இந்தியா-அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது மக்கள் நலன் காவு கொடுக்கப்படக்கூடாது
தமிழில்: செந்தாரகை

இந்தியா-அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் முட்டுக்கட்டைகள் நீக்குகிறோம் என்ற பெயரில் நாட்டின் வணிகத்தை திறந்து விடும்போது, உழவர் பெருமக்களின் நலன்களை பாதுகாப்பது, அரசின் கடமையாகும்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான காலக்கெடு ஜூலை 9ஆக நிர்ணயிக்க பட்டவேளையில், விவசாயம் சார்ந்த அம்சங்களே மிகக் முக்கியமான பேசுபொருளாக உள்ளன. இந்திய வேளாண் சந்தைக்குள் நுழைவதற்கு கூடுதலான தடையற்ற உரிமையை வழங்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. இதனால் இந்தியாவிற்கு ஏற்படுத்தும் விபரீத விளைவுகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நிலையில் இவ்விரு நாடுகளும் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் மூழ்கியுள்ளன.
வியட்நாம் பொருட்களுக்கு அமெரிக்கா அண்மையில் 20% வரிவிதித்தபோதிலும் அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பதற்கு வியட்நாம் அரசு இசைவு தெரிவிக்குமளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், இந்தியாவின் மீதும் மேலும் ஒருபுதிய நெருக்கடியைத் திணித்துள்ளது.
மக்காச்சோளம் (கார்ன்), சோயாபீன், எத்தனால்,பால்பொருட்கள்,கோழி இறைச்சிகளை, மையப்படுத்தியே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக பூசல் அல்லது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.
இவை, வெறுமனே வர்த்தகம் சார்ந்த அம்சங்கள் மட்டுமல்ல; அரசியல் ரீதியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களாகவும் இருக்கின்றன. இவ்வர்த்தக பேச்சுவார்த்தையில், கோடிக்கணக்கான இந்திய உழவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல ,நாட்டின் உணவு மற்றும் எரிசக்தித் துறைகளில் தன்னிறைவு எய்த மேற்கொள்ளும் அரும் முயற்சிகளும் பணயமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் விவசாயப் பயிர் சாகுபடி முறைகளில் மாற்றம் கொண்டுவரும் அரசின் மாபெரும் திட்டத்தில், மக்காச்சோளம் மையப்பொருளாகத் திகழ்கிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இது மிகவும் இன்றியமையாதென்று அரசு விவசாயிகளை ஊக்குவிக்கிறது.
ஆண்டுதோறும் 8-10% என்ற அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் கோழி வளர்ப்புத் தொழிலுக்கு கோழித் தீவணமாக மக்காச்சோளமே அடிப்படையாக விளங்குகிறது. அரசின் எத்தனால் உற்பத்தித் திட்டங்களுக்கும் அதிக மக்காச்சோளம் பயன்படுத்தப்பட்டு வருவதால், மக்காச்சோளத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியா தனது சொந்தத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கே உற்பத்தி செய்கிறது. எனவே நாட்டின் மக்காச்சோளத்தின் கூடுதல் இருப்பு கணிசமாக இல்லையென்ற காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண்டுக்கு சுமார் மில்லியன் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது. மேலும் அளவற்ற நீரை உறிஞ்சும் நெல் சாகுபடியில் இருந்து விலகி, மிகக் குறைந்த நீர் தேவைகொண்ட மக்காச்சோளப் பயிரிடலுக்கு விவசாயிகளை மாற்றுவதே தலையாய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது.
2023 டிசம்பர் மாதம் தொடங்கி 2025 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், சோயாபீன் பதப்படுத்தும் தொழிலின் லாபம் கிட்டத்தட்ட 15% சரிவைக் கண்டது. இந்த வீழ்ச்சி, பதப்படுத்துபவர்களுக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடி அவர்களை சோயாபீன் வாங்குவதில் இருந்த ஆர்வத்தைக் குன்றச் செய்துள்ளது. இது, விவசாயிகளின்உற்பத்தியை பாதித்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் அறுபது இலட்சம் சோயாபீன் விவசாயிகளில் கணிசமானோர், எதிர்வரும் சாகுபடிப் பருவத்தில் சோயாபீன் பயிரிடுவதையே தவிர்ப்பது எனத் தீர்மானித்துள்ளனர்.
இதனிடையில் இந்தியா அமெரிக்காவிலிருந்து சோயாபீனை இறக்குமதி செய்து, இங்கேயே அதிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுத்து, பின்னர் மீதமுள்ள புண்ணாக்கை (meal) ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் உலகச் சந்தையில் சோயாபீன் புண்ணாக்கிற்கு பெருமளவு தேவை நிலவுகிறது என்பதையும் சில நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், சோயாபீனை இறக்குமதி செய்வதென்பது ஏற்புடையது அல்ல இந்தியா சமையல் எண்ணெயில் தன்னிறைவு அடைய, பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் கைவிட்டு, தனது சொந்த விவசாயிகளின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். அதாவது சோயாபீன் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிப்பதுடன் பதப்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பால்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பு
இந்திய விவசாயத் துறையில், அரசியல் ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒன்றாக பால்பண்ணைத் தொழில் திகழ்கிறது. இது எண்பது மில்லியனுக்கும் (8 கோடிக்கும்) அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரிடையாகப் பேணி வளர்க்கிறது. பிற விவசாய விளைபொருட்களைப் போலன்றி, இந்தியச் சந்தைகளில் பால் விலைகள் கடந்த பத்தாண்டுகளில் ஒரு போதும் குறைந்ததில்லை. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தகவலின்படி, ஜனவரி 2014 முதல், பால் விலைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன. குஜராத் அல்லது கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டாலும், நுகர்வோருக்கு ஒருபோதும் பால் விலை குறைந்ததே இல்லை.
OECD மற்றும் ICRIER அமைப்புகள் இணைந்து 2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள பால் விலைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தப்போது தர வேறுபாடுகளைச் சரிசெய்த பின்னரும் கூட, இந்தியப் பால் உலக அளவில் இலாபகரமான விலைக்கே சந்தைப்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 80 விழுக்காடு (80%) வரை முறைசாரா சந்தைகளிலேயே விற்பனையாவதுதான். இதுவே விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
அமெரிக்காவிலிருந்து நேரடியாக திரவ நிலையில் உள்ள பாலை இறக்குமதி செய்வது என்பது பெரும்பாலும் சாத்தியமற்றதொரு செயலாகும், ஏனெனில் போக்குவரத்துச் செலவுகள் மிக அதிகம் என்பதோடு, விலைசார்ந்த பெரும் ஆதாயமும் கிடைக்க போவதில்லை. இருப்பினும், வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களுக்கு இந்தியா சிறிய அளவிலான வரிக்குறைப்புகளே கிடைக்க வாய்ப்புள்ளது. இவை தற்போது முறையே 30% மற்றும் 60% வரிச்சுமையைச் சந்தித்து வருகின்றன. இத்தகைய மாற்றங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. வணிகப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, இரு தரப்பினரும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆனால், இங்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது வெறும் வரிக் குறைப்புகளோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அடையாளக் குறியிடுதலும் தர சான்றளித்தலும்தான் உண்மையான சவாலாக இருக்கிறது.
இந்தியா, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்பொருட்களுக்கும் ஒரு உறுதியான நெறிமுறையை வகுத்துள்ளது. இந்த நெறிமுறையின்படி, இப்பால் உற்பத்திக்கு ஆதாரமான பசுக்கள் அல்லது எருமைகள் போன்ற கால்நடைகளுக்கு, எக்காலத்திலும் இறைச்சியோ அல்லது விலங்கிலிருந்து பெறப்பட்ட எந்தவிதமான உணவோ அளிக்கப்படக்கூடாது. இந்தியாவிற்கு பால்பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மேற்கூறிய நிபந்தனையை உறுதிப்படுத்தும் ஒரு சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பால்பொருட்கள் இறக்குமதி தொடர்பான விதிமுறைகளில் இந்தியா ஏதேனும் மாற்றங்களைச் செய்தாலோ அல்லது சிறப்பு அனுமதிகளை வழங்க முடிவு செய்தாலோ கூட, அவ்வாறான அனைத்து மாற்றங்களும் இந்த அடிப்படை நெறிமுறையைப் பின்பற்றியே அமைய வேண்டும். அதாவது, புதிய ஒப்பந்தங்கள் அல்லது உடன்பாடுகள் எட்டப்பட்டாலும்கூட, இறக்குமதி செய்யப்படும் பால்பொருட்களை வழங்கிய கால்நடைகளுக்கு இறைச்சியோ அல்லது விலங்கு சார்ந்த உணவுகளோ ஒருபோதும் அளிக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து நிரூபிப்பது அவசியமாகும்.
அமெரிக்காவில், கோழித் தொடைக்கறிகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை; அங்குள்ள மக்கள் எலும்பில்லாத கோழி நெஞ்சுபகுதியையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில், கோழித் தொடைக்கறிகளுக்கே பெரும் மவுசு உண்டு. இந்த விலை வேறுபாடானது, அனுமதிக்கப்பட்டால், அமெரிக்க ஏற்றுமதியாளர்களை இந்தியாவில் கோழித் தொடைக்கறிகளை விற்பனை செய்ய மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்க வைக்கிறது.
இந்தியா தற்போது கோழி கால் இறக்குமதிகளுக்கு 100% வரி விதிக்கிறது. இந்த வரி நீக்கப்பட்டால், அமெரிக்காவிலிருந்து வரும் கோழி கால்கள் இந்தியாவில் ஒரு கிலோகிராம் சுமார் ரூபாய் 250 முதல் 300 வரை விற்பனையாகலாம். இந்தியாவில் மக்கள் வழக்கமாகக் கோழிக்கறிக்குச் செலுத்தும் விலையை விட இது பன்மடங்கு மலிவானதாகும். அமெரிக்கக் கோழிக் கால்கள் இத்தகைய குறைந்த விலையில் சந்தைப்படுத்தப்பட்டால், இந்தியக் கோழிப் பண்ணைத் தொழில் செய்பவர்கள் பெரும் நட்டத்தைச் சந்திப்பார்கள். முழு இந்தியக் கோழித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்படும், ஏனெனில் அது மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் உணவு போன்ற பயிர் சாகுபடிகளைச் சார்ந்துள்ளது, மேலும் கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
NITI ஆயோக்கின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை (NBP) 2018 திட்டத்தின்படி, இந்தியா 2025-26 ஆம் ஆண்டுக்குள் E20 இலக்கினை (பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலத்தல் என்னும் குறிக்கோளை) எட்டுவதற்கு, பெட்ரோலுடன் கலப்பதற்காக சுமார் 10.16 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படுகிறது. இதைத் தவிர, மருந்து உற்பத்தி மற்றும் அருந்தும் ஆல்கஹால் போன்ற பிற தொழில்களுக்கு மேலும் 3.6 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும்.
தொழில்துறையின் தேவைகளுக்காக எத்தனால் இறக்குதி
தொழில்துறை இறக்குமதிகளில் சில சவால்கள் நிலவுகின்றன. காலநிலை மாற்றங்கள், மூலப்பொருட்களுக்கான கடுமையான போட்டிகள், மற்றும் கரும்பு, மக்காச்சோளம், அரிசி ஆகியவற்றின் நிச்சயமற்ற அறுவடைச் சூழல்கள் போன்ற காரணிகள், இப்போதைய போக்கு நீடித்தால் இந்தியாவுக்கு E20 இலக்கை அடைவதை கடினமாக்கலாம். அமெரிக்கா பிற நாடுகளுக்கு அதிக அளவில் எத்தனாலை விற்பனை செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியா பெருமளவில் எத்தனாலை பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி செய்துள்ளது.
இது, சிறுசிறு விட்டுக்கொடுப்புகளுக்கும் இணங்கக்கூடியதொரு களமாக இந்தியாவிற்கு மாறியிருக்கிறது . ஆனால், இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீதான தனது சார்புநிலையைக் குறைப்பதற்குப் பதிலாக, அது புதியதோர் சார்புநிலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது. ஆகவே, எரிசக்தி பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, எரிபொருள் கலப்பிற்கு உள்நாட்டிலேயே விளையும் பயிர்களையே ஆதாரமாகக்கொண்டு இருக்க வேண்டும் என்பதை நிலைநிறுத்தியவாறே, நாடு தொழில்துறைப் பயன்பாடுகளுக்காக மட்டுமே அதிக எத்தனால் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கவேண்டும்.
தொலைநோக்கு கொண்ட விரிந்ததோர் நிலைப்பாடானது
உலகளாவிய வணிகப் பரப்பிலிருந்து இந்தியா முழுமையாக விலகி நிற்க இயலாது. ஆயினும், அது தனது சொந்த நாட்டின் நலன்களை விட்டுக்கொடுக்காத வகையிலேயே நிபந்தனையுடன் அதில் கலந்துகொள்ள வேண்டும்.
2024ஆம் ஆண்டின் OECD அறிக்கை ஒரு பெரும் இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்திய உழவர்கள், உலகச் சந்தை விலைகளை விட 25% குறைவான வருவாயையே ஈட்டுகின்றனர், மேலும் ஆண்டுக்கு வெறும் 366 டாலர் மட்டுமே அரசின் நிதிஆதரவு பெறுகின்றனர். ஆனால், அமெரிக்க உழவர்களோ உலகச் சந்தை விலைகளை விட அதிக வருவாயைப் பெறுவதுடன், அரசாங்க நிதி உதவியாக 17,100 டாலர்களைப் பெறுகிறார்கள். மேலும், அவர்கள் சராசரியாக 160 மடங்கு பெரிய நிலப்பரப்பில் வேளாண்மை செய்கிறார்கள்.
இந்தியாவில் விவசாயம் என்பது வெறும் பொருளாதார ஆதாயத்தைத்தரும் துறையாக மட்டும் பார்க்கக்கூடாது அதையும் தாண்டி, அது கலாச்சாரத்தின் வேராகவும், அரசியல் களத்தின் அடிநாதமாகவும் , மக்களின் ஜீவ நாடியாகவும் திகழ்கிறது. இந்தியா தனது சந்தைகளை திறந்துவிட நேரும் போது , அது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எவ்விதப் பாதிபையும் ஏற்படுத்தாத வகையிலேயே அமைய வேண்டும். எந்தவொரு வர்த்தக உடன்பாடும் அது நாட்டின் கிராமப்புற வேலை வாய்ப்புகளையும் உணவுப் பாதுகாப்பையும் ஒருங்கே காத்து வளர்க்கும் வகையில் அமைய வேண்டும்.
- செந்தாரகை (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.deccanherald.com/india/agri-deadlock-red-lines-in-the-india-us-trade-talks-3617443
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு