என்.ஐ.ஏ விசாரணை பாரபட்சமற்றதா?

அறம் இணையதளம்

என்.ஐ.ஏ விசாரணை பாரபட்சமற்றதா?

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டதன் நோக்கம் உண்மையில் நேர்மையான விசாரணை சார்ந்ததா? கடந்த காலங்களில் என்.ஐ.ஏ விசாரித்த வழக்குகளின் யோக்கியதை என்ன? இதன் பின்னுள்ள அரசியல் நோக்கங்கள் என்ன?

கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு , தமிழகத்தின்அரசியல் தட்ப வெப்பத்தையும் சீர்குலைத்துள்ளது. பலரும் பல கோணங்களில் அனுமானங்களின் அடிப்படையில் கருத்து கூறி புழுதியை கிளப்பி வருகின்றனர் .

தமிழக காவல்துறை விரைந்து செயல்பட்டு அவ்விபத்தில் இறந்தவரை அடையாளப்படுத்தி, அவரது கூட்டாளிகளாக கருதப்படுவோர் 5 பேரையும் கைது செய்து, இது பயங்கரவாத் செயலாக கருதி வழக்கு பதிவு செய்துள்ளனர், பிற மாநில தொடர்புகள் இறந்தவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட “வெடி பொருட்கள்” இதற்கு பயங்கரவாத பரிமாணத்தை தருவதால் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

இதற்கிடையில் மாநில முதல்வர் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், சொல்லி வைத்தாற் போல் ஆளுநர் ஆர்.என். ரவி  ,தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை உடனடியாக ஏன் ஒப்படைக்க வில்லை , இதற்கு  ஏன் நான்கு நாட்கள் தாமதம் என்று கேள்வி எழுப்புகிறார். அண்ணாமலை போன்று ஆளுநரும் அரசியல் செய்கிறார்.

உண்மையில் ஆரம்ப விசாரணைகளை திறம்பட நடத்தியது தமிழக காவல்துறை! தமிழக காவல்துறையினருக்கு கள நிலவரங்கள் நன்கு தெரியும் என்பதால், அவர்களால் மட்டுமே இந்த அளவுக்கு துரிதமாக இயங்கி பல தகவல்களை சேகரிக்க முடியும். உடனடியாக சம்பந்தப்பட்ட ஐவர் கைதாயினர்.

ஆனால், அற்ப காரணங்களுக்காக-பிற மாநிலத்தோர் தொடர்பு, இணையவழி பொருள்வாங்கல் போன்ற காரணங்களுக்காக- இவ்வழக்கை என்.ஐ.ஏ.விடம்  ஒப்படைத்துள்ளதற்கு அரசியல் அழுத்தமே காரணம்!  இது தமிழக காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

தேசீய புலனாய்வு முகமை இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட அக்டோபர் 27ல் ஹரியானா மாநிலத்தில் பரீதாபாத் நகரில் உள்துறை அமைச்சர் அமீத் ஷா கூட்டிய உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த விவாதத்தில் அமீத் ஷா, மூன்று Cக்களை-Co-operation,Co-ordination, Collaboration  முன்னிறுத்தினார் என்று கூறப்படுகிறது.

குற்ற நிகழ்வுகளை அதுவும் பயங்கரவாத குற்ற நிகழ்வுகளை எதிர்க்க பொதுவான செயல் திட்டம் என்று ஒன்றிய அரசு வலியுறுத்துவது எதைக் குறிக்கிறது? சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கைவழி என்று ஒன்றிய அரசால் முன்னிறுத்த படுகிறது  இத்திட்டம்!

சட்டம் ஒழுங்கு மாநில உரிமைகளை சார்ந்தது , அந்தந்த மாநில அரசுகளே அந்தந்த மாநில சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியும், காப்பாற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனம் வரையறுக்கிறது.

மாநில அரசுக்கு காவல்துறையின் மீதான அதிகாரத்தை வருங்காலத்தில் ஒன்றிய ஆட்சியாளர்கள் பறித்துவிடுவார்களோ என்றும் தோன்றுகிறது.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கொடி, ஒரே கலாச்சாரம்,ஒரே ரேஷன் ஒரே தேர்தல் என்ற வகையில் ஒரே டேட்டா ஒரே என்ட்ரி என சட்ட ஒழுங்கில் ஒரே கொள்கை என்று முழங்குகிறது. இதன் மூலம்  யதார்த்தங்களை புறக்கணித்துவிட்டு அதிகாரங்களை மையப்படுத்துவதையே – மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து, அதிகாரங்களை ஒன்றிய அரசின் வசம் குவிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது.

பல்வேறு மொழி பேசும் 29 மாநிலங்களை கொண்ட இந்தியாவில் மாநிலங்களது அதிகாரம் அல்லது உரிமைகள், ஒன்றிய அரசின் அதிகாரங்கள் உரிமைகள்  மற்றும் இரு அமைப்புகளுக்கும் பொதுவான அதிகார உரிமைகள் என அரசியல் சாசனம் விரிவாக எடுத்தியம்புகிறது.

அரசியல் சாசனத்தின் முதற் பிரிவே- 1(1),- இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் (கூட்டமைப்பு) India is  a Union of States என்று ஆரம்பிக்கிறது.

இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பாக இருந்தாலும், மாநில உரிமைகள் என தனியாக வரையறை செய்திருந்தாலும், கூட்டாட்சி முறை என்பது இன்னும் இந்தியாவில் தவழும் நிலையிலேயே – வளர்ச்சி அடையாமல் – உள்ளது .

மாநில கட்சிகள் சில மாநில சுயாட்சி பற்றி பேசினாலும், தேசிய கட்சிகள் கூட்டுறவான கூட்டாட்சி -Co-operative Federalism – பற்றி இனிப்பாக பேசினாலும், உண்மையில் இந்திய கூட்டாட்சி முறை ஒன்றிய அரசிற்கு அதீத அதிகாரமும்,முக்கியத்துவமும் கொடுப்பதாகவே உள்ளது.

இந்திய அரசியல் சாதனத்தின் 3 மற்றும் 4வது பிரிவுகள் பரந்த பாரதூரமான அதிகாரங்களை ஒன்றிய அரசிற்கு வழங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.

அரசியல் பிரிவு 360 இருக்கின்ற கூட்டாட்சி முறையை முழுமையாக மாற்றியமைக்க ஒன்றிய அரசிற்கு அளப்பரிய அதிகாரம் வழங்கியுள்ளது.

உச்ச  நீதிமன்றம் கூட்டாட்சி முறையை அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறாக (Basic structure of the Constitution) ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலைப்பாடு ஒன்றே மாநிலங்களின் பற்றுக்கோல் ஆகும்.

சட்ட ஒழுங்கை நிலை நாட்டும் விஷயங்களிலும், மாநில உரிமைகள் புறந்தள்ளப்படுகிற நிலைமை 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் புது வடிவம் எடுத்துள்ளது.

பயங்கரவாதத்தையும் எல்லை கடந்த தீவிரவாத்தையும் முறியடிக்க  அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்ததே என்.ஐ.ஏ. எனப்படும் தேசீய புலனாய்வு முகமை என்ற அமைப்பாகும். இவ்வமைப்பு குற்றம் நடைபெற்றவுடன் மாநிலங்களின் அனுமதியின்றி, தன்னிச்சையாகவே விசாரணையை தொடங்க முடியும்.இது தவிர தேசீய தீவிரவாத தடுப்பு மையம் National Counter Terrorism Centre என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், என்.சி.டி.சி. இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதற்கு காரணம், அன்று மாநில முதல்வர்களாக இருந்த ஜெயல்லிதா,நரேந்திர மோடி, நவீன் பட்நாயக், புத்ததேப் பட்டாச்சார்யா ஆகியோர் இச்சட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் அமைப்பு என்று எதிர்த்ததேயாகும்.

மாநில காவல்துறையின் உரிமைகளை பறிக்கிறது என்று எதிர்க்கப்பட்ட இந்த சட்ட வடிவம் 2019 ல் திருத்தப்பட்ட தேசீய புலனாய்வு முகமை சட்டம் மூலம் The National Investigation Agency (Amendment) Act 2019 – மாநில காவல்துறையின் அதிகாரங்கள் என்.ஐ.ஏ.விற்கு வழங்கப்பட்டது. இச்சட்டம் ஒன்றிய அரசிற்கு என்.ஐ. ஏ. விற்கான தனி வழக்காடு மன்றங்கள் -கோர்ட்- அமைக்க அதிகாரமும் வழங்குகிறது. இதையெதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இவ்வமைப்பிற்கான வானாளாவிய அதிகாரங்களை வழங்கியுள்ளதை  பயங்கரவாத்த்தை எதிர் கொள்ளும் பொருட்டு நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்று மும்பை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது!

இப்படி இச்சட்டத்திற்கான நியாயங்களை கோர்ட் விவரித்தாலும், அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்ததாக உள்ளதேயன்றி, நடைமுறை சார்ந்ததல்ல. ஏனெனில், ஒன்றிய அரசின் அதிகார துஷ்பிரயோகம், அரசியல் தலையீடு போன்ற அவலங்களை  நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.

என்.ஐ.ஏ விசாரிக்கும் பயங்கரவாத வழக்குகளில் கூட அரசியல் தலையீடு அதிகார முறைகேடு நடைபெறுவதை மலேகான் குண்டு வெடிப்பு ,ஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு, சம்ஜுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் நாம் பார்க்கவில்லையா? இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தாக்கூரை என்.ஐ.ஏ காப்பாற்றவில்லையா? ஆனால் மறுபுறம் பல்வேறு என்.ஐ.ஏ. வழக்குகளில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் என்.ஐ.ஏ. நீதிமன்றங்களால் நிரபராதி என பல ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்படுகின்றதையும் நாம் பார்த்துள்ளோம்.

என்.ஐ.ஏ செய்த தவறுகளால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள், இளமையை (சிறைச்சாலையில்) தொலைத்தார்கள்.

பயங்கரவாத்தை எதிர்கொள்ளும் முயற்சியில் கூட்டுறவுள்ள கூட்டாட்சியின் பங்களிப்பு என்ன? அதுவும் வழக்குகளை சி.பி.ஐ.யும் என்.ஐ.ஏ.வும் கையிலெடுத்த பின்னர் இந்தியாவின் அனுபவம் என்ன? விளைவு திருப்திகரமாக இல்லை என்பதை வழக்குகளில் எத்தனை பேர் முழுமையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர் என்பதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் .

இதற்கு என்ன காரணம்? ஒன்று மாநில மற்றும் ஒன்றிய காவல்துறைகளின் பரஸ்பர நம்பிக்கையின்மை (Trust deficit) இரண்டாவது, அரசியல் தலையீடு,  மூன்றாவதாக ஒன்றிய அரசின் மதச் சார்பு (Religious Bias) என்ற இந்த மூன்று காரணிகளுமே தீவிரவாத கடுப்பு நடவடிக்கைகளை முடக்கிவிடுகின்றன என்பது உண்மை !

காவல்துறையையும் உளவு அமைப்புகளையும் கையாளுபவர்கள் அதை அதிகார வரம்பிலிருந்து மீட்டு, நாடாளுமன்ற, சட்ட மன்ற கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தால், பாரபட்சமான அரசியல் தலையீட்டை பெருமளவு தவிர்க்கலாம். தங்களது நடவடிக்கைகளுக்கு பொறுப்புடன் பதில் கூறுபவர்களாக இவை மாற்றப்பட வேண்டும். இன்று அவ்வாறில்லை!

மாநில காவல் துறைகளுக்கும், ஒன்றிய காவல் அமைப்புகளுக்கும் இடையிலான விரிசலை கூட்டு முயற்சி, பரஸ்பர நம்பிக்கை , மற்றும் வெளிப்படைத்தன்மை, தகவல் பரிமாற்றம மூலம் சரி செய்யலாம் . அதற்கான முதல் தேவை கூட்டுறவான கூட்டாட்சி என்கிறார் வினய் கொய்ரா. இவர் ‘ஜிகாத் பயங்கரவாதத்திற்கெதிரான இந்திய அரசின் கொள்கை’ என்ற ஆய்வறிக்கையில்   இது பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

காவல்துறைகளிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையும் விரிசலும் ஏற்பட முதற் காரணமாக இவர் கூறுவது மாநில உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுவதுதான் என்கிறார்.ஒன்றியத்தின் அதிகார அத்துமீறல்கள் இதற்கு வழிவகுக்கின்றன. அடுத்த காரணம் அரசியல் சார்பு.

இன்று ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு அதிவேகமாக அனைத்து செயல்களிலும் வெளிப்படுவதால் நம்பிக்கையின்மையும், நாடகமாடுவதும் நடைபெறுகிறது. இதனால் குற்றங்கள் தடுக்கப்படுவதில்லை. ஆனால், குற்றஞ்சாட்டப்படுபவர்கள் அதிகமானாலும் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம், முறையான விசாரணையும் நடைபெறவில்லை முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதுதான்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.ஐ.ஏ. சி.பி.ஐ. இ.டி. போன்ற அமைப்புகள் அரசியல் தலையீடுகளினாலும் மத மாச்சர்யங்களினாலும் ஒருதலைபட்சமாக  நடவடிக்கைள் எடுக்கும் பொழுது சமூகத்தில் பதட்டமும், நம்பிக்கையின்மையும் பரவுகிறது.

இந்த சூழலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்வதென்பது இன்று புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. சிறு சிறு நிகழ்வுகளையும் விபத்துகளையும் மதச்சாயம் பூசி பேசுவது, தங்கள் மதத்தினர் என்றால், காவல்துறையினரின் நடவடிக்கைகளை அத்துமீறல் என்பது, வேண்டாத மதத்தினர் என்றால் காவல்துறை எடுத்த நடவடிக்கை போதாது என்பது பாசிச கட்சிகளின் உத்தி. அது இங்கே செவ்வன கடைப்பிடிக்கப்படுகிறது.

மறுபுறத்தில் பயங்கரவாத குற்றங்களும், சைபர் கிரைம்களும் மாநில எல்லைகளைகளை மீறி நடைபெறுவதால் அனைத்து இந்திய அளவிலும் அதற்கு எதிர்வினை ஆற்ற ஒரே மாதிரியான கொள்கை வேண்டுமென்று அமீத் ஷா வலியுறுத்துவது தெரிகிறது. ஆனால்,  மாநில அரசுகளை முடக்கும் அதிகார குவிப்பினால் கொள்கை மாற்றத்தால்  ஒரு பயனும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் கிடைக்கப் போவதில்லை.

ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்த ‘ பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை’ ஒரு அரசியல் ஆயுதமாக பார்க்கின்றனர். அதைக் கொண்டு சமூகத்தில் பதட்டத்தையும், வெறுப்பணர்வையும் விதைத்து அரசியல் அறுவடை செய்ய எத்தனிக்கின்றனர் என்பது ஆளுநர் ரவியின் அறிக்கையிலிருந்தும, அண்ணாமலையின் செயல்பாட்டிலிருந்தும் அனைவரும் -பாஜகவினர் தவிர- அறிந்து கொள்ள முடியும்.

அவர்கள் விரும்புவது முறையான நேர்மையான விசாரணையோ, தீர்வோ அல்ல, அரசியல் ஆதாயமே!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

- அறம் இணையதளம்

கட்டுரையாளரின் வலைதள பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://aramonline.in/11080/kovai-car-blast-nia-enquiry/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு