மோடி ஆட்சியில் அறிவியலையும் இந்திய வரலாற்றையும் இந்துத்துவ பாடத்திட்டம் மூலம் மாற்றியமைக்கும் ஆர்.எஸ்.எஸ்.
பாஜகவின் தீவிர வலதுசாரி தத்துவ தலைமையாக விளங்கும் ஆர் எஸ் எஸ்-ன் கீழ்செயல்படும் அனைத்து பள்ளிகளும், அரசு பாடதிட்டத்தை மாற்றியமைப்பதற்கான சோதனைக்களமாகவும் இருந்துவருகிறது. -ஸ்னிக்தேனு பட்டாச்சார்யா.
கொல்கத்தா, இந்தியா - கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில், உலுபேரியா நகரில், சாரதா சிஷு வித்யா மந்திர் எனும் மூன்றடுக்கு கொண்ட பள்ளியின் கட்டடத்தில், ஐந்தாம் வகுப்பு முதல் 10வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. மாணவர்கள் தினமும் பிரார்த்தனைக் கூடத்தில் வகுப்பு துவங்கும் முன், 15 நிமிடங்களுக்கு கூடுகின்றனர்.
பிரார்த்தனைக் கூட சுவர்கள், இந்து தெய்வங்கள், துறவிகள், இதிகாச பாத்திரங்கள், பழம்பெரும் இந்திய அறிஞர்கள், அரசர்கள், இந்து சமய சடங்குகள், இவற்றின் வண்ணமிகு சுவரொட்டிகளால் அலங்கரிக்கப பட்டுள்ளது. இந்த பிரார்த்தனை, இந்துமதத்தின் அறிவுக் கடவுளான, சரஸ்வதியை போற்றும் சரஸ்வதி வந்தனம் எனும் சுலோகத்துடன் துவங்குகிறது. அவர்கள் தங்கள் வகுப்பு அறைக்குள் நுழையும்போதும், அதே உருவங்கள் அதாவது சன்ஸ்கிரிதி போத மாலாஅல்லதுகலாச்சார விழிப்புணர்வு கையேடுகள்என்பதுபோன்ற புத்தக வரிசைகளை அவர்கள் மறுபடியும் எதிர் கொள்கின்றனர். அவை, ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும், பல்வவேறு மாநில மொழிகளிலும் பதிக்கப் பட்டுள்ளது. சன்ஸ்கிரிதி போதமாலா எனும் இப்புதகங்கள், நான்காம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்புவரை மாணவர்களுக்கு கட்டாய பாடமாகவைக்கப்பட்டுள்ளது.இவர்கள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு தேர்வையும் எழுத வேண்டும்.
வேதகாலத்தில் (கிமு 1500 முதல் 500வரை) எழுதப் பட்டதென சொல்லப் படும் மதத்தின் ஆகமங்கள் வாயிலாக, பழம் பெரும் தத்துவஞானிகள், அறிஞர்களுக்குத் தொடர்பான போதனைகளையும், தத்துவங்களையும், இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்டுதான் வருகின்றனர்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், இவற்றுள் பல கருத்தாக்கங்கள், இந்தியாவின் பிரம்மாண்டமானமுறைசார்ந்த கல்வி நிலையங்களில் நுழைந்து, இந்து மத நம்பிக்கைகளுக்கும், அறிவியல் வரலாற்று கல்விக்கும் இடையே இருந்த எல்லைக் கோடுகளை கலைத்துவிட்டன.
நம்நாட்டில் 25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களே மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும்மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தஅம்சமே, மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கும், அதன் இந்து பெரும்பான்மைவாதத்தை ஏற்றுக்கொண்டுள்ள கூட்டாளிகளுக்கும், கோடிக்கணக்கான இளம் இந்தியர்களின் மனத்தைக் வசப்படுத்துவதற்கு கல்வியை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது என விமர்சகர்கள் கருதுகின்றனர் - அவர்களில் பலர், இந்த ஆண்டு மே மாத வாக்கில் முதல் முதலாக வாக்கை அளிக்கப் போகிறவர்களாகவும்இருக்கிறார்கள்.
அணுக்கொள்கை முதல் வான் பயணம் வரை
வேதகால தத்துவஞானி, கானடாதான் உலகின் முதல் அணுவியல் அறிவியலாளர் என்கிறது, நான்காம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம்.
வைஷேஷிக தர்ஷன் எனும் தனது நூலில், மேலும் பகுக்க முடியாத துகள்களான அணுவைப் பற்றிகானடா எழுதியிருப்பது உண்மை. ஆனால், அதன் பின் அவர் பட்டியலிடும் பொருட்களான பிருத்வி (மண்), ஜலம் (தண்ணீர்) தேஜாஸ் (நெருப்பு) வாயு (காற்று) ஆகாஷா (வானம்) காலா, (நேரம்) திக் (வளி), ஆத்மா (ஆன்மா) மனஸ் (மனம்), இவை பற்றிய கருத்துக்கள், அவர் பேசுவது தத்துவார்த்த, மெய்மவியல், இயக்கமறுப்பியல் போதனைகளின் அடிப்படையிலானது ( philosophical / metaphysical) என்பதையே தெரிவிக்கிறது.
ஐந்தாம் வகுப்பின் பாடப்புத்தகத்தில், வைமானிக சாஸ்த்ரா ( வானூர்தி அறிவியல்) எனும் நூலை எழுதியதாக சொல்லப் படும் வேதகால முனிவர் பரத்வாஜர், “விமானப் பயணத்தின்” தந்தை என அழைக்கப் படுகிறார். ஐந்தாம்வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு புத்தகங்கள், பழங்கால இந்திய மருத்துவர் சுஷ்ருதரை “ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையை" (plastic surgery) கண்டு பிடித்தவர் என்கின்றன. சன்ஸ்கிரிதி போத மாலா, அரசால் அங்கீகரிக்கப் பட்டதல்ல. ஆனால், அவை, அரசு அங்கீகரித்த பாடத்திட்டங்களுடன்சேர்த்து, பாஜகவின் தீவிர வலது சாரி குருகுலமாகிய ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் எனும் ஆர் எஸ் எஸ் நடத்தும் பள்ளிகளில் கூடுதலாக கற்பிக்கப் படுகின்றன.
இந்தப் பள்ளிகள், வித்யா பாரதி எனும் ஆர் எஸ் எஸ்சின் கல்வி கிளை அங்கத்தால் நடத்தப் படுகின்றன. அதன் கட்டுப்பாட்டில் சுமார் 12,000 பள்ளிகளும், சற்றேறக் குறைய 3.2 கோடி மாணாக்கர்களும் உள்ளனர். இந்தப் பள்ளிகள் நடுவண் இடை நிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE), அல்லது அந்தந்த பகுதியின் அரசு கல்வி வாரியங்களுடன் இணைக்கப் பட்டவையாகஇருந்துவருகிறது.
சமீப காலங்களில், வித்யா பாரதி பள்ளிகளில் கற்பிக்கப் பட்டுக் கொண்டிருந்த, நிறுவப் படாத வரலாற்று, அறிவியல் கூற்றுக்கள், இப்போது அரசு நடத்தும் பள்ளிகளிலும் நுழைந்துவிட்டன.
கானடரின் அணுக் கொள்கையும், சுஷ்ருரைன் தசையொட்டு அறுவை சிகிச்சையும், ஏற்கனவே, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி வாரியமாகிய தேசிய திறந்த வெளி பள்ளியின் National Institute of Open Schooling (NIOS) பாடத் திட்ட பகுதிகளாக உள்ளன. கடந்த ஐந்து வருட எண்ணிக்கையின் படி, 41 லட்சம் பேர் பதிந்து கொண்டுள்ள “உலகின் மிகப் பெரிய திறந்த வெளி பள்ளி"யாக, தன்னை அது விவரித்துக் கொள்கிறது.
தேசிய திறந்தவெளிப் பள்ளி, மாணவர்களை, வேத கால கணிதத்தைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கப் படுத்துகிறது. அது ஆர் எஸ் எஸ் பள்ளிகள் பயிற்றுவிக்கும இன்னொரு பாடத் திட்டமாகும்.
NCERT எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி, மற்றும் பயிற்சிக் குழுமத்தின், நிலவுப் பயணத்தைப் பற்றிய புதிய பிரிவில், வைமானிக சாஸ்த்ரா எனும் நூல், “நமது கலாச்சாரம் அனேகமாக, பறக்கும் ஊர்திகளைப் பற்றி அறிந்திருக்கலாம்.” என்கிறது.
தேசிய கல்வி ஆராய்ச்சி, மற்றும் பயிற்சிக் குழுமம், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு, மாதிரி பாடத் திட்டங்கள் உட்பட, பள்ளிக் கல்வி பற்றி பரிந்துரைக்கும் அமைப்பாகும். இருந்த போதிலும், பல மாநிலக் கல்வி வாரியங்கள், என்சிஆர்டியின் பரிந்துரைக்கு மாறுபட்டு, தம் சொந்த பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. 2020ல், ஒன்றிய வாரியங்களின் கீழான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 12 லட்சம் மாணவர்களும், மாநில வாரியங்களின் கீழான 10ம் வகுப்பு தேர்வில், 18 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "நமது ஆகமங்கள், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிப்பதற்கு ரொம்ப நாளைக்கு முன்பே சொல்லிவிட்டன." என்று 2019ல் பேசினார். சன்ஸ்கிருதிபோத மாலாவும் இதையே சொல்கிறது. அதன் ஒரு புத்தகத்தில், புவி ஈர்ப்புபற்றி 5ம்நூற்றாண்டின் கணிதவியலாளரான ஆரியபட்டாவும், 12ம் நூற்றாண்டின் கணிதவியலாளரான பாஷ்கராச்சாரியாரும் கண்டுபிடித்தனர் எனும் கூற்றை முன்வைக்கிறது.
"சன்ஸ்கிரிதி போத மாலாவுக்கும், முறையான பாடத்திட்டத்துக்கும் எந்த முரண்பாடும் இல்லை. ஏனெனில், இன்றைய முறையான பாடத்திட்டத்தில், முகலாயருக்கு முந்தைய வரலாறு நீக்கப் பட்டிருக்கிறது என்கிறது. அங்கேதான் விஷயமே என”, உலுபேரியாவின் சாரதா வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் பிரலோய் அதிகாரி, அல் ஜஸீராவிடம் கூறினார்.
மோடி அரசின் தேசிய கல்வித் திட்டம், வித்யா பாரதி பள்ளிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தப் பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது என்கிறார்.
"தேசிய கல்விக் கொள்கை,குறிப்பிட்டசில பள்ளிகளில் மட்டுமேஇருந்த நடைமுறையை, பரந்துபட்ட ஒன்றாக மாற்றிவிட்டன." என்ற அவர், சன்ஸ்கிரிதி போதமாலா புத்தகங்கள் தரும் மேலதிக தகவல்கள், முறைசார் தேசிய பள்ளிகளையும் அடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
"பெருமைக்குரிய கலாச்சாரம்"
தனது பள்ளிகளில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள மாணவர்களுக்கான கலாச்சார விழிப்புணர்வு தேர்வு, "நமது கலாச்சாரத்தின் பெருமையை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கமுடைது" என்கிறது, வித்யா பாரதி.
மேற்கு வங்கத்தின் வித்யா பாரதியை சார்ந்த அதிகாரியான தேபன்ஷு குமார் பட்டி, தங்களுடைய புத்தகத்தில் உள்ளவை நன்கு ஆய்வு செய்யப் பட்டவை என்கிறார். "காலனிய, மார்க்சிய வரலாற்றாசிரியர்கள், இந்துக்கள் தம்மை மட்டமானவர்களாக உணரும் வகையில் வரலாற்றை மறைத்துவிட்டனர், என அல் ஜஸீராவிடம் சொன்னார்.
ஆனால், மோடி அரசை, தனது இந்துத்துவ தேசிய அரசியல் நிரலுக்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்திமைப்பதாக வரலாற்றாளர்கள் - மார்க்சிஸ்டுகள் மட்டுமல்ல - அறிவியலாளர்கள், மற்ற விமர்சகர்கள் பலருமே, குற்றம் சாட்டுகின்றனர்.
புதுடெல்லியின் வளரும் சமுகம் பற்றிய ஆய்வு மையத்தை (New Delhi’s Centre for the Studies of Developing Societies -CSDS) சேர்ந்த ஹிலால் அஹமத், அல்ஜஸீராவிடம் சொன்னது: யாரையும் புதிய வரலாறுகள் சொல்வதற்காக நிந்திக்க முடியாது. "ஏனெனில் பழங்காலத்தை பற்றிய கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில்தான் நிகழும் -ஆனால், சரியான வரலாற்றியல் முறைகள் பின்பற்றப் பட வேண்டும்."
"வரலாற்றை எழுதுவது என்பது, சிக்கலான செயல்முறை. உண்மையான வரலாற்றாசிரியர்கள், சான்றுகளின் நம்பகத் தன்மை குறித்த சோதனைகள் உள்ளிட்ட முறைகள், அணுகு முறைகள், சான்றுகளை முன்வைக்கும் விதம், எப்படி அவை தரும் செய்திகளை புரிந்து கொள்வது பற்றிய விளக்கம், அவை தொடர்பு படுத்தும் விதம் அனைத்தைப் பற்றியும் நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். ஆனால், இந்தப் பள்ளிகள், உண்மையான வரலாற்றை சுட்டிக் காட்டும் அந்த அணுகு முறைகளைப் பின்பற்றுவதில்லை." என்றார்.
சன்ஸ்கிரிதி போதமாலா பாடப் புத்தகங்கள், ஏதோ "கடந்தகாலத்தின் இறுதி உண்மையை" கண்டுபிடித்தது போல வரலாற்றை வழங்க முற்படுவதன்காரணமாகவே "மாணவர்களுக்குவிரோதமானது" என்கிறார். "கடந்தகாலம் பற்றிய புரிதலை மாணவர்கள் தாங்களாகவே உள்வாங்க முடியாத ஒரு கல்விமுறையை, அவை அறிமுகப் படுத்துகின்றன. அந்த மாணவர்கள், வரலாறு பற்றிய மாற்று கருத்தாக்கங்களுக்கு எதிராக திரும்புவர். பழங்காலத்தை பற்றிய இனி உருவாகக் கூடிய புதுவித சிந்தனைகள் தடுக்கப் படுகின்றன." என்றார்.
அறிவியல் சிகரம்: வேதகாலத்திலிருந்து நவீன காலம் வரையிலான இந்திய அறிவியலாளர் (The Scientific Edge: The Indian Scientist from Vedic to Modern Times.) எனும் தனது நூலில், இந்தியாவின் பிரபலமான விண்ணியலாளர் ஜயந்த் விஷ்ணு நாரில்கர், அத்தகைய கூற்றுக்களை தகுதியற்றவை என காட்டுகிறார். ஆய்வுகளுக்கு முன் அவை நிற்க முடியவில்லை என்கிறார். அதையொட்டி, "அவர்கள் அண்டத்தைப் பற்றி, ஆர்வமாக இருந்தனர் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு நவீன அறிவியலும் கூட தெரியும் என்பதை ஏற்பதற்கில்லை." என்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) தலைவர், எஸ். சோம்நாத், அறிவியலின் முக்கிய கிளைகளில் ஏற்பட்ட வளரச்சிகளான, உலோகவியல், ஜாதகம், வானவியல், வானூர்தி அறிவியல், இயற்பியல் எல்லாம் பண்டைய இந்தியாவில் இருந்தவையே. பின்னர் அவை ஐரோப்பாவுக்கு அராபியர்களால் கடத்திச் செல்லப் பட்டுவிட்டன என 2023ல் சொன்னார். அறிவியல் சாதனை சங்கம், (Breakthrough Science Society -BSS) ஒரு அறிக்கை வெளியிட்டது. "வானியல், வானூர்தி பொறியியல், எல்லாம் இருந்தவையே, அவை பண்டைய சமஸ்கிருத நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன எனில், அவற்றை ஏன் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை?" எனக் கேட்டது.
"ராக்கெட் அல்லது துணைக்கோளை செலுத்த, வேதங்களிலிருந்து எடுத்து இந்திய விண்வெளிக் கழகம் பயன் படுத்திய ஒரே ஒரு தொழில் நுட்ப சங்கதியை, அவர் (சோம்நாத்) காட்ட முடியுமா?" எனக் கேட்டது அந்த அறிக்கை., கொல்கத்தாவில் உள்ள பகுத்தறிவு அறிவியலாளர்களின்கூட்டமைப்பாகஅறிவியல் சாதனை சங்கம்செய்லபட்டுவருகிறது.
விளிம்பு அமைப்பாக இருந்து, பெருந்திரள் நிலைக்கு
ஒரு கட்டியமைக்கப்பட்ட வரலாற்றை முன் தள்ளும் வித்யாபாரதியின் நடவடிக்கை, "கல்வியை காவி மயமாக்கல்" என்ற பெரும் திட்டத்தின் ஒரு அங்கம் என விமர்சகர்கள் அழைக்கின்றனர். காவி நிறமானது இந்து வலதுசாரிகளின் அபிமான வண்ணம். இது மோடி அரசும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளும், முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடு.
சன்ஸ்கிரிதி போத மாலா புத்த்தகங்கள், வித்யா பாரதி சன்ஸ்க்ரிதி சிக்ஷா சாஸ்தான் எனும் அமைப்பால் வெளியிடப் படுகின்றன. அதன் முன்னாள் தலைவர், கோவிந்த பிரசாத் ஷர்மா, பாஜக அரசின் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பிற்கான வழிகாட்டிக் குழுவுக்கு (National Curriculum Framework’s steering committee) 2021ல் தலைவராக பணி புரிந்தவர்.
அரசு பள்ளிகளின் பாடத்திட்டங்களை எழுத அடிப்படையாக அமைந்த , தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை வளர்க்க உருவாக்கப் பட்ட அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் என்சிஇஆர்டி உருவாக்கிய 25இலக்குக் குழுக்களில், ஐந்தில், வித்யா பாரதி அதிகாரிகள் இருந்தனர்.
வித்யா பாரதியின் தேசிய தலைவர் டி ராமகிருஷ்ண ராவின் கூற்றின் படி, அவர்களது பள்ளியை சார்ந்த "மூத்த ஓய்வு பெற்ற" ஆசிரியர்கள், பல மாநிலங்களில், அரசு பள்ளிகளின் பாடதிட்டங்களை எழுதுவதற்கான வளம்சேர்க்கும் நபர்களாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
"வித்யா பாரதி, ஐந்து ஆண்டுகளாக, கல்விக் கொள்கை தயாரிப்புக்கான துவக்க கட்டத்தில், அரசுக்கு இடையறாத ஆதரவு தருவதற்கான அனைத்து வழிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது ." என ஒரு வலது சாரி இணையப் பக்கத்தில் அவர் 2021ல் எழுதினார்.
அவர்களது பள்ளியின் சில முதல்வர்களும், நிர்வாக உறுப்பினர்களும், தேசியஅளவில் ஆசிரியர்களுக்கான தொழில்முறைத் தரநிர்ணயங்களைவடிவமைக்கும் குழுமத்தின் அங்கத்தினர்களாகஇருக்கின்றனர். தேசிய கல்வித் திட்டத்தைஅமல்படுத்துவதற்காகஉருவாக்கப்பட்ட எல்லா பணிக் குழுக்களும் இவர்களது பிரதிநிதிகளைக் கொண்டிருந்தன. அவர்கள் "நேரடியாகவேகளத்தில்இறங்கி" செயல்பாடுகளை கண்காணிக்கின்றனர் என ராவ் சொல்கிறார்.
'இந்து மனங்களை இளமையிலேயே கவர்க'
பாஜக, 1999லிருந்து 2004வரை முதல் முறையாக ஆட்சியில் இருந்த போதும், இத்தகைய முயற்சி ஒன்று, பள்ளிப் பாடத் திட்டத்தை மாற்ற மேற்கொள்ளப் பட்டது.
அந்த திட்டத்தின் வாயிலாக எழுச்சி பெற்ற புதிய நபர், அன்றைய வித்யா பாரதியின் பொதுச் செயலாளர், தினாநாத் பாட்ரா. 2014ல் மோடி பதவிக்கு வந்த உடனே, அவரது மாநிலமான குஜராத்தில், பத்ராவின் புத்தகங்கள் அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்கப் பட்டன.
உலகப் புகழ் பெற்ற ரோமில்லா தாப்பர், இர்ஃபான் ஹபீப் போன்றோர், வரலாற்றையும் புவியியலையும், கற்பனையாக மாற்றிவிட்டவர் என பத்ராவைகுற்றம் சாட்டியபோதிலும்இந்துத்வ தேசிய வராலாற்றாளர்களில்இவர் முன்னோடியாககருதப்படுகிறார்.
கல்வி உட்பட, வாழ்வின் அனைத்து அங்கங்களிலும் மேலோங்கிய செல்வாக்கு செலுத்துவதறகான ஆர் எஸ் எஸ் சின் விரிவான செயல் தந்திரத்தின் ஒரு அங்கமே வித்யா பாரதி பள்ளிகள், என இந்துத்துவ தேசியம் பற்றிய பல நூலகளை எழுதிய பத்திரிகையாளர், நீலாஞ்சன் முகோபாத்யாயா, அல் ஜஸீராவிடம் சொன்னார்.
முகோபாத்யாயா சொல்வது வருமாறு: ஆர் எஸ் எஸ் பள்ளிகளை இத்தனை பிரம்மாண்டமான வலைப் பின்னலாக அமைத்திருப்பதன் பின்னணி, "இந்து மனங்களை இளமையிலேயே கவர்ந்து, பண்டைய இந்துத்வம் வெல்லமுடியாததாக இருந்ததையும், பிறகு ஆயிரம் ஆண்டுகளாக, முதலில் முஸ்லிம்களின் கீழும், அடுத்து, கிறித்தவ காலனியாதிக்க வாதிகள் திணித்த அடிமைத் தனத்திற்கும் ஆட்பட்டதானது, உலகம் முழுவதும் ஆளுமை செலுத்திய இந்தியப் பண்பாடான அந்த தங்கப் பறவையின் சிறகுகளை வெட்டிவிட்டது எனபதையும் போதிப்பதே"என்கிறார்.
மோடி அரசு, இந்துத்வ தேசியவாதிகளுக்கு, "அந்தப் பழம் பெருமையையும் உலகளாவிய இந்து ஆளுமையையும் மீண்டும் நிலை நாட்ட அருமையான வாய்ப்பைத் தந்தது."
"குழந்தைகளின் மனதில் அத்தகைய எண்ணங்களை விதைத்தால், அவர்கள் முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான அடங்கொணா ஆத்திரத்துடன் வளர்வார்கள். அத்தகைய தகவல், உலகமே இந்துக்களுக்கு எதிராக சதி செய்வது போன்ற மனப்பிழற்வை இந்துக்களிடையே உருவாக்க முனையும்." என்றார் அவர்.
- வைகறை நேசன்
(தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2024/2/19/how-rss-textbooks-are-reshaping-indian-history-and-science-under-modi
Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு