இந்தியா முக்கிய கடற்படைப் பயிற்சியில் சீனா, துருக்கியை விலக்கி வைத்துள்ளது - 55 பிற நாடுகள் பங்கேற்கவுள்ளன

வெண்பா (தமிழில்)

இந்தியா முக்கிய கடற்படைப் பயிற்சியில் சீனா, துருக்கியை விலக்கி வைத்துள்ளது - 55 பிற நாடுகள் பங்கேற்கவுள்ளன

2026ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள முக்கிய சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் இருந்து சீனா மற்றும் துருக்கியை விலக்கி வைத்துள்ளது இந்தியா. இந்தியப் பெருங்கடலில் நுழையும் ஒவ்வொரு சீனக் கப்பலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கடற்படையின் துணைத் தளபதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

சர்வதேசக் கப்பல் அணிவகுப்பு (IFR) நிகழ்வுக்கு இந்த இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்காததற்கான காரணம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ஆகியவற்றின்போது அவை பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

“கடற்படைக் கப்பல்களோ அல்லது ஆராய்ச்சிக் கப்பல்களோ எதுவாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் எங்கள் கண்காணிப்பில் உள்ளன,” என்று கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வாத்ஸ்யாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். “அவற்றின் நடமாட்டங்கள் குறித்து நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் சீன கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்-5, இப்பகுதியில் செயல்பட்டது குறித்த செய்திகளைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை “முழு விழிப்புணர்வுடனும் செயல்பாட்டுக்குத் தயாராக இருப்பதாகவும்” வாத்ஸ்யாயன் கூறினார்.

மாறாக, விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அமெரிக்கா, ரஷ்யா உட்பட 55 பிற நாடுகள் உறுதி செய்துள்ளன.

2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் 25 வரை நடைபெற உள்ள IFR மற்றும் ஈராண்டுக்கு ஒரு முறையான MILAN பயிற்சியை அறிவித்தார். அந்த நேரத்தில், 40 முதல் 50 வெளிநாட்டுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் செயல்படவுள்ளன, இது மிக முக்கியமான சர்வதேச கடல் போக்குவரத்து வழித்தடம் என்றும் துணைத் தளபதி  குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/security/india-excludes-china-turkey-from-major-naval-exercise-vows-to-monitor-all-vessels

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு