அமெரிக்காவும் சீனாவும் வளர்ந்து வரும் பதற்றத்தைத் தணிக்க முடியுமா: தைவான் மற்றும் தென் சீனக் கடல் மோதல்கள்
எக்கனாமிக் டைம்ஸ் - தமிழில்: வெண்பா
ராண்ட் கார்ப்பரேஷன் (Rand Corporation) வெளியிட்ட புதியதொரு அறிக்கை, தைவான் மற்றும் தென் சீனக் கடல் போன்ற முக்கிய பதற்றமான பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் நுட்பமான போட்டியை நிர்வகிப்பது குறித்தான முக்கிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. விரிவான தீர்மானம் இன்னும் எட்டப்பட முடியாத தொலைவில் இருந்தாலும், ஆபத்தான மோதல்களைத் தவிர்க்கும் வகையில் இந்தப் போட்டியை நிலைப்படுத்துவது இரு நாடுகளுக்கும் சாத்தியமானது - அது நன்மை பயக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தைவான் பிரச்சினை
தைவான், சுய-ஆட்சி கொண்ட ஜனநாயக நாடாகும். இதனை சீனா தனது “ஒரே சீனா” (One China) கொள்கையின் கீழ் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உரிமை கோருகிறது. தேவைப்பட்டால் பலவந்தமாக மீண்டும் இணைப்போம் என்றும் அச்சுறுத்துகிறது, அதே சமயம் பிராந்தியப் பாதுகாப்பிற்கான மூலோபாய கூட்டின் ஒரு பகுதியாக தைவானின் தற்காப்பை அமெரிக்கா ஆதரிக்கிறது. உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில், குறிப்பாக குறைக்கடத்திகள் (semiconductors) தயாரிப்பில், தைவானின் முக்கியத்துவம் மையமாக உள்ளது, மேலும் இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மையப்புள்ளியாகவும் திகழ்கிறது. சீனாவால் அதிகளவில் நடத்தப்பட்டு வரும் இராணுவப் பயிற்சிகளும், அமெரிக்காவின் அதிகரித்த ஆயுத விற்பனையும், இராஜதந்திர ஆதரவும் போர் ஏற்படும் அச்சத்தை அதிகரிக்கின்றன.
தென் சீனக் கடல் சர்ச்சை
தென் சீனக் கடல் உலகளாவிய வர்த்தகத்திற்கானதொரு இன்றியமையாத தமனியாகும், இதன் வழியாக ஆண்டுதோறும் சுமார் 3.36 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் கடந்து செல்கின்றன. இந்த கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகள், மீன்வளங்கள், ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் உள்ளன. சர்ச்சைக்குரிய “ஒன்பது புள்ளி எல்லைக் கோடு” (Nine-Dash Line) மூலம் அடையாளப்படுத்தப்பட்ட - கிட்டத்தட்ட முழு கடலையும் சீனா உரிமை கோருகிறது, இது தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளின் பிராந்திய உரிமைகளுடன் ஒன்றுடன் ஒன்று இணைகிறது. பாராசெல் (Paracel) மற்றும் ஸ்ப்ராட்லி (Spratly) தீவுகள் போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனா செயற்கைத் தீவுகளை இராணுவமயமாக்கியுள்ளது, துறைமுகங்களைக் கட்டியுள்ளது, மேலும் இராணுவத் தளங்களை நிலைநிறுத்தியுள்ளது, இது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
தென் சீனக் கடலில் அதிகப்படியான - சட்டவிரோதமான கடல்சார் உரிமைக் கோரிக்கைகள் என்று கருதுபவற்றை சவால் செய்ய அமெரிக்கா, சுதந்திர கடல்சார் நடவடிக்கைகளை (Freedom of Navigation Operations - FONOPs) மேற்கொள்கிறது. அதே சமயம், சீனா, ஒன்பது புள்ளி எல்லைக் கோட்டிற்குள் உள்ள பல தீவுகளையும் அதை ஒட்டிய நீர்ப்பரப்புகள் மீதும் “வரலாற்று உரிமைகள்” மற்றும் இறையாண்மையை வலியுறுத்துகிறது, அமெரிக்க கடற்படையின் இருப்பை தனது பிராந்திய ஒருமைப்பாட்டின் மீறலாக கண்டிக்கிறது. ஆய்வாளர்களான மைக்கேல் மஸார் (Michael Mazarr), அமண்டா கெரிகன் (Amanda Kerrigan), மற்றும் பெஞ்சமின் லெனெய்ன் (Benjamin Lenain) ஆகியோர் சீனாவின் மிக ஆக்ரோஷமான இந்த போக்குகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா செயல்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், பனிப்போர் காலத்தில் நடந்தது போலவே—பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை சீர்குலைக்கும் தீவிர பதற்றங்களுக்குள் போட்டி செல்லாமல் தடுக்க அமெரிக்கா பாடுபட வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
சீன அரசின் சில சமீபத்திய பேச்சுகள் அடிக்கடி சித்தரிக்கப்படுவது போல் தீவிரமானதாக இல்லாமல் இருக்கலாம் என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது ஒருமித்த வாழ்வுக்கான பாதையை காட்டுகிறது. இருப்பினும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது திறமையான இராஜதந்திரம் மற்றும் பரஸ்பர கட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தது. தைவான் ஒரு முக்கிய மோதல் மையமாகும் (core flashpoint). தைவானின் தலைநகரான தைபே-ஐ (Taipei) கட்டுப்பாடுடன் செயல்பட ஊக்குவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தப்படுகிறது, ஏனெனில் எந்தவொரு மோசமான நடவடிக்கைகளும் சீனாவைத் தூண்டி மோதல்களை அதிகரிக்கச் செய்யும். இதற்கிடையில், தென் சீனக் கடலில், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான சர்ச்சைக்குரிய தீவுகள் மற்றும் கடல் வழித்தடங்களைச் சுற்றியுள்ள பதற்றங்களைத் தணிக்க, கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்து வரையறுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
சமீபத்திய நிகழ்வுகள் இந்த அவசரத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க கடற்படை சீனாவின் பிராந்திய உரிமைகளை சவால் செய்யும் சுதந்திர கடல்சார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், சீனா செயற்கைத் தீவுகளில் இராணுவத் தளங்களை விரிவுபடுத்தியுள்ளதோடு ரோந்துப் பணிகளையும் அதிகரித்துள்ளது, இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் பிராந்தியப் படைகளுடன் பல மோதல்கள் (stand-offs) ஏற்பட்டுள்ளன. இவை உறவுகளைச் சிக்கலாக்குவதோடு எதிர்பாராத அபாயங்களை (risks of miscalculation) உயர்த்துகின்றன. நிபுணர்கள் தற்போதைய போக்கை பனிப்போர் வடிவங்களுடன் ஒப்பிடுகின்றனர், மோதலின்றி போட்டியை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதில் உள்ள சவால் மிக அதிகம்—தைவானின் பாதுகாப்பு அமெரிக்காவின் மூலோபாய உத்திகள், சீனாவின் தேசிய பெருமிதம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பாதிக்கின்றன. அதேபோல், தென் சீனக் கடல் பொருளாதாரப் பாதைகளுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் (military maneuvering) இன்றியமையாததாகும்.
முடிவாக, ராண்ட் கார்ப்பரேஷனின் அறிக்கை எச்சரிக்கையான நம்பிக்கையை வழங்குகிறது. இந்த மோதல் மையங்களில் அமெரிக்கா-சீனா உறவுகளை நிலைப்படுத்துவது சவாலானது, ஆனால் இரு தரப்பினரும் மூலோபாய பொறுமை, தெளிவான தொடர்பு மற்றும் தங்கள் போட்டித்தன்மையை பொறுப்புடன் நிர்வகிப்பது ஆகியவற்றில் உறுதியளித்தால் அதை அடைய முடியும். இல்லையெனில், உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு