மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -3

அ.கா. ஈஸ்வரன்

மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -3

இக்கட்டுரையில் 106 வது கேள்விக்கான பதிலில்,  முதலாளித்துவ  மிகு உற்பத்தி நெருக்கடி என்பது தேவைக்கு மேல் செய்யப்படும் உற்பத்தியால் ஏற்படும் நெருக்கடி  என கூறப்பட்டுள்ளது விமர்சனத்துக்குரியதாகும். மேலும் அது  மேலோட்டமான கருத்தும் ஆகும். வாங்கும் சக்திக்கு மேல் செய்யப்படும்  உற்பத்திதான் மிகு உற்பத்தி எனவும், அதுவே தவிர்க்க இயலாதவாறு  முதலாளித்துவ  நெருக்கடியை தோற்றுவிக்கிறது எனவும்    மார்க்சியம் கருதுகிறது. 

- செந்தளம் செய்திப்பிரிவு

அரசியல் பொருளாதாரம்

லெனின்:- “பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டமைப்புக் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பான்மையான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய - அதாவது, முதலாளித்துவ - சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்… உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாட்டிற்கு மூலைக்கல் ஆகும்”

முந்தைய பகுதிகளை படிக்க

மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -1

மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -2

74) அரசியல் பொருளாதாரம் எதனை ஆராய்கிறது?

பொருள் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் போது மக்களுக்கு இடையே ஏற்படுகிற உறவுகளை ஆராய்வது அரசியல் பொருளாதாரம் என்கிறது மார்க்சியம். தமது அரசியல் பொருளாதாரத்தை, விஞ்ஞானத் தன்மை பெற்றதாகக் கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனர்.

 

75) இது மார்க்சிய பொருளாதாரம் என்றால் மற்றவர்கள் பொருளாதாரத்தை வேறு மாதிரி பார்க்கிறார்களா?

ஆம். மார்க்சிய அரசியல் பொருளாதாரம் விஞ்ஞானத் தன்மை பெற்றது என்று கூறினாலும், இது பாட்டாளி வர்க்க சார்பானது. அதே போல் செம்மை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், கொச்சை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், குட்டி முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்ற பிரிவுகள் இருக்கின்றன

 

76) செம்மை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

முதலாளித்துவம் உருவான போது தோன்றியது செம்மை அரசியல் பொருளாதாரம். முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையேயான முரண் முழுமையாக அப்போது வெளிப்படவில்லை. பாட்டாளிகள் வர்க்கம் உணர்வுப் பெற்றுப் போராடாத காலம் அது. ஆடம் ஸ்மித், ரிக்காடோ போன்றோர்கள் செம்மை அரசியல் பொருளாதார வகையைச் சேர்ந்தவர்கள்.

 

77) கொச்சை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே வர்க்கப் போராட்டம் பெருகிய போது விஞ்ஞானத் தன்மையில்லாமல் முதலாளித்துவத்தை ஆதரிக்கின்ற போக்கு, கொச்சை அரசியல் பொருளாதாரம் ஆகும்

 

78) குட்டி முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

முதலாளித்துவ உற்பத்தியாளருக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே உள்ள சிறுவுற்பத்தியாளர்கள் குட்டி முதலாளித்துவாதிகளாவர். இவர்களில் பலர் நிலைமையால் பாட்டாளி வர்க்கத்தைச் சேர வேண்டியிருந்தாலும் விருப்பத்தால் முதலாளித்துவத்தைச் சார்ந்து சிந்திப்பர். இவர்களின் பொருளாதாரச் சிந்தனை குட்டி முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் ஆகும்.

 

79) மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கம் என்ன?

குறிப்பிட்ட ஒரு சமூகத்தில், உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகிய கட்டங்களைப் பரிசீலனை செய்வது மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கம் ஆகும்.

 

80) முதலாளித்துவ உற்பத்திமுறையைப் பற்றி மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ன சொல்கிறது?

அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கத்தின்படியே முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இறுதியில் அதன் மறைவையும் விவரிக்கிறது.

 

81) பிரம்மாண்டமான முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி மறையும்?

இந்த மறைவு என்பது மார்க்சின் தனிப்பட்ட விருப்பம் கிடையாது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாடுகளே அதன் மறைவையும், அந்த மறைவை நிகழ்த்தப் போகும் பாட்டாளிகளையும் படைத்துள்ளது.

 

82) தொழிலாளர்களும் முதலாளிகளும் பரஸ்பரம் சமரசமாகப் பேசி தங்களது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாதா?

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பிரச்சினை வெறும் மனம் சார்ந்ததாக மட்டும் பார்ப்பதால் தான் இந்தக் கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரின் மனம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட நலன்களைச் சார்ந்து தோன்றுகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறையில் காணப்படும் முரணில் இவர்களின் நலன்கள் அடங்கியிருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண் இணக்கம் காணமுடியாத இரு வர்க்கமாகப் பிரிக்கிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கருத்தாக்கம் இதனையே விவரிக்கிறது. இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கமே வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது.

 

83) அரசியல் பொருளாதாரத்தில் தத்துவமா?

ஆம். பொருளாதாரத்தில் காணப்படும் அரசியலை அறிவதற்குத் தத்துவம் அவசியமாகிறது. முதலாளித்துவ அறிஞர்களின் அரசியல் பொருளாதாரம் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது, பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது.

 

84) தத்துவத்தையும் பொருளாதாரத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் படித்தறிவது கடினமானதா?

விஞ்ஞானத்தை அறிவதற்கு ராஜபாதை எதுவும் கிடையாது, களைப்பூட்டும் செங்குத்துப் பாறையில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சியினை எட்டுகிற வாய்ப்புண்டு என்று மார்க்ஸ் பிரஞ்சு வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது நமக்கும் பொருந்த கூடியதே. அரசியல் பொருளாதாரம் என்கிற விஞ்ஞானத்தை அறிவதற்கு நாம் உரிய கடின முயற்சி எடுக்கத்தான் வேண்டும். அரசியல் பொருளாதாரத்தை அறிவதில் உள்ள கடினத்தைக் குறைக்க வேண்டுமாயின். அரசியல் பொருளாதாரத்திற்கு உரிய வகையினங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு அறிந்திடும் போது கடினம் குறையும்.

 

85) மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் வகையினங்கள் எவை?

தொடக்கநிலையில் அறிவதற்கான வகையினங்கள் சரக்கு, சரக்கின் இரட்டைத் தன்மை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம், உழைப்பின் இரட்டைத் தன்மை, பரிவர்த்தனை, பணம், மூலதனம், உழைப்பு சக்தி, உபரி மதிப்பு, மாறா மூலதனம், மாறும் மூலதனம், பொருளாதார நெருக்கடி, சமூக மாற்றம், உற்பத்தி முறை ஆகியவையாகும்.

 

86) சரக்கு (commodity) என்றால் என்ன?

முதலாளித்துவத்தில் செல்வம் என்பது சரக்குகளின் பெருந்திரட்டலாகக் காணப்படுகிறது. அதனால் தான் மார்க்ஸ் தமது மூலதனம்” நூலை சரக்கு பற்றிய பகுப்பாய்வில் இருந்து தொடங்கினார். சரக்கு என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்கின்ற குணங்களைக் கொண்ட ஒன்று. அது உடுப்பதற்கான உடையாகவோ, சாப்பாட்டுப் பொருளாகவோ, மனதுக்கு மகிழ்வூட்டுவதாகவோ இருக்கலாம்.

 

87) சரக்கின் இரட்டைத் தன்மை என்றால் என்ன?

சொந்த நுகர்வுக்காக இல்லாமல் விற்பனைக்காக உற்பத்தி செய்யும் பொருள் சரக்காகும். சந்தைக்குச் செல்கின்ற அச்சரக்கு இரட்டைத் தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று பயன்மதிப்பு மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு. இந்த இரட்டைத் தன்மையை மார்க்சே முதன்முறையாகக் கண்டுபிடித்தார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்திற்கு இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

 

88) பயன்மதிப்பு (use-value) என்றால் என்ன?

சரக்கு பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருளாகும். இந்தப் பொருள் எதேனும் மனிதத் தேவையை நிறைவு செய்யும் வகையில் இருக்க வேண்டும். அந்த நிறைவேற்றமே பயன்மதிப்பு எனப்படும். அரிசி, இறைச்சி, பால் போன்றவை மனிதனின் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை, புடவை போன்றவை உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது. கவிதை, கதை, நாடகம், திரைப்படம் போன்றவை கலை உணர்வை நிறைவு செய்கிறது. நுகர்வின் அல்லது பயன்படுத்துவதின் மூலம் பயன்மதிப்பு உண்மையாகின்றது.

 

89) பரிவர்த்தனை மதிப்பு (exchange-value) என்றால் என்ன?

சந்தையில் சந்திக்கின்ற சரக்குகள் ஒவ்வொன்றும் தம்முள் ஒப்பீட்டு மதிப்பைப் பெற்றுள்ளது. அதாவது 10 முட்டைக்கு ஒரு கிலோ அரிசி என்று ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடு அச்சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. அந்த உழைப்பின் மதிப்பே பரிவர்த்தனை மதிப்பு என்றழைக்கப்படுகிறது. சரக்குகளில் காணப்படும் பயன்மதிப்பை நீக்கிப் பார்க்கும் போது அதாவது உழைப்பின் ஸ்தூலமான வடிவங்களை நீக்கிவிட்டுப் பார்க்கும் போது அனைத்துக்கும் பொதுவான ஒரே உழைப்பாக ஸ்தூலமற்ற மனித உழைப்பாக இருக்கிறது. சந்தையில் பரிவர்த்தனை செய்திடும் போது பயன்மதிப்பை சற்றும் சார்ந்திராத பரிவர்த்தனை மதிப்பாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

 

90) சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பைக் கொண்டு மதிப்பை கணக்கிடும் போது திறம்பெற்ற உழைப்பாளியின் உழைப்பும், திறமற்ற உழைப்பாளின் உழைப்பும் சம மதிப்பைப் பெறுகிறதா?

இது சரியான கேள்வியே. ஒரு பொருளை உற்பத்தி செய்யத் திறமையான தொழிலாளி எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட, திறம்குறைந்தவர் அதிக நேரத்தையே எடுத்துக் கொள்வார். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லையாயின், உழைப்பாளி எவ்வளவு அதிகம் சோம்பேறியாகவும் தேர்ச்சியற்றவராகவும் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகம் மதிப்புள்ளதாக அவரது சரக்கு இருக்கும், ஏனெனில் அவரது உற்பத்திப் பொருளில் அதிக உழைப்பு நேரம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்படிக் கணக்கிடப்படுவதில்லை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரத்தைக் கொண்டே மதிப்புக் கணக்கிடப்படுகிறது.

91) சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம் என்றால் என்ன?

ஒரு புடவையைச் செய்ய ஒரு நெசவாளி 8 மணி நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும், மற்றொருவர் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், வேறொருவர் 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் கொண்டால், மூவரின் சராசரி 6 மணிநேரமாகிறது. இந்தச் சராசரி உழைப்பின் நேரத்தை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம் என்று அழைக்கப்படுகிறது. முதல் நெசவாளி 8 மணிநேரம் எடுத்துக் கொண்டா லும் அதன் மதிப்பு 6 மணிநேரமாகும். இரண்டாவது உள்ளவர் 4 மணி நேரத்தில் முடித்தாலும் அதன் மதிப்பு 6 மணி நேரமாகும். மூன்றவது நபர் சாராசரி மதிப்புக்கு ஒத்த நேரத்தை எடுத்துக் கொள்வதால் அதே மதிப்பைப் பெறுகிறது.

 

92) உழைப்பின் இரட்டைத் தன்மை என்றால் என்ன?

ஒன்று ஸ்தூலமான உழைப்பு (concrete labour), மற்றொன்று ஸதூலமற்ற உழைப்பு. (abstract labour) இதுவும் மார்க்சின் கண்டுபிடிப்பே.

 

93) ஸ்தூலமான உழைப்பு என்றால் என்ன?

பொருள் என்னவாக உருவம் கொள்கிறதோ அதற்காக உழைப்பது ஸ்தூல உழைப்பாகும். துணி நெய்யப்பட்டதில் காணப்படும் நெசவும், தானியம் உற்பத்தி செய்யப்பட்டதில் காணப்படும் உழவும் ஸ்தூல உழைப்பு. முதலாவது துணியை உற்பத்தி செய்வதற்குச் செய்யப்பட்ட உழைப்பு, மற்றொன்று தானியத்தை உற்பத்தி செய்வதற்குச் செய்யப்பட்ட உழைப்பு. நெசவு, உழவு என்று இவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இவை இரண்டும் பயன்படக்கூடியதே. இந்த ஸ்தூல உழைப்பே சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது.

 

94) ஸ்தூலமற்ற உழைப்பு என்றால் என்ன?

பொருளை உற்பத்தி செய்யும் போது அதில் செலவிடப்படுகிற சக்தி அதாவது தசை மூளை போன்றவற்றைக் குறிக்கிறது. ஸ்தூலமான உழைப்பைச் சாராது தனியே பரிசீலனை செய்திடும்போது உழைப்பு மனிதனது சக்தி என்ற நிலையில் அது ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படுகிறது. இந்த ஸ்தூலமற்ற உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

 

95) பணம் என்றால் என்ன?

பணத்தின் சாரத்தை மார்க்ஸ் பொருள்முதல்வாத வழியில் அணுகினார். உற்பத்தியோடும், பரிவர்த்தினையின் வளர்ச்சியோடும், மதிப்பு வடிவங்களின் வளர்ச்சியோடும் பணத்தைத் தொடர்புபடுத்தி விளக்கினார். சரக்கு உற்பத்தியில் தனித்தனி உற்பத்தியாளர்கள் தனிமைப்பட்டுப் போகாமல் பிணைப்பை ஏற்படுத்துவது பணம் ஆகும். சரக்குப் பரிவர்த்தனையில் மற்ற அனைத்துச் சரக்குகளின் மதிப்பை வெளியிடக் கூடிய சரக்காகச் சர்வபொது சமானமாகப் பணம் திகழ்கிறது.

 

96) மூலதனம் (Capital) என்றால் என்ன?

       பணம் தானே மூலதனமாவது இல்லை. முதலாளித்துவத்திற்கு முன்பே பணம் இருந்துள்ளது, ஆனால் அதனை மூலதனம் என்று அழைப்பதில்லை. சரக்கு உற்பத்தி வளர்ச்சியின், குறிப்பிட்ட கட்டத்தை எட்டும் போது பணம் மூலதனமாகிறது, முதலாளித்துவத்திற்கு முன்பான எளிய உற்பத்தி முறையின் சூத்திரம் சரக்கு-பணம்-சரக்கு என்ற அடிப்படையில் இயங்கியது. விளைவித்த சரக்குப் பணத்திற்கு விற்று அதனைக் கொண்டு தேவைப்படும் சரக்கு வாங்கப்பட்டது. அதாவது சரக்கு மற்றொரு சரக்கு வாங்குவதற்காக விற்கப்பட்டது.

முதலாளித்துவத்தில் விற்பனைக்காகச் சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சூத்திரம் பணம்-சரக்கு-பணம். முதலாளித்துவத்தில் உற்பத்தி பணத்தைக் கொண்டு தொடங்கப்படுகிறது. அதாவது முதலாளி பணத்தின் மூலம் உற்பத்திக்கு தேவையானதை வாங்கி  உற்பத்தியின் மூலம் விளைவித்ததைப் பணத்திற்கு விற்கிறார். முதலில் போடப்பட்ட பணத்தைவிடக் கூடுதலாய் பணம் இதன் மூலம் கிடைக்கிறது. முதலில் போட்டப் பணத்திற்கு மேல் கூடுதலாய் பணம் கிடைக்கும் வகையில் இயங்குவதே மூலதனம் எனப்படுகிறது. இந்தக் கூடுதல் பணம் உழைப்பாளியின் உபரி நேரத்தின் உழைப்பில் விளைந்த உபரி மதிப்பால் கிடைத்ததாகும். இதனையே முதலாளி இலாபம் என்கிறார்.

 

97) உழைப்பு சக்தி (Labour-Power) என்றால் என்ன?

முதலாளியிடம் தொழிலாளி விற்பது உழைப்பை அல்ல, உழைப்பு சக்தியை தான் விற்கிறார். உழைப்பு சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி, முதலாளிக்கு விற்கும் ஒரு சரக்கு ஆகும். உழைப்பு சக்தி எல்லாக் காலங்களிலும் கூலி உழைப்பாக அதாவது சுதந்திர உழைப்பாக இருக்கவில்லை. முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளி தன் உழைப்பை விற்பதற்குச் சுதந்திரம் பெற்றவராக இருக்கும் நிலையிலேயே உழைப்பு சக்தியை சரக்காக முதலாளிக்கு விற்கிறார். உழைப்புக்கும், உழைப்பு சக்திக்கும் உள்ள வேறுபாட்டை உபரிமதிப்பு பற்றிய விளக்கத்தில் அறிந்து கொள்ளலாம். உழைப்பு சக்தி என்ற மார்க்சின் இந்தக் கண்டுபிடிப்பே முதலாளித்துவத்தின் சுரண்டலை முழுமையாக வெளிக் கொண்டுவந்தது.

 

98) உபரி மதிப்பு (Surplus-Value) என்றால் என்ன?

முதலாளிகள் செல்வம் சேர்ப்பதற்கே உற்பத்தியில் ஈடுபடுகின்றனர், இந்தச் செல்வம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் எவ்வாறு சேருகிறது என்பதை மார்க்ஸ் உபரிமதிப்பு என்ற கருத்தாக்கத்தால் விளக்கினார். தொழிலாளியின் உபரி உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட மதிப்புதான் உபரி மதிப்பாகும். தொழிலாளிக்கு கொடுக்கப்படாத கூலியால் இந்த உபரி மதிப்புத் தோற்றுவிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் சுரண்டல் இந்த உபரி உழைப்பில் தான் அடங்கியிருக்கிறது.

 

99) உபரி உழைப்பு என்றால் என்ன?

முதலாளி உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தமக்குத் தேவைப்படுவைகளைச் சந்தையில் வாங்குகிறார். இயந்திரம், கச்சாப்பொருள், எரிபொருள் இவைகளைக் கொண்டும் உழைப்பதற்கு உழைப்பாளியையும் சந்தையில் வாங்குகிறார். அடுத்து உற்பத்தியைத் தொடங்குகிறார். இயந்திரங்கள், கருவிகள் இயங்குகின்றன, இதனைத் தொழிலாளி இயக்குகிறார். இயந்திரத்தின் தேய்மானம், பயன்படுத்திய கச்சாப் பொருள் மற்றும் எரி-பொருள் ஆகியவையில் அடங்கியுள்ள பழைய மதிப்பு, புதிய சரக்கில் இடம்பெயற்கிறது. பழைய மதிப்பு புதிய சரக்கில் இடம் மாற்றப்படுகிறது அவ்வளவே, புதிய மதிப்பு எதுவும் அது படைக்கவில்லை. தொழிலாளியின் உழைப்புக்குக் கூலி கொடுக்கப்பட்டுள்ளது அதுவும் சரக்கில் மதிப்பேற்றப்பட்டுள்ளது. சந்தையில் விளைபொருளான சரக்கு விற்று முதலாளிக்கு இலாபம் கிடைக்கிறது. இந்த இலாபம் என்கிற கூடுதல் மதிப்பு எங்கிருந்து வந்தது என்றால் அது தொழிலாளியின் உபரி உழைப்பால் வந்தது என்கிறார் மார்க்ஸ்.

 

100) ஒன்றும் புரியவில்லை சற்று விளக்க முடியுமா?

உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்புச் சாதனங்களைப் போலவே, உழைப்பாளியின் உழைப்பு சக்தியையும், முதலாளி விலை கொடுத்து வாங்குகிறார். முதலாளியால் வாங்கப்பட்ட உழைப்பு சக்தி முதலாளிக்கே சொந்தமாகும். இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் தொழிலாளி முதலாளியிடம் வேலைக்குச் சேர்கிறார். அதனால் நாள் முழுமைக்கும் உழைக்கும்படி முதலாளி கட்டாயப்படுத்துகிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள் முதலாளியால் உரிமையாக்கப்படுகிறது.

 

101) இதில் எங்கே உபரி உழைப்பு வருகிறது?

பொறுமை பொறுமை. படிப்படியாகச் செல்வோம். ஒரு முதலாளி வேலை செய்த தொழிலாளிக்கு நாட்கூலியாக ரூ.500/- கொடுக்கிறார். இந்த ரூபாயின் மதிப்பிற்கு அந்தத் தொழிலாளி வேலை செய்ய வேண்டும் என்றால் அவர் முதல் இரண்டு மணி நேரத்திலேயே அதன் மதிப்பிற்கான உழைப்பை செலுத்திவிடுகிறார். மதிப்புக்கு மதிப்பு தான் பரிவர்த்தனை நடத்தப்படுகிறது என்றால், இப்போது தொழிலாளி அன்றைய உழைப்பில் இருந்து விடுபட்டு வெளியேறலாம். அப்படிச் செய்தால் எந்தக் கூடுதல் மதிப்பும் விளைபொருளில் சேர்வதில்லை. முதலாளிக்கு இலாபம் எதுவும் கிடைப்பதில்லை. இதனை அறிந்த முதலாளி தொழிலாளியை வெளியேற அனுமதிப்பதில்லை. தொழிலாளியின் உழைப்பை வாங்கிய முதலாளி நாள் முழுமைக்கும் உழைப்பதற்குக் கட்டாயப்படுத்துகிறார். இங்கே தான் மார்க்சின் புதிய கண்டுபிடிப்பு அடங்கியிருக்கிறது.

 

102) அது என்ன புதிய கண்டுபிடிப்பு?

தொழிலாளி முதலாளிக்கு விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை. அதாவது தொழிலாளியின் உழைப்பை மார்க்ஸ் இரண்டாகப் பிரிக்கிறார். தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடாக உழைப்பது அவசியமான உழைப்பு நேரம், மீதமுள்ள நாள் உழைப்பு என்பது உபரி உழைப்பு.

 

103) இன்னும் புரியவில்லையே?

தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை அல்ல, விற்றது உழைப்பு சக்தி என்கிறார் மார்க்ஸ். இந்த உழைப்பு சக்திக்கே கூலி கொடுக்கப்படுகிறது. உற்பத்தியின் போது இழந்த உழைப்பு சக்தி மீட்டுக் கொள்வதற்கே அதாவது மறுவுற்பத்தி நடைபெறுவதற்குக் கொடுக்கப்படுவதே கூலி ஆகும். உழைப்பாளிக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தின் பராமரிப்புக்கும் மறுவுற்பத்திக்கும் கொடுக்கப்பட்ட கூலியாகும். இந்த மறுவுற்பத்தியின் மூலமே எதிர்காலத்தில் தேவைப்படும் உழைப்பாளிகள் தோன்றுகிறார்கள். இந்தக் கூலிக்கான உழைப்பு நேரமே அவசியமான உழைப்பு நேரம். இந்த அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாய் உழைக்கும் நேரம், உபரி உழைப்பு நேரம் ஆகும். இந்த உபரி உழைப்பு நேரத்தில் உருவாக்கப்பட்ட மதிப்பே உபரி மதிப்பு. இதனை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையை முதலில் படிக்க வேண்டும். அதில் இந்த உபரி மதிப்புக் கோட்பாட்டைச் சிறு நாடக பாணியில் விளக்கப்பட்டுள்ளது. முன்னுரையைப் படித்துவிட்டு, அந்நூலைப் படிக்க வேண்டும். அதற்கு அடுத்து “கூலி விலை இலாபம்” என்கிற மார்க்சின் நூலைப் படித்தால் மூலதனம் நூலில் காணப்படும் பகுதியை படிப்பதற்குத் தயாராகிவிடலாம்.

 

104) மாறா மூலதனம் (Constant Capital) என்றால் என்ன?

முதலாளி தமது உற்பத்திக்குத் தேவைப்படுகிற இயந்திரம், கருவிகள், கச்சாப்பொருள், தொழில் செய்திடும் இடம் போன்றவற்றிற்குச் செலுத்தும் மூலதனத்தின் பகுதி மாறா மூலதனம் என்று பெயர். ஏன் என்றால் இயந்திரம், கருவி ஆகியவற்றின் தேய்மானம், பயன்படுத்திய கச்சாப் பொருள் போன்றவற்றின் மதிப்பு புதிய பொருளில் இடம் பெயர்கிறது அவ்வளவே. அதன் மதிப்பு, பூஜ்யம் என்கிறார் மார்க்ஸ். மதிப்பை தோற்றுவிக்காததால் இந்த மூலுதனத்திற்கு மாறா மூலதனம் என்று பெயர்.

 

105) மாறும் மூலதனம் (Variable Capital) என்றால் என்ன?

       முதலாளியால் தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் பணம் மாறும் மூலதனம். ஏன் என்றால் இந்த மூலதனமே உபரி மதிப்பைப் படைக்கிறது. அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாக, தொழிலாளி உழைக்கும் உபரி நேரமே உபரி மதிப்பைப் படைக்கிறது. உழைப்பு சக்திக்குச் செலவிடப்பட்ட மூலதனம், கூடுதல் மதிப்பையும் அதன் மூலம் கூடுதல் பணத்தையும் தோற்றுவிக்கிறது.

 

106) முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்படுகிறது?

உற்பத்தியில் ஈடுபடும் தனித்தனி முதலாளிகள் சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது என்பதை அறிந்திடாமல், மிகையாக உற்பத்தி செய்திடுகின்றனர். சந்தையில் தேங்கும் இந்த மிகை உற்பத்தியால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. தேங்கிய சரக்கை விற்று மறுவுற்பத்திக்கு செல்ல முடியாமல் திணருகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தாக்குப்பிடித்த அல்லது புதிய முதலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் ஒரு நெருக்கடியை முதலாளித்துவப் பொருளாதாரம் சந்திக்கிறது. தேக்கம், செழுமை, மிகையுற்பத்தி, நெருக்கடி என்ற சுற்றை முதலாளித்துவம் தொடர்ந்து சந்திக்கிறது. இந்த நெருக்கடியின் உச்சமே சமூக மாற்றத்திற்குக் காரணமாகிறது.

 

107) சமூக மாற்றம் என்றால் என்ன?

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டும் போது பழைய உற்பத்தி உறவுகள் பழைமைப்பட்டுப் போவதுடன் புதிய வளர்ச்சிக்கு தடையாகவும் ஆகிறது

முதலாளித்துவத்தின் மேம்பட்ட வளர்ச்சி கட்டத்தில், சமூகமயமான உற்பத்திக்கும் தனிசொத்துடைமையின் அடிப்படையிலான பழைய வினியோக முறைக்கும் முரண்முற்றி வளர்ச்சிக்குத் தடையாகிறது. வளர்ச்சிக்குத் தடையாகப் போன முதலாளித்தவத் தனியுடைமை சமூகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாட்டாளி வர்க்கம் புதிய அரசை அமைத்து, சொத்துகளைச் சமூகச் சொத்தாக மாற்றுகிறது.

இதனை மார்க்ஸ், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில் முதலாளித்துவத்தின் மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடமை பறிப்போரின் உடமை பறிக்கப்படுகிறது என்று தமது மூலதனம்” நூலில் எழுதினார்.

 

108) உற்பத்தி முறைகள் என்றால் என்ன?

சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது. ஆதிகம்யூனிச சமூக உற்பத்தி முறை, அடிமை சமூக உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவச் சமூக உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, சோஷலிச சமூக உற்பத்தி முறை என்று இதுவரை உலகம் ஐந்து உற்பத்தி முறைகளைக் கண்டுள்ளது. அந்தந்த உற்பத்தி முறையை நிர்ணயிப்பது அந்தந்த சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் மீதான சொத்துடமை ஆகும். உற்பத்திச் சாதனங்களின் உடமையே அந்தந்த உற்பத்தி உறவுகளை அமைக்கிறது.

முதலில் கூறியபடி அரசியல் பொருளாதாரம் என்பது அந்தந்த கட்டத்தின் உற்பத்தி முறையில் காணப்படும் உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றைப் பரிசீலனை செய்வதாகும்.

 

109. அரசியல் பொருளாதாரத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       மார்க்ஸ் எழுதிய நூல்கள் கூலியுழைப்பும் மூலதனமும், கூலி விலை லாபம், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு (முன்னுரை). எங்கெல்ஸ் எழுதிய நூல் காரல் மார்க்ஸ் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு", மார்க்சின் மூலதனம் பற்றி..., பி.நிக்கிடின் எழுதிய நூல் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள். ஜீலியன் போர்ச்சார்ட் எழுதிய நூல் மக்கள் மார்க்ஸ். த.ஜீவானந்தம் எழுதிய நூல் மார்க்ஸின் மூலதனம் - வாசிப்புக்கு ஒரு திறவுகோல்.

 - அ.கா. ஈஸ்வரன்

தொடரும்...

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை தோழர். அ.கா.ஈஸ்வரன் எழுதிய ’மார்க்சியம் என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. மார்க்சியத்தின் ஆரம்ப அடிப்படை கல்விக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் கேள்வி பதில் வடிவில் மிக எளிமையாக கொடுத்துள்ளார். இது ஆரம்பநிலை மார்க்சியம் பயில்வோருக்கு மிகவும் பயனளிக்கும் என்ற விதத்தில் இந்த தளத்தில் வெளியிடுகிறோம்.
 
– செந்தளம் செய்திப் பிரிவு