருக்கிறது என்று மீண்டும் மீண்டும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி நிலையங்கள் சார்ந்த இயங்கும் தன்னார்வலர்களிடம் கேட்டுப் பாருங்கள் அரசு பள்ளிகள் எத்தனை கீழ்த்தரமாக கடந்த நான்காண்டுகளை மாறிவிட்டது என்று சொல்வார்கள்.
ஆசிரியர்-மாணவர் விகிதம், அரசுப் பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களை நியமித்தல், பள்ளி வளாக அடிப்படை உள்கட்டமைப்பு, 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றில் குறைந்தபட்ச தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது போன்றவை குறித்த இவர்களின் நிலைப்பாடு '0'.
10-15 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களின் வழியே சமூக நீதிக்கான கல்வியை போதிக்க முடியாதா? ஒப்பந்த ஆசிரியர்கள் & பேராசிரியர்களை தனியார் நிறுவனங்கள் வழியே தேர்வு செய்ய துடிப்பதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் மடிக்கணினி கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு, அதன் பிறகு ஆட்சிக்கு வந்த இந்த விளம்பர மாடல் அரசு நிதி போதவில்லை என்று சொல்லி இன்று வரை மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கவில்லை.
கூத்தாடிக்காக ₹400 கோடி நிதி ஒதுக்கி கார் ரேஸ் நடத்த தெரிந்தவர்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு வெறும் ₹40 கோடிதான் ஒதுக்க முடியுமா? என ஏன் கேள்வி கேட்பதற்கு எவனும் முன்வரவில்லை.
நடிகவேள் (MR இராதாவின் பட்டத்தை கலைஞர் கருணாநிதிதான் இந்த கோமாளிக்கும் ஒரு மேடையில் அடைமொழியாக வைத்தார்) எஸ்.வீ.சேகரின் தோப்பனார் பெயரை தெருவுக்கு வைப்போரிடம் குலக்கல்வி ராஜாஜி அரசியல் மீது (கூட்டணி வைத்தவர்கள்) எதிர்ப்பு இருப்பதாக நம்ப சொல்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு பெறும்பொருட்டு சில நூறு மாணவர்களை அனுப்பியதை பெருமிதமாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் ஜனநாயக மற்றும் நிகர்நிலையான கற்றல் சூழலை ஊக்குவிக்க தவறியதை ஏன் யாரும் சுட்டிக்காட்டவில்லை.
மாநிலக் கொள்கையும் ‘TN-SPARK’, ‘மணற்கேணி’, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் வழியாக திறன் சார்ந்த மேம்பாட்டை (Skills-Based Development) ஊக்குவிக்கிறது. இதன் மாதிரிப் பள்ளிகளும் (Model Schools) வட்டார வாரியான ‘வெற்றிப் பள்ளிகளும்’ (Block-Wise Vetri Palligal), PM Shri Schools-ஐ ஒத்திருக்கின்றன. ‘இல்லம் தேடிக் கல்வி’ (Illam Thedi Kalvi) திட்டம், தேசியக் கொள்கையில் வலியுறுத்தப்படும் ‘உள்ளூர் சாம்பியன்களால் கல்வி’ (Education by Local Champions) என்ற அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. எனவே, எழுத்திலும் உணர்ச்சியிலும், வேதிய மதிப்புக் கொள்கையை (Vedic Value System) விதிவிலக்காக விலக்கினால், தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை தே.க.கொ. 2020 உடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இலட்சணத்தில், சமூக அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் (Social and Economic Disparities), அல்லது தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் எதிர்மறை இடையூறுகள் (Negative Disruptions) காரணமாக யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சொல்லும் அளவுக்கு அறிவோ, ஆளுமையோ இல்லாத சினிமாத்தனமான மேடைப் பேச்சுகளை சீர்த்திருத்த கோஷவாதிகள், PEN Paid youtubers வேண்டுமானால் Reelsஆக போட்டு திரியலாம். இதனால் தமிழக இளந்தலைமுறைக்கு ஒரு பயனுமில்லை.
கல்வியின் வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலைத் தடுக்கும் வகையில் எந்தக் கட்டமைப்பான நடவடிக்கையோ அல்லது யோசனையோ இல்லை. பொதுப் பள்ளிகளின் விரிவாக்கம் குறித்த எந்தக் கண்ணோட்டமும் இல்லாத அரசாக திமுக இருக்கிறது.
படிப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறிவரும் தமிழ்நாட்டின் மனிதவளமான இளையத் தலைமுறையின் கல்வி உரிமைக்காக, நல்வாழ்விற்காக நிதி இன்றியமையாதது. கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்திவைத்துள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் அராஜகமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. நிதியை தரமறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதே நேரம் தமிழ்நாட்டு பட்டியலின & பழங்குடியின மக்களின் வளர்ச்சி & வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசானது ஒதுக்கிய நிதியில் ஒரு கோடி ரூபாயைக் கூட முழுமையாக செலவு செய்யாமல் திமுக அரசு அப்படியே திருப்பியது. அதிலும், குறிப்பாக பட்டியல் & பழங்குடியின சமூக மாணவர்களின் நலனுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ₹120 கோடியில் வெறும் ₹2 கோடியை மட்டும் செலவு செய்துவிட்டு மீதி ₹118 கோடியை திருப்பி அனுப்பியது.
எஸ்சிஎஸ்பி (SCSP) எனச் சொல்லப்படும் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி இந்த 2022-23ஆம் நிதியாண்டில் 63.65% வரை செலவழிக்கப்படவில்லை. (மார்ச் மாத நிலவரபடி)
2022-23ஆம் நிதியாண்டிற்கு ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியாக ₹16,422 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், அதில் ₹5,976 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் (2021-22) இத் திட்டத்திற்கு ₹14,388 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ₹11,969 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு சுமார் ₹2,400 கோடிவரை திருப்பி அனுப்பப்பட்டது. அதாவது, 16.81% வரை செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
(ஆதாரம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்ற சமூக செயற்பாட்டாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அளித்த பதில்)
தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான உட்கூறுத்திட்டத்திற்கு கடந்த 2021-2023 ஆண்டுகளில், மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதியில் ஏறத்தாழ ₹3,000 கோடிக்கும் மேலான தொகை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டது என மற்றொரு ஆவணம் கூறுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட பணம் அதிகபட்சமே 6.77% ஆக (2020-21 நிதியாண்டு) உள்ள நிலையில், தற்போது ஆளும் திமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தலித் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த துணைத்திட்ட நிதி மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கான நிதி ₹700 சொச்சம் கோடிவரை செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இப்படியாக தந்த நிதியை திராவிட மாடல் அரசு ஏன் திருப்பி அனுப்பியது?
முன்னதை கண்டிப்பது போல பின்னதையும் கண்டிக்க வேண்டுமில்லையா? கல்வி உரிமைக்காக பேசும் சினிமா முற்போக்காளர்களான மாரி செல்வராஜ்கள், மிஸ்கின்கள், தமிழரசன் பச்சமுத்துக்கள், தியாகராஜா குமாரராஜாக்கள் இதை கடந்து செல்வது ஏன்?
என்னடா உங்க கூட்டு களவாணித்தன பித்தலாட்டம்?
அரசு தன் போதாமைகளை நடிகர், நடிகைகளை கொண்டு இளம் வாக்காளர்களிடம் விளம்பரப்படுத்தி அவர்களின் வாக்கைச் சுரண்ட மட்டுமே நடத்தப்பட்ட நிகழ்வாகவே இந்த நிகழ்வை பார்க்கிறேன்.
வாக்கு அரசியலை முன்னிறுத்தி 15 லட்சம் புதிய வாக்காளர்களை கவர்வதற்காக மட்டுமே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு தேர்தல் விளம்பரம் தான் அது. அதை சமூக வலைதளங்களில் பேசி, எழுதி, புல்லரிக்க வைக்கும் BGMகளை பின்னணியில் ஓட விட்டு PRO வேலைகளை கச்சிதமாக DMK முன்களப்ஸ், Pen Paid மூத்த ஊடகவியலாளர்கள், பரங்கிமலை ஐ.டி விங் செய்கின்றனர்.
சிவப்பிரியன் செம்பியன்
https://www.facebook.com/100036407588956/posts/1467851311105108/?rdid=duYzMFGWY3o4WLTO
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு