பட்டினிச் சாவின் விளிம்பில் காஸா குழந்தைகள்
தமிழில்: விஜயன்

காஸாவில், பட்டினிக் கொடுமையின் பிடியில் சிக்கியிருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான பால் பொருட்களும், ஊட்டச்சத்தான பொருட்களிம் இன்றி, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினிச் சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காஸா அரசாங்க ஊடக அலுவலகம் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், பச்சிளம் குழந்தைகளுக்கான பால் மாவும், முறையான ஊட்டச்சத்தும் இல்லாத காரணத்தால், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்னும் சில நாட்களிலேயே பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது. நிலைமை மிகவும் அவசரம் என்றும், உயிருக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் கோரமான சூழல் நிலவுகிறது என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.
அதிகாரிகள் அளித்த தகவல்படி, ஒரு வயதுக்குட்பட்ட சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் தற்போது வெறும் தண்ணீரை மட்டும குடித்து உயிர் வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கான பால் மாவும், குழந்தைகளுக்கான பிற உணவுப் பொருட்களும் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டன. அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் காஸாவிற்குள் நுழைய முடியவில்லை. இது ஒட்டுமொத்த மக்களையும் பாதித்த போதிலும், பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
“திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு படுபாதகமான இனப் படுகொலையின் விளிம்பில் காஸா மக்களும் குழந்தைகளும் நிற்கிறார்கள்,” என அந்த அறிக்கை திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. “ஊட்டச்சத்து முற்றிலும் மறுக்கப்பட்டு, பட்டினிக் கொடுமை வேண்டுமென்றே திணிக்கப்பட்டு, முழுமையான முற்றுகை அமல்படுத்தப்பட்டுள்ளதால், பச்சிளம் குழந்தைகள் மெல்ல மெல்ல, திட்டமிட்டு பச்சைப் படுகொலை செய்யப்படுகிறார்கள்”.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை காண முடிகிறது. ஆனால், காஸாவின் சுகாதார அமைப்பு சீர்குலைந்துவிட்டதால், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடிவதில்லை. அங்கே ஊட்டச்சத்து பொருட்களும், பச்சிளம் குழந்தைகளுக்கான பால் பொருட்களும் இல்லை. சர்வதேச நிவாரண உதவிகளும் அவர்களைச் சென்றடையவில்லை. இஸ்ரேலின் திட்டமிட்ட பட்டினிக் கொடுமையால், 83 குழந்தைகள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர்காக்கும் நிவாரண உதவிகளைத் தடுத்து, இஸ்ரேல் ஒரு போர்க்குற்றத்தைச் செய்கிறது என காசா அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பட்டினி சாவுகளையும், பச்சை படுகொலைகளையும் ஆதரிப்பதால், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு உதவ முன்வர வேண்டும் என அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது: பச்சிளம் குழந்தைகளுக்கான பால் மாவு, ஊட்டச்சத்துப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்; நிபந்தனையின்றி அனைத்து எல்லைகளையும் திறக்க வேண்டும்; முற்றுகையை முழுவதுமாக நீக்க வேண்டும்; காஸா குழந்தைகளின் பட்டினிச் சாவை தடுக்க சர்வதேச நாடுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. “இது வெறும் நெருக்கடி மட்டுமல்ல, இது ஒரு குற்றம்,” என்றும் அந்த அறிக்கை சேர்த்துக் கூறியது. “சர்வதேச சமூகம் மௌனமாக இருந்தால், அந்த மௌனம் கூட்டுச் சதியே ஆகும்,” என்றும் எச்சரித்தது.
அரசு ஊடக அலுவலகம் விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை இதுதான்: இப்பொழுதே தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், அண்மைய காலங்களில் மனிதச் செயல்பாடுகளால் விளைந்த மிகக் கோரமான பஞ்சங்களுள் ஒன்றை காசா எதிர்கொள்ளும். இந்தப் பஞ்சம், பிஞ்சுப் பச்சிளம் குழந்தைகளையும், தளர்ந்த முதியோரையும், வலுவற்ற எளியோரையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/07/100000-children-face-death-in-gaza-without-urgent-infant-formula-aid/