அமெரிக்க ஏகபோக இராணுவ தொழிற்துறை கூட்டுகளின் சூறையாடல்

செந்தளம் செய்திப்பிரிவு

அமெரிக்க ஏகபோக இராணுவ தொழிற்துறை கூட்டுகளின் சூறையாடல்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாப வெறி எவ்வாறு உலகப் போர்களையும், ஆயுதப் போட்டியையும் தூண்டுகிறது என்பதை பற்றி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகி, மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளறது. அமெரிக்க இராணுவச் செலவினங்கள், குறிப்பாக இராணுவ ஒப்பந்தங்களை கைப்பற்றும் ஆயுத கார்ப்பரேட்டுகளின் லாபங்கள் சமீபத்தில் பிரம்மாண்டமான அளவு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை காண்பிக்கிறது.  அமெரிக்க அரசின் இராஜதந்திர வழியிலான உதவிகளுக்கும், மனிதாபிமான உதவிகளுக்கும் ஒதுக்கும் பட்ஜெட் நிதியை விடப் போர்களுக்காக இரணுவ ஒப்பந்தங்கள் என்ற முறையில் ஆயுத கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த செலவினம் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. இதன் மூலம் இந்த ஏகாதிபத்திய அமைப்பின் அடிப்படையான முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. 

"இலாபம் கொழிக்கும் போர்கள்: அமெரிக்க இராணுவ(பென்டகன்)  பட்ஜெட்டின் பிரதான பயனாளிகள், 2020-2024" என்ற தலைப்பிடப்பட்ட அறிக்கையை, குவின்சி ஆய்வு நிறுவனமும், பிரவுன் பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட்டது (A Joint Report of the Quincy Institute for Responsible Statecraft and Costs of War at Brown University’s Watson School of International and Public Affairs). அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-தொழில்துறை கார்ப்பரேட்டுகளின் செயல்பாடுகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்த ஆய்வறிக்கை வழங்குகிறது.

பென்டகன் செலவினங்களிலிருந்து பெரும் லாபம் ஈட்டுபவர்கள் யார்?

அமெரிக்கா 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னரும் அதாவது அமெரிக்காவில் செப்டம்பர் 2001ல் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு,  "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளில் "அரசு பயங்கரவாத"ப் போரை அமெரிக்கா நடத்தியது. ஆப்கானிஸ்தானில் தொடங்கி ஈராக், சிரியா, லிபியா என்று மத்திய கிழக்கு நாடுகளை சூறையாடியது. 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்கா கொன்று குவித்தது. மக்களை வேட்டையாடி எந்த ஒரு ஆட்சியையும் தக்க வைக்க முடியாது என்பதை அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கு போராளிகள் உணர்த்தினர். அமெரிக்கா மத்திய கிழக்கில் எந்த அளவுக்கு இராணுவ வெற்றிக்களை அடைந்ததோ அதே அளவுக்கு அரசியல் பொருளாதார தளத்தில் பெரும் தோல்வி கண்டது. இப்போரில் 5 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. அரசியல் பொருளாதார பின்னடைவு இராணுவ பின்னடைவுக்கு இட்டுச்சென்றது. அதனால் பல நாடுகளிலிருந்து படைகளை குறைத்துக்கொண்டு வெளியேறுவது என்று ஒபாமா காலத்தில் முடிவெடுக்கப்பட்டு டிரம்ப் அதிபராக இருந்த முதலாவது பதவிக் காலத்தில் அமெரிக்கப் படைகள் பின்வாங்கப்பட்டது. அதற்கு பின்னரும் கூட, பென்டகன் செலவினங்கள் சிறிதும் குறையவில்லை என்பதை இந்த ஆய்வறிக்கை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதே காலத்தில் இராணுவ ஒப்பந்தங்களைப் கைப்பற்றும் ஆயுதக் கார்ப்ரேட்டுகளின் வருவாய்கள் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. காட்சிகள் மாறியுள்ளன ஆனால் காரியங்கள் மாற்றமில்லாமல் தொடர்கிறது. இப்பொழுது அவர்களுக்கு கிடைந்துள்ள காரணம், சீனாவுடனான இராணுவ போட்டி; உக்ரைன் மற்றும் காசாவில் நடக்கும் போர்கள்; இவைகளால் மக்கள் வரிப்பணம் கொட்டி செலவழிக்கப்படுகிறது. இதில் தொடர்புடைய ஆயுத கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்று அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்த இராணுவ பட்ஜெட் 4.4 டிரில்லியன் டாலர்களாகும். அதில் தனியார் நிறுவனங்கள் பென்டகனிடமிருந்து 2.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. அதாவது இந்த  5 வருடத்தில் பென்டகனுக்கு ஒதுக்கியுள்ள பட்ஜெட்டில் சுமார் 54% தனியார் இராணுவ நிறுவனங்களே பெருமளவில் பலனைடந்துள்ளன.

இதே காலகட்டத்தில், அமெரிக்காவின் இராஜதந்திர வழியிலான உதவிகள், வளர்ச்சி மற்றும் மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் அமைதி வழி சீர்குலைவு மற்றும் சதிவேலைகளுக்கு ஒதுக்கிய மொத்த பட்ஜெட் (இராணுவ செலவை தவிர்த்து) 356 பில்லியன் டாலர்களாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது. இதை பார்க்கும்போது, அமெரிக்க அரசாங்கம் இராஜதந்திர மற்றும் சர்வதேச உதவிகளுக்கு செலவழித்ததை விட வெறும் ஐந்து இராணுவ நிறுவனங்களுக்கு செலவழித்த நிதி, இரண்டு மடங்காக உள்ளது. நமது மொழியில் கூறினால் மூன்றாம் உலக நாடுகளை அமைதி வழியிலான பங்கீட்டை விட இராணுவ ரீதியான பங்கீடே பிரதானமாக மாறியுள்ளதை இது காண்பிக்கிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில், லாக்ஹீட் மார்ட்டின் - $313 பில்லியன் டாலரும், RTX (முன்னர் ரேதியோன்) - $145 பில்லியன் டாலர்களும், போயிங் - $115 பில்லியன் டாலரும், ஜெனரல் டைனமிக்ஸ் - $116 பில்லியன் டாலரும் மற்றும் நார்த்ரோப் க்ரும்மன் - $81 பில்லியன் டாலரும் பெற்றுள்ளன. இந்த ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் 771 பில்லியன் டாலர் மதிப்பிலான பென்டகனின் ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இந்த ஐந்து நிறுவனங்கள் பெற்ற $771 பில்லியன் என்பது, 2020-2024 காலகட்டத்தில் பென்டகன் வழங்கிய மொத்த $2.4 டிரில்லியன் ஒப்பந்தங்களில் மூன்றில் ஒரு பங்காகும். லாக்ஹீட் மார்ட்டின் - போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற ஆயுத அமைப்புகளை உற்பத்தி செய்கிறது; என்ஜின்கள், ட்ரோன்கள் மற்றும் குண்டுகளை RTX நிறுவனம் தயாரிக்கிறது; குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றை நார்த்ரோப் க்ரும்மன் தயாரிக்கிறது; ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் ஆகியவற்றை போயிங் தயாரிக்கிறது; ஜெனரல் டைனமிக்ஸ், டாங்கிகளை தயாரிக்கின்றன.

ஸ்பேஸ்- எக்ஸ் (Space-X), பாலன்டிர் (Palantir), அண்டுரில் (Anduril) போன்ற புதிய தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகள், ஆயுதங்கள், தகவல்தொடர்பு மற்றும் இலக்குகளைக் கண்டறியும் அமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை கைப்பற்றியுள்ளன.  பல பத்து பில்லியன் டாலர்களுக்காண (tens of billions) ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தங்களின் தொடக்க நிதி (initial awards) வழங்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான், 2024 நிலவரப்படி, இந்த நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (Pentagon) முதன்மை ஒப்பந்ததாரர்களின் பட்டியலில் முதலிடங்களில் இல்லை. இதுப்போன்று பல முன்னணி தொழில் நுட்ப கார்ப்பரேட்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஆரகில் மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மேலும் 10 பில்லியன் டாலர்களுக்கான ஓப்பந்தகளை பெற்று தங்களுக்குள் பகிருந்துகொண்டிருக்கின்றன.

2000 ஆம் ஆண்டில் $507 பில்லியன் டாலராக இருந்த பென்டகனின் விருப்பப் பட்ஜெட், 2025 இல் $843 பில்லியனாக உயர்ந்துள்ளது (2025ன் பணவீக்க விகிதத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட நிலையான டாலர் மதிப்பு) – இது 66% அதிகரிப்பு. பென்டகனுக்கு வெளியே உள்ள இராணுவச் செலவினங்களைச் (முக்கியமாக எரிசக்தி துறையில் அணு ஆயுதத் திட்டங்கள், FBI-யின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை) சேர்த்தால், மொத்த இராணுவச் செலவு 2000 இல் $531 பில்லியனில் இருந்து 2025ல் $899 பில்லியனாக உயர்ந்துள்ளது – இது 69% அதிகரிப்பு ஆகும். சமீபத்தில், ஜூலை 2025-ல் இயற்றப்பட்ட சட்டம், இந்த ஆண்டுக்கான மொத்த இராணுவ பட்ஜெட்டில் மேலும் $156 பில்லியனைச் சேர்த்து, 2025 இராணுவ பட்ஜெட்டை $1.06 டிரில்லியனாக உயர்த்தியுள்ளது. இந்த கூடுதல் நிதியையும் கணக்கில் கொண்டால், 2000 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க இராணுவ பட்ஜெட் கிட்டத்தட்ட இருமடங்காக, 99% அதிகரித்துள்ளது. 

ஏகாதிபத்திய போர்களில் லாபத்திற்காக இரத்தத்தை குடிக்கும் தனியார் இராணுவ கார்ப்பரேட்டுகள்:

அமெரிக்காவின் ஆயுதப் விற்பனை சமீபத்தில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் ஆயுத கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பலனடைந்துள்ளது என்கிறது இந்த ஆய்வறிக்கை. இந்த நிறுவனங்கள் அமெரிக்க உழைக்கும் மக்கள் வரி பணத்திலிருந்து இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் வழங்கப்படும் பல பில்லியன் டாலர் இராணுவ உதவியால் பெரிதும் பலனடைந்துள்ளன. அக்டோபர் 2023க்குப் பிறகு, ஒரு வருடத்தில் மட்டும் இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவ உதவி $18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கிடைத்துள்ளது; உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின்னர் அதாவது 2022-2025 வரை $65 பில்லியன் டாலர்கள் அமெரிக்க ஆயுத உதவி கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நட்பு நாடுகள் 2023-2024 ஆம் ஆண்டுகளில் மட்டும் $170 பில்லியல் டாலருக்கும் அதிகமாக கொடுத்த நிதியுதவியும் அமெரிக்க பெண்டகன் மூலமாக இந்த கார்ப்பரேட் ஒப்பந்தக்காரர்களுக்கு கூடுதல் வருவாயை வழங்கியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா $145 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பெரிய ஆயுத ஒப்பந்தங்களை அறிவித்தது. இதில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு பல பில்லியன்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் ஐரோப்பாவிற்கு ஆயுத விற்பனை  பெருமளவில் அதிகரித்துள்ளது.

யாருக்கு அளிக்கபட்ட ஆயுதம்: 2019 முதல் அமெரிக்க ஆயுதங்கள் 28 மோதல்களில் அதாவது போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  “Freedom House” என்ற ஏகாதிபத்திய அரசுசாரா அமைப்பால் "சுதந்திரமற்றவர்கள்" என்று வகைப்படுத்தப்பட்ட 31 ஆயுத குழுவினர்க்கு அமெரிக்கா ஆயுதத்தை வழங்கியுள்ளது. 2022ம் ஆண்டில், பைடன் நிர்வாகம் உலகின் 57% சர்வாதிகார ஆட்சி செய்யும் நாடுகளுக்கு ஆயுத விற்பனையை அங்கீகரித்துள்ளதாக இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது. இதே பைடன்தான் அமெரிக்காவின் ஆயுத கார்ப்பரேட்டுகளையும் அதன் தொழிலாளர்களையும் 'ஜனநாயகத்தின் ஆயுதக் கிடங்கு' என்று பாராட்டினார் என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். ஏகாதிபத்திய அரசுகள் ஜனநாயகம், சர்வாதிகாரம் போன்ற சொல்லாடல்கள் எல்லாம் அவர்களின் மேலாதிக்க நலன்களுக்கான சொல்லாடல்தான்.  2020-2024 ஆம் ஆண்டுகளில் 107 நாடுகளுக்கு அமெரிக்க ஆயுதப் விற்பனையை விரிவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகெங்கும் போர்களையும் ஆயுத மோதல்களையும் கட்டவிழ்த்திட்டுள்ளதை அறிக்கை தெளிவாக விரிந்துறைத்துள்ளதை நாம் பார்க்கலாம்.

இராணுவ-தொழில்துறை கார்ப்பரேட்களின் விரிவடையும் பிடி: 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாப நோக்கம் ஒரு வலுவான கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட "இராணுவ - தொழில்துறை கூட்டு" பாதுகாக்கப்படுகிறது. இது இராணுவத்திற்கும் ஆயுதத் தொழில் துறை கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான ஒரு கூட்டாகும். இது அமெரிக்காவின் உண்மையான உள்நாட்டு பாதுகாப்புத் தேவைகளைப் பொருட்படுத்தாமல் அதற்கு முரணாக, அவற்றின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் நலன்களுக்கும் பெருநிறுவன லாபங்களுக்கும் சேவை செய்யும் வகையில் இந்த கூட்டு நடைமுறைகள் அமைந்துள்ளது. இந்த லாபியில் ஆயுத நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் தேர்தல் நன்கொடைகள் என்று பெயரில் நிதி அளித்துள்ளது. இது மட்டுமல்லாமல் 950 லாபியிஸ்ட்களைப் பயன்படுத்தி இருப்பதாக (2020 இல் இருந்ததை விட 220 அதிகம்) இந்த அறிக்கை கூறுகிறது. இந்த லாபியிஸ்ட்கள் குறிப்பிட்ட ஆயுத அமைப்புகளுக்கு அதிக நிதியையும், ஒட்டுமொத்த பட்ஜெட்டில் பென்டகனுக்கான பட்ஜெட்டை அதிகரிக்க லாபி செயுதுள்ளதாக கூறுகிறது. 

சுழலும் கதவு (Revolving Doors): அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் மூத்த அதிகாரிகள், ஆயுத நிறுவனங்களின்  லாபகரமான பதவிகளுக்கு செல்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், பென்டகன் அதிகாரிகள் இராணுவ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்குச் செல்வது ஒரு புதிய போக்காக உள்ளதை காட்டுகிறது. இது வழக்கமான பெரிய ஆயுத நிறுவனங்களுக்குச் செல்வதை விட "அதிக லாபம்" தரக்கூடியது என்று முன்னாள் பென்டகன் கையகப்படுத்துதல் துறைத் தலைவர் எல்லென் லார்ட் கூறுகிறார். 2019 முதல் 2023 வரை, குறைந்தது 50 முன்னாள் பென்டகன் அதிகாரிகள் இராணுவம் தொடர்பான வென்ச்சர் கேபிடல் (முதலீட்டு நிறுவனங்கள்) அல்லது தனியார் பங்கு நிறுவனங்களில் பணிக்குச் சென்றுள்ளனர் என்று நியுயார்க் பத்திரிக்கையின் எரிக் லிப்டன் என்ற பத்திரிக்கையாளர் தனது விரிவான ஆய்வில் தெரியப்படுத்தி இருக்கிறார். அதாவது அரசின் அதிகாரமிக்க துறைகளில் பணிப்புரியும் அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் இத்தகைய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இலாபகரமாகவும் செயல்படுகிறார்கள். இதனால் பணி ஓய்வுக்கு பிறகு அதற்கு பலனாக அந்த தனியார் நிறுனவங்களில் உயர் பதவிகளுக்கு அல்லது இலாபமீட்டும் பதவிகளுக்கு செல்கின்றனர். அதாவது அரசு துறையில் கதவு மூடும்போது, அவர்களுக்காக தனியார் துறையில் கதவு திறக்கிறது.

சிந்தனையாளர் குழுக்களுக்கு (Think tanks) நிதியளித்தல்: இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்கள் சிந்தனையாளர் குழுக்களுக்கு நிதியளிப்பதன் மூலம் இராணுவக் கொள்கையை வடிவமைக்கவும், இராணுவச் செலவினங்களை அதிகரிக்கவும் லாபி செய்கின்றனர். 2019 மற்றும் 2023 க்கு இடையில், முதல் 100 இராணுவ ஒப்பந்தக்காரர்கள் அமெரிக்காவின் முதல் 50 சிந்தனையாளர் குழுக்களுக்கு $34.7 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளனர். நார்த்ரோப் க்ரம்மன் ($5.6 மில்லியன்) மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ($2.6 மில்லியன்) ஆகிய கார்ப்பரேட்டுகள் முக்கிய நன்கொடையாளர்களாக அறியப்படுகிறார்கள். அட்லாண்டிக் கவுன்சில் ($10.2 மில்லியன்), சென்டர் ஃபார் எ நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி ($6.6 மில்லியன்) (Center for a New American Security) மற்றும் சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் ($4.1 மில்லியன்) (Center for Strategic and International Studies) ஆகியவை அதிக நிதி பெற்ற சிந்தனையாளர் குழுக்கள் ஆகும்.

அரசாங்க ஆணையங்களில் செல்வாக்கு: ஆயுதத் துறைக்குத் தொடர்புள்ள தனிநபர்கள் அரசாங்க ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றுவது மற்றொரு நுட்பமான ஆனால் முக்கிய செல்வாக்கு வடிவமாகும். உதாரணமாக, அமெரிக்காவின் அணுசக்தி படைகளை அதிகப்படுத்த வேண்டும் பொருட்டு அமெரிக்க நாடாளுமன்ற பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஆயுதக் கார்ப்பரேட்டுகளுடன் தொடர்புகள் இருந்தன.

பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் இராணுவத் தொழில்நுட்ப நிறுவனங்கள்

பாரம்பரியமான ஆயுதத் துறையில், லாக்ஹீட் மார்ட்டின், RTX, நார்த்ரோப் க்ரம்மன், போயிங், மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகியவை போர் விமானங்கள் (F-35), ஏவுகணைகள், என்ஜின்கள், குண்டு வீச்சு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள், போர்க் கப்பல்கள் மற்றும் டாங்கிகள் போன்ற பெரிய ஆயுத அமைப்புகளை உருவாக்குகின்றன. F-35 ஜாயிண்ட் ஸ்ட்ரைக் ஃபைட்டர் ($12.43 பில்லியன்), கொலம்பியா ரக பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ($9.87 பில்லியன்), B-21 ரைடர் ($5.33 பில்லியன்) ஆகியவை பென்டகனின் அதிக செலவுமிக்க திட்டங்களில் சில.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுதத் துறையில் மிகப்பெரிய மாற்றம் புதிய இராணுவ தொழில்நுட்ப நிறுவனங்களின் எழுச்சி ஆகும்.

ஸ்பேஸ்- எக்ஸ் (Space-X), பாலன்டிர் (Palantir), அண்டுரில் (Anduril) போன்ற நிறுவனங்கள், ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் இலக்கு அமைப்புகளுக்காக பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன என்று முன்னால் பார்த்தோம்.

ஆளில்லா வான்தாக்கு விமானங்களுக்கு (UAVs) எதிரான வான்காப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களை ($642 மில்லியன்) Anduril நிறுவனமும், UAVகளை இடைமறிக்கும் கட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தை ($250 மில்லியன்) Roadrunner நிறுவனமும், நீருக்கடியிலும் தாக்குதல்-தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு உளவு பார்க்கும் வகையிலான  தானியங்கி கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களை Ghost Shark நிறுவனமும் பெற்றுள்ளன. 

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தரவு தளத்திற்காக இராணுவத்துடன் $618 மில்லியன் டாலர் ஒப்பந்தம் பெற்றுள்ளது; இலக்குகளை துல்லியமாக, விரைவாக கண்டறிந்து தாக்குவதற்கான சாதனங்களை உருவாக்கும் Project Maven ஒப்பந்தத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு $480 மில்லியன் டாலர்  ஒப்பந்தம் பெற்றுள்ளது அதிநவீன மென்பொருள்களை சிறப்புத் தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்துவதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு அமெரிக்க சிறப்பு தாக்குதல் படையுடன் $463 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை  Palantir நிறுவனம் பெற்றுள்ளது.

SpaceX அமெரிக்க இராணுவ செயற்கைக்கோள்களின் பெரும்பாலானவற்றை ஏவுவதற்கு நிதியுதவி பெறுகிறது, மேலும் உக்ரேனிய படைகளுக்கு இணைய சேவை வழங்க அறியப்பட்ட அதன் Starlink அமைப்பின் இராணுவப் பதிப்புகளுக்கும் நிதியுதவி பெறுகிறது.

பாரம்பரிய ஒப்பந்தக்காரர்கள் மெதுவாகச் செயல்படுவதாகவும், மென்பொருள் நிபுணத்துவம் அல்லது வணிக மாதிரிகள் இல்லாததால் எதிர்கால ஆயுதங்களை உருவாக்கத் தகுதியற்றவர்கள் என்றும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் விமர்சிக்கின்றன.

இருப்பினும், இந்த புதிய தொழில்நுட்ப நிறுவனங்களும் செலவுமிக்க, உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை வழங்கக்கூடும், அவை "உண்மையான உலக நிலைமைகளில் பயன்படுத்தப்படும் போது பயனற்றவை, கணிக்க முடியாதவை மற்றும் பாதுகாப்பற்றவை" என்று ரோபர்டோ கோன்சலஸ் குறிப்பிட்டுள்ளார். F-35, Sentinel ICBM, Littoral Combat Ship போன்ற பெரிய அமைப்புகளில் பெரும் தொகை செலவிடப்படுகிறது. அதன் செயல்திறன்களும் கேள்விக்குரியதாகவே உள்ளது. பென்டகனின் புதிய கார்ப்பரேட்டுகளின் நிதி கூடுதலான பாதுகாப்பு தளவாடங்களின் எந்த அளவுக்கு திறன் உடையதாக இருக்கும் என்பதும் கேள்விக்குள்ளானதுதான். எலான் மஸ்க் கூட F-35 ஐ "பணத்திற்கேற்ப மதிப்பு இல்லை" (the worst value for money) என்று குறிப்பிட்டு, அதற்கு பதிலாக ஆளில்லா கட்டமைப்புகளை உருவாக்குவதில் முதலீடுகளை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளார்.

டிரம்ப கும்பல்: இராணுவ – தொழில் நுட்ப கூட்டு

இராணுவத் தொழில்நுட்பத் துறை தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதால், பென்டகன் நிதிக்கான போட்டியில் அவர்களுக்கு ஒரு அரசியல் அனுகூலம் உள்ளது.

எலான் மஸ்க், "அரசாங்கத் திறன் துறை" (DOGE) இன் நடைமுறைத் தலைவராக இருப்பதன் மூலம், இராணுவத் தொழில்நுட்பத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத செல்வாக்கை வழங்குகிறார். இந்த DOGE ஆனது முக்கிய கூட்டாட்சி முகமைகளில் வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவியைக் குறைப்பதில் நேரடிப் பங்காற்றியுள்ளது.

துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், Palantir நிறுவனர் பீட்டர் தீலுடன் நெருங்கிய உறவு கொண்டவர், இது இராணுவத் தொழில்நுட்பத் துறைக்கு வெள்ளை மாளிகைக்கு ஒரு "திறந்த கதவை" வழங்குகிறது.

ஸ்டீபன் ஃபைன்பெர்க் (Cerberus Capital), மைக்கேல் ஒபடால் (Anduril) போன்ற இராணுவத் தொழில்துறை நிர்வாகிகள் பென்டகனில் முக்கிய பதவிகளைப் பிடித்துள்ளனர். பீட்டர் தீலுடன் தொடர்புடைய "பன்னிரண்டுக்கும் மேற்பட்டவர்கள்" ட்ரம்ப் நிர்வாகத்தில் இணைந்துள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் "கோல்டன் டோம்" திட்டம் (அமெரிக்காவை உள்வரும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது) மற்றும் போயிங்கின் F-47 அடுத்த தலைமுறை போர் விமானத் தேர்வு ஆகியவை, பாரம்பரிய மற்றும் புதிய இராணுவத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரண்டிற்கும் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும். இருப்பினும், "கோல்டன் டோம்" போன்ற ஒரு விரிவான ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் கருதுகின்றனர், ஆனாலும் அதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் நிதி செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய ஒப்பந்தக்காரர்களுக்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே பட்ஜெட் சண்டை வரலாம், அல்லது இரண்டையும் திருப்திப்படுத்த பென்டகன் பட்ஜெட் இன்னும் அதிகமாக உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

AI-driven ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்கள், இராணுவத் தொழில்நுட்பத் தலைவர்களின் அபாயகரமான போக்குகள் மேலும் தீவிரமடைவதும், அவர்கள் பென்டகன் நிதியில் பெரும் பங்கைப் பெற விரும்புவது மட்டுமல்லாமல், பென்டகன் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் வடிவமைத்து வருவதை இந்த அறிக்கை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

சிலிக்கான் பள்ளத்தாக்கு இராணுவத் தொழில்நுட்ப நிறுவனங்களின் அநியாய செல்வாக்கை, குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்துடனான அவர்களின் நெருங்கிய தொடர்புகள் மூலம் அவர்கள் பென்டகன் பட்ஜெட்டில் தங்கள் பங்கை வியத்தகு முறையில் அதிகரிக்க முயற்சிப்பதை பார்க்கிறோம்.

இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இராணுவ கார்ப்பரேட்டுகளின் லாபக் கொள்கையே வழிநடத்திக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-தொழில்துறை கூட்டு, லாப நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுகிறது என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இது உலக அமைதிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலைக்கும், தேசியங்களின் எழுச்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்வினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை எதிர்த்து வர்க்க ரீதியாக அணிதிரண்டு இதை எதிர்த்துப் போராடி, உலக அமைதியையும் உண்மையான பாதுகாப்பையும் நிலைநாட்டுவது நமது கடமையாகும்.

- செந்தளம் செய்திப்பிரிவு