மணிப்பூரில் நரவேட்டையாடிய முதல்வர் பிரேன்சிங்!
அறம் இணைய இதழ்
”மணிப்பூர் கலவரத்தை உருவாக்கி, நான் தான் குக்கி பழங்குடிகளின் குடியிருப்புகளில் குண்டு வீசச் சொன்னேன். ..”என பெருமையாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசிய ஆடியோ டேப் அம்பலமாகியுள்ளது. ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஆடியோ டேப் முழு விவரங்களும், அதன் பின்னணியும்;
கடந்த ஆண்டு (2023) மே மாதம் வெடித்துக் கிளம்பிய மணிப்பூர் வகுப்புக் கலவரம் இந்திய நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
மணிப்பூர் பள்ளத்தாக்குகளை உறைவிடமாக கொண்ட மெய்தீ இன மக்களுக்கும் , மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் குக்கி-ஜோ இன மக்களிடையே ஏற்பட்ட இந்த இன மோதலுக்கு காரணம் மெய்தீ இன மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து அளித்த அன்றைய மணிப்பூர் உயர்நீதி மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒருபுறம் என்றாலும், அது மட்டுமில்லை.
தமிழகத்தை சார்ந்த நீதீபதி எம்.வி. முரளீதரன் அளித்த அந்த தீர்ப்பை உச்ச நீதி மன்றம் ரத்து செய்து, நீதிபதி முரளீதரனை கொல்கத்தா உயர்நீதி மன்றத்திற்கு “பணியிடை மாற்றல்” செய்து கண்டித்தது இன்னும் நினைவிலிருக்கிறது.
நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு மேல் காவு கொண்ட இந்த வகுப்பு கலவரம் ஒரே நாளிலோ அல்லது தற்செயலாகவோ ஏற்படவில்லை!
பிரதமர் மோடிக்கு மணிப்பூர் தீயை அணைக்கவோ, மணிப்பூர் சென்று அமைதி காக்கவோ, ஆறுதல் கூறவோ அன்றும் நேரமில்லை, இன்றும் நேரமில்லை!
இத்தகைய பாராமுகதிற்கு பின்னால் ஒளிந்து இருக்கும் மர்மம் என்ன ?
இதற்கு விடை கூறுவது போல் , இந்த மர்மத்தை விலக்குவது போல் , ‘ஒரு ஒலி நாடா(டேப்)’ சில தினங்களுக்கு முன் , மணிப்பூர் கலவரத்தை விசாரிக்கும் ஓய்வு பெற்ற கௌகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி. திரு. அஜய் லம்பா தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 48 நிமிடங்கள் ஓடும் இந்த ஒலி நாடாவில் இருப்பது , மணிப்பூர் முதலமைச்சர் திரு. பிரேந்திர சிங் , தனது அரசு அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் தான்.
இதன் சிறு பகுதி ஆகஸ்ட் 7 அன்று மணிப்பூரில் இருக்கும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இப்பொழுது இதன் முழு நீள டேப்பும் தில்லியில் இருந்து வெளிவரும் ‘தி வயர்’ என்ற ஆங்கில இணையதள ஊடகத்தின் வசம் உள்ளது. டேப்பின் சாராம்சங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது!
மணிப்பூர் அரசு இந்த டேப் உண்மையானதல்ல என்று கூறியுள்ளது. ஆனால், அவை விசாரணை ஆணையத்திடம் ‘சாட்சி ஆவணமாக’ சமர்ப்பிக்கப்படுள்ளதால் அதன் சாராம்சங்கள் முக்கியம் பெறுகின்றன.
இந்த ஒலி நாடாவில் மணிப்பூர் முதல்வர் என். பிரேந்திர சிங், நான் தான் இந்த மெய்தீ குக்கி இன பிரச்சினைக்கு வித்திட்டு, குக்கி இன மக்களை தனிமைப்படுத்த காரணமானவன் என்று பெருமை பேசுகிறார்.
அவர் பெருமைப்பட்ட செயல்பாடுகளாவன;
# கிறிஸ்த்துவர்களான குக்கி பழங்குடி மக்கள் படித்து ஐ ஏ எஸ், ஐ பி எஸ் பதவிகளுக்கெல்லாம் வருவதா? என்று சொல்லி மெய்தீ மக்களை போராடத் தூண்டியது அதற்கு உதவியது எல்லாமே நான் தான்.
# குக்கி இன மக்களுக்கு எதிராக கிராம குழுக்களை (village groups) ஏற்படுத்தியதிலும், மெய்தீ இன மக்கள் மட்டுமே உள்ள இத்தகைய கிராம குழுக்களுக்கு ஆயுதங்கள் அளித்து தாக்குதலை துவங்கியது நான் தான்!
# குக்கி இன மக்கள் வாழும் இடங்களிலும், மாவட்டங்களிலும் 51 எம் எம். மோர்ட்டார் வெடி குண்டுகளை வீச ( எதிரி நாட்டுப்படை மீது வீசப்படும் ராணுவ குண்டுகள்) உள்ளூர் காவலர்களுக்கு அனுமதி கொடுத்ததும், அவ்வாறு குண்டு வீசுவதை ஊக்குவித்ததும் நான் தான்.
மணிப்பூர் கலவரதிற்கு , மெய்தீ – குக்கி இன மோதலுக்கு முழு முதல் காரணம் மணிப்பூர் முதல்வர் பிரேந்திர சிங்தான் என குக்கி இன மக்களின் அமைப்புகள் ஆரம்ப முதலே குற்றஞ்சாட்டி வருகின்றன.
பிரேந்திர சிங்கின் ஒரு தலை பட்சமான மெய்தீ இன பெரும்பான்மை வாதமே, குக்கி இன மக்கள் ‘ தனி மாநிலம், தனி அதிகார அமைப்பு’ வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படைக் காரணமாகும் .
இந்த அதிகாரப் பிரிவு கோரிக்கையை – இன அடிப்படையில் மாநில எல்லைகளையும் ஆட்சி அமைப்பையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மூல காரணமே பிரேத்திர சிங் கின் மெய்தீ இன பெரும்பான்மை வாதம் தான்.
இதற்கு காரணமான மணிப்பூர் முதல்வரை நீக்குவது குறித்து வாய்திறக்காத மோடி, ‘தான் யார் பக்கம் இருக்கிறேன்’ என்பதை தெளிவாகவே உணர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் மணிப்பூர் சென்ற உள்துறை அமைச்சர் அமீத் ஷா பிரேந்திர சிங் கை ஒருங்கிணைந்த அதிகார பொறுப்பிலிருந்து (unified command) விடுவித்து, குக்கி இன மக்கள் மீது அவர்களது குடியிருப்புகள் மீது காவல் துறை 51 எம்.எம். குண்டுகளை வீசக்கூடாது என உத்தர விட்டார்.
நாடாளுமன்றத்தில் பேசுகையில் , “மணிப்பூரில், டி ஜி பி மாற்றப்பட்டுள்ளார், தலைமைச்செயலர் மாற்றப் பட்டுள்ளார், முதல்வர் ஒன்றிய அரசுடன் ஒத்துழைப்பதால் அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை” என்று ஆகஸ்டு 9;2023ல் கூறினார்.
இது குறித்து இந்த டேப்பில் பேசும் மணிப்பூர் முதல்வர் பிரேந்திர சிங், அமீத் ஷாவை மிமிக்ரி நையாண்டி செய்வதை கேட்க முடிகிறது.
“ அமீத் ஷா இங்கு வருகை தந்த போது, அவர் கேட்டார்..
”பிரேன் ஜீ..”
”சொல்லுங்க சார்..”
”எல்லாம் கேள்வி பட்டேன்.. நீங்கள் குண்டுகளை உபயோகிறீர்கள்..இனி மேல் அவ்வாறு உபயோகிக்க கூடாது ..” என்று அறிவுறுத்திய உடன் டி ஜி பி, மற்ற அதிகாரிகளை வரவழைத்து ”குண்டுகளை இனிமேல் பயன்படுத்தக் கூடாது’’ என்று உத்தரவிட்டார்.
அமித்ஷா அவ்வாறு கூறிவிட்டு வெளியேறிய பின், நான் அதிகாரிகளிடம் கூறினேன்; வெளிப்படையாக யாரும் குண்டுகளை உபயோகிக்க கூடாது, யாருக்கும் தெரியாமல் உபயோகிக்க வேண்டும்” என்றேன் என பிரேன்சிங் பேசியுள்ளது டேப்பில் உள்ளது!
அமீத் ஷாவுக்கே “அல்வா” கொடுக்கும் ஆணவம் பிரேன் சிங்குவிற்கு எப்படி வந்தது?
இதைப்போன்று, பிறிதோரிடத்தில், ஆயுதங்களை காவலர் ஆயுதக்கிடங்குகளில் இருந்து கொள்ளையடித்து சென்ற மெய்தீ இன கிராமக் குழுக்களை கைது செய்யப்படாமல் பாதுகாத்தது நான் தான் என முதல்வர் பிரேன் சிங் இந்த டேப்பில் குறிப்பிடுகிறார்.
“ யார் இவர்களை கைது செய்ய முடியும்? 4000, 5000 ஆயுதங்கள் காணமல் போனதென்றால் அதற்கு யாரை அவர்கள் கைது செய்ய முடியும்? முதல்வரையா? முதல்வரை கைது செய்த பின்னரே உங்களை தொட முடியும்…” என்று தனது “ வீர தீரச் செயல்களை” பட்டியலிடுகிறார் முதல்வர்.
குக்கி இன ஒழிப்பை ஆரம்பாய் தெங்கோல், மெய்தீ லீப்புன் போன்ற ஆர். எஸ் எஸ் அமைப்புகளை பக்கபலமாக வைத்துக் கொண்டு மணிப்பூர் முதல்வர் நர வேட்டையாடியுள்ளது இன்று இந்த ஒலி நாடா ஆதாரங்களின் மூலம் “ பிரம்மாணப் பத்திரமாக “ உருவெடுத்துள்ளதை நாம் காண்கிறோம். இது அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கி உள்ளது.
இதுவரை , 22,707 ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன, பிடி பட்டதோ வெறும் 1,757 தான். அது போன்று 6,50,000 ரவுண்ட் துப்பாக்கி குண்டுகளை கொள்ளையடித்தனர், ஆனால் இதுவரை பிடிபட்ட குண்டுகளின் எண்ணிக்கை வெறும் 5600 தான் என்றால் மணிப்பூர் மாநிலம் சட்ட ஒழுங்கில் என்ன நிலைமையில் உள்ளது என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இதனை அம் மாநில முதல்வரே ஊக்குவிக்கிறார் என்பது வெட்கக்கேடு!
அகதிகளாக்கப்பட்ட பழங்குடிகள்
சென்ற ஆண்டு ஜூலை 19 அன்று மணிப்பூர் சமூக ஊடகங்களில் இரண்டு இளம் குக்கி இன பெண்களை முழு நிர்வாணமாக நடு ரோட்டில் இழுத்து வரும் காணொலியை கண்டு இந்தியா மட்டுமல்ல, மனித குலமே கொதித்தது.
பிரதமர் அப்பொழுது வேண்டா வெறுப்பாக திருவாய் மலர்ந்தார், இன்று மேற்கு வங்க மருத்துவர் பாலியல் வன்கொலைக்கு பதறியவர்கள் அன்று பாராமுகமாக இருந்தனர்.
ஆனால், பிரேந்திர சிங் நிர்வாண ஊர்வலத்தில் மெய்தீ இன இளைஞர்களின்பங்கு பற்றியும், மெய்தி சமூகம் இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஒலிநாடாக்களில் உளறியிருக்கிறார்.
“போட்டாக்கள் எல்லாம் சரி தான், கைகள் அங்கும் இங்கும் நகர்கிறது, தெரிகிறது. ஆனால், முழு உண்மை அந்த போட்டாக்களில் தெரிகிறதா?” என மெய்தி இன இளைஞர்கள் அந்த பெண்களின் நிர்வாண உடம்பில் கைகள் தாண்டவமாடுவதை குறிப்பிட்டு பேசும் பிரேந்திர சிங் , மெய்தீ இன சமூகத்தை நோக்கி , “ நீங்கள் பெருமையுடன் உலகிற்கு கூற வேண்டும், இவ்விரு பெண்மணிகளையும் சாகாவிடாமல் காப்பற்றியது மெய்தீ இன இளைஞர்கள் தான் என பெருமையாக நெஞ்சு நிமிர்த்தி கூறுங்கள் “ என போலிப் பெருமை பேச மெய்தீ மக்களை அழைக்கிறார்.
அன்று 2002 குஜராத் கலவரத்தின் போது, அன்றைய குஜராத் முதல்வர் மோடி , “இந்துக்கள் தங்களது கோபத்தை காட்டுவதை ( முஸ்லீம் மக்களை கொன்று குவிப்பதை) தடுக்காமல் தள்ளி நில்லுங்கள் என்று உயர் காவல் அதிகாரிகள் கூட்டத்தில் கூறியதாக சாட்சி சொல்லப்பட்டது,
அவ்வாறு கூறியவர்களில் ஒருவர் – பாரதீய ஜனதா கட்சி தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான திரு. ஹிரேன் பாண்டியா- சில நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்டார்.
இன்னொருவர் – காவல்துறை உயரதிகாரியான ஐ ஏ எஸ் அதிகாரி திரு. சஞ்சீவ் வர்மா இன்று பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் இருக்கிறார்.
ஆனால், மோடியின் அடியொற்றிய பிரேந்திர சிங்கும் தன் பங்கிற்கு மணிப்பூர் கலவரம் தானாக முளைத்து வரவில்லை, திட்டமிட்டு நடைபெற்றது. என்பதை இந்த டேப்புகளின் மூலம் உலகிற்கு காட்டியுள்ளார்.
தோன்றிய இடங்கள் வேறாக இருந்தாலும் ,வார்ப்புகளும், வளர்ப்புகளும் ஒன்றாக இருப்பதை யாரும் மறுக்க இயலுமா?
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/18900/manipur-taps-biren-singh/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு