சமூக நீதி என்பது வெற்று ஆரவாரப் பேச்சுக்கானதல்ல...
சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் அரங்கேறி நான்கு நாட்களாகிறது.
இன்னும் இந்த ஆணவக் கொலைக்கு காரணமான எஸ்.ஐ தம்பதியினரை விசாராணை வளையத்திற்குள் கூட கொண்டு வரவில்லை.
அவர்கள் தலைமறைவாகிவிட்டார்களாம். அப்படி தலைமறைவாவதே குற்றத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதற்கான முகாந்திரமாய்விடுகிறதே!
கொலை சம்பவம் நடந்த 20 நிமிஷத்தில் ஸ்பாட்டிற்கு வந்த கொலையாளி சுஜித்தின் தாயையும், தகப்பனையும் காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கத் தவறியதா? அல்லது தப்பித்துக் கொள்ளச் சொல்லி அனுப்பி வைத்ததா? என்ற மக்கள் சந்தேகத்திற்கு பதில் வேண்டும். எந்த பதில் வந்தாலும், இதுவே ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.
கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி காதலித்துள்ளது பெண்ணின் பெற்றொர்களுக்கு தெரியும். இருவருமே 26 வயது கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் அவசரப்படாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும் வரை கண்ணியமாக பொறுத்திருத்திருந்ததையும் அறிவார்கள். அந்த நம்பிக்கையில் தான் அப்பாவும், அம்மாவும் உன்னோடு பேச வேண்டும் என்றார்கள் என சுஜித் கூறியவுடன் கவின் உடன் செல்லக் காரணமானது.
தங்களோடு 25 ஆண்டுகளாக உடன் பணியாற்றியவர்களின் நடமாட்டம், தொடர்புகள் எல்லாமே காவல் துறைக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தின் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வராமலே இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என லோக்கல் காவல்துறை நம்புகிறதா?
அப்படி நம்பி செயல்படுவதும் குற்றவாளிகளை காப்பாற்றும் குற்றத்தில் வருமே. முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்த எஸ்.ஐ தம்பதிகளை பாதுகாக்கும் காவல்துறையினர் மீது தான்.
ஏனென்றால், அந்தப் பெண் கவின் யாரென்றெ தனக்கு தெரியாது எனக் கூறியதாக காவல்துறையினர் செய்தியை கசியவிட்டனர்.
எஸ்.ஐ தம்பதியினரை கைது செய்தால் தான் மகனின் உடலை பெறுவோம் என்று கொலையான கவினின் பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய போது 24 மணி நேரத்தில் கைது செய்துவிடுவோ என என்ற உறுதிமொழியை இரண்டு நாட்கள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது போராடும் மக்களிடமே எஸ். ஐ தம்பதியினர் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான எவிடென்ஸ்சை காட்டுங்க, கைது செய்கிறோம் என காவல்துறை வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறது.
அவங்க இரண்டு பேரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால், அந்த எவிடென்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும். அவர்களை மறைத்து வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடமே பாலை தள்ளிவிடுகிறது, காவல்துறை. இது சாமார்த்தியம் என அவர்கள் கருதலாம். ஆனால், இது சதிக்கு உடந்தை என்பதாகவே புரிந்து கொள்ளப்படும்.
ஆணவப் படுகொலைக்கு மாவட்ட எஸ்.பியை பொறுப்பாக்கி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் எனச் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தது திமுக அரசு. இந்த நான்கு ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகள், சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அந்த சட்டத்தைக் கொண்டு வரவில்லை ஸ்டாலின்.
சமூக நீதி என்பது வெற்று ஆரவாரப் பேச்சுக்கானதல்ல. உண்மையிலேயே அதை உளமாற விரும்பிய உன்னத தலைவர்கள் பெரியார், அண்ணா வழி வந்த கட்சி தான் திமுக. எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக இந்த ஆட்சியின் சமூக நீதிப் பார்வையை வெளிப்படுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். அதுவே நெல்லை காவல்துறையை நேரிய வழியில் செயலாற்ற நிர்பந்தம் தந்திருக்கும்.
ஒரு ஆணவப் படுகொலையை கண்டித்து பேசி, ’நேர்மையாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்’ என உத்திரவாதத்தை வழங்க முடியாமல் இன்னும் ஊமையாய் இருப்பது சமூக நீதி பேசும் திராவிட மாடல் முதல்வருக்கு அழகல்ல. அவமானமாகும்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட அமைச்சர் ஆகியோர் ஆணவப் படுகொலைக்கு ஆளான குடும்பத்தை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.
இன்னும் நான்கு நாட்களாகியும் இந்த விவகாரத்தில் எஸ்.ஐ தம்பதியினரை காவல்துறை காப்பாற்றி வருவதற்கு அந்த துறைக்கு தலைமை தங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும்.
- சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/18xgSuojvb/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு