நூல் அறிமுகம் - அரசும் புரட்சியும்

அ.கா.ஈஸ்வரன்

நூல் அறிமுகம் - அரசும் புரட்சியும்

(அண்மையில் வெளிவந்துள்ள லெனின் தேர்வு நூல்களின் 12 தொகுதிகள் பற்றிய அறிமுகம், MELS இணைய வழிப் பயிலரங்கில் தொடர் வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதில் எட்டாம் வகுப்பு இது.)

 

இந்த வகுப்பில் “அரசும் புரட்சியும்” என்கிற நூலைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம். லெனின் எழுதிய முதன்மையான நூல்களில் இதுவும் ஒன்று. நூல் தோன்றிய பின்னணியை முதலில் தெரிந்து கொள்வோம்.

 

1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி நெருங்கும் தருவாயில், நாடு கடந்து வாழ்ந்து கொண்டிருந்த லெனின், பாட்டாளி வர்க்க அரசு அதிகாரம் என்பது பற்றிய கருத்தில் அதிகம் கவனம் செலுத்தினார்.

 

அப்போது, காரல் காவுட்ஸ்கியும் அவரை போன்றோர்களும் அரசு குறித்த மார்க்சியக் கோட்பாட்டை புரட்டுவதை எதிர்க்க வேண்டிய நிலைமை லெனினுக்கு ஏற்பட்டது. நி.இ.புகாரின் அரசு பற்றியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றியும் மார்க்சிய எதிர்ப்பு கருத்துகளை கட்டுரைகளாக எழுதி வெளிட்டிருந்தார்.

 

இந்தச் சூழ்நிலையில் அரசு குறித்த மார்க்சியக் கண்ணோட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று லெனின் கருதினார். இதற்கு 1916-ஆம் ஆண்டு மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அரசு பற்றிய எழுத்துக்களைப் படித்து குறிப்பெடுத்தார். நூலகம் சென்று சிறுசிறு எழுத்துக்களில் குறிப்புகளை எழுதினார். இந்தக் குறிப்பு நீல நிற அட்டையில் எழுதப்பட்டது அதனால் இதற்கு நீலக்குறிப்பேடு என்று  பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்தக் குறிப்பேட்டின் முகப்பில் “அரசு பற்றி மார்க்சியம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த நீலக் குறிப்பேட்டின் அடிப்படையில் “அரசும் புரட்சியும்” என்கிற தலைப்பில் ஒரு தனி நூலை எழுத லெனின் திட்டமிட்டார்.

 

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சிக்கான எழுச்சி ஏற்பட்ட போது லெனின் ருஷ்யாவுக்குள் நுழைந்தார். பிப்ரவரியில் ஏற்பட்ட முதலாளித்துவப் புரட்சியைத் தொடர்ந்து அவருக்கு அரசியல் வேலைகள் அதிகமாகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் லெனின் “அரசும் புரட்சியும்” என்கிற நூலை 1917-ஆம் ஆண்டு ஆகஸ்டு-செப்டம்பர் ஆகிய மாதங்களில் எழுதி முடிக்கிறார்.

 

“அரசும் புரட்சியும்” என்கிற நூல் அரசுப் பற்றிய மார்க்சியக் கோட்பாடும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகளும் என்கிற குறிப்போடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது.

 

முன்னுரையின் தொடக்கத்தில் லெனின் “அரசு பற்றிய பிரச்சினை கோட்பாட்டிலும், நடைமுறை அரசியலிலும் குறிப்பான முக்கியத்துவம் பெறுகிறது” என்று கூறுகிறார். இதன் மூலம் அரசு பற்றிய புரிதல் வெறும் கோட்பாட்டுக்கானது மட்டுமல்ல, நடைமுறை அரசியலுக்கானது என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

 

இந்த முன்னுரையில் இந்நூல் எத்தகைய வடிவம் பெற்றுள்ளது என்பதை லெனின் தெளிவுபடுத்துகிறார்.

 

அரசு குறித்த சந்தர்ப்பவாத தவறானக் கருத்துக்களை எதிர்த்துப் போராடாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்து தொழிலாளர்களை விடுவிக்க முடியாது. அதனால் முதலாவதாக, அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் போதனை இந்த நூலில் பரிசீலிக்கப்படுகிறது. அரசு குறித்த மார்க்சியப் போதனைக்கு எதிராக, சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப்பட்டுள்ளதற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. அடுத்து காவுத்ஸ்கி போன்றோர்களின் கருத்துக்கள் மீது விவாதிக்கப்படுகிறது.

 

இதுதான் “அரசும் புரட்சியும்” என்கிற நூலின் நோக்கமும் வடிவமும் ஆகும். இந்த நோக்கத்தை அறியும் போதே, அரசு பற்றி அறிந்து கொள்வதற்கு லெனினது இந்த நூலை கண்டிப்பாக அனைத்து நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் அனைவரும் கவனத்துடன் படிக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

 

“அரசும் புரட்சியும்” என்கிற நூல் ஏழு அத்தியாயங்களைக் கொண்டதாக இருக்கிறது.

 

1) வர்க்க சமூகமும் அரசும்

 

2) 1948-51ஆம் ஆண்டுகளின் அனுபவம்

 

3) 1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்.

       மார்க்சின் பகுப்பாய்வு

 

4) கூடுதலாய் எங்கெல்ஸ் அளித்த விளக்கங்கள்

 

5) அரசு உலர்ந்து உதிர்வதற்குரிய பொருளாதார அடிப்படை

 

6) சந்தர்ப்பவாதிகள் மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தல்

 

7) 1905, 1917 ஆகிய ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சியின் அனுபவம்

 

இந்த ஏழாவது அத்தியாயத்தை லெனின் எழுதவில்லை, இருந்தாலும் அதைப் பற்றி வேறுபல நூல்களில் எழுதியதைக் கொண்டு அவர் கருத்தை நாம் அறிந்துக் கொள்ளமுடிகிறது.

 

ஏழாவது அத்தியாயம் முடிக்கவில்லை என்றாலும், அரசின் தோற்றம், அதன் வளர்ச்சி, இறுதியில் அது அடையும் வீழ்ச்சி பற்றி லெனின் எழுதிய முழுநூலாகவே இதனைக் கருதலாம்.

 

இந்த நூலில் உள்ள கருத்துகளைப் பற்றி ஒரே வகுப்பில் எடுப்பது அவ்வளவு எளிதல்ல.  இருந்தாலும் இந்த நூலில் உள்ள கருத்துகளின் சாரத்தைக் கொடுக்க முயற்சிக்கிறேன். ஏற்கெனவே இந்த “அரசும் புரட்சியும்” என்கிற நூலை செங்கொடி மையம் என்கிற படிப்பு வட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு வகுப்பாக பிரித்து எடுத்தேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரே வகுப்பாக இங்கே எடுக்கிறேன்.

 

1) வர்க்க சமூகமும் அரசும்

 

முதல் அத்தியாயத்தில் நான்கு உட்தலைப்புகள் காணப்படுகிறது. இந்த நான்கு உட்தலைப்பையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 

முதல் உட்தலைப்பு, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாததன் வெளிப்பாடே அரசு.

 

இந்த நூலில் லெனின், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அரசு பற்றிய எழுத்துக்களை நேரடியாக மேற்கோளாகக் கொடுத்துள்ளார். நீண்ட மேற்கோள்கள் படிப்பவர்களை சிரமப்படுத்தும் என்றாலும் இதனை தவிர்க்க முடியவில்லை என்கிறார்.

 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மார்க்சியம் இன்று புரட்டப்படுகிறது, சிதைக்கப்படுகிறது. குறிப்பாக அரசு பற்றிய கருத்துக்கள் திரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு பற்றி மார்க்ஸ் என்ன கூறினார் என்பதை மீண்டும் நிலைநாட்டுவதே முதன்மைப் பணியாக இருக்கிறது என்கிறார் லெனின். மார்க்சியக் கோட்பாட்டை மார்க்ஸ் படைதிருந்தாலும் அதனை எழுத்துகளில் அதிகம் விளக்கியவர் எங்கெல்ஸ்.

 

முதலில் எங்கெல்ஸ் எழுதிய புகழ் பெற்ற, “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலில் உள்ளப் பகுதியை எடுத்துக்காட்டுகிறார்.

 

அரசானது எவ்வகையிலும் வெளியில் இருந்து சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது அல்ல. சமூகத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. உழைப்பாவர் -உழைப்பைப் பெறுபவர், ஏழை - பணக்காரர் என்கிற வர்க்க வேறுபாடு சமூகத்தில் தோன்றியதே, அந்தக் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமாகும். அடுத்து எங்கெல்ஸ் கூறுவது மிகவும் முக்கியமானது ஆகும். அதுவே அரசு பற்றிய வரையறை என்றும் கூறலாம்.

 

வர்க்கங்களாகப் பிளவுண்ட சக்திகள், இணக்கம் காண முடியாத நிலையினைப் பெற்றுள்ளதின் வெளிப்பாடே அரசு.

 

வர்க்கப் பகையான இரு சக்திகள், முரண்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதிக்  கொள்வதை தடுப்பதற்காகவும், மோதலைத் தணித்து ஒழுங்கின் வரம்புக்குள் வைத்திருப்பதற்காகவும் உள்ள சக்தியே அரசு. வெளிப் பார்வைக்கு, சமூகத்துக்கு மேலான அமைப்பாக அரசை நிறுவுவது வர்க்க சமூகத்தில் அவசியமாகியது. ஆனால் அதன் முதன்மையானப் பணி இதுவல்ல, முரண்பட்ட வர்க்கங்களால் ஏற்படும் போராட்டத்தைத் தடுப்பதே அதன் முக்கியமானப் பணி ஆகும்.

 

எங்கெல்ஸ் கூறியக் கருத்தின் அடிப்படையில் லெனின் தொகுத்துத் தருவதை பார்ப்போம்.

 

வர்க்கப் பகைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவே அரசு. எந்தளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அந்தளவுக்கு அரசு உருவாகிறது, அதாவது அந்தளவுக்கு அரசு தேவை ஆகிறது.

 

எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் உள்ளனவோ அங்குதான் அரசு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதன் காரணத்தால் முதலாளித்துவ அறிஞர்களும், குட்டி முதலாளித்துவ அறிஞர்களும் இதனை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். ஆனால் இதற்கு அவர்கள் வேறுமாதிரி விளக்கம் கொடுக்கின்றனர். அது என்னவென்றால், வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசு என்று மார்க்சியக் கருத்தை திரித்துரைத்தனர். அதாவது வர்க்கங்கள் இணக்கம் காணமுடியாததன் விளைவுதான் அரசு, என்பதை மாற்றி சமூகத்தில் காணப்படும் வர்க்க வேறுபாட்டை போக்குவதற்கே அரசு உருவானது என்று மார்க்சிய அடிப்பயைத் திரித்தனர்.

 

சொத்துடைமையின் விளைவாகத் தோன்றியது வர்க்கப் பகைமை, சொத்துடைமையை ஒழிக்காமல் வர்க்கப் பகைமையை ஒழிக்க முடியாது என்பதை மார்க்சியம் தெளிவாக விளக்குகிறது.

 

இரண்டாம் உட்தலைப்பு, ஆயுதமேந்தியவர்களின் தனிவகைப் படையும், சிறைச்சாலைகள் போன்றவை

 

முதல் அத்தியாயத்தில் சமூகத்தில் அரசு ஏன் தோன்றியது என்பதைப் பார்த்தோம், அடுத்து அரசின் உறுப்பான ராணுவம், சிறைகாலை ஆகியவற்றைப் பார்ப்போம்.

 

இந்த உட்தலைப்பிலும் லெனின், எங்கெல்சின் கருத்தை மேற்கோளாகக் கொடுத்தே தொடங்குகிறார்.

 

பழங்குடி சமூகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குழுக்களில் உள்ள மக்களே ஆயுதங்களை தூக்கிப் போராடினர், அதாவது ஆயுதங்கள் அப்போது மக்கள் அனைவர் கைகளில் இருந்தது. அரசு தோன்றியப் பிறகு இதற்கு என்று ஒரு தனிப் பிரிவு தோன்றியது. இந்தத் தனிபிரிவு, வர்க்க சமூகத்தில் ஒடுக்கத்துக்கு ஆளான உழைப்பாளர்களை காப்பாற்றுவதற்காகத் தோன்றவில்லை, வர்க்கங்களுக்கு இடையே ஏற்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தத் தனிப் பிரிவு தோன்றியது. வர்க்க வேறுபாட்டுக்கு எதிராக போராபவர்களை சிறையில் இடுவதற்கு சிறைசாலைகள் தோன்றின.

 

அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கு தோன்றியதே ஆகும். நிலப்பிரபுத்துச சமூகத்தில் உள்ள அரசாக இருந்தாலும்சரி, முதலாளித்துவ சமூகத்தில் தோன்றிய அரசாக இருந்தாலும்சரி, சோஷலிச சமூகத்தில் உள்ள அரசாக இருந்தாலும்சரி அனைத்தும் தனக்குக் கீழ்படியாத, தன்னை எதிர்த்துப் போராடுகிற வர்க்கத்தை ஒடுக்குவதற்கு, வர்க்க சார்பான அரசு தேவையானதாக இருக்கிறது.

 

மூன்றாம் உட்தலைப்பு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவியே அரசு

 

இங்கேயும் லெனின், எங்கெல்சின் கருத்துடன் தொடங்குகிறார்.

 

வர்க்கப் பகைமைகளை கட்டுப்படுத்துவதன் அவசியத்தில் இருந்து அரசு தோன்றியதால், பொதுவாக அது மிகப் பெரும் பலமுடைய, பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாகி விடுகிறது. எங்கெல்சின் இந்தக் கூற்றில் அரசின் சார்வு தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

 

வர்க்கங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு குறைந்த நிலையில். விதிவிலக்காக சில காலக்கட்டங்களில் அரசு வெளித்தோற்றத்துக்கு நடுநிலையானதாக காட்சிதரும் என்றாலும், இது அரசின் உண்மையான இயல்பு அல்ல என்று எங்கெல்சின் எழுத்துக்களை முன்வைத்து லெனின் கூறுகிறார். அரசின் தோற்றத்துக்குப் பல காரணம் இருக்கலாம், சமூகத்தில் வர்க்கப் பிளவு ஏற்பட்ட போது அதனிடையே இணக்கம் காண முடியாததன் வெளிப்பாடாகவே அரசு தோன்றியது என்பது அடிப்படைக் காரணம் ஆகும்.

 

இறுதியிலும் லெனின், எங்கெல்சின் கருத்தோடு முடிக்கிறார்.

 

அரசு என்பது சமூகத்தில் என்றும் இருந்துவருகிற ஒன்று அல்ல. அரசையும், அரசதிகாரத்தையும் அறியாத மக்கள் சமூகம் இருந்திருக்கின்றன.  சமூகத்தில் வர்க்கப் பிளவு ஏற்பட்ட போதே அரசு தோன்றியது. அதற்கு முன்பு அரசு தோன்றவில்லை. ஏனென்றால் அதற்கு அரசு என்கிற ஒடுக்கும் கருவித் தேவைப்படவில்லை. அதாவது பழங்குடி சமூகத்தில் அரசு காணப்படவில்லை, ஏனென்றால் அங்கு வர்க்கப் பிரிவு காணவில்லை. அதனால், வர்க்கத்தை அடக்குவதற்கு என்று ஒரு அரசு தேவைப்படவில்லை.

 

அரசு எப்படி தவிர்க்க முடியாமல் தோன்றியதோ, அதே போல தவிர்க்க முடியாதவாறு மறைந்து ஒழியும். அரசு தோன்றுவதற்கு காரணமான, தவிர்க்க முடியாத சூழ்நிலைமை மறைகிற போது தவிர்க்க முடியாதவாறு அரசு மறைந்து போகும்.

 

தேவையின் அடிப்படையில் தோன்றியது அனைத்தும், அந்தத் தேவை மறையும் போது அது தேவையற்றதாகிவிடும். வர்க்க முரண் சமூகத்தில் ஏற்பட்ட போது தோன்றிய அரசு, வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில், வர்க்க முரண் மறைகின்ற நிலையில் அரசு தேவையற்று உலர்ந்து மறைந்து போகும். இதனையே அடுத்த உட்தலைப்பு பேசுகிறது.

