நிகாலோய் லெனின்: அவரது வாழ்வும் பணியும்

குருசாமி மயில் வாகனன்

நிகாலோய் லெனின்: அவரது வாழ்வும் பணியும்

"ஆயிரம் படங்கள் எடுக்கலாம், தோழர் லெனினைப் பற்றி" என எனது "லெனின்: எதிர்காலத்திற்கான வரலாறு" எனும் ஆவணப்படம் தொடங்கும்.

அதேபோல்தான் ஆயிரம் நூல்கள் எழுதலாம் தோழர் லெனினைப்பற்றி.

ஆனால் "நிகாலோய் லெனின்: அவரது வாழ்வும் பணியும்" என்ற இச்சிறு நூல் ஆயிரத்திலும் சிறப்புமிக்க நூல்களில் ஒன்றாக இருக்கும்.

லெனினுடன் பத்தாண்டுகள் உடனிருந்த தோழர் ஜீ.ஜினோவீவ் 1918, செப்டம்பர் 16இல் பெட்ரோகிராட் சோவியத் கூட்டத்தில் பேசிய உரையின் சுருக்கம்தான் இச்சிறு வெளியீடு.

முதன்முறையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது.

எப்படியிருப்பினும் மொழிபெயர்ப்பாளர் தோழர் மா. சிவகுமாருக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லியாக வேண்டும்.

வாழ்த்துக்கள் தோழர்.

லெனின்.

லெனினுடைய ஆயிரம் படங்களில் அவர் துப்பாக்கியைக் கைகளில் வைத்திருப்பதாக ஒரு புகைப்படத்தைக் கூட நாம் பார்க்க முடியாது.

ஆனால் அவரை ஆயுதந் தாங்கிப் போராடிய ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின், ரஷ்ய சோசலிசப் புரட்சியை நடத்திய தலைவர் இவர்தான் என்பதை இன்றைய கிட்ஸ் குரூப்புகள் நம்புமா?.

சேகுவாரா-வை அறிந்த அளவுகூட அவர்கள் லெனினை அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் லெனினுக்கு ஆயுத சாகசம் காட்டுவது போன்ற படங்கள் இல்லையே.

ஆனால் ஆயுதந்தாங்கிப் போஸ் கொடுத்துப் போட்டோ எடுத்துக் கொண்டவர்களின் அதிதீவிர போர் சாகசங்களை விடவும், ஒரு எளிய மனிதனாக, மனித இயல்பாக லெனின் செய்துள்ள கம்யூனிச சாகசங்களுக்கு அவை எதுவும் ஈடாகாது. அதைத்தான் ஜினோவீவ் இங்கு பேசுகிறார்.

புரட்சி முடிந்த பின்னர் லெனின் சுடப்படுகிறார். ரஷ்யா மட்டுமல்லாது உலகப் பாட்டாளி வர்க்கமே அவர் உயிர் பிழைத்து வரவேண்டும் எனப் பதைபதைத்து நிற்கிறது.

லெனின் பிழைத்துக் கொள்கிறார். குணமடைந்து வந்த நேரத்தில் அவர் அனுப்பிய முதல் தந்தி ஜினோவீவ்-ற்குத்தான்.

அதிலிருந்த வாசகங்களைத் தனது உரையில் வாசித்துக் காட்டுகிறார் தோழர் ஜினோவிவ்.

"போர் முனையில் நிலைமைகள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கின்றன. அவைகள் இன்னும் நல்லபடியாகப் போகும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை".

கூடியிருந்த காம்ரேடுகளின் கைதட்டலுக்குக் கேட்கவா வேண்டும்.

வளர்ந்து வந்துகொண்டிருந்த லெனினது சிந்தனைக்குள் ஊடாடிய பலருடைய பெயர்கள் ஆச்சர்யமிக்கதாக உள்ளன.

ரஷ்யாவிற்கு மார்க்சியத்தை அறிமுகம் செய்த பிளக்கானோவின் மாணவனாகத் தன்னைக் கருதிக்கொண்டு அவர் இறங்கிய கருத்துப் போர்க்களங்களும்  

பின்னாளில் அதே பிளக்கானோவ் 

குட்டி முதலாளித்துவத்திற்குள் சிக்கிய போது பெருந்தன்மையுடன் அவரைப் போட்டுப் புரட்டிப்புரட்டி எடுத்ததையெல்லாம் இந்தியப் பாட்டாளி வர்க்கம் கற்றிருக்க வேண்டிய வரலாறல்லவா?.

தீவிரப் பாப்புலிஸ்டாக இருந்து பின்னர் உறவை முறித்துக் கொண்டிருக்கிறார்.

அன்றைய பொழுதில் வேடிக்கையும் இன்றைய பொழுதிற்கு வேதனையும் தரக்கூடிய இன்னுமொரு விசயம்.

டூமா உறுப்பினர்கள், அதுதான் தேர்தல்களில் நின்று வெற்றிபெற்ற உறுப்பினர்கள் (எம்.பிக்கள்),

"பட்ஜெட், சில மசோதாக்கள், அவைகளில் முதலாளித்துவ தாராளவாதிகளான கேடட்டுகள் அறிமுகம் செய்திருக்கும் சில திருத்தங்கள் ஆகிய சட்டமியற்றும் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே அவை குறித்து உங்களுடைய ஆலோசனைகளைத் தாருங்கள் " எனப் படபடப்புடனும் பாராளுமன்றத்தில் பங்கேற்ற துடிப்புடனும் சரமாரிக் கேள்விகளைக் கொட்டுகிறார்கள். அதற்கு லெனின் வாய்விட்டுச் சிரிக்கிறார். அவர்களோ முழிக்கிறார்கள்.

அந்த எம்.பிக்களிடம் லெனின் சொல்கிறார்,

"எனதருமை நண்பா, நிதி நிலை அறிக்கையும் சட்டத் திருத்தமும் மசோதாவும் உங்களுக்கு என்ன பலனைத் தரும்?.

நீங்களோ தொழிலாளர்கள். டூமா இருப்பது ஆளும் வர்க்கங்களுக்குத்தான்.

டூமாவில் எழுந்து நின்று, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றியும் துயரங்களைப் பற்றியும் எளிய மொழியில் ரசியாவிற்குத் தெரிவிப்பது தான் நீங்கள் செய்ய வேண்டியது.

முதலாளித்துவ ஆட்சியின் பயங்கரங்களை விளக்குங்கள். 

தொழிலாளர்களைப் புரட்சி செய்யும்படி அழைப்பு விடுங்கள். 

இந்தப் பிற்போக்கு டூமாவின் உறுப்பினர்கள் அயோக்கியர்கள், சுரண்டல்காரர்கள் என்று அவர்கள் முகத்திலடித்துபோல் சொல்லுங்கள்" என்றிருக்கிறார்.

இதைப் படிக்கும்போது இந்த நூல் மறுபடியும் அச்சாகுமா என்ற பயம்தான் எனக்குள் எழுந்தது. 

லெனின் இவ்வளவு தூரத்திற்கு நாடாளுமன்ற ஜனநாயக விரோதியாக இருந்திருக்கிறாரே என்பதை எண்ணும்போது வருத்தமாகவும் இருக்கிறது.

ஆனால், இதை ஜினோவிவ் சொல்லும்போது கூட்டத்திலிருந்த காம்ரேடுகள் பலத்த கைதட்டலைக் கொடுத்திருக்கிறார்கள்.

தனது தோழர்களுடனான ஒற்றுமையைக் கூட சோசலிசத்திற்கானது என்ற அடிப்படையில்தான் கொண்டிருக்கிறார்.

கட்சியின் புதிய செயல்பாடுகளில் பழைய சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைதூக்கியபோது

நீண்ட கால,

மூத்த,

முன்னோடியான,

பழைய, 

ஆசிரியர்களான

தோழர்கள் என்பதையெல்லாம் லெனின் அளவுகோலாக வைத்துக் கொள்ளவில்லை.

"வெட்டும், பிரிக்கும் அறுவைச் சிகிச்சைக் கத்தியைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாத மனிதர்" எனப் பெயரெடுக்கும் வகையில் அவர்களைத் துண்டித்திருக்கிறார். 

ஆனால் என்ன துரதிருஷ்டம்? லெனினின் மறைவிற்குப் பிறகு ஜினோவீவைப் போலவே லெனினின் தீவிர மாணவனாக இருந்த தோழர் ஸ்டாலின் தலைவரான போது, அவரை எதிர்க்கும் முயற்சியில்  இறுதியாக அவரைக் கொலை செய்ய முயலும் அளவிற்குச் சென்ற ஜினோவீவ் கடைசியில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

அதனாலென்ன,

கூட்டிக் கழிப்பதற்கு இதொன்றும் பாவ,புண்ணியக் கணக்கல்லவே!

நூல் சிறப்பாக வந்திருக்கிறது. ஆயினும் இதெல்லாம் சாதாரண சாணித் தாளில் அச்சடித்தாவது  மலிவு விலையில் விற்பனையாக்கப்பட வேண்டிய நூல்.

நூலைப் பரப்ப வேண்டியது கட்சிகளினுடைய மற்றும் லெனினை நேசிப்பவர்களுடைய கடமை.

நடக்குமா?

நடக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்திற்கு

லெனினைவிட்டால்

வேறு நாதியேது?

- குருசாமி மயில் வாகனன்

https://www.facebook.com/share/p/YFPfeJskVqXqnPth/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு