வரவு - செலவுத் திட்டம் – பொய்களும் உண்மைகளும்!

செந்தழல் இதழ்

வரவு - செலவுத் திட்டம்  – பொய்களும் உண்மைகளும்!

ஜூலை 23ந் தேதி, தொடர்ந்து ஏழாவது முறையாக இந்திய ஒன்றியத்தின் வரவு –செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும் “பெருமையைப்” பெற்ற நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் துணிந்து பல பொய்களை நாடாளுமன்றத்தில் தனது உரையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். 

ஏற்றத்தாழ்வு 

தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்ற தலைப்பின் கீழ் அவர் கூறுகிறார், “கடந்த பத்தாண்டு காலத்தில் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நாம் பயன்படுத்தி வந்துள்ளோம்” எனத் திருவாய் மலர்ந்துள்ளார். தொழில்நுட்பதை அவர்களுடைய ஆட்சியில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி உள்ளார்களாம். அதனால் நாட்டு மக்களிடம் நிலவும் ஏற்றத்தாழ்வை வெற்றிகரமாகக் குறைத்து உள்ளார்களாம். 

இவருடைய இந்தப் பொய்யை ஜூலை 22 ந் தேதி அவரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ அம்பலப்படுத்துகிறது. ‘மேல் மட்டத்தில் உள்ள வசதி படைத்த 10 விழுக்காட்டினர் மொத்த நாட்டு வருமானத்தில் 60 விழுக்காட்டைப்  பெற்று வருகின்றனர். இடையில் உள்ள 40 விழுக்காடு மக்கள் வருமானத்தில் 30 விழுக்காட்டைப் பெற்று வருகின்றனர். அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காடு மக்கள் வருமானத்தில் வெறும் 10 விழுக்காட்டை மற்றும் பெற்று வருகின்றனர்’ என அந்த அறிக்கை கூறுகிறது. ஒரு பக்கம் 10 விழுக்காட்டினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 60  பங்கைப் பெற்று வருகின்றனர். செல்வத்தில் திளைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் 50 விழுக்காடு மக்கள் நாட்டின் வருமானத்தில் வெறும் 10 பங்கை மட்டுமே பெறுகின்றனர;. ஏழ்மையிலும் வறுமையிலும் வாடுகின்றனர். உலகிலேயே அதிகமாக ஏற்றத்தாழ்வைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இன்று இந்திய ஒன்றியம் இருக்கிறது. ஆனால் இந்த நாட்டின் நிதி அமைச்சரோ ஏற்றத்தாழ்வைக் குறைத்துள்ளதாகத் துணிந்து நாடாளுமன்றத்தில் பொய் உரைக்கிறார். 

ஜிஎஸ்டியும் வரிச் சுமையும்   

நிர்மலா சீதாராமன் அம்மையார் துணிந்து கூறும் இன்னொரு பொய்யைக் கூறுகிறார்; அது என்னவென்றால் பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி (GST) அமைப்பின் மூலம் சாமானிய மக்களின் மீதான வரிச்  சுமை குறைக்கப்பட்டுள்ளதாம். உண்மையில் ஜிஎஸ்டி என்பது சாதாரண மக்களின் மீது கடுமையான வரி சுமையைச் சுமத்தியுள்ளது என்பதுதான் உண்மை. ஜிஎஸ்டியின் மொத்த வரியில் ஏறக்குறைய 64 விழுக்காடு கீழ் மட்டத்தில் உள்ள 50 விழுக்காடு மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது என்பதையும் மேல் மட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டினர் வெறும் 4 விழுக்காட்டை மட்டுமே செலுத்துகின்றனர் என்ற உண்மையையும் மறைத்து மேல் தட்டினரைக் காப்பாற்ற விரும்புகிறார் அம்மையார்.

விலைவாசி ஏற்றம் 

நாட்டில் விலைவாசி ஏற்றம் தொடர்ந்து குறைவாக உள்ளதாக அம்மையார் நிர்மலா சீதாராமன் துணிந்து பொய் பேசுகிறார். அரிசி,கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் எரி பொருளின் விலையும் காட்டுக்கு அடங்காமல் விண்ணை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஏழை மக்களும் கீழ் நடுத்தர மக்களும் விலைவாசி ஏற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அம்மையாருக்கோ விலைவாசிகள் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. 

கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் 

‘ஏழைகள்’, ‘இளைஞர்கள்’, ‘பெண்கள்’, ‘விவசாயிகள்’ ஆகியோரைக் கவனத்தில் கொண்டே இந்த வரவு –செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகப் பெருமையுடன் கூறிக் கொள்கிறார் அம்மையார். கிராமப்புறங்களில் பெரும்பான்மையோர் விவசாயத் தொழிலாளர்கள்தான்.  அவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கும் திட்டம்தான் மாகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம். கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலை கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும். அதன் மூலம் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் 

பொருட்களுக்கும் வேண்டல் (demand) அதிகரிக்கும்; அதன் தொடர்ச்சியாக தொழிற்துறையிலும் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற நோக்கத்தில் கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டம் மன்மோகன் சிங் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கிராமப்புறங்களில் புழங்க வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பாஜகவின் அரசாங்கமோ தொடர்ந்து அந்தத் திட்டத்தைச் சீர்குலைக்கவே முயற்சி செய்து வருகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்திலும் அதைத்தான் செய்துள்ளது. கடந்த ஆண்டு கிராமப்புற வேலை வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக 1.05 இலட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதற்காக 86000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகைகளில் இதுவே மிகக் குறைவான தொகையாகும். விவசாயிகளைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டம் எனக் கூறும் அம்மையாருக்கு விவசாயத் தொழிலாளர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை போலும்.  

வேலை வாய்ப்புக்கான திட்டங்கள்  

தேர்தல் பரப்புரையின்போது எதிரணியினர் நாட்டில் நிலவும் கடுமையான வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் பற்றியும் விலைவாசி ஏற்றங்கள் பற்றியும்  பேசினர். ஆனால் ஆளும் கட்சியான பாஜக அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அது காட்டிக் கொள்ளவில்லை. இராமனுக்குக் கோவில் கட்டியதைக் காட்டியும்  மத வெறுப்புப் பேச்சுகளின் மூலமும் பெரும்பான்மை மக்களைக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் அது மிதந்து கொண்டிருந்தது. ஆனால் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாத வகையில்  அந்தக் கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினர். இன்று வேறு வழி இல்லாமல் வேலை இல்லை என்ற பிரச்சினையை அக்கட்சி அங்கீகரித்துள்ளது. அதன் வெளிப்பாடாகத் தனது வரவு செலவுத் திட்ட உரையில் இது வேலைவாய்ப்புக்கு அதிகக் கவனம் செலுத்தும் வரவு செலவுத் திட்டம் என அறிவுக்கும் நிலைக்கு அம்மையார் தள்ளப்பட்டுள்ளார். 

ஆனால் அவர் அறிவித்துள்ளது போல இந்த வரவு செலவுத் திட்டம் உண்மையில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வேலை இல்லாத் தீண்டாட்டத்தைப் போக்குமா? இல்லை, அதுவும் ஒரு பொய்தானா? அது பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.  

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஐந்து திட்டங்களை அறிவித்துள்ளார் அம்மையார்.  புதியதாக  வேலையில் சேருபவர்களுக்கான சேமநல நிதித் திட்டத்தில் அரசாங்கமே ரூ.15000 ஐ மூன்று மாதத் தவணைகளில் செலுத்துவது, புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் முதலாளிகளுக்கு ஊக்கத் தொகையும், வேலையில் சேருபவர்களின் சேமநல நிதிக் கணக்கில் பணமும் அரசாங்கம் வழங்குவது, ஐந்து ஆண்டுகளில் ரூ. 2 இலட்சம் கோடி செலவில் 4.1 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது போன்ற திட்டங்களை அம்மையார் அறிவித்துள்ளார். 

இல்லாத வேலைக்குப் பயிற்சி 

இங்கு ஏராளமாக வேலை வாய்ப்புகள் உள்ளது போலவும், அதற்கான திறனும் பயிற்சியும் பெற்ற இளைஞர்கள் இல்லாததால்தான் இங்கு வேலை கிடைப்பது இல்லை என்பது போலவும் கருதி இந்தத் திட்டங்களை அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். இங்கு புதிய வேலை வாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. 

புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாமல் இருப்பதற்கு முதலீடுகளைச் செய்து புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த முதலாளிகள் விரும்பவில்லை என்பது ஒரு காரணம். ஏனென்றால் தற்போது உற்பத்தியாகும் பொருட்களுக்கே போதிய வேண்டல்கள் (demand) இல்லாத நிலையில் புதியதாக முதலீடுகளைச் செய்ய யாரும் தயாராக இல்லை. மேலும் இப்பொழுது உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனையே கடன் செலாவணியை, அதாவது பொருட்களைக் கடனில் பெற்று, கடனை மாதத் தவணையில் செலுத்துவது, என்பதை நம்பித்தான் உள்ளது. கடுமையான வேலை இல்லாத திண்டாட்டம் நிலவும் சமூகத்தில் நுகர்வும் குறைவாகத்தான் இருக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியம் வழங்கப்படும் நிலையிலும், விலைவாசி ஏற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் சமூகத்தில் நுகர்வு அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் கிராமப்புற வேலைத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைப்பது மேலும் வேண்டலைக் குறைக்கவே செய்யும்.  இந்தச் சூழலில் முதலாளிகள் புதிய முதலீடுகளைச் செய்ய மாட்டார்கள். 

புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாமல்  இருப்பதற்கு இன்னொரு காரணம் தொழிற்சாலைகளில் அதிகமான அளவில் வளர்ச்சியுற்ற தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தப்படும் முறை. அதாவது, அதிக அளவு மூலதனம் இட்டு, குறைவான அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மூலதனச் செறிவு கொண்ட (capital intensive)  உற்பத்தி இங்கு நிலவுகிறது. அது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை.  அது வேலை வாய்ப்புகளை உருவாக்காத பொருளாதார வளர்ச்சியைத்தான் கொண்டு வந்துள்ளது. ஆனால்  உழைப்பாளர்கள்  நிறைந்துள்ள  நமது நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமானால் உழைப்பு அதிகம் தேவைப்படும் (Labour intensive)  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் உலகமயமாக்கப்பட்ட சூழலில், முதலாளிகள்  உலகச் சந்தையில் போட்டியிட வேண்டும். அதற்காக உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே இலாபம் பெற முடியும். அதற்காக இங்குள்ள முதலாளிகள் வளர்ச்சியுற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். புதிய வேலை உருவாவதில்லை. 

வேலை வாய்ப்புகளே இல்லாத நிலையில் கோடிக்கணக்கானவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் என்ன பயன் ஏற்படப் போகிறது? முதலில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். பிறகு அவற்றின் தேவைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால் இவர்களோ தலைகீழாகத் திட்டமிடுகின்றனர். அதன் விளைவு என்னவாக இருக்கும்? பயிற்சி பெற்றவர்கள் ஏராளமாக உழைப்புச் சந்தையில் குவிவார்கள். அவர்களுக்கு சொற்ப அளவிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும். போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், போட்டியின் காரணமாக பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு மலிவான கூலிக்கு கிடைப்பார்கள். அதனால் இந்தத் திட்டம் உழைக்கும் மக்கள் வேலை பெறுவதற்கான திட்டமில்லை. மாறாக முதலாளிகளுக்கு மலிவான கூலியில் தொழிலாளர்களை உருவாக்குவாதற்கான திட்டம் ஆகும்.    

முதலாளிகளின் நலன்களுக்கான அரசு 

மேலும், நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து விட்டு ஒப்பந்தப் பணியாளர்களை வைத்தே இன்று அதிக அளவு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம், படிகள், பணிப் பாதுகாப்பு போன்ற எதையும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்குவதில்லை; அவர்களைக் கடுமையாகக் சுரண்டி முதலாளிகள் கொழுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்தின் மானியத்துடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் முறை முதலாளிகளுக்கு மேலும் இலவசமாக உழைப்பு கிடைக்க வழி வகுக்கிறது. அது முதலாளிகளின் இலாபத்தை மேலும் பெருக்கச் செய்யுமே தவிர, பயிற்சி முடிந்து வெளி வருபவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தராது. 

உண்மையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமானால் உழைப்பாளிகள் அதிக அளவில் தேவைப்படும் தொழில்நுட்பத்தை மட்டுமே தொழிற்சாலைகள் பயன்படுத்த வேண்டும் என்ற கடுமையான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும். ஆனால் இந்த அரசாங்கமோ முதலாளிகளுக்கு ஊக்கத் தொகைகளையும் மானியங்களையும்  வழங்குவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்கிறது; கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கப் போவதாகப் பாவனை காட்டுகிறது.

மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, உழைக்கும் மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில்நுட்பத்தைத்தான் முதலாளிகள் பயன்படுத்த வேண்டும் என இந்த அரசாங்கம் கட்டாயப்படுத்தாது; அதற்கான சட்டங்களைக் கொண்டு வராது. அத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டால் முதலாளிகளால் வளர்ச்சியுற்ற புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த முடியாது; உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முடியாது; அதனால்  உற்பத்திச் செலவைக் குறைக்கமுடியாது. உலகச் சந்தையில் போட்டியிட்டு அதிக இலாபங்களைப் பெற முடியாது. எனவே முதலாளிகளின்  இலாபங்களைப் பெருக்குவதற்காகவே உள்ள இந்த அரசு அத்தகைய சட்டங்களைக் கொண்டு வராது. 

உண்மையில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என அரசாங்கம் கருதினால் ஒரு தீவிரமான நடவடிக்கையை அது எடுக்கவேண்டும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் சமூகம்  முழுவதும் பயன் பெறும் நடவடிக்கை ஆகும் அது.  அது என்னவென்றால், தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதாகும். இப்பொழுது  தொழிலாளர்கள் 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர். பல இடங்களில் அதற்கும் மேல் வேலை செய்கின்றனர். இந்த நிலைக்குப் பதிலாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். இந்த வகையில் திட்டமிடுவதன் மூலம் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும். தொழில் நுட்பத்தில் வளர்ச்சி ஏற்பட ஏற்பட இன்னும் கூட வேலை நேரத்தைக் குறைக்க முடியும். அந்த நிலையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒட்டுமொத்த சமூகத்திற்கும்  மேலும் மேலும் பயன்படும். 

ஆனால், இலாபத்தையே  குறிக்கோளாகக்கொண்ட, தொழிற்சாலைகளை தனி உடைமையாகக் கொண்டுள்ள முதலாளிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் நலன்களுக்காக உள்ள  அரசும் அதை ஏற்றுக் கொள்ளாது. தொழிற்சாலைகள் அனைத்தையும் சமூக உடைமையாகக் கொண்டுள்ள, இலாபத்தின்  அடிப்படையில் இல்லாமல், மக்களின் ஒட்டுமொத்தத் தேவையின் அடிப்படையில் செயல்படும் ஒரு சோசலிச அரசில்தான் அது சாத்தியப்படும். 

எனவே இந்த வரவு- செலவுத் திட்டத்தில் கூறப்பட்டது போல மானியங்கள் வழங்குதல், பயிற்சி அளித்தல் ஆகிய முறைகள் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. இவை பயிற்சி என்ற பெயரில் இலவசமாகத் தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டவும், மானியங்கள் என்ற பெயரில் மக்கள் வரிப் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்கவுமே பயன்படும். 

அந்நிய முதலாளிகளுக்குச் சலுகை 

அடுத்து, வெளி நாட்டு முதலாளிகள் இங்கு வந்து முதலீடு செய்தால் இங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறி அவர்கள் மீதான வரியை 40% லிருந்து 35% ஆகக் குறைத்துள்ளார் அம்மையார். ஆனால் இது வரையிலும் நமக்குக் கிடைத்துள்ள அனுபவம் வெளி நாட்டு முதலாளிய நிறுவனங்கள் குறைவான வேலை வாய்ப்புகளையே வழங்குகின்றன என்பதுதான். அவற்றின் வருகை மலிவான உழைப்பையும், நமது நாட்டில் உள்ள மூலப் பொருட்களையும் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். நமது வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்காது என்பதுதான் உண்மை.  

ஏற்கனவே கார்போரேட் நிறுவனங்கள் மீது குறைவான வரிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. குறைவான வரி விதித்தால் முதலாளிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதை முதலாளிகள் மீண்டும் முதலீடு செய்வார்கள். அது புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும். என்று கூறி அவர்கள் மீதான வரிகளைக் குறைத்ததாக அரசாங்கம் கூறுகிறது வரிகள் குறைக்கப்பட்டதால் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு  வரும் இலாபங்களை  மீண்டும் முதலீடு செய்வதற்குப் பதிலாக ஆடம்பரமான, ஊதாரித்தனமான திருமணங்களிலும்  உல்லாசக்  கேளிக்கைகளிலும் களியாட்டங்களிலும் செலவு செய்கின்றனர். அண்மையில் பல்லாயிரக்கணக்கான கோடிச் செலவில் நடந்த  அம்பானி வீட்டு ஆடம்பரத் திருமணம் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

மிகை இலாபத்தில் நீந்தும் முதலாளிகள் 

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தலைமையில் தயாரிக்கப்பட்ட ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’, இந்தியாவின் கார்பொரேட் பகுதியினர் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அக்கறை கொள்வதில்லை என்கிறது; மேலும் ‘2019 -2020க்கும்  2023 -24 க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் கார்போரேட்கள் தங்களுடைய இலாபத்தை நான்கு மடங்காகப் பெருக்கியுள்ளனர். அவர்கள் மிகை இலாபத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றனர். உழைப்பின் மீது மூலதனம் ஆதிக்கம் செலுத்துவது நீண்ட கால வளர்ச்சிக்கு ஆபத்து. செயற்கைத் தொழில்நுட்பத்தின் மீதான கவர்ச்சியும் போட்டியில் வீழ்ந்து விடுவோமோ என்ற அச்சம் இருந்தாலும் முதலாளிகள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அவர்களுக்குள்ள பொறுப்பை மனதில் கொள்ள வேண்டும்; அதன் மூலமே சமூகத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியும்’ என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

மேலும், இங்கு நிலவும் கடுமையான வேலை இல்லாத பிரச்சினையைத் தீர்ப்பதற்கு   ஆண்டு தோறும் 78.5 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில்  2030 வரை வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது. 

முதலாளிகள் தங்களுடைய இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, செயற்கைத் தொழிநுட்பம் போன்றவற்றைப் புகுத்தினால் வேலை வாய்ப்பு உருவாகாது. வேலை வாய்ப்பை உருவாக்காவிட்டால் சமூகத்தின்  ஸ்திரத்தன்மை குலைந்து விடும்; கடுமையான நெருக்கடிகள் தோன்றும். அது சமூகத்தில் பெரும் எழுச்சியை உருவாக்கும். அது முதலாளிகளுக்கு ஆபத்தாக முடியும். எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என முதலாளிகளை ஆனந்த நாகேஸ்வரன் எச்சரிக்கிறார். 

ஆனால் இந்த எச்சரிக்கையை முதலாளிய வர்க்கம் ஒரு சிறிதும் சட்டை செய்யாது. இலாபத்திற்காக முதலாளிய வர்க்கம் எதைச்  செய்யவும்  தயங்காது. தமது இலாப வெறியால் சமூகத்தில் நெருக்கடிகள் முற்றி எழுச்சிகள் ஏற்படும்போது, அவற்றைக்  கொடூரமான சட்டங்ளைக் கொண்டு அடக்கி ஒடுக்க அவர்களின் ஏஜண்டுகள் தயாராக இருக்கின்றனர் என்ற எண்ணம் அந்த வர்க்கத்திற்கு இருக்கிறது.  ஆனால் ஆர்ப்பரித்து வரும் சுனாமி அலைகளை  வெறும் மணல் மூட்டைகளால் தடுத்து விட முடியாது என்பதை அது அறியவில்லை. 

                                                       

 (மு. வசந்தகுமார்)

- செந்தழல் இதழ் 

https://senthazhalmagazine.blogspot.com/2024/07/blog-post_28.html?m=1

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு