இந்தோ-பசிபிக் இராணுவ உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம்
:ஆஸ்திரேலியக் கடற்படைக் கப்பல்கள், இந்தியப் போர் விமானங்களில் பொருத்தப்படும் ஜப்பானிய எஞ்சீன்கள் - தமிழில்: விஜயன்

கடல்சார் பாதுகாப்புச் சாதனங்கள் விற்பனையில் ஜப்பான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி முன்னேறி வரும் வேளையில், இந்தியா டோக்கியோவுடன் வான்வெளித் துறையில், அதிலும் குறிப்பாக அதிநவீனப் போர் விமான எஞ்சின் தொழில்நுட்பத்தில், தீவிரமான ஒத்துழைப்புகளை நாடி வருகிறது. ப்ளூம்பெர்க் பத்திரிகை மட்டுமல்லாது இன்னப்பிற தகவலறிந்த வட்டாரங்களில் கிடைத்த செய்திகளின்படி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட குறைந்தது மூன்று நாடுகளின் எஞ்சீன் உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் விரிவான திட்டத்தின் ஓர் பகுதியாகவே ஜப்பானுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு காணப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, சஃப்ரான் எஸ்ஏ போன்ற நிறுவனங்களுடன் போர் விமான எஞ்சின்களைக் கூட்டாக உருவாக்கவும் மேம்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் இரட்டை எஞ்சின் கொண்ட போர் விமானத் திட்டங்களுக்குத் தேவைப்படும் அதிதிறன் வாய்ந்த எஞ்சின்களை விரைந்து பெறுவதே இந்த பேச்சுவார்த்தையின் தலையாய குறிக்கோளாகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இம்முன்மொழிவுகளைக் கவனமாகப் பரிசீலனை செய்கிறது; மேலும், பாதுகாப்பு அமைச்சகம் விரைவான அரசு அங்கீகாரத்தைப் பெற்றுத்தர முனைந்து வருகிறது.
மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து எஞ்சீன் விநியோகங்களில் முன்னதாக ஏற்பட்ட இடையூறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளும்கூட, ஜப்பானுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு குறித்தான ஆர்வம் பெருகக் காரணமாய் அமைந்துள்ளன. 2023 ஜூன் மாதத்தில், தேஜஸ் Mk2 போர் விமானத்திற்காக, மிகுந்த சக்திவாய்ந்த GE F414 எஞ்சினை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நோக்கத்துடன், சுமார் 80% தொழில்நுட்பப் பரிமாற்றத்தையும் உள்ளடக்கி, அமெரிக்காவுடன் இந்தியா ஓர் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் ஒரு வரவேற்கத்தக்க முன்னகர்வு என்றபோதிலும், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய தாமதங்கள் அல்லது இடர்ப்பாடுகளைக் குறைக்கவும், குறிப்பாக தற்போதைய புவிசார் அரசியல் சூழலை உற்றுநோக்கும்போது, இந்தியா தனது விநியோக ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவே விழைகிறது.
ஜப்பானிற்கு நம்பிக்கையூட்டும் ஆஸ்திரேலியாவுடனான இராணுவ ஒப்பந்தம்
சிக்கலான இராணுவ ஒப்பந்தங்களை கைப்பற்றி செயல்படுத்தும் ஜப்பானின் அபாரத் திறன், குறிப்பாகக் கடற்படைத் துறையில் அதன் தனித்தன்மை மட்டுமல்லாது இந்தியாவுடன் இணைந்து அதிநவீன வான்வெளி அமைப்புகளை உருவாக்கக்கூடிய அதன் வல்லமை என்னவென்பதைத் தெள்ளத்தெளிவாகப் பறைசாற்றுகிறது. ஜப்பானின் முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸுக்கும் (Mitsubishi Heavy Industries) ஆஸ்திரேலியாவிற்கும் இடையே அண்மையில் எட்டப்பட்ட, 6.5 பில்லியன் டாலர் மதிப்பிலான போர்க்கப்பல் (ஃப்ரிகேட்) ஒப்பந்தம், தனிப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, பிராந்திய அளவிலான இராணுவக் கூட்டணிகள் மேற்கொள்ளப்படும் விதத்தில், இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருப்புமுனையாக அமையக்கூடும். தற்போது பல நாடுகள், தங்களின் இராணுவ தேவைகளுக்கான ஆதாரங்களை ஒரு சில மேற்கத்திய நாடுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், பன்முகப்படுத்த விழைகின்றன.
ஏற்றுமதித் தடைகளைக் கடந்து ஒரு புதிய அத்தியாயத்தில் ஜப்பான்
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பல பத்தாண்டுகளாக, ஜப்பான் ஏறத்தாழ அனைத்து ஆயுத ஏற்றுமதிகளுக்கும் ஒரு கடுமையான தடையை விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடு, ஜப்பானின் அதிநவீன பாதுகாப்புத் தொழில்துறையானது அதன் சொந்தத் தற்காப்புப் படைகளுக்கு மட்டுமே தளவாடங்களை வழங்குவதென்ற வரையறையை வகுத்திருந்தது. 2014 ஆம் ஆண்டில் ஜப்பான் இந்த விதியைத் தளர்த்தத் தொடங்கினாலும், பெரிய அளவிலான சர்வதேசப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வென்றெடுப்பது பெரும் சவாலாகவே நீடித்தது. 2016 ஆம் ஆண்டில், 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை பிரான்சிடம் இழந்தது, ஜப்பானுக்கு ஒரு பெரும் பின்னடைவாகவே அமைந்தது.
இந்த நிலைமை இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் மாறத் தொடங்கியது. ஃபிரிகேட்டுகள் எனப்படும் ஒரு புதிய வகைப் போர்க்கப்பல்களைத் ஆஸ்திரேலியாவிற்கு தயாரித்து வழங்குவதற்காக மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (MHI) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நவீனமயமாக்கப்பட்ட 'மொகாமி-ரக' (Mogami-class) போர்க்கப்பல் வடிவமைப்பு, ஆஸ்திரேலியாவின் தேவைகளை மிகச் சிறப்பாகப் பூர்த்தி செய்து வந்தது. ஐரோப்பிய தயாரிப்புகளுக்கு சுமார் 120 பணியாளர்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த மொகாமி ரக போர்க்கப்பலுக்கு சுமார் 90 பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவே போதுமானதாக இருந்தது. மேலும், இது நெடுந்தூர கடல் பயணங்களுக்கும், அதிக ஆயுதங்களை ஏந்திச் செல்வதற்கும் பொருத்தமானதாக இருந்தது.
முதல் கப்பல் 2029 ஆம் ஆண்டுக்குள் விநியோகிக்கப்படும் என MHI நிறுவனம் உறுதியளித்தது. இக்காலக்கெடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பழைமையான 'அன்சாக்-ரக (Anzac-class) கப்பல்கள் விரைவில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற உள்ளதால், புதிய கப்பல்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புவது அவசியமானதாகும். ஆரம்பச் செலவுகள் அதிகமாக இருந்தபோதிலும், ஜப்பானிய வடிவமைப்பு அதன் ஆயுட்காலம் முழுதும் செலவுகளைப் பெருமளவு குறைக்கும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் நம்புகின்றனர். பணியாளர்களின் தேவை குறைவாக இருப்பதாலும், இயக்கச் செலவுகள் குறைவாக இருப்பதாலும், அதன் கட்டமைப்பு நீண்ட காலம் நீடித்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுவதுமே இதற்குக் காரணம்.
அடுத்த ஆண்டில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜப்பான் ஒரு முழுமையான, அழிக்கும் திறனுடைய இராணுவ தளவாடத்தை சர்வதேச அளவில் விற்பனை செய்யும் முதல் நிகழ்வாக இது அமையும். இவ்வெற்றி, ஜப்பானின் எதிர்கால போர்க்கப்பல்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் ரேடார் தொழில்நுட்ப ஏற்றுமதிகளுக்கு ஒரு மகத்தான முன்னுதாரணமாக அமையும்.
ஜப்பானின் இராணுவ விரிவாக்கத்திலுள்ள தடைகள்
இந்த முக்கிய மைல்கல்லை எட்டிய பிறகும் கூட, ஜப்பான் தனது இராணுவ உற்பத்தித் திறனை விரிவாக்குவதில் பல சவால்களைச் சந்திக்கிறது. தொழிற்சாலைகள், சிறப்புப் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறை குறித்து இராணுவ கார்ப்பரேட்டுகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக, ஜப்பான் தனது இராணுவச் செலவினங்களை 2027 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பதால், இச்சவால்கள் மேலும் கடுமையாகின்றன.
கவாசாக்கி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் யோஷினோரி கனேஹானா, மிக அதிகத் தேவை ஏற்கனவே உற்பத்தி-விநியோக சங்கிலித் தொடர்களுக்குப் பெரும் சுமையாகிவிட்டது என்று பேசியிருந்தார். உதாரணமாக, CH-47 சினூக் ஹெலிக்காப்டர்களுக்கான (helicopters) ஆர்டர்கள் 2017க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. பாதுகாப்புத் துறை தனது திறனைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், சிறப்புப் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் இன்னமும் ஒரு பெரும் சவாலாகவே தொடர்கிறது என்று ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவிக்கிறது.
மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் உடனான ஒப்பந்தத்தின்படி, முதல் மூன்று போர்க்கப்பல்கள் ஜப்பானிலேயே கட்டப்பட வேண்டும். மீதமுள்ள எட்டு கப்பல்கள், ஆஸ்திரேலிய நிறுவனமான ஆஸ்டலுடன்(Austal) கைகோர்த்து, ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும். பிற நாடுகளின் இராணுவ பராமரிப்பு பணிகள், சேவைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை நிர்வகிப்பதில் ஜப்பானுக்கு இருக்கும் குறைவான அனுபவம் இத்திட்டத்தை நிறைவுசெய்வதை மேலும் சவாலாக்கலாம் என்று கனகாவா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான கோரி வாலஸ் எச்சரித்தார்.
ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் பார்க்கர், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கப்பல்களை வழங்குவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் ஜப்பான்-ஆஸ்திரேலிய உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார். எனினும், இத்திட்டம் வெற்றிபெற்றால், உலக ஆயுதச் சந்தையில் ஜப்பானை ஒரு நம்பகமான மாற்று விநியோகஸ்தராக நிலைநிறுத்த இது பெரிதும் துணைபுரியும்.
போர்த்தந்திர நலன்களின் ஒற்றுமை
தமது வலுவான தொழில்துறை அடித்தளத்துடன் கைகோர்த்து ஆயுத ஏற்றுமதிகளை அதிகரிக்கும் ஜப்பானின் தொலைநோக்குத் திட்டமும், மேம்பட்ட, பன்முகப்பட்ட எஞ்சீன் அமைப்புகளுக்கான இந்தியாவின் அத்தியாவசியத் தேவையும், ஒரு புள்ளியில் இணைவதால் இரு நாடுகளுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன.
இந்தியாவுக்கு, ஜப்பானிய எஞ்சீன் தொழில்நுட்பத்தைப் பெறுவது மேற்கத்திய விநியோகஸ்தர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் கணிசமாகக் குறைக்கும். இது விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடங்கல்களின் அச்சுறுத்தலைக் குறைப்பதோடு, தனது சொந்த விண்வெளித் திறன்களை வளர்த்தெடுக்கும் இந்தியாவின் இலட்சியப் பயணத்தையும் துரிதப்படுத்தும்.
ப்ளூம்பெர்க் ஊடகத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவைத் தவிர்த்துப் பிற கூட்டாளி நாடுகளுடன் கைகோர்க்கும் இந்தியாவின் முனைப்பு, வாஷிங்டனுடனான அதன் உறவில் ஒரு பின்னடைவைக் குறிக்கவில்லை. மாறாக, இது பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளை நம்பகமான முறையில் உறுதிப்படுத்தும் இந்திய போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாகும். தற்போதைய விநியோகஸ்தர்களிடமிருந்து எஞ்சீன் விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதங்கள் இந்த அணுகுமுறையை மேலும் வலுப்பெறச் செய்தன.
ஜப்பானைப் பொறுத்தமட்டில், இந்தியாவுடனான கூட்டணி வெற்றிபெற்றால், வழக்கமான கூட்டளி நாடு என்ற நன்மை கிடைப்பது மட்டுமல்லாது, மேம்பட்ட அதிநவீன இராணுவத் தளவாடங்களை வழங்கும் ஒரு நாடு என்ற வல்லமையையும் பறைசாற்றும். இது உலகளாவிய ஆயுதச் சந்தையில் ஜப்பானின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.firstpost.com/world/japan-india-tejas-australia-defence-frigate-us-europe-ge-13923843.html
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு