மூலதனக் குவியல் - 2

மார்க்சிய பொருளாதாரம்

மூலதனக் குவியல் - 2

சென்ற கட்டுரையில் மூலதனக் குவியல் என்றால் என்ன என்பதைக் கண்டோம் முதலாளித்துவ மூலதனக் குவியல் உருவாகுவதையும், அதன் விளைவாக மூலதனத் திரட்சி ஏற்படுவதையும், மூலதனம் மையப்படுத்தப்படுதலையும் ஆராய்ந்தோம். இனி மூலதனக் குவியலால் முதலாளித்துவ சமுதாயத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகளை காணலாம்.

மூலதனக்குவியலும் உழைப்புச் சக்தியின் மதிப்பும்

ஒவ்வொரு முதலாளியும் எதற்காக தனது மூலதனத்தைப் பெருக்க முயற்சி செய்கிறான்? தனக்கு ஒவ்வொரு ஆண்டிலும் கிடைக்கின்ற உபரி மதிப்பை முழுமையாக தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தாமல், ஒரு கணிசமான குறிப்பிட்ட பகுதியை ஏன் தனது மூலதனத்துடன் சேர்க்கிறான்?

முதலாளியின் மூலதனம் பெருகப்பெருக, அவனுக்குக் கிடைக்கின்ற உபரி மதிப்பும் பெருகும். அதாவது அவனால் அதிக அளவு தொழிலாளிகளைச் சுரண்ட முடியும். அவனது கையில் மூலதனம் குவியக்குவிய, அவன் தனது தொழிற்சாலையை விரிவுப்படுத்துவான்; பொருள் உற்பத்தியை அதிகரிப்பான்; அதன் மூலம் தனது சுரண்டலை விரிவுபடுத்துவான்.

எனவே முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனக் குவியல் விரிவடையும்போது, பொருள் உற்பத்தியும் விரிவடையும் ஏற்கனவே இருக்கின்ற தொழிற்சாலைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். அல்லது புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படும். இவ்வாறு பொருள் உற்பத்தி வளர்ச்சியடையும்போது, மனித உழைப்பு சக்தியும் அதிகமாக தேவைப்படும். அதாவது தொழிலாளிகள் அதிகமாக தேவைப்படுவார்கள்.

ஒரு சரக்கிற்கு தேவை அதிகரிக்கும்போது, அதன் விலை அதனுடைய உண்மையான மதிப்பை விட அதிகமாக உயரும். இது நாம் நம்முடைய சமுதாயத்தில் கண்கூடாக காண்கிற ஒரு நிகழ்ச்சியாகும். உழைப்புச் சக்தியும் முதலாளித்துவ சமுதாயத்தில் ஒரு சரக்கே என்று முன்பு நாம் கண்டோம். எனவே உழைப்புச் சக்தி என்ற சரக்கிற்கு அதிக தேவை ஏற்படும்போது அதன் விலையும் அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உயரும்.

எனவே மூலதனக் குவியல் பெருகப்பெருக, உழைப்புச் சக்திக்கு அதிக தேவை ஏற்படுகிறது. அதன் விளைவாக அதனுடைய விலையும் உயர்கிறது. இவ்வாறு விலை உயர்வதால், முதலாளிக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? அவனுக்கு கிடைக்கின்ற உபரி மதிப்பு குறைகிறது. ஏன்? உபரி மதிப்பின் அளவானது ஒரு சரக்கின் மதிப்பிற்கும் (அதாவது அச்சரக்கில் தொழிலாளி உருவாக்கிய மதிப்பிற்கு) அச்சரக்கை உருவாக்கக் கொடுக்கப்பட்ட கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடாகும். உதாரணமாக ஒரு சரக்கின் மதிப்பு 10 ரூபாயாகவும், அச்சரக்கை உருவாக்க கொடுக்கப்பட்ட கூலி 4 ரூபாயாகவும் இருந்தால், கிடைக்கிற உபரி மதிப்பு 6 ரூபாயாகும். தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட 4 ரூபாயே அவனுடைய உழைப்பு சக்தியின் உண்மையான விலை எனக் கொள்வோம். இப்போது மூலதனக் குவியலால் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு உழைப்பு சக்திக்கு அதிக தேவை ஏற்படும்போது அதனுடைய விலை உண்மையான விலையான 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயருகிறது என்று கொள்வோம். இப்போது முதலாளிக்கு கிடைக்கின்ற உபரி மதிப்பு எவ்வளவு? 4 ரூபாய்! அதாவது 6 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக உபரி மதிப்பு குறைகிறது.

தனக்கு கிடைக்கின்ற உபரி மதிப்பு குறைவதை எந்த முதலாளியாவது விரும்புவானா? ஆனால் அதற்காக மூலதனக் குவியலால் தானே இந்நிலை ஏற்படுகிறது என்று எண்ணி, எந்த முதலாளியாவது மூலதனக் குவியலை விரும்பாமல் இருப்பானா? அவ்வாறு அவன் எண்ணினால் அவன் முதலாளியே அல்ல. முதலாளியின் நோக்கமே மூலதனத்தைப் பெருக்கி, சுரண்டலைப் பெருக்குவதுதானே!

எவ்வாறு இப்பிரச்சனையை முதலாளித்துவ சமுதாயம் தீர்க்கிறது? பொதுவாக ஏதாவது ஒரு சரக்கிற்கு அதிக தேவை ஏற்பட்டு, அதன் விலை உயரும் போது அதை பழைய விலைக்கே கொண்டு வர எந்த சக்தி முதலாளித்துவ சமுதாயத்தில் இயங்குகிறது? ஒரு சரக்கின் விலை அதிகரிக்கும்போது, அதன் கிராக்கியை அறிந்த வேறு சில முதலாளிகள், அச்சரக்கை உற்பத்தி செய்தால் அதிக லாபம் அடையலாம் என்ற நோக்கத்தில் அச்சரக்கு உற்பத்தியில் தாங்களும் ஈடுபடுவார்கள். அதாவது அச்சரக்கை உற்பத்தி செய்ய பல புதிய தொழிற்சாலைகள் தோன்றும். அந்நிலையில் அச்சரக்கு தேவையான அளவிற்கு சமுதாயத்திற்குக் கிடைக்கும். அதனால் முன்பு ஏற்பட்ட கிராக்கி குறைந்து, அதன் விலை பழைய விலைக்கே திரும்பும். இவ்வாறு அச்சரக்கின் விலை கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆனால் மேற்கண்ட சக்தி, உழைப்புச் சக்தியின் விலையைக் கட்டுப்படுத்த பயன்படமுடியுமா? முடியாது, ஏன்? பிற சரக்குகளை தேவையை முன்னிட்டு அதிகமாக உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் திறக்கப்படுவதுபோல, "உழைப்பு சக்தியை" உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் கிடையாது. அடிமை சமுதாயமாக இருந்தாலாவது, வேறு நாட்டு அடிமைகளை வென்று, கொண்டுவந்து உழைப்பு சக்தியின் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால் முதலாளித்துவ சமுதாயத்திலோ, உழைப்புச் சக்தியின் தேவையையும் விநியோகத்தையும் சீராகக் கொண்டு போகக்கூடிய எவ்வித சக்தியோ, இயக்கமோ கிடையாது.

அப்படியென்றால், இப்பிரச்சனை எவ்வாறுதான் தீர்க்கப்படுகிறது? மூலதனக்குவியலால் ஏற்படுகின்ற இந்த உழைப்பு சக்தியின் உயர்வு அல்லது கூலி உயர்வு முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே தகர்த்து விடுமா! தகர்க்காது. அப்படியென்றால் கூலி உயர்வினை எவ்வாறு முதலாளித்துவ சமுதாயம் கட்டுப்படுத்துகின்றது?

வேலையில்லாப் பட்டாளம்

முதலாளித்துவ சமுதாயத்தில் எப்போதுமே தொடர்ந்து வேலையில்லாப் பட்டளாம் (The Reserve army of labour) ஒன்று நீடித்து வரும். வேலையில்லாப் பட்டாளம் உருவாகுவதற்கு பல சக்திகள் முதலாளித்துவ சமுதாயத்தில் இயங்குகின்றன. இந்த பட்டாளமே அவ்வப்போது கூலி அளவு உயர்வை தடுத்து நிறுத்துகிறது.

வேலையில்லாத நபர்கள் கூட்டம் பெருகப்பெருக, உழைப்பு சக்தியின் விலை சந்தையில் குறையும். வேலையில்லாத ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு, தனது உழைப்பு சக்தியை குறைந்த விலைக்கு விற்க முன் வருவார்கள். இவ்வாறு அவர்கள் வருவது, மூலதனக்குவியலால் முதலாளித்துவ சமுதாயத்தில் கூலி அளவு அல்லது உழைப்பு சக்தியின் விலை உயர்வதை அவ்வப்போது தடுத்து நிறுத்துகிறது.

வேலையில்லாப் பட்டாளம் பிரதானமாக உற்பத்தியில் இயந்திரங்கள் புகுத்தப்படுவதால், வேலையிழந்தவர்களைக் கொண்டதாகயிருக்கிறது. ஒவ்வொரு முதலாளியும் தனது தொழிற்சாலையில் தொழிலாளர் கூலிக்கான செலவைக் குறைப்பதற்காக, இயந்திரங்களை புகுத்துகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியும் செய்வது, மொத்தத்தில் முதலாளித்துவ சமுதாயத்தில் வேலையில்லாப் பட்டாளத்தை அதிகரிக்கிறது.

இவ்வாறு முதலாளித்துவ சமுதாயத்தில் இயந்திரங்கள் புகுத்தப்பட்டு, தொழிலாளிகள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இயந்திரங்களுக்கான நிரந்தர மூலதனம் (C) அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு உழைப்பைச் சிக்கனப்படுத்தும் இயந்திரங்களைப் புகுத்துவதால், முதலாளித்துவ அமைப்பு சுமூகமாக தொடர்ந்து இயங்குமா? இயங்காது. ஏனென்றால் மூலதனக்குவியலின் வளர்ச்சியாலும், இயந்திரம் புகுத்தப்பட்டு உழைப்புத்திறன் அதிகரிப்பதாலும், மேலும் மூலதனம் அதிகமாக வளர்ச்சியடையும். அதன் விளைவாக புதிய தொழிற்சாலைகள் உருவாகும். அத்தொழிற்சாலைகளுக்கு உழைப்பதற்கு தொழிலாளிகள் தேவைப்படும். அத்தேவையை நிலவுகின்ற வேலையில்லாப் பட்டாளம் பூர்த்தி செய்யும். இதனால் மறுபடியும் உழைப்புச் சக்திக்கு - தொழிலாளிக்கு கிராக்கி ஏற்படும். அதன் விளைவு கூலி உயரும். உபரி மதிப்பு முதலாளிக்கு குறையும். இந்நெருக்கடியை சமாளிக்க மேலும் மூலதனம் செலுத்தப்படுவதை முதலாளிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். அதன் மூலம் கூலி உயர்வை கட்டுப்படுத்த அவர்கள் முயலுவார்கள். இது மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும். எனவே முதலாளித்துவ சமுதாயத்தில் நெருக்கடி என்பது தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

வேலையில்லாப் பட்டாளம் எவ்வாறு உருவாகுகிறது?

மக்கள் தொகைப் பெருக்கம்தான் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் என்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் கூறி வருகின்றனர். இது உண்மையா? இல்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் அதனுடைய பொருள் உற்பத்தி முறையும், அமைப்பும்தான் வேலையில்லாப் பட்டாளம் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாகும். மேலும் இப்பட்டாளம் தொடர்ந்து நீடிப்பதுதான் முதலாளி வர்க்கத்திற்கு தேவையானதுமாகும். ஏனென்றால் அப்பட்டாளம் நீடிப்பதன் மூலம்தான் உழைப்பு சக்தியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, தனது உபரி மதிப்பை குறையவிடாமல் பாதுகாக்க முடிகிறது. எனவே முதலாளித்துவ சமுதாயம் நீடிக்கும் வரை, வேலையில்லாப்பட்டாளமும் தொடர்ந்து நீடிக்கும்.

வேலையில்லாப் பட்டாளம் உருவாவது எப்படி? முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை என்பது இரண்டு வட்டங்களை உள்ளடக்கியது. ஒன்று உற்பத்தியில் வேலையில் நீடிப்பவர்கள். இதை A என்று குறிப்பிடுவோம். மற்றொன்று வேலையில்லாப் பட்டாளம். இதை B என்று குறிப்பிடுவோம். A, B என்ற இரண்டு வட்டங்களும் விரியவும், சுருங்கவும் செய்யும். A எவ்வாறு விரிவடைகிறது? புதிதாக வேலை தேடுபவர்களில் ஒரு பகுதிக்கு வேலை கிடைக்கப் பெற்று, A யில் சேர்கிறார்கள். மேலும் வேலையில்லா பட்டாளத்தில் அதாவது B யில் உள்ள சிலருக்கும் வேலை கிடைக்கப் பெற்று, A யில் சேர்கிறார்கள். இவ்வாறு A விரிவடைகிறது. சரி! A எப்போது, எவ்வாறு, சுருங்குகிறது? வயது முதிர்ச்சியால் வேலையிலிருந்து ஓய்வு பெறுகின்றவர்கள் A யிலிருந்து வெளியே செல்கிறார்கள். அடுத்து உழைப்பு சக்தியின் விலை உயரும்போது அதைக் கட்டுப்படுத்த உழைப்பை மிச்சப்படுத்தும் இயந்திரங்கள் புகுத்தப்படுவதால், பலர் வேலையிழந்து A யிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

வேலையில்லாப் பட்டாளம் அதாவது B எவ்வாறு விரிவிடைகிறது? புதிதாக வேலை தேடுபவர்களில் வேலை கிடைக்காதவர்கள் B யில் சேர்கிறார்கள். அடுத்து உழைப்புச் சிக்கனப்படுத்துவதற்காக முதலாளிகள் இயந்திரங்களை புகுத்தும்போது அதனால் வேலையிழப்பவர்கள் B வட்டத்திற்குள் நுழைகிறார்கள். B எப்போது சுருங்கும்? மூலதனக் குவியலின் வளரச்சியின்போது, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்போது, B யிலிருந்து நபர்கள் A வட்டத்திற்குள் நுழைகிறார்கள். இதனால் B வட்டம் சுருங்குகிறது.

இவ்வாறு முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறையில் இரண்டு வட்டங்களும் இருக்கும். மக்கள் தொகைப் பெருக்கம்தான் வேலையில்லாப் பட்டாளத்திற்கு அடிப்படை என்ற பிரச்சாரம் பொய்யானது. மக்கள் தொகை குறைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் கூட வேலையில்லாப் பட்டாளம் நீடிக்கத்தான் செய்யும். அது முதலாளித்துவ அமைப்புடன் இணைந்த ஒன்றாகும். எனவே முதலாளித்துவ அமைப்பு தொடர்ந்து வேலையில்லாப் பட்டாளம் நீடிப்பதற்கு வழி செய்யும்.

இவ்விடத்தில் இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வளர்ச்சிகள் ஏதோ தற்செயலாக சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளே என்று முதலாளித்துவ அறிஞர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், புதிய கண்டுபிடிப்பு என்பது முதலாளித்துவ உற்பத்தி தொடர்ந்து நீடிப்பதற்கு அவசியமான நிபந்தனையாகும். ஏனென்றால், உழைப்பை சிக்கனப்படுத்தும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் வேலையில்லாப் பட்டாளத்தை முதலாளித்துவ சமுதாயம் விரிவாக்குகிறது. அதன் மூலமாக உழைப்புச் சக்தியின் விலையைக் கட்டுப்படுத்தி தன்னுடைய உபரி மதிப்பு குறையாமல் இருக்க அது வழி செய்கிறது. எனவே முதலாளித்துவ வர்க்கம் உற்பத்திக் கருவிகளைத் தொடர்ந்து புரட்சிகரமாக மாற்றாமல் நீடிக்க முடியாது என்று மார்க்ஸ் கூறினார்.

லாபவிகிதம் குறைகின்ற போக்கு

முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனக் குவியல் தொடர்ந்து நடைபெற நடைபெற, அத்துடன் உற்பத்தி முறையில் முற்போக்கான இயந்திரமாக்குதலும் நடைபெறுகிறது என்று முன்பு நாம் கண்டோம். இவ்வாறு உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற வளர்ச்சியினால் ஒரு சரக்கை உற்பத்தி செய்யும் நேரம் குறைகிறது. அதாவது ஒரு தொழிலாளி முன்பு 8 மணி நேரத்தில் செலவழித்த உழைப்புச் சக்தியைக் கொண்டு, இப்போது முன்பை விட அதிக அளவு சரக்குகளை உற்பத்தி செய்ய முடிகிறது. அதாவது அவன் உற்பத்தி திறன் தொடர்ந்து வளர்ச்சியடைகிறது.

அதே சமயத்தில் மற்றொரு மாற்றமும் முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்படுகிறது. இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றிற்காக முதலாளி செலவழிக்கின்ற நிரந்தர மூலதனம் (C) வளர்ச்சியடைகிறது. மொத்த மூலதனத்தில் (நிரந்தர மூலதனம்+மாறுகின்ற மூலதனம் அல்லது கூலி) நிரந்தர மூலதனவிகிதம் அதிகமாக மாறுகிறது. உதாரணமாக முன்பு ஒரு முதலாளி 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறான் என்று கொள்வோம். இதில் 2 லட்சம் ரூபாயை அவன் மூலப் பொருள், கருவிகளுக்காகவும் 2 லட்சம் ரூபாயை தொழிலாளிகளுக்கு கூலிக்காகவும் செலவழிக்கிறான் என்று கொள்வோம். அப்படியென்றால் மொத்த மூலதனத்தில் நிரந்தர மூலதனத்திற்கும் மாறுகின்ற மூலதனத்திற்கும் இடையில் உள்ள விகிதம் என்ன? 2:2 ஆகும்.

இப்போது மூலதனக் குவியலின் வளர்ச்சியில் அம்முதலாளி உழைப்பைச் சிக்கனப்படுத்துவதற்காக அதாவது தொழிலாளிகளின் கூலிப்பட்டியலை குறைப்பதற்காக அவன் நவீன இயந்திரங்களை புகுத்துகிறான் என்று கொள்வோம். இப்போது அவனது மொத்த மூலதனம் 6 லட்சம் என்று கொள்வோம். இதில் 4 லட்சத்தை அவன் நிரந்தர மூலதனமாக முதலீடு செய்கிறான் என்று கொள்வோம். இப்போது மொத்த மூலதனத்தில் நிரந்தர மூலதனத்திற்கும் மாறுகின்ற மூலதனத்திற்கும் உள்ள உறவு என்ன? 4:2 ஆகும்.

அதாவது நிரந்தர மூலதனத்தின் பங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு விகிதத்தில் ஏற்படுகின்ற மாற்றம், முதலாளித்துவ உற்பத்தியில் என்ன விளைவு ஏற்படுத்துகின்றது என்பதை நாம் ஆராயலாம்.

மொத்த மூலதனத்தில் நிரந்தர மூலதனத்திற்கும் மாறுகின்ற மூலதனத்திற்கும் உள்ள உறவை "மூலதனத்தின் உள் கட்டமைப்பு" (Organic Composition of Capital) என்று அழைக்கலாம். அதை 'Q' என்று கொள்வோம். இந்த உறவை வேறொரு முறையிலும் விளக்கலாம். அதாவது மொத்த மூலதனத்திற்கும் நிரந்தர முலதனத்திற்கும் இடையில் உள்ள விகிதத்தின் மூலமும் விளக்கலாம். மேற்கண்ட உதாரணத்தில் மூலதனக் குவியல் ஏற்படுவதற்கு முன் "மூலதனத்தின் உள் கட்டமைப்பு" என்ன?

                                    நிரந்தர மூலதனம்
Q =      ------------------------------------------------------------------
            நிரந்தர மூலதனம்+மாறுகின்ற மூலதனம்                   

      C                      2
= --------           = --------                         = 1 / 2
    C+ V               2 + 2

மூலதனக்குவியல் ஏற்பட்டபின் "மூலதனத்தின் உள்கட்டமைப்பு" என்ன?

             C                  4
Q=     --------    =  ----------   = 2 / 3
           C+ V           4 + 2

அதாவது விகிதம் அதிகரித்துள்ளது.

"உபரி மதிப்பு" என்ற கட்டுரையில் லாப விகிதம் என்றால் என்ன என்பதைக் கண்டோம். லாப விகிதம் என்பது மொத்த மூலதனத்திற்கும் உபரி மதிப்பிற்கும் இடையில் உள்ள விகிதம் ஆகும். நிரந்தர மூலதனத்தை C என்றும் மாறுகின்ற மூலதனத்தை V என்றும் உபரி மதிப்பை S என்றும் கொண்டோம். லாபத்தை P என்றும் கொள்வோம் அப்படியென்றால் லாப விகிதம் என்ன?

                                                  உபரி மதிப்பு (S)   
லாப விகிதம் P1      =  ------------------------------------------- ;
                                            மொத்த மூலதனம் (C+V)      

                   S
P1  =    -------------
               (C + V)

                            S     
இந்த P1 =  ----------------  என்ற சூத்திரத்தை
                         (C+ V)

 P1 = S1 (I - Q) என்ற சூத்திரமாகவும் கூறலாம்.

(எவ்வாறு இதைக் கூறமுடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் கட்டுரையின் இறுதியில் உள்ள பிற்சேர்க்கையைப் பார்க்கவும்) S1 என்பது உபரிமதிப்பு விகிதமாகும்

மேற்கண்ட சூத்திரப்படி லாப விகிதமானது (P1) "மூலதனத்தின் உள்கட்டமைப்பு" (Q) பொறுத்துள்ளது. அது கூடினால், லாப விகிதம் குறையும். அது குறைந்தால் லாப விகிதம் அதிகரிக்கும்.

நாம் கீழ்கண்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். மூலதனக்குவியல் ஏற்படுவதற்கு முன்,

மொத்த முதலீடு                 = 4 லட்சம்

நிரந்தர மூலதனம் (C)         = 2 லட்சம்

மாறுகின்ற மூலதனம் (V)  = 2 லட்சம்

உபரி மதிப்பு (S)                  = 2 லட்சம்

என்று கொள்வோம்.

அப்படியென்றால் "மூலதனத்தின் உள்கட்டமைப்பு"

            நிரந்தர மூலதனம் (C )                            2
Q = ---------------------------------------------         = ---------------           = 1 / 2
          மொத்த மூலதனம் ( C + V )                 2 + 2

                                                               உபரி மதிப்பு ( P )
உபரி மதிப்பு விகிதம் (S1) = -----------------------------------------------
                                                          மாறுகின்ற மூலதனம் ( V )

                                                            = 2 / 2 = 1

லாப விகிதம் P1      = S1 (1- Q)      = 1 ( 1 – 1/2)   = 1 X 1/2 = ½ = 50%

அதாவது 50% லாபம் கிடைத்துள்ளது.

அடுத்து மூலதனக்குவியல் ஏற்பட்ட பிறகு அம்முதலாளி 6 லட்சம் முதலீடு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில் C = 4; V = 2 என்று கொள்வோம். உபரி மதிப்பு (S) = 2 லட்சம் என்று கொள்வோம். அதாவது உபரி மதிப்பு மாறவில்லை என்றே கொள்வோம்.

 இப்போது உபரி மதிப்பு விகிதம் ( S1 ) = 2/2    = 1

 மூலதனத்தின் உள்கட்டமைப்பு ( Q )   = 4/(4+2)          = 4/6    = 2/3

 எனவே லாப விகிதம் ( P1 )          = S1 (1 – Q)    = 1 ( 1 – 2/3)

                                                            = 1 X 1/3         = 1/3    = 33 1/3 %

 அதாவது 33 1/3 % லாபம் கிடைத்துள்ளது.

அதாவது லாபவிகிதம் குறைந்துள்ளது. அதற்கு காரணம். “மூலதனத்தின் உள் கட்டமைப்பு” ( Q) கூடிய காரணமாகும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு முதலாளி தனது நிரந்தர மூலதனத்தைப் பெருக்கும்போது அதாவது மூலப் பொருள் கருவிகளுக்கான செலவை பெருக்கும்போது – அவனது உபரி மதிப்பு விகிதமும் மாறாமல் இருக்கும்போது அவனது லாப விகிதம் குறைகிறது. இவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு பிரச்சனை தோன்றுகிறது.

எனவே மூலதனக்குவியலால் உழைப்புச் சக்தியின் விலை உயரும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்காக முதலாளி வர்க்கம் யந்திர மயமாக்குதலை தீவிரப்படுத்துகிறது. அதாவது நிரந்தர மூலதனத்தின் பங்கு அதிகரிக்கிறது. அதன் காரணமாக “மூலதனத்தின் உள் கட்டமைப்பு” அதிகரிக்கிறது. அதன் விளைவு லாப விகிதம் குறைகிறது.

இவ்வாறு முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனக்குவியல் பெருக்கத்துடனேயே லாப விகிதம் குறைந்துகொண்டே போகிற ஒரு போக்கு தோன்றுகிறது. அதனால் நெருக்கடி தோன்றுகிது.

இந்நெருக்கடி சிறிதளவு தணிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு சில சக்திகள் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளிகளை அதிக நேரம் உழைக்க வைக்கிறது. அதன் மூலம் தன்னுடைய உபரி மதிப்பு அளவை உயர்த்துகிறது. அடுத்து தொழிலாளர்களின் கூலியைக் குறைக்கிறது. இதன் மூலம் அது லாபம் அடைகிறது. மேலும் யந்திரங்களைப் புகுத்தியதன் மூலம் வேலையிலிருந்து தொழிலாளிகள் அகற்றப்படும்போது, வேலையில்லாப் பட்டாளம் அதிகரிக்கிறது. அப்போது குறைந்த கூலிக்கு உழைக்க பலர் முன் வருகின்றனர். அதைப் பயன்படுத்திக்கொண்டு குறைந்த நிரந்தர மூலதனத்தில் தொழிற்சாலைகளை முதலாளி திறக்கின்றனர். இதனால் அதிக உபரி மதிப்பை அவர்களால் பெற முடிகிறது.

ஆனால் முதலாளித்துவ வர்க்கம் எவ்வளவு தான் முயற்சித்தாலும், லாபவிகிதம் குறைகின்ற போக்கை அதனால் முழுவதுமாக தடுத்து நிறுத்த முடியாது.

இரு நெருக்கடிகளும் தீர்க்க முடியாதவையே

இதுவரை முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனக் குவியலால் ஏற்படுகின்ற இரண்டு விளைவுகளைக் கண்டோம்.
(1) உழைப்பு சக்தியின் விலை உயர்வு
(2) லாப விகிதம் குறைகின்ற போக்கு.

உழைப்பு சக்தியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முதலாளித்துவ வர்க்கம் வேலையில்லாப் பட்டாளத்தை நம்பி நிற்கிறது. எனவே வேலையில்லாப் பட்டாளம் என்பது முதலாளித்துவ அமைப்பு தன்னுடைய பாதுகாவலுக்காக உருவாக்குகிற ஒன்றாகும். முதலாளித்துவ சமுதாயம் நீடிக்கிற வரை வேலையில்லாப் பட்டாளமும் நீடிக்கத்தான் செய்யும். முதலாளித்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்தால் ஒழிய, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது.

மேலும் உழைப்புச் சக்தியின் விலை உயர்வை கட்டுப்படுத்த முதலாளித்துவ வர்க்கம் உழைப்பை மிச்சப்படுத்தும் யந்திரங்களை புகுத்துகிறது. அதனால் நிரந்தர மூலதனத்தின் பங்கும் அதன் விளைவாய் மூலதனத்தின் உள் கட்டமைப்பும் அதிகரிக்கிறது. அவை இறுதியில் லாப விகிதத்தை குறைக்கிறது. இதனால் முதலாளித்துவ வர்க்கத்திற்கு நெருக்கடி தோன்றுகிறது.

மேற்கண்ட இரு நெருக்கடிகளும் தொடர்ந்து முதலாளித்துவ சமுதாயத்தில் நீடிக்கவே செய்யும். முதலாளித்துவ சமுதாயத்தின் மறைவில்தான் இந்த நெருக்கடிகளும் மறையும்.

 

பிற்சேர்க்கை:

                                            S             
லாப விகிதம் P1      = ----------        என்று முன்பே பார்த்துள்ளோம்.
                                         (C + V)        

                          S                   
இப்போது   -----------      என்பதை V என்பதால் மேலும் கீழும் பெருக்குவோம்                    
                       (C+ V)     

                  SV
P1 =    ---------------
              (C+V) V

இப்போது SC என்பதை மேலே கூட்டி, பின் SC ஐ கழிக்கலாம்.

            SC +SV - SC           S(C+V)           SC
P1 = ----------------------    = --------------  -  ----------
                 (C+V) V            V (C+ V)          V(C+V)

                              S         S             C
                           = ---   -   ----    .  ------------
                               V         V           (C+V)

S/V என்பது உபரி மதிப்பு விகிதம் (S1) என்று முன்பு கண்டோம்.

C/ (C+V) என்பது மூலதனத்தின் உள் கட்டமைப்பு (organic composition of capital) என்று முன்பு கண்டோம். அதை Q என்று குறித்தோம்.

            P1 = S1 - S1 Q = S1 (1 - Q).              

 

1979ஆம் ஆண்டு சமரனில் வெளிவந்த கட்டுரை

 

முற்றும்