நூல் அறிமுகம்: சங்க இலக்கியம் உடல் மனம் மொழி

அ.கா.ஈஸ்வரன்

நூல் அறிமுகம்: சங்க இலக்கியம் உடல் மனம் மொழி

சங்க இலக்கியம் (உடல்- மனம்- மொழி) என்கிற இந்த நூலை சக்தி ஜோதி பெண்ணியப் பார்வையில் எழுதியுள்ளார். முனைவர் பட்டத்துக்காக அளிக்கப்பட்ட ஆய்வு, கல்விப் புலம் கடந்து பரவலானவர் வாசிக்க வேண்டும் என்பதற்காக ஆய்வுநெறி முறைகள் சிலவற்றை நீக்கி, மாற்றங்கள் செய்யப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆய்வின் தலைப்பு, சங்க இலக்கியத்தில் ஆண் மையக் கருத்துருவாக்கம். இந்த நூலைப் படிக்கும் போது ஆய்வேட்டின் தலைப்பை மனதில் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆணாதிக்கக் கருத்துக்களின் தோற்றத்தையே இந்த நூல் பேசியிருக்கிறது. சங்க இலக்கியத்தையோ, சங்க இலக்கிய ஆய்வுகளையோ படிக்காத ஒருவர், இந்த நூலை  முதலில் எடுத்துப் படிக்கும் போது சங்க இலக்கியத்தில் ஆணாதிக்கக் கருத்துக்களே காணப்படுவதாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த நூல் தலைப்பைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ளும் போது தவறானப் புரிதலுக்கு இடம் இருக்காது. 

இந்த நூல், பெண்களின் உடல், மனம், மொழி அடிப்படையில் எவ்வாறு ஆணாதிக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக சான்றுகளுடன் நிறுவியுள்ளது. முதல் இயல், தந்தை வழிச் சமுதாயத் தோற்றமும் வளர்ச்சியும் என்கிற தலைப்பைக் கொண்டுள்ளது. இதில் தாய்வழிச் சமூகத்தின் மறைவும் தந்தை வழிச் சமூகத்தின் தோற்றமும் பற்றி பேசுகிறது. 

தாய்வழிச் சமூகத்தின் தோற்றத்துக்கான காரணத்தை சிறப்பாக சுட்டிக்காட்டுகிறார் இந்நூலாசிரியர். உணவுத்தேடல், இனப்பெருக்கச் செயல்பாடு ஆகியவைகளை மட்டுமே கொண்டிருந்த ஆதிச் சமூக வாழ்க்கை, பிள்ளைப் பேற்றின் காரணமாகவும், உணவுப் பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதில் பெண்ணின் செயல்பாடுகள் முதன்மையாக இருந்ததால் தாய்வழிச சமூகம் என்கிற பொதுவுடைமைச் சமூகம் என்று வழங்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக, உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டது, அப்போது சமூகத்துக்கு குறைந்தபட்சத் தேவையானது போக  உபரி ஏற்பட்டது, அதனால் உபரியை சேமிக்க முடிந்தது, சேமிக்கத் தொடங்கிய பொருட்களின் மீது உரிமை கொண்டாடத் தொடங்கிய நிலையே உடைமைச் சமூகத்தைத் தோற்றுவித்தது. இந்த நிலைமையே தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சிக்கும் சொத்துடைமைச் சமூகத்தின் தோற்றத்துக்கும் அடிப்படைக் காரணமாகியது.

தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சியும் சொத்துடைமைச் சமூகத்தின் தோற்றமும் எவ்வாறு ஆணாதிக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். "உணவுத்தேடலும் பகிர்தலுமாக அமைந்திருந்த காலம் வரையில் பெண்களின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. காட்டினை எரித்து நிலத்தை விரிவுபடுத்தி, வேளாண்மையை நிலைப்படுத்தி, கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய மனித குலத்தில் ஆணின் செயல்பாடுகள் மேலோங்கின. நிலைப்படுத்தப்பட்ட வேளாண் சமுதாயத்தில் ஏற்பட்ட உற்பத்தி, உபரி, உடைமை ஆகியனவற்றின் காரணமாக ஆணுடைய தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டது."  (பக்கம்-41)

தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சியையும் ஆணாதிக்க சமூகத்தின் தோற்றத்தையும் பெண்ணியப் பார்வையில் விளக்கும்போது இந்த நூலாசிரியர் கருத்தியல் வழியில் மட்டும் அணுகாமல், அதற்கான புறநிலைக் காரணங்களைக் கணக்கில் கொண்டுள்ளார். "ஒவ்வொரு நிலப்பகுதியிலும் நிகழ்ந்த உற்பத்தியும், உபரியும் சமுதாய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்தன. உற்பத்தி சார்ந்த தனிமனித உழைப்பு தனியுரிமையை உருவாக்கியது. தன்னுடைய உரிமைப்பொருட்களின் மீதான உடைமையுணர்வும், தன்னுடைய வாரிசுகளின் மீதான உரிமையும் இணைந்து குடும்ப அமைப்பைத் தோற்றுவித்தன. ஆண், பெண் இருவரும் அவரவர் தம்முடைய விருப்பத்தின்பேரில் ஏற்படுத்திக்கொள்கிற தனியுரிமைதான் குடும்ப அமைப்பினை வலுப்படுத்தியது. பல்வேறு புறக்காரணிகளினால் குடும்ப அமைப்பு தோற்றம் பெற்றிருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நிகழ்கிற விருப்பங்கள், மனவேறுபாடுகள் போன்ற அகக்காரணிகளும் முக்கியமானவை. ஒருவர் இன்னொருவர் மீது கொண்டிருக்கும் அன்பு, காதல், பாலுறவு விருப்பங்கள், உடைமைக்கான உரிமைகள் போன்ற அக உணர்வுகள் சார்ந்த செயல்பாடுகளும் குடும்ப அமைப்பு வலிமைபெறத் துணை செய்தன. அகம், புறம் ஆகிய இரு நிலைகளினாலும் குடும்ப அமைப்பின் உருவாக்கம் நிகழ்ந்திருந்தாலும் சமூகம் சார்ந்த புறக்காரணிகளே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளின." (பக்கம்-91) இங்கே நூலாசிரியர் அக உணர்வுகள் சார்ந்த செயல்பாடுகளும் துணை புரிந்தன என்கிறார், கண்டிப்பாக புறநிலை காரணங்கள் அகநிலையில் தான் செயல்படுகின்றன. இந்த அகநிலைப்  போக்கை புறநிலையே தீர்மானிக்கின்றன.

இதனை இந்த நூலாசிரியர் நன்றாகப் புரிந்திருப்பதால்தான், ஆணின் நலம் சார்ந்து பெண் இயங்க வைப்பது என்பது திட்டமிட்ட கருத்தாகக் கொள்ளாமல் புறநிலைமைகளை மையப்படுத்தியே பதிவு செய்துள்ளார். “இதுவொரு திட்டமிட்ட செயலாக நிகழவில்லை. உணவுத்தேடல், உற்பத்தி, உபரி ஆகியன உருவாக்கிய தனிக்குடும்ப அமைப்பு, ஆணைமையமிட்ட அதனுடைய செயல்பாடுகள் ஆண்களின் உடைமைப் பொருளாக பெண்ணையும் கருதிக்கொள்வதற்கான வாய்ப்பினை ஆண்களுக்கு வழங்கின.” (பக்கம் -216) புறநிலைதான் அகநிலையைத் தீர்மானிக்கிறது என்பதை இக் கருத்து வெளிப்படுத்தி உள்ளது.

இரண்டாம் இயல், பெண்ணுடல் பற்றிய அரசியலைப் பேசுகிறது. ஆணாதிக்கப் பார்வையில் பார்க்கும் போது, பெண்ணுக்கென தனித்த, இருப்போ, இயங்கும் தன்மையோ கிடையாது, பெண்ணின் உடல், சமூகத்தின் மையக் கருவான ஆணின் உடலோடு இணைந்திருப்பதன் மூலமே, பெண் தன்னுடைய இருப்பை நிலைப்படுத்திக் கொள்ள முடியுமென நம்பவைக்கப்பட்டுள்ளதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு ஆதாரமாக சங்க இலக்கியப் பாடல்களையும், தொல்காப்பிய இலக்கண நூலின் நூற்பாக்களை இந்த நூலில் சக்தி ஜோதி சான்றாக அள்ளித் தெளித்துள்ளார். சங்க இலக்கியத்தில் இருந்து சரியானப் பாடல்களை தெரிவு செய்வதைப் பார்க்கும் போது அவரது சங்க இலக்கியப் பயிற்சி வெளிப்படுகிறது. இலக்கியம் மட்டுமில்லாது தொல்காப்பிய இலக்கண நூலில் இருந்தும் சரியானதை தெரிவு செய்து பதிந்துள்ளார். இலக்கியத்துக்கு இணையாக தொல்காப்பிய இலக்கண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டப்பட்டுள்ளது. இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டையும் முழுமையாக இந்த நூலாசிரியர் படித்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு தெளிவாக சங்க இலக்கியம் படித்த சக்தி ஜோதி பெண்ணியப் பார்வையில் ஆணாதிக்கத்தை மட்டும் எழுதுவதாக இல்லாமல், சங்க இலக்கியத்தில் அகம், புறம், குடும்பம், இனக்குழுவின் வீழ்ச்சி, தாய்வழி சமூகத்தின் எச்சம், பண்டையத் தமிழரின் வழிபாடு, அரசின் தோற்றம் இதுபோன்றவற்றையும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் ஆணாதிக்கம் என்பது ஒரு பகுதிதான். சங்க இலக்கியத்தில் பல சமூக மாற்றங்கள் காணப்படுகிறது. அவைகளைப் பற்றியும் சக்தி ஜோதி தொடர்ந்து எழுதினால், சான்றாதாரத்துடன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏன் இப்படி கூற வேண்டியிருக்கிறது என்றால், இந்த நூலில் பெண்ணியப் பார்வை சற்று தூக்கலாகக் காணப்படுகிறது. அனைத்தையும் ஆணாதிக்கப் பார்வையில் சுருக்கப்படுவதாகத் தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 155-வது பக்கத்தில் சுட்டப்பட்ட குறுந்தொகைப் பாடலைச் சொல்லலாம்.

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்-

திதலை அல்குல் என் மாமைக் கவினே. (குறுந்.-27)

இதற்கு விளக்கம் கொடுக்கும் போது இந்த நூலாசிரியர், தன்னுடைய உடலின் தவிப்பு தலைவனுக்கு உரியதாகப் பயன்பட வேண்டும் என்பதாக கூறியுள்ளார். மேலும் பெண்ணின் புழுங்குவெளியானது இல்லமென்பது இப்பாடலின் உட்குறிப்பு என்று முடிக்கிறார். இந்தப் பாடலில் தலைவனை நினைத்து மட்டும் பேசாமல் தன்னைப் பற்றியும் தலைவி பேசியுள்ளார். இதனை இந்நூலாசிரியர் கணக்கில் கொள்ளாது போனதற்கு அவரது அதீதப் பெண்ணியப் பார்வையே காரணமாக இருக்குமோ என்கிற ஐயம் எழுகிறது.

"நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது."

இங்கே தலைவி தலைவனை மட்டுமல்லாது, தன்னையும் வலியுறுத்தியே கூறியுள்ளார். “எனக்கும் ஆகாது” என்று தலைவி தன்னை முன்னிலைப் படுத்தியே கூறியுள்ளார். இந்தப் பாடலில் இரண்டு பேர்களின் காதல்வயத்தையே பேசுகிறது. இந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்றப் பாடல், இதனை ஆணாதிக்கப் பாடலாக சுருக்கும் போது அதன் சுவை முழுமையும் கிடைக்காமல் போகிறது. 

இந்த நூலாசிரியர் குறிப்பிடுவது போல பெண்ணின் மனநிலையை முன்வைத்துப் பாடியதே, குறுந்தொகை 28வது பாடல்.

முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?

ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,

'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?-

அலமரல் அசைவளி அலைப்ப, என்

உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. (குறுந்.-28)

"சுழன்று வருகின்ற தென்றல் காற்று எனக்குக் காம நோயைத் தந்து என்னை வருத்துகிறது. எனக்கு வருத்தத்தை தரும் என்னுடைய காமநோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து நான் முட்டிக் கொள்வேனா? அவர்களைத் தாக்குவேனா? அல்லது, ஏதாவது ஒரு போலிக் காரணத்தை முன்வைத்து, ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா? என்ன செய்வது என்பதை அறியேன்."

இதுபோன்ற தலைவியின் மனதை வெளிப்படுத்தும் பாடல்  சங்க இலக்கியத்தில் நிறைந்து காணப்படவில்லை என்பது உண்மைதான், ஆனால் இதனை சுவைப்பது போல் அனைத்தையும் சுவைக்க வேண்டும், அனைத்தையும் ஆணாதிக்கமாக மட்டும் பார்த்தால் அதன் சுவையை அறியாமல் போய்விடுவோம். சுவை மட்டுமல்ல மற்ற தகவல்கள் பெறாமல் போக நேரிடும். நமக்கு சுவை என்பது தகவலை அறிவதற்கே ஆகும்.

"பொருளீட்டுதல் ஆண்களுக்கு உயிர். பெண்களுக்கோ அவர்களது கணவனே உயிர்." (குறுந்.-135) என்கிற கூற்றில் உள்ள ஆணாதிக்கக் கருத்தை எதிர்க்காமல் இருக்க முடியாது. பெண்ணுக்கு என்று ஒர் உடல் இருக்கிறது, உயிர் இருக்கிறது, மனம் இருக்கிறது இவை அனைத்தையும் மறந்து கணவனை உயிராகக் கொள்வது என்பது ஆணாதிக்கப் பார்வையே ஆகும். இதை இலக்கிய சுவையுடன் கூறினாலும் விமர்சிக்கப்பட வேண்டியதே. ஆனால் இதைப் போன்றே அனைத்தையும் பார்க்க முடியாது. இலக்கியச் சுவையை மறக்கும் அளவுக்கு ஆணாதிக்கமாக சங்க இலக்கியத்தைப் பார்க்க வேண்டாம் என்பதே எனது கருத்து. 

கைம்மை நோன்பு என்பது ஆணாதிக்கத்தையும் பெண் அடிமைப்படுத்தியதையும் வெளிப்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இத்தகையப் போக்கை விமர்சிக்காமல் இருக்க முடியாது. எதை விமர்சிக்க வேண்டுமோ அதைமட்டும் விமர்சிப்போம். மொத்த சங்க இலக்கியத்தையும் ஆணாதிக்க இலக்கியமாக சுருக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

“கலம் தொடா மகளிர்” என, மாதவிலக்கான மகளிரைத் தீட்டென கருதி ஒதுக்குவது கண்டிப்பாக, இன்றைய நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதே போல பரத்தையர் நிலைமைகளைப் பார்க்கும் போதும் ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தலைவன் தலைவியைப் பிரிந்து, பரத்தியரை நாடிச் செல்வதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொண்டிருப்பது (தொல்-பொருள்-கற்பியல் - 46) விமர்சிக்க வேண்டிய ஒன்றாகும். அதுவும் என்மனார் புலவர் என்று தொல்காப்பியருக்கு முன்பே பலர் கூறியதாக தெரிவிப்பதை இன்றைய நிலையில் விமர்சிக்கப்பட வேண்டியதாகும். ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக பரத்தையர் இருப்பை அங்கிகரிக்கின்ற போக்கைப் பார்க்கும் போது பெண்ணுக்கு மட்டும் கற்பு என்கிற கட்டுப்பாடு கற்பிக்கப்படுவதையும் சேர்த்தே பேச வேண்டும். கற்பென்பது பெண்ணிற்கு எத்தகைய பாதுகாப்பையும் தரவில்லை, அது ஆணாதிக்கத்துக்கே உருவானது. 

ஆணாதிக்கச் சமூகத்தில் கற்பென்பது அனைத்துப் பெண்களுக்கும் வலியுறுத்தப்படவில்லை, ஆணின் மனைவியான பெண்ணுக்கே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கற்பை பேணிகாக்கும் சமூகத்தில் பரத்தையர் எப்படித் தோன்றுவர் இதனை பாரதியார் புரிந்தே கவிதை எழுதியுள்ளார்.

ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?

நாணற்ற வார்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும் தான்எரிந் திடாதோ?

(பாரதி அறுபத்தாறு, : 56)

கற்பென்பது சமூகத்தில் இருபாலர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று பாரதி கூறுவதே சரியாக இருக்கும்.

கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5)

சக்தி ஜோதி தன்நூலை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதற்கே எழுதியுள்ளார் அதனை சிறப்பாகவும் செய்துள்ளார். "மனத்தின் விருப்பங்களை வெளிப்படுத்துவதிலும் ஆண், பெண்களுக்கிடையே வேறுபாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. கோபம் ஆணுக்குரியது, அவன் அழக்கூடாதென்றும், பெண்பிள்ளை பொறுமையாகவும், அதிகம் சிரிக்காமலும், உரத்த குரலில் பேசாமலும் மென்மையாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், அழுகையென்பது பெண்களுக்குரியதென்றும் அடையாளமாகின. பெண் குழந்தை வளர்ப்பிலேயே ஆண்களுக்கு பணிந்து நடக்கவும், ஆண்களுக்கு முன்பாக நின்றுகொண்டு மதிப்பளித்துப் பேசவும், எதிர்த்துப் பேசாமலிருக்கவும் பழக்கப்படுத்தப்படுகிறது. சமுதாயமயமாக்கப்பட்ட பெண்ணடிமைக் கருத்துகள் பெண்களின் அனைத்துப் பருவங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றன. தகப்பன், சகோதரன், கணவனென குடும்பத்திலுள்ள ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் வாயிலாக பெண்கள் தங்களுடைய செயல்பாடுகளை ஆண்களைச் சார்ந்ததாக வடிவமைத்துக் கொண்டனர்." (பக்கம் 238-239)

சக்தி ஜோதி குறிப்பிடுவது போல பெண் உடல், மனம், மொழி ஆகிய வழிகளில் அடக்கப்படுகிறார். மொழியின் அடிப்படையில் இலக்கண வாயிலாகவும் கற்பு பெண்ணுக்கு கற்பிக்கப்படுகிறது. உயிரைவிட நாணம் சிறந்ததாகவும் நாணத்தைவிட கற்பு சிறந்ததாகவும் தொல்காப்பியம் என்கிற இலக்கண நூல் பெண்ணுக்கு கற்பைப் பற்றி போதிக்கிறது. பரத்தையரை நாடிச் சென்ற தலைவன், அவளை விடுத்து வீடு திரும்பி வரும் போது, தலைவி, தலைவனை தாயைப்போல பரிவுகாட்டி, நல்லுரைகூறி வரவேற்று, அவனுடைய மனத்துயர் தீர முன்பு போலவே அவனோடு கூடி மகிழ்ந்து இன்புறும்படி தொல்காப்பிய இலக்கணம் கூறுகிறது. இலக்கணம் வகுத்து ஆணாதிக்கம் செயல்பட்டதை நாம் காண முடிகிறது. பெண்ணுக்கு கற்பென்கிறப் பெயரில் கடுமையான கட்டுப்பாட்டை விதித்த தொல்காப்பியம் என்கிற இலக்கணம், ஆணுக்கு முழு சலுகை கொடுத்துள்ளது.

எண் அரும் பாசறை பெண்ணொடு புணரார்.

புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். 

(தொல்காப்பியம் - கற்பியல்-34-35)

பெண்ணை போர்ப் பாசறைக்கு, அழைத்துச் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால், போர்க் காலத்தில் பெண்ணின்பம் வேண்டுவோர் வேறோர் இடத்தில் இன்பம் துய்ப்பர் என்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியம் கற்பியலின் இந்தப் பகுதியை இன்றைய நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் நேர் பொருளில் வகுப்பெடுக்க முடியுமா? முடியாது என்பதே எதார்த்த உண்மை. ஆணாதிக்கச் சூழலை குறிப்பிட்டே வகுப்பெடுக்க முடியும்.

சங்க காலத்தை மற்ற காலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றனர். இந்த நிலை இதற்கு அடுத்தக் காலங்களில் படிப்படியாக குறைந்து போய்விட்டது. சங்க கால பெண்பால் புலவர்கள் அகம் சார்ந்த பாடலோடு புறம் சார்ந்த பாடல்களையும் பாடியுள்ளனர் என்பதை இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

"அகம் சார்ந்த உணர்வுகளைத் தயக்கமின்றி பாடிய சங்கப் பெண்பாற் புலவர்கள் புறப்பாடல்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். அரசியல், சமூகம், போரின் நெறிமுறைகள், தனிமனித அறம், சமூக ஒழுங்கு, வீரம், வெற்றி, கொடையென பல்வேறு நிலைகளில் தங்கள் கருத்துகளை பாடல்களாகப் புனைந்துள்ளனர். உதாரணமாக, பெண்பாற்புலவர்களில் ஔவையை முதன்மையானவராகக் கருதி அவருடைய பாடல்களை ஆய்வு செய்தால், அகம் சார்ந்த கவிதைகள் புனைகிற புலவராக மட்டுமன்றி அரசியல் அறிஞராகவும் செயல்பட்டதை அறியமுடியும்." (பக்கம்-287)

புறநானுற்றின் 187வது பாடலான, “நாடா கொன்றோ, கடா கொன்றோ” என்கிறப் பாடல், பௌத்த இலக்கியமான தம்மபதம் 98 பாடலோடு கருத்துநிலையில் பொருந்துகிறது. நேர் பொருளில் மொழியாக்கம் செய்யப்பட்டது போல் இருக்கிறது, ஆடவர் என்பதற்கு பதில் சான்றோர் என்கிற சொல் காணப்படுகிறது. இதனை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பகுதியைப் படிக்கும் போது சக்தி ஜோதி சங்க இலக்கியத்தை பெண்ணியப் பார்வையோடு நின்று போகாமல், இது போன்ற பார்வையிலும் நிறைய எழுத வேண்டும் என்கிற கோரிக்கை அவர் முன் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எதிர் காலத்தில் அவர் சங்க இலக்கியம் பற்றி பல்வேறு கோணங்களில் எழுதினால் சிறப்பாக இருக்கும், ஏன் இப்படி கூற வேண்டி வருகிறது என்றால், அவர் சங்க இலக்கியத்தை, குறிப்பாக எட்டுத் தொகையினை சிறப்பாகப் படித்துள்ளதை மனதில் கொண்டே இவ்வாறு கோரிக்கை வைக்கப்படுகிறது.

சங்க இலக்கியத்தை உடல், மனம், மொழி என்கிற வகையில் பெண் எப்படி ஆணாதிக்கத்துக்கு உள்ளாகிறார் என்பதை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளது. சில இடங்களில் பெண்ணியப் பார்வை சற்று தூக்கலாகக் காணப்பட்டாலும், அதை ஆணாதிக்க எதிர்ப்பின் விளைவாக எடுத்துக் கொள்ளலாம்.  பெண்ணடிமைத் தனத்துக்கும் ஆணாதிக்கத்துக்கும் புறநிலைக் காரணமாக சக்தி ஜோதி இந்த நூலில் சிறப்பாக குறிப்பிட்டுள்ளதை மனதில் கொள்ளும் போது, இந்த ஆதிக்க நிலை எப்போது, எத்தகைய புறச் சூழ்நிலையில் முழுமையாக முடிவுக்கு வரும் என்பதையும், இன்று நாம் என்னென்ன வழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால், இந்த நூல் கூடுதல் சிறப்பைப் பெறும்.

சமூகத்தில் தனிச்சொத்து முழுமையாக நீக்கப்பட்டு பொதுவுடைமையாக்கும் போது ஆணாதிக்கமும் முழுமையாக மறையும், அதுவரை ஆணாதிக்கத்தை விமர்சித்துப் போராடி, படிப்படியாக மாற்றம் கொண்டு வரவேண்டும். பெண்ணடிமைத் தனத்தைப் புரிந்து கொண்ட முற்போக்காளர்கள் முதலில் ஆணாதிக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவர வேண்டும். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் மாறத் தொடங்குவர். அதுமட்டுமல்லாது பெண்கள், குடும்ப உழைப்பில் இருந்து படிப்படியாக விடுபட்டு, சமூக உற்பத்தியில் ஈடுபட வேண்டும், அவ்வாறு செய்யும் போதே பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து படிப்படியாக விடுபடுவர்.

அணுக்கு சமமாக சமூக உற்பத்தியில் பெண் ஈடுபட வேண்டும், அதே போல குடும்ப வேலைகளை பெண்ணுக்குச் சமமாக ஆணும் செய்திட வேண்டும். பெண்ணினம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு தோன்றியதல்ல, சமூக உழைப்பிற்கு தோன்றியது. பெண் விடுதலை முழுமையாகப் பெற்ற சமூகமே அனைத்து விடுதலைப் பெற்ற சமூகமாக இருக்கும். பெண் விடுதலை அனைத்து விடுதலைக்கும் அடிப்படை. பெண் அடிமைத் தனத்தின் தோற்றத்தை அறிந்து கொண்டால்தான் அதில் இருந்து விடுபடுவதற்கான புரிதல் கிடைக்கும். பெண் விடுதலையின் தேவையைப் புரிந்து கொள்வதற்கும் எந்த வகையில் அடிமைப்படுத்தப்பட்டார் என்பதை அறிந்து கொள்வதற்கும் சக்தி ஜோதி எழுதிய சங்க இலக்கியம் (உடல்- மனம்- மொழி) என்கிற நூலைப் படிக்க வேண்டும். 

கீழடி அகழாய்வு தொல்லியல் பற்றிய அடிப்படைப் புரிதல் பொது மக்களுக்கு ஏற்பட்டது, அதே போல சங்க இலக்கியம் பற்றிய அடிப்படைப் புரிதல் பொது மக்களுக்கு ஏற்பட வேண்டும். அதற்கு இது போன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவரவேண்டும்.

சங்க இலக்கியம் (உடல்- மனம்- மொழி)

சக்தி ஜோதி

NCBH

விலை-ரூ.390/-

அ.கா.ஈஸ்வரன்

(நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் 2025 டிசம்பர் மாத இதழ்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு