யு.ஜி.சி. நெறிமுறைகள் பாகுபாடுகளைக் களையுமா?
தலித் முரசு
பல்கலைக்கழகங்களில் நிலவும் பாகுபாடுகளைக் களைவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை 13.01.2026 அன்று பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC) வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆதிக்கச்சாதி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மிருத்துஞ்செய் திவாரி என்பவர் உள்பட மூன்று பேர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த தலைமை நீதியரசர் சூர்யகாந்த் மற்றும் நீதியரசர் ஜாய்மாலய பாக்சி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
யு.ஜி.சி. நெறிமுறைகள் 2026 இன் தொடக்கப்புள்ளி
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சாதிப்பாகுபாடுகளுக்கு ஆளாகி உயிர் நீத்த ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா மற்றும் ‘எய்ம்ஸ்’ மருத்துவக்கல்லூரியில் சாதிப் பாகுபாடுகளுக்கு ஆளாகி உயிர் நீத்த பாயல் தட்வியின் தாயார் அபேதா சலிம் தட்வி ஆகியோர் சார்பில் - பல்கலைக்கழகங்களில் பாகுபாடுகளைக் களைய வலியுறுத்தி - உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் திஷா வடேக்கர் மூலம் 2019 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை 03.01.2025 அன்று விசாரித்த நீதியரசர்கள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜால் புயான் அமர்வு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சம வாய்ப்புக் குழு (Equal opportunity cell) அமைக்கப்பட்டதா என்பது குறித்து தரவுகளைக் கண்டறிந்து தாக்கல் செய்ய யு.ஜி.சி.க்கு உத்தரவிட்டது. அது மட்டுமின்றி, 2012 நெறிமுறைகளின் படி, இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சாதியப் பாகுபாடுகள் சார்ந்து பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தரவுகளையும் தாக்கல் செய்ய வேண்டுமென்றும்; அதே போல புதிய நெறிமுறைகளைத் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதே வழக்கில், 24.04.2025 அன்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடத் தடைகோரிய இடையீட்டு மனு மீதான விசாரணையில் நீதியரசர் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, பாகுபாடுகளைக் களைய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யு.ஜி.சி. இறுதியாக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தியது. இவ்வழக்கை 15.09.2025 அன்று மீண்டும் விசாரித்த நீதியரசர்கள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலய பாக்சி அமர்வு, மிக விரிவான உத்தரவைப் பிறப்பித்தது.
அவ்விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் 10 பரிந்துரைகளைக் கொண்ட குறிப்பு ஒன்றை அளித்தார். அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த 10 பரிந்துரைகளின் சாரம், புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டது.
மனுதாரர்கள் முன்வைத்த பரிந்துரைகள்
மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த பரிந்துரைகள்:
1. அனைத்து விதமான பாகுபாடுகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்; மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. மாணவர்களின் கல்வித் திறன் அடிப்படையில் அவர்களை விடுதி, வகுப்பறை போன்ற இன்ன பிற இடங்களில் ஒதுக்குதல் கூடாது
3. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உரிய நேரத்தில் அளிக்கப்பட வேண்டும்; கல்வி நிலையங்கள் அவற்றை விருப்பு வெறுப்புக்காக நிறுத்தி வைக்கக் கூடாது
4. மாணவர்களுக்கான குறை தீர்க்கும் குழு உருவாக்கப்பட வேண்டும். அக்குழுவில் 50 சதவிகித தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்
5. புகார் அளிக்க முன்வருபவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
6. தனது கடமையை அலட்சியத்தின் பேரில் தட்டிக்கழிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
7. மாணவர்களுக்கு மனநல ஆலோசனை உதவி தரப்பட வேண்டும்; இது விளிம்புநிலை மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்
8. NAAC (National Assessment and Accreditation Council) அமைப்பு கல்வி நிறுவனங்களுக்கு தர மதிப்பீடு செய்யும்போது, பாகுபாடுகளைக் களைய தேவையான அளவுகோல்கள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்
9. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத கல்வி நிறுவனங்களுக்கான மானியத்தை யு.ஜி.சி. ரத்து செய்ய வேண்டும்
10. விளிம்புநிலை மாணவர்களுக்கு உதவியாக கல்வி நிலையங்கள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். குறிப்பாக, ஆங்கில மொழிக்கென சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
இந்த 10 பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக, தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், யு.ஜி.சி.யின் 2026 நெறிமுறைகளில் இதன் சாரம் அமையப்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியது.
யு.ஜி.சி. 2026 நெறிமுறைகள் சொல்வதென்ன?
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப, பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (Promotion of Equity in Higher Education Institutions Regulations - 2026) வகுத்து, 13.01.2026 அன்று வெளியிட்டது. இப்புதிய நெறிமுறைகளில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதரத்தில் நலிவடைந்தோர் (EWS), மாற்றுத் திறனாளிகள் என எவர் மீதும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. இந்த நெறிமுறைகள் வெளியான ஓரிரு நாள்களில் வட இந்தியாவில் சில உதிரி அமைப்புகள் தொடர் போராட்டத்தில் இறங்கின.
சமூக வலைத்தளம் முழுக்க பட்டியல் சாதியினர்/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம் 10 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இந்த நெறிமுறைகளைப் பயன்படுத்தி ஆதிக்கச் சாதியினர் மீது பொய்யாகப் புகார் அளித்து, பட்டியல் சாதியினர்/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களைப் பழிவாங்குவார்கள் என சொல்லப்பட்டது. இதே பொய்க் குற்றச்சாட்டை தான் இன்று வரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கும் சாதி இந்துக்கள் சொல்லி வருகிறார்கள். யு.ஜி.சி. நெறிமுறைகளைப் பற்றி பல புரிதல் குறைபாடுகள் அவர்களிடம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
முதலில், இது கிரிமினல் சட்டம் அல்ல. சட்டங்களில் இருவகை உண்டு. ஒன்று, தண்டனைச் சட்டம் (punitive); மற்றது, பாதுகாப்பு/தடுப்புச் சட்டம் (protective/preventive). இந்த நெறிமுறைகளின் அடிப்படை நோக்கம் பட்டியல்/பழங்குடி/பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாகுபாட்டிற்கு ஆட்படாமல் தடுப்பது மட்டுமே. இந்தப் பாதுகாப்பு யு.ஜி.சி. நெறிமுறைகளில் மட்டுமல்ல; நமது அரசமைப்புச் சட்டத்திலும் விளிம்புநிலை மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது.
இப்புதிய நெறிமுறைகளில் சொல்லப்படும் பெரும்பான்மைப் பிரிவுகள் 2012 நெறிமுறைகளிலும் இருக்கின்றன. 2012 நெறிமுறையில் உள்ள முக்கியப் பிரச்சினை, அதனை பல்கலைக்கழகங்களும் இன்ன பிற உயர்கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான். ஆனால் 2026 நெறிமுறை, நடைமுறைப்படுத்துவதற்காக கட்டாய வழிமுறையை ஆழமாக வலியுறுத்துகிறது. 2026 நெறிமுறையை நடைமுறைப்படுத்த சமபங்கு குழுக்களை (Equity committee) உருவாக்க வேண்டும். இக்குழு, மாணவர்கள், ஆசிரியர்கள், குடிமைச் சமூகத்தினர், கல்வி நிறுவனத்தின் தலைவர் என அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இக்குழு பாகுபாடுகள் சார்ந்த புகார்களைப் பரிசீலிக்கும். இக்குழுதான் புகார்கள் மீதான தனது பரிந்துரைகளையும் தண்டனையையும் வழங்கும். இந்த தண்டனைகள் பல்கலைக்கழகங்களில் தற்போது நடைமுறையில் உள்ளவைதான். அதே போல 24 மணி நேர உதவி எண் மற்றும் சம வாய்ப்பு குழுக்களை (Equal opportunity centres) அமைக்கவும் பரிந்துரைக்கிறது. இதில் முக்கிய அம்சம், நடைமுறைப்படுத்தாத உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. மானியங்களை ரத்து செய்வதுடன், அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தைத் தடைவிதிக்கும் அளவிற்கு தண்டனைகளைப் பரிந்துரைக்கிறது (Non-compliance clause). இதுதான் 2012க்கும் 2016க்குமான அடிப்படை வேறுபாடு.
நெறிமுறைகளுக்கு கிளம்பிய எதிர்ப்பு - மண்டல் 2.0
இணையத்தில் மட்டுமே தொடங்கிய இந்தப் போராட்டம் பிறகு களத்திற்கு வந்தது. சமூக வலைத்தளம் முழுக்க பட்டியல்/பழங்குடி/பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம், இந்நெறிமுறைகளுக்கு தடைவரும் வரை பத்து நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. ஒரு காணொளியில் ஒரு பெண், ‘யு.ஜி.சி. நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், தனக்கு விஷம் அருந்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்கிறார். இன்னொருவர், ‘ஆசிரியர்களிடம் இனி தலித் மாணவர்கள் மிரட்டி மதிப்பெண்களை வாங்கி விடுவார்கள் எனில் இந்நெறிமுறை அதற்கு வழிவகுக்கிறது’ என்கிறார்.
இன்னொருவர், ‘பொய்ப் புகார் அளிக்கும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தால்தான் 2026 நெறிமுறைகளை தாம் ஏற்பதாக’ப் பதிவிடுகிறார். இப்படி இணையம் முழுவதும் சாதிய வெறுப்புப் பிரச்சாரம் மிக மோசமாக ஆதிக்கச் சாதியினரால் முன்னெடுக்கப்படுகிறது. வரலாற்றை அறிந்தவர்களால் மண்டல் கமிஷன் நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளோடு இவற்றை ஒப்பிடாமல் இருக்க முடியாது.
மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் ‘ஷு பாலிஷ்’ போடும் பணிக்குதான் செல்ல வேண்டும் எனப் போராட்டக் களத்தில் ‘ஷு பாலிஷ்’ போட்டார்கள். பார்ப்பனப் பெண்கள் தாங்கள் இனி தூய்மைப் பணியாளரைத்தான் திருமணம் செய்ய வேண்டிய நிலை வரும் எனப் பேட்டியளித்தனர். மண்டல் கமிஷன் நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் வெளிப்பட்ட அப்பட்டமான சாதி வெறி, பல ஆண்டுகள் கழித்து தற்போது இணைய தளத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதி போராட்டக்காரர்கள் முதன்மையாக முன்வைப்பது, புதிய வழிகாட்டு நெறிமுறையில் சொல்லப்படும் பாகுபாடு தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சாதியற்ற (caste-neutral) தன்மையில் அணுகப்பட வேண்டும். சமபங்கு குழுக்களில் ஆதிக்கச் சாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால், சாதி இந்நாட்டின் முதன்மை முரணாக இருக்கும் நிலையிலும் சாதிப் பாகுபாடுகள் அதிகரித்து வரும் சூழலிலிலும் - சாதியற்ற தன்மையில் அணுகி - எப்படி பாகுபாட்டைக் களைய முடியும்?
சமபங்கு குழுக்களில் ஆதிக்கச் சாதியினருக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் என்கிற பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் ஆதிக்கச் சாதியினர்தான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஏற்கனவே அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளது.
முன்பே சொன்னது போல, 2012 நெறிமுறையில் உள்ள முக்கியப் பிரச்சனையே அந்த நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதுதான். அதைச் சரிசெய்யவே non-complaince clause சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இத்தகைய போராட்டங்களை வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உதிரி அமைப்புகள், கர்னி சேனா போன்ற சாதிய அமைப்புகள் மற்றும் இதர இந்துத்துவா அமைப்புகளும் முன்னெடுத்தன.
அதைத் தொடர்ந்து 3 ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு, அதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதியரசர் ஜாய்மாலய பாக்சி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இப்பிரச்சனையில் மீண்டும் மார்ச் 19ஆம் தேதி பதிலளிக்குமாறு யு.ஜி.சி.க்கும், ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க தகவல், இதே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுதான், 15.09.2025 அன்று யு.ஜி.சி.யிடம் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த பரிந்துரைகளை உள்ளடக்கி, புதிய நெறிமுறைகளை உடனே வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
யு.ஜி.சி. 2026 நெறிமுறைகளில் உள்ள குறைபாடுகள்
உண்மையில் யு.ஜி.சி. 2026 நெறிமுறைகளில் பல குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவை குறித்து விவாதிக்க இங்குள்ள ஊடகங்களில் இடமில்லை என்பதுதான் கொடுமை. இது பற்றி தன் கட்டுரையில் விளக்கியுள்ள முன்னாள் யு.ஜி.சி. தலைவர் பேராசிரியர் சுக்தேயோ தோரட், ‘உயர் கல்வி நிறுவனம் என்பதன் வரையறை என்ன என்பதை இப்புதிய நெறிமுறைகள் தெளிவாக விளக்கவில்லை’ என்கிறார்.
அதாவது, உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) என யு.ஜி.சி. சட்டம்,1956 பிரிவு 3இன் கீழ் வரும் நிறுவனங்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. அதன்படி, 1,168 பல்கலைக்கழகங்கள் மற்றும் 45,473 கல்லூரிகள் இதில் அடங்கும். ஆனால் 23 அய்.அய்.டி.க்கள், 21 அய்.அய்.எம்.கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 12,002 கல்வி நிறுவனங்களான பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிலையம், நர்சிங் கல்லூரிகள் முதலியவை யு.ஜி.சி. சட்டம்,1956 பிரிவு 3இன் கீழ் வராது. எனவே பாகுபாடுகளைக் களைவதற்காக உருவாக்கப்படும் நெறிமுறைகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படாது.
தவிர, பொருளாதரத்தில் நலிவடைந்த ஆதிக்கச் சாதியினரை (EWS) நெறிமுறையின் வரம்பிற்குள் கொண்டுவருவது எவ்வகையில் சரி என்கிற கேள்வி எழுகிறது. காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலையற்ற ஒன்று. நிலையற்ற தன்மையிலான காரணியை பாகுபாடுகளுக்கான அளவுகோலாகக் கொள்ள முடியுமா?
இதில் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது, இங்கு பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என்கிற வகைமை தலித்/பழங்குடி/பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாத ஆதிக்கச் சாதியினரை மட்டுமே குறிக்கிறது. சாதி மேலாதிக்கத்தை தன் வாழ்நாள் முழுவதும் கையில் வைத்திருக்கும் ஆதிக்கச் சாதியினரை, நிலையற்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு என்கிற ஒற்றைக் காரணிக்காக - பாகுபாடுகளுக்கு எதிரான நெறிமுறையின் வரம்பிற்குள் - கொண்டு வருவது அபத்தமில்லையா?
அதே போல, 2012 நெறிமுறை போல ‘வன்கொடுமை’யை 2026 நெறிமுறை வரையறுக்காமல் மேலோட்டமாக ‘பாகுபாடுகள்’ என்கிற அளவில் மட்டுமே அணுகுகிறது. 2012 நெறிமுறையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சொன்னது போல, 28 வகையான வன்கொடுமைகளைப் பட்டியலிடுகிறது. ஆனால் 2026 நெறிமுறை வன்கொடுமையை வறையறுக்கும் பொறுப்பை சமபங்கு குழுக்களிடம் ஒப்படைக்கிறது. 2026 நெறிமுறை, பல்கலைக்கழகங்களில் சமபங்கு குழுக்களை கட்டாயமாக்குகிறது. ஆனால் இந்த குழுவுக்கு தலைவராக கல்வி நிறுவனத்தின் தலைவரையே நியமிக்கச் சொல்கிறது.
அதாவது, புகார்களை விசாரித்த பிறகு சமபங்கு குழுவின் தலைவரான (ex-officio chairman) அவரே - புகார்கள் மீதான நடவடிக்கைகளை கல்வி நிறுவனத்தின் தலைவராக (Head of the Insitution) உள்ள - அவருக்கே பரிந்துரைப்பார் என்பது அபத்தமானதாக உள்ளது. அதே போல் இக்குழுவில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. சார்ந்தோர் இடம்பெறுவார்கள் என்று மட்டுமே பொத்தாம் பொதுவாக உள்ளது. இக்குழு உண்மையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் 50% உறுப்பினர்கள் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அதே போல, குழுவின் தலைவர் பொறுப்பில் இருக்கும் கல்வி நிறுவனத்தின் தலைவர் விடுவிக்கப்பட வேண்டும். அப்போது தான் இக்குழுவால் பயன் ஏதேனும் நிகழும்.
தொடரும் பாகுபாடுகள்
யு.ஜி.சி. தரவுகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த புகார்கள் 2019-20 முதல் 2023-24 வரையிலான காலத்தில் 118.4% அதிகரித்துள்ளன. 2014-2021 வரையிலான காலகட்டத்தில் மத்திய பல்கலைக்கழகங்களில் இதுவரை 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 24 பேர் தலித் மாணவர்கள் மற்றும் மூன்று பேர் பழங்குடியினர். இவை மட்டுமன்றி தொடர்ச்சியாக மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துக்கொண்டே வருவதை நம்மால் காண முடிகிறது.
2023 இல் நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வி இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார், நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 2018-2023 காலகட்டத்தில் 19,256 எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. மாணவர்கள் இடைநிற்றலாகி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த இடைநிற்றல் தற்செயலானது அல்ல.
மத்திய பல்கலைக்கழகங்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி மாணவர்களுக்கு எந்த அளவு சம வாய்ப்புகளை வழங்கும் இடமாக (inclusive space) உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ரோஹித் வெமுலா (HCU), பாயல் தட்வி (AIIMS), முத்துக்கிருஷ்ணன் (JNU), பாத்திமா லத்தீப் (IIT-M), தர்ஷன் சோலங்கி (IIT-D) என நீளும் பட்டியல் வெறும் பெயர்கள் அல்ல; கனவுகள் சிதைக்கப்பட்ட ஒரு தலைமுறை. உயர்கல்வி நிறுவனங்கள் அக்ரஹாரங்களாக நீடிப்பதைத் தடுக்க - ஒருமித்த அளவில் - பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினர் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதை மீண்டும் மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
(ராகுல் சிவசுப்ரமணியம்)
- தலித் முரசு
https://dalitmurasu.com/posts/69862f629a4152a916943f5a
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு