அமெரிக்க அரசாங்கம் எலான் மஸ்க் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறதா?

தமிழில்: விஜயன்

அமெரிக்க அரசாங்கம் எலான் மஸ்க் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறதா?

அமெரிக்க அரசாங்கம் எலான் மஸ்க் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறதா? ‘அரசு இயந்திரத்தை கைப்பற்றுதல்’ எவ்வாறு நிகழ்கிறது, நாம் ஏன் இது குறித்து கவலை கொள்ள வேண்டும்.

சமீப நாள்களாக, உலகின் மிகப்பெருங் கோடீஸ்வரரான எலான் மஸ்க், அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் செல்வாக்கு செலுத்தி வருவது பல அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரம்ப்’ன் விசுவாசமான சிறு கும்பலின் பேராதரவுடன், அவர் அமெரிக்காவின் பரந்துவிரிந்த ஒன்றிய அரசு இயந்திரத்தின் அதிகார வர்க்க கட்டமைப்பை தன்பிடியின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று, டிரம்ப் ஓர் அரசாணையில் கையெழுத்திட்டார், இது மஸ்க்கிற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியது. ஒன்றிய அரசு அலுவலகங்கள் மஸ்கின் "அரசாங்க நிர்வாகச் சீர்திருத்தத் துறை" (DOGE என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது) உடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், புதிய நியமனங்களை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைக்கவும் இந்த அரசாணை உத்தரவிடுகிறது.

டிரம்ப் ஆட்சியில் ஒரு "சிறப்பு அரசு நிர்வாகியாக" இணைந்த பிறகு செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போது, மஸ்க் அமெரிக்க அரசை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார். 

எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தை பலவந்தமாக கைப்பற்றுவது அல்லது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்துவது போன்றவையா? "அரசு இயந்திரத்தை கைப்பற்றுதல்" என்ற கருத்தின் மூலம் இதை சரியாக விளக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அரசு இயந்திரத்தைக் கைப்பற்றுதல் என்றால் என்வென்று பின்வருவமாறு பார்ப்போம்.

ஆட்சிக் கவிழ்ப்பு என்றோ அல்லது தன்னதிகாரக் கவிழ்ப்பு என்றோ சொல்ல முடியாது. ஏன்?

அரசாங்கத்தின் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, DOGE நிறுவனம் எல்லையற்ற அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது. குறிப்பாக, அது பின்வருவனவற்றைச் செய்துள்ளது:

* அரசாங்கத்தின் அனைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளையும் கையாளும் கட்டமைப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

* தனிப்பட்ட மருத்துவக் குறிப்புகள் உட்பட அந்தரங்க புள்ளிவிவரத் தகவல் தொகுப்புகளை கைப்பற்றி வைத்துள்ளது.

* ஊழலைத் தடுக்கவும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் வகுக்கப்பட்டிருந்த வழக்கமான விதிமுறைகளை மீறியுள்ளது.

•அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை (USAID) முடக்கியுள்ளது.

•ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகளின் கணினி வலைப்பின்னல்களுக்குள் ஊடுருவியுள்ளது.

வெளிப்படையாகவே ஒன்றிய அரசின் பல சட்டங்களை மீறும் வகையில் அரங்கேற்றபட்ட மஸ்க்கின் மின்னல் வேக வெள்ளை மாளிகை ஆக்கிரமிப்பு ஒருவிதமான திகைப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, என்ன நடக்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளது.

சில வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சகர்களும் மஸ்க்கின் இந்தச் செயல்கள் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர். இருப்பினும், இராணுவப் படைகள் நேரடியாக அரசாங்கக் கட்டிடங்களைக் கைப்பற்றும் மரபுரீதியான ஆட்சிக்கவிழ்ப்பு அல்ல இது என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு கும்பல் டிஜிட்டல் கட்டமைப்புகளை கைப்பற்றியுள்ளது எனலாம்; ஜனநாயக நடைமுறைகளை செல்லாக்காசாக்குவதோடு, மனித உரிமைகளை பறிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனலாம்.

இருப்பினும், இதனை முழுமையாக ஆட்சிக்கவிழ்ப்பு என்று சொல்வது அவ்வளவு பொருத்தமானதாக இராது. பரவலாக ஆட்சிக்கவிழ்ப்பு என்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை பின்வருமாறு:

•இராணுவம் அல்லது அரசு இயந்திரத்திற்குள் இருக்கும் செல்வாக்கு மிக்க கும்பல் சட்டவிரோதமான வழிகளைப் பயன்படுத்தி நாட்டின் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான நேரடி முயற்சி எனலாம்.

மஸ்க்கும் ட்ரம்பும் இணைந்து செயல்படுவதால், மஸ்க் ஜனாதிபதியை தூக்கியெறிய முயற்சிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இது ஒரு தன்னதிகாரக் கவிழ்ப்பு என்றும்கூட சொல்கிறார்கள். ஒரு நாட்டின் தலைவர் தனது சொந்த அதிகாரத்தை பெருக்கிக்கொள்வதற்காக மற்ற செல்வாக்கு மிக்க அரசு நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகளை எடுக்கும்போது தன்னதிகாரக் கவிழ்ப்பு நிகழ்கிறது.

உதாரணமாக, கடந்த டிசம்பரில், தென் கொரிய அதிபர் Yoon Suk Yeol, எதிர்க்கட்சிக் குழுக்களிடமிருந்து நாட்டைக் காப்பது அவசியம் என்று கூறி போர்க்காலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி ஒரு தன்னதிகாரக் கவிழ்ப்பை நிகழ்த்த முயன்றார். ஆனாலும், ஆளும் வர்க்கத்திடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் வந்த எதிர்ப்பின் காரணமாக அவர் உடனடியாகத் தனது முடிவைத் திரும்பப் பெற்றார்.

தன்னதிகாரக் கவிழ்ப்புகள் அதிகரித்து வந்தாலும், இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ட்ரம்ப் அல்ல – மஸ்க் தான். மேலும், அரசின் அதிகார வர்க்க கட்டமைப்பை கைப்பற்றுவதே மஸ்க்கின் முதன்மையான குறிக்கோள் ஆகும், இது அதிபரின் அதிகாரத்தை அப்படியே நேரடியாக கட்டுப்படுத்துவதாகாது(சதிவேலைகள் நடப்பதாக கூறப்படும் செய்திகளில் தவிர).

அரசு இயந்திரத்தை கைப்பற்றுதல் என்றால் என்ன?

மஸ்க்கின் இந்த நடவடிக்கையை 'அரசு இயந்திரத்தை கைப்பற்றுதல்' என்று விவரிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். 

செல்வாக்குமிக்க தனிநபர்களோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களோ தங்களுடைய சொந்த அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக அரசு நிறுவனங்களைக் கைப்பற்றித் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது என்பதைத்தான் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றுதல் என்ற பதம் குறிக்கிறது.

இந்தச் சூழலில், அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதன் மூலம் தனது தனிப்பட்ட செல்வத்தை மேலும் பெருக்குவதே மஸ்க்கின் நோக்கமாக இருக்கலாம்.

அரசு இயந்திரத்தை கைப்பற்றுதல் என்பது மேலோட்டமாகப் பார்க்கையில் எளியதாகத் தோன்றினாலும், உண்மையில் மிகவும் நாசகரமான நிகழ்வாகும். இந்தோனேசியா, ஹங்கேரி, நைஜீரியா, ரஷ்யா, இலங்கை மட்டுமல்லாது எலான் மஸ்க் பிறந்த நாடான தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இது நிகழ்ந்துள்ளது. இது நடந்தேறும் விதத்தை பின்வருமாறு கூறலாம்:

செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும், கார்ப்பரேட் அதிபர்களும் அரசாங்க நிறுவனங்கள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள், கொள்கைகளை உருவாக்கும் அதிகார வர்க்க செயல்முறைகள் ஆகியவற்றின் மீது தங்கள் ஆதிக்கத்தை முதலில் நிலை நிறுத்துகின்றனர்.

இவ்வாறு அதிகாரத்தை அடைந்தவுடன், அவர்கள் தங்களுக்குச் சாதகமான சட்டதிட்டங்களை மாற்றி, பொதுமக்களின் நலனுக்கு மாறாகத் தங்கள் சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுகளை எடுக்கத் தொடங்குகிறார்கள்.

அரசு இயந்திரம் கைப்பற்றப்பட்ட நாடுகளில், ஆட்சியாளர்கள் பெரும்பாலும் தங்கள் அரசியல் கூட்டாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில் அரசாங்கக் கொள்கைகளையும், விதிமுறைகளையும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் தங்கள் கூட்டாளிகளுக்கு கீழ்க்கண்ட சில வழிகளில் சேவை செய்துள்ளனர்:

•டிரஸ்ட்களுக்கு இடையிலான போட்டிகள் குறித்த அரசாங்க முடிவுகளில் தலையிடுவது.

•பிரத்யேக அனுமதிகளையும், உரிமங்களையும் வழங்குவது.

•தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அரசாங்க ஒப்பந்தங்களை அளிப்பது.

•குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குச் சாதகமாக சட்டதிட்டங்களையும், வரிகளையும் நீக்குவது அல்லது திருத்துவது.

•பொறுக்கி எடுக்கப்பட்ட தனிநபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வரிவிலக்கு அளிப்பது.

அரசு இயந்திரத்தைக் கைப்பற்றுவது அடிப்படையில் ஒரு கொள்ளையிடும் நடவடிக்கையாகும்

அமெரிக்க அரசாங்கம் செயல்படும் முறையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம், எலான் மஸ்க் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வாக்கு மிக்க கூட்டாளிகளை கொழுக்க வைப்பதற்கு முயற்சிக்கலாம்.

முதலாவதாகப் பயனடைபவர் டிரம்ப்தான். தனது பதவியை தனது குடும்ப வணிக ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. மேலும் முழுமையாகக் கைப்பற்றப்பட்ட அரசு இயந்திரத்தின் மூலம், கார்ப்பரேட்டுகள், அரசியல் உயரடுக்கினரிடையே பொதுச் சொத்து எவ்வாறு பங்குபோடப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் டிரம்ப் முக்கியப் பங்கு வகிக்க முடியும். இந்த முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் "தனிநபர் சர்வாதிகார" ஆட்சிகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது; இதில் எல்லாமே அதிபருடனான கொடுக்கல் வாங்கலாகவே இருக்கும்.

மஸ்க் மட்டுமல்லாது ட்ரம்பிற்கு ஆதரவளித்த சிலிக்கான் பள்ளத்தாக்கின் மிகப் பெரும் பணக்காரர்கள் இரண்டாவதாகப் பயனடைவார்கள். ஒன்றிய அரசில் உள்ள குறைபாடுகளுக்குத் தங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களே தீர்வு; குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடே தீர்வு என்று முன்வைப்பதன் மூலம், "புதிய" அரசால் வழங்கப்படும் மிகவும் இலாபகரமான ஒப்பந்தங்களை அவர்கள் பெற வாய்ப்புள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தை மாற்றியமைக்க மஸ்க்குடன் இணைந்து பணியாற்றும் சிறு அளவிலான பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு மூன்றாவதாகப் பயனடைவர். விசுவாசமானவர்களாக இருப்பதால், இந்த நபர்களுக்கு தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயங்கள்,  தொழில்முறை தொடர்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். அதே நேரத்தில் அவர்கள் சட்டரீதியான பொறுப்பிலிருந்து விலக்கும் சலுகையையும் அனுபவிப்பார்கள். இத்தகைய பரஸ்பர ஆதாய முறையே சர்வாதிகார ஆட்சிகளின் நடைமுறையாகும்.

அமெரிக்காவிற்கு இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்

ஒன்றிய அரசு இயந்திரத்தின் அதிகார வர்க்கத்தின் மீது மஸ்கின் கடுமையான தாக்குதல் தொடர்வதால், அமெரிக்க மக்கள் இதன் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அரசு இயந்திரம் கைப்பற்றப்படும் போது உடனடியாக மிக மோசமான, தவறான முடிவுகள் எடுக்கப்படுவதை காண முடியும். அனுபவம் வாய்ந்த அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது, அரசாங்க ஒப்பந்தங்களை திடீரென ரத்து செய்வது மட்டுமல்லாது, முக்கியத்துவம் வாய்ந்த தகவல்தொடர்பு அமைப்புகளுக்குள் ஊடுருவுவது போன்ற மஸ்கின் நடவடிக்கைகள் உள்நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிகவும் மோசமாகப் பாதிப்பதோடு, வெளிநாடுகளில் அமெரிக்கர்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், அரசு இயந்திரத்தை கைப்பற்றுவதனால், டிரம்ப் ஆட்சியில் எடுக்கப்படும் எந்தவொரு கொள்கை முடிவுகளுக்கும் யாரிடமும் பதில்கூற வேண்டிய அவசியம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதும் கவனிக்கத்தக்கது. நாடாளுமன்றம் மட்டுமல்லாது, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் கண்காணிப்பு இல்லாத சூழ்நிலையில், பொருளாதார நலன்கள் பங்கிடப்படுவது தொடர்பான மிகவும் முக்கியமான முடிவுகள் திறைமறைவில், ரகசியமாக எடுக்கும் நிலை உருவாகலாம்.

இறுதியாகக் கூறவேண்டுமானால், அரசு இயந்திரத்தை கைப்பற்றல் என்பது ஊழலுடன் பிரிக்கவே முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளது. அமெரிக்க ஒன்றிய அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள், பொதுநலன் சார்ந்த தகுதிகளுக்குப் பதிலாக விசுவாசமானவரா என்ற பரீட்சையை எதிர்கொள்ளும் நிலை விரைவில் உருவாகலாம்.

டிரம்ப்பை எதிர்ப்பவர்கள் எண்ணற்ற தடைகளைச் சந்திக்க நேரிடும், அதே சமயம் அவரது ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகள் மிக எளிதாகக் கிடைக்கும்.

கட்டுரையாசிரியர் பற்றி: கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் இணைப் பேராசிரியராக லீ மோர்கன்பெஸ்சர் பணியாற்றி வருகிறார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.globalresearch.ca/elon-musk-taking-us-government-state-capture/5879865