அபிஜீத் தீப்கேவின் அரசியல் தொடர்புகளும் நிலைப்பாடுகளின் பின்புலமும் என்ன?

Hardline Desk

அபிஜீத் தீப்கேவின் அரசியல் தொடர்புகளும் நிலைப்பாடுகளின் பின்புலமும் என்ன?

முப்பது வயது நிறைவுபெற்ற அபிஜீத் தீப்கே, மகாராஸ்ட்ர மாநிலத்தின் சம்பாஜி நகரில் 1995ம் ஆண்டு தலித் குடும்பத்தில் பிறந்தவர். இதழியலும் தொடர்பியலும் கற்றவர். சம்பாஜி நகரில் பிறந்த அவர் கல்வியின் பொருட்டு, புனாவுக்கு நகர்ந்து, அரசியலில் ஈடுபாடு கொண்டு, டெல்லிக்கும், பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்க போஸ்டன் பல்கலைக் கழகத்திற்கும் சென்றார்.

அவர் டெல்லியில் இருந்தபோது 2020-23 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கல்வி, மருத்துவம் சம்பந்தமான கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு மூன்று ஆண்டுகள் அக்கட்சியின் இணையத் தொடர்பாடலில் பணியாற்றியுள்ளார்.

2025ம் ஆண்டு போஸ்டன் பல்கலைக் கழகத்தில் தொடர்பியலில் உயர்கல்விப் பட்டம் முடித்த அவர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் வேலையின்மையால் வாடும் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், சோம்பேறிகள் என்று பெயரிட்டு அழைத்ததால் கோபமுற்று, பாரதிய ஜனதா கட்சியை நக்கலடிக்கும் பெயரிட்டு கரப்பான்கள் ஜனதாக் கட்சி என, மாணவர்-இளைஞர் இயக்கத்தைத் துவங்கியவர். அவரது இயக்கத்தில் இன்று 2 கோடிப்பேர் பங்கேற்றிருக்கிறார்கள்.

‘மரபான கட்சிகளும் இந்திய அரசியல் சூழலும் இளைஞர்களின் பிரச்சினைகளை அறியவும் இல்லை, அவர்களோடு உரையாடல் நிகழ்த்தவும் இல்லை’ எனும் அபிஜீத் தீப்கே, அரசியல் கட்சிகளின் மரபான பத்திரிக்கையாளர் சந்திப்புகள், தொலைக்காட்சி விவாதங்களை இளைஞர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்கிறார். அவை இறுதியில், ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் வெறும் கூச்சல்களாக மட்டுமே எஞ்சுவதாகவும் அவர் கருதுகிறார்.

தகவல் தொழில்நுட்பம் தந்த கருவிகளான சமூக ஊடகச் சாதனங்களின் வழியிலேயே அவர்கள் சிந்திக்கிறார்கள் எனவும் அவர் சொல்கிறார்.

தனது கருத்தியல் ஆதர்சங்களாக காந்தி, அம்பேத்கர், நேரு போன்றவர்களை அவர் முன்னிறுத்துகிறார். சுதந்திரப் போராட்டத்தின் தலைவராகக் காந்தி, தம்மைப் போன்றவர்களைத் தலைநிமிரச் செய்தவராக அம்பேத்கர், இந்திய நவீனத்துவத்தைச் சிந்தித்தவராக நேரு என அவர் இவர்களை நினைவுகூர்கிறார். தமது கொள்கையாக ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், சமூகநீதி போன்றவற்றை அவர் முன்னிறுத்துகிறார். தம் மீதான பி.ஜே.பி.யினரின் அவதூறுகளை அவர் பொருட்படுத்துவதில்லை. தனக்கு நிதி அவசியமில்லை என்கிறார். வைபையும் ஏஐயும் தனது தொடர்பாடலுக்குப் போதுமானது என்கிறார்.

பிரான்ஸ் நாட்டின் தொலைக் காட்சியான பிரான்ஸ்-24 நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலின் மொழிபெயர்ப்பு இங்கு வெளியாகிறது.

தில்லி ஜந்தர் மந்தர் போராட்டம்- அவரது அரசியல் இலக்குகள்- தர்மேந்திர பிரதானின் ராஜினாமா- தமது இயக்கத்தின் எதிர்காலம் எனப் பல பிரச்சினைகள் குறித்தும் அபிஜித் தீப்கே இந்த உரையாடலில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். தமிழகச் சூழலில் அபிஜீத் தீப்கே பற்றிய கூடுதலான அரசியல் புரிதல்களைத் தருவதாக இந்த உரையாடல் அமைந்திருக்கிறது.

காக்ரோச் பார்ட்டி ஏன் உருவானது?

அது ஒரு விபத்து. இப்படி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த நோக்கமும் இருக்கவில்லை. அது பகடியாகத் தோன்றிய ஒன்று. இந்தியத் தலைமை நீதிபதியிடம் இருந்து அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டபோது நான் மிகவும் வேதனை அடைந்தேன். அவர் இந்திய இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகளுடனும், ஒட்டுண்ணிகளுடனும் ஒப்பிட்டார். இதனையடுத்து நான் ஒரு ட்வீட் செய்தேன். அதுதான் அத்தனை கரப்பான்பூச்சிகளையும் ஒன்றிணைத்தது.

இளைஞர்கள் பலரும், ‘நாம் ஒன்றிணைந்து ஏதாவது ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்’ என்று கமெண்ட் செய்தனர். அப்படித்தான் இந்த சி.ஜே.பி. உயிர் பெற்றது. பகடியாக உருவான ஒன்று, இன்று ஒரு இளைஞர் இயக்கமாக மாறி நிற்கிறது.

எந்தக் கட்டத்தில் சி.ஜே.பி.யை வைத்துப் போராடலாம் என்ற முடிவுக்கு வந்தீர்கள்?

எக்ஸ் தளத்தில் அந்தப் பதிவை இட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு சி.ஜே.பி. இணையதளத்தில் 5,000 விண்ணப்பங்கள் வந்தன. அப்போதுதான் மக்கள் உண்மையிலேயே கோபத்தில் இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். இன்று எங்கள் தளத்தில் 10 லட்சம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இதை நாங்கள் ஒரு மக்கள் இயக்கமாக, அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒன்றாகப் பயன்படுத்த விரும்புகிறோம்.

உங்கள் தேர்தல் அறிக்கைகளாக 5 விஷயங்களைச் சொல்லி இருந்தீர்கள். ‘தலைமை நீதிபதி என்ற பதவியே இல்லை; வாக்குகள் காணாமல் போனாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அது பயங்கரவாதக் குற்றமாகக் கருதப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும்’ உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளன. இது குறித்துச் சொல்லமுடியுமா?

இது இந்தியா தற்போது எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான சவால்கள் ஆகும். கடந்த காலங்களில் நீதிபதிகள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு எப்படி ஆளும் அரசிடமிருந்து பலன்கள் பெற்றனர் என்பதைப் பார்த்தோம். இது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

நாடு முழுக்க நியாயமான முறையில் செலுத்தப்பட்ட வாக்குகள் காணாமல் போவதையும் பார்க்கிறோம். மேற்கு வங்கத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் நம்பகமான வாக்காளர்கள். இது தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும். எனவே எந்த ஒரு வாக்கும் நீக்கப்படக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். வாக்காளர்களை அரசாங்கம் தேர்வு செய்யக் கூடாது. வாக்காளர்கள் தான் அரசாங்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு ஏன் 50 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று நாங்கள் கேட்கிறோம். மக்கள் தொகையில் அவர்கள் 50 சதவீதம் இருக்கின்றனர்.

    அதே போல இப்போது இந்தியாவுக்குத் தேவை சுயாதீன ஊடகங்கள். இந்தியாவில் உள்ள பாரம்பரிய மற்றும் வெகுஜன ஊடகங்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து விட்டன. அவை பிரச்சினைகளைப் பற்றிப் பேச இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை.

இறுதியாக, கடந்த சில ஆண்டுகளாக ஆளும் அரசு எப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அந்தக் கட்சிகளை உடைத்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம். இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி அவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு அவர்களை ஆளும் அரசு மிரட்டுகிறது.

அனைவருமே இப்படி ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சி எங்கே? ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு இது மிகப்பெரிய ஆபத்து.

விமர்சகர்களும், எதிர்தரப்பினரும் இந்த சி.ஜே.பி. கணக்கில் இருப்பது ‘பாட்கள்’ எனவும், அவர்களில் பலரும் இந்தியாவிலேயே இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். அதே போல ஒருகாலத்தில் நீங்கள் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மிக்காக வேலை செய்ததையும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜி, எங்களுடைய கணக்கில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் எங்களைப் பின்தொடர்பவர்கள் 94% பேர் இந்தியர்கள் என்பதை நான் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளேன். அவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏற்கெனவே அந்த பொய்யை நாங்கள் உடைத்து விட்டோம்.

இதற்கு முன் 2020 முதல் 2022, 23 வரை நான் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தேன். நான் அதை எங்கும் மறைக்க முயற்சி செய்யவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியில் இருப்பதும் குற்றம் இல்லை. அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆம் ஆத்மி உட்பட எந்த அரசியல் கட்சியும் சி.ஜே.பி. உடன் இணைய நான் அனுமதிக்கவில்லை.

    காரணம் இந்திய இளைஞர்கள் தற்போது உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் விரக்தி அடைந்துவிட்டனர். அவர்கள் தங்களுடைய குரல்களை எழுப்ப ஓர் அரசியல் மேடையை விரும்புகின்றனர்.

இந்தியாவில் இப்போது இருக்கும் மிக முக்கிய பிரச்சினை வேலையின்மை. அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத் தரவுகளின் படி 15-20 வயதுக்கு உட்பட்ட 40% பேர் இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். அதே போல 25-29 வயதுக்குட்பட்ட 20% பேர் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர். இது எங்கே செல்கிறது. இது குறித்து உங்களுடைய திட்டம் என்ன?

நான் முன்பே கூறியபடி, இது எதுவும் திட்டமிடப்பட்டதல்ல. இது பகடியாகத் தொடங்கப்பட்டது. அடுத்து நாங்கள் எங்களைப் பின் தொடரும் லட்சக்கணக்கான மக்களிடம் அவர்களுடைய யோசனைகளையும், அறிவுரைகளையும், கருத்துகளையும் கேட்க இருக்கிறோம். இதை நாங்கள் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்.

அரசியல் கட்சிகள் செய்த மிகப்பெரிய தவறென்றால் அது இளைஞர்களிடம் பேசுவதை நிறுத்தியதுதான். அவர்களுடன் பேசுவதோ அல்லது அவர்களின் குரல்களைக் கேட்பதோ இல்லை. அதைத்தான் நாங்கள் முதலில் செய்யப் போகிறோம். அவர்களின் கருத்துகள், யோசனைகளை நாங்கள் கேட்கப் போகிறோம். அதை முதலில் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நாங்கள் எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் முடிவு செய்வோம்.

இந்த திடீர்ப் புகழால் உங்களுக்குப் பாதுகாப்புக் குறைபாடு ஏதேனும் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

ஆம், எனக்குக் கடந்த சில நாட்களாகக் கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் என் குடும்பத்தினரின் பாதுகாப்பை நினைத்து கவலை கொள்கிறேன். காரணம் எனது வாட்ஸ்ஆப் கணக்கில் எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வருகின்றன.

‘கண்டதுமே சுட்டுக் கொன்று விடுவோம்; இந்த இயக்கத்தை நிறுத்திவிடு அல்லது அமெரிக்காவுக்கே வந்து உன்னைக் கொல்வோம்’ என்றெல்லாம் மிரட்டுகின்றனர். இப்படி, ஒவ்வொரு நாளும் ஏராளமான மெசேஜ்கள் வருகின்றன.

எனினும் இதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. இவை எதுவும் என்னைப் பயமுறுத்தாது. அவர்கள் என்னை மிரட்டலாம். அவர்கள் என்னைத் தேடி வரலாம். ஏன் அரசாங்கமே கூட எங்களைத் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவிக்கலாம். அப்படி நாங்கள் என்ன செய்துவிட்டோம். நாங்கள் அரசாங்கத்தை அதன் தோல்விகளைப் பகடி செய்கிறோம் அவ்வளவே. அவர்கள் எங்கள் எக்ஸ் பக்கத்தை முடக்கியுள்ளனர். இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் நாங்கள் எந்தப் பதிவையும் இடவில்லை. நாங்கள் எதைச் செய்தாலும் அதை அரசியலமைப்பு எல்லைக்குள் நின்று அமைதியான முறையிலேயே செய்ய நினைக்கிறோம்.

இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் உங்கள் இணையதளத்தை அணுகமுடியவில்லை. அதன் பின்னால் என்ன காரணம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த இயக்கத்தை முடக்க முழுவீச்சில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. எங்களுடைய புகழ் அதிகமாவதைக் கண்டு ஆளும் தரப்பு கவலையடைகிறது என்பதையே இது காட்டுகிறது.

இந்த காக்ரோச் என்ற பெயரைத் தொடர்ந்து வைத்திருப்பீர்களா?

நிச்சயமாக, காக்ரோச் என்ற பெயர் தொடர்ந்து நிலைத்திருக்கும். மக்கள் குறிப்பாக GenZ இளைஞர்கள் அதை விரும்புகின்றனர். எந்த ஒரு பெயர் அவமானத்தைக் குறிக்கும் விதமாக அவர்களை நோக்கி எறியப்பட்டதோ அதையே அவர்கள் பெருமையுடன் அணிந்து கொண்டனர். எனவே இந்த பெயருடனே தொடர்கிறோம்.

https://thehardline.in/what-is-the-background-of-abhijeet-deepkes-political-connections-and-stances-a-contest-that-offers-insight/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு