நூல் அறிமுகம்: இந்தி எதிர்ப்புப் போரில் திராவிடப் பித்தலாட்டம்
செந்தளம் செய்திப் பிரிவு
இந்தத் தலைப்பை பார்க்கும் போதே பெரியாரிய எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களையும்கூட படிக்கத் தூண்டும் வகையில் சூட்டப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், இன்றுவரை எவரும் படித்து பெரியாரிய பித்து தெளிந்ததாக தெரியவில்லை. 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய திராவிட முன்னேற்ற கழக ஆதரவாளர்ளை நோக்கியும், இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட மாணவ, இளைஞர்களை நோக்கியும் திட்டவட்டமான கேள்வி பதில்களை முன்வைத்தும், மறுக்க முடியாத ஆதாரங்களை முன்வைத்தும் இந்த (இந்தி எதிர்ப்புப் போரில் திராவிட பித்தலாட்டம்) நூலை எழுதியுள்ளார் ஈழத்து சிவானந்த அடிகள். 1938ல் முதன்முதலாக இந்தி எதிர்ப்பு இயக்கம் இவர் தலைமையில்தான் தோற்றுவிக்கப்பட்டது. இராஜாஜியின் கட்டாய இந்தித் திணிப்பு முறியடிக்கப்பட்டதோடு, தாய்மொழி வழிக் கல்வி முறை கட்டாயமாக்கப்படுவதற்கான கோரிக்கையையும் முன்னெடுத்துள்ளார் என்பதை இந்நூலை படிக்கும் போது தெரிய வருகிறது.
ஆனால் இவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் திராவிட மாடல் அரசுகளின் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும், ஏன் பள்ளிப் பாடப் புத்தகங்களிலும்கூட பார்க்க முடியாதளவிற்கு இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்பதை எவரும் ஒப்புக் கொள்ள முடியும்.
திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் 1.5.1955 ஆண்டு வெளிவந்த தனது மன்றம் இதழில் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றம் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்:
“தோழர் ஆச்சாரியார் அவர்கள் 1938-ல் இந்தியைக் கட்டாய பாடம் ஆக்குவேன் என்று அறிவித்தபோது, அதனை எதிர்த்து ஆச்சாரியாருக்கு முதல் தந்தி அடித்தவர் ஈழத்துச் சிவானந்த அடிகளே ஆவார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அவர்தான் துவக்கி வைத்தார். பிறகுதான் நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணாத்துரை போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். ஈழத்துச் சிவானந்த அடிகள் முதற் சர்வாதிகாரியாகப் (தனி ஆணையாளர்) பணியாற்றிச் சிறை புகுந்தார்.”
“அன்று சைவத்தைக் காப்பாற்ற ஈழ நாட்டிலிருந்து ஒரு ஆறுமுக நாவலர் நமக்குக் கிடைத்தார். இன்று தமிழ் மொழியைக் காப்பாற்ற அதே ஈழ நாட்டிலிருந்து ஒரு அடிகள் நமக்குக் கிடைத்திருக்கிறார் எனபதை எண்ணும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்றாலும் உண்மையிலேயே நாங்கள் எல்லாரும் வெட்கப்படுகிறோம்.” என்று தமிழவேள் உமாமகேசுவரன் கூறியுள்ளார்.
“ஈழத்துச் சிவானந்த அடிகள் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டினைத் தமிழ் நாடு என்றைக்கும் மறக்காது” என்ற வெங்கடசாமி நாட்டாரின் நம்பிக்கையை திராவிட மாடல் அரசுகள் பொய்யாக்கியுள்ளன.
இதுபோன்று நாமறிந்த, நாமறியாத பல ஆளுமைகளும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வழிநடத்தியதோடு, இந்தித் திணிப்பை சிவானந்த அடிகளார் தலைமையில் வென்றுக் காட்டியிருப்பதை அறுதியிட்டு கூறியுள்ளனர். ஆனால், இவையனைத்தையுமே திருட்டு திராவிட கும்பல் திட்டமிட்டே மூடிமறைத்து வந்துள்ளது.
இந்தி எதிர்ப்பு போரில் பெரியாரின் எதிர்நிலையும், சண்டித்தனமும்
காலனியரசில் இராஜாஜி முதல்மந்திரியாக ஆட்சியமைத்ததும் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் வேலையைத் துவங்கினார். இத்திட்டத்தை முறியடிப்பதற்கு மறியல் போராட்டம் நடத்துவதற்கான அறிக்கையை தயார் செய்து, முதற்படியாக ஈரோட்டில் அமைந்திருந்த விடுதலை பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றுள்ளார் சிவானந்த அடிகள். இந்தி எதிர்ப்புக்காக பல மாநாடுகள் கூட்டப்பட்டுள்ளது, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்றும் அதன் இறுதியாகத்தான் மறியல் போராட்டம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாக விளக்கியிருக்கிறார். இந்த அறிக்கையை ‘குடிஅரசு’, ‘விடுதலை’ இதழ்களில் வெளியிடுவதற்கு உதவுமாறு பெரியாரை கேட்ட போது அவர் எதிர்நிலை எடுத்ததாக பதிவு செய்துள்ளார். “இது காங்கிரசார் கையாளும் சண்டித்தனம்; சத்தியாக்கிரகம் மறியல் என்பதெல்லாம் வெறுங் கேலிக்கூத்து” என்றுகூறி அந்த அறிக்கையை வெளியிட பெரியார் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
திட்டமிட்டபடி 1.6.1938ல் முதலமைச்சர் இல்லத்தின் முன்பு மறியல் போராட்டம் நடந்துள்ளது. இரண்டு நாளில் மட்டும் 60 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாள் பெரியார் ஈ வே. இராமசாமி அவர்கள் தாமாகவே இந்தி எதிர்பபு நிலையத்து வந்து, மறியல் செய்வதற்காக வந்திருந்த தொண்டர்களை நோக்கி, “இப்படி மறியல் செய்வது காங்கிரசார் மேற்கொள்ளும் பயன்தராத முறையாகும் - சண்டித்தனமாகும். இதில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை” என்ற பழைய காங்கிரஸ் எதிர்ப்பு பல்லவியை மீண்டும் கூறியதோடு, வந்தவர்கள் தங்கள் ஊருக்குப் போவதற்கு வழிச்செலவும் தருவதாகக் கூறினார் என்பதை சிவானந்த அடிகள் பதிவு செய்துள்ளார்
“பெரியார் இராமசாமி அவர்களின் தலையீடு இல்லையென்றால், கருவூர் ஈழத்துச் சிவானந்த அடிகளால் தோற்றுவிக்கப்பட்ட கட்டாய இந்தி எதிர்ப்பில் சிறை சென்றிருப்பேன்.” என்று நாவலர் சோமசுந்தரபாரதியாரின் கூற்று பெரியாரின் சண்டித்தனத்தை உறுதிப்படுத்துகிறது.
பின்னர், பெரியாரின் நண்பர் சி.டி. நாயகத்தின் அறிவுறுத்தலின் பெயரில்தான் இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. இதுவும்கூட காங்கிரஸ் எதிர்ப்பு என்று சந்தர்ப்பவாத நிலையிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சி–மத வேறுபாடின்றி தமிழ் மொழி ஆதரவாளர்கள் அனைவரும் இந்த பேரியக்கத்தில் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் போராடி சிறை சென்றுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் சிறை சென்ற நிலையில் பெரியாரே ஏற்று நடத்தும் நிலை உருவாகிய போது எல்லாமே அவர் விருப்பப்படி நடைபெற்றதாக கூறுகிறார் சிவானந்த அடிகள்.
எவ்வித அதிகாரமுமற்ற மாகாண சபைகளை கேட்காமல் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்தியாவும் பங்கெடுக்கும் என்று கவர்னர்கள் தீர்மானித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை மாநிலக் காங்கிரசு அமைச்சர்கள் உட்பட பலரும் பதவி விலகினர். அச்சமயத்தில் சிறிது நாட்களுக்கு இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி நிறுத்தி வைக்கப்படுவதாக பெரியார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏன் என்று கேட்டபோது, “நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை காங்கிரசு மந்திரிகளுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அதுபோல் பயன்படுத்திக் கொண்டேனேயொழிய, உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப் படுவதை பற்றியோ, அதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது பற்றியோ கவலையில்லை” என்று தனக்கேயுரிய பாணியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் கபட வேடதாரி, காலனிய தாசர் பெரியார்.
பின்னர், இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடரும், இதை நிறுத்துவதற்கான எவ்வித உரிமையும் பெரியாருக்கு இல்லை என்பதை அறிவித்து தி இந்து பத்திரிகையிலும், மெயில் பத்திரிகையிலும் செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறார் சிவானந்த அடிகள். அதுவரை, முதல்வர் இல்லத்தின் முன்பு நடந்த மறியல் போராட்டம், கவர்னர் அலுவலகத்தின் முன்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், அண்ணாமலை செட்டியாரின் மகன் முத்தையை செட்டியாரை (நீதிக்கட்சியை சேர்ந்தவர்) மத்தியஸ்தம் பேசுவதற்கு கவர்னர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். “தில்லிக்கு சென்று கட்டாய இந்தி நீக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்” என்று அப்போது கவர்னராக இருந்த சர் ஆர்தர் ஹோப் முத்தையா செட்டியார் முலமாக உறுதி மொழி தந்ததையடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
மறியல் நின்ற சில நாட்களில் ஆங்கிலேய கவர்னரின் தலையீட்டால், “கட்டாய இந்தி நீக்கப்பட்டு விரும்புவர்கள் மட்டும் படிக்கலாம்” என்று தில்லி அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதோடு மட்டும் நில்லாமல் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்றுகூட கவர்னர் அலுவலகத்திற்கு தந்தி அனுப்பியுள்ளார் சிவானந்த அடிகள். இவ்வாறு நடந்த முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான் தாளமுத்து, நடராஜன் போன்ற தாய்மொழிப் பற்றாளர்கள் உயிர் துறந்துள்ளனர். அப்போது இந்தி திணிப்பு வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டதாகவே கருதப்படுகிறது.
இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடரும் பெரியாரின் சண்டித்தனமும், திமுகவின் பித்தலாட்டமும்
25 ஆண்டுகள் கழித்து 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய திமுகவிடம் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், 8க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், பல உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் இருந்தபோதிலும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி மாறுவதை தடுக்க முடியவில்லை. தில்லி அரசு இவர்களின் இந்தி எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்தியைத் திணிப்பதில், மும்முரமாக ஈடுபட்டதற்கு ஒரே காரணம் இவர்களின் உள்நோக்கத்தையும், வெளிவேடத்தையும் நன்றாக புரிந்து வைத்திருந்ததே காரணம் என்று சிவானந்த அடிகள் எழுதுகிறார்.
இதற்கு மறுமுனையில் ‘கிளர்ச்சிக்குத் தயாராவோம்’ என்ற தலைப்பில், "இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடந்த காலித்தனம் …” என்று பிற்போக்குத்தனமாக சீற்றம் கொள்கிறார் பெரியார். “ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாசவேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம் ” என்று அரச வன்முறையை ஏவுவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசிற்கு வழிகாட்டுகிறார்.
3.3.1965 அன்று “என்னைப் பற்றி” எனும் தலைப்பில் “விடுதலை” ஏட்டில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
“இந்தியை நான் எதிர்த்ததும் உண்மை. அதுவும் நான் ஒருவனே தான் எதிர்த்தேன். பிறகு தமிழ்ப் புலவர்கள் தமிழ் புத்தகக் கடைக்காரர்கள் கூட்டு சேர்ந்தார்கள். அதிலிருந்து தான் “தமிழ் உணர்ச்சி” என்பது தோன்றிற்று. தமிழ்ப் புலவர்களும் மதிப்பு பெற்றார்கள். இதனால் தமிழுக்கு தமிழின் பேரால் சிலர் பிழைக்க நேரிட்டதல்லாமல் ஒரு காசுப் பயனும் ஏற்பட்டு விடவில்லை. இந்தி வெறியர்கள் மாதிரி சிலர் வெறியர் ஆனார்கள்.
“இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டு விடும் என்பதால் அல்ல, தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, வரலாற்று மொழியாக, அறிவியல் மொழியாக, சட்டமொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்”. என்று வெட்கமே இல்லாமல் அந்நிய ஆங்கில மொழி ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் காமராஜர் ஆட்சியில் வந்தபோதும் எதிர்த்து பேசியிருக்கிறார். தமிழ்ப் பாடமொழி திட்டத்தை ஆதரித்த பாரதிதாசனையும் “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று கிண்டல் செய்திருக்கிறார். ஆனால், இன்று பெரியாரிய உணர்வாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்கு தமிழினப் பற்றாளர்களை அணிதிரண்டு வரச் சொல்லுகிறார்கள். எவ்வளவு பெரிய மோசடி இது(!?).
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்மொழிக்கு நேர் எதிராக செயல்பட்டுவிட்டு தான் மட்டுமே இந்தியை எதிர்த்ததாக பேசியிருப்பது எவ்வளவு இழிவானது; எவ்வளவு பிற்போக்கானது. இதே வரிசையில்தான் பெண் விடுதலை பேசி பெண் அடிமைத்தனத்திற்கு வித்திட்டார், பார்ப்பணிய ஆதிக்கத்தை எதிர்ப்பதாக பேசி இடைநிலை சாதி ஆதிக்க சக்திகளுக்கு துணை நின்றார், சாதி ஒழிப்பு சமூக நீதி பேசி உண்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைத்தடியாகவே செயல்பட்டு வந்த பெரியாரை பொதுவுடைமை கொள்கைக்கு மிகவும் நெருக்கமானவர் என்று போலி செஞ்சட்டைக்காரர்கள், முன்னாள் கம்யூனிஸ்ட்கள் கூச்சலிடுவது கண்டிக்கப்பட வேண்டுபவையே.
பின்னர் வந்த திராவிட கழக ஆட்சிகளில் பெரியார் வழிகாட்டியபடியே துப்பாக்கியும், தடியும் தமிழகத்தின் ஆதிக்க சக்திகளையும், தில்லியோடு கள்ள உறவிலிருந்த தரகு–முதலாளிகளின் வேட்டை நாயாகவே செயல்பட்டு வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். அன்றும் இன்றும் என்றும் பெரியார் மற்றும் அவரது கைத்தடிகளும் ஏகாதிபத்திய ஆதரவில் நின்று விதேசிய மொழிக் கொள்கையோடு, விதேசிய அரசியல்–பொருளாதாரக் கொள்கைகளையே அரவணைத்து அமல்படுத்தி வருகின்றனர்.
திமுகவின் பித்தலாட்டம் பற்றி சிவானந்த அடிகள் மேலும் கூறும்போது,
“எடுத்துக்கொண்ட எந்தப் போராட்டத்திலும் வெற்றி பெற வேண்டுமென்ற குறிக்கோளே அவர்களுக்கு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
அவ்வப்போது பொதுமக்கள் தங்களைத் திரும்பிப் பார்க்கிறார்களா? தங்கள் பக்கம் நிற்கும் அறிகுறிகள் அவர்களிடம் காணப்படுகின்றனவா என்பனவற்றை அறியவும், அதனால் தேர்தலில் எத்தனை இடங்களைப் பிடிக்கலாம் என்ற கணக்குப் போடவுமே, அவர்கள் போராட்டங்கள் என்ற பெயரால் அரசியல் ஆரூடங்கள் கணிக்கின்றனர்” என்று தனது நூலில் சிவானந்த அடிகள் எழுதுவதை படிக்கும் எவருக்கும் திமுகவின் பிறப்பிலேயே சந்தேகம் எழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
“தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்ட எல்லாப் போராட்டங்களுமே பொது நோக்கோடு - மக்களின் நன்மையைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் கட்சியின் வளர்ச்சிக்கும், அக்கட்சியிலுள்ள ஒரு சிலருக்குக் கிடைத்துள்ள செல்வாக்கை நிலைபெறச் செய்யவும் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டன – படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.” என்று எழுதியிருப்பதை படிக்கும் போது அன்று முதல் இன்றுவரை திருட்டு திராவிடத்தின் வரலாறு எவ்வளவு பித்தலாட்டமானது என்பதை நம்மால் எளிதாக உணர முடியும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இல்லை. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பிழையிருந்தால் ஆங்கில வடிவமே இறுதியானது என்றுகூறி இன்று வரைக்கும் ஆங்கில ஆதிக்கத்தை திணித்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைத் திணித்து தமிழ்க் கொலை செய்கிறார்கள். தங்களது வாரிசுகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, இந்தியும் கற்றுக் கொடுக்கிறார்கள். தன் மகள் வெளிநாட்டில் சென்று படிக்கிறாள் என்றாள் அதற்கு பெரியார்தான் காரணம் என்று ஆ. ராசா மெச்சிக்கொள்வது எத்துனை உண்மை. இன்றைக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தமிழில் நடத்தப்படுவதில்லை என்று இவர்களே கூப்பாடு போடுகிறார்கள் என்றால் இவர்களின் இந்தி எதிர்ப்பு எவ்வளவு பித்தலாட்டமானது என்பதை சிவானந்த அடிகள் சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டியிருப்பது மறுக்க முடியாத உண்மைகள்தானே.
-செந்தளம் செய்திப் பிரிவு