பழங்குடிகளை விரட்டி காடுகளை இராணுவமயமாக்கும் ஏகாதிபத்தியங்கள்

இரா. முருகவேள்

பழங்குடிகளை விரட்டி காடுகளை இராணுவமயமாக்கும் ஏகாதிபத்தியங்கள்

நக்ஸலைட் இயக்கம் எழுபதுகளின் இறுதிப்பகுதியில் ஏறக்குறைய அழிக்கப்பட்டது.  மனித வேட்டைக்கும், படுகொலைக்கும், சிறைக்கும்  தப்பிய கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்ற நக்ஸலைட் தலைவர்  இந்த தோல்வி ஏன் ஏற்பட்டது என்பது குறித்து ஆழமான ஆய்வுகளின் ஈடுபடுகிறார். 

அரசு தாக்குதல் நடத்தும் போது  பின்வாங்க ஒரு பாதுகாப்பான பகுதி  இல்லாமல் போனதால்தான் ஸ்ரீகாகுளம், போஜ்பூர் போன்ற இடங்களில் தோன்றிய மக்கள் எழுச்சியும் வெற்றிகரமாக நடந்த ஆயுதப் போராட்டமும் ஒழித்துக் கட்டப்பட்டன என்ற முடிவுக்கு வருகிறார். 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தெலங்கானா போராட்டமும் இப்படிப்பட்ட பின்வாங்கு தளம் இல்லாததாலேயே பெரும் இழப்புகளை சந்தித்தது என்று முடிவு செய்கிறார். 

எனவே காடுகள் நிறைந்த சட்டிஸ்கர் பகுதிக்கு அமைப்பை விரிவாக்குவதே ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தொடரும் வழி என்று தீர்மானிக்கிறார்.

கொண்டபள்ளி சீத்தாராமைய்யாவே எதிர்ப்பார்க்காத அளவுக்கு நக்ஸல்பாரி இயக்கம் சட்டிஸ்கர் பகுதியில் தீயாகப் பற்றிக் கொண்டது.  பல்லாயிரம் பழங்குடி மக்கள் அமைப்பில் இணைந்தனர். 

சில மாதங்களுக்கு முன்பு உயிர்மையில் வந்த பழங்குடி மக்களின் பிரச்சினைகள் பற்றிய ஜல் ஜங்கல் ஜமீன் என்ற கட்டுரை . எழுதியது நாந்தான்.  இன்றைய காந்தாரா சூழலில் ஒரு இதைப் பதிவிடத் தோன்றியது. 

                            -----------------------------  

  

1840 ளின் தொடக்கத்தில் ஜெர்மனியில் மரத் திருட்டுச் சட்டம் என்ற சட்டம் அமுலுக்கு வந்ததும் காடுகள்  தனி மனிதர்களின் சொத்துகளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டன. காடுகளில் மக்கள் சுள்ளி பொறுக்குதல் தடை செய்யப்பட்டது. இச் சட்டத்தை மீறி அல்லது இப்படியொரு சட்டம் இருப்பதை அறியாமல் காட்டில் சுள்ளி பொறுக்கிய எண்ணற்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 

திடீரென்று அந்த ஆண்டுகளில் ஜெர்மனியில் சிறைகளில் அடைக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை பல்லாயிரமாக உயர்ந்தது.   Rheinische Zeitung என்ற ஜெர்மன் இதழில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஒரு இளைஞன் ஏன் இப்படி நடக்கிறது, என்று   

ஏன் இத்தனை விவசாயிகள் இந்தச் சட்டத்தை மீறுகின்றனர் என்று  தெரிந்து கொள்ள முயல்கிறான். இச்சட்டம் வருவதற்கு முன்பு  காடுகள்  அவற்றைச் சுற்றி வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் சொந்தமாக இருந்தன. காடுகளில் சுள்ளி பொறுக்கவும், ஆடுமாடுகள் மேய்க்கவும், நீர் நிலைகளில் மீன் பிடிக்கவும் மக்களுக்கு உரிமை இருந்தது. காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் இருந்தது. காடு ஒருவிதத்தில் பொதுவுடமையாகவிருந்தது. இப்போது சிறையிலடைக்கப்பட்டவர்கள் காட்டின் மீதான தங்களின் உரிமையை நிலைநாட்ட முயன்றவர்கள் என்கின்ற உண்மைகள் புலனாகின்றன. 

இதிலிருந்து தனியுடமையையும் பொதுவுடமையும் பற்றிய அவனது  ஆய்வு தொடங்குகிறது. நிலம் உள்ளிட்ட சொத்துக்களை தனியுடமையாக வைத்து அனுபவிப்பதுதான் மனித குலத்துக்கு இயல்பானதா? அல்லது பொதுவாக இருந்த சொத்துக்களை சிலர் அபகரித்துக் கொண்டனரா? மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது தனியுடமையா, பொதுவுடமையா என்று அவன் ஏடறிந்த, அதற்கு முந்தைய வரலாற்றின் மூலை முடுக்கெல்லாம் தேடத் தொடங்குகிறான்.  காடுகளைத் தனியுடமையாக்கிய நாடு ஜெர்மனி. அந்த இளைஞன் கார்ல் மார்க்ஸ் என்பதை சொல்ல வேண்டுமா என்ன! ஆனால் அது வேறு கதை.

காடுகளை தனிமனிதர்களுக்கு உடமையாக்கிய ஜெர்மனியின் உதாரணம் ஐரோப்பா முழுவதும் பின்பற்றப்பட்டது. தொழில் புரட்சியின் உச்சகட்டத்திலிருந்த ஐரோப்பிய நாடுகள் காடுகளிலிருந்த மரங்கள், ( குறிப்பாக கப்பல் கட்டுவதற்கு தேவையான ஒக் மரங்கள்,  இரும்புப் பாதை அமைக்கத் தேவையான மரங்கள்), இரும்பு, நிலக்கரி போன்ற இயற்கைச் செல்வங்களுக்காக காடுகளின் மேல் மக்களுக்கு இருந்த உரிமையைப் பறித்தன. காடுகள் பெரும் பணக்காரர்களாலும், தொழில் குழுமங்களாலும் கைப்பற்றப்பட்டன. வனம் பணம் காய்க்கும் மரமாக மாற்றப்பட்டது. 

இந்த அனுபவங்களுடனேயே பிரிட்டிஷார் இந்தியா வந்தனர். 

                         --------------------------------

இந்திய துணைக்கண்டம் முழுவதும் மலைகளிலும் காடுகளிலும் சமவெளிப்பகுதிகளுக்கு முற்றிலும் மாறான ஒரு வாழ்க்கை முறை இருந்தது. 

கடல் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அதே போல மலைகளில் இருந்த நிலமும், வனமும் நீர்நிலைகளும் சமூகம் முழுமைக்கும் பொதுவாகவிருந்தன. ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியின் மேல் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்துக்கு சிறப்பு உரிமைகள் இருந்தாலும் அது வனப்பகுதியை கால்நடை மேய்ப்பவர்களுடனும், மற்ற பழங்குடி இனங்களுடனும் சுமுகமான விதத்தில் பகிர்ந்து கொண்டது. 

    சமவெளிகளில் இருந்த மாபெரும் பேரரசுகளின் நில உரிமைச் சட்டங்கள், வரிவிதிப்பு ஆகியவை  மலைகளில் இல்லை. Fenicio ஃபெனிசி்யோ என்ற இத்தாலிய ஜெஸ்ஸூட் துறவி முதல்முதலாக நீலகிரிக்கு 1602 ஆம் ஆண்டு வருகிறார். மலைகளின் மேல் அடர்ந்த காடுகளுக்கு நடுவேயுள்ள ஒரு பகுதியில் ஒரு கிருத்து இனம்  வாழ்ந்து வருகிறது, அவர்கள் வெள்ளை நிறம் கொண்டவர்கள் என்ற  வதந்திகளைக் கேள்விப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ஃபெனிசியோ இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் அவரது குழுவுடன் கோழிக்கோடு அரசை சேர்ந்த ஆறு நாயர் படை வீரர்களும் செல்கின்றனர். இவர்கள் மன்னார்காட்டை அடைந்ததும் தங்கள் ஆயுதங்களைக் களைந்து விடுகின்றனர். மலைகளின் மேல் ஆயுதங்கள் தேவை இல்லை. ஆயுதமற்றவர்களுக்கு மலைமக்களால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்பது அவர்கள் கொடுக்கும் விளக்கம். 

இந்த மக்களிடம் அற்புதமான காதல் வாழ்க்கை இருந்தது. சமத்துவமான ஆண்பெண் உறவுகள் இருந்தன. குழந்தைகளை அடிக்காத பண்பு இருந்தது. போட்டி பொறாமை திருட்டு வறுமை மனநோய், வன்முறை இதற்கெல்லாம் இடமே இல்லாத அமைதியான வாழ்க்கை. ஒவ்வொரு பழங்குடி இனமும் தனக்கேயுரிய மொழியைக் கொண்டிருந்தது. மிக அழகான மானுடவியல் நோக்கில் அற்புதமான வாய்மொழி இலக்கியங்கள் அந்த மொழிகளில் இருந்தன. 

பழக்குடி மக்களுக்கு சமவெளி அரசுகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. மலைகளில் அங்கொன்றும் இன்ங்கொன்றுமாக வணிகத் தளங்கள் இருந்தன. மிளகு, தந்தம் போன்றவற்றுக்காக சிறிய அளவில் வணிகம் நடந்து வந்தது. காரமடை ரங்கநாதர் கோவில், வயநாடு வள்ளியூர் காவு கோவில் போன்ற கோவில்கள் மூலம் சமவெளி அரசுகள்,   மலைகளின் மேல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றன. ஒருவேளை இந்த முயற்சி பலனளித்திருந்தால் மலைகள் முழுவதும் சாதிய சமூகத்துக்குள் இழுக்கப்பட்டு இருக்கும். 

அல்லது பங்களாதேஷில் நடந்தது போல பழங்குடி சமூகங்கள் நேரடியாக இஸ்லாத்துக்கும் மாறியி்ருக்கலாம். ஆனால் பிரிட்டிஷாரின் வருகை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டது.

அப்போது இந்தியாவின் முப்பது சதவீத நிலப்பரப்பில் காடுகள் இருந்தன. அவற்றில் எண்ணற்ற பழங்குடி இனங்கள் வேட்டையாடியும் ஜூம் விவசாயம் அல்லது எரிபுனம் என்று தமிழ் இலக்கியம் கூறும் எரித்துப் பயிரிடும் முறையில் காடுகளில் சிறு நிலப்பகுதிகளில் விவசாயம் செய்து வந்தன. 

இந்த மக்கள் வரி கொடுப்பதில்லை என்பதும், இந்த நிலங்களுக்கு நிலவுரிமை ஆவணங்கள் இல்லை என்பதும் பிரிட்டிஷ் அரசுக்கு வசதியாகப் போனது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உதவியுடன் காடுகளில் ஊடுருவிய ஜமீந்தார்களும், வணிகர்களும், வட்டிக்காரர்களும் பெரும் பெரும் காட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். அங்கு வாழந்து வந்த பழங்குடி மக்கள் இவர்களது பண்ணையடிமைகளாக மாற்றப்பட்டனர்.

ஒரு உதாரணம் வங்காளம், பிஹார் எல்லையில் சோட்டா நாகபுரி பீடபூமியில் வாழ்ந்து வந்த சந்தால் பழங்குடி இனம் ஒரு இடத்தில் காட்டை எரித்து பயிரிடும். பின்பு இன்னொரு இடத்துக்குச் சொல்லும். இப்படி ஒரு வட்டமடித்து தொடங்கிய இடத்துக்கு வர பதினாறு ஆண்டுகள் ஆகிவிடும். அதற்கும் மற்ற இடங்களை காடு மண்டி மூடியிருக்கும். இதுதான் எரித்துப் பயிரிடும் ஜூம் விவசாயம் என்பது. இந்த ஜூம் விவசாயம் எந்த இடத்திலும் காடு அழியாமல் பாதுகாக்கிறது. காட்டின் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கிறது. 

பிரிட்டிஷ் அரசு வந்த பிறகு சந்தால் மக்கள் ஒரு இடத்தில் பயிரிட்டால் அந்த இடத்தை வட்டிக்காரர்களும் ஜமீந்தார்களும் கைப்பற்றிக் கொள்வார்கள். மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு இன்னொரு இடத்துக்குச் செல்வார்கள். அங்கும் இதேதான் நடக்கும்.  இனிப் பின்வாங்க இடமில்லை என்ற சூழல் வந்த பிறகுதான் சந்தால் எழுச்சி ஏற்பட்டது. 

அதற்கு முன்பே பல பழங்குடி இனங்கள் பிரிட்டிஷ் அரசுக்கும், அதன் ஏவலாளிகளான ஜமீந்தார்கள், வட்டிக்காரகளுக்கும் எதிராகப் போரிட்டிருந்தாலும் முதல் முதலாக பழங்குடி மக்கள் நடத்திய பெரும் போர் சந்தால் எழுச்சிதான். ஆனால் அது கொடூரமாக அடக்கப்பட்டது. கொல்லப்பட்ட பழங்குடி மக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை இருக்கலாம் என்று பல்வேறு வகையான கணக்குகள் உள்ளன. ஆனால் வெள்ளைக்காரர்களை எதிர்த்து வெற்றிகளை ஈட்ட முடியும் என்று பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்திய வீரர்களுக்கும் பிரிட்டிஷ் அரசால் கொடுமைகளை அனுபவித்து வந்த நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் காட்டியது இந்தப் போர்தான். 

பின்பு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இருந்து நேரடியாக பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக்குள்  இந்தியா வந்த பின்பு 1864 ஆம் ஆண்டு இந்திய வனத்துறை உருவாக்கப்பட்டது.  1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் கொண்டு வரப்பட்டது. வனப்பகுதிகளை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் மரம் போன்ற வனப் பொருட்களின் வணிகத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது காடுகளை அரசின் தேவைகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ரிசர்வ் காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், கிராம காடுகள் என்று மூன்றுவிதமாகப் பிரித்தது. முதல் இரண்டும் நேரடியாக வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன. மூன்றாவதான கிராமக் காடுகள் ஜமீந்தார்கள், நிலப்பிரபுக்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் இந்திய வனங்கள் நேரடியாகக் காலனி ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டன.  

இதன் மூலம் பழங்குடி மக்கள் வனங்களின் மீதான தங்கள் உரிமையை இழந்தனர். அவர்களது விவசாய நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் வனம் என்று வகைப்படுத்தப்பட்டு வனத்துறையால் கைப்பற்றப்பட்டன. ரிசர்வ் காடுகளில் வாழ்ந்த மக்கள் தங்கள், இருப்பிடம், அன்றாட வாழ்க்கைக்கு வனத்துறையை நம்பி வாழ வேண்டிய நிலைக்குத்   தள்ளப்பட்டனர். வனத்துறை பழங்குடி மக்களை மிரட்டியும் துன்புறுத்தியும் காடுகளில் நடக்கும் மரம் வெட்டுதல், சாலை அமைத்தல், மேலும் கட்டுமானப்பணிகளில் கூலியற்ற உழைப்பில் ஈடுபடுத்தியது. வெளியுலகத் தொடர்பற்ற அடர்ந்த காடுகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்தது அவர்கள் மீது அடக்குமுறை செலுத்தவும். அவர்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கவும் இன்னும் வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.

உதாரணமாக முதுமலையில் தேக்குக் காடுகளை உருவாக்கும் பணியில் பழங்குடி மக்கள் வனத்துறையால் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கால்நடைகளைப் போல பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதில் தங்கள் சொந்த கிராமம் இருந்த இடத்தையே மறந்து விட்டனர். ரிசர்வ் காடுகளில் உள்ள ஒவ்வொரு கிராமமும்  பலமுறை வனத்துறையால் மாற்றிக் குடியமர்த்தப்பட்டதாகும். 

அவர்களின் நில உரிமை ஒருபோதும் வனத்துறையால் அங்கீகரிப்படவில்லை. எந்த நேரமும் வெளியாறத் தயாராக இருக்கும் படியான நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வைக்கப்பட்டனர். 

கிராமக் காடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட இடங்களில் எழுத்தறிவற்ற பழங்குடி மக்களின் நிலங்களை கீழிருந்து வந்த குடியேறிகள் மதுவகைகள் வாங்கிக் கொடுத்தும் பலவகையாக ஏமாற்றியும் பிடுங்கிக் கொண்டனர். 

இப்படி ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வனப்பகுதி பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்படும் போதும் அங்கே பழங்குடி மக்களுடனான முரண்பாடு தோன்றுவது வழக்கமானது.  பழங்குடி மக்கள் பிரிட்டிஷ் காலனியாட்சியை எதிர்த்து சுமார் நூற்றி ஐம்பது யுத்தங்கள் நடத்தியுள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது. 

இந்தப் போராட்டங்களில் கோட்பாட்டளவில் முக்கியமானது கோமுரம் பீம் வட தெலங்கானாவில் நடத்திய போராட்டமாகும். கோமுரம் பீம் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் தெரிந்தவர். அஸ்ஸாமில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.  கோண்டு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களது  நிலங்கள் மீண்டும் மீண்டும் வனத்துறையால் கைப்பற்றப்பட்டதை எதிர்த்தே அவரது தலைமையிலான பழங்குடி மக்களின் போராட்டம் தொடங்கியது. இது வரை நடந்து பழங்குடி மக்களின் போராட்டங்களுக்கு மாறாக நன்கு திட்டமிடப்பட்ட போராட்டம் இது. சுமார் 300 முழு நேர ஊழியர்கள் கொண்ட சிறப்பாக இயங்கிய கெரில்லா படையை கோமுரம் பீம் கட்டியமைத்தார். அரசியல் ரீதியிலும் கோமுரம் பீம் கட்டியமைத்த இயக்கம் முதிர்ச்சி பெற்றிருந்தது. அது தெலங்கானா இடதுசாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. ஜல் ஜங்கல் ஜமீன் என்ற முழக்கம் கோமுரம் பீம் வைத்ததுதான்.  இவையெல்லாம் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. 

இதைக் காட்டுவதில் ராஜமௌலிக்கு உள்ள சிக்கல் என்னவெனில்  இப்போதும் இதேதான் நடந்து வருகிறது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் அரசை விட பிஜெபி அரசு பழங்குடி உரிமைகளுக்கும், பண்பாட்டுக்கும் எதிராக இருக்கிறது. எனவே காவி கட்டிய ராமன் போல உடையணிந்து பழங்குடி மக்களுடன் இணைந்து வனங்களின் மீதான் உரிமைக்கு போரிடுவது என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்லாமல், வேடிக்கையானதாகவும் இருக்கும். சொல்லப் போனால் ராமனே மத்திய இந்திய கோண்டு பழங்குடி மக்களுக்கு எதிராக போரிட்டவன்தான் என்று வாதிடும் ஆய்வுகள் உண்டே. 

விடுதலைக்குப் பிறகு வனத்துறை மிகப்பெரிய வலிமை வாய்ந்த அதிகார வர்க்கமாக உருவெடுத்தது. மேலும் மேலும் பெரும்பகுதிகள் வனங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. வனத்துறை மேலும் மேலும் காடுகளுக்குள் ஆழமாக ஊடுருவி பெரும் வனப்பரப்புகளையும், பழங்குடி சமூகங்களையும் தனது பிடிக்குள் கொண்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பழங்குடி மக்கள் பஞ்சைப் பராரிகளாக காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கொடும் வறுமையில் காட்டை ஒட்டிய பகுதிகளில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

அவர்களது வேட்டை தடை செய்யப்பட்டது. அதே நேரம் வேட்டை இறைச்சிக்கு மாற்றாக தானிய உணவு போதுமான அளவு கிடைக்கவில்லை. ஏனெனில் அவர்களது எரித்துப் பயிரிடும் விவசாயமும் தடைசெய்யப்பட்டது. இரண்டு வேளை உணவு என்பதே பழங்குடி பகுதிகளில் வழக்கமானது. அதுவும் சத்தற்ற உணவு என்பதால் பழங்குடி பகுதிகளில் குழந்தைகள் இறப்பும், கர்ப்பிணிகள் மரணமும், நோய்களும் மிக அதிகமாகி பல பழங்குடி இனங்கள் அழவின் விளிம்பில் உள்ளன. . 

பழங்குடி மக்களின் மொழி அடியோடு புறக்கணிக்கப்பட்டது.

பழங்குடி மக்களுக்கு தாய்மொழி இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுகு வங்காளி என்று பள்ளிகளில் போதிக்கப்பட்டது. அவர்களது கலைகளும், கதைப்பாடல்களும் பெருமளவுக்கு மறக்கடிக்கப்பட்டன.

                          -----------------------

அடுத்த கட்ட வரலாற்றை முற்றிலும் வேறு இடத்திலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும். 

மேற்கு வங்காளத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில் தோன்றிய நக்ஸலைட் இயக்கம் எழுபதுகளின் இறுதிப்பகுதியில் ஏறக்குறைய அழிக்கப்பட்டது. அதன் தலைவர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டனர். மீதி இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருந்தனர். இயக்கம் எண்ணற்ற துண்டுகளாக உடைந்து சிதறிப்போனது. 

மனித வேட்டைக்கும், படுகொலைக்கும், சிறைக்கும்  தப்பிய கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்ற நக்ஸலைட் தலைவர்  இந்த தோல்வி ஏன் ஏற்பட்டது என்பது குறித்து ஆழமான ஆய்வுகளின் ஈடுபடுகிறார். 

ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் எழுச்சி நடக்கும் போது அரசு தாக்குதல் நடத்துகிறது. அப்போது கட்சியும், படையும் அரச படைகள் வரமுடியாத ஒரு பாதுகாப்பான பகுதிக்குப் பின்வாங்கி தங்களை நிலைப்படுத்திக் கொண்டு திருப்பித் தாக்க  ஏற்ற பின்வாங்கு தளம் வேண்டும். அப்படி பின்வாங்குவதற்கான பகுதி இல்லாமல் போனதால்தான் ஸ்ரீகாகுளம், போஜ்பூர் போன்ற இடங்களில் தோன்றிய மக்கள் எழுச்சியும் வெற்றிகரமாக நடந்த ஆயுதப் போராட்டமும் ஒழித்துக் கட்டப்பட்டன என்ற முடிவுக்கு வருகிறார். 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தெலங்கானா போராட்டமும் இப்படிப்பட்ட பின்வாங்கு தளம் இல்லாததாலேயே பெரும் இழப்புகளை சந்தித்தது என்று முடிவு செய்கிறார். 

வட தெலங்கானாவில் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான சூழல்கள் இருந்தன. அதையொட்டிய தண்டகரண்ய பகுதி அதாவது சட்டிஸ்கரின் பஸ்தர் பகுதி பெரும் காடுகள் நிறைந்தது. அரசு படைகளுக்கும், நிர்வாகிகளுக்கும் அங்கே என்ன இருக்கிறது என்றே தெரியாத சர்வே செய்யப்படாத பகுதி அது. எனவே சீத்தாராமையாவின் முடிவுகளின் அடிப்படையில் பஸ்தரை பின்வாங்கு தளமாகவும், தெலங்கானாவைப் போராட்ட களமாகவும் கொண்டு நக்ஸல்பாரி எழுச்சியின் இரண்டாவது அலை தொடங்கியது.  கொண்டபள்ளி சீத்தாராமைய்யாவின் அமைப்பும், தமிழ் நாட்டில் தீவிரமாக இயங்கி வந்த கூட்டக்குழு என்ற நக்ஸல்பாரி அமைப்பும் இணைந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தம்) என்ற அமைப்பு தோன்றியது. சுருக்கமாக பிடபிள்யூ ஜி என்ற அழைக்கப்பட்டதும் இப்போது மாவோயிஸ்ட் கட்சியாக மாறியுள்ளதும் இந்த அமைப்புதான். 

கொண்டபள்ளி சீத்தாராமைய்யாவே எதிர்ப்பார்க்காத அளவுக்கு நக்ஸல்பாரி இயக்கம் சட்டிஸ்கர் பகுதியில் தீயாகப் பற்றிக் கொண்டது. 

இதே போல பிஹாரில் தோன்றிய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர் என்ற அமைப்பு இப்போது ஜார்கண்ட் மாநிலமாக ஆகியுள்ள வனங்களும் மலைகளும் நிறைந்த சோட்டா நாகபுரி பீடபூமிக்கு தனது ஆயுத நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. 

எண்ணற்ற பழங்குடி இளைஞர்கள் நக்ஸலைட்டுகளாகினர்.  இந்த இரண்டாவது அலையின் வீச்சையும், வேகத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய அரசு பழங்குடி மக்களுக்கு என்ன பிரச்சினை என்று ஆராய சர்மா கமிஷன் என்று ஒரு கமிஷனை நியமித்தது. 

பி.டி.சர்மா கமிஷன் பழங்குடி மக்களின் நில உரிமைகள், காட்டின் மீதான் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன, வனத்துறை அதிகாரிகள் அடர் காடுகளுக்குள் போவதில்லை என்பதால் அங்கே மக்கள் வாழ்வது அரசு ஆவணங்களில் பதிவாகவே இல்லை, எனவே ஆவணங்கள் இல்லாத பழங்குடி மக்களைக் காட்டை ஆகிரமிப்பவர்கள்  என்று முத்திரை குத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியது. இது நிறுத்தப்பட்டு 1980 க்கு முன் காட்டில் வாழ்ந்தவர்களின் நில உரிமைகள் அங்கீகரிக்கபட வேண்டும், வன கிராமங்கள், வருவாய்த்துறை கிராமங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.  

இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு கோதவர்மன் திருமல் பாட் வழக்கு  அல்லது பாரஸ்ட் கேஸ் என்று பரவலாக அறியப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டில் உள்ள ஆகிரமிப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும், வனத்துக்கு ஊறு விளைவிக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

சர்மா கமிஷன் பரிந்துரைகளை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றி வந்த வனத்துறையும் அரசு அதிகாரிகளும் குதூகலமடைந்தனர். காட்டில் புல் அறுப்பது, நெல்லிக்காய், தேன் போன்ற சிறுவனப்பொருட்கள் சேகரிப்பது போன்ற சட்டம் வழங்கிய உரிமைகளை அடாவடியாகத் தடை செய்தனர். 

ஆவணங்கள் இல்லாத எல்லா பழங்குடி மக்களையும் ஆகிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி இந்தியா முழுவதிலுமுள்ள வனங்களில் இருந்து வெளியேற்ற முயன்றனர். சுமார் நாற்பது லட்சம் மக்கள் உடனடியாக வாழ்வாதாரங்களை இழந்தனர். குரூரமான முறையில் மக்களை தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கின. இதையடுத்து நடந்த போராட்டங்கள், துப்பாக்கி சூடுகளில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் இருந்த பழங்குடி அமைக்குகள் ஒருக்கிணைந்து வனங்களின் மீதான மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் ஒரு சட்டம் வேண்டும் என்று போராடத் தொடங்கின.   மன் மோகன் அரசால் 2006 ஆம் ஆண்டு The scheduled tribes and other traditional forest dwellers (Recognition of forest rights ) act 2006 சுருக்கமாக வன உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. வேட்டையாடுவதைத் தவிர பழங்குடி மக்களின் அத்தனை உரிமைகளையும் இச்சட்டம் அவர்களுக்கு திரும்ப வழங்கியது. காடுகளில் என்ன  வளர்ச்சிப்பணி செய்ய வேண்டுமானலும் அந்த ஊர் மக்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது போன்ற மிகுந்த ஜனநாயக பூர்வமான பிரிவுகள் இச்சட்டத்தில் இடம் பெற்றன. 

மக்களை வெளியேற்றுவதற்ற்கு திட்டவட்டமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வுரிமை அளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவையனைத்திலும்  மக்களின் பங்கேற்பு, கண்காணிப்பை சட்டம் உறுதி செய்தது. சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான, முற்போக்கான சட்டம் இது. 

ஆனால் பிரச்சினை என்னவெனில் அரசு இயந்திரம் இச்சட்டத்துக்கு முற்றிலும் எதிராக உள்ளது. மக்களோடு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வருவாய்த்துறையும், வனத்துறையும் அடியோடு மறுக்கின்றன. மக்களின் வாழிடங்களை அரசு அமைப்புகளின் முன் நிரூபிப்பது என்பதை இந்த அதிகார வர்க்கம் மிகக் கடுமையான போராட்டமாக ஆக்கியுள்ளது. நில உரிமை கோரும் மக்கள் அனுப்பிய சுமார் முப்பது லட்சம் விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேடிக்கையான ஒரு சம்பவம் மோடியின் சென்ற ஆட்சி காலத்தில் நடந்தது. முன்சீப் கோர்ட்டில் வழக்கை கூப்பிடும் போது கட்சிக்காரர் பாத்ரூம் போய் விட்டாலோ, இருமவோ தும்மவோ போய்விட்டாலோ அவர் கோர்ட்டுக்கு வரவில்லை என்று நீதிமன்றம் உத்திரவிட்டு அவருக்கு எதிராக ஆணை பிறப்பிக்கும். பின்பு வக்கீல்கள் நான் உடல் நலம் இல்லாமல் இருந்ததால் என்று ஒரு லீவு லெட்டர் எழுதி அந்த ஆணையை மாற்றுவார்கள். இதற்கு  ex parte  ஆணை என்று பெயர். 

காட்டில் ஆகிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டுமென்ற ஒரு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அரசு வக்கீல் ஆஜராவில்லை. வேறு கோர்ட்டில் இருந்தார். எனவே நீதிமன்றம் இந்த முப்பது லட்சம் பேரையும்   காட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று  உத்திரவிட்டது.   மொத்த உலகமும் ஆடிப் போனது. 

பின்பு பெரிய போராட்டங்கள் மூலம் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புலிகள் காப்பங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை, சிறு வனப்பொருட்கள் சேகரிக்க தடை என்று பல தடைகளை அரசும் நீதிமன்றங்களும அடுத்தடுத்து விதித்து வருகின்றன. ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடமுறையில் இருந்து வரும் சத்தி மைசூர் நெடுஞ்சாலை போன்ற பெரும் சாலைகளில் கூட இப்போது இரவு நேரப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நாளும் வனங்களில் வாழும் மக்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் செங்கல் சூளைகளிலும், மலையோர மில்களிலும் கேம்ப் கூலிகளாகவும் கொத்தடிமைகளாகவும் வதைபடுகின்றனர். 

இந்தியாவில் புலிகளுக்கு ஆபத்து என்ற வதந்தி கிளப்பப்பட்டு புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டன. இந்திய காடுகளில் பெரும் பகுதியை, மொத்த இந்திய நிலப்பரப்பில் ஐந்து சதவீதத்தை புலிகள் காப்பங்களாக  மாற்றுவதுதான் லட்சியம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காகவே கானுயிர் பாதுகாப்பு சட்டத்தில் டைகர் திருத்தம் எனப்படும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? இதில் வன உரிமைச் சட்டத்தை விட கானுயிர் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள விதிமுறைகளே செயல்படுத்தப்படும். 

அவ்வளவுதான். 

                               -------------------------

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளுக்கு பிறகு ஐரோப்பாவில் சுற்றுச் சூழல் அமைப்புகள் உருவாகி வளர்ச்சி பெற்றன. அப்போது வோர்ல்டு வைடு ஃபண்ட் பார் நேச்சர் WWF, கான்சர்வெஷன் இண்டர்னேஷல் போன்ற உலகு தழுவிய சுற்றுச் சூழல் அமைப்புகள் உருவாகின. இவற்றை உருவாக்குவதில் எலிசபெத் ராணியின் கணவரான பிலிப் போன்ற மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பிரபுக்களும் இடம்பெற்றனர். 

இந்த அமைப்புகள் மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகக் காட்டிக் கொள்கின்றன. மனிதர்கள் இல்லாத காடு, மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ முடியாது என்பது போன்ற கோட்பாடுகளை திட்டமிட்டு நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவு ஜீவிகள் நடுவிலும் பெரும் செலவு செய்து பரப்பி வருகின்றன.  

பழங்குடி மக்கள் ஏன் காட்டில் கஷ்டப்பட வேண்டும்? அவர்கள் நம்மை போல வாழ வேண்டாமா என்று கூறி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன. அஸ்ஸாம் காஸிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் WWF  ஆயுதந்தாங்கிய காவலர்களை கொண்டு மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது, துப்பாகி சூடு நடத்துகிறது. இந்தியா முழுவதும் இது போன்ற அமைப்புகளின் ஊழியர்கள் மக்களின் வாழ்க்கையில் தலையிடுகின்றனர், வனத்துறையுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளனர் என்ற விமர்சனங்கள் உள்ளன. 

இந்தியாவில் புலிகளை காப்பதற்கான மக்களை வெளியேற்ற வேண்டுமென்று இந்த அமைப்புகள் கூறுகின்றன. ரூவாண்டா பரூண்டி உகாண்டா போன்ற மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பிக்மி பழங்குடி மக்கள் சிம்பன்சி குரங்குகளை கொன்று தின்கின்றனர், எனவே சிம்பன்சியை காக்க பிக்மிகளை காட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கின்றனர். அமெரிக்க இந்தியர்கள் காட்டெருமைகளை உண்கின்றனர். எனவே அமெரிக ஐக்கிய நாடுகளின் காடுகளில் இருந்து இவர்களை வெளியேற்ற வேண்டுமென்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. 

மனிதர்கள் இல்லாத காடு என்பது சம்வெளி மனிதர்களுக்கு ஒரு கேளிக்கை இடமாகிவிடும். சமவெளிகளில் இருந்துவரும் ஆட்கள் காடுகளில் தங்கி சில நாட்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்வதற்காக ஏர்கெனவே காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாக் வாழ்ந்து வருபவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் இவர்கள் வழங்கும் நியாயம் என்கிறார் வன உரிமைச் சட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சி ஆர் பிஜாய்.

ஆனால் இந்த பன்னாட்டு அமைப்புகள் மறந்தும் டீ காபி ரப்பர் எஸ்டேட்டுகள், யுக்கலிப்டஸ் காடுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று கூறுவதில்லை. சமவெளி மக்களின் நன்மைக்காக, அவர்களுக்கு மின்சாரமும், குடிநீரும், இரும்பும் சிமெண்ட்டும் வழங்குவதற்காக மலைகளில் கட்டப்பட்டுள்ள அணைகளும், சுரங்கங்களும் காலி செய்யப்பட்டு இயற்கையிடம் ஒப்படைக்கப் வேண்டும் என்று மறந்தும் பேசுவதில்லை.

காடுகளில் வாழும் மக்களை வெளியேற்றி அவற்றைக் கோட்டைகள் போலப் பாதுகாப்பது என்பதே இந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் குறிக்கோள். இது காடுகளை ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் வனத்துறையின் பிடிக்குள் முழுமையாக ஒப்படைக்கும் முயற்சி என்கின்றனர் இக்கோட்பாட்டின் விமர்சகர்கள். இது காடுகளை ராணுவமயமாக்கும். மக்களுக்கும் அரசுக்குமான முரணை மேலும் கூர்மைப்படுத்தும் என்றே தோன்றுகிறது. 

இவ்வளவு பிடிவாதமாக காடுகளைப் பாதுகாப்போம் என்று அந்நிய நிறுவனங்கள் முழங்குவது எதற்காக என்பது ஒரு முக்கியமான கேள்வி. 

முதலாவது காடுகளை முழுமையாக ஏகாதிபத்திய மார்க்கெட்டுக்குள் கொண்டு வருவது. கார்பன் டிரேடிங் போன்றவற்றின் மூலம் காடுகளைக் கொண்டு லாபம் ஈட்டுவது,

இரண்டாவது ஐரோப்பிய அமெரிக்க மக்களுக்கு சுற்றுச் சூழலையும், புவி வெப்பமடைதலையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. எனவே அதிக அளவு பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்துவது, சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் மாபெரும் நகரங்களையும், ஆலைகளையும் கட்டியமைப்பது ஆகியவற்றை நிறுத்த வேண்டியதில்லை. உலகத்துக்கு ஒரு ஆபத்தும் வராது என்று நம்பிக்கையூட்டுவது. 

இந்தத் தாக்குதலுக்கு எதிராக பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகளில் விலங்குகளும், மனிதர்களும், பறவைகளும், தாவரங்களும் அருகருகேதான் வாழ்ந்து வந்துள்ளனர் என்று உண்மை மிகப் பலவீனமானதாக இருக்கிறது. காட்டை அழிப்பவர்கள் இந்த அன்னிய சூழல் நிறுவனங்களுக்கு பண உதவி செய்பவர்கள்தான் என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. ஒரு ரயில் பாதை, சிமெண்ட் ஆலை, இரும்பு சுரங்கம், அணை, தேயிலை எஸ்ட்டேட் செய்யும் சூழல் அழிவை விடவா அற்ப பழங்குடி மக்களின் குடிசைகள் செய்துவிடும்?

அதனால் என்ன? பார், ஓரி, அதியமான் காலத்தில் இருந்து பழங்குடி மக்கள் சமவெளி அரசுகளை எதிர்த்து போராடியே வந்துள்ளனர். அது  மேலும் தொடரும்.  

- இரா. முருகவேள்

(முகநூலிலிருந்து) 

கட்டுரையாளரின்  முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/1714910257/posts/pfbid02F8mWGeogxh1WPcDSJBVj1QcjAQmsgsKs83zzsiuaTqA9C3zHUMKpRYQx8dXTLe15l/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு