வியப்பில் ஆழ்த்தும் ஸ்டாலின் பாணி அரசியல்!

அறம் இணைய இதழ்

வியப்பில் ஆழ்த்தும் ஸ்டாலின் பாணி அரசியல்!

சுலபத்தில் அணுக முடியாதது, பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது, மக்களின் போராட்டங்களை பொருட்படுத்தாமல் அழகாக வலம் வருவது, பார்ப்பன லாபியையும் , ஊடக லாபியையும் பக்காவாக செய்வது, குடும்ப அரசியலை தயக்கமின்றி செய்து, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ..என ஸ்டாலின் பாணி அரசியலின் சாதனைகளை பார்ப்போம்;

முதலமைச்சர் என்பவர் அழகுப் பதுமையாக வலம் வரக் கூடியவர், ஆராதனைக்குரியவர், யாருமே சுலபத்தில் அணுக முடியாதவர்.. என்ற தோற்றத்தை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விடவும் ஒருபடி வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி வருகிறார், ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக செயல்படும் விதம் நிச்சயம் கலைஞர் கருணாநிதி நினைத்துப் பார்த்திராதது.

மக்கள் பிரச்சினைகளுக்கு முடிந்த வரை முகம் கொடுப்பார் கருணாநிதி.

கருணாநிதி அடிமட்டத்தில் இருந்து வந்தவர். அந்த வகையில் அதிகாரத்தில் இருந்த போது கருணாநிதியை சந்திப்பது யாருக்கும் சிரமமாக இருந்ததில்லை. எந்த பிரச்சினையையும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். பத்திரிகைகளில் எழுதினாலே கூட அவர் கவனத்திற்கு அது நிச்சயம் சென்று விடும்.

ஆனால், ஸ்டாலினை பொறுத்த வரை எந்த ஒரு பிரச்சினையானாலும் சரி, அதை எவ்வளவு தீவிரமாக ஊடகங்களில் கவனப்படுத்தினாலும் கூட அவர் பொருட்படுத்தமாட்டார். எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளோ, தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, சுகாதாரத்துறை பணியாளர்களோ, அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ.. யார் போராடினாலும்.. எத்தனை நாட்கள் அது நீடித்தாலும் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பேற்காமல் – அதை தன் கவனத்திற்கே வராதது போன்ற பாவனையில்  – மெளனச் சாமியாய் போராடுபவர்களை சலிப்படைய வைத்து அசத்துகிறார், முதல்வர் ஸ்டாலின்!

தேர்தலுக்கு முன்பு சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களுக்கு அவரே கொடுத்த வாக்குறுதியாக இருந்தாலுமே கூட, போரடுபவர்களிடம் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைக்கு கூட அவர் உடன்படுவதில்லை. எந்தச் சூழலிலும் அவர்கள் பிரச்சினைகளை தான் பரிசீலித்தாகக் கூட அவரிடமிருந்து எந்த வார்த்தைகளும் வராது.

தமிழக மக்களையே கொந்தளிக்க வைத்த கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் கொலையாகட்டும்,

ஆட்சியின் இமேஜையே ஆட்டம் காண வைத்த வேங்கை வயல் விவகாரமாகட்டும்,

எளிய பெண் துப்புரவு பணியாளர்களை ஈவு இரக்கமில்லாமல் நள்ளிரவில் துள்ளத் துடிக்க அராஜகமாக கைது செய்த நிகழ்வாகட்டும்….,

இவை எல்லாம் தன் ஆட்சியில் தான் நிகழ்கிறது என்ற பிரக்ஜையாவது அவருக்கு இருக்குமா? என்று  நினைக்க வைக்கும் வகையில் தன்னை பாதிக்காமல் வைத்துக் கொள்கிறார், ஸ்டாலின்.

முதலமைச்சர் என்பவர் எப்போதுமே எட்டாத உயரத்தில் இருப்பவர். லேசில் சந்தித்துவிட முடியாதவர்…கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அவரை சந்திப்பது சவாலான ஒன்று… என கண்ணுக்கு தெரியாத ஒரு கம்பி வேலியை தன்னைச் சுற்றிலும் கட்டமைத்துக் கொண்டார், ஸ்டாலின்.

பழவேற்காட்டின் காட்டுப்பள்ளியில் அதானியின் துறைமுகத்திற்கு மீனவ மக்களின் கடும் எதிர்ப்புகள், போராட்டங்களை மீறி மீனவ கிராமங்களை காலி செய்து தாரை வார்த்தார், ஸ்டாலின்.

பரந்தூரில் ஐயாயிரம் ஏக்கரை பறிகொடுக்க மறுத்து, விவசாயிகள் கண்ணீர் மல்க ஆண்டுக் கணக்கில் போராடுகிறார்கள்…!

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் 3,000 ஏக்கர் பசுமை நிலத்தை பறிக்காதே என போராடிய விவசாயிகள் மீது இந்தியாவிலேயே இல்லாத வகையில் குண்டர் சட்டம் பாய்கிறது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்புகளின் சூது நிறைந்த மதவெறி திட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரே வழிவகுத்து ஊக்குவிக்கிறார்…

திண்டுக்கல் மாவட்டத்தை மாலிப்டினம் சுரங்கத்திற்காக சூறையாடதே என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்..

தூத்துகுடியில் ஒரு லட்சம் பேர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் அமைக்காதே என மாற்று இடத்தை அடையாளப்படுத்தி மக்கள் போராடி வருகிறார்கள்..

இந்தப் பிரச்சினைகள் குறித்தெல்லாம் நமது அறம் இணைய இதழிலில் தொடர்ந்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதி, நாம் கவனப்படுத்தி உள்ளோம்.

இது  போன்ற எண்ணற்ற விவகாரங்களில் எள்ளவும் கவலையின்றி, இவை குறித்து அக்கறையாக ஒரு வார்த்தை கூட உச்சரிக்காமல் மெளனம் சாதிக்கும் கலை என்பது மிகவும் அசாத்தியமானது.  இது நாற்பது வருடங்களாக பத்திரிகையாளனாக செயல்படும் என்னை பெருவியப்பில் ஆழ்த்துகிறது.

எல்லாம் அது அதற்குரிய அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். அதிகாரிகளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு ஹாயாக எந்தக் கவலையுமின்றி , பொறுப்புமின்றி  தன்னை பிரஸ்சாக வைத்துக் கொள்வது தான் ஆட்சித் தலைவருக்கான அழகு…என பொம்மை போல வலம் வருகிறார், ஸ்டாலின்.

இந்த பாணி அரசியலைத் தான் மத்தியில் மோடி செய்கிறார். இது தான் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்திய ஸ்டைல். இந்த ஸ்டைலையே அச்சு பிறழாமல் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடை பிடிக்கிறார்.

இந்த வகையில் மட்டுமின்றி, காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை தந்து அவர்களை கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாக செயல்பட அனுமதிப்பதும் பாசிக தலைவரனான மோடியின் பாணி தான்.

அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயப்படுத்துவதிலும் மோடி பாணி தான். தனியாரிடம் இருந்து பேருந்து போக்குவரத்தை பொதுதுறையாக்கினார் கருணாநிதி. அதை மெல்ல, மெல்ல தனியார்மயப்படுத்தி வருகிறார் ஸ்டாலின்.

எல்லாவற்றுக்கும் மேலாக பாஜக அரசின் அனைத்து செயல்திட்டங்களையும், சட்டங்களையும் ஒரு புறம் தமிழ் நாட்டு அரசு நிர்வாகம்  தலை வணங்கி அமல்படுத்திக் கொண்டே இருக்க, அவற்றை எதிர்ப்பது போல வீரதீரமாக பாசாங்கு அரசியலை செய்வதில் ஈடு இணையற்றவராக விளங்குகிறார், ஸ்டாலின்.

பத்திரிகையாளர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், முற்போக்கு பேசுபவர்கள் ஆகியோரை தொடர்ந்து தனக்கு ஆதரவாக எழுதவும், பேசவுமமாக விலை பேசத் தெரிந்த கலையிலும், கூட்டணி கட்சிகளை ஆட்சி மீதான அதிருப்திகளை அதிகம் பேசிவிடாதவாறு கட்டுப்படுத்தி வைத்திருப்பதிலும் ஸ்டாலின் மிகப் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

திமுக அரசு என்றால், பகுத்தறிவு, சுயமரியாதை இயக்க பின்னணி கொண்டது, சமூக நீதிக்கானது என்ற தோற்றத்தை மாற்றி, இது இந்துத்துவ அரசியல் பாணியை பின்பற்றத் தயங்காதது, பள்ளிக் கல்வியில் ஆர்.எஸ்.எஸ்காரர்களின் ஊடுருவலையும், சனாதனப் புகுத்தலையும் சாதுர்யமாக அனுமதிப்பது, அரசு நிர்வாகத்தில் பார்ப்பனீயக் கோட்பாடுகளை அமல்படுத்துவது,,என்பதை செயல்படுத்தியதன் விளைவாக இன்று தனக்கு ஆதரவாக வலுவான பார்ப்பன லாபியை உருவாக்கி, ஊடகங்களை வளைத்து போட்டு, ஆட்சி மீதான அதிருப்திகள் வெளிவராதவாறு நல்லாட்சி போன்ற தோற்றத்தை கட்டமைத்துள்ளார், ஸ்டாலின்.

(சாவித்திரி கண்ணன்0

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/22853/stalin-style-politics/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு