"எலான் மஸ்கை நாடு கடத்து; பாசிசத்தை முறியடிப்போம்" - அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டங்கள்

தமிழில்: விஜயன்

"எலான் மஸ்கை நாடு கடத்து; பாசிசத்தை முறியடிப்போம்" - அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டங்கள்

"எலான் மஸ்கை நாடு கடத்து; பாசிசத்தை முறியடிப்போம்": மஸ்கின் DOGE’க்கு எதிராக, ட்ரம்ப்’க்கு எதிராக, USAID மூடப்படுவதற்கு எதிராக அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அண்மைய நிர்வாக முடிவுகளுக்கு எதிராக மக்கள் பெருந்திரளாகக் கூடி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள  கடுமையான கட்டுப்பாடுகள், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடிய சட்டத் திருத்தங்கள், காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் போன்ற முதன்மையான பிரச்சினைகளை மையப்படுத்தியே போராட்டங்கள் நடந்தன.

பிலடெல்பியா போன்ற பெருநகரங்களிலும், கலிபோர்னியா, மினசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின் மற்றும் இந்தியானா போன்ற மாநிலத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், ட்ரம்ப், அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எலான் மஸ்க்கையும், கன்சர்வேடிவ் கட்சிக் கொள்கைகளின் தொகுப்பான "திட்டம் 2025" ஆகியவற்றை கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திப் போராடினர்.

டிரம்ப் நிர்வாகம் USAID அமைப்பை மூடுவதற்கான திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மக்கள் அந்த அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாஷிங்டன், டி.சி.யில் ஒன்றுகூடினர். இந்த முடிவின் காரணமாக, உலகளவில் USAID-இல் பணிபுரியும் ஊழியர்கள், அறுபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த அமைப்பின் பணிகளை முடித்துவிட்டுப் பணியிடங்களை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர்.

ஒஹாயோ மாநிலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்கரெட் வில்மெத் அவர்கள், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பின்வருமாறு கூறினார்: "குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக ஜனநாயகம் பலவீனமடைந்து வருவது என்னை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. ஆனால் இது திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல; இது நீண்ட காலமாக படிப்படியாக நடந்தேறி வந்துள்ளது. தீங்கு விளைவிக்கக்கூடிய இந்த மாற்றங்களை எதிர்ப்பதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்." 

இந்த எதிர்ப்புப் பேரணிகள், #BuildTheResistance மற்றும் #50501 (அதாவது, ஒரே நாளில் 50 மாநிலங்களில் 50 ஆர்ப்பாட்டங்கள்) போன்ற இணையவழி ஹாஷ்டேக்குகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பரவலாக ஒருங்கிணைக்கப்பட்டன. "பாசிசத்தை முறியடிப்போம்", "நமது ஜனநாயகத்தை காத்திடுவோம்" போன்ற முழக்கங்களை உள்ளடக்கிய சமூக ஊடகப் பதிவுகள், நீதிக்காகக் குரலெழுப்ப விரும்பும் எண்ணற்ற மக்களை இந்த இயக்கத்தில் இணையுமாறு அறைகூவல் விடுத்திருந்தன.

கொலராடோ ஸ்பிரிங்ஸில், நாடு தழுவிய இந்த எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாக அகாசியா பூங்காவில் திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர்.

அரசாங்கத்தில் எலான் மஸ்கின் தலையீடு குறித்த கவலைகள்

மிச்சிகன் மாநிலத்தின் லான்சிங் நகரில், நூற்றுக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க கருவூலத் துறையின் நிதித் தகவல்களை எலான் மஸ்க்கிடம் தருவது ஆபத்தானது என்று ஆன் ஆர்பரைச் சேர்ந்த கேட்டி மிக்லியெட்டி என்பவர் கூறியிருந்தார். டிரம்ப்பை ஒரு கைப்பாவையாக மஸ்க் இயக்குவது போன்ற சித்தரிப்புடன் கூடிய பதாகை ஒன்றையும் அவர் ஏந்தியிருந்தார். அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "நாம் இப்பிரச்சினையைத் தடுத்து நிறுத்துவதோடு, நாடாளுமன்றத்தை உடனடியாக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தாவிட்டால், இது மக்களாட்சிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகிவிடும்" என்று கூறினார்.

மேலும் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மஸ்கையும், அரசாங்க செயல்திறன் துறை (DOGE) எனப்படும் அமைப்பு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர் .

மிசௌரி மாநிலத்தின் ஜெபர்சன் நகரில் ஓர் ஆர்ப்பாட்டக்காரர், "DOGE சட்டப்பூர்வமானது அல்ல" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தயிருந்தார். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், சமூகப் பாதுகாப்பு துறையின் தரவுகளும் மஸ்கிடம் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள், அரசாங்கத்தின் நிதி துறைகளில், நிதிக் கட்டமைப்புகளில் DOGE-ன் தலையீடு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தலாம் அல்லது சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற நலத்திட்டங்களுக்கான கொடுக்கல் வாங்கல்களிலும் இடையூறு விளைவிக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

DOGE உடன் பணிபுரியும் எந்தவொரு தொழில்நுட்ப அதிகாரிக்கும் தகவல்களை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்படும், அதாவது அவர்கள் தரவுகளைப் பார்க்க முடியுமே தவிர அவற்றை மாற்றியமைக்க முடியாது என்று கருவூலத் துறை அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார்.

நாடு தழுவிய போராட்டங்கள்

டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், வணிகம், குடியேற்றக் கொள்கைகள், சுற்றுச்சூழல் கொள்கைகள் போன்றவற்றை பாதிக்கக்கூடிய பல்வேறு நிர்வாக ஆணைகளைப் பிறப்பித்தார். இந்த முடிவுகளுக்கு பெருகிவரும் எதிர்ப்பின் காரணமாக, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரில், மக்கள் திரண்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்றனர். அட்லாண்டாவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்காவில் ஒன்றுகூடியதோடு, மாநில சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கியும் பேரணியாக சென்றனர். கலிபோர்னியாவின் சக்ரமெண்டோவில், போராட்டக்காரர்கள் மாநில சட்டப்பேரவைக்கு வெளியே ஒன்று திரண்டனர்.

டென்வரில், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE) நிர்வகிக்கப்படும் ஒரு வளாகத்தின் அருகே ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன, அப்போது சிலர் தடுப்புப் காவலிலும் வைக்கப்பட்டனர்.

ஃபீனிக்ஸ் நகரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “எலான் மஸ்க்கை நாடு கடத்து”,“வெறுப்பில்லை, பயமுமில்லை; வெளிநாட்டினர் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

அலபாமாவில் எல்ஜிபிடிகியூ+ உரிமைகள் பறிக்கப்படுதற்கு எதிரான கண்டனப் பேரணி

அலபாமாவில், எல்ஜிபிடிகியூ+ சமூகத்தினரைப் பாதிக்கும் புதிய சட்டமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். செவ்வாயன்று, அலபாமா மாநிலத்தில் ஆண், பெண் என இரு பாலினத்தவர்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் வகையில் ஆளுநர் கே ஐவி சட்டமொன்றை நிறைவேற்றினார். டிரம்ப்’ன் கூட்டாட்சி அரசாங்கம், மக்களின் பாலினத்தை ஆண் அல்லது பெண் என்று மட்டுமே வகைப்படுத்த வேண்டுமெனப் பிறப்பித்திருந்த உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவை ஆளுநர் எடுத்திருக்கிறார். 

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய யூனிடேரியன் யுனிவர்சலிஸ்ட் திருச்சபையின் அருட்திருமதி ஜூலி கான்ராடி அவர்கள் கூறுகையில், “தமக்கு எல்லையற்ற அதிகாரம் இருப்பதாக அதிபர் நினைக்கலாம், ஆனால் உங்களுடைய பாலினத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. உங்கள் அடையாளத்தை வரையறுக்கும் உரிமையும் அவருக்கு இல்லை” என்று கூறினார்.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://timesofindia.indiatimes.com/world/us/deport-elon-reject-fascism-protesters-hit-streets-across-us-against-donald-trump-musks-doge-and-shuttering-of-usaid/articleshow/117964471.cms