இந்தியாவை சீனாவுடன் பதிலிப் போரில் நிறுத்த முயலும் அமெரிக்கா

பிரவின் சாவ்னி

இந்தியாவை சீனாவுடன் பதிலிப் போரில் நிறுத்த முயலும் அமெரிக்கா

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து குவாட் நாடுகளுடன் கூட்டு போர் தயாரிப்பில் ஈடுபடுவது இந்தியாவுக்கு ஆபத்தானது 

இந்த நடவடிக்கை இந்தியாவை சீனாவுடனான போருக்கு தள்ளும், அதில் சீனாவை இந்தியா வெல்ல முடியாது. அத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவும் இந்தியாவிற்கு உதவாது.

உயர்மட்ட அமெரிக்க ஆய்வாளர்களான லிசா கர்டிஸ் மற்றும் டெரெக் கிராஸ்மேன் எழுதிய 'இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியா-சீனா எல்லைப் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க போர்த்தந்திரம்' என்ற தலைப்பிலான சமீபத்திய அறிக்கை, இந்தியாவை விரைவாக அமெரிக்க இந்தோ-பசிபிக் யுத்த (US Indo-Pacific Command-USINDOPACOM) வலையமைப்பில் ஒருங்கிணைக்கத் தூண்டுவதாகும். இது ஒருங்கிணைந்த தடுப்பு (இராணுவ சக்தி) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் எதிர்வினை குறித்து உறுதியாக தெரியாததால், இதில் ஈடுபட இந்தியா தயங்குகிறது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகளை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்பல் தெரிவித்துள்ளார்.

நான்கு பாதுகாப்புத்துறை அடிப்படை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், கூட்டுப் போருக்கான இறுதிக் கட்டத்தை இந்தியா எடுக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. குவாட் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா) தொடர்பான போர் நடவடிக்கை ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்த இந்தியா தயங்குகிறது. அதேசமயம் அமெரிக்கா இந்நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த அழுத்தம் கொடுக்கிறது..

பதிலுக்கு, கூட்டுப் பயிற்சிகள், அவசரகால மற்றும் உயர் ராணுவ பாதுகாப்பு ஆலோசனைகள், சீன-இந்திய எல்லைப் பிரச்சனைகளை குவாட்டின் அம்சங்களில் ஒன்றாக சேர்ப்பது போன்ற விஷயங்களைக் கொண்டு சீனாவுக்கு எதிராக இந்தியாவை நிறுத்த பைடன் அரசு வலியுறுத்தியுள்ளது. 

மேலும், 'எதிர்கால இந்தியா-சீனா யுத்தத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் பலவீனமான இடைவெளிகளை நிரப்புவதற்கும் கூட்டுப் போர் பயிற்சிகள் அவசியம் வேண்டும்' என்றும் அமெரிக்கா கூறுகிறது.

இது கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் பெரிய பிரச்சனையில் சிக்கவைப்பதாகும்.

சீன - தைவான் போரில் தைவான் தோல்வியுற்றால் அது அமெரிக்காவுக்கும் தோல்வியே, அவ்வாறிருக்கையில் இந்தியாவுக்கு அமெரிக்கா எவ்வாறு சீனாவுக்கெதிரான போரில் உதவ முடியும்?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், எல்லைத் தாண்டி தாக்கும் ஏவுகணைகள், துல்லியமான தாக்குதல் திறன், தானாக தேடி தாக்கும் ஏவுகணைகள், மென்பொருள் வலையமைப்புகள், 5ஜி நெட்வொர்க் மற்றும் மின்னணு- சைபர் தொழில்நுட்ப பயன்பாட்டில் தன்னை விட பலமாக சீனா உள்ளதை அமெரிக்கா உணர்ந்திருக்கிறது. மேலும், சீனா புவியமைப்பின் கூடுதல் பலனையும் கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் படைகள் போர் அரங்கை அடைய ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டிய சூழலில் அவர்கள் கூட சீனாவின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

ஆகையால்தான் ஒருங்கிணைந்த யுத்த முயற்சிகளை வலுப்படுத்த, அமெரிக்கா நான்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

ஒன்று, அது அதன் பிராந்திய இராணுவ கூட்டாளிகளை (ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா) இராணுவத் திறன்களை உயர்த்தும்படி வற்புறுத்தியுள்ளது.

இரண்டு, அது அதன் இந்தோ பசிபிக் கூட்டாளிகளின் துணையோடு போர் நடவடிக்கைகளுக்காக நேட்டோவை விரிவுபடுத்தியுள்ளது. சீனாவும் ரஷ்யாவும் தங்கள் யுத்தத்தந்திர கூட்டை உறுதிப்படுத்தி வருவதால், ஐரோப்பிய மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா டிரான்ஸ்-அட்லாண்டிக் கூட்டணியை உலகளாவிய கூட்டணியாக மாற்றியுள்ளது.

மூன்று, ஒருங்கிணைந்த வான் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், லேசர் ஆயுதங்கள், ட்ரோன் திறன்கள், 5ஜி நெட்வொர்க்,  சைபர் அமைப்புகளை உள்ளடக்கிய சீனாவின் அனுகவியலாத எல்லைக் (Anti-Access Area Denial - A2AD) கட்டுப்பாடு சவாலை எதிர்கொள்ள பசிபிக் யுத்த நடவடிக்கைகளுக்காக (PDI) மட்டும் 40% கூடுதல் நிதிகளை பென்டகன் கோரியுள்ளது. PDI என்பது USINDOPACOM படைகளின் மறுகட்டமைப்பிற்காகவும், ஹவாய், குவாம் மற்றும் கூட்டு நாடுகளின் பிரதேசத்தில் புதிய தளங்களை மேம்படுத்துவது போன்றவைகளையும் உள்ளடக்கியுள்ளது.

நான்கு, அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, சீனாவுடனான போரை தள்ளிவைக்குமாறு அமெரிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான காரணங்கள்: பெரும் வல்லரசுகள் (ரஷ்யாவுடன் அமெரிக்கா அல்லது சீனாவுடன் அமெரிக்கா) போருக்குச் செல்லும்போது (உக்ரைன் போரைப் போலவே பதிலிப் போர் கூட), எந்த தரப்பினரும் வெல்வதை உறுதியாக கணிக்க முடியாது. ஏனெனில் எவராலும் போர்க் கட்டுப்பாட்டையும் அதன் விரிவாக்கக் கட்டுப்பாட்டையும் செயல்படுத்த முடியாது. மேலும் அமெரிக்க இராணுவம் இரண்டு பெரும் சக்திகளுடன் போரிடத் தயாராக இல்லை என்பதாகும்.

அமெரிக்காவின் இராணுவ நட்பு நாடுகளான குவாட் உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இராணுவம் அல்லாத மற்றும் இராணுவம்சார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. குவாட்டை 'மினி-நேட்டோ' என்று சீனா மதிப்பிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள ஹார்முஸ் கால்வாயிலிருந்து மலாக்கா வரையிலான 3,000 நேட்டிக்கல் மைல் தூர நெட்வொர்க் வழித்தடங்கள் (SLOCs) மற்றும் கடல்சார் பட்டுப் பாதை (MSR) ஆகியவற்றை குவாட் அச்சுறுத்தும் என்று சீனா கூறுகிறது. சீனாவின் 4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான வர்த்தகம் ஆண்டுதோறும் இந்த வழித்தடங்கள் மூலம் செல்கிறது, மேலும் MSR என்பது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துடன் இணைந்த சீனாவின் மூலதனத்தை கடத்தும் பொருளாதார தடமாகும்.

இந்த அடிப்படைகளை முழுமையாக அறிந்த நிலையில்தான் அமெரிக்கா, சீனாவுடனான போர் பற்றிய இந்திய இராணுவத்தின் தவறான நிலைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டது. அமைதிக்கால நடவடிக்கைகள், நெருக்கடி மற்றும் போர் ஆகியவற்றை இந்தியாவால் வேறுபடுத்தி பார்க்க இயலாமை மேலும் அபாயமானது.

இந்திய இராணுவத் தலைமையும் உயரதிகாரிகளும் சீனாவுடனான போருக்கு மூன்று குணாதிசயங்கள் இருக்கும் என்று நம்புகிறார்கள்: இந்திய இராணுவம் போர் அனுபவம் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் இது ஒரு எல்லைப் போராக இருக்கும்; தரையிலும் ஆகாயத்திலும் நடக்கும் எல்லைப் போரை இராணுவம் வழிநடத்தும்; மேலும் இது பாகிஸ்தானுடனான போராகவும் அமையும் (இது ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு தாவும் இருமுனைப் போரை நடத்துவதற்கு இட்டுச் செல்லக்கூடும்).

மேலும், சைபர், ஸ்பேஸ் மற்றும் தகவல் போர் போன்ற நவயுக தொழில்நுட்பங்கள் சீனாவுடனான போரில் செயல்படுத்தும்.

அமெரிக்காவை நம்பகமான கூட்டாளியாகக் காட்டும் வகையில், அமெரிக்க ராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல், உளவுத்துறை மற்றும் இந்திய வீரர்களுக்கான குளிர்கால ஆடைகள் ஆகியவற்றை அறிக்கை நினைவூட்டுகிறது. மற்றொரு எல்லை நெருக்கடி அல்லது மோதல் ஏற்பட்டால், 'இந்தியாவுக்கு உளவுத்துறை, தகவல் பகிர்வு, ஏவுகணை மற்றும் இராணுவ தளவாடங்களின் மேம்பாட்டிற்கு உதவ அமெரிக்கா இனிதான் தயாராக வேண்டும். 

இவை அனைத்தும் சீனாவுடனான போருக்கு உதவாது.

ஆனால், இந்திய இராணுவம் ஏன் சீனாவின் போரைப் புரிந்து கொள்ளவில்லை? என்ற புதிரான கேள்விக்கு முதலில் விளக்கம் தேவை.

இந்திய ராணுவம் சுதந்திரம் அடைந்ததில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்துடனான போரில் மும்முரமாக இருந்தபோதும், 30 ஆண்டுகளாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தபோது, சீனா சோவியத் ஒன்றியத்தின் செம்படை மற்றும் அமெரிக்க ராணுவத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டது. இந்திய இராணுவம் இன்னும் 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏர் லேண்ட் போர்யுக்தியைத்தான் பின்பற்றுகிறது, சீனாவுடனான இந்த போர்ச் சூழல் திடட்மிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. போரில் முன்வரிசை மீறல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அது மீறப்பட்டவுடன், உயர் தளபதி தனது தரப்பு போர் ஒருங்கிணைப்பிற்கு பொறுப்பேற்கிறார். அது யுத்ததந்திரத்தின் தொகுப்பாக அமைந்துவிடுகிறது. இராணுவமும் விமானப் படையும் தங்களது திறன்களுடனும், ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெறுகின்றன.

மறுபுறம், 80களில் சீனா சோவியத்தின் போர்யுக்திகளை ஏற்றுக்கொண்டது, இது முன்னணியில் இருப்பதை விட யுத்ததிட்டங்களை தீட்டுவதற்குதான் முக்கியத்துவம் அளித்தது. துருப்புக்களின் துல்லியத் தாக்குதல்கள், கூட்டு தாக்குதல்கள் மற்றும் அதிரடி யுத்த குழுக்களின் தைரியமான சாகசங்கள் போன்ற உயர் தளபதிகள் செய்யக்கூடிய செயல்பாட்டுக் கலையை இது அறிமுகப்படுத்தியது. எதிரிகளின் திறன்களில் 50 முதல் 60% வரை முன்னணிப் போரில் ஈடுபடுவதற்கு முன்பே அழிக்கப்படுவதை இது உறுதி செய்யும். செயல்பாட்டுக் கலையின் அனுபவத்தை புரிந்துகொள்வதற்குப் பதிலாக, இந்திய இராணுவம் கட்டளை மட்டத்தில் அதன் உயர் யுத்தத்தந்திர நடவடிக்கைகளை செயல்பாட்டுக் கலை என்று அழைக்கத் தொடங்கியது.

அடுத்து, சீனாவனது ஈராக்கிற்கு எதிரான 1991 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான வளைகுடாப் போரை ஆய்வு செய்து அமெரிக்காவின் போர் நெட்வொர்க்குகள் (சென்சார்களை துப்பாக்கி சுடும் வீரர்களுடன் இணைக்கும் மென்பொருள் அமைப்புகள்) துல்லியமான வழிகாட்டப்பட்ட வெடிகுண்டுகள்தான் அதன் பலம் என்பதை உணர்ந்தது. இதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் போர் நெட்வொர்க்குகளை சீர்குலைத்து அழிக்க சைபர் மற்றும் எலக்ட்ரானிக் போரில் கவனம் செலுத்தவும், ஆணை, கட்டுப்பாட்டு மையங்கள், முக்கிய பகுதிகள், புள்ளிகளை அழிக்க ராக்கெட்ரி (நிலம் சார்ந்த ஏவுகணைகள்) மீது கவனம் செலுத்த சீனா  முடிவு செய்தது. இது நீண்ட தூர தாக்குதல் தொடுக்கும் PGM களின் மாதிரிகளை செய்யும் பணியையும் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டில், சீனாவானது பௌதீக (நிலம், கடல், காற்று, விண்வெளி) மற்றும் மெய்நிகர் (Virtual) (சைபர் மற்றும் எலக்ட்ரானிக் துறைகள்) ஆகிய இரண்டிலும் போரிட முடியும் என்று அறிவித்தது.

அதன் 2015 இராணுவ சீர்திருத்தங்களின் கீழ், சீனா அதன் மிக உயர்ந்த செயல்பாட்டுத் தலைமையகமான முப்படை கூட்டுப் பணியாளர் துறையால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் இரண்டு தனித்துவமான அமைப்புகளை உருவாக்கியது. மக்கள் சீன ராக்கெட் படை (PLARF) அதன் கீழ் அனைத்து நிலம்சார் வழக்கமான அணுசக்தி ஏவுகணைகளையும் கொண்டுள்ளது, மேலும் மக்கள் சீன யுத்த ஆதரவுப் படை (PLASSF) இணையம், மினகாந்த அலைவரிசை, விண்வெளி மற்றும் எதிர் விண்வெளி திறன்கள் மற்றும் தகவல் போர் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். PLARF மற்றும் PLASSF ஆகியவை ஒன்றையொன்று பூர்த்தி செய்து, 'திட்டமிடப்பட்ட தாக்குதல் போர்' எனப்படும் சீன இராணுவத்தின் போருக்கு ஒன்றாகப் பொறுப்பாகும். பிந்தையது தந்திர உத்திகளை அரங்கிலிருந்து நிறைவேற்றிட உதவும் முன்னது நாடு முழுவதும் போர் மண்டலமாக (தேசம் முழுவதும்) செயல்பட்டு விரிவாக்கப்பட்ட இயக்கவியல்  மற்றும் அறிவாற்றல் போரின் மூலம் எதிரியை முன்கூட்டியே தோற்கடிக்க கூடும். 

தொழில்நுட்பங்கள் மற்றும் போர் யுக்திளில் 30 வருட இடைவெளியுடன், சீன மற்றும் இந்திய இராணுவம் உள்ளது. அது நான்கு முக்கிய செயல்பாட்டு சிக்கல்களை கொண்டுள்ளது.

ஒன்று, மெய்நிகர் போர் களங்களை உருவாக்கியதில் இருந்து, சீனான் போர் திட்டமிடல் ஆயுத தளங்களில் இருந்து புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகள் சாரா திறன்களுக்கு மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக, இணையம் மற்றும் எலக்ட்ரானிக் தளங்கள் முழுவதும் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. சைபர் தாக்குதல்கள் (டிஜிட்டல் மென்பொருள் ஆயுதங்கள்) சைபர்ஸ்பேஸில் உள்ள தரவு மற்றும் தகவல்களைத் தாக்கி அழிக்கிறது. மேலும், 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதத்தை பயன்படுத்தி ஈரானின் நேட்டன்ஸ் அணுசக்தி நிலையத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதிலிருந்து பௌதீக மற்றும் மெய்நிகர் களங்களின் ஒருங்கிணைப்பு இருப்பதால், சைபர் தாக்குதல்கள் பயன்படுத்தக்கூடும். சீனா தனது இணையத் தாக்குதலை போர் மண்டலங்கள் உட்பட நாடு முழுவதும் பயன்படுத்தும். 'போர் மண்டலத்தில்' மின்சாரம், நிதி நிறுவனங்கள், ரயில்வே சிக்னல்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பலவற்றின் இடையூறுகள் அல்லது அழிவுகளால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கும். கணினிகள் மற்றும் இணையம், இரண்டையும் இணைக்கும் எல்லாவற்றிலும் இருக்கும் சைபர்ஸ்பேஸில் அதன் சைபர் ஆயுதங்கள் வேலை செய்கின்றன.

மறுபுறம், எலக்ட்ரானிக் தாக்குதல்கள், தரவுகளைக் கொண்டு செல்லும் அலைகற்றைகளை தாக்குகிறது. தரவு மற்றும் தகவல் இல்லாமல், பல்வேறு தலைமையகங்கள் குருடர்களாகவும் காது கேளாதவர்களாகவும் மாறும், கட்டளைச் சங்கிலியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

சைபர் மற்றும் எலக்ட்ரானிக் தாக்குதல்கள் (எலக்ட்ரானிக் போர்)  நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போரிலும் இது நிரூபிக்கப்பட்டது. ரஷ்ய இராணுவம் உக்ரைன் இராணுவத்தின் தகவல்தொடர்புகளை போரின் ஆரம்பத்தில் அதன் எதிர் விண்வெளி திறன்கள் மற்றும் சைபர் தாக்குதல்கள் மூலம் அழிக்க முடிந்தது. அதன்பிறகு, உக்ரைன் இராணுவத்திற்கான இணைப்பு, ஸ்பேஸ்-எக்ஸ் மூலம் குறைந்த புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் ஸ்டார்லிங்க் மூலம் தொடர்பு சிக்னல்களுக்கான பல அடிப்படை நிலையங்களை உருவாக்கியது. இவர்கள் ரஷ்ய எலக்ட்ரானிக் தாக்குதல்களால் தொடர்ந்து பின்னடைவுக்கு ஆளாகிறார்கள். மேலும், ரஷ்ய ஏவுகணைகள், குறிப்பாக அதன் கின்ழால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை, மாக் 12 அதிவேக 3,000-கிமீ தூரம் கொண்ட ஏவுகணை குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனிய இராணுவம் இன்னும் மண்டியிடவில்லை என்பது அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் செயல்பாட்டு தளவாட ஆதரவின் காரணமாகும். மேலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் நேரடி ஈடுபாட்டின் காரணமாக, ரஷ்யாவின் திறன்களை போரில் எதிர்கொள்ள முடிகிறது.

இரண்டு, தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் திறன்கள் அறியப்பட்ட இந்திய இராணுவத்துடனான ஆயுத தளங்களைப் போலல்லாமல், சீனா அதன் வன்பொருளில் (டாங்கிகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் பல) மென்பொருள் இயக்கும் திறன்களைக் கொண்டிருக்கும், இது போரில் செயல்பாட்டு ஆச்சரியங்களை ஏற்படுத்தும். மேலும், மென்பொருள் இயக்கப்படும் மேம்படுத்தல்கள் வன்பொருள் மேம்படுத்தல்களை விட வேகமாக இருக்கும், இதற்கு நேரம் மற்றும் அதிக ஆதாரங்கள் தேவை. அதைவிட மோசமானது, இந்திய ராணுவத் தலைமைக்கு தேவையான ஆயுத தளங்கள் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக, மார்ச் 21 அன்று தாக்கல் செய்யப்பட்ட 17வது மக்களவையின் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, ராணுவத்தின் போர்ச் சண்டை உபகரணங்கள் அதிக அளவில் காலாவதியாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இராணுவம் 30:40:30 சதவீதம் என்ற விகிதத்தில் உபகரணங்களை வலியுறுத்துகிறது. 40 தற்போதைய உபகரணமாக உள்ளது, மேலும் 30%  புதிய நவீன மற்றும் 30% பாரம்பரிய தளவாடங்களின் தேவை உள்ளது. அதில் இருப்பது புதிய தலைமுறையில் 15 சதவீதம், தற்போதைய தலைமுறையில் 40 சதவீதம், மீதமுள்ளவை காலாவதியானவை. மேலும், இந்திய ராணுவத்தின் போரில் சிறப்பு வாய்ந்த வெடிகுண்டுகளின் பற்றாக்குறை பெரும் தடையாக இருக்கும்.

மூன்று, போரில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது இன்று அவசியமாகியுள்ளது.. உக்ரேனிய இராணுவம், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவுத் தரவுகளை பல்வேறு ஆதாரங்களில் இருந்து திறமையான ஸ்கேன் செய்வதற்கு, செயல்பாட்டுத் தகவல்களைத் தோண்டி எடுக்க இதைப் பயன்படுத்துகிறது. AI ஆனது மனித முடிவெடுப்பதற்கு உதவுவதைத் தாண்டி எந்த முடிவை எடுக்க வேண்டும் என தேரவுகளை வழங்கும் அளவுக்கு மேம்பட்டுள்ளது. 'ஏஐ அட் ரெஸ்ட்' (விரைவான மற்றும் துல்லியமான முடிவெடுப்பதற்கு மென்பொருள் நெட்வொர்க்குகளில் AI ஐப் பயன்படுத்துதல்) என்று அழைக்கும் சீனா, 2020 ஏப்ரல் முதல் போர் அரங்கில் அதன் பயிற்சிகள் மூலம் ஏராளமான செயல்பாட்டு தரவைப் பெற்றுள்ளது. முடிவெடுப்பதில் AI ஐப் பயன்படுத்த தயங்காது. இந்திய ராணுவம் இது குறித்து எதுவும் தெரியாமல் உள்ளது.

நான்கு, இந்திய இராணுவப் போரைப் போலல்லாமல், சீனாவின் போர் யுத்தியானது நில மற்றும் வான் களங்களை மட்டும் சார்ந்து இருக்காது. இந்திய இராணுவம் போன்ற ஒரு நடுத்தர சக்திக்கு எதிராக தீர்க்கமான ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கு சீனாவின் சைபர் மற்றும் எலக்ட்ரானிக் தாக்குதல்கள், தொலை தூர ஒருங்கிணைந்த தடையற்ற  போர்யுத்திகளை பயன்படுத்தப்படும் விண்வெளித் திறன்கள் போதுமானதாக அதனிடம் உள்ளது. சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் (மேற்கு போர் அறை)  கட்டளையால் திட்டமிடப்பட்டு, தனிப்பட்ட மற்றும் கூட்டாக அரங்கேற்றப்படும் போர்கள் - இணைய மற்றும் எலக்ட்ரானிக் போர், விண்வெளிப் போர், ட்ரோன் போர், ஒளி வேக ஆற்றல் ஆயுதங்களின் போர், ஏவுகணைப் போர் மற்றும் தகவல் போர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். பெரும்பாலான போர்களில் இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா உதவ முடியாது. நேட்டோ விரிவாக்கம் மற்றும் ஈடுபாடு பற்றிய உக்ரைன் போரைப் போல, இந்தியா-சீனா போரில் அமெரிக்கா தனது கையை விரிக்கும்.

அமெரிக்கா விற்கும் பாரம்பரிய வன்பொருள் தளவாடங்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை. மெய்நிகர் களங்களில் போட்டியிட,  எதிர்கொள்ளும் திறனே சீனாவுடனான போரில்  தேவை. மேலும் இந்தியா AI மற்றும் ஆயுத தளங்களில் அதன் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிரியை விட வேகமாக பலிகளை தடுக்க முடிவெடுக்க வேண்டும். இதற்கு நிலம் சார் ஏவுகணைகள் (குரூஸ் மற்றும் ஹைப்பர்சோனிக்) தேவை, கூட்டு முயற்சியான பிரம்மோஸ் தவிர இந்தியாவிடம் எதுவும் இல்லை. அதற்குத் திறமையான இராணுவத் தலைமையும் தேவை, அது போரில் எதிரியை முன்னேற  விடாமல் தடுக்கவும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

அமெரிக்க ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸின் கூற்றுப்படி, 'நீங்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படிக்கவில்லை என்றால், நீங்கள் செயல்பாட்டு அறிவு இல்லாதவர், மேலும் நீங்கள் திறமையற்றவராக இருப்பீர்கள். ஏனெனில் உங்கள் பணியாளர் அனுபவம் மட்டுமே உங்களைத் தாங்கும் அளவுக்கு பரந்ததாக இருக்காது.

குவாட் நாடுகளுடன் கூட்டுப் போருக்கான அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிவது இந்தியாவை சீனாவுடனான போரில் நிறுத்தும். ஆனால், அதை வெல்ல முடியாது.

(பிரவின் சாவ்னி)

வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/security/the-dangers-of-india-succumbing-to-us-pressure-for-joint-combat-with-quad-nations