 

நான்காம் உட்தலைப்பு, அரசு “உலர்ந்து உதிர்வதும்” வன்முறைப் புரட்சியும்

 

அரசு “உலர்ந்து உதிர்வது” பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு எதிர்ப்பு” என்கிற நூலில் கூறியது மிகவும் புகழ்பெற்ற சொற்களாகும் என்று லெனின் பதிவிடுகிறார். இந்த உலர்ந்து உதிர்வது அதாவது வாடுவது என்கிற சொல் அரசு பற்றிய விஞ்ஞான வழிப்பட்ட மார்க்சியத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. அராஜகவாதிகளைப் போல அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்று எங்கெல்ஸ் மொட்டையாகக் கூறவில்லை, அரசு ஒரு கட்டத்தில் தேவையற்று உலர்ந்து உதிரும் என்கிறார்.

 

இங்கே என்னுடைய சொந்த படிப்பு அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன், நான் சிறியவான இருந்த போது நிறைய மார்க்சிய நூல்களை வாங்கினேன். அப்போது அதன் விலைகள் 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் என்பதாக இருந்தது. மாணவானாக இருக்கும் போது எனக்கு அதிகமான பணம் கிடைக்காது. அன்றைய சோவியத் நாட்டில் இருந்த முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களை, குறைவான பணத்தில் நான் நிறைய நூல்களை வாங்கினேன். வாங்கிப் படிக்கும் போது, தொடக்கநிலையில் பொதுத்துறையை விரிவுபடுத்துவதே கம்யூனிசம் என்று தவறாகவும் எளிமையபடுத்தியும் புரிந்து கொண்டேன்.

 

லெனினது “அரசும் புரட்சியும்” என்கிற இந்த நூலைப் படிக்கும் போதுதான், நான் இதுவரை படித்து தவறு, கம்யூனிசம் என்பது சமூகம் பற்றிய அறிவியல் அணுகுமுறையும், முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டிற்குத் தீர்வாக ஏற்படுவதே கம்யூனிச சமூகம் என்பதையும் அறிந்து கொண்டேன். கம்யூனிச சமூகம் என்பது  மனிதர்களின் நல் விருப்பம் சார்ந்ததது அல்ல, அது சமூக வளர்ச்சியின் விதி என்பதை அறிந்து கொண்டேன். மார்க்சிய அறிவியல் அணுகுமுறை இந்த நூலைப் படித்தப் போதுதான் ஏற்பட்டது.

 

அதுமுதல் எனது படிப்பு முறையே மாறியது. அதன் பிறகு மார்க்சிய நூல்களை மார்க்சிய அறிவியல் அணுகுமுறையில் படிக்கத் தொடங்கினேன். அதன் பிறகே மார்க்சியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பிற்காலத்தில் பல இடதுசாரி பதிப்பகங்கள் வந்ததிருந்தாலும், எனது மார்க்சியப் படிப்பு என்பது என்.சி.பி.எச். நிறுவனத்தில் இருந்தே தொடங்கியது. இதன் காரணமாக இந்த இடத்தில் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

நூலுக்குள் செல்வோம்.

 

அரசு உலர்ந்து உதிரும் நிகழ்வு எப்போது எப்படி ஏற்படும் என்பதை எங்கெல்ஸ் கூறுவதைப் பார்ப்போம்.

 

புரட்சியால் முதலாளித்துவ சமூகம் விழ்த்தியப் பிறகு பாட்டாளி வர்க்கம்  அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும், உற்பத்திச் சாதனங்களை முதலில் அரசுடைமை ஆக்கும்.

 

இதுவரையிலான சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது. இறுதியில் அரசானது சமூகம் முழுமைக்கும் உண்மையான பிரதிநிதியாகிவிடும் போது, அது தன்னைத் தேவையற்றதாக்கிக் கொள்கிறது. அதாவது வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் அரசு தேவைப்படும் சூழ்நிலை நீங்கிவிடுகிறது.

 

இனி கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய வர்க்கம் எதுவும் சமூகத்தில் இல்லாமல் போகிறது. அப்போது அடக்கி ஒடுக்குவதற்கு என்கிற தனிவகை பலவந்த சக்தியான அரசு தேவையில்லாது போகிறது.

 

சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு துறையிலும் தேவையற்றதாகி இறுதியில் தானாகவே தணிந்து, அணைந்து விடுகிறது.

 

மனிதர்களை ஆளும் அரசாங்கமாக இருந்தது மறைந்து, நிர்வாகச் செயல்களை செய்வது மட்டுமானதாக உருமாறுகிறது. அதாவது வர்க்கத் தன்மை முழுதும் இழந்து சமூகத்தை நிர்வாகம் செய்யும் பணியினை மட்டும் தொடர்கிறது.

 

அராஜகவாதிகள் கூறுவது போல அரசு “ஒழிக்கப்படுவதில்லை” அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.

 

அரசு உலர்ந்து உதிர்வது பற்றி எங்கெல்ஸ் கூறுகிற அதே நூலில் வன்முறைப் புரட்சியின் முக்கியத்துவம் பற்றிய வாதமும் அடங்கியிருக்கிறது. இந்த இடத்தில் எங்கெல்ஸ் பலாத்காரப் புரட்சியின் பங்கு பற்றி கூறியதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். மேலும் இந்த பலாத்காரக் கோட்பாடு பற்றி எங்கெல்ஸ் கூறியது யாருக்கும் நினைவில் இல்லை என்று வருத்தப்படுகிறார்.

 

நவீனகால சோஷலிஸ்டுக் கட்சிகளில் இந்தக் கருத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதும், ஏன் நினைப்பதுங்கூட தகாததாகி விட்டது. இக்கட்சிகள் மக்களிடையே நடத்தும் அன்றாடப் பரப்புரையிலும் கிளர்ச்சியிலும் இந்த பலாத்கார கோட்பாடு பற்றிய கருத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லாது இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பலாத்காரம் பற்றிய கருத்து அரசு உலர்ந்து உதிரும் கருத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது.

 

அதனால் கம்யூனிஸ்டுகள் பலப்பிரயோகம் பற்றிய மார்க்சியக் கருத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். “டூரிங்குக்கு மறுப்பு” என்கிற நூலில் எங்கெல்ஸ் “பலப்பிரயோகக் கோட்பாடு” (Theory of Force) பற்றி இரண்டு அத்தியாயங்களில் எழுதி இருக்கிறார். தனிக் கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார்.

 

அமைதி வழியா, பலாத்கார வழியா என்பதை சூழ்நிலையே தீர்மானிக்கிறது, ஒடுக்கும் சாதனங்களை வைத்துள்ள முதலாளித்துவ அரசு, தான் வீழும் போது அதனைப் பயன்படுத்தாமல் இருக்காது, அதை எதிர்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகள், மார்க்சிய பலப்பிரயோகக் கோட்பாட்டை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

 

இந்த அத்தியாயத்தை லெனின் எப்படி முடிக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

 

பலாத்காரப் புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு, பாட்டாளி வர்க்க அரசாய் மாற்ற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவாக அரசெனப்படுவது உலர்ந்து உதிரும் நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக அல்லாமல், வேறு எந்தவழியிலும் அகற்றப்பட முடியாது.

 

“பலாத்காரப் புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசெனப்படுவது, "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப்போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாது.

 

குறிப்பிட்ட புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றையும் பரிசீலித்ததன் மூலமும், குறிப்பிட்ட புரட்சி ஒவ்வொன்றின் அனுபவத்தைப் பகுத்தாய்ந்ததன் மூலமும் மார்க்சும் எங்கெல்சும் ​​இந்தக் கருத்துக்களின் விரிவாகவும் உறுதியாகவும் விரிவாக்கத்தை வழங்கினர். சந்தேகத்துக்கு இடமின்றி இதுவே அவர்களுடைய கோட்பாட்டின் மிக முக்கிய பகுதி.  இனி இந்த முக்கிய பகுதிக்குச் செல்வோம்.”

 

என்று லெனின் முதல் அத்தியாயத்தை முடிக்கிறார்.

 

முதல் அத்தியாயத்தில் லெனின் அரசின் தோற்றம், இருப்பு, மறைவு ஆகியவற்வை சுருக்கமாகக் கூறியுள்ளார். இந்த முதல் அத்தியாயத்தில் தெளிவு பெற்றோமானால், அடுத்த அத்தியாயங்களைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

 

2) 1948-51ஆம் ஆண்டுகளின் அனுபவம்

 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலில் வர்க்கம் ஒழிக்கப்பட்டதும் அரசு மறைந்துவிடும் என்ற கருத்து பொதுவாக விளக்கியதையும், “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில் துல்லியமாக விளக்கியதையும் லெனின் வேறுபடுத்திக் காட்டுகிறார். லெனின் தமது எழுத்துக்களில் மார்க்சின் கோட்பாட்டு வளர்ச்சியின் படிநிலையை அதற்கான ஆண்டையும் அதைப் பற்றி பேசுகிற நூலையும் குறிப்பிட்டு எழுதுகிறார். இது மார்க்சிய கோட்பாட்டின் படிப்படியான வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது.

 

அடுத்து லெனின் பாட்டாளி வர்க்கம்தான் முரணற்ற புரட்சிகரமான ஒரே வர்க்கம் என்கிறார், அதற்கானக் காரணத்தையும் சேர்த்துக் கூறுகிறார், அதைப் பார்ப்போம்.

 

பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்கும் பணிக்குத் தலைமை தாங்க முடியும். ஏனென்றால், பாட்டாளி வர்க்கம்தான் முரணில்லாத முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கம் ஆகும்.

 

இதற்கானக் காரணத்தை லெனின் கூறுகிறார்.

 

“முதலாளித்துவ ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளின் காரணமாக, இந்தப் பணிக்குத் தயார் செய்யப்படுகிறது. இந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்பாடும் சக்தியும் அளிக்கப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் அனைத்துக் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது; ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை, ஒரு சேர இணைத்து ஒன்றுபடுத்துகிறது, நிறுவன வழியில் ஒழுங்கமையச் செய்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான், பெருவீதப் பொருளுற்பத்தியில் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய், உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது.”

 

பாட்டாளி வர்க்கம் இந்த முதலாளித்துவப் பொருளாதார நிலைமையோடு நெருக்கமானதாக இருக்கிறது. முதலாளித்துவத்தால் சிறு விவசாயிகளையும் குட்டி முதலாளித்துவத்தையும் சிதைக்கப்படுகிறது. அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தை நிறுவன வழியில் ஒன்றுபடுத்தி ஒழுங்குபடுத்துகிறது, இதனால்தான் அனைத்து உழைப்பாளர்களையும் பாட்டாளி வர்க்கம் தலைமைத் தாங்குகிறது.

 

லெனினது இந்தக் கூற்று ஒர் அறிக்கைப் போலத் தோன்றும், இதனை விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிவற்றை படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போதுதான் இந்தக் கூற்று எவ்வாறு விஞ்ஞான வழியில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 

மார்க்சிய அடிப்படைகளை நூல்களின் வாயிலாகத்தான் கம்யூனிஸ்டுகள் அறிந்து கொள்ள முடியும். அதனை அவர்கள் சுயமாக படித்து உணர்ந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

 

லெனின் மார்க்சியக் கல்வியைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம்.

 

மார்க்சியமானது, தொழிலாளர் கட்சிக்கு கல்வியளிப்பதன் (Educating) மூலம், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைக்கு கல்வி கற்பிக்கிறது.

 

மார்க்சியக் கல்வி என்பது கம்யூனிஸ்டுகளுக்கு அவசியமான ஒன்றாகும். வகுப்பு எடுத்துவரும், இந்த MELS இணைய வழிப் பயிலரங்கம் மார்க்சிய கல்வியை போதிப்பதில் ஒர் உறுப்பாகும். 300 கூட்டங்களைக் கடந்து இந்த பணியை பயிலரங்கம் தமது பங்காகச் செய்துவருகிறது.

 

கட்சிக்குள்தான் மார்க்சியக் கல்வி நடத்தப்பட வேண்டும், இன்றைய நிலையில் கட்சிக்கு வெளியிலும் மார்க்சியக் கல்வி பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது.  ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும், களத்தில் நிற்பவர்களுக்கு அல்லாத மார்க்சியக் கல்வி, களத்துக்கு உதவாத மார்க்சியக் கல்வி என்பது தேவையற்றது, தேவையற்றது என்பது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. கோட்பாடு நடைமுறைக்கானதே, நடைமுறை கோட்பாட்டுக்கானதே ஆகும்.

 

அடுத்து லெனின், 1848-51ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் அனுபவங்களின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியதை இந்த இடத்தில் தருகிறார்.

 

இந்தப் புரட்சிக்கு முன்பு எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில் உள்ள அரசு பற்றிய  பார்வை இன்னமும் மிகப் பெருமளவுக்கு கருத்தியலான முறையில்தான் காணப்படுகிறது. லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்என்கிற நூலில், முந்தியப் புரட்சிகள் அனைத்தும் அரசுப் பொறியமைவை தகர்ப்பதற்குப் பதிலாய் மேலும் செம்மையாக்கியது என்று மார்க்ஸ் எழுதியுள்ளார். இந்தக் கருத்து அறிக்கையில் கூறப்பட்டதைவிட, மிகமிகத் துல்லியமான முறையிலும் நடைமுறை சார்ந்த வகையிலும்  அரசு பற்றி விளக்கப்பட்டுள்ளதாக லெனின் கூறுகிறார்.

 

1852ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதியில் மார்க்ஸ், வெய்ட்மையர் என்பவருக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில், தற்போதைய சமூகத்தில் வர்க்கம் இருப்பதையும் அவற்றுக்கு இடையே போராட்டம் நடைபெறுவதையும் தனக்கு முன்னதாகவே முதலாளித்துவ அறிஞர்கள் கூறிவிட்டனர். இதில் தாம் புதியதாக சேர்த்ததை எண்களிட்டு மார்க்ஸ் கூறியுள்ளார்.

 

1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

 

2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.

 

3) இந்த சர்வாதிகாரம் என்பது அனைத்து வர்க்கங்களையும் ஒழிப்பதற்கான, வர்க்கபேதமற்ற சமூகத்திற்குமான இடைக்கால கட்டமே ஆகும்.

 

மார்க்ஸ் கூறிய இந்த மூன்று புதியக் கருத்தின் அடிப்படையில் லெனின் கூறவருவது என்னவென்று பார்ப்போம்.

 

வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறு என்று அடிக்கடி கூறப்படுகிறது, இது பெரும் தவறு என்கிறார் லெனின்.

 

வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்பவர்கள் மார்க்சியவாதிகளாகி விடுவதில்லை, இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை வயப்பட்டவர்களாகவே இருக்கக்கூடும் என்று லெனின் கூறுவதை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத்துக்கு அப்பால் கொணடு செல்லாது போனால், அது, மார்க்சியத்தை சுருக்கியும் புரட்டியும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடையதாகவும் மாற்றிவிடும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நில்லாமல், இதனை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பதாக விரித்துச் செல்பவரே மார்க்சியர் ஆவார்.

 

அதனால்தான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தன்மையை மார்க்சியம் எவ்வாறு விளக்குகிறது என்பது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 

மார்க்சியவாதிக்கும் குட்டி முதலாளித்துவாதிக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை உண்மையாகவே புரிந்து கொண்டுள்ளனரா? அதை அங்கீகரிக்கிறரா? என்பதைச் சோதித்துப் பார்க்கும் உரைகல்லாய் அமைவது இந்தக் கேள்விக்கான பதிலே என்கிறார் லெனின்.

 

காவுத்ஸ்கியும் காவுத்ஸ்கிவாதிகளும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிராகரிக்கும் கேடுகெட்ட அற்பவாதிகளாகவும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாகவும் தம்மை நிரூபித்துக் கொண்டார்கள் என்பதை லெனின் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

 

இவர்கள் வஞ்சகமாய் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிட்டு ஓடிவிடுகின்றனர். லெனின், “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்” என்கிற தலைப்பில் ஒரு தனிக் கட்டுரையை எழுதி இருக்கிறார், அதை நாம்  கண்டிப்பாகப் படிக்க  வேண்டும். இதனை நாம் ஒரு வகுப்பில்  தனியாகப் பார்க்க இருக்கிறோம்.

 

இந்த இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் லெனின் சொல்வதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

பொதுவாக ஒவ்வொரு வர்க்க சமூகத்திற்கும் தனியொரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தேவைப்படுவதை உணர்ந்தவர்களால் மட்டுமே மார்க்சின் அரசு பற்றிய  கோட்பாட்டினது சாரப் பொருளைக் கற்றுத் தேர்ந்தோர் ஆவர்.

 

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பாட்டாளி வர்க்க  சர்வாதிகாரம் என்கிற சொல்லை, சொல்வதற்கு கூசுபவர்களை இன்று நாம் காண முடிகிறது. அப்படிப்பட்டவர்கள் லெனின் கூறுவதுபோல் மார்க்சின் அரசு பற்றிய கோட்பாட்டை கற்றுத் தேராதவர்களே ஆவர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அரசு ஆகியவற்றைப் பற்றி மார்க்சியம் கூறுவதைப் புரிந்து கொள்ளாத வரையில் மார்க்சியத்தைப் புரிந்து கொண்டவர்கள் ஆகமாட்டோம்.

 

அடுத்து லெனின் கூறுவதையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

முதலாளித்துவ அரசுகளின் வடிவம் பலதரப்பட்டவை, வடிவம் எப்படியிருந்தாலும் இந்த அரசுகள் அனைத்தும், முடிவாய்ப் பார்க்குமிடத்து, தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரமே ஆகும்.

 

முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிச சமூகத்துக்கு மாறிச் செல்வதற்குரிய இடைக்காலம் பலதரப்பட்ட அரசியல் வடிவங்கள் ஏராளமாகத் தோன்றும், ஆனால் அனைத்தின் சாராம்சம் தவிர்க்க முடியாதபடி அது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருக்கும்.

 

இந்த லெனினது கூற்றை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்பவர்களுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஒவ்வாத சொல்லாக இருக்காது. நாம் சொற்களில் மயங்காது சாரத்தை அறிந்து கொள்வோம். முதலாளித்துவ அரசு என்றால் அது முதலாளித்துவ சர்வாதிகாரம்தான், அதே போல பாட்டாளி வர்க்க அரசு என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகரம்தான். அரசு என்பது வர்க்க சார்பானது என்றால் அது சர்வாதிகாரமாக செயல்படும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது.

 

3) 1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம். மார்க்சின் பகுப்பாய்வு

 

1870ஆம் ஆண்டில், பாரிஸ் தொழிலாளர்கள் அரசாங்கத்தை வீழ்த்த நினைப்பது அசட்டு துணிச்சல் என்று மார்க்ஸ் எச்சரித்தார். ஆனால், 1871ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் தீவிரமான போரில் இறங்கும்படியான நிர்பந்தம் ஏற்பட்டது, எழுச்சி எதார்த்த உண்மையாகிவிட்டது, இந்தப் புரட்சியில் பாதகமான அறிகுறிகள் தென்பட்ட போதும், மார்க்ஸ்  உற்சாகத்தோடு,  பாரிஸ் பாட்டாளி வர்க்க புரட்சியை வரவேற்றார்.

 

சிறந்த கோட்பாளரான மார்க்ஸ், எதார்த்த நிலைமைக்கு, அதாவது நடைமுறைக்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுத்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கோட்பாட்டை எதார்தத்துக்குள்ளும், எதார்த்தத்தை கோட்பாட்டுக்குள்ளும் வைத்து முடக்கக்கூடாது என்பது இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளல முடிகிறது. அதாவது எதார்த்தம் மாறிய பிறகு பழைய கோட்பாட்டை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கக் முடியாது, புதிய கோட்பாட்டைப் படைக்க வேண்டும். கோட்பாடும் எதாத்தமும் இணைந்திருக்க வேண்டும் இதில் ஒன்றை மற்றொன்றில் திணிக்கக்கூடாது. புதிய சூழ்நிலைமைக்கு ஏற்ப கோட்பாடும் நடைமுறையும் மாறிக் கொண்டே இருக்கும்.

 

மார்க்சியம் வறட்டுச் சூத்திரம் அல்ல, எதார்த்தத்துக்கு ஏற்ப வளர்ச்சி பெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

பாரிஸ் கம்யூனின் அனுபவத்தை மார்க்ஸ் பகுத்தாராய்ந்தார், அதனிடம் இருந்து செயல்தந்திரப் படிப்பினைகளைப் பெற்றார், கம்யூன் அனுபவத்தில் தமது கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய முற்பட்டார்.

                                                                                                                    

குறிப்பாக ஒன்றை சொல்லலாம். ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைப்பை புரட்சிக்குப் பின் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி, தமது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்கிற முடிவை மார்க்ஸ் பாரிஸ் கம்யூனின் அனுபவத்தில் இருந்தே பெற்றார்.

 

பாரிஸ் கம்யூனின் அனுபவத்தை மார்க்ஸ் “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்கிறப் பெயரில் ஒரு தனி நூலை எழுதினார்.

 

4) கூடுதலாய் எங்கெல்ஸ் அளித்த விளக்கங்கள்

 

கம்யூன் அனுபவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய அடிப்படைகளை மார்க்ஸ் வழங்கினார். மார்க்சின் பகுத்தாய்வையும் முடிவுகளையும் விளக்கமாக, எங்கெல்ஸ் மீண்டும் மீண்டும் திரும்பவும் எழுதினார். சில சந்தர்ப்பங்களில் இப்பிரச்சினையின் பிற கூறுகளை, மிகுந்த வலிமையோடு தெட்டத் தெளிவாக விளக்கங்களை கொடுத்தார், என்கிற கருத்தில் இருந்து இந்த அத்தியாயத்தை லெனின் தொடங்குகிறார்.

 

“குடியிருப்புப் பிரச்சினை,” என்கிற நூலிலும் கடிதங்கள் வாயிலாகவும் மார்க்சின் “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்கிற நூலை மறுபதிப்பு செய்யும் போது எழுதிய முன்னுரையிலும் பாரிஸ் கம்யூனைப் பற்றிய தமது கருத்துக்களை எங்கெல்ஸ் பதிவு செய்கிறார்.

 

“அரசும் புரட்சியும்” என்கிற நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனி வகுப்பாகப் பார்க்க வேண்டும், ஆனால் நாம் ஒரே வகுப்பில் பார்க்கிறோம். அதனால் நூலில் காணும் அனைத்து முக்கியமானதையும் எடுத்துச் சுட்டிக்காட்ட முடியாது. லெனின் கூறிய இரண்டைக் குறிப்பிட்டு சொல்வதோடு இந்த அத்தியாயத்தை முடித்துக் கொள்வோம்.

 

பழைய முதலாளித்துவம் மறைந்து, புதிய ஏகாதிபத்திய முதலாளித்துவம் வந்துவிட்டது, பழைய போட்டி முதலாளித்துவம் மறைந்து திட்டமிட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவம் வந்துவிட்டது. அதனால் சோஷலிசத்துக்கு செல்ல வேண்டியத் தேவையில்லை என்று, சோஷலிசப் புரட்சியை, சீர்திருத்தவாதிகள் புறக்கணிக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது புதிய கட்டம்தான் ஆனால் இன்னமும் அது முதலாளித்துவமாகத்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

 

"முழுநிறைவாய்த் திட்டமிடுவதற்கு டிரஸ்டுகள் என்றுமே ஏற்பாடு செய்ததில்லை, இப்பொழுதும் செய்யவில்லை, செய்யவும் முடியாது. ஆனால் அவை எவ்வளவு தான் திட்டமிட்ட போதிலும், எவ்வளவுதான் மூலதன அதிபர்கள் தேசிய அளவிலும், ஏன் சர்வதேசிய அளவிலுங்கூட பொருளுற்பத்திப் பரிமாணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு கொண்ட போதிலும், எவ்வளவுதான் அவர்கள் இந்தப் பரிமாணத்தைத் திட்டமிட்டு ஒழுங்கு செய்து கொண்ட போதிலும், இன்னமும் நாம் இருப்பது முதலாளித்துவமே தான் - புதிய கட்டத்தை வந்தடைந்துவிட்ட முதலாளித்துவம் என்பது மெய்தான், ஆயினும் இன்னமும் அது சந்தேகத்துக்கு இடமின்றி முதலாளித்துவமே தான்.

 

இத்தகைய முதலாளித்துவம் சோஷலிசத்துக்கு 'அண்மையதாய் இருப்பதானது' பாட்டாளி வர்க்கத்தின் மெய்யான பிரதிநிதிகளுக்கு சோஷலிசப் புரட்சி அண்மையதும் எளியதும் நடைமுறை சாத்தியமானதும் அவசர அவசியமானதும் ஆகி விட்டதை நிரூபிப்பதற்குரிய வாதமாய் அமைய வேண்டுமே ஒழிய, இந்தப் புரட்சி புறக்கணிக்கப்படுவதற்கும், முதலாளித்துவத்தைக் கவர்ச்சியுடையதாய்க் காட்டுவதற்கான முயற்சிக்கும் -எல்லா சீர்திருத்தவாதிகளும் இந்தப் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள்- இடந்தரும் வாதமாய் ஒரு போதும் ஆகிவிட முடியாது."

 

முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்பது சோஷலிசத்தை தவிர்க்காது, அதனை நெருங்குகிறது என்பதே உண்மை ஆகும். முதலாளித்துவத்தின் வளர்ச்சியே முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு தடையாகவும், சோஷலிசத்துக்கு நுழைவாயிலாகவும் இருக்கிறது.

 

முதலாளித்துவ உற்பத்தி முறையில், முன்பு வரையிலுள்ள உற்பத்தி முறையில் காணப்பட்டதைவிட முதலாளித்துவத்தில் சில ஜனநாயக உரிமைகள் கிடைக்கிறது, அதனை கம்யூனிஸ்ட் கட்சிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவதை பலபேர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதாவது முதலாளித்துவம் என்பது ஜனநாயகத் தன்மையுடையதாகவும், தொழிலாளர்களின் அரசு என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் தன்மையுடையதாகவும் கருதிக் கொள்கின்றனர். அவ்வாறு கருதிக் கொள்கிற இடதுசாரிகளையே நான் குறிப்பிடுகிறேன். இது ஒரு தவறானக் கருத்தாகும்.

 

முதலாளித்துவத்தில் சிறுபான்மையோர் நலனுக்காக பெரும்பான்மை கீழ்ப்படுத்தப்படுகிறது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் பெரும்பான்மையோர் நலனுக்காக சிறுபான்மையோர் கீழ்ப்படுத்தப்படுகிறது. உண்மையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே முழுமையான ஜனநாயகத்தை நோக்கி செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில்தான் அரசு உலர்ந்து உதிரும். இதனைப் பற்றி லெனின் கூறுவதை பார்ப்போம்.

 

"… ஜனநாயகமும், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்ப்படிதலும் ஒன்றல்ல. சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்படிதலை அங்கீகரிக்கும் அரசுதான் ஜனநாயகம் எனப்படுவது; அதாவது, ஒரு வர்க்கம் பிறிதொன்றின்மீது, மக்கள் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றின்மீது, முறைப்படி பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கான ஒழுங்கமைப்பே ஜனநாயகம் எனப்படுவது.

 

அரசை ஒழிப்பதே, அதாவது ஒழுங்கமைந்த முறைப்படியான அனைத்து பலாத்காரத்தையும், பொதுவில் மக்களுக்கு எதிராய்ப் பிரயோகிக்கப்படும் எல்லா பலாத்காரத்தையும் ஒழிப்பதே நமது இறுதி குறிக்கோள். சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்ப்படியும் கோட்பாடு அனுசரிக்கப்படாத ஒரு சமுதாய அமைப்பு உதிக்கப் போவதாய் நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் சோஷலிசத்துக்காகப் பாடுபடுகையில், இது கம்யூனிசமாய் வளர்ச்சியுறும், ஆகவே பொதுவில் மக்களுக்கு எதிரான பலாத்காரத்தின் தேவையும், ஒரு மனிதர் பிறிதொருவருக்கும், மக்களின் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றுக்கும் கீழ்ப்படியும் தேவையும் அறவே மறைந்து போய்விடும், ஏனெனில் பலாத்காரம் இல்லாமலே, கீழ்ப்படிதல் இல்லாமலே மக்கள் சமுதாய வாழ்வின் சர்வ சாதாரண நெறிமுறைகளை அனுசரித்து நடக்கப் பழக்கப்பட்டுவிடுவார்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை."

 

லெனின் கூற்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே உண்மையில் ஜனநாயக அரசு, அது இறுதியில், வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துவிடும். இதன் பொருளாதார அடிப்படையைப் பகுத்தாய்வது அவசியமாகும் என்று கூறுகிறார். அடுத்த அத்தியாயத்தில் லெனின் அதனை செய்கிறார்.

 

இதனை வெறும் அரசியல் புரிதலில் இருந்து அறிந்து கொள்ள முடியாது, அரசியல் பொருளாதாரத்தைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். பொருளாதாரப் புரிதல் இல்லாமல் மார்க்சியத்தின் அறிவியல் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது.

 

5) அரசு உலர்ந்து உதிர்வதற்குரிய பொருளாதார அடிப்படை

 

மார்க்ஸ் 1875ஆம் ஆண்டில் எழுதிய “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற சிறிய நூல் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த விமர்சனத்தில் மார்க்ஸ் கூறிய ஒரு கருத்து மிகவும் புகழ்பெற்றதாகவும், நாம் அறிந்து கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது.

 

முதலாளித்துவ சமூகத்திற்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இடையில் மற்றொன்றாக புரட்சிகரமாக மாற்றம் அடையும் கட்டம் ஒன்று உள்ளது. இதற்கு இணையாக அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது. இந்த இடைக்காலத்தில் அரசு, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரமாக இல்லாது வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று மார்க்ஸ் அதில் எழுதியுள்ளார்.

 

இதை முன்வைத்து லெனின் கூறுவதை பார்ப்போம்.

 

முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச்செல்லும் போது அடக்க வேண்டியது இன்னமும் தேவையாக இருக்கிறது. அதனால் தொழிலாளி வர்க்கத்துக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு என்பது தேவைப்படுகிறது.

 

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசானது, இதுவரை சுரண்டப்பட்ட பெரும்பான்மையினர், சுரண்டிய சிறுபான்மையினரை அடக்குகிறது. மீதமுள்ள முதலாளித்துவ எச்சங்களையும் பழைய முதலாளித்துவ சிந்தனைகள் உடையவர்களையும் ஒழிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தேவைப்படுகிறது.

 

புரட்சியினை முடித்துவிட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு அடக்குவதற்கென ஒரு தனிவகை இயந்திரம், ஒரு தனிவகையான பொறியமைவு என்கிற அரசு தேவைப்படுகிறது. ஆனால் இந்த அரசு கம்யூனிச சமூகத்துக்கு மாறிச்செல்லும் காலக்கட்டத்துக்கு உரியதாகவும் கம்யூனிச சமூகத்தில் அதன் மறைவை நோக்கியதாகவும் பயணிக்கிறது.

 

இந்தப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகார அரசு என்கிற சொல்லை மார்க்ஸ் உருவாக்கி உள்ளார். இதற்கு இணையான வேறு சொல் கிடையாது. அதனால் மார்க்சிய வழியில் அரசின் வர்க்க சார்பையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் நாம் புரிந்து கொள்ளாமல், மார்க்சியத்தை அறிந்து கொண்டதாக சொல்ல முடியாது.

 

கம்யூனிச சமூகத்தில் வர்க்கங்கள் மறைந்து போகும், அப்போது அடக்க வேண்டியவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள், அந்நிலையில் அரசு இருக்க வேண்டியத் தேவை நீங்கி விடும், தேவையற்ற நிலையில் அரசு உலர்ந்து உதிரும். இப்படி உலர்ந்து உதிர்வதற்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகிறது. இதைப் பற்றி மார்க்ஸ் கூறியதை லெனின் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

 

முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்தி கம்யூனிச சமூகம் அடையும், அதற்கு இடையில் ஒரு கட்டம் இருப்பதாக மார்க்ஸ், “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற கட்டுரையில் குறிப்பிடுகிறார். கம்யூனிச உற்பத்தியில் இரண்டு கட்டங்கள் இருப்பதாக மார்க்ஸ் அதில் விளக்குகிறார். ஒன்று முதல் கட்டம் மற்றொன்று உயர் கட்டம். மார்க்ஸ் கூறிய முதல் கட்டம், உயர் கட்டம் என்கிற இரண்டை, லெனின் காலத்தில் முதல் கட்டத்தை சோஷலிசம் என்ற பெயரிலும், உயர் கட்டத்தை கம்யூனிசம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. இது ஒரு பெயர் மாற்றமே தவிர விளக்க மாற்றம் எதுவும் கிடையாது.

 

லெனின் ஐந்தாம் அத்தியாயத்தில் கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம், கம்யூனிச சமூகத்தில் உயர் கட்டம் என்று உட்தலைப்பிட்டு விளக்கி இருக்கிறார். மார்க்ஸ்  “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற கட்டுரையில் சுருக்கமாகக் கூறியதை லெனின் இதில் சற்று விளக்கமாகவும் விரிவாகவும் கூறியுள்ளார். மார்க்ஸ் எழுதியது விமர்சனக் குறிப்பு என்பதால் விளக்கம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அதன் விளக்கத்தை லெனினிடம் காணலாம்.

 

கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம்

 

முதலாளித்துவத்தை வீழ்த்திய பின் கம்யூனிச சமூகத்தின் தொடக்கக் கட்டத்தில், பழைய முதலாளித்துவத்தின் பிறவிக்குறிகள் தென்படும்.  அதாவது, முதலாளித்துவத்தில் இருந்து பிறந்து, இப்பொழுதுதான் வெளியே வந்த தொடக்கநிலையில், அந்த பழைய சமூகத்தின் தன்மைகள் முழுமையாக மறைந்திருக்காது. இந்த சமூகத்தைத்தான் கம்யூனிச சமூகத்தின் “முதல் கட்டம்” என்கிறார் மார்க்ஸ்.

 

இந்த முதல் கட்டத்தில், உற்பத்திச் சாதனங்கள் தனி நபர்களின் தனியுடைமையாக இருந்தது ஒழிக்கப்பட்டு, அனைத்தும் சமூக உடைமையாக மாற்றப்படுகிறது.

 

மார்க்ஸ் எழுதிய “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற கட்டுரையில், முதலாளித்துவ குறைபாடுகள் கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டத்தில் தவிர்க்க முடியாது என்கிறார். ஏனென்றால், இச் சமூகம் நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமூகத்தில் இருந்து தற்போதுதான் பிறந்து வெளிவந்திருக்கிறது என்கிறார் லெனின்.

 

உற்பத்திச் சாதனங்கள் சமூகம் அனைத்துக்கும் உரிய பொதுவுடைமையாக மாற்றியதால் மட்டும் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளும் முதலாளித்துவ உரிமையின் சமத்துவமின்மையும் முழுமையும் நீங்கிவிடவில்லை.

 

மேலும், முதல் கட்டத்தில், முதலாளித்துவ உரிமை அதன் முழுதளவிலும் ஒழிக்கப்படவில்லை, பகுதி அளவுக்கே மாறியிருக்கும்.  உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமை ஆக்கப்பட்டிருக்கும் அளவுக்கே ஒழிக்கப்பட்டிருக்கும். அதாவது தனிச் சொத்துடைமையில் இருந்து பொதுச்சொத்துடைமையாக மாற்றிய அளவுக்கே முதலாளித்துவ உரிமை மறைந்திருக்கும். மற்றவைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.

 

இது ஒரு குறைபாடே ஆகும், ஆனால் கம்யூனிசத்தின் முதல் கட்டத்தில் இதை தவிர்க்க முடியாது என்று மார்க்ஸ் கூறியதை லெனின் குறிப்பிட்டு விளக்குகிறார்.

 

கம்யூனிசத்தின் தொடக்கநிலைக்கு உரிய பொருளாதார நிலைமைக்கு ஏற்ற வகையில்தான் அந்தச் சமூகம் காணப்படும். அரசு மாற்றத்தால் மட்டுமே பொருளாதார மாற்றத்தை கொண்டுவந்திட முடியாது, அதற்கான உற்பத்திச் சக்திகளின் வளர்சியும் உற்பத்தியின் அளவும் அதிகரிக்க வேண்டும். இத்தகைய பொருளாதார முன்நிபந்தனையை எட்டிய பிறகே, முழுமையான கம்யூனிச சமூகமாக மாறமுடியும். அப்போது மட்டுமே சமூகத்துக்காக வேலை செய்ய மக்கள் பழகியிருப்பார்கள். அதுவரை பழைய முதலாளித்துவ சிந்தனையின் எச்சங்களுடனே காணப்படுவர். வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில்தான் பழைய எச்சங்களும் சிந்தனைகளும் முழுமையாக மறையும்.

 

முதல் கட்டமான சோஷலிசக் கட்டத்தில், “சக்திக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்” என்கிற வகையில் உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படும். வளர்ச்சி அடைந்த உயர் கட்டத்தில் அதாவது கம்யூனிச கட்டத்தில் “சக்திக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கேற்ற பகிர்வு” என்கிற வகையில் உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

 

என்றும் உழைப்பு இருந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் முதல் கட்டத்தில் சக்திக்கு ஏற்ற உழைப்பு செலுத்தப்படும், அந்த உழைப்புக்கு ஏற்ற பலன்தான் கிடைக்கும். சமூக முழுமைக்கும் தேவையான அளவுக்கு உற்பத்தி அதிகரித்த கம்யூனிச சமூகத்தில் சக்திக்கு ஏற்ற உழைப்பு செலுத்தப்படும் ஆனால் தேவைக்கேற்றதைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த கம்யூனிச சமூகத்தில் உற்பத்தியானது, சமூகத்தில் உள்ளவர்களின் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யக்கூடியதாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

 

“சக்திக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கேற்ற பகிர்வு” என்று கூறிடும் போது அன்றைய மக்கள் உழைப்பை செலுத்த விரும்பாமல் சோம்பி போனால் என்ன செய்வது என்று இன்றைய மக்களின் மனநிலையில் இருந்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் மக்கள் வேறுவிதமாக சிந்திப்பார்கள்.

 

சமூகத்துக்கு எதிரான சிந்தனைகள், அன்றைய மக்களிடம் மறைந்திருக்கும், சமூகம் மக்களுக்கானது என்கிற நிலை ஏற்பட்டிருக்கும். மக்களுக்கு இடையிலான முரண்கள் மறைந்த பிறகு சமூகத்துக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பட்ட கருத்தும் மறைந்து போயிருக்கும். அன்றைய நிர்வாகம் அனைத்து மக்களுக்ககானது, அன்றைய சமூகமானது மக்கள் முழுமைக்கானதாக மாறியிருக்கும். அதற்கு ஏற்பவே மக்களின் சிந்தனைகள் இருக்கும். அதனால் இன்றைய சிந்தனைகளைக் கொண்டு அன்றைய மக்கள் மனநிலையினை கணக்கிடக்கூடாது. இதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.

 

கம்யூனிச சமூகத்தின் உயர் கட்டம்

 

மார்க்ஸ் எழுதிய “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற கட்டுரையில் உள்ள பகுதியை லெனின் மேற்கோளிட்டு விளக்குகிறார்.

 

கம்யூனிச சமூகத்தினுடைய உயர் கட்டத்தில், உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்துவிடும். உழைப்பானது பிழைப்புக்கான சாதனமாய் மட்டுமில்லாது வாழ்வின் முதற்பெரும் தேவையாக மாறியிருக்கும். பொது சமூகத்தின் செல்வங்கள் மிகுந்தளவுக்கு பெருகியிருக்கும். அப்போது முதலாளித்துவ குறுகிய வரம்பு முழுமையாக அகற்றப்பட்டிருக்கும்.

 

இந்த நிலையில்தான், சக்திக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கேற்ற பகிர்வு என்கிற வகையில் உற்பத்திப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

 

வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில், மக்கள் தமது சக்திக்கு ஏற்ப, சமூகத்துக்காக உழைக்கப் பழகியிருப்பார்கள். முதலாளித்துவ குறுகிய வரம்பு முழுமையும் நீங்கியிருக்கும், இந்த வளர்ச்சிக் கட்டத்தில் அரசு என்பது தேவையில்லாமல் படிப்படியாக உலர்ந்து உதிரும். நிர்வாகதில் காணப்பட்ட வர்க்க சார்பு முடிவுக்கு வரும்.

 

வர்க்க சார்பான அரசு என்பது மறைந்து, சமூகத்துக்குத் தேவைப்படும் நிர்வாக அமைப்பு மட்டும் தொடரும்.

 

முதலாளித்துவ கண்ணோட்டத்தில் இத்தகைய ஒரு சமூக அமைப்பு என்பது வெறும் கற்பனையானதாகத் தோன்றும். ஆனால் மார்க்சியமானது அதற்கான பொருளாதார முன்நிபந்தனைகளை சுட்டிக்காட்டி விளக்குகிறது. இந்த விளக்கம் பாட்டாளி வர்க்கப் பார்வை உடையவர்களுக்கே ஏற்புடையதாக இருக்கும், முதலாளித்துவ பார்வை உடையவர்களுக்கு கற்பனையாகவும் சந்தேகமாகவும் தோன்றும்.

 

முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கு, முதலாளித்துவம் விழ்ச்சி அடைந்து கம்யூனிச சமூகம் தோன்றும் என்கிற மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது என்பதால், கம்யூனிச சமுகம் என்பது அவர்களுக்கு கற்பனையானதாகவே இருக்கும்.

 

ஜனநாயகம் எவ்வளவுக்கு எவ்வளவு முழுநிறைவடைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தேவையற்றதாகிவிடும். வளர்ச்சி அடைந்த கம்யூனிசத்தில், வர்க்க சார்பாக அடக்க வேண்டியவர் எவரும் இருக்காத நிலையில் அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும். அப்போது ஜனநாயகம் என்கிற கோரிக்கை தேவைப்படாது, அதன்பிறகு அதுபற்றிய பேச்சே இருக்காது.

 

மார்க்சியம் எதையும் இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது, ஒன்றின் புறிநிலைத் தேவை இருக்கும் போது அது தோன்றுகிறது, நிலைபெறுகிறது, வளர்கிறது, அதன் தேவை மறையும் போது, அதாவது புறநிலையின்  பிரதிபலிப்பு இல்லாத போது மறைகிறது.

 

அப்படிதான் அரசு பற்றி மார்க்சியும் அணுகி, அதற்கான தோற்றத்துக்கான புறநிலையையும் அதன் மறைவுக்கான புறநிலையையும் சுட்டிக்காட்டி, அரசின் மறைவைப் பற்றி விளக்குகிறது.

 

லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்கிற நூல் சற்று பெரியதாகும், இருந்தாலும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

 

6) சந்தர்ப்பவாதிகள் மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தல்

 

மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துதல் அன்று முதல் இன்று வரை நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதனை அம்பலப்படுத்தி மார்க்சியத்தை நிலைநிறுத்துவது மார்க்சியவாதிகளின் பணியாகும்.

 

இந்த அத்தியாயத்தில் லெனின், காவுத்ஸ்கி, பிளெகானவ் போன்றோர் மார்க்சியத்தை எந்த வகையில் கொச்சைப்படுத்தினர் என்பதையும் அதற்கான சரியான விளக்கத்தையும் கொடுக்கிறார்.

 

முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் உள்ள வேறுபாட்டை காவுத்ஸ்கி புரிந்து கொள்ளவிலை என்று லெனின் சுட்டிக்காட்டி வேறுபாட்டை விளக்குகிறார்.

 

முதலாளித்துவ நாடாளுமன்ற முறையானது ஜனநாயகத்தை அதிகார வர்க்கத்துடன் இணைத்திடுகிறது. அதனால் இது மக்களுக்கானது அல்ல, மக்களுக்கு எதிரானது.

 

பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அதிகார வர்க்கத்தை முழுமையாக ஒழித்திடவும், மக்களுக்கு முழுநிறைவான ஜனநாயகத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அதனால் இது சுரண்டலாளர்களுக்கான அரசு இல்லை, சுரண்டல் சிந்தனையுடையவர்களை அடக்கி ஒடுக்குவதால் இது அவர்களுக்கு எதிரானது.

 

லெனின் கூறுகிற இந்த வேறுபாட்டை அறிந்திடாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று கூறியவுடன் அமைதி விரும்பிகள் கூச்சல் இடுகின்றனர். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துடன் செயல்படக்கூடாது அமைதி காக்க வேண்டும் என்று கூறுகின்றனர். முன்பே கூறியது போல் அரசு பற்றிய மார்க்சிய வர்க்கப் பார்வை இல்லாததே இதற்குக் காரணம் ஆகும்.

 

பெனெகக்குடன் காவுத்ஸ்கியின் வாக்குவாதம் என்கிற உட்தலைப்பிடப்பட்ட பகுதியில் லெனின் கூறுவது மிகவும் முக்கியமானதாகும்.

 

பெனெகக்குடன் காவுத்ஸ்கி விவாதத்தை முன்வைத்து லெனின் மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். அராஜகவாதிகள் மார்க்சியத்திடம் இருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்கு லெனின் கருத்து உதவியாக இருக்கிறது.

 

1. மார்க்சியவாதிகள் அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர், ஆனால் சோஷலிசப் புரட்சியின் விளைவாக தோன்றிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற அரசின் மூலம் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டப் பிறகு, அரசு உலர்ந்து உதிரும், இப்படிதான் அரசு ஒழியும் என்று மார்க்சியவாதிகள் கூறுகின்றனர்.

 

அராஜகவாதிகள் அரசை ஒழிப்பதற்கான நிலைமைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமலேயே எடுத்தயெடுப்பிலே அரசை அடியோடு ஒழிக்க விரும்புகிறார்கள்.

 

2. மார்க்சியவாதிகள், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று கொண்டவுடன், கம்யூன் வகைப்பட்ட அரசு ஒன்றை நிறுவிக் கொள்வது அவசியம் என்பதை அங்கீகரிக்கின்றனர். அராஜகவாதிகள், புரட்சிகர பாட்டாளி வர்க்கம், அரசு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை மறுக்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தேவையை நிராகரிக்கிறார்கள்.

 

3. மார்க்சியவாதிகள் தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்கள்.

 

தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி கொடுக்க வேண்டுவது மார்க்சியர்களின் பணி என்று கூறுவதை நம் நாட்டில் உள்ள அராஜகவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அரசு என்றால் உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவி. எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமென, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் சாரப் பொருள் என்று மார்க்சியம் கூறுவதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்.

 

இதைக் கூறுகின்ற இடத்தில், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை “பன்றித் தொழுவமே” ஆனாலும்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

முக்கியமாய் சூழ்நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள திராணியற்றதாய் இருந்தார்கள் என்பதற்காக அராஜகவாதிகளிடம் இருந்து தயவுதாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது என்று லெனின் கூறியிருப்பதை அராஜகவாதிகள் கவனிப்பதில்லை.

 

பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு, நாடாளுமன்றத்தை மார்க்சிய வழியில் நின்று விமர்சிக்கத் தெரிந்திருக்க வேண்டும், அதே நேரத்தில், சூழ்நிலைமை புரட்சிகரமாக இல்லாத போது முதலாளித்துவ நாடாளுமன்ற முறை என்பது பன்றித் தொழுவமே ஆனாலும்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

நாடாளுமன்றத்தில் முற்ற வீழ்ந்துகிடப்பது, நாடாளுமன்றத்தை முற்றப் புறக்கணிப்பது என்பது மார்க்சியம் ஆகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

கம்யூனிஸ்டுகள் அரசை செயல்தந்திரமாக (Tactics) பயன்படுத்துகிறார்கள், இறுதிக்குறிக்கோளாகப் (Strategy) பயன்படுத்துவதில்லை.

லெனின் “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் நாடாளுமன்றத்தைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார், இருந்தாலும் ““இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு” என்கிற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். ““இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு” என்கிற நூலைப் பற்றிய வகுப்பில் நாடாளுமன்றத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

7) 1905, 1917 ஆகிய ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சியின் அனுபவம்

 

1905, 1917 ஆகிய ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சியின் அனுபவம்” என்கிற ஏழாவது அத்தியாயத்தை லெனின் எழுதி முடிக்கவில்லை. புரட்சியின் அனுபவத்தை, எழுதுவதைக் காட்டிலும் நேரில் வாழ்ந்து காண்பது இனிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என்கிற குறிப்புடன் லெனின் இந்த நூலை முடித்துக் கொண்டார்.

 

இருந்தாலும் 1905ஆம் ஆண்டு புரட்சியைப் பற்றியும், 1917ஆம் ஆண்டு புரட்சியைப் பற்றியும் மற்ற நூல்களில் லெனின் எழுதியதைக் கொண்டு நாம் அவரது கருத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

 

இறுதி அத்தியாயம் முடிக்காத நிலையிலும் இது ஒரு முக்கியமான நூலாகும். அரசு பற்றிய மார்க்சியப் பார்வையில் ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு “அரசும் புரட்சியும்” என்கிற நூலைத் தவிர வேறு எந்த நூலும் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். “அரசும் புரட்சியும்” என்கிற லெனினது நூலை நேரடியாக ஒவ்வொரு கம்யூனிஸ்டும் படிக்க வேண்டும், அதன் அடிப்படையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று கூறி, இன்றைய வகுப்பை நிறைவு செய்கிறேன்.

 

அ.கா.ஈஸ்வரன்
9884092972

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

செந்தளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள அரசும் புரட்சியும் நூலினைப் பெற தொடர்புகொள்ளவும் - 95437 38415