துரோக அரசியலால், கபளீகரமான கட்சிகள்!
சாவித்திரி கண்ணன்
இந்தியாவில் பாஜகவை பகைத்துக் கொண்டால், அந்த அரசியல் கட்சி பிளவுகளைச் சந்திப்பது உறுதி என்பது அறிவிக்கப்படாத அரசியலாக உள்ளது!
அரசியல் துரோகிகளுக்கு தூண்டில் போட்டு, கட்சியை உருவாக்கிய ஸ்தாபகரிடம் இருந்தே கட்சிப் பெயரையும், சின்னத்தையும் தூக்கி துரோகத்திற்கு பரிசளிக்கும் பாஜகவிற்கு பலிகடா ஆனவர்களும், பாதம் தாங்கியாக மாறியவர்களும் ஒரு அலசல்;
இந்த அரசியல் சதியில் சின்னாபின்னமாகி சீரழிந்தாலும், முழுமையாக அழிக்கவொண்ணாத கட்சியாக உள்ளது, காங்கிரஸ்.
காங்கிரஸ் அதிருப்தியாளர்களை தூக்கி தனிக் கட்சி தொடங்க வைத்து, தன் கூட்டணியில் வைத்துக் கொள்வது,
காங்கிரசில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களை கணிசமாக தூக்கி பாஜகவுடன் இணைத்து காங்கிரஸ் ஆட்சிகளை கவிழ்த்து பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை கொண்டு வந்தது..என பாஜக காங்கிரசை பிளக்காத மாநிலமே இல்லை.
தன்னை தீவிரமாக எதிர்க்கும் கட்சியை பிளப்பது மாத்திரமல்ல, அந்தக் கட்சியை உருவாக்கியவருக்கே அந்தக் கட்சியை இல்லாமலாக்குவது..என்பதை பாஜகவினர் தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர்.
நிதீஸ்குமார் மோடியை எதிர்த்தார் என்பதற்காக ஐக்கிய ஜனதா தளத்தை பிளந்து ஜீதன் ராம் மாஞ்சியை இந்துஸ்தானி அவாம் மோர்சாவை தொடங்க வைத்து பாஜக கூட்டணியில் சேர்த்து இறுதியில் நிதீஸ்குமாரையுமே பணிய வைத்து பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டது மோடி-அமித்ஷா தலைமை.
இந்துத்துவ கொள்கையில் பாஜகவுடன் ஒத்திசைந்துள்ள சிவசேனாவைக் கூட பாஜக விட்டுவைக்கவில்லை. அதிகாரப் போட்டியில் சிவசேனாவை அழித்தால் தான் பாஜக மகாராஷ்டிராவில் காலூன்றும் என முடிவெடுத்து அந்தக் கட்சியை பிளக்க ஏக்நாத் ஷிண்டேவை ஊக்குவித்து முதலமைச்சர் நம்பிக்கையைக் கொடுத்தது பாஜக. அப்படி பிரிந்து வந்த ஏக் நாத் ஷிண்டே தான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையத்தை தீர்ப்பு வழங்க வைத்து கட்சி சின்னமான வில்-அம்பை ஏக் நாத் ஷிண்டே அணிக்கு தந்துவிட்டது பாஜக. சிவசேனாவை தோற்றுவித்த பால்தாக்ரேவின் மகன் உத்தவ் தாக்கரே தன் கட்சியை புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்து புதிய சின்னமான தீ பந்தத்தை பெற்றார்.
அதே போல மகாராஷ்டிராவின் பெரும் தலைவரான சர்த்பவார் அவர்களின் தேசியவாத காங்கிரசை பிளந்து அவரது அண்ணன் மகன் அஜித்பவாரையே தூக்கி எடுத்து அஜித்பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அங்கீகரித்து சரத்பவாருக்கு கட்சியின் பெயரும் கிடையாது, சின்னமும் கிடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது பாஜக.
அந்த வரிசையில் தற்போது பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மம்தா பானர்ஜியின் திரிணாமுள் காங்கிரசை பிளந்து கட்சியை ஸ்தாபித்த மம்தாவிற்கே அந்தக் கட்சியை இல்லாமல் செய்துள்ளது பாஜக. 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த திரிணாமுள் காங்கிரசை தேர்தலில் தோற்கடித்த பாஜகவானது அதன் பிறகு அந்தக் கட்சியின் 58 எம்.எல்.ஏக்களை ரித்பிரத பானர்ஜி என்பவர் மூலம் தூக்கி எடுத்தும், அதே போல கட்சியின் 20 எம்.பிக்களை ககோளி கோஸ்தியார் என்பவர் தலைமையில் பிளந்தும் வெளியே கொண்டு வந்ததோடு இவர்களை ஒருங்கிணைத்து தாங்களே உண்மையான திரிணாமுள் என கோர வைத்த வகையில் தற்போது மம்தாவிற்கு கட்சியின் பெயரும், சின்னமும் மறுக்கப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளாக கட்சிக்கு தலைமை தாங்கி கட்சியின் முகமாக அறியப்பட்டு மூன்று முறை முதலமைச்சராக அரியணை ஏறிய மம்தா பானர்ஜிக்கு இன்று அவர் உருவாக்கிய கட்சியே சொந்தமில்லை. அவரே ஆசையாசையாக தன் கைப்பட வரைந்து உருவாக்கிய புற்களுடன் கூடிய இரு மலர்கள் சின்னமும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது.
மம்தா அகில இந்திய திரிணாமுள் காங்கிரஸ் என்று புதிய கட்சியாம். கால்பந்து வீரர் என்ற புதிய சின்னமாம்.
கட்சியின் பெயரும், சின்னமும் தான் ஒரு கட்சியின் உயிர்ப்புக்கான உயிர் நாடியாகும். பழைய கூட்டாளிகள் போனாலும் இருப்பவர்களைக் கொண்டும், புதியவர்களை சேர்த்தும் புத்துயிர் பெறலாம். ஆகவே அப்படி புத்துயிர் பெறுவதைக் கூட அனுமதிக்காமல் அடியோடு எதிரியை அழிக்கும் பார்முலாவே கட்சியின் பெயரை காலாவதியாக்கி சின்னத்தை பறித்துவிடுவதாகும்.
இதற்கு துணை போவதற்கென்றே எந்த பஞ்சமா பாதகத்திற்கும் அஞ்சாத ஞானேஸ்வரனை தேர்தல் கமிஷனுக்கு தலைமை ஆணையராக்கி உள்ளது, மோடி-அமித்ஷா தலைமை.
தமிழகத்தில் அதிமுகவை பிளந்த ஒ.பி.பன்னீர் செல்வம் பாஜக மற்றும் தேர்தல் கமிஷன் ஆதரவுடன் நீண்ட நெடிய குடைச்சலை எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான அதிமுகவிற்கு ஏற்படுத்தினார். இந்தச் சூழலில் பாஜகவிடம் தானே சரண்டராகி கூட்டணி கண்டு கட்சியை காப்பாற்றிக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இப்படி துரோக அரசியலை ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஊக்குவித்து பிளவுபடுத்தி இறுதியில் ஒரிஜினல் கட்சித் தலைமையை தங்களிடமே பணிய வைப்பது அல்லது ஒன்றுமில்லாமல் காலியாக்க முயற்சிப்பது என்பதையே தன் அரசியல் ஆயுதமாக கொண்டு செயல்படுகிறது பாஜக.
இந்த வகையில் இந்தியாவில் தன்னை எதிர்த்த எல்லா கட்சிகளையும் தவிக்கவிட்ட – தண்ணீர் குடிக்க வைத்த- பாஜக ஏன் திமுகவை மட்டும் ஒன்றும் செய்யவில்லை.
காரணம், திமுகவிடம் பாஜகவின் பாச்சா ஒன்றும் பலிக்கவில்லை. தமிழகத்தை பொறுத்த வரை பாஜக தான் திமுகவிடம் சரணடைந்துவிட்டது.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான தலைமையை தமிழகத்தில் உருவாக்கப் போவதாக சொல்லி அரசியல் செய்து வந்தது பாஜக.
அதிமுகவை பொறுத்த வரை எதிர்ப்பே இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி கண்டு, எதிர்க்க வேண்டிய விஷயங்களில் எல்லாம் அமைதி காத்து, சர்வ ஜாக்கிரதையாக தன்னை தற்காத்துக் கொண்டது.
ஆனால், திமுகவை பொறுத்த வரை எதிர்க்க வேண்டிய எல்லாவற்றையுமே எதிர்ப்பது போல பாசாங்கு செய்து திரைமறைவில் சரணாகதி அரசியலை சாத்தியப்படுத்தி, தர வேண்டியதைத் தந்து, தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆகவே, கட்சித் தலைமை சரண்டரான பிறகு, கட்சிக்குள் உள்ள துரோகிகளை பாஜகவுக்கு தூக்கும் அவசியமே இல்லாமலாகிவிட்டது. ஆனால், திமுக தலைமையின் இந்த சாமார்த்திய அரசியலை ரொம்ப காலம் பாஜக அனுமதிக்காது…என்பது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக திமுக ஒத்துக் கொண்டதில் வெளிப்பட்டுவிட்டது.
திமுக கமுக்கமாக இருப்பதன் மூலம் இந்த உண்மையை சிறிது காலத்திற்கு மறைக்கலாம். அவ்வளவே!
வீரமாக எதிர்ப்பவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். விநயமாக பணிந்து போகிறவர்கள், தற்காலிகமாக தப்பித்தாலும், காலப்போக்கில் காணாமலாவது உறுதி.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/39586974247559986/?rdid=KClx72TFloll1qd4
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு