1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி இந்தி கட்டாய மூன்றாம் மொழி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி இந்தி கட்டாய மூன்றாம் மொழி

மாநிலப் பள்ளிக் கல்வித் துறையானது, ஏப்ரல் 16 அன்று தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் பரிந்துரைகளுக்கு இணங்க, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பினைத் தொடர்ச்சியாக அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி இந்தி கட்டாய மூன்றாம் மொழியாகும். முன்பு இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இந்த வகுப்புகளுக்கு மூன்று மொழித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அரசாங்கத் தீர்மானம் (GR) குறிப்பிடுவதாவது, மகாராஷ்டிராவில் பிற மொழிகளைப் போதிக்கும் பள்ளிகள் ஏற்கனவே இந்த மூன்று மொழி அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றன; ஏனெனில் மாநிலத்தில் ஆங்கிலமும் மராத்தியும் கட்டாயப் பாடங்களாக இருப்பதுடன், அவை கற்பிக்கும் மொழியையும் உள்ளடக்கியுள்ளன. இருப்பினும், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில், மாணவர்கள் இதுவரை இரு மொழிகளை மட்டுமே கற்று வந்தனர்.

இந்த புதிய அரசாங்கத் தீர்மானம், NEP 2020-இன் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட 5+3+3+4 பள்ளி கல்வி அமைப்பையும் அறிமுகப்படுத்துகிறது:

அடித்தள நிலை: முதல் ஐந்து ஆண்டுகள், அதாவது மூன்று ஆண்டு முன்-பள்ளிக் கல்வி மற்றும் 1, 2 ஆம் வகுப்புகள் உட்பட.

தயார்நிலைப் பருவம்: 3 முதல் 5 ஆம் வகுப்புகள் வரை.

இடைநிலைக் கல்வி: 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை.

மேல்நிலைக் கல்வி: இறுதி நான்கு ஆண்டுகள், அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை.

இந்த அமைப்பு 2025-26 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பிலிருந்து செயலாக்கப்படத் தொடங்கும். இந்தி கட்டாயப் பாடமாக உள்ள மூன்று மொழித் திட்டம், எதிர்வரும் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்படும்.

புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின்படி, மகாராஷ்டிரா மாநிலப் பாடத்திட்ட வாரியத்திற்கான பாடநூல்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கியுள்ள அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும்; இருப்பினும், மகாராஷ்டிராவின் உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக சமூக அறிவியல் மற்றும் மொழிகள் போன்ற பாடங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம். உதாரணமாக, 1 ஆம் வகுப்புப் பாடநூல்கள் மாநிலப் பாடநூல் கழகமான பால்பாரதியால் வெளியிடப்படுகின்றன.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (SCERT) இயக்குநர் ராகுல் ரேகாவார் தெரிவிக்கையில், முன்-பள்ளிக் கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளுக்கான பாடத்திட்ட உள்ளடக்கம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. அங்கன்வாடிகளை நெறிப்படுத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையுடன் இணைந்து இந்த உள்ளடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். புதிய முன்-பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, SCERT குறிப்பாக அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் வெவ்வேறு நிலைகளில் படிப்படியாக வெளியிடப்பட்டாலும், பழைய பாடத்திட்டத்திலிருந்து நேரடியாக புதிய பாடத்திட்டத்திற்கு மாறும் வகுப்புகளுக்காக SCERT இணைப்புப் பாலப் பாடத்தையும் உருவாக்கியுள்ளது.

மேலும், மகாராஷ்டிரா மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகள் மாணவர்களுக்கென ஒரு முழுமையான முன்னேற்ற அறிக்கையை (Holistic Progress Card - HPC) அறிமுகப்படுத்தவுள்ளன. NCERT பள்ளி கல்வியின் பல்வேறு நிலைகளுக்கேற்ப மாதிரி HPC ஐ வெளியிட்டுள்ளது என்று திரு. ரேகாவார் விளக்கினார். வழக்கமான மதிப்பெண் அடிப்படையிலான தரப்பட்டியல் சீட்டுகளைப் போலல்லாமல், இந்த HPC ஒவ்வொரு வகுப்புக்கும் எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளின் மதிப்பீடுகளுடன், நடத்தை மற்றும் ஆளுமைப் பண்புகள் உள்ளிட்ட விரிவான விவரங்களைப் பதிவு செய்யும். புதிய பாடத்திட்டத்தில் முதன்முறையாக இணையும் 2025-26 ஆம் கல்வியாண்டின் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த HPC பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

(பல்லவி ஸ்மார்ட்)

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://indianexpress.com/article/cities/mumbai/hindi-as-third-language-will-now-be-mandatory-in-classes-1-to-5-9948260/