மோடியுடன் சுமூகமான நட்புறவை டிரம்ப் பேணி வருவதாகவும், விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் வெளியாகும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

தமிழில்: விஜயன்

மோடியுடன் சுமூகமான நட்புறவை டிரம்ப் பேணி வருவதாகவும், விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் வெளியாகும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

இந்தியா தனது அனைத்து வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகக் சமீபத்தில் டிரம்ப் கூறியிருந்தார். அத்துடன், இந்தியச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென அமெரிக்கா கோருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆயினும், இந்த இலக்கை எட்டுவது சாத்தியமா என்பது தமக்கு உறுதியாகத் தெரியாது என்பதையும் ஒப்புக்கொண்டார்.

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 30, 2025) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் போர்த்தந்திர முக்கியத்துவமான பங்கைப் பாராட்டிப் பேசியிருந்தார். அத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையே நிலவும் உறுதியான தனிப்பட்ட நட்புறவையும் அவர் உயர்த்திப் பேசினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அமெரிக்க அரசு எவ்வாறு நோக்குகிறது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில், லீவிட் பின்வருமாறு கூறினார்: " ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எங்களுக்கு ஒரு மிக முக்கியமான கூட்டாளியாகத் இந்தியா தொடர்ந்து விளங்குகிறது. அதிபருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது, அது தொடர்ந்து நீடிக்கும்," என்று பேசியிருந்தார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது பற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கேட்ட வினாவிற்கு விடையளித்த போதுதான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து இந்தக் கருத்துக்களை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எடுத்துரைத்தார். 

"ஆம், ஜனாதிபதி கடந்த வாரம் கூறியது உண்மைதான் [அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அண்மையில் உள்ளன என்பது]. தற்போதும் நிலைமை அப்படியேதான் நீடிக்கிறது. வணிகத் துறையின் தலைவரான எங்கள் வர்த்தகச் செயலாளருடன் சற்றுமுன்னர் உரையாடினேன். அவர் ஜனாதிபதியுடன் அவரது முதன்மை(ஓவல்) அலுவலகத்தில் இருந்தார். அவர்கள் இந்த ஒப்பந்தங்களின் இறுதி விவரங்களை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்தவரையில், ஜனாதிபதியும் அவரது வர்த்தக விவகாரங்களைக் கையாளும் குழுவும் மிக விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிடுவதை நீங்கள் எதிர்பார்க்கலாம்," என்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய லீவிட் தெரிவித்திருந்தார்.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்ப்பின் சமீபத்திய கருத்துகள் வெளிவந்த பின்னரே லீவிட்டின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்தது. பொருட்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs) குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இந்தியா தனது அனைத்து வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்குவதோடு, அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகத் டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், இது சாத்தியப்படுமா என்பது தமக்கு உறுதியாகத் தெரியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

 “இந்தியாவுடன் நாம் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்வோம் என்று நான் கருதுகிறேன்; அது இந்தியச் சந்தையில் வர்த்தகம் செய்ய நமக்கு வழிவகுக்கும். தற்போது, இந்தியச் சந்தையில் வணிகம் மேற்கொள்வது பல கடுமையான விதிமுறைகள் காரணமாகக் கடினமாக உள்ளது. நீங்கள் சந்தைக்குள் எளிதாக நுழைய முடியாது; அதைப் பற்றி எண்ணிப் பார்க்கக்கூட இயலாது. அனைத்து வர்த்தகத் தடைகளையும் முழுமையாக நீக்குவதற்கு நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்; இது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது, மேலும் இது நடக்குமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு, வர்த்தகத்திற்காக அமெரிக்க கம்பனிகள் இந்தியாவுக்குச் செல்வது குறித்து இரு நாடுகளுக்கிடையில் முதற்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது...,” என்று டிரம்ப் மேலும் கூறியிருந்தார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜூலை 9 இறுதி கெடு தேதிக்கு இன்னும் இரு வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் தமக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக்குவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) என அழைக்கப்படுகிறது. இரு நாடுகளின் பொருட்களின் மீதும் விதிக்கப்பட்டுள்ள எந்தவொரு புதிய அல்லது உயர்த்தப்பட்ட வரிகளுக்கும் 90 நாள்கள் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில்தான் அவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குவாட் (QUAD) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், எஸ். ஜெய்சங்கர், தற்போது அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், திங்கட்கிழமை அன்று, ஐ.நா சபையில் "பயங்கரவாதம் பலிகொண்ட மனித உயிர்கள்" (The Human Cost of Terrorism) என்ற பெயரிலான ஒரு பொதுக் கண்காட்சியையும் அவர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். ஒரு நாட்டின் அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தால் ஏற்படும் துயரங்களை உலகிற்குக் காட்சிப்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.

குவாட் (QUAD) என்பது ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான ஒரு ராஜ்ஜிய ரீதியிலான கூட்டமைப்பு ஆகும். அனைவருக்கும் கட்டற்ற, அமைதியான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தையும், அத்துடன் அனைத்து நாடுகளுக்குமான பிராந்தியத்தை உருவாக்குவதற்கும், சிக்கல்களில் இருந்து விரைந்து மீண்டெழக்கூடிய ஒரு பிராந்தியமாக உருவாக்குவதற்கும் இக்கூட்டமைப்பு துணை நிற்கிறது. டிசம்பர் 2004 இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, இந்த நான்கு நாடுகளும் இணைந்து மக்களுக்கு உதவக் கைகோர்த்தபோதுதான் இந்தக் கூட்டமைப்பு முதன்முதலில் உருவானது.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/international/us-president-trump-has-very-good-relationship-with-pm-modi-trade-deal-announcement-soon-white-house/article69758197.ece

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு