வனமும், வனச்சட்டமும் யாருக்கானது?

இரா. முத்துநாகு

வனமும், வனச்சட்டமும் யாருக்கானது?

இந்தியாவில் கடுமையான வனச்சட்டங்கள் இருந்தபோதும், வனத்தில் பட்டா இல்லாத சுமார் மூன்று லட்சம் மக்களை வெளியேற்ற அனுமதித்துள்ளது நீதிமன்றம். நாகரீக? மனிதனுக்கும் வனத்திற்குமான பந்தம் அறுந்து பல்லாண்டுகளாகி விட்டது. தலைமுறை தலைமுறையாக காட்டுக்குளே வாழும் பழங்குடிமக்களையும் நம்மைப்போலவே மாற்றி வருகிறோம். ஏறத்தாள இம்மக்களும் மாறிவிட்டார்கள். இந்நிலையில் அவர்களை அப்புற்பபடுத்த வேண்டிய அவசியத்தேவை என்ன? என, கேள்வி எழுப்பும் சுற்றுச்சூழல் ஆர்வளர்கள், 'பிரிட்டீஷார் கொண்டு வந்த வனச்சட்டம் இந்திய சுதந்திர எழுச்சியை ஒடுக்கவே' என்ற அவர்களின் வாதம் நம்மை கூர்ந்து கவனப்பட வைத்தது. 

'மலையை அண்டி வாழனும், இல்லை ஆற்றை அண்டி வாழனும் என்ற பழமொழிக்கேற்ப நீரினை மேலாண்மை செய்த மனிதன் சமவெளியில் வேளாண்மை செய்தாலும், காடுகளைச் சார்ந்தே அவனது வாழ்வியல் அமைந்தது. இதனால் என்னவோ இவன் தோற்றுவித்த அரசுகள் அண்மைக்காலம் வரை மலைஓரத்திலே அமைந்திருந்தது. 

உணவான பூண்டு, மிளகு, கறிவேப்பிலை, புளி, பட்டை, இந்துப்பு, அவ்வப்போது வேட்டை (not poaching, hunting), கல்மணிகள் (precious stone), உயிரைக் காக்கும் மூலிகைகள், சித்த வைத்திய மருந்துகள், வீடுகட்ட வேளாண்மை கருவிகள் செய்திடத் தேவையான மரம், இவை அனைத்தும் வனத்துலிருந்தே கிடைத்தால் வனம் சார்ந்த வாழ்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த ஒட்டுறவு வாழ்வு பிரிட்டீஷார் கொண்டு வந்த வனச்சட்டத்தால் முறியத்துவங்கி படிப்படியாக வனத்திற்கும் நமக்குமாக உறவு ஈக்கோ டூரிசமான மாறிவிட்டது.    

''கிழக்கு இந்தியக் கம்பெனி, பிரிட்டீஷ் அரசாக பரிணாமம்  அடைந்தவுடன், திருட்டு கொள்ளைகளைத் தடுக்க பழங்குடிகள் குற்ற தடுப்புச் சட்டம் (Criminal Tribes Act), சட்டத்தை 1881ல் கொண்டு வந்த கையோடு வனச்சட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்தச்சட்டத்தைப் பொத்தாம் பொதுவாக பார்த்தால் வனத்தைக் காக்கப் பயன்பட்டதாகவே புலப்படும்'' எனச்சொல்லுபவர்கள் ,

பிரிட்டீஷார் இந்தியா முழுவதையும் ஆள்கையை விரிவுபடுத்திய போது பல சுதேசி மன்னர்கள்  எதிர்த்துப் போரிட்டனர். இவர்களை ஒடுக்கப் பெரும்படையுடன் இந்தியா முழுவதும் பயணித்த கேப்டன் வில்லியம் லீமேன் தனது நாள்குறிப்பில் எழுதியதை இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி வைத்தார். 'கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிடும் இந்திய மன்னர்களின் படைகள், நம்படைகளை தாக்கி விட்டு காட்டுக்குள் மறைந்து கொள்கிறார்கள். அவர்களது படைகளுக்கு உதவியாக தக்கர், பண்டரக்கர் என்ற பெயரில் இயங்கும் படையினர் கொரில்லா வீரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காட்டுக்குள் பதுங்கி தனி அரசாகவே செயல்படுகிறார்கள். இவர்களே அபினி விற்பபதும் உப்பு கடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். கொள்ளைக்கூட்டமாக செயல்படும் இவர்கள், தங்களது எல்லையில் உள்ள மன்னர்களுக்கு தங்கள் கொள்ளையிடுவதில் பங்கு கொடுக்கிறார்கள். இதனால் மன்னர்களின் அனுசரனை இவர்களுக்கு உண்டு. காடுகளின் போக்கினை அறிந்து வைத்திருக்கும் இப்படையினருடன் போரிடுவதால் நமது படைகள் உயிர் இழைப்பும், மனவலிமையும் இழந்து வருகிறது' 

'காட்டுக்குள் வேட்டையாடும் இந்தப்படைகள் விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பதும் அந்த விலங்கினைத் தாக்கிக் கொல்வதன் மூலம் மூர்க்கத்தனத்தை பெறுகிறார்கள். வேட்டையாடுவதற்கு செல்லும் குழுவினர் படைப்பிரிவு போல் ஒரு தலைவனுக்கு கீழ் செயல்படும் கூட்டு குழுபோல் செயல்படுகிறார்கள். இப்படி வேட்டையாடும் கூட்டமே சுதேசி மன்னர்களின் படை. இவர்களோடு நாம் போரிடுவதை விட, காடுகளிலிருந்து இந்த மக்களைப் பிரித்தால் போதுமானது. ஆனால் இந்தியர்கள் வேட்டைத் தர்மத்தின்படி விலங்குகளை வேட்டையாடுவார்கள். இனப்பெருக்கத்திற்காக மட்டும் கருங்காட்டுக்குள் புகுந்திடும் விலங்குகளையோ, அதே போல் ஆண் விலங்கவோ, சினையாக உள்ள விலங்கிகைவோ, குட்டி விலங்குகளை வேட்டுயாடமாட்டார்கள். குருவிக்கூடுகளைக்கூட இவர்கள் கலைப்பதில்லை' எனக் குறிப்பிட்டு அறிக்கை அனுப்பினார். இதனை முழுமையாக உள்வாங்கிய பிரிட்டீஷார் வனச்சட்டத்தைக் கொண்டு வந்தனர் .

 

பிரிட்டீஷார் படிப்படியாக இந்தியா முழுவதும் தன்னை நிலைநிறுத்தினார்கள். தக்கர் பண்டரப்படைகளை கைது செய்து இவர்கள் கொள்ளையில் பங்கு வாங்கிய மன்னர்களை சிறையில் அடைத்தார்கள். இதனால் மன்னர்கள் வசமிருந்த படை, நீதி  அதிகாரங்கள் பிரிட்டீஷார் கைக்குமாறியது. பாண்டிய, சோழ, விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் மலையொட்டியுள்ள ஓரக்காடுகளை மக்கள் தொகைப்பெருக்கத்திற்கேற்ப காடுகள் அழிக்கப்பட்டது வரலாறு. அப்போது புலி சிறுத்தை போன்ற விலங்குகள் தாக்கி இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டார்கள். ஆனால் வனசட்டம் கொண்டு வந்த பிரிட்டீஷார் காடுகளின் போக்கையும் அதன் வளத்தையும் கணக்கிடவும், தங்களது இரத்த வெறியை குறையாமல் பாதுக்காக்க எதற்காக புலி, சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்கினங்களை வேட்டையாடி அவை உயிர் பிரிவதை இரசித்தனர்'' என விரிவாக விவாதிக்கிறார்கள். 

பழனி மலை பழக்குடிகள் நூலாசிரியர் கொடைக்கானல் மைக்கேல், பாறை, குன்று, புல்வெளி, கட்டாந்தரை மணல், மண் இவைகளெல்லாம் சேர்ந்த வனத்தை கருங்காடு (score zone) ஓரக்காடு (territorial zone), தரைக்காடு (buffer zone) என வகைப்படுத்தியுள்ளார்கள் பழங்குடிமக்கள். மக்களின் உணவு, மருத்துவம், போர்ப்பயிற்ச்சி என வாழ்க்கையின் அங்கமாக இருந்த வனம், கடைசியாக விறகிற்காக மட்டும் மக்களோடு உறவாடியது. அதுவும் கேஸ் சிலிண்டர் வரவால் கடைசியாக இருந்த ஒட்டுறவும் முறித்துபோனது.  தனிமனிதனோ, அல்லது குழுவோ வனத்தை அழித்திட முடியாது என்பதை 'மனித சக்தி' அறிந்தவர்கள் ஒப்புகொண்டது. கூப்' என்ற பெயரில் காடுகளை அழித்த கருகாங்காடுகளில் தேயிலை, காபி பயிரிட்டதே வன அழிப்பு என்பதை சுற்றுச்சூழலை உண்ணிப்பாகக் கவனிப்பவர்கள் தற்போது பேசி வருவது வரவேற்கத்தக்கது.  

சிறுமுகை ஆற்றங்கரையில் துவக்கப்பட்ட செயற்கைப்பட்டு (ரேயான்) உற்பத்தி செய்திடும் ஆலைக்கு கொடைக்கானல், நிலகிரி மலையில் வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களை நடவு செய்திட 1972ல் மத்திய அரசு அனுமதித்தது. இந்த ஆலை நிறுவனம் ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் இந்த விதைகளைத் தூவியது. இந்த மரங்களின் விதைகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், வனம் முழுக்க பரவியது. சுற்றுச்சூழல் மாசு காரணத்தால் இந்த ஆலை 1996ல் மூடப்பட்டது. 1960ல் கொடைக்கானல் வனத்தின் எடுத்த சர்வேயில் 930 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த புல்வெளி 2014ல் 300 சதுர கிலோமீட்டரானது. உலகின் முதன்மை உயிர்சூழல் மண்டலம் என ஐ.நா மன்றத்தால் அறிவிக்கப்பட்ட நீலகிரியில் 29875 ஏக்கரில் இருந்த புல்வெளி, 4700 ஏக்கராகக் குறைந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்த போது இந்த மரங்களால் தான் புல்வெளிகள் குறைந்தன என கண்டறிந்தோம். இது குறித்து நாங்கள் தொடுத்த வழக்கில் இம்மரங்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

வனத்திற்குள் ஈரத்தன்மையை காக்கும் காரணிகளில் புற்களுக்கு அடுத்து மூங்கில்களுக்கு உண்டு. மூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இதன் வேர்களில் உள்ள நூற்றுக்கணக்கான முண்டுகள் மழை நீரினைச் சேமித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கசியவிட்டு ஆண்டுமுழுவதும் ஓடைகளின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் காரணிகளில் மூங்கிலின் பங்கு முக்கியமானது. இவை நாற்பது ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும். பூத்து விட்டால் செத்து விடும் தன்மை கொண்டது. இதனால் காட்டுக்குள் வாழும் பழங்குடியினர் மூங்கில் வயதை கண்டறிந்து வெட்டிவிடுவார்கள், மழைகாலத்தில் தளைத்து விடும். இப்படி தளைக்கும் மூங்கில் குருத்துகளே யானைகளுக்கு தீவனம்.  வனத்துக்குள் வாழும் பழங்குடி மக்களிடம் மூங்கிலை வெட்டக்கூடாது என கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பே அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறையினர் மூங்கிலை நடவு செய்தாலும், அதனை வெட்டி விடுவதில்லை. இதனால் மூங்கில்கள் பூத்து செத்து வருகிறது.  

வனத்தின்னுள்ள பொக்குப்பாறைகள் நிறைந்த பகுதியை 'வர' என்பார்கள். இந்த வரைகளிலே தண்டு பெரிதாக உள்ள கச்சாரம்புல், மஞ்சம்புல், கொண்டப்புல் முளைக்கும். கச்சாரம்புல் இனத்திலிருந்து கலப்புச் செய்து கரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப்புல் வகைகள் வேர் வரைகளின் இடுக்குகளில் ஆழமாக ஊடுறுவிப் பரவிடும். வனத்தில் முளைக்கும் புற்களை ஓராண்டு, ஈராண்டு, பல்லாண்டுத்  தாவரம் என வகைப்படும். மஞ்சம்புல், கொண்டப்புல், கச்சாரம் புற்கள் பல்லாண்டு தாவரம். இவை வாழை, கரும்பு போல் வேர்முண்டுகளிலிருந்தே இனவிருத்தி செய்கிறது. மூங்கில் போல் வேர்முண்டுகள் நீரினை சேமித்தும் வைக்கும் இப்புற்கள், பொக்குபாறைகளை மண்ணாக மாற்றும் திறன் கொண்டது. இந்தப்புல்லினைக் கோடை பிறக்கும் முன் தீவைக்க வைக்கவில்லையென்றால் மூங்கில் போல் பூத்தவுடன் செத்துவிடும். சிறிய பறைவைகள் ஜனவரி, பிப்பரவரி மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஏதுவான குளிச்சி, இதமான வெப்பம் இந்தப்புற்களின் தூர்களில் இருப்பதால் இங்கு மட்டுமே கூடுகட்டும். பெரும்பாலான காட்டு விலங்குகளுக்கு இப்புல்லே தீவனம். புலி, சிறுத்தைகளுக்கு செரிமானக்கோளாறு ஏற்பட்டால் இந்தப்புல்லினை சாப்பிடும். இதனால் பழங்குடி மக்கள் இந்தப்புற்கள் மீது தீ வைப்பது விலங்கினங்களின் நன்மைக்காகவே, என்பதை பழங்குடி மக்கள் அறிந்து வைத்துள்ளனர். 

புல்வெளிகள் இழப்பால் வனத்தின் நீர் பிடிப்பு தன்மை இழந்து விட்டது. ஆண்டுமுழுவதும் சீராக நீர் வழிந்தோட வேண்டிய ஓடைகளில் மழைக்காலத்தில் வெள்ளமாக வருவதால் அணைகளை மட்டுமே நீர் சேமிப்பு நிலையமாக உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை எழுகிறது. வனவிலங்கள் உணவுக்காக வனத்தை விட்டு குடியிருப்புக்குள் வருகிறது. 

மன்னர் ஆட்சியின் போதே மக்களிடமிருந்த வன அறிவை பிரிட்டீஷார் அப்புறப்படுத்தி விட்டனர்.  இவர்கள் கைவைக்காத இடம் பழங்குடி மக்கள் மட்டுமே. இவர்களிடம் மட்டுமே வனம் சார்ந்த அறிவு மிச்சம் மீதம் உள்ளது. உணவுக்காக வேட்டையாடும் தலைமுறை, மரம் வெட்டி தலைசுமையாக கடத்தும் பலம் பொருந்திய மனிதனோ, அடுப்பு எரிக்க சுள்ளி எடுக்கும் தேவையோ இல்லை. பழங்குடி மக்கள் யானைகளை தெய்வமாகவே வழிபடுபவர்கள். இவர்களிடம் நுகர்வு கலாச்சாரம் இன்னும் நெருங்கவே இல்லை. வனத்தில் என்ன வகை மரம், என்ன வகை செடி எங்கு முளைக்கும். அதன் பயன்பாடு என்ன. எந்த மரம் அழிந்தால் எந்த விலங்கு இடம்பெயரும், எந்த பூச்சி சாகும். இந்தப்பூச்சி செத்தால், எந்தப் பறவை உணவு இன்றி இடமாறும் என உயிர் சங்கிலியை தெளிவாக அறிந்து, இவர்கள் இடத்தை மாற்றும் அறிவைப் பெற்றவர்கள். இவர்களிடம் உள்ள அறிவை நாம் பெற்றிட வனத்திற்குள்தான் அவர்கள் இருக்கவேண்டும். வனம் என்பது ஒரு நாட்டுக்கு சொந்தமானதில்லை அது ஒட்டுமொத்த பூவுலககிற்கு சொந்தமானது. வனத்தை காக்க, நாகரீக? மக்களான நம்மிடம் புகுந்துள்ள நுகர்வு கலாச்சாரத்தை அப்புறப்படுத்தினால் இயற்கை இயற்கையாகவே இருக்கும். காட்டுக்குள் இறக்கும் விலங்குகளை மருத்துவக் கூராய்வு செய்து அதன் தோல்களைக்கூட பயன்படுத்தக்கூடாது. உதிர்ந்து முளைக்கும் மான்கொம்பினை வைத்திருக்கூடாது போன்ற சட்டங்கள் குறித்து ஒரு நூற்றாண்டாக கேள்வியே எழவில்லை என்பதே நமது கேள்வியாக உள்ளது. இந்தநிலையில் புதுச்சட்டங்கள் யாருக்கானது'' என வினா எழுப்புகிறார் மைக்கேல்.

......காடு..., மனிதன் அறிவை வளர்க்கும் 

காடு உயிர்களைக் கட்டி காக்கும், 

காடு மனித இனத்தை உருவாக்கும்,

என்ற ஈழக் கவிதை வரிகளில் 

ஒற்றையாளாக காட்டுக்குள் சென்றவன் ஒரு படையுடன் வந்தான் என்ற வரிகளை மனதில் வைத்து நீதிமன்ற உத்தவிட்டுள்ளதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

- muthunagu nagu

(முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02geAVjJg7DgZnXYNX1rosWU1vXz4kQ6NfNsVtM7p94feG1GDCAE2WH4ghZikgp8vKl&id=100002104018789&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

இந்து தமிழ் நாளிழதலில் (11.07.2019) வெளியான எனது கட்டுரை வனமும், வனச்சட்டமும் யாருக்கானது ?

=============================================

இந்தியாவில் வனங்களில் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் பட்டா இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அவர்களை வெளியேற்றுகின்றன நீதிமன்றத் தீர்ப்புகள். ‘இந்தியாவின் சுதந்திர எழுச்சியை ஒடுக்கவே பிரிட்டிஷார் வனச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்’ என்ற விமர்சனம்தான் நினைவுக்கு வருகிறது. அப்படியொரு தேவை இன்னமும் இருப்பதாக சுதந்திர இந்தியாவும் கருதுகிறதா என்ன?

சமவெளிப் பகுதிகளில் வேளாண்மை நடந்தாலும் மலையோரங்களில் காடுகளைச் சார்ந்தே அரசுகள் உருவாயின. பூண்டு, மிளகு, புளி, பட்டை, இந்துப்பு, அவ்வப்போது வேட்டை, விலைமதிப்புள்ள கல்மணிகள், உயிர் காக்கும் மூலிகைகள், வீடு கட்டவும் வேளாண்மைக் கருவிகள் செய்திடவும் தேவையான மரங்கள் - இவை அனைத்தும் வனத்திலிருந்தே கிடைத்ததால் வனம் சார்ந்த வாழ்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. சமவெளிக்கும் மலைக் காடுகளுக்கும் இடையிலான இந்த ஒட்டுறவு வாழ்க்கைக்குத்தான் பிரிட்டிஷார் கொண்டுவந்த வனச் சட்டம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஸ்லீமேன் எழுதிய குறிப்புகள்

வனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத்தானே பிரிட்டிஷார் வனச் சட்டங்களை இயற்றினார்கள், அது நல்ல விஷயம்தானே என்று தோன்றலாம். மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் பிரிட்டிஷாரின் நோக்கம் வேறாக இருந்தது. பிரிட்டிஷார் இந்தியா முழுவதும் தங்களது ஆளுகையை விரிவுபடுத்தியபோது பல சுதேசி மன்னர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்டனர். இவர்களை ஒடுக்கப் பெரும்படையுடன் இந்தியா முழுவதும் பயணித்தவர் கேப்டன் வில்லியம் ஸ்லீமேன். அவர் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பிவைத்த குறிப்புகளிலிருந்து வனச் சட்டத்தின் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாகிறது.

‘கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிடும் இந்திய மன்னர்களின் படைகள், நம் படைகளைத் தாக்கிவிட்டு காட்டுக்குள் மறைந்துகொள்கின்றன. அவர்களது படைகளுக்கு உதவியாக தக்கர், பண்டரக்கர் என்ற பெயரில் இயங்கும் படையினர் கெரில்லா வீரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காட்டுக்குள் பதுங்கி தனி அரசாகவே செயல்படுகிறார்கள். காடுகளின் போக்கினை அறிந்து வைத்திருக்கும் இப்படையினருடன் போரிடுவதால் நமது படைகள் உயிரிழப்பைச் சந்திப்பதோடு, மனவலிமையையும் இழந்துவருகிறது. இவர்களோடு நாம் போரிடுவதைவிட, காடுகளிலிருந்து இந்த மக்களைப் பிரித்தால் மட்டுமே போதுமானது.’

ஸ்லீமேன் போன்ற அதிகாரிகளின் ஆலோசனை களும் அறிவுறுத்தல்களும்தான் 1865-லேயே வனச் சட்டம் இயற்றப்படுவதற்கும், தொடர்ந்து 1878, 1927 ஆண்டுகளில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் காரணமாயின.

1927-ம் ஆண்டின் வனச் சட்டமானது, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை அறிவித்து, மக்கள் வனப் பகுதிக்குள் நுழையவே கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது.

பிரிட்டிஷாரின் பின்தொடர்ச்சி

படிப்படியாக இந்தியா முழுவதும் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பிரிட்டிஷார் தக்கர், பண்டரக்கப் படைகளைக் கைதுசெய்தனர். இவர்களின் கொள்ளையில் பங்கு வாங்கிய மன்னர்களையும் சிறையில் அடைத்தார்கள். இதனால் மன்னர்கள் வசமிருந்த நீதி, நிர்வாக அதிகாரங்களும் பிரிட்டிஷார் கைக்கு மாறின. வனச் சட்டங்களை இயற்றிய பிரிட்டிஷார், தங்கள் விருப்பம்போல காடுகளுக்குள் நுழைந்து புலி, சிறுத்தை, சிங்கங்களை வேட்டையாடி வரவேற்பறைகளை அலங்கரிக்க ஆரம்பித்தார்கள். பாறை, குன்று, புல்வெளி, கட்டாந்தரை மணல், மண் இவைகளெல்லாம் சேர்ந்த கருங்காடுகளை அழித்து தேயிலை, காபித் தோட்டங்களை உருவாக்கினார்கள்.

சுதந்திர இந்தியாவின் வனப் பாதுகாப்பு முயற்சிகளும் பிரிட்டிஷாரின் பின்தொடர்ச்சியாகவே இருக்கின்றன. ஓர் உதாரணம் இது. சிறுமுகை ஆற்றங்கரையில் துவக்கப்பட்ட செயற்கைப்பட்டு ஆலைக்காக கொடைக்கானல், நீலகிரி மலைகளில் வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களை நடவுசெய்திட 1972-ல் மத்திய அரசு அனுமதித்தது. ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் இந்த மரங்களின் விதைகள் தூவப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஆலை 1996-ல் மூடப்பட்டது. நான்கு மரங்களின் விதைகளையும் தூவியதன் விளைவு, 1960-ல் எடுக்கப்பட்ட நில அளவையின்படி கொடைக்கானலில் 930 சதுர கிமீ பரப்பளவில் இருந்த புல்வெளி 2014-ல் 300 சதுர கிமீ ஆகக் குறைந்தது. நீலகிரியில் 29,875 ஏக்கரில் இருந்த புல்வெளி 4,700 ஏக்கராகக் குறைந்தது.

பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு

வனப் பகுதிக்குள் ஈரத்தன்மையைக் காக்கும் காரணிகளில் புற்களுக்கு அடுத்து மூங்கில்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூங்கிலும் புல் வகையைச் சேர்ந்ததுதான். இதன் வேர்களில் உள்ள நூற்றுக்கணக்கான முண்டுகள் மழை நீரைச் சேமித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிட்டு, ஆண்டு முழுவதும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. மூங்கில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். பூத்ததும் தனது ஆயுளை முடித்துக்கொள்ளும். இதனால், காட்டுக்குள் வாழும் பழங்குடியினர், மூங்கிலின் வயதைக் கணக்கிட்டு முன்கூட்டியே வெட்டிவிடுவார்கள். மழைக் காலத்தில் தழைத்துவரும் மூங்கில் குருத்துகளே யானைகளுக்குத் தீவனம். ஆனால், வனத்துக்குள் வாழும் பழங்குடி மக்களிடம் மூங்கிலை வெட்டக் கூடாது என கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பே அரசு உத்தரவிட்டுள்ளது.

வனத்தில் உள்ள பொக்குப் பாறைகள் நிறைந்த பகுதியை ‘வர’ என்பார்கள். இந்த வரைகளிலே தண்டு பெரிதாக உள்ள கச்சாரம்புல், மஞ்சம்புல், கொண்டப்புல் ஆகியவை முளைக்கும். இந்தப் புல்வகைகளின் வேர்கள் வரைகளின் இடுக்குகளில் ஆழமாக ஊடுருவிப் பரவிவிடும். மூங்கில் போல் வேர்முண்டுகளில் நீரைச் சேமித்தும் வைக்கும் இப்புற்கள், பொக்குப் பாறைகளை வளம்நிறைந்த மண்ணாக மாற்றும் திறன் கொண்டவை. இந்தப் புற்களைக் கோடைக்கு முன்பு தீ வைக்க வில்லையென்றால், மூங்கில் போலவே பூத்தவுடன் செத்துவிடும். சிறிய பறவைகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தப் புற்களில்தான் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். அதற்கு ஏதுவான குளிர்ச்சியும் இதமான வெப்பமும் இந்தப் புற்களின் தூர்களில் இருக்கும். பெரும்பாலான காட்டு விலங்குகளுக்கும் இந்தப் புல்வகைகளே தீவனம். புலி, சிறுத்தைகளுக்குச் செரிமானக்கோளாறு ஏற்பட்டால் இந்தப் புல்வகையினைச் சாப்பிடும். பழங்குடி மக்கள் இந்தப் புற்கள் மீது தீ வைப்பது விலங்கினங்களின் நன்மைக்காகவே.

புல்வெளிகளின் இழப்பால் வனங்கள் நீர்ப்பிடிப்புத் தன்மையை இழந்துவிட்டன. ஆண்டு முழுவதும் ஓடைகளில் சீராக நீர்வழிந்தோடிய காலம் முடிந்துவிட்டது. மழைக்கால வெள்ளம் பெருகுவதால், அணைகள் மட்டுமே இன்று நீர் சேமிப்பு நிலையங்களாக உள்ளன. வனப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை எழுவதும், வன விலங்குகள் உணவுக்காக வனத்தை விட்டுக் குடியிருப்புக்குள் நுழைவதும் இதனால்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே சமவெளி மக்களிடமிருந்த வன அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தற்போதைக்குப் பழங்குடி மக்களிடம் மட்டுமே வனம் சார்ந்த அறிவு எஞ்சியுள்ளது. எந்த மரம் அழிந்தால் எந்த விலங்கு இடம்பெயரும், எந்தப் பூச்சி சாகும், அந்தப் பூச்சி செத்தால் எந்தப் பறவை உணவின்றி இடம் மாறிப் போகும் என உயிர்ச் சங்கிலியைத் தெளிவாக அறிந்துவைத்திருப்பவர்கள் பழங்குடிகள் மட்டும்தான். அவர்களின் அறிவைப் பாதுகாக்க வேண்டும் என்றால், வனங்களுக்குள் அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும்.

- இரா.முத்துநாகு, ‘சுளுந்தீ’ நாவலாசிரியர்.

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு