இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மத்திய கிழக்கின் இயக்கப்போக்கையே மாற்றியுள்ளது

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் நெருக்கடியில் சிக்கி கொண்டிருப்பதை, அமெரிக்காவின் எதிரி நாடுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக முனைப்புடன் செயல்படுவதால், அமெரிக்காவின் பிராந்திய அளவிலான போர் தந்திரங்கள் திக்குத் தெரியாமல் முட்டுச் சந்தில் முடங்கியுள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மத்திய கிழக்கின் இயக்கப்போக்கையே மாற்றியுள்ளது

அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீனிய ஆயுத எதிர்ப்புக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது. அதன் போராளிகள் இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலிய குடியிருப்புகளை கைப்பற்றினர். சுமார் 1,400 இஸ்ரேலியர்கள் இந்தத் தாக்குதலில் பலியாயினர்.

இஸ்ரேல் காசா மீது பதில் தாக்குதலைத் தொடுத்தது; காசாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் துண்டித்து முழுமையான முற்றுகைக்கு தயாரானதோடு, அனைத்து கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஈவிரக்கமின்றி குண்டுமழை பொழிந்தது. 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 6,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் தாக்குதல் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலின் போக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் திசைவழியையே மாற்றியமைத்துள்ளது. இப்பிராந்தியத்தில் புகைந்து வந்த நெருப்பை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்காவின் போர் தந்திரம் திக்குத் தெரியாமல் முடங்கி போவதற்கு வழிவகுத்துவிட்டது; அரபு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையில் சமரசத்தை கொண்டு வருவதென்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகிவிட்டது; சீன, ரஷ்ய நாடுகளின் அதீத ஊடுறுவலுக்கு கதவைத் திறந்து விட்டுள்ளது.

அமெரிக்காவின்  போர்தந்திரம் மண்ணைக் கவ்வியது

கடந்த மூன்று ஆண்டுகளாக, பைடன் நிர்வாகம் மத்திய கிழக்கில் தனது தலையீடுகளை குறைத்துக்கொண்டு, ஆசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை முறியடிப்பதில் கவனம் செலுத்த முயற்சித்து வருகிறது.

இதைச் சாதிப்பதற்கு, சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை சரி செய்வதோடு ஈரானுடனான மோதல்களை குறைப்பதற்கு உதவுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் எழுந்துள்ள பதட்டங்களை "தணித்துவிடலாம்" என்று அமெரிக்கா நம்புகிறது. இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் ஒரு பொருளாதார வழித்தடத்தை கட்டமைப்பதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.

முன்மொழியப்பட்ட திட்டமானது இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது: இந்தியாவை அரபு வளைகுடா நாடுகளுடன் இணைக்கும் வகையில் கிழக்குத் வழித்தடம் ஒன்றும்,ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் வழியாக வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு வழித்தடம் ஒன்றும் உள்ளடக்கியதாக உள்ளது. சீனாவின் பட்டை-சாலை திட்டத்தை முறியடிப்பதற்காக அமெரிக்கா இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது என கூறப்படுகிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த திட்டங்களுக்கு ஹமாஸ் நடத்திய தாக்குதல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலாவதாக, இது இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகளை சரிசெய்யும் செயல்முறையை கிட்டத்தட்ட முடக்கியுள்ளதோடு, பிராந்திய அளவிலான இராணுவக் கூட்டணி உருவாகுவதற்கு இருந்த வாய்ப்பையும் தட்டிப் பறித்துள்ளது.

இரண்டாவதாக, இந்தத் தாக்குதல்கள், ISIL படையினருக்கு எதிராக நடந்த போருக்குப் பிறகு இப்பிராந்தியத்தில் இராணுவக் குவிப்பை குறைப்பது என்ற தனது கொள்கையைத் திருப்பப் பெறும் நிலைக்கு அமெரிக்காவை தள்ளியுள்ள நிலையில் இப்போது மிகப் பெரிய இராணுவக் குவிப்பிற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பென்டகன் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தியதோடு, மற்றொரு போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கும் அனுப்பியுள்ளது. இந்த இரண்டு போர்க்கப்பல்களோடு சேர்த்து 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் வழங்கப்பட்டுள்ளது. துரிதமாகச் செல்லும் இலகரக போர்க் கப்பல்கள்(cruisers), போர்க்கப்பல்கைளை பாதுகாப்பதற்கும் எதிரிக் கப்பல்களை அழிப்பதற்காகவும் மட்டுமே இயக்கப்படும் போர்க் கப்பல்கள்(destroyers), நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றில் டோமாஹாக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட தாக்குதல் திறனோடு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றம் ஹமாஸிற்கு இடையிலான போரில் மூன்றாம் தரப்பாக வேறு எந்த நாடும் தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது.

மூன்றாவதாக, ஈரானுடனான பதட்டத்தைத் தணிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளும் முடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்புதான், இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றம்,  $6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினையில் உடன்பாட்டிற்கு வந்தனர். சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரானிய போராளிகளை அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்துவதைத் இந்த ஒப்பந்தம் தடுக்கும் என்று நம்பப்பட்டது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர முடியாது என்பதையே கடந்த வாரத்தில் நடந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரானிய அரசின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி பல அமெரிக்க வீரர்களுக்கு சேதாரத்தை உண்டுபன்னியுள்ளனர். ஏமனில் உள்ள ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ட்ரோன்களையும், ஏவுகணைகளையும்  செங்கடலின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரபு நாடுகள் மற்றும் ஈரானின் இக்கட்டான நிலை

ஹமாஸ் தாக்குதலும், காஸா மீதான இஸ்ரேல் அரசின் போரும் இப்பிராந்தியத்தில் உள்ள அரசுகளை இரண்டகமான நிலைக்கு தள்ளியுள்ளன. இஸ்ரேலுடன் எந்தெந்த அரபு நாடுகளெல்லாம் சுமூகமான அரசியல் உறவுகளை முறையாக பேணி வருகின்றனவோ, அந்தந்த அமெரிக்காவின் நட்பு நாடுகளெல்லாம் ஹமாஸைக் கண்டிக்க வேண்டும் என்று ஒருபுறம் அமெரிக்கா  அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகள் மட்டுமே அமெரிக்காவின் கட்டளைகளுக்கேற்ப கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

மறுபுறம், பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் அரசு கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருவதை பார்த்து அரபு நாடுகளை சேர்ந்த வெகுஜன மக்கள் கொதித்தெழுந்து பாலஸ்தீனியர்களுக்கு துணை நிற்க வேண்டும் எனக்கூறி தங்களது அரபு அரசாங்கங்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். பொது மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அரபு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை அமெரிக்காவின் கட்டளைக்கு எதிராகச் செல்வதற்கு நிர்பந்தித்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துள்ளன.

அக்டோபர் 17 அன்று அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி பலரையும் கொன்று குவித்தபோது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உட்பட அனைத்து அரபு நாடுகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தன. அக்டோபர் 21 அன்று கெய்ரோவில் நடந்த அமைதி உச்சி மாநாட்டில், ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, இஸ்ரேலின் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து  தனது வலுவான உரையை பதிவு செய்தார். 1994 இல் இஸ்ரேலுடன் போடப்பட்ட சமாதான ஒப்பந்தத்திற்கு பிறகு இதுவரை இப்படியொரு கண்டன உரை நிகழ்த்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,

அக்டோபர் 24 அன்று காசா பிரச்சினை குறித்து விவாதிக்க ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) கூட்டத்தில் எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டுமல்லாது அமெரிக்காவின் அனைத்து நெருங்கிய நட்பு நாடுகளும் கூட இஸ்ரேலை கடுமையாக கண்டித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். மறுநாள், போர் நிறுத்தம் செய்யக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் சேர்ந்து வீட்டோ(தடுப்பதிகாரம்) அதிகாரத்தை பயன்படுத்தியபோது ஐக்கிய அரபு அமீரகமும் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தது.

தற்போதைக்கு, அமெரிக்க சார்பு அரபு நாடுகள் மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு வெற்று வாக்குறுதிகளை நிறையவே வழங்கி வருகின்றனர். ஆனால் காசா மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதல் தொடரும் போது, வெறும் வார்த்தைகளால் மக்களை ஆற்றுப்படுத்த முடியாது. இஸ்ரேலுடனான உறவுகளை சுமூகமாக பேண வேண்டும் என்ற அமெரிக்காவின் கட்டளைகளுக்கு எதிராக செல்லும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். இது அமெரிக்காவை ஆத்திரப்படுத்தக்கூடும்.

பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க அரபு நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காது போனால் பிராந்திய அளவிலான ஸ்திரத்தன்மையற்ற நிலை மீண்டும் தலைதூக்குவதற்கு வழிவகுக்கும். அரபு நாட்டு மக்கள் ஏற்கனவே தோற்றுப்போன பொருளாதாரக் கொள்கைகளால் கொதிப்படைந்து போயுள்ளனர். இதோடு பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக, கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படுவதை பார்க்கும்போது அவர்களின் கோபக் கனல் மேலும் கொழுந்துவிட்டு எரியவே செய்யும். இந்த முறையும், காசா மீது இஸ்ரேல் நடத்தும் அனைத்து அட்டூழியங்களுக்கும் அமெரிக்கா ஆதரவு தருகிறபோது, அமெரிக்கச் சார்பு அரபு நாடுகளின் ஆட்சிக்கு குழிபறிப்பதாகவே அமைந்துவிடும்.

பல்வேறு காரணங்களினால் ஈரானும் நெருக்கடியான நிலையில்தான் உள்ளது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஈரானியத் தலைமை பாராட்டியதுடன், இந்தத் தாக்குதலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளது. 

இஸ்ரேலுடனோ அல்லது அதன் நட்பு நாடான அமெரிக்காவுடனோ நேரடி மோதலுக்கு சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்பதில் ஈரான் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில் ஹமாஸையும் ஆதரிக்கிறது.

பாலஸ்தீனிய போராளிக் குழுக்களை துடைதொழிப்பதே காசா மீதான தனது போரின் குறிக்கோள் என்று இஸ்ரேல் அறிவித்தது. அதாவது அந்த பகுதியில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே இதன் பொருள். இது நடந்தால் இப்பிராந்தியத்தில் ஈரானுக்கு இருக்கின்ற ஒரு முக்கியமான கூட்டாளியை இழக்க நேரிடும்.

எனவே, ஹமாஸ் இஸ்ரேலால் பலவீனப்படுத்தப்படுவதை அல்லது அழித்தொழிக்கப்படுவதை ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதா அல்லது லெபனானிலிருந்து இயங்கி வரும்  ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுக்களை சண்டையில் பங்கேற்பதற்கு தூண்டுவதன் மூலம் வடக்கில் இஸ்ரேலுக்கு எதிராக மற்றொரு போர் முனையை துவங்குவதா என்பவற்றில் ஒன்றை தேர்வு செய்வதில் ஈரான் திண்டாடி வருகிறது.

இஸ்ரேலை தாக்கினால் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரித்திருந்தன. அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாஹ் குழுவைத் தாக்க இஸ்ரேல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடும். இது நிச்சயமாக லெபனானை பலமிழக்கச் செய்வதோடு ஈரானின் நலனுக்கும் எதிராகவே அமைந்துவிடும்.

ரஷ்ய-சீன நாடுகளின் கணிப்புகளும், மதிப்பீடுகளும்

மத்திய கிழக்கில் எழுந்துள்ள மற்றொரு மோதலில் அமெரிக்கா தலையிடுவதும், அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் கூட்டணிகள் பலவீனமடைவதும் ரஷ்ய-சீன நாடுகளைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்படும்.

கடந்த இருபதாண்டுகளாவே மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் இராணுவ ரீதியிலான தலையீடுகளால் இரு நாடுகளுமே பயனடைந்துள்ளன. "பயங்கரவாதத்திற்கெதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட போர்களினால் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பை பாதித்துள்ளதோடு முஸ்லீம் நாடுகளிடையே ரஷ்யா, சீனா பற்றிய நேர்மறையான கருத்துக்களையும் வளர்த்துள்ளது. இது தொடர்ச்சியாக மத்திய கிழக்கில் ஓயாத போரை நடத்தும் நிலைக்கு அமெரிக்காவை தள்ளியது; இதன் காரணமாக இரு பெரும் நாடுகளும் தங்கள் அண்டை நாடுகளில் தங்களது செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அகண்ட மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னரே அதன் அழுத்தத்தை ரஷ்யாவும் சீனாவும் உணரத் தொடங்கின. "ஆசியாவை சுற்றிவளைத்தல்" என்ற போர் தந்திரத்தை மேற்கொள்வதற்கும், தனது நேட்டோ கூட்டணியில் அதிக கவனம் செலுத்துவதற்குமான வாய்ப்பும் வெளியேறிய பின்னரே கிடைத்தது. எப்பகுதியிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென அமெரிக்கா விரும்பியதோ, மீண்டும் அதே பகுதிக்குள் இழுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது அமெரிக்காவின் போர்தந்திரம் மாறக்கூடும்.

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்படுதல், இஸ்ரேலிய இராணுவத்திற்கான உதவிகளை அதிகப்படுத்துதல், அமெரிக்காவின் இராஜதந்திரக் கூலிப்படைகள் அரசியல் அரங்கில் இஸ்ரேலை ஆதரிப்பதில் கவனம் செலுத்துதல் போன்றவை அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக உக்ரேனில் போரை தொடர்ந்து நடத்துவதற்கான ஆதரவு, சீனாவின் செல்வாக்கை ஆசியாவில் உள்ள நாடுகள் எதிர்த்து நிற்பதற்கு வழங்கப்பட வேண்டிய இராணுவ உதவி, நிதியுதவி மற்றும் இராஜதந்திர உதவிகளில் பற்றாக்குறை ஏற்படும் என்பதே இதன் பொருளாகும்.

கூடுதலாக, காசாவில் பாலஸ்தீனிய குடிமக்கள் மீதான இஸ்ரேலின் படுகொலைகளுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறது என்பதால் இஸ்லாமிய மக்கள் மத்தியில் அமெரிக்காவின் நிலை மேன்மேலும் உருக்குலைந்து வருவதோடு ரஷ்யாவையும் சீனாவையும் பலமடையச் செய்கிறது. இரு நாடுகளுமே காசா மீதான போரில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, "பேரழிவுகரமான" மோதலுக்கு அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டி வருகின்றன .  அமெரிக்கா தனக்குத்தானே சவக்குழி வெட்டுவது போல் தோன்றுகிறது: மத்திய கிழக்கில் சீன, ரஷ்ய நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் நடவடிக்கைகள் இருநாடுகளின் நிலைகளை வலுப்படுத்தவே செய்கிறது. அதுமட்டுமல்லாது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உட்பட இப்பிராந்தியத்தில் அமெரிக்கா கொண்டு வர நினைக்கும் அனைத்து திட்டங்களுக்கு தானே முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

உண்மையில், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இயக்கப்போக்கையே மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த மாற்றம் எந்தளவிற்கு தொடர்ந்து செல்லும் என்பது இஸ்ரேலை எந்தளவிற்கு அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடிகிறது என்பதோடு எந்தளவிற்கு கட்டுப்படுத்த விரும்புகிறது என்பன போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படும். காசா மீதான போரை நிறுத்தவும், முற்றுகையை விலக்கவும், பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காவிட்டால், முழு பிராந்தியமும் பேரழிவுக்குள்ளாகும்.

லெபனான், சிரியா, யேமன், ஈராக் என மோதல் விரிவடைவதோடு, அரபு உலகின் பிற பகுதிகளிலும் பெருந்திரளான எழுச்சி வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இது இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு சேதாரத்தை உண்டுபன்னுவது மட்டுமன்றி, ரஷ்ய-சீனா நாடுகளின் ஆழமான தலையீட்டிற்கும் கதவை திறந்துவிடுவதற்கு வழிவகுத்துவிடும்.

இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துகளே. அல் ஜசீராவின் தலையங்க நிலைப்பாட்டை இக்கட்டுரை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

(மார்வான் கபாலன் - ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வுகளுக்கான அரபு மையத்தில் கொள்கை பகுப்பாய்வு இயக்குநராக பணியாற்றி வருகிறார். சிரிய நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும், எழுத்தாளரும் ஆவார். சர்வதேச உறவுகளில் முனைவர் பட்டம் பெற்றவர்.)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/opinions/2023/10/28/hamass-attack-on-israel-has-changed-the-middle-east

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு