பௌத்த தத்துவ இயல்

Subbaraj V

பௌத்த தத்துவ இயல்

புத்தரின் தத்துவத் தரிசனம் பயங்கரமான ஷணிக வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது அவர் எந்தப் பொருளையுமே ஒரு வினாடிக்குப் பிறகு அப்படியே இருக்குமென்று கருதுவதில்லை. 

ஆனால் இக்கருத்தை அவர் சமுதாயத்தின் பொருளாதார அமைப்புக்கு அமல்படுத்த விரும்பவில்லை, சொத்துடமையாளர்களான அரசர்களுடனும், சுரண்டும் வர்க்கங்களுடனும் தகராறுக்குப் போகாமல், அமைதியைப் பராமரித்ததால் அவரைப் போன்ற திறமையான தத்துவ மேதைக்குச் சமுதாயத்தின் மேல்தட்டில் மதிப்பும், மரியாதையும் இருந்தது இயற்கையேயாகும்.

புரோகிதர்களில் ‘கூட்டதந்த', 'சோணதண்ட' போன்ற அறிவாளி பிராமணர்கள் அவரது சீடர்களாகிக் கொண்டிருந்தனர். அரச பரம்பரையினர் அவரை இருகரம் நீட்டி வரவேற்க ஆவலாக இருந்தனர். அக்காலத்திய பணக்கார வியாபார வர்க்கம், இந்தக் காலத்திய மார்வாடி சேட்டுகள் காந்திஜிக்கு தாராளமாகப் பண முடிப்புக்கள் தருவதைப் போல் புத்தரை வரவேற்று வாழ்த்துப்பாட தமது பணப்பைகளைத் தாராளமாக செலவு செய்தனர்.

சிராவஸ்தி நகரத்தின் பெரும் பணக்காரர் 'சுதத்தர்' பெரும் பணம் செலவு செய்து 'ஜேத் வனம்' என்ற ஒரு பெரிய தோட்டத்தை விலைக்கு வாங்கி, அதைப் புத்தருக்கும், அவரது சீடர்களுக்கும் தங்குவதற்காகக் கொடுத்துவிட்டார். அதே நகரத்தைச் சேர்ந்த மற்றொரு பணக்காரியான விசாகை என்பவள் மிகப் பெரும் தொகை செலவு செய்து இன்னொரு பௌத்த விகாரத்தைப் (மடத்தை) ‘பூர்வா ராம்' என்னும் பெயரில் அமைத்தாள். 

தென் இந்தியாவுடனும், தென் மேற்கு இந்தியாவுடனும் வியாபாரம் செய்துகொண்டிருந்த கௌசாம்பி நகரைச் சேர்ந்த பெரிய வியாபாரிகள் மூவர், பௌத்த மடங்களைக் கட்டுவிப்பதில் போட்டி போட்டுக்கொண் டிருந்தனர். உண்மையில் பவுத்த மதத்தைப் பரவச் செய்வதில் அரசர்களைவிட வியாபாரிகளே அதிக உதவி புரிந்தனர். 

அக்காலத்திய பொருளாதார அமைப்புக்கு எதிராகப் புத்தர் குரல் எழுப்பி இருந்தால், அவருக்கு இந்த வசதி கிடைத் திருக்குமா?

- Subbaraj V (முகநூலில்)

https://www.facebook.com/photo/?fbid=1827642211097518&set=a.192265284635227

Disclaimer: இந்தப் பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு