வெனிசுலாவுக்கு எதிரான ட்ரம்பின் சட்டவிரோதப் போர் நகர்வுகள்

வெண்பா (தமிழில்)

வெனிசுலாவுக்கு எதிரான ட்ரம்பின் சட்டவிரோதப் போர் நகர்வுகள்

கரீபியன் பகுதியில் பல தசாப்தங்களில் இல்லாத மிகப் பெரிய அளவில் இராணுவத்தை அமெரிக்கா குவித்து வருவதாலும், ஆழ்கடலில் சிறிய படகுகளில் உள்ளவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்வதாலும், ட்ரம்ப் அரசு வெனிசுலாவில் சட்டவிரோதமாக வலுக்கட்டாய ஆட்சிக் கவிழ்ப்பை (forcible regime change) நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப் அரசு, செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து 57 பேரைக் கொன்றுள்ளது. அத்தகைய கடல் தாக்குதல்களுக்குச் சட்டரீதியான நியாயத்தைக் கொடுக்க மேற்கொண்ட பலவீனமான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. அந்த கொலைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை ஆகும்.

ட்ரம்பின் கொலைகாரப் பிரசாரம் பிப்ரவரி 20 அன்று கவனத்திற்கு வந்தது. அப்போது, வெளியுறவுத் துறை, 'ட்ரென் டி அராகுவா' (Tren de Aragua) உட்பட எட்டு போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளை வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளாக (foreign terrorist organizations) அறிவித்தது. குடியேறிகளை எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அனுப்ப இத்தகைய அவதூறை பயன்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆயினும், இப்போது ட்ரம்ப், கடலில் தான் மேற்கொள்ளும் சட்டவிரோதத் தாக்குதல்களைச் சரியானது என்று நிரூபிக்க இதை ஒரு காரணமாகக் கூறி வருகிறார். மார்ச் 15 அன்று, ட்ரம்ப் ஒரு "பிரகடனத்தை" வெளியிட்டார். அதில் 'ட்ரென் டி அராகுவா' அமைப்பு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவுடன் (Nicolás Maduro) இணைந்து, அமெரிக்காவின் மீது முறையற்ற தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார், அது எவ்வகையில் முறையற்ற தாக்குதல் என்று அவர் விளக்கவில்லை. ஆனால் பிப்ரவரி 26 அன்று, பெரும்பாலான அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள், 'ட்ரென் டி அராகுவா' வெனிசுலா அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், அதன் கட்டளைகளின் பேரில் அமெரிக்காவில் குற்றங்களைச் செய்யவில்லை என்றும் கண்டறிந்தன.

செப்டம்பர் 2 அன்று, கரீபியன் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் எனக் கூறி அதன் மீது அமெரிக்கா தாக்குதலை தொடுத்ததாக ட்ரம்ப் அறிவித்தார். வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ (Marco Rubio), அதில் இருந்த அனைவரையும் கொல்வதற்குப் பதிலாக, அந்தக் கப்பலை வழிமறித்துத் தடுத்திருக்க முடியும் என்று கூறியபோதும், ட்ரம்ப் அந்த தாக்குதலை நடத்தினார். ட்ரம்ப்  அளித்த பதில், திட்டமிட்ட கொலைக்கு உரிய காரணமாக இல்லை. சட்டப்பூர்வ நடைமுறை என்னவென்றால், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கான நம்பத்தகுந்த காரணம் இருந்தால் மக்களைக் கைது செய்து, உரிய செயல்முறைக்கு இணங்க அவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதாகும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை ஆழ்கடலிலும், அமெரிக்க பிராந்தியத்திற்குட்பட்ட கடல்பரப்பிலும் கைது செய்ய அமெரிக்க மற்றும் சர்வதேசச் சட்டங்கள் வழிவகுக்கின்றன.

தாக்குதல் வீடியோவுடன் கூடிய சமூக வலைதளப் பதிவு ஒன்றில், ட்ரம்ப் இந்தத் தாக்குதலை, "உறுதியாக அடையாளம் காணப்பட்ட 'ட்ரென் டி அராகுவா' போதைப்பொருள்-பயங்கரவாதிகளுக்கு" (Narcoterrorists) எதிரானது என்று அறிவித்தார். பிப்ரவரி 20 அன்று வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அந்த அமைப்பு நியமிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். 

இது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனக் கூறப்படுபவர்களைப் படுகொலை செய்வதற்குச் சட்டப்பூர்வமான அடிப்படை அல்ல. ட்ரம்ப்பின் நோக்கம், வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதாக இருந்தாலும், அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க துறையின் (U.S. Drug Enforcement Administration) 'தேசிய போதைப்பொருள் அச்சுறுத்தல் மதிப்பீடு 2024' (National Drug Threat Assessment 2024) அறிக்கையில் வெனிசுலா குறிப்பிடப்படவே இல்லை.

ஆயுத மோதல் நிலை இல்லை, சட்டவிரோத குழுக்கள் இல்லை, தற்காப்பு இல்லை  

அக்டோபர் தொடக்கத்தில், ட்ரம்ப் காங்கிரசுக் குழுக்களுக்குத் தெரிவித்தது என்னவென்றால், சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் "சட்டவிரோதக் குழுக்கள்" என்றும் அத்தகைய தீவிரவாத அமைப்புகளுடன் அமெரிக்கா முறையான "ஆயுத மோதலில்" ஈடுபட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் இந்தத் தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை என்று நியாயப்படுத்த முயன்றார்.

"அமெரிக்கா இத்தகைய தீவிரவாத அமைப்புகளுடன் சர்வதேச ரீதியில்லா ஆயுத மோதலில் (non-international armed conflict) ஈடுபட்டுள்ளதாக” ட்ரம்ப் கூறினார். "ஆயுத மோதல் சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள" பாதுகாப்புத் துறைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும், "இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்புக்காகவும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் பலத்தைப் பயன்படுத்த வேண்டியதொரு முக்கியமான கட்டத்தை அமெரிக்கா தற்போது அடைந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.

செப்டம்பர் 15 அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு, அதில் "போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட கப்பலில் சுமார் 3 தீவிரவாதிகளின் கொல்லப்பட்டுள்ளனர்" என்கிறார். அவர்களை அல்-கொய்தாவுடன் (al-Qaeda) ஒப்பிடுகிறார். இது புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" குறிவைக்கப்பட்ட அமைப்பாகும். கடந்த வாரம், போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) கூறுகையில், "எங்கள் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தும் நார்டோ-பயங்கரவாதியாக நீங்கள் இருந்தால், நாங்கள் உங்களை அல்-கொய்தாவை நடத்துவது போலவே நடத்துவோம்" என்றார். ஆனால் 'ட்ரென் டி அராகுவா' அல்-கொய்தா அல்ல.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் (Supreme Court) அளித்த தீர்ப்பில், அல்-கொய்தாவுடனான மோதல் ஒரு உண்மையான போர் என்று வரையறுத்தது. எனவே ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகம் பிடிபட்ட உறுப்பினர்களை காலவரையின்றி சிறை வைக்கலாம். ஆனால், அரசாங்கம் அவர்களை ஜெனிவா ஒப்பந்தங்களின்படி (Geneva Conventions) மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. அதாவது அவர்களைச் சித்திரவதை செய்யவோ அல்லது கொல்லவோ முடியாது. அல்-கொய்தா கடத்தப்பட்ட விமானங்களை ஆயுதமாக்கி அமெரிக்காவைத் தாக்கி மக்களை வேண்டுமென்றே கொன்றது. ஆகையால், அந்தக் குழுவிற்கு எதிராக ஆயுதப் படைகளைப் பயன்படுத்த காங்கிரசும் அங்கீகாரம் அளித்திருந்தது.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு காங்கிரசால் இயற்றப்பட்ட இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான 2001 அங்கீகாரத்தை (Authorization for the Use of Military Force - AUMF) ட்ரம்ப் தற்போது பயன்படுத்த முடியாது. ஒபாமா மற்றும் பைடன் அரசுகளால் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற சட்டவிரோத இராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்த அந்த அங்கீகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. "செப்டம்பர் 11, 2001 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் நடத்த திட்டமிட்ட, அங்கீகரித்த, செயல்படுத்திய, உதவிய நாடுகள், அமைப்புகள், தனிநபர்களுக்கு எதிராகத் தேவையான - பொருத்தமான அனைத்து பலத்தையும் பயன்படுத்த" ஜனாதிபதிக்கு அங்கீகாரம் அளித்தது. ஆனால், அந்தச் சட்டம் 'ட்ரென் டி அராகுவா' குழுவிற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதற்குச் சட்டப்பூர்வமான அடிப்படையை வழங்கவில்லை.

சட்டத்தின் இரண்டாம் பிரிவின் (Article II) கீழ், தற்காப்புக்காக மரணதண்டனை கொடுக்கும்படியான தனது அதிகாரத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாது. அவர் அமெரிக்கா அல்லது வெளிநாட்டில் உள்ள அமெரிக்கர்கள் மீதானத் தாக்குதலைத் தடுப்பதற்காகத்தான் இதை பயன்படுத்த வேண்டியிருக்கும். " அமெரிக்கா தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் அளவுக்கான ஆயுதத் தாக்குதலை இந்தக் குழு அமெரிக்காவிற்கு எதிராக நடத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று ஐ.நா.வின் மூன்று நிபுணர்கள் தெரிவித்தனர். "சர்வதேசச் சட்டமும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனக் கூறப்படுபவர்களைச் சாதாரணமாகக் கொல்ல அனுமதிக்கவில்லை," என்று அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர். ட்ரம்பின் தாக்குதல்களை அவர்கள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று அழைத்தனர். "குற்றச் செயல்கள் சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க, சர்வதேச ஒத்துழைப்புக்கு உட்பட்டு, விசாரிக்கப்பட்டு, வழக்குத் தொடரப்பட வேண்டும்".

தற்போது ஆயுத மோதல் எதுவும் இல்லை. படகுகளில் இருந்த மக்கள் தீவிரவாதிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது. "இது விதிகளின் எல்லையைத் தாண்டுவது மட்டுல்ல; இது அதைக் கிழித்தெறிகிறது. இது அதைப் தூள்தூளாக்குகிறது" என்று இராணுவத்தின் போர்ச் சட்ட விவகாரங்களுக்கான முன்னாள் மூத்த ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அட்வகேட் ஜெனரல் வழக்கறிஞர் ஜெஃப்ரி கார்ன் (Geoffrey Corn), 'தி நியூயார்க் டைம்ஸ்'ஸிடம் கூறினார். அமெரிக்க மேலாதிக்கத்தின்கீழான அதன் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights) பொறிக்கப்பட்டுள்ள வாழும் உரிமையை (right to life) இந்தத் தாக்குதல்கள் மீறுகின்றன. இந்த உடன்படிக்கை "யாரும் தன்னிச்சையாக யார் உயிரையும் பறிக்கக் கூடாது" என்கிறது. 

வெனிசுலா மீதான தாக்குதல் சட்டவிரோத ஆக்கிரமிப்புச் செயலாகும்  

கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனக் கூறப்படுபவர்களை கொலை செய்து வருவதோடு, வெனிசுலா மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு இராணுவத்தை குவித்துள்ளது ட்ரம்ப் அரசு. "அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் செழிப்பைக் குலைக்கும் தீவிரவாதிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் கண்டறியவும், கண்காணிக்கவும், ஒழித்துக்கட்டவும் அமெரிக்காவின் திறனை வலுப்படுத்த" யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் குழுவை ஐந்து போர்க் கப்பல்களுடன் அந்தப் பகுதிக்கு அனுப்ப ஹெக்ஸெத் உத்தரவிட்டுள்ளார்.

ஹட்சன் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியுமான பிரையன் கிளார்க் (Bryan Clark) 'தி அட்லாண்டிக்' பத்திரிகையிடம், "விமானந்தாங்கிக் கப்பலைக் கடலில் உள்ள சிறிய படகுகளைக் குறிவைப்பதில் திறமையாகப் பயன்படுத்த முடியாது, கரையோர இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்" "வெனிசுலா போன்ற தளங்கள் இல்லாத பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த, விமானந்தாங்கிக் கப்பல் சரியான தேர்வாகும்" என்று கூறினார். 

இப்போது, அந்தப் பகுதியில் எட்டு போர்க்கப்பல்களில் 6,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினர் உள்ளனர். யுஎஸ்எஸ் ஃபோர்டு தாக்குதல் குழு கிட்டத்தட்ட 4,500 மாலுமிகளையும் ஒன்பது விமானப் படைப் பிரிவுகளையும் கூடுதலாக குவிக்கவுள்ளது. வெனிசுலாவுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள B-52H குண்டுவீச்சு விமானங்கள் அணு ஆயுதங்களை வீசும் திறன் கொண்டவை.

"விரைவில் வெனிசுலாவில் தரைவழியிலான போர் நடவடிக்கை இருக்கும்," என்று ட்ரம்ப் அக்டோபர் 23 அன்று கூறினார். மேலும், "நான் போர்ப் பிரகடனத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருபவர்களை நாம் கொல்லப் போகிறோம், அவ்வளவுதான். சரிதானே? நாம் அவர்களைக் கொல்லப் போகிறோம். அவர்கள் செத்தவர்களைப் போல இருப்பார்கள்" என்றார்.

வெனிசுலாவுக்குள் இராணுவத் தாக்குதல்களுக்கான திட்டங்களை பென்டகன் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் உயிர் பறிக்கும் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட CIA-க்கு ட்ரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளார். யுத்ததந்திர மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (Center for Strategic and International Studies) ஒரு அறிக்கையில் வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்திற்கான டிரம்பின் ஆர்வங்களை கோடிட்டுக் காட்டியது. இதற்குத் தேவையான துருப்புக்களின் எண்ணிக்கை, கடற்படை - விமானச் சொத்துக்கள் மற்றும் தரைச் சொத்துக்கள் ஆகியவற்றை அந்த விவரிக்கிறது.

ஐநா சாசனம் (United Nations Charter), ஆயுதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்புக்காக அல்லது ஐ.நா. பாதுகாப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்டால் தவிர, மற்றொரு நாட்டிற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது பலத்தைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலையோ தடைசெய்கிறது. மேலே விளக்கப்பட்டபடி, ஆயுதத் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. எனவே, ட்ரம்பிற்குத் தற்காப்பு நடவடிக்கை என்று கூறும் வாய்ப்பு இல்லை. ட்ரம்ப் வெனிசுவேலாவைத் தாக்கினால், அவரது அரசு சட்டவிரோதமான ஆக்கிரமிப்புச் செயலைச் (unlawful act of aggression) செய்வதாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான (International Criminal Court) ரோம் சட்டத்தால் (Rome Statute) ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுச் சபைத் தீர்மானம் 3314-ல் (General Assembly Resolution 3314) குறிப்பிடப்பட்டுள்ள வரையறையின்படி: "ஆக்கிரமிப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஒரு அரசால் ஆயுத பலத்தைப் பயன்படுத்துதல், அல்லது ஐநா சாசனத்துடன் முரண்பட்டு வேறு விதத்தில் பயன்படுத்துதல் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செயலாகும்".

அமெரிக்க அமைப்பு சாசனம் (Organization of American States - OAS), அமெரிக்கா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளும், தற்காப்பைத் தவிர்த்து, மற்ற எந்த உறுப்பு நாட்டிற்கும் (வெனிசுலா உட்பட) எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோருகிறது.

வலுக்கட்டாய ஆட்சி மாற்றம் - வெனிசுலாவின் சுயநிர்ணய உரிமையை மீறுகிறது  

தனது முதல் பதவிக்காலத்திலும் வெனிசுலாவை ஆக்கிரமித்து அதன் ஆட்சியைக் கவிழ்க்கும் விருப்பத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்தார் ட்ரம்ப். படையெடுப்பைப் பற்றிய எண்ணத்தில் அவர் மூழ்கியிருந்தார் என்று ஏ.பி. (AP) செய்தி வெளியிட்டுள்ளது. 2019-இல், ட்ரம்ப் அரசு, மதுராவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, ஜுவான் குவைடோவை (Juan Guaidó) வெனிசுவேலாவின் "இடைக்கால ஜனாதிபதியாக" (interim president) நிறுவ, ரூபியோவின் தலைமையில் தோல்வியுற்றதொரு அரசியல் சதித்திட்டத்தை செய்தது.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ரூபியோ இப்போது மீண்டும் மதுராவை பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்குகிறார். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் மதுராவைக் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்தும் விதமான தகவல்களுக்குப் பரிசாக 50 மில்லியன் டாலர் வரை அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்குகிறது. மதுராவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே இலக்கு என்று அமெரிக்க அதிகாரிகள் சிலரும் தனிப்பட்ட முறையில் கூறி வருகின்றனர். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை ஆகிய இரண்டும் சுயநிர்ணய உரிமையை (right to self-determination) உறுதி செய்கின்றன. அதாவது, வலுக்கட்டாய ஆட்சி மாற்றம் கூடாது என்கிறது.

OAS சாசனம் கூறுகிறது:

ஒவ்வொரு நாடும் வெளிப்புறத் தலையீடு இல்லாமல், அதன் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கும், அதற்கு மிகவும் பொருத்தமான வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் உரிமை உண்டு. மேலும், மற்றொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டிய கடமையும் அதற்கு உண்டு.

ட்ரம்பின் "போர் வெறி கொண்ட" பேச்சை நிராகரித்ததோடு, "எங்களின் பெட்ரோலிய வளங்களை அபகரிக்கும் இறுதி இலக்குடன் ஆட்சி மாற்றத்தை சட்டப்பூர்வமாக்க" ட்ரம்ப் முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது வெனிசுலா. 

ஜனநாயக வழக்கறிஞர்களின் சர்வதேச சங்கம் (International Association of Democratic Lawyers - IADL) வெனிசுலா கடற்கரையில் அமெரிக்க இராணுவ குவிப்பையும், வெனிசுலாவின் மீன்பிடிப் படகுகள் மீது சட்டவிரோதமாகக் குண்டுவீசுதல் மற்றும் கப்பலிலை சிறைபிடிப்பது ஆகியவற்றையும் கண்டித்ததுடன் பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:

இந்த நகர்வுகள், வெனிசுலாவில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா நேரடியாகச் சதி மற்றும் சதி முயற்சிகளில் (coups and coup attempts) ஈடுபட்டதன் விளைவாகும். வெனிசுல மக்களை வறுமைப்படுத்த சட்டவிரோதத் தன்னிச்சையான நிர்ப்பந்த நடவடிக்கைகளை விதித்தல், வெனிசுலா இராஜதந்திரிகளை கைது செய்து சிறைபடுத்தல், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள வெனிசுலாவின் சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்தல், அமெரிக்க கூலிப்படையினரின் ஊடுருவல் இவற்றைத் தொடர்ந்தே வெனிசுலா தேர்தல்களில் தலையீடு வந்துள்ளது.

வெனிசுலா "உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் வளங்களையும், நான்காவது பெரிய இயற்கை எரிவாயு வளங்களையும்" கொண்டுள்ளது என்று IADL மேலும் குறிப்பிட்டது. மேலும், "நாட்டின் சுதந்திரமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வளங்களின் வர்த்தகத்தை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் முயன்றுள்ளன".

அக்டோபர் 24 அன்று, அமெரிக்கத் தலையீடு அல்லது ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள வெனிசுலா சர்வதேச தன்னார்வப் படையைத் (international volunteer brigade) திரட்டி வருவதாக மதுரா அறிவித்தார். "லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் முழுவதிலுமிருந்து, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பல இடங்களிலிருந்தும் எங்களுக்கு ஆதரவுகள் வந்துள்ளன. பல சமூகத் தலைவர்கள், தாங்களும் தயாராகி வருவதாகக் கூறும் வீடியோக்களைச் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறேன்," என்று அவர் கூறினார். அமெரிக்க இராணுவ குவிப்பும், கரீபியனில் சிறிய படகுகள் மீதான கொடிய தாக்குதல்களும் குறித்து கருத்துத் தெரிவித்த மதுரா, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பை "புதியதொரு நிரந்தரப் போர்" (a new eternal war) என்று அழைத்தார்.

வெனிசுலா பொலிவேரியன் இராணுவத்தை (Bolivarian Militia) அணிதிரட்டியுள்ளது. அந்த இராணுவப் பிரிவில் ஏற்கனவே உள்ள 8 மில்லியன் உறுப்பினர்களுடன் மேலும் 3 மில்லியன் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. தனது எல்லைகளைப் பலப்படுத்தியுள்ளது. மேலும், அதன் பிரதேசத்திற்குள் எவ்வித அமெரிக்க ஊடுருவலையும் தடுப்பதற்காகப் பாரிய இராணுவப் பயிற்சிகளை (massive military drills) ஆரம்பித்துள்ளது.

சர்வதேச அதிகார வரம்புக் கொள்கைகளின் கீழ் ட்ரம்ப், ரூபியோ, ஹெக்ஸெத் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளைப் படுகொலைக்காக விசாரிக்கவும், குற்றம் சாட்டவும் வேண்டும். அமெரிக்க அரசு சட்டவிரோத கொலைகளை நிறுத்த வேண்டும்; வெனிசுலாவிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கோருவதற்கு நாம் சக்திவாய்ந்ததொரு போர் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/10/trump-is-moving-relentlessly-toward-illegal-war-in-venezuela/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு