"பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" எனும் லெனின் நூலில் "அனுபவவாதம்" என்பதன் பொருள் என்ன?? - அறிமுகவுரையின் தொடர்ச்சி
அ.கா. ஈஸ்வரன்
“அனுபவவாதம்” என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அகநிலை கருத்துமுதல்வாதம் என்கிற “அனுபவவாத விமர்சனம்”
லெனின் ரஷ்ய மொழியில் எழுதிய நூல் “Материализм и эмпириокритицизм” இதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தலைப்பு "Materialism and Empirio-criticism" இதனை தமிழில் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்று மொழிபெயர்த்துள்ளனர்.. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த, இந்த நூலின் பகுதியை “முன்னேற்றப் பதிப்பகம்” வெளியிட்டபோதும் இதையே தலைப்பாக வைத்தனர்.
இதில் “அனுபவவாதம்” என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
முதல் குழப்பம் “அனுபவவாதம்” என்கிற சொல்லில் இருக்கிறது. அனுபவவாதம் என்கிற சொல் அகநிலைவாதம் என்கிற போக்குடையவர்களைக் குறிக்கிறது. குறிப்பாக மாவோ கட்சிக்குள் இருக்கும் போக்காகக் குறிப்பிடுகிற அகநிலைவாதம் (Subjectivism) என்பதையே லெனின் இந்த நூலில் அனுபவவாதம் என்று கூறி விமர்சித்துள்ளார் என்று பல தோழர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு குழப்பம் என்னவென்றால், பொருள்களின் வழியாகக் கிடைக்கும் அறிவு மட்டுமே உண்மை என்று கூறுகிற போக்கினை அனுபவவாதம் என்று கூறுவது. பொருள்களின் மூலமாகக் கிடைக்கும் அறிவை மறுக்கிற விமர்சனம் ‘அனுபவவாத விமர்சனம்”. அதாவது பொருள் வழியில் கிடைக்கிற அனுபவத்தை அடிப்படையாக் கொண்ட பொருள்முதல்வாதத்தை விமர்சிப்பதே “அனுபவவாத விமர்சனம்” என்பதாகப் புரிந்து கொள்வது.
இவ்விரண்டு புரிதலும், லெனின் எழுதிய இந்த நூலின்படி எவ்வாறு தவறு என்பதை பார்ப்போம்.
கம்யூனிஸ்டுக் கட்சியில் உள்ள தோழர்களிடையே காணும் அகநிலைவாதப் போக்கை மாவோ சுட்டிக்காட்டுவது வேறு, இந்த அனுபவவாதம் என்கிற அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்பது வேறு.
அகநிலைக் கருத்துமுதல்வாதம் புறநிலையின் இருப்பை மறுத்து பேசுகிறது, மேலும் புலன் அனுபவங்களின் வெளிப்பாடாக புறநிலைப் பொருளை பார்க்கிறது. வெளியில் உள்ள பொருளுக்குத் தனித்த இருப்பு இல்லை, புலனுணர்வு அல்லது மனம் இல்லை என்றால் புறப் பொருள் இல்லை என்பதே இந்தத் தத்துவத்தின் அடிப்படை ஆகும்.
மாவோ கூறுகிற அகநிலைவாதம் (Subjectivism) என்கிற போக்கு புறநிலையை ஏற்றுக் கொண்டிருந்தாலும் தம்முடைய அனுபவங்களை புறநிலையோடு பொருத்திப் பார்க்காமலும் சரிபார்க்காமலும் அப்படியே ஏற்றுக் கொள்வது. நடைமுறையையும் கோட்பாட்டையும் இணைத்துப் பார்க்காமல் அனுபவங்களையே ஆர்வமிகுதியினால் ஏற்றுக் கொள்வது. இத்தகைய அகநிலைவாதப் போக்குடையவர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகளைப் போல புறநிலையை மறுப்பதும் இல்லை, அகநிலையின் வெளிப்பாடே காணும் பொருள் என்று கூறவும் இல்லை.
“நமது படிப்பினைச் சீர்செய்வோம்” என்கிற கட்டுரையின் தொடக்கத்தில் மாவோ அகநிலைவாதம் என்கிற போக்கை தவிர்க்க வேண்டும் என்றால் புறநிலை எதார்த்தத்தில் இருந்து செயலாற்ற வேண்டும் என்று மார்க்சிய மூலவர்கள் கூறியதை நினைவுகூறுகிறார்.
“மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மனச்சான்றுடன் நிலைமைகளை பயின்று அகநிலை விருப்பங்களிலிருந்து இல்லாமல் புறநிலை யதார்த்தங்களிலிருந்து செயலாற்றுவது இன்றியமையாதது என்று நமக்கு கற்பித்து உள்ளனர்.”
(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)
நடப்பு நிலைமைகளை ஒதுக்குதல், வரலாற்று தொடர்ச்சியை பார்க்காதிருத்தல், மார்க்சிய-லெனினிய போதனையை பின்பற்றாமை ஆகிய குறைபாடே அகநிலைவாதப் போக்கு தோன்றுவதற்குக் காரணமாக மாவோ கூறுகிறார்.
“நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந் தள்ளுதல், மார்க்சிய - லெனினியத்தைப் பயன்படுத்துதலை புறந் தள்ளுவது ஆகிய மூன்று கூறுபாடுகள் அனைத்தும் மோசமான வேலைப்பாணியை கொண்டிருக்கின்றன. அதன் பரவல் நமது பல தோழர்களுக்குத் தீங்கை ஏற்படுத்துகிறது.
உண்மையில் நமது அணிகளில் இந்த வேலைப்பாணியினால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ள பல தோழர்கள் உள்ளனர். அவர்கள் நாடு, மாகாணம், கவுன்டி அல்லது மாவட்டத்திற்கு வெளியே மற்றும் உள்ளே இருக்கின்ற குறிப்பான நிலைமைகளைப் பற்றி முறையான முழுமையான ஆய்வை மேற்கொண்டு பயில்வதற்கு விருப்பமில்லாமல் குறைபாடான அறிவு மற்றும் “அது அவ்வாறே இருந்தாக வேண்டும். ஏனெனில் எனக்கு அவ்வாறே தெரிகிறது” என்ற அடிப்படையின் மீதே உத்தரவுகளை இடுகிறார்கள். வேறு எந்த அடிப்படையும் இல்லை. நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைப் பாணி நிலவுகிறது அல்லவா?”
(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)
அகநிலைவாதம் என்கிற போக்குடையோர் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை மீறுவதைப் பற்றி மாவோ கூறுகிறார்.
“நாம் மார்க்சியத்தைப் பயின்று கொண்டிருக்கிற போதிலும் நம்மில் பலர் அதைப் பயிலும் வழியானது மார்க்சியத்திற்கு நேரடி யாக எதிராகச் செல்கிறது. சுருக்கமாக கூறுவதெனில். அவர்கள், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரால் நமக்கு அக்கறையோடு வற்புறுத்தி கூறப்பட்ட அடிப்படை கொள்கைநெறி யான (Principle) கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான ஐக்கியத்தை மீறுகின்றனர். அவர்கள் அக்கொள்கைநெறியை மீறிய தோடு நடைமுறையிலிருந்து கோட்பாட்டைப் பிரித்தல் என்ற தங்களுக்கு சொந்தமான எதிர்நிலைக் கொள்கைநெறியைக் கண்டு பிடிக்கின்றனர்”
(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)
புறநிலையை கவனிக்காமல் ஆர்வத்தினால் எழும் உற்சாகத்தினைச் சார்ந்து; கொள்கைக்கு மாற்றாக உணர்வுகளை வைப்பதினால் ஏற்படும் அகநிலைவாதம் என்கிறப் போக்கை மாவோ கூறுகிறார்.
“அகநிலை உளப்பாங்கு.
ஒரு நபர் இந்த உளப்பாங்கை கொண்டு சூழ்நிலை பற்றிய முறையான முழுமையான பயிலுதலை மேற்கொள்ளாமல் திடீரென்று எழுகிற அகநிலை உற்சாகத்தினைக் கொண்டு பணிபுரிந்து இன்றைய சீனாவின் முகத்தைப் பற்றித் தெளிவற்ற சித்திரத்தை கொண்டிருக்கிறார்.
… … …
… … …
இன்றையு சீனா அல்லது நேற்றைய சீனாவைப் பயில்வதில் விருப்பமின்றி தங்களின் விருப் பத்தை எதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் “கோட்பாடுகளை” பயில்வதற்கு கட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். மற்ற பலரோ நடைமுறை வேலையினைச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கூட புறநிலை நிலைமைகளைப் பயில்வதற்கு தங்களது கவனத்தினைச் செலுத்தாமல் அடிக்கடி வெறும் ஆர்வத்தினை சார்ந்து கொள்கைக்கு தங்களது தனிநபர் உணர்வுகளை மாற்றாக வைக்கின்றனர். இவ்விரு வகையிலான நபர்கள் அகநிலையைச் சார்ந்துள்ளதோடு புறநிலை எதார்த்தங்களையும் புறக்கணிக்கின்றனர்.”
(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)
அகநிலைவாதப் போக்கானது மார்க்சிய-லெனினியத்துக்கும் அறிவியலுக்கும் முரணாக இருப்பதையும், அகநிலைவாதப் போக்கை தூக்கி எறிந்தால் மட்டுமே மார்க்சிய-லெனினியம் என்கிற பேருண்மையை மேலோங்கச் செய்ய முடியும் என்று மாவோ கூறுகிறார்.
“தொகுத்திடுகையில், இந்த அகநிலை வழிமுறையானது மார்க்சிய - லெனினியத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பட்ட தாகவும் (உழைக்கும் வர்க்கம், மக்கள் மற்றும் தேசத்திற்கே) ஒரு வல்லமைமிக்க எதிரியாகவும் உள்ளது. இது கட்சியின் மன வலிமையில் உள்ள கறைப்பட்ட தன்மையின் ஒரு வெளிப்பாடே. ஒரு வல்லமைமிக்க எதிரி நம்முன் நிற்கிறான். அகவியத்தைத் (subjectivism) தூக்கி எறியும்போது மட்டுமே மார்க்சிய - லெனினியம் என்ற பேருண்மை மேலோங்க இயலும்; கட்சியின் மனவலிமை வலுப் படுத்தப்பட இயலும். புரட்சி வெற்றிகரமாக இருக்க இயலும். அறிவியல் உளப்பாங்கு இல்லாமல் இருத்தல் அதாவது, கோட்பாட்டையும் நடைமுறையையும் ஐக்கியப்படுத்தும் மார்க்சிய - லெனினிய அணுகுமுறை இல்லாமல் இருத்தல் என்பது கட்சியின் பால் உணர்வு இல்லை அல்லது குறைபாடாக இருக்கிறது என்றே பொருளாகிறது என வலியுறுத்தி ஆக வேண்டும்.”
(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)
மாவோ இங்கே குறிப்பிடுகிறவை அனைத்தும் அகநிலைவாதம் (Subjectivism) என்கிற போக்கே ஆகும். இந்த அகநிலைவாதப் போக்கு புறநிலையை ஒப்புக் கொள்கிறது, ஆனால் அனுபவத்தை நடைமுறையோடு சரிபார்க்காது, கோட்பாட்டை நடைமுறையோடு இணைக்காது போனதினால் ஏற்பட்ட குறைபாடு ஆகும்.
லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலில் விமர்சிப்பது, அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும். இந்த அகநிலை கருத்துமுதல்வாதம் புறப் பொருள் தனித்து இருப்பதை மறுப்பதோடு, புறப் பொருளை புலனுணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமே கொள்கிறது. மேலும் இந்த அகநிலைக் கருத்துமுதல்வாதமானது புறநிலை எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் புலனுணர்வை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் “நான்” மட்டுமே இந்த உலகில் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறது. மாவோ குறிப்பிடுகிற அகநிலைவாதமானது “நான்” மட்டும் இருப்பது என்கிற கற்பனையை ஏற்றுக் கொள்ளவில்லை.
“அனுபவவாத விமர்சனம்” என்று லெனின் தனது நூலில் குறிப்பிடுவது அகநிலைவாதப் போக்கை அல்ல, அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்கிற தத்துவத்தை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நூலில் லெனின், “அனுபவவாத விமர்சன தத்துவத்தின் தொடக்கம் அகநிலைக் கருத்துமுதல்வாதம்..” (பக்-115) என்று தெளிவாகவே கூறியுள்ளார்.
“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் எஸ்.தோதாத்ரி தமது உரையில், “..பொருள் மூலமாகக் கிடைப்பது மட்டும் தான் உண்மை என்று கூறும் தத்துவப் போக்கினை அனுபவவாதம் என்று அழைக்கின்றனர். இது பற்றிய விரிவான ஆய்வுதான் லெனினது இந்த நூல்” என்று எழுதியுள்ளார்.
அனுபவவாதம் இரண்டு போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாத அனுபவவாதம், மற்றொன்று பொருள்முதல்வாத அனுபவவாதம். எஸ்.தோதாத்ரி அவர்கள் இங்கே பொருள்முதல்வாத அனுபவவாதத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் லெனின் இந்த நூலில் கருத்துமுதல்வாத அனுபவவாதத்தைத்தான் விமர்சிக்கிறார்.
எஸ்.தோதாத்ரி அவர்களின் கூற்று, பொருள்முதல்வாத அனுபவவாதத்தை மாஹி போன்றோர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிற தவறானப் புரிதலுக்கு வழிவகுக்கிறது. அதாவது பொருள்முதல்வாத அனுபவவாதத்தை மாஹி விமர்சிப்பதனால் மாஹியர்களின் தத்துவம் “அனுபவவாத விமர்சனம்” என்று கூறப்படுகிறது என்ற தவறானப் புரிதலுக்கு இடம் கொடுக்கிறது.
எஸ்.தோதாத்ரி அவர்களின் கூற்றின் அடிப்படையில் நானும் தொடக்கத்தில், “பொருளை முதலாகவும் அடிப்படையாகவும் கொண்ட பொருள்முதல்வாதத்தை “அனுபவவாதம்” என்றும் கூறுவர். ஏனென்றால் அனுபவத்தின் அடிப்படையில் அறிவைப் பெறுவதினால் இவ்வாறு அழைக்கப்பட்டது. பொருள்முதல்வாதத்தை விமர்சிக்கும் மாஹ் போன்றோர்களின் விமர்சனத்தை “அனுபவவாத விமர்சனம்” என்று கூறப்படுகிறது.” என்று எழுதினேன். இது தவறு என்பதனால் தற்போது இதனை நீக்கிவிட்டேன்.
“அனுபவவாதம்” “அனுபவவாத விமர்சனம்” ஆகியவை இரண்டும் தனித்தனித் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவை, ஆனால் இரண்டும் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது. “அனுபவவாதம்” என்கிற தத்துவத்தின் வளர்ச்சியாக “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவத்தைக் கூறலாம்.
கருத்துமுதல்வாத அனுபவவாதத்துக்கும் பொருள்முதல்வாத அனுபவவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.
புலன் அனுபவம்தான் அறிவுக்குத் தோற்றுவாய் என்று கருத்துமுதல்வாத அனுபவவாதம் கூறுகிறது. பெர்க்கிலி, ஹீயூம் ஆகியோர் இந்தத் தத்துவத்தைப் போதிக்கின்றனர். புறநிலையாக இருக்கக்கூடிய புற உலகே, புலன் அனுபவத்திற்கான அடிப்படை என்று கூறுவது பொருள்முதல்வாத அனுபவவாதம். பிரான்சிஸ் பேகான், லாக் ஆகியோர் இந்தத் தத்துவத்தைப் போதிக்கின்றனர்.
லெனின் இந்த நூலில் பெர்க்கிலியைப் பின்பற்றுகிற மாஹி, அவெனாரியஸ் போன்றோர்களின் கருத்துமுதல்வாதம் என்கிற அனுபவவாத விமர்சனத்தை எதிர்த்து விமர்சிக்கிறார். இந்தக் கருத்துமுதல்வாதம் என்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும்.
இந்த நூலில் லெனின் “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவத்தை விமர்சிப்பதினால், இந்தச் சொல்லை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
“அனுபவவாத விமர்சனம்” (Empirio-Criticism) என்றால் அனுபவத்தின் விமர்சனம் (criticism of experience) என்பதே பொருளாகும்.
அனுபவவாத விமர்சனம் என்பது புலன் அனுபவத்தை மட்டுமே உண்மையானதாகக் கருதுவதோடு இந்த புலன் அனுபவத்தை இறுதியானதாக, உறுதியானதாக, அறுதியானதாக (absolute) கருதுகிறது.
ஆங்கிலத்தில் உள்ள Criticism (விமர்சனம்) critique (பகுத்தாய்வு) என்கிற இரண்டு சொல்லும் ஒரே பொருளை கொடுப்பதாகத் தோன்றினாலும் இரண்டுக்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. விமர்சனம் (Criticism) என்கிற சொல் எதையாவது அல்லது யாரையாவது பற்றிய உறுதியான இறுதியான, அறுதியான தீர்ப்பை வழங்குகிறது. பகுத்தாய்வு (critique) என்கிற சொல் எதையாவது அல்லது யாரையாவது பற்றிய சரி, தவறு என்பதை பிரித்து காட்டுகிறது. சரியானதை ஏற்பதற்கும் தவறானதை ஒதுக்குவதற்கும் பகுத்தாய்வு உதவுகிறது. ஆனால் விமர்சனம் என்பது சரி, தவறு என்று பிரிக்காமல் அறுதியானதாகக் கருதுகிறது. அனுபவவாத விமர்சனம் (Empirio-Criticism) அனுபவத்தை அறுதியானதாகக் கொள்கிறது.
“அனுபவவாத விமர்சனம்” என்பது அனுபவத்தை விமர்சன வழியில் அறுதியானதாக கருதுகிறது. இதற்கு அனுபவவாத விமர்சனம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்த அனுபவத்தை அனுபவவாத விமர்சகர்கள் தூய அனுபவம் என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தூய அனுபவம் என்பது அனுபவமே முதன்மையானது, உண்மையானது என்றும் புறப்பொருள் அனுபவத்தின் வெளிப்பாடு, இரண்டாம் நிலையினது என்றும் கருதுகிறது. அதனால்தான் இந்த தூய அனுபவத்தின் மீதான விமர்சனம் என்கிற தத்துவம் அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.
தூய அனுபவத்தின் அகநிலைக் கருத்துமுதல்வாத தத்துவவாதியான பிச்டேயின் கூற்றை மேற்கோளாக லெனின் தருகிறார்.
“ஒரு மனிதன் அனுபவத்தைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை என்பதுதான் எனது தத்துவத்தின் ஆன்மாவாக உள்ளுணர்வாக உள்ளது என்பதை நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன்; ஒரு மனிதனுக்குக் கிடைப்பதெல்லாம் அவனது அனுபவத்தின் மூலம் மட்டுமே….” (பக்கம் - 185)
“அனுபவவாத விமர்சனம்” என்பது புலன் அனுபவத்தை விமர்சிப்பதன் மூலம் அறிந்து கொண்ட முடிவு என்னவென்றால், புலனே அனுபவத்துக்கு அடிப்படை, உலகம் என்பது புலன் அனுபவத்தின் வெளிப்பாடு.
“அனுபவவாத விமர்சனம்” என்கிற அகநிலைக் கருத்துமுதல்வாதத் தத்துவமானது, கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்கிற இருபெரும் முகாமை மறுத்து தத்துவத்தை ஒன்றெனக் கூறுகிறது.
அகநிலைக் கருத்துமுதல்வாதமான “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவப் போக்கையே லெனின் இந்த நூலில் விமர்சித்துள்ளார். அனுபவவாத விமர்சகர்கள் பல்வேறு நாடுகளில் பலர் உருவாகினர். இதில் குறிப்பிடத் தக்கவர்கள் மாஹ், அவெனாரியஸ், போக்தனோவ், பஸாரவ், லுனாசார்ஸ்கி, பெர்மன், ஹெல்பாண்ட், யுஷ்கேவிச், சுவோரோவ்.
பொருள்முதல்வாதத்தை விமர்சிப்பதனால் இவர்களின் தத்துவத்தை அனுபவவாத விமர்சனம் என்று கூறவில்லை, புலன் உணர்வுகளை விமர்சிப்பதன் மூலம் தங்கள் தத்துவத்தைப் பெற்றதனால் அனுபவவாத விமர்சனம் என்று இத்தத்துவத்துக்கு இவர்களே பெயரிட்டுக் கொண்டனர்.
இந்தத் தெளிவைப் பெற்று, “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் படித்து பயன்பெறுவோம்.
- அ.கா. ஈஸ்வரன்