மார்கன் நூலில் - சொத்துடைமை பற்றியும் - தமிழர்களின் உறவுமுறை பற்றியும்

அ.கா.ஈஸ்வரன்

மார்கன் நூலில் -  சொத்துடைமை பற்றியும்  - தமிழர்களின் உறவுமுறை பற்றியும்

மார்கன் நூலில் -  தமிழர்களின் உறவுமுறை பற்றி

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மார்கன் எழுதிய  “பண்டைய சமுதாயம்” என்கிற நூலில் தமிழர்களின் உறவுமுறைகள் பற்றிய தகவல்கள் காணப்படுவது ஆச்சரியமே. இத் தகவல்களை மார்கன் நமது நாட்டிற்கு நேரடியாக வந்து திரட்டவில்லை. காலனி ஆட்சியாளர்களின் இனவியல் அறிக்கைகள், கிறித்தவ மிஷனரிகள் திரட்டிய தகவல்கள் ஆகியவற்றில்  காணப்பட்ட தமிழ் உறவு சொற்களின் பட்டியல் மார்கனுக்குக் கிடைத்திருக்கிறது. அதனை அவர் அப்படியே பயன்படுத்திக் கொள்ளவில்லை, அந்தப் பட்டியலில் காணப்படும் உறவுமுறையோடு செவ்விந்தியர்களின் உறவு முறைகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

தமிழரைப் பற்றி மார்கன் கூறியதைத் தொகுத்து இங்கே பார்ப்போம்.

1)

"தென்னிந்தியாவில் தமிழர்களின் இரத்தச் சம்பந்தப்பட்ட உறவுமுறைகளும், நியூயார்க்கின் செனிக்கா - இராக்குவாய் மக்களின் இரத்தச் சம்பந்தப்பட்ட உறவுமுறைகளும் இன்னமும் ஏறக்குறைய இருநூறு உறவுமுறைகளுக்கு, ஒரே மாதிரியாக உள்ளன. இந்த உறவுமுறைகள், மனிதச் சிந்தனை வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இருந்திராத வகையில், சமுதாய நிலைகளின் பல அம்சங்களை இயற்கையாகத் தர்க்க ரீதியாக விளக்க முற்பட்டது." (பக்கம்-612)

2)

"அமெரிக்காவின் கனோவானியன் பழங்குடியினர் பற்றி அறியச் செனிகா -இராக்குவாய் மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஆசியாவின் டுரானியன் பழங்குடியினர் குறித்து அறியத் தென்னிந்தியாவின் தமிழ் மக்களை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அமைப்புகள் ஒரு நபரின் இருநூறு உறவுகள்வரை, ஒரே மாதிரியாக இருக்கின்றன. இது இந்த அத்தியாயத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளது. சுமார் எழுபது அமெரிக்க - செவ்விந்தியப் பழங்குடியினங்கள், தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, கன்னட மக்கள் உட்படப் பல ஆசியப் பழங்குடியினங்கள் ஆகியவற்றின் இரத்தச் சம்பந்தப்பட்ட உறவுமுறைகள் குறித்து முழுமையான விவரங்களை, என் முந்தைய ஆய்வுப் பணியொன்றில் வெளியிட்டுள்ளேன். அந்த அட்டவணைகளில் காணப்படும் உறவுகள், தினசரி வழக்கத்தில், இன்னும் நடைமுறையில் உள்ளன. பல்வேறு பழங்குடியினங்கள், தேசங்களின் அமைப்புகளில், பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அடிப்படையான அம்சங்கள் நிலையானதாகவே உள்ளன. அனைவருமே ஒருவரையொருவர் உறவுமுறை சொல்லி அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழர்களிடம் ஒரு வேறுபாடு உள்ளது. ஒருவர் யாரிடம் பேசுகிறாரோ, அவர், தான் பேசிக்கொண்டிருப்பவரை விட இளையவராக இருந்தால், அதற்குரிய உறவுமுறை சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் பேசுபவர் மூத்தவராக இருந்தால் உறவுமுறை சொல்லியும் அழைக்கலாம்; பெயர் சொல்லியும் அழைக்கலாம். ஆனால், இதற்கு மாறாக, அமெரிக்கப் பூர்வக்குடிகளிடையே ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளும்போது உறவுமுறையைச் சொல்லியே அழைக்க வேண்டும்." (பக்கம்-671)

3)

"பல பழங்குடியினங்களில் இரண்டு மாமனார்களும், இரண்டு மாமியார்களும் உறவுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த உறவுமுறைகளை வெளிப்படுத்துவதற்கான சொற்களும் இருந்தன. அமைப்பில் பலவித வேறுபாடுகள் இருந்தமையால், இத்தகு சொற்றொடர்கள் உறவுமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு அவசியமாயின. ஆனாலும் சொற்றொடர்களில், சொற்களில் இவ்வளவு வளமை இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். செனிகா - இராக்குவாய், தமிழ் அமைப்புகளின் உறவுமுறைகளின் முழு விவரங்களும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தாலே அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். இந்த அமைப்புகள் உருவானபோது, அவர்களின் மிகத் தொன்மையான முன்னோர்களிடையே புனாலுவன் திருமண வழக்கம் இருந்தது; அந்தத் திருமணம் பண்டைய சமுதாயத்தில், எந்த அளவிற்குச் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் அது வெளிப்படுத்துகிறது. அதேசமயம், மனிதகுல அனுபவத்தில் சமூக அமைப்பு குறித்துப் பாதுகாக்கப்பட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, மனித மனம் எடுத்த மிக அசாதாரணமான முயற்சி இது.

முந்தைய மலாயன் அமைப்பின் மீதே டுரானியன், கனோவானியன் உருவாயின; அல்லது அடிப்படை விஷயங்களில் இவை ஒரேமாதிரி இருந்தன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன. செனிகாக்கள், தமிழர்களின் உறவுமுறைகளையும், ஹவாய் மக்களின் உறவுமுறைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவற்றிற்கிடையேயான வேறுபாடு, சகோதர, சகோதரிகளுக்கிடையே திருமணம் நடைபெற்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அமைந்தது. உதாரணமாக, முதல் இரண்டில், என் சகோதரியின் மகன், என் மருமகன். ஆனால் பிந்தையதில், அவன் என் மகன். இந்த இரண்டு உறவுமுறைகளும் கான்சாங்குவின், புனாலுவன் குடும்பங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன" (பக்கம்-678-679)

4)

"IV. நான் ஒரு பெண். என் உடன்பிறந்த, உடன்பிறவாச் சகோதரிகள் பலரின் குழந்தைகளும், எனது பல பெண் கசின்களுடைய குழந்தைகளும் எனது மகன்களும், மகள்களும் ஆவர்.

காரணம்: அவர்கள் அனைவரின் கணவர்களும், என் கணவர்களும் கூட. இந்தக் குழந்தைகள் எனது மாற்றுக் குழந்தைகள் (ஸ்டெப் சில்ட்ரென்) - கணவரின் குழந்தைகள். இப்படித்தான் ஒஜிப்வா பழங்குடியிலும், அல்கோன்கின் பழங்குடியினங்கள் பலவற்றிலும் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் செனிக்கா இராக்குவாய் மக்களிடையேயும், தமிழர்களிடையேயும், பண்டைய வகுப்புகளைப் பின்பற்றி, அவர்கள் என் மகன்கள், மகள்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இதற்கான காரணங்கள் மலாயன் அமைப்பில் தரப்பட்டுள்ளன." (பக்கம்-680-681)

5)

"XIll. நான் ஒரு ஆண். தமிழன். என் ஆண் கசின்கள் அனைவரின் குழந்தைகளும், என் மருமகன்களும், மருமகள்களும். எனது பெண் கசின்கள் அனைவரின் குழந்தைகளும் என் மகன்களும், மகள்களும். இது செனிக்கா - இராக்குவாய் உறவுமுறைக்கு அப்படியே நேர்மாறானது. தமிழர்களிடையே, டுரானியன் அமைப்பு தோன்றியபோது, எனது அனைத்துப் பெண் கசின்களும் எனது மனைவியராக இருந்தனர். ஆனால், ஆண் கசின்களின் மனைவியர் அவ்வாறிருக்கவில்லை. இந்த இரண்டு அமைப்புகளுக்குமிடையே, ஈகோ என்ற மையப் புள்ளிக்கும், சுமார் இருநூறு நபர்களுக்கும் இடையேயான உறவுகளில், இது ஒன்று மட்டுமே வேறுபடுவது விசித்திரமானது." (பக்கம்-682)

இங்கே ஆண் கசின் என்று கூறப்படுவது எனது மனைவியின் சகோதரராக இருக்கும் என்று நினைக்கிறேன்.



==============================================================================

மார்கன் நூலில் சொத்துடைமைப் பற்றி

பழங்குடி சமூகத்தில் காணப்பட்ட ஆதி பொதுவுடைமை சமூகம், சொத்துடைமையின் தோற்றத்தோடு வர்க்கப் பிளவை ஏற்படுத்தி, பொதுவுடைமை சமூகம் சிதைந்தது. சொத்துடைமையே இதற்கு அடிப்படை என்பதை மார்கன் தெளிவாகப் புரிந்து தமது நூலில் எழுதியுள்ளார். அதனை இங்கே தொகுப்பாகப் பார்ப்போம்.

1)

"இறுதியாக:

சொத்து என்பது பற்றிய எண்ணம், மனித மனதில் மிகமிக மெதுவாக உருவானதேயாகும். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சிறுகீற்றாக இருந்து, மிகமெலிதாக உருப்பெற்று, பலப்பல ஆண்டு காலங்களுக்குப் பின்னரே, சொத்து என்ற எண்ணம் மனிதனுக்கு ஏற்பட்டது. விலங்குத்தன காலகட்டத்தில் தோன்றி, இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவங்கள்; காட்டுமிராண்டித்தன காலகட்டத்திலும், அதற்குப் பிறகான காலகட்டங்களிலும் பெற்ற அனுபவங்கள், சொத்து என்ற எண்ணக்கருவை வளர்க்கவும், இது மனிதனைக் கட்டுப்படுத்தும் தாக்கம் கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில், மனிதமூளையைத் தயார்படுத்தவும் தேவைப்பட்டன. எல்லா ஆர்வங்களைக் காட்டிலும் சொத்து மீதான பேரார்வம் ஏற்பட்டதே, நாகரிக காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும். நாகரிகத்தை தாமதப்படுத்திய, நாகரிகத்தை நோக்கிச் செல்வதற்கு ஏற்பட்ட தடைகளை எதிர்கொள்வதற்கு மட்டுமின்றி, பிரதேசங்கள் மற்றும் சொத்தின் அடிப்படையில், அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதற்கும், மனிதகுலத்திற்கு இது வழிகாட்டியது. சொத்து பற்றிய எண்ணம் மனிதனுக்குள் எவ்வாறு உருப்பெற்று வளர்ந்தது என்பது குறித்த அறிவு, சில அம்சங்களில், மனிதகுலத்தின் மனங்கள் பற்றிய வரலாற்றின் மிகக் குறிப்பிடத்தகுந்த பகுதியை அறிய உதவும்.

மேலே குறிப்பிட்டுள்ள பல கோணங்களில் புதிய கண்டுபிடிப்புகளும் கண்டெடுப்புகளும், அரசாங்கம், குடும்பம், சொத்து ஆகியவை பற்றிய எண்ணங்களின் வளர்ச்சி, இவற்றின் வாயிலாக வெளிப்படுத்தப்படும், தொடர்ச்சியான, இனரீதியான காலகட்டங்களில் ஏற்பட்ட மனிதகுல வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய சில ஆதாரங்களை முன்வைப்பதே எனது நோக்கம்." (பக்கம் -61)

2)

"நாம் பெற்றுள்ள மிக முன்னேறிய அனுபவத்தை வைத்துப் பார்க்கையில், இந்த அரசு, முரட்டுத்தனமாகவும், ஒழுங்கற்றதாகவும் நமக்குத் தெரியலாம். பழுதுபட்டதாகவும், சுதந்திரமற்றதாகவும் காணப்படும் இந்த அரசு, முந்தைய ஜென்டைல் அரசை விட விவேகமான முன்னேற்றமாகும். இந்த அரசின் கீழ், உலகமே விரும்பிய நாடாக, ரோமாபுரி திகழ்ந்தது. சொத்து என்கிற அம்சம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக வளர்ந்து வந்தது. இதுவே அரசின் தன்மைகளை நிர்ணயிப்பதாக அமைந்தது. 

செல்வந்த வகுப்பு மற்றும் முன்னுரிமை வகுப்புகள் ஆகியவற்றை இந்த அரசு முன்னிறுத்தியது. இந்த வாய்ப்பை, இவை, நன்கு பயன்படுத்திக் கொண்டு, அரசைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தின் பெரும்பாலானவற்றை மக்களின் கைகளிலிருந்து எடுத்துச் சொத்துகள் கொண்ட மனிதர்களிடம் ஒப்படைத்தது. ஜென்டிஸ்களிடமிருந்து பெறப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளுக்கான இயல்பான போக்கிற்கு, முற்றிலும் எதிர்த்திசையில் செல்வதாக இந்த இயக்கம் அமைந்திருந்தது." (பக்கம் -527-528)

3)

"அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அதிக அளவில் சொத்துகளை உடைய வகுப்பினரிடம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிரதேச அடிப்படையும் இருந்தது. ஏனென்றால், பிரதேசத்தை அங்கீகரித்து, பிரதேச உட்பிரிவுகளைப் பயன்படுத்தியே குடியுரிமை வழங்கப்பட்டது. நிதி மற்றும் இராணுவம் தொடர்பான விஷயங்களுக்கும், பிரதேசங்களுடனான உறவுகளை வைத்தே அரசு, குடிமக்களை நடத்தியது.

இப்போது ரோமாபுரி ஜென்டைல், சமுதாயத்திலிருந்து வெளியேறி, பிரதேசங்களையும், சொத்துகளையும் அடிப்படையாகக் கொண்ட, இரண்டாவது பெரிய அரசு திட்டத்துக்குச் சென்றது. அவர்கள் முந்தைய ஜென்டிலிசம் மற்றும் காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தைப் பின் தள்ளிவிட்டு, புதியதொரு நாகரிகக் காலத்துக்குள் நுழைந்தனர். சொத்துகளை உருவாக்குவதும், பாதுகாப்பதும் அரசின் முக்கிய நோக்கங்களாயின. தொலைதூரங்களிலுள்ள பழங்குடியினங்களையும், தேசங்களையும் கைப்பற்றி ஆக்கிரமிப்பது, கூடுதலான ஒரு பணியானது. முன்னர், வெறும் தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக இருந்த சொத்துகள், பின்னாட்களில் அரசின் அதிகார மையமானது. 

பிரதேசங்கள் மற்றும் சொத்துகள் என்ற புதிய அம்சங்களினால், அமைப்புகளில் ஒரு மிகப்பெரும் மாற்றமாக ஜென்டைல் சமுதாயத்திலிருந்து வேறுபட்டதான அரசியல் அந்த மாற்றம் நிகழ்ந்தது. வார்டுகளுக்கு முழுச் சமுதாயமாக - அதிகாரத்துடன் உள்ளாட்சிக்குச் சுயாட்சி அளிக்கப்பட்டு, சொத்துகள் அடிப்படையிலான வகுப்புகள் இல்லாமல், உள்ளூர் தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களைக் கொண்டதாகச் செனட் இருந்திருந்தால், அது ஏதேனியன்களைப் போன்று, ஜனநாயகமாக இருந்திருக்கும்." (பக்கம் -533-534)

4)

"மக்களிடையே சொத்துகள் உருவாகத் தொடங்கியதும், அதிகாரமும், தாக்கமும் சமுதாயத்தால் உணரப்பட்டதும், அடிமைத்தனம் தோன்றியது; இது எல்லாக் கோட்பாடுகளுக்கும் எதிரான ஒரு அமைப்பாக இருந்தது; இரத்தச் சம்பந்தமில்லாத அந்நியன் அல்லது கைப்பற்றப்பட்ட எதிரி அடிமையாக்கப்படவேண்டும் என்ற சுயநலமான எண்ணத்தினாலும், மாயையான சிந்தனையாலும் இது ஏற்பட்டது. சொத்துகள் என்பதோடு, மெல்ல மெல்ல, செல்வந்தர் வகுப்பு என்ற கோட்பாடும் வரத் தொடங்கியது. இதையடுத்து முன்னுரிமையும், சலுகைகளும் பெற்ற வகுப்பினர் உருவாயினர். ஒப்பிட்டுப் பார்க்கையில் குறுகிய காலமாகவே உள்ள நாகரிகக் காலத்தில், சொத்து என்கிற அம்சம், சமுதாயத்தை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்து, மனிதகுலத்துக்கு எதேச்சாதிகாரம், ஏகாதிபத்தியம், மன்னராட்சி, முன்னுரிமைகள் கொண்ட வகுப்புகள், அதன்பின் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என, பல அம்சங்களைத் தந்துள்ளது. 

நாகரிகமான நாடுகளின் வாழ்வு முறையை, அடிப்படையில் சொத்துகள் உருவாக்கும் வாழ்வுமுறையாக அது செய்து விட்டது. ஆனால், சொத்துகள் குறித்த தனிநபர் உரிமைகள், அரசுக்கும், சொத்துகளுக்கும் உள்ள தொடர்பு உட்பட -- சொத்துகள் தொடர்பான கருத்தியல் சார்ந்த உரிமைகள் பற்றிய மாபெரும் கேள்வி எழுப்பும் அளவிற்கு மனிதகுலத்தின் அறிவு, வளரும் போது -- தற்போதைய அமைப்பு முறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். வரவிருக்கும் மாற்றங்கள் குறித்த தன்மைகள் பற்றி, எண்ணிப்பார்ப்பதே இயலாததாக இருக்கும். ஆனால், தொடக்க நிலையில் இருந்தாலும், ஒரு காலத்தில் உலக அளவில், எங்கும் நிலவிய; பல நாகரிக அரசுகளால் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள ஜனநாயகம், மீண்டும் உலகளாவியதாகவும், மிக உயரியதாகவும் உருவெடுப்பது சாத்தியமானது என்று கருதலாம்." (பக்கம் -537-538)

5)

"XIV சொத்துகள் அதிகரித்தது மற்றும் சொத்துகளுக்கு உறவுமுறை நேர்க்கோட்டின் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் முறையை ஏற்படுத்துதல் 

ஹீப்ரூ, லத்தீன் வகைகளில் ஆணாதிக்கக் குடும்பம் உருவாகக் காரணமாகச் சொத்துகள் இருந்தன. சொத்துகள் வகைகளிலும், தொகையிலும் அதிகரித்ததையடுத்து, அவை, குடும்பங்கள் மீது உறுதியாக, தொடர்ந்து, ஒருதாரமணக் குடும்பத்தை நோக்கிச் செல்வதற்கான தாக்கத்தை அதிகரித்துக் கொண்டிருந்தன. மனிதகுல நாகரிகத்தில், சொத்துகளின் தாக்கத்தை அளவுக்கதிகமாக மதிப்பிடுவது இயலாத காரியம். ஆரியன் மற்றும் செமிட்டிக் தேசங்களை, காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, நாகரிகத்துக்குள் கொண்டு சென்ற சக்தி அதுவேயாகும். மனித மனதில் சொத்து என்ற எண்ணம் மிக மெல்லியதாகத்தான் வளர்ச்சிபெறத் தொடங்கியது.

இறுதியில், அது மனிதகுலத்தின் தலையாய விருப்பமாகிவிட்டது. சொத்துகளை உருவாக்குவது, பாதுகாப்பது, அனுபவிப்பது என்பதை முதன்மையாகக் கொண்டே அரசுகள் அமைக்கப்படுகின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சொத்துகள் உருவாகும்போது மனித அடிமைத்தனம் உருவானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரமான மனிதன், சொத்துகளை உருவாக்குவதற்கு மேலும் நன்கு பொருத்தமான இயந்திரமாவான் என்று கண்டறியப்பட்டதால், அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. மனித மனத்தில் குரூரம் என்பது இன்னும் உள்ளது. நாகரிகமும், கிறித்தவமும் இதை முற்றிலுமாக ஒழிக்காமல், மென்மைப்படுத்த மட்டுமே செய்தன. இதனால் மனிதக் குலத்தின் தொடக்கம், விலங்குத்தன காலகட்டத்திலிருந்து இருந்தது; பல நூற்றாண்டுக் காலம் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மனித அடிமைத்தனம் இருந்தது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. சொத்துகளின் சொந்தக்காரரின் குழந்தைகளுக்கே வாரிசுரிமை உண்டு என்று ஏற்படுத்தப்பட்டதால் ஒருதாரமணக் குடும்பம் ஏற்படுவதற்கான முதல் வாய்ப்பு கிடைத்தது. மெல்ல மெல்ல இருந்தாலும், படிப்படியாக, இத்தகைய திருமணம், தனித்து வாழும் தன்மையுடன், விதிவிலக்காக அல்லாமல், விதியாகவே மாறியது. ஆனால், நாகரிகம் தொடங்கும்முன் வரையிலும், இந்த வகைக் குடும்பம் நிரந்தரமானதாக நிலைபெறவில்லை." (பக்கம் -790-791)

6)

"XV ஒருதாரமணக் குடும்பும் 

இறுதியாக ஏற்படுத்தப்பட்ட இந்தக் குடும்பம், குழந்தைகளின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. தனிப்பட்ட சொத்துகள் மற்றும் இதர சொத்துகளைத் தனிநபரின் உடைமைகளாக அல்லாமல் ஒரு நபருக்கும் மேற்பட்டவர்களுக்கான கூட்டு உடைமைகளாயின. நெருங்கிய சொந்தங்களுக்கே சொத்துக்கான வாரிசுரிமை என்பதை மாற்றி ஒருவரின் குழந்தைகளுக்கே சொத்துக்கான வாரிசுரிமை உண்டு என்றாக்கப்பட்டது." (பக்கம் -791)

7)

"புராதனக் காலங்களில் சொத்து எவ்வாறு தோன்றி வளர்ந்தது; சொத்துகளின் உடைமை யாருக்குரியது என்பது குறித்தும், சொத்துக்கான வாரிசுரிமை குறித்த விதிகள்; பண்டைய சமுதாயத்தின் மீது சொத்து ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை குறித்தும், பார்க்க வேண்டியுள்ளது.

சொத்து என்பது பற்றி முதன்முதலாகத் தோன்றிய எண்ணம் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பது என்ற மிக அவசியமான, முதன்மையான தேவையுடன் தொடர்புடையதாக இருந்தது. அடுத்தடுத்து வந்த புராதனக் காலங்களில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிமுறைகளைப் பொறுத்து, வாழ்க்கைக் கலைகள் பெருகின. இதனால் உடைமைகளும் பெருகின. புதிய கண்டுபிடிப்புகள், கண்டறிதல்கள் ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கேற்பச் சொத்துகளின் வளர்ச்சியும் இருந்தது. ஒவ்வொரு புராதனக் காலமும், அதற்கு முந்தைய காலத்தைவிட நன்கு முன்னேறியதாக இருந்தது. கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, சொத்துகளும், வகைகளிலும் எண்ணிக்கையிலும் அதிகரித்தன. 

சொத்துகளின் வகைகள் அதிகரித்ததன் காரணமாக, சொத்துகளை உடைமைகளாகக் கொள்வதற்கும், சொத்துகளுக்கான வாரிசுரிமை குறித்தும் குறிப்பிட்ட சில சட்டங்கள் தோன்றின. உடைமை மற்றும் வாரிசுரிமை குறித்த விதிமுறைகள் எந்த வழக்கங்களின்படி ஏற்படுத்தப்படுகின்றன என்பது சமூக அமைப்பின் நிலையையும், முன்னேற்றத்தையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது; திருத்தியமைக்கப்படுகிறது. இவ்வாறு, சொத்துகளின் வளர்ச்சி என்பது, புதிய கண்டுபிடிப்புகள், கண்டறிதல்கள் ஆகியவற்றின் வளர்ச்சியுடனும்; பல்வேறு புராதனக் காலங்களில், மனிதக் குல முன்னேற்றத்தை ஏற்படுத்திய சமூக அமைப்புகளின் மேம்பாட்டுடனும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது." (825-826)

8)

"விலங்குத்தன காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிடம் இருந்த சொத்துகள் கணிசமானவை அல்ல. அவற்றின் மதிப்பு, சொத்தின் மேல் அவர்களுக்கிருந்த ஆசை, அவர்கள் வைத்திருந்த சொத்துகளுக்கான வாரிசுரிமை ஆகியவற்றையெல்லாம் குறித்த அவர்களது எண்ணங்கள் வலுவானதாக இருக்கவில்லை. முரட்டுத்தனமான கருவிகள், ஆடைகள், பாத்திரங்கள், துணிமணிகள், சிக்கிமுக்கிக் கற்களால், எலும்புகளால் ஆன கருவிகள், இதர தனி மனித அணிகலன்கள் போன்றவையே அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் முக்கியச் சொத்துகளாக இருந்தன. அவற்றைத் தங்களின் உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, அவர்களின் மனங்களில் தோன்ற ஆரம்பித்திருக்கவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு எண்ணமே இருக்கவில்லை. 

நாகரிகக் காலத்தில் முழு வீச்சுடன் வலுப்பெற்ற சொத்துகளுக்கான பேராசை (studium lucri) என்பது, இப்போது மனித மனத்தில் கோலோச்சும் சக்தியாக உள்ளது. நிலம் என்பது உடைமையின் கீழ் வராத காலத்தில், பழங்குடியினர் அனைவருமே நிலத்தைப் பொதுவாகப் பயன்படுத்தி வந்தனர் குடியிருப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் அனைவருக்குமே அவை சொந்தமாக இருந்தன. புதிய கண்டுபிடிப்புகள் மிக மெதுவாக நிகழ்ந்தன என்பதால் தனிப்பட்ட பொருட்கள் அதிகமாக இருந்தன. எனவே தனிப்பட்ட மனிதனின் முற்றிலும் தனிப்பட்டவையான பொருட்களின் மீதான பற்று, வெகு வேகமாக அதிகரித்து வந்தது." (828)

9)

"சோளமும், மற்ற பயிர்களும் விளைவிக்கப்படத் தொடங்கப்பட்டதையடுத்து, மக்களுக்கு, புளிப்பூட்டப்படாது/ பொங்க வைக்கப்படாத ரொட்டி கிடைத்தது. அவரையும், வேகவைத்த மக்காச்சோளமும் (Indian succotash மற்றும் hominy) மக்களுக்குக் கிடைத்தன. இதனால் புதியதொரு சொத்து வகை உருவாகியது. அதாவது பயிரிடப்பட்ட நிலங்கள் அல்லது தோட்டங்கள். பழங்குடியினர் அனைவருக்கும் பொதுவானதாகத்தான் நிலங்கள் இருந்தன. ஆனால் பயிரிடப்பட்ட நிலங்களின் உடைமை ஒரு தனி நபருக்கு அல்லது ஒரு குழுவுக்குச் சொந்தமானது என்பது அங்கீகரிக்கப்பட்டது. இதனால், சொத்துகளுக்கான வாரிசுரிமை கொண்டுவரப்பட்டது." (831-832)

10)

"III. காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் இடைநிலையில் சொத்துகள்:

இந்தப் புராதனக் காலத்தில் மனிதர்கள் இருந்த நிலை, மற்ற எல்லாக் காலங்களிலும் இருந்த நிலைகளைக் காட்டிலும் முற்றிலுமாகத் தொலைந்துவிட்டது. வட மற்றும் தென்னமெரிக்காவில் ஊர்க்குடி செவ்விந்தியர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர்கள் அந்தக் காலத்தில், காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் வியத்தகு நிலையில் இருந்தனர். அவர்களின் அரசு அமைப்புகள், மதரீதியான கோட்பாடுகள், இல்லற வாழ்க்கை பற்றிய திட்டம், கலைகள், சொத்துகளின் உடைமை மற்றும் சொத்துகளுக்கான வாரிசுரிமை தொடர்பான விதிமுறைகள் ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாகப் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு நழுவ விடப்பட்டது." (834-835)

11)

"இப்போது சமுதாயம் மிக நன்றாக, அமைக்கப்பட்டிருந்தது. அதன் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானவையாக மாறிக்கொண்டிருந்தன. சமமற்ற செல்வ வளங்கள் காரணமாக இரண்டு அரைக்கோளங்களிலும் இப்போது வேறுபாடுகள் நிலவின. ஆனால் மேல்நோக்கிய தொடர்ந்த முன்னேற்றத்திற்கான முக்கிய ஆதாரம் இரும்பு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த அறிவேயாகும். இந்தக் கட்டத்தைக் கடந்து, அடுத்த கட்டத்துக்குள் மேல் நிலைக்குச் செல்வதற்கு, ஒரு விளிம்பை, ஒரு முனையைப் பிடித்துக் கொள்ளும் உலோகக் கருவிகள் தவிர்க்க முடியாததாயின. இந்தத் தேவைகளுக்கெல்லாம் பதிலளிப்பதாக இரும்பு மட்டுமே அமைந்தது. இந்தத் தடை காரணமாக, நன்கு முன்னேறிய பழங்குடியினர் பலர், இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்போது தனிப்பட்ட சொத்துகள் அதிகரித்தன என்பதையும், நிலங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டன என்பதையும் மேற்கூறியவற்றிலிருந்து அறிகிறோம். அவர்கள் வசித்த பகுதிகள், இன்னும் பழங்குடியினர் அனைவருக்கும் பொதுவானதாகத்தான் இருந்தன. ஆனால் ஒரு பகுதி நிலம், அரசுக்கு ஆதரவாக, அரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு பகுதி நிலம், மதரீதியிலான பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டது. இன்னொரு பகுதி -- எதிலிருந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான தேவைகளைப் பெற்றுக் கொண்டிருந்தனரோ, அந்தப் பகுதி மிக முக்கியமான பகுதி -- பல ஜென்டிஸ்களுக்கிடையே அல்லது ஒரே குடியிருப்பில் இருந்த, ஒரே சமூக மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது. சொந்தமாக ஒரே ஒரு தனி நபரிடம் நிலமோ, வீடுகளோ இருந்து, அதை அவர் விருப்பப்படி விற்கவோ, யாருக்காவது கொடுத்து விடுவது என்பதோ இருக்கவில்லை. இருந்திருப்பதற்கான சாத்தியமும் இல்லை." (838)

12)

"ஒரு தந்தை இறந்தால், அவரது சொத்துகள், அவரது குழந்தைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும்; சிலசமயங்களில், மூத்த மகனிடம் தரப்படும் என்று, பல ஸ்பானிஷ் எழுத்தாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது போன்ற கூற்றுகள், அவர்களின் அமைப்பை வேண்டுமானால் வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இவை மதிப்பற்றவை.

சொத்துகளை ஆண் வழியிலான நெருங்கிய உறவினர்களிடையே பிரித்து வழங்கும் இரண்டாவது பெரிய விதிமுறைதான் ஊர்க்குடி செவ்விந்தியர்களிடையே நிலவியது என்று நாம் எதிர்பார்க்கலாம். வம்சாவளி ஆண் வழியினதாக இருந்தது. இறந்த ஒரு நபரின் குழந்தைகள் ஆண் வழியிலான நெருங்கிய உறவுகளின் தலைமையிடத்தில் நின்றனர். எனவே, இயல்பாகவே, சொத்துகளின் பெரும்பான்மையான பகுதி, அவர்களையே சென்றடைந்தது. சொத்துகளின் வாரிசுரிமை குறித்த மூன்றாவது பெரிய விதிமுறையான, இறந்தவரின் சொத்துகள், குழந்தைகளை மட்டுமே சேரும் என்பது, இவர்களிடையே இருந்திருக்க வாய்ப்பில்லை. 

சொத்துகள் குறித்து முந்தைய காலத்திலும், பிந்தைய காலத்திலும் எழுதிய எழுத்தாளர்களின் விவாதங்கள், துல்லியமான தகவல்கள் இல்லாததால் திருப்தியளிப்பதாக இல்லை. அமைப்புகள், பயன்பாடுகள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவையே சொத்துகளின் வாரிசுரிமை குறித்து ஆளுமை செலுத்துவதாக இருந்தது. அது மட்டுமே, அம்முறை குறித்து விளக்கக் கூடியதாக இருந்தது. இப்போதுள்ள ஆதாரங்களை விடக் கூடுதலான ஆதாரங்கள் இருந்தாலொழிய, குழந்தைகளுக்கு மட்டுமே சொத்துகளுக்கான வாரிசுரிமை இருந்தது என்பதை உறுதி செய்ய முடியாது." (841-842)

13)

"IV காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் மேல்நிலையில் சொத்துகள்

இந்தக் காலகட்டத்தின் இறுதியில், தனிப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான பலவகையான நிலங்களும், விவசாயம், உற்பத்தி, உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் பொதுவான நிலங்களாக மாறத் தொடங்கின. ஆனால் பொதுவாக இருந்த நிலங்கள், தனி நபர்களுக்கான நிலங்களாக ஒருசில பகுதிகளைத் தவிர மாறவில்லை. அமைப்புரீதியான அடிமைத்தனம் இந்த நிலையில்தான் தோன்றியது. இதற்கும், சொத்துகள் உருவாவதற்கும் நேரடி தொடர்பு இருந்தது. இதிலிருந்து தோன்றியதுதான் ஹீப்ரூ வகையான ஆணாதிக்கக் குடும்பம். இதே போன்றதே லத்தீன் பழங்குடியின் தந்தை அதிகாரம் கொண்ட குடும்பம். 

கிரேக்கப் பழங்குடியினரின் குடும்பத்தின் திருத்தியமைக்கப்பட்ட குடும்ப வடிவமும் இத்தகையதே. இந்தக் காரணங்களாலும், குறிப்பாக, வயல்வெளி விவசாயத்தின் மூலம் கிடைத்த அபரிமிதமான வாழ்வாதாரத்தின் காரணமாகவும், தேசங்கள் தோன்ற ஆரம்பித்தன. முன்பு சில ஆயிரங்களாக இருந்த மக்களின் எண்ணிக்கை, அதே அரசின் கீழ்ப் பல ஆயிரங்களாக அதிகரித்தன. குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட, கோட்டைகளால் சூழப்பட்ட நகரங்களில், மக்கள் வசிக்க ஆரம்பித்தனர். மக்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்ததால், மிகவும் நன்றாக உள்ள, விருப்பமான பகுதிகளை உடைமையாக்கிக் கொள்வதற்கான போராட்டம் அதிகரித்தது. இது போர்க்கலைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. தனிநபர்களின் வீரதீரச் சாகசங்களுக்கான பரிசுகளும் அதிகரித்தன. இந்த மாற்றங்களும், வாழ்க்கைக்கான திட்டங்களும், நாகரிகம் விரைந்து வந்து, ஜென்டைல் அமைப்பைத் தூக்கியெறிந்து அரசியல் சமுதாயத்தை ஏற்படுத்தப் போவதையே காண்பித்தன." (845)

14)

"முன்னேற்றத்தின் இந்த நிலையிலான காலகட்டத்தில் சொத்துகள் என்ற எண்ணத்தின் வளர்ச்சி எவ்வாறிருந்தது என்பதை, சொத்துகளுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம்; சொத்துகளின் உடைமை, சொத்துகளுக்கான வாரிசுரிமை தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை வைத்து நாம் கண்டறிய வேண்டும்.

... ...

காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் பிற்பகுதியின் இறுதியில், நிலங்களைப் பொறுத்தவரை பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இரண்டு வகையான உடைமைகள் உருவாகி வந்தன. ஒன்று அரசுக்குச் சொந்தமானவை; மற்றொன்று தனிநபர்களுக்குச் சொந்தமானவை. ஆனால், நாகரிகக் காலம் வருவதற்கு முன் வரை இது முழுமையானதாக இருக்கவில்லை. கிரேக்கர்களிடையே இருந்த நிலங்களில் சில, பழங்குடியினங்களுக்குப் பொதுவானவையாக இருந்தன. 

மதரீதியான பயன்பாடுகளுக்காகச் சில நிலங்கள் ஃப்ராட்ரி வசமிருந்தன; சில நிலங்கள் ஜென்ஸ் அமைப்புக்குப் பொதுவானதாக இருந்தன; ஆனால், பெரும்பாலான நிலங்கள் தனிமனிதர்களுக்கு, கூட்டாக, சொந்தமானதாக இருந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். சோலோன் காலத்தில், ஏதேனியன் சமுதாயம் ஜென்டைல் சமுதாயமாகவே இருந்தது; நிலங்கள் தனிமனிதர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன; மக்கள் அவற்றை அடமானம் வைக்கவும் கற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தனிப்பட்ட நபர்களுக்கு நிலங்கள் சொந்தம் என்பது அவர்களுக்குப் புதிதல்ல. ரோமானியப் பழங்குடியினங்களிடையே, அவர்கள் முதலாவதாக ஓர் அமைப்பாக நிறுவப்பட்ட காலத்திலிருந்தே அவர்களுக்கு (ஏஜர் ரொமானஸ் Ager Romanus) எனும் பொதுவெளி இருந்தது. மதரீதியான பயன்பாடுகளுக்காக, க்யூரியாவிடம் நிலங்கள் இருந்தன. சில, ஜென்ஸ் அமைப்பிடமும், சில தனிநபர்களிடம் கூட்டாகவும் இருந்தன. 

இந்தச் சமூக நிறுவனங்கள் மறைந்த பிறகு, கூட்டாகவும், பொதுவானவையாகவும் இருந்த சொத்துகள், படிப்படியாக, தனியார் சொத்துகளாக மாறின. சில நிலங்கள், சில சிறப்புப் பயன்பாடுகளுக்காக, இந்த அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டன என்பதைத் தவிர வேறு விவரங்கள் இல்லை. தேசியப் பகுதிகளின் இடங்களை, தனிநபர்கள் படிப்படியாக, தங்களுடையதாக்கிக் கொண்டிருந்தனர்." (845-847)

15)

"முதன்முதலாக, காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் மேல்நிலையில்தான், ஒருதாரமணக் குடும்பம் தோன்றியது. சொத்துகள் அதிகரித்ததாலும், சொத்துகளுக்கான வாரிசுரிமை பற்றிய வழக்கங்கள் மாறிக் கொண்டிருந்ததாலும், முந்தைய சின்டியாஸ்மியன் குடும்பத்திலிருந்து இது வளர்ச்சியடைந்தது. வம்சாவளி ஆண் வழியிலானதாக மாறியது. ஆனால் எல்லாச் சொத்துகளுமே -- தனிநபர் வசமிருந்த சொத்துகளானாலும், பொதுச் சொத்துகளானாலும், அவை, காலங்காலமாக, ஜென்ஸ் அமைப்புகளின் பாரம்பரியச் சொத்துகளாக இருந்தன. 

இந்தக் காலக்கட்டத்தில், கிரேக்கப் பழங்குடியினரிடையே இத்தகைய சொத்துகள் குறித்த முக்கியத் தகவல்களை ஹோமரிக் (Homeric) காவியங்கள் மூலமும் தெரிந்து கொள்கிறோம். பண்டைய வழக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான, நாகரிகத்தின் முற்பகுதிகளில் இருந்த சட்டங்கள் மூலமும் தெரிந்துகொள்கிறோம். பயிரிடப்பட்ட வயல்களைச் சுற்றி, அமைக்கப்பட்ட வேலிகள் குறித்து இலியாதில் (Iliad)2 குறிப்பிடப்பட்டுள்ளது. ஐம்பது ஏக்கர் நிலத்தில் பாதியளவு நிலம் திராட்சைக் கொடிகள் பயிரிடத் தகுந்ததாகவும், மீத நிலம் உழுவதற்கான நிலமாகவும் இருந்தது. டைடியஸ் (Jydeus) வளங்கள் நிறைந்த மாளிகையில் வாழ்ந்தார் என்றும், சோளம் விளையும் நிலங்கள் மிக அதிக அளவில் அவரிடம் இருந்தன,' என்றும் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் நிலங்கள் அளவிடப்பட்டு, வேலிபோடப்பட்டிருந்தன; தனிநபருக்குச் சொந்தமானவையாக இருந்தன என்பது குறித்து ஐயமுற, எந்தக் காரணமும் இல்லை. சொத்துகள் குறித்த அறிவும், அதன் பயன்பாடுகளும் அதிக முன்னேற்றம் அடைந்திருந்தன என்பதையே இது காட்டுகிறது. 

குறிப்பிட்ட சில ஆற்றல்களுக்காக, குதிரைகள் தனித்து இனம் பிரிக்கப்பட்டிருந்தன. தனிநபர்களிடம் இருந்த ஆட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. "செல்வந்தன் ஒருவனின் எண்ணிலடங்கா ஆடுகள் பட்டியில் நின்று கொண்டிருந்தன”. நாணயத்தாலான பணம் பற்றி தெரியாமல் இருந்தது. எனவே, வர்த்தகம் பண்டமாற்று பரிவர்த்தனையாகவே இருந்தது என்பதைப் பின்வரும் வரிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். “நீண்டமுடி கொண்ட கிரேக்கர்கள், மது வாங்கினார்கள்; அதற்குப் பதிலாக, சிலர் பித்தளை; சிலர் பளபளக்கும் இரும்பு; சிலர் தோல் போன்றவற்றைக் கொடுத்தனர். சிலர் காளைகளையும், சிலர் அடிமைகளையும் கொடுத்தனர்”. தங்கக்கட்டிகள், எடையாலும், திறனாலும் மதிப்பீடு செய்யப்பட்டுப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்கள்; லினென் (Linen) மற்றும் கம்பளித் துணிகளால் செய்யப்பட்ட, பல வடிவங்களாலான ஆடைகள்; வீடுகள், அரண்மனைகள் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த எடுத்துக்காட்டுகளை மேலும் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. சமுதாய முன்னேற்றம், காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் மேல்நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் இருந்ததைக் காட்டிலும், மிக அதிக அளவில் இருந்தது என்பதற்கு இங்கே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளே போதுமானவை." (847-848)

16)

"தந்தை மற்றும் அவரது குழந்தைகளின் உழைப்பு, நிலத்துடன் தொடர்புடையதாகவே இருந்தது; விலங்குகள் தொடர்ந்து எண்ணிக்கையில் பெருகின; வர்த்தகம் தோன்றியது; இவையனைத்தும் குடும்பத்தைத் தனித்தனிக் குடும்பங்களாக்கின. குடும்பம் - ஒருதாரமணக் குடும்பமாகியது. சொத்தை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவியவர்களான குழந்தைகளுக்கு, சொத்துகளுக்கான வாரிசுரிமையைக் கோர, உயர் முன்னுரிமை அளிக்கலாம் என்ற கருத்து உருவாகியது. நிலங்கள் பயிரிடப்படுவதற்கு முன்னால், ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும், உறவுமுறை அடிப்படையில் தனி நபர்கள் பலர் ஒன்றாக இணைந்திருந்த குழுவில் இருந்தவர்கள் அனைவருக்கும் சொந்தமானதாக இருந்தது. இதுபோன்ற நிலைமைகளில் ஆண் வழியிலான நெருங்கிய உறவுகளுக்கே சொத்துகளுக்கான வாரிசுரிமை என்பது உறுதிப்பட்டிருக்கும். ஆனால் நிலங்கள் என்பது சொத்துகள் என்றாகிவிட்டபோது, அவை தனிநபர்களுக்கு ஒதுக்கப்பட்டு, தனியுடைமைகளாயின. இதுவே சொத்துகளுக்கான வாரிசுரிமையின் மூன்றாவது பெரிய விதிமுறைக்கு வழிவகுத்தது. இதன்மூலம், இறந்தவரின் சொத்துகள், அவரது குழந்தைகளுக்குக் கிடைத்தன. 

ஆண் வழியிலான நெருங்கிய உறவுகளுக்கே சொத்துரிமை என்பது புறந்தள்ளப்பட்டு, குழந்தைகளுக்கே முதலில், சொத்துகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. லத்தீன், கிரேக்க அல்லது ஹீப்ரூ பழங்குடியினரிடையே ஆண் வழியிலான நெருங்கிய உறவு முறை வாரிசுரிமை இருந்ததற்கான நேரடி ஆதாரம் எதுவுமில்லை - ஆனால் அதற்கு முன்பிருந்த நிலைகளுக்கான ஆதாரங்களை முந்தைய பழக்கவழக்கங்கள் மூலம் இப்போதைய தலைகீழ் மாற்றத்தை வைத்து, ரோமானிய, கிரேக்க, ஹீப்ரூ பழங்குடியினங்களில் இக்கருத்து நிறுவப்பட்டுள்ளது போல் -- ஆண் வழியிலான நெருங்கிய உறவு முறை சொத்துரிமை மட்டுமே முற்காலத்தில் இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நிலங்கள் பயிரிடப்பட்டதால், பூமியின் நிலப்பரப்பு முழுவதுமே தனிப்பட்ட நபர்கள் கூட்டாக, சொந்தமாக உடைமையாக்கிக் கொள்ள முடியும் என்பது உணரப்பட்டது; குடும்பத்தின் தலைவரே. சொத்துகளின் இயல்பான மையமானார் என்று கண்டுணரப்பட்டது. இதையடுத்து மனிதகுலம், சொத்து என்பதைத் தன்னுடைய வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்வது ஆரம்பமாயிற்று.

காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்துப் பிற்பகுதியின் இறுதிக்குள்ளாகவே இது முழுமையாக நடந்து விட்டது. சற்று யோசித்துப் பார்த்தால், சொத்து என்பது மனித மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதை எல்லாருமே புரிந்து கொள்ள முடியும். அது என்னென்ன புதிய தன்மைகளை உருவாக்கவல்லது என்றும் புரிந்து கொள்ளலாம். விலங்குத்தன காலகட்டத்தில் ஒரு சிறு உந்து சக்தியாக இருந்த எண்ணம், வீரயுக காலகட்டத்தின் காட்டுமிராண்டித்தனக் காலகட்ட மனிதனிடம், மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்திய ஒரு எண்ணமாக மாறிவிட்டது என்பதைப் பல ஆதாரங்கள் காண்பிக்கின்றன. 

தொன்மையான வழக்கங்களோ, அதற்குப் பிந்தைய வழக்கங்களோ, இத்தகைய முன்னேறிய நிலையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒருதாரமணக் குடும்பத்தின் காரணமாக, குழந்தைகளின் தந்தை யார் என்பது உறுதிபடத் தெரிந்தது. எனவே தந்தையின் இறப்புக்குப் பின், அவரது சொத்துகள் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் காலம் வந்துவிட்டது". (849-850)

17)

"சொத்துகள் என்ற எண்ணம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்தது என்பதற்கு, சோலோன் ஏற்படுத்திய, சொத்துகளைச் சாசனம் மூலம் மாற்றும் உரிமையின் தோற்றமே சான்றாகிறது. இந்த உரிமை ஏற்றுக் கொள்ளப்படுவது நிச்சயம். ஆனால் அதன் வளர்ச்சிக்கு, காலமும், அனுபவமும் தேவைப்பட்டது. இது தொடர்பான சட்டங்களுக்காகச் சோலோன் புகழ் பெற்றதாகப் ப்ளூடார்க் கூறுகிறார். அதற்கு முன், அவை அனுமதிக்கப்படவில்லை. சொத்துகளும், இல்லங்களும் இறந்தவரின் ஜென்ஸ் அமைப்பிலேயே இருக்க வேண்டும். ஒரு தனிநபர், குழந்தைகள் இல்லாவிட்டால், தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் தன் சொத்துகளைக் கொடுக்கலாம் என்று சோலோன் அனுமதியளித்தபோது, அவர், உறவுகளை விட நட்பையே கெளரவித்தார். 

சொத்து என்பது உரிமையுள்ள உடைமையாக மாறுவதற்கு ஆவன செய்தார். ஒரு தனி நபர் உயிரோடிருக்கும் வரை, அவரது சொத்துகள் அவருக்கே முழுமையாகச் சொந்தமானது என்பது அங்கீகரிக்கப்பட்டது. இப்போது அதற்கு மேலும் வலுவூட்டுவது போல், குழந்தைகள் இல்லாவிட்டால், அவர் யாருக்கு வேண்டுமானாலும், அதை உயில் மூலம் வழங்கலாம் என்பது உருவாகியது. ஆனால் சொத்துகளின் மீது ஜென்டைல்களுக்கு இருந்த உரிமை பிரதானமாக இருந்தது. குழந்தைகள் இருந்தால் அவர்கள், அவரது ஜென்ஸ் அமைப்பின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். குழந்தைகள் இல்லாவிட்டால்தான், ஒருவர் தன் விருப்பப்படி வேறு யாருக்காவது எழுதிக் கொடுக்கலாம். 

தற்போது சமுதாயத்தை நெறிப்படுத்துகின்ற பெரும் கோட்பாடுகள் அனைத்தும் படிப்படியாக, தொடர்ச்சியாக, பண்டைய காலங்களில் இருந்து வரிசைக்கிரமமாகத் தொடர்ந்து, மேல்நோக்கி முன்னேறி வந்தவையே. இதற்கான ஆதாரங்களை நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் காணமுடிகிறது. பல எடுத்துக்காட்டுகள் நாகரிகக் காலகட்டத்திலிருந்துதான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பழைய தாக்கங்கள் எதுவுமே இல்லாமல் சோலோனின் சட்டங்கள் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டவை என்று கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சொத்துகள் தொடர்பாக, அனுபவம் மூலமாக வளர்ச்சியடைந்த கருத்துகள், முழுமையாகச் சட்டங்களாக மாற்றப்பட்டன என்று கூறலாம். சம்பிரதாய முறைப்படியான விதிமுறைகள், இப்போது சாதகமான சட்டங்களாக மாற்றப்பட்டன." (856-857)

18)

"நாகரிகக் காலம் தொடங்கியதையடுத்து, சொத்துகள் அபரிமிதமாக வளர்ந்துவிட்டன. அவற்றின் வடிவங்கள் பலவாகி விட்டன. அதன் பயன்பாடுகளும் விரிவடைந்துள்ளன. சொத்துகளின் சொந்தக்காரர்கள் அவற்றை நிர்வகிப்பதில் மிகுந்த அறிவாளிகளாக இருந்தனர். மக்களைப் பொறுத்தவரை, அது நிர்வகிக்க முடியாத ஒரு சக்தியாக மாறியது. மனிதமூளை, தானே உருவாக்கிய ஒன்றின் முன், திகைத்து நிற்கிறது. இருந்த போதும், ஒரு காலம் வரும். அப்போது மனித அறிவாற்றல் உயர்ந்தெழுந்து, சொத்து என்பதற்கு மேலானதாக, அதைக் கட்டுக்குள் வைக்கும் வல்லமை பெற்றதாக உருவெடுக்கும். மேலும் இது, சொத்துக்கும் அதைப் பாதுகாக்கின்ற அரசுக்கும் உள்ள உறவையும், சொத்துடைமையாளர்களின் கடமைகளையும், உரிமைகளையும் வரையறுக்கும். 

தனி நபர்களின் நலனை விடச் சமுதாய நலன் முக்கியத்துவம் பெறும். தனிமனித நலனும், சமுதாய நலனும் ஒன்றுக்கொன்று நேர்மையான, இணக்கமான உறவுகள் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இருந்தது போல், முன்னேற்றம் என்பதுதான் வருங்காலத்தின் சட்டம் என்று சொன்னால், சொத்துகளைச் சேர்ப்பதற்கான வாழ்க்கை முறை, மனிதகுலத்தின் இறுதிக் கட்டமல்ல. நாகரிகம் தொடங்கிய பிறகு இப்போது வரையிலான காலகட்டம் மனித வாழ்வின் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், ஒரு சிறு பகுதியேயாகும். இன்னும் வரவிருக்கும் பல காலங்களின் ஒரு சிறு பகுதி. சொத்துகள் என்பது மட்டுமே இறுதியாகவும், குறிக்கோளாகவும் உள்ள வாழ்க்கை முதை முடிவுறும், ஏனென்றால், இதுபோன்ற வாழ்க்கை முறையில், சுய அழிவிற்கான தன்மைகள் உள்ளன. 

அரசில் ஜனநாயகம், சமுதாயத்தில் சகோதரத்துவம், உரிமைகளிலும், சலுகைகளிலும் சமநிலை, உலகமயமான கல்வி போன்றவற்றை நோக்கி, அதற்கான அனுபவத்தையும், அறிவையும், புத்திக்கூர்மையையும் சமுதாயம் நாடிக் கொண்டே உள்ளது. சமுதாயத்தின் அடுத்த தளம் அதுவாக இருக்கலாம். பண்டைக்கால ஜென்டிஸ்களிடையே நிலவிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை, அதை விட உயரிய அளவில் புதுப்பிப்பதாக இது அமையும்.

மனித மனதில் சொத்துகள் என்ற எண்ணம் தோன்றியது குறித்த சில கோட்பாடுகள், சில பயன்கள் ஆகியவை குறித்து தற்போது விளக்கப்பட்டன. போதுமான அளவிற்கு விவாதிக்கப்படவில்லை என்றாலும், இதன் முக்கியத்துவம் எடுத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது புத்திசாலித்தனத்தின் ஒரு கோட்பாடு, ஒரு வடிவம், ஒரு பொதுவான தோற்றம் ஆகியவற்றால், மனித அனுபவத்தின் பலன்கள், ஒரு புராதன காலகட்டத்தில், பல பகுதிகளில் இருந்தவர்களிடையேயும் ஒரே மாதிரியாகத் தான் இருந்தது." (859-860)

தொகுப்பு- அ.கா.ஈஸ்வரன்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு