வர்க்கக் கண்ணோட்ட அரசியலை சிதைக்கும் இந்த ஆளும் வர்க்க செயல் தந்திரங்களை முறியடிப்போம்
துரை. சண்முகம்
ஆரியம் கண்டாய்! திராவிடம் கண்டாய்! என இரு துருவ அரசியலுக்குள் மொத்த தமிழக அரசியல் களத்தையும் இழுத்துக் கொண்டு செல்கிறது ஆளும் வர்க்க அரசியல்.
எதைப் பேசினாலும் இதற்குள் பேச வேண்டும்! எனும் ஒரு கட்டமைப்பு அரசியல் சிறப்பாக செதுக்கப்பட்டு இருக்கிறது.
வர்க்கக் கண்ணோட்ட அரசியலை சிதைக்கும் இந்த ஆளும் வர்க்க செயல் தந்திரங்களை முறியடிக்காமல் , கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறவே முடியாது!
படிநிலை ஒடுக்கு முறைகளை எதிர்ப்பது! என்பது ஏதோ கம்யூனிஸ்ட் திட்டத்திலும் செயலிலும் இல்லாதது போல கதை அளக்கின்றனர் சிலர்.
இந்த ஆழ்வார் வேலையை அளப்பரிய புரட்சி போல
புற்றீசல்களும் பெருகி நிற்கின்றன.
சுற்றி வளைத்து "திராவிடம் தேவல!" என்பதுதான்
இவர்களின் தேர்தலைப் பற்றிய மார்க்சியப் பார்வையாக இருக்கிறது.
"இப்போதைக்கு நாம் ஆதரிப்பவர்களிடம் கூட இதையெல்லாம் ஆதரியுங்கள் உங்களுக்கு தேர்தல் வேலை செய்கிறோம்!" எனும் ஒரு கொள்கை அளவுக்கு கூட
பேச்சு இல்லை.
பேசத் தெரியாமல் இல்லை!
இப்படிப் பிடி கொடுத்தால் பின்பும் மக்களிடம் அம்பலப்படுவோம் என்று அறிந்தே இருப்பதால், பலர் மோடி கூட்டணியை மட்டும் புறக்கணிக்க சொல்லிவிட்டு
அதுக்கு மேல ஆண்டவன் பாத்துக்குவான்! நாம் இந்த இடைவெளியில் கம்யூனிசம் வளர்ப்போம்! தத்துவத்தில் தலைமறைவு இயக்கம் நடத்துகிறார்கள்.
இதற்கான அடிப்படை அரசியல் சித்தாந்த பின்னடைவிலேயே இருக்கிறது.
வர்க்கப் போராட்ட தத்துவத்தின் கீழ் அனைத்துக்குமான அரசியல் கொள்கைகளை வகுப்பதற்கு பதிலாக, வர்க்க சமரசக் கொள்கைகளுக்கு வால் பிடிப்பது எளிதாகவும், இங்கே இருக்கிற மாநில அரசை , ஒன்றிய அரசு கட்டுமான பகை சக்தியாக உருவகித்து அதிகபட்சம் உண்மையான களத்தில் வேலை செய்யாமல் காலம் தள்ளவும் இந்தக் கண்ணோட்டம் போதுமானதாக இருக்கிறது.
வர்க்கப் போராட்ட தத்துவங்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் எல்லா பிம்பங்களும் நொறுக்கப்பட வேண்டும்.
இன்னும் ஒரு ஒன்றுபட்ட கட்சியையே கட்டும் பணி நிறைவடையவில்லை, பிரச்சார கட்டத்தையும் யாருமே தாண்டவில்லை.
அடிப்படை தொழிலாளர் விவசாயிகள் அமைப்பாக்கப்படாத உதிரிப் பாட்டாளிகளை திரட்டவும் தெம்பில்லை.
இந்த எதார்த்தத்தை அங்கீகரித்து மேற்கொண்டு முன்னேறுவதற்கு சிந்திக்காமல், சித்தாந்த அடிப்படைகளையே புறக்கணித்து நாங்கள் களத்தில் நிற்கிறோம் குளத்தில் நிற்கிறோம்! என்ற துபாய் நாலாவது குறுக்கு சந்து கடும் புரட்சியாளர்களின் காங்கல்கள் வேறு தாங்க முடியாத பரிதாபமாக இருக்கிறது.
எந்த அரசியல் அடிப்படையில் களத்தில் இருக்கிறோம் என்பதுதான்! பாட்டாளி வர்க்கத்திற்கான ஆதரவு சக்திகளையும் களத்திற்கு திரட்டி வரும் அடிப்படை கொண்டது. கற்றறிதல் என்பதில் தெளிவில்லாமல் களத்தில் நிற்கிறோம் என்பது!
பொதுப்படையான பூரிப்புக்கே பயன்படும்.
இப்படி மார்க்சிய லெனினிய அமைப்புகள் வேலை செய்த காலத்தில்தான் பல்வேறு வர்க்கங்களில் இருந்தும் கூட நிறைய பேரை அணிதிரட்ட முடிந்தது.
அப்பு பாலன் சீராளன்
இன்னும் பல துவக்க கால தோழர்கள் எல்லாம் ஆரிய திராவிட இனவாத அரசியலுக்கு மாற்றாக மார்க்சிய லெனினிய கோட்பாடுகள் வழியாகத்தான்
இந்துத்துவ சாதிய அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுத்தார்கள். கட்சியை வளர்த்தார்கள்.
அதிலிருந்து இன்னும் மேம்படுவது என்பது, சமகால அரசியல் சூழலுக்கு மார்க்சிய தத்துவ வழியை பிரயோகிப்பது என்பதே ஒழிய, அதாவது பாட்டாளி வர்க்க அரசியல் சக்திகளை ஐக்கிய படுத்தி முன்னேறுவது என்பதே ஒழிய,
புதிய குட்டி முதலாளித்துவ குழுக்களுக்கும் முதலாளித்துவ கட்சிகளுக்கும் பின்னே போய் நிற்பது அல்ல.
https://www.facebook.com/share/p/18SLU4LcnN/
===========================================================================
சிலர், ஆம் சிலர்தான்!
தமிழ் என்றால் ஆரியம் புகுந்துவிடும்! அதனால்தான் திராவிடர் என சொல்கிறோம் என்று அறிவுக்கும் உண்மைக்கும் பொருத்தமற்ற முறையில் வாதங்களை முன்வைக்கிறார்கள்.
தமிழர் என்பதோ, திராவிடம் என்பதோ எந்தக் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது என்பதை பொறுத்த விசயம் இது.
தேசிய முதலாளித்துவ ஆற்றல்களின் வளர்ச்சிப் போக்கில் உருவாகும் ஒரு தேசிய இனத்தை அதன் பெயரால் அழைப்பதும்,
மொழி வழி பெயரில் அதன் முற்போக்கான ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதும்தான் சரியான அரசியல். இது தமிழர் அல்லாத பிற தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை
போக்கில் தேசிய இனங்களை சுய நிர்ணய உரிமை அடிப்படையில் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு வென்றெடுப்பது தான் தேவையானது.
இந்த அரசியல் என்பது இந்தியாவில் ஆளுகையில் இருக்கும் இந்துத்துவ சாதி ஆதிக்க அரசியலுக்கும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை தாங்கிப் பிடிக்கும் இந்திய ஆளும் வர்க்க ஒடுக்கு முறைக்கும் எதிரானதுதான்.
தமிழ்நாட்டில் தமிழ் மக்களின்
இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி என்பதும் , இந்தி மொழி திணிப்பை எதிர்த்ததோடு
ஒரு தேசிய இனத்தின் ஜனநாயக உரிமை அங்கீகரிக்காத இந்திய ஆளும் வர்க்க ஒடுக்கு முறையையும், இந்தியின் பெயரிலான இந்துத்துவ சமஸ்கிருத ஆதிக்க நோக்கத்தையும் அம்பலப்படுத்தியது.
சரியாகச் சொன்னால் தங்களது தாய் மொழியான தமிழை உயர்த்திப் பிடிக்கும், அதற்கான ஜனநாயக உரிமைகளை அரசியல் அரங்கில் முன்வைத்ததுமான கிளர்ச்சி அது. இந்திய ஆளும் வர்க்கத்துடன் சமரசவாதிகளாகிப்போன கட்சிகளால் தமிழ்த் துரோகம் செய்யப்பட்டு, ஆங்கிலம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது.
வணிகம் வாழ்வியல் வேலை வாய்ப்பு ஏகாதிபத்திய சார்பு அலுவல் முறைகளால் தமிழ்நாட்டு மக்களை ஆங்கிலம் அவசியம் எனும் நிலைக்கு தள்ளியது இவர்கள்தான்.
இந்த அடிப்படை அரசியல் பொருளாதார சமுதாய வாழ்வை மாற்றாமல், மக்களுக்கு மொழிப்பற்று இல்லை என்பது மற்றொரு பொய்.
தமிழர் என்றதால் ஆரியம் வந்து புகுந்திடவில்லை. மேற்கண்ட நோக்கத்திலான அரசியல் அடிப்படையில் தமிழக மாணவர்கள், தமிழ் புலவர்கள்,
திராவிட கட்சிகள் , கம்யூனிச கொள்கை கொண்டவர்கள்
என்று பலரும் பங்கு பெற்றனர்.
தமிழர் என்று சொன்னாலே இந்துத்துவம் புகுந்துவிடும்!
எனும் கண்ணோட்டம்
தவறானது.
ஏற்கனவே கூறியது மாதிரி தமிழரோ, திராவிடரோ இந்துத்துவத்துடன் சமரச சக்திகளாக சீரழிவதற்கான அடிப்படை அவர்களின் வர்க்க கண்ணோட்டத்தில் இருக்கிறது என்பதுதான் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
https://www.facebook.com/100080904177819/posts/922345913805539/?rdid=okqUcTO9Ex2UrmBy
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு