ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி வெகுஜன மக்களுக்கு உணர்த்தும் செய்தி என்ன?

அதிக ஊதியம் பெறும் முதல் 1% நபர்களின் வளர்ச்சியையே GDPயின் வளர்ச்சியாக காட்டும் GDP அளவீட்டு முறையின் மோசடி

ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி வெகுஜன மக்களுக்கு உணர்த்தும் செய்தி என்ன?

இந்திய நாட்டின் சாதாரண குடிமக்களது வாழ்வில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்துள்ளது? அவர்களது நிதி நிலைமைகளை எவ்வாறெல்லாம் மேம்படுத்தியுள்ளது? யதார்த்த உண்மை என்னவென்பதை இங்கே அலசிப் பார்க்கலாம்.

இங்கிலாந்தை (UK) முந்திக்கொண்டு இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது.

இந்த நிதியாண்டில் (2022--23), முதல் நான்கு மாதத்திற்கான GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) புள்ளி விவரங்கள் வெளிவந்ததை வைத்து மட்டும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை முந்திக்கொண்டு இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக வளர்ந்துவிட்டதென எண்ணுவது ஒரு வகையான மனப் பிராந்தியே. 2029 ஆம் ஆண்டிற்குள் ஐப்பான், ஜெர்மனி, போன்ற நாடுகளின்  பொருளாதாரங்களை முந்திச் சென்று இந்தியா மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து நிற்கும் என்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வெளியிட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “இன்றோ ஐந்தாவது இடம், வெகுவிரைவில் மூன்றாவது இடம்…” என்று செப்டம்பர் மாதம் (2022) 8--ஆம் தேதி அமெரிக்க முதலாளிகள் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட அமெரிக்க – இந்திய தொழில் குழு (USIBC) கூட்டமொன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருந்தார்.

2023 ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்திக்கொண்டு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகிவிடும் என்று ஐ.நாவின் சமீபத்திய அறிக்கையில் சொல்லியது போலல்லவா இவர்கள் கூறுகிறார்கள்.

8.7% GDP வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ள இந்தியா இந்த நிதியாண்டில் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக அறியப்படுகிறது என்று சொல்வதும் இதுவும் ஒன்றுதான்.

2011-12ம் நிதியாண்டை அடிப்படையாககக் கொண்டு புதிய GDP கணக்கீட்டு முறைகள் அந்த சமயத்தில் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியா சீனாவை முந்திக்கொண்டு உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொளாதாரம் என்று 2015ல் அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே புதிதாக புகுத்தப்பட்ட GDP கணக்கீட்டு முறைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தன்னியல்பாக  மக்கள்தொகை அளவை கணக்கில் எடுத்துக்கொண்டு (self-populated) உருவாக்கப்பட்ட MCA-21 என்ற தரவுத்தளம் அதிகமான குறைபாடுகளை கொண்டிருக்கிறது என தேசிய புள்ளியல் மாதிரி எடுக்கும் அலுவலகம் (NSSO) தெரிவித்துள்ளது. இந்த MCA-21 தரவுத்தளத்தை பயன்படுத்தியே புதிய GDP கணக்கீட்டு முறைகள் உருவாக்கப்பட்டது. அதை வைத்தே நாட்டின் உற்பத்தித் துறையும், சேவைத்துறையும் மதிப்பிடப்படுகிறது. சேவைத்துறையில் கண்டடைந்த முடிவுகளை சோதித்துப் பார்க்கும் பொழுது, 45%  மேலான தொழிலகங்கள் “கணக்கெடுப்பிலிருந்து விடுபட்டுள்ளது” அல்லது பெரிதும் தவறாகவே மதிப்பிடப்பட்டுள்ளது என NSSO கூறுகிறது. உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களை பொறுத்தமட்டில் இன்று வரை வந்தடைந்த மதிப்பீடுகளின் உண்மைத்தன்மை சோதித்தறியப்படவில்லை. அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக முன்பு பணியாற்றிய அரவிந்த சுப்ரமணியன் புதிய GDP கணக்கீட்டு முறைகள் மிகையாகவே மதிப்பீடு (Over-estimated) செய்கிறது. 2011-12 முதல் 2016-17 வரையிலான நிதியாண்டின் போது “ஒவ்வொரு வருடமும் 2.5% புள்ளிகள் (மின்சார உற்பத்தியை சேர்க்கமால்) முதல் 3.7% புள்ளிகள் வரை (மின்சார உற்பத்தியை சேர்த்தது) மிகையாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதென்று கூறினார்.

 

இந்தியாவின் தலாவீத (Per Capita) GDP என்பது உலக சராசரிக்கும் கீழ்தான் உள்ளது

இங்கிலாந்தின் (UK) 3.68 டிரில்லியன் டாலர் GDPக்கும் (பெயரளவிலானது) மேலாக வளர்ந்து இந்தியாவின் பெயரளவு GDP (Nominal) 3.89 டிரில்லியன் டாலர்களை இந்த ஆண்டு (ஐனவரி-டிசம்பர் 2022) எட்டும் என SBIயின் ஆய்வறிக்கை அனுமானிக்கிறது. அவ்வகையில் உலக GDPயில் இந்தியா 3.5% பங்களிக்கிறது. அமெரிக்கா (24.1%), சீனா (19.8%), ஜப்பான் (4.8%), ஜெர்மனி (4.1%) போன்ற நாடுகள் இந்தியாவைவிட அதிகமாகவே உலக GDP க்கு பங்களிக்கிறது.

 

இதற்கு மாறாக, தலாவீத GDP அளவுகள் (மிகக் குறுகலான அளவீடாகவே இருந்தாலும்) ஒவ்வொரு நபரும் ஈட்டக்கூடிய வருமான அளவை தெளிவாக எடுத்துக்காட்டவில்லையா?

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலாவீத GDP முறையே 2,277 அமெரிக்க டாலர்களாக இருந்ததென உலக வங்கியின் புள்ளிவிவரத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது உலகின் சராசரி தலாவீத GDPயான 12,263 டாலர்களை விட 5 மடங்கு சிறியது எனவும் கூறப்படுகிறது. மற்ற ஐந்து பொருளாதாரங்களோடு ஒப்பிடுகையில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது தெரிய வருகிறது.

அமெரிக்காவின் தலாவீத GDP 69,288 டாலர்கள், ஜெர்மனியின் தலாவீத GDP 50,802 டாலர்கள், பிரிட்டிஷின் தலாவீத GDP 47,334, ஐப்பானின் தலாவீத GDP 39,285 டாலர்கள், சீனாவின் தலாவீத GDP 12,558 என்று வெவ்வேறு நிலைகளில் இருந்து வருகிறது. வங்கதேசத்தின் தலாவீத GDP கூட நம்மை விட அதிகம் (2,503 டாலர்கள்) தலாவீத GDPயை வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் கணக்கிடும் முறையையும் ஆராய வேண்டியுள்ளது. (ஒவ்வொரு நாட்டின் செலாவணியும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது பெறுகின்ற மதிப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்கிறது). இதிலும் இந்தியாவின் நிலை தாழ்ந்தே உள்ளது. 2021 ஆம் ஆண்டில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடப்பட்ட இந்தியாவின் தலாவீத GDP என்பது 7,333.5 டாலர்களாக உள்ளதென்றும், இதை விட 2.6 மடங்கிற்கும் அதிகமாக உலக சராசரி (18,721.6 டாலர்கள்) இருப்பதாகவும் உலக வங்கியின் புள்ளிவிவரத் தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்கம் போல மற்ற ஐந்து பொருளாதாரங்களுமே வெவ்வேறு நிலையில் இருக்கின்றன. எனினும் இந்த அளவீட்டில் வங்கதேசத்தை விட இந்தியா முன்னேறி உள்ளதை குறிப்பிட வேண்டும்.

உலக ஏழை நாடுகளுள் ஒன்றாகவே இந்தியா இன்றும் இருந்து வருகிறது. மாதம் 25,000 (ஒரு டாலர் 80 ரூபாயாக இருந்தபொழுது மாதம் 312.5 டாலர்கள்) அல்லது ஆண்டுக்கு 3 லட்சம் சம்பாதிக்கும் ஒரு இந்தியரின் ஊதியமென்பது அதிக ஊதியம் பெறும் 10 சதவீதத்தினரின் சம்பாத்தியமாகவே இருந்து வருகிறது. வருமான அடுக்கின் மேலுள்ள முதல் 1% நபர்களின் வளர்ச்சியென்பது நியாயமான GDP அளவீட்டு முறையாகவோ அல்லது அவர்களின் வளர்ச்சியே GDPயின் வளர்ச்சியாக காட்டுவதென்பது முறையாகாது. 

இது மட்டுமல்ல இந்தியாவின் தனிமனித வருமானமும் வீழ்ச்சியடைந்தே வருகிறது.

2017-2018ம் நிதியாண்டில் 6.9% என்றிருந்த தனிநபர் வருமானம் 2020-21 நிதியாண்டில் (கொரோன தொற்று முன்பு வரை) 2.7% என்ற அளவிற்கு சரிந்தது. 2021-22 நிதியாண்டின் போது -7.6% என்று அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இந்த வருட நிதியாண்டில் 7.6% என்ற நிலைக்கு மீண்டெழுந்துள்ளது என தேசிய கணக்குப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வீழ்ச்சிகள் சந்தைத் தேவையிலும் எதிரொலித்தது. 2020-21 நிதியாண்டில் (கொரோனா தொற்று முன்பு வரை) தனிமனித நுகர்வு (PFCE) 6.8% என்ற உச்ச நிலையிலிருந்து 4.1% என்ற நிலைக்கு சரிந்துள்ளது. 2021-22 நிதியாண்டில் இந்த விகிதம் -7% என்று வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து 6.9% என்றளவிற்கு நடப்பு நிதியாண்டில்(2022-23) மீண்டு வந்துள்ளது.

மேற்கண்ட அனைத்து புள்ளி விவரங்களுமே மிகுந்த எச்சரிக்கையுடன் புரிந்துகொள்ள வேண்டியவையாகும்.

ஏனெனில், மத்திய மாநில அரசுகளின் வருமானம், தனியார் கார்ப்பரேட்களின் வருமானம், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் வருமானம், டிரஸ்டுகளின் வருமானம் போன்ற எண்ணற்ற குடும்ப வருமான நிலைகளை குறிக்காத தரவுகளே GDP கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. தலாவீத GDP கணக்கீட்டிலும் இதே போல குடும்ப வருமானம் சாராத தரவுகளே சேர்க்கப்டுகிறது. எனவே ஒரு குடும்பத்தின் பொதுவான நிதி நிலைமையின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்கான அளவீடாக இது இருக்க முடியாது. கொரோனா பேரிடர் காலத்திலும் கூட அதானி உலகின் மூன்றாவது பணக்காரராகவும், அம்பானி உலகின் 11வது பணக்காரராகவும் ஆகியிருக்கலாம். ஆனால், இது சாதாரண இந்தியனின் அல்லது ஒரு குடும்பத்தின் நிதி நிலைமைகளில் எந்தவொரு மாற்றதையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் இவர்களுடைய தனிநபர் வருமானமோ அல்லது வேலைவாய்ப்போ எவ்வகையிலும் ஏற்றம் காணவில்லை. 2011-12 முதல் நுகர்வுக்காக செலவிடப்படும் தொகையினை இந்தியா சேகரிக்கவே இல்லை. 2017-18 ஆம் நிதியாண்டின் போது எடுக்கப்பட்ட தரவுகளும் அதிகரித்து வரும் வறுமைநிலையை எடுத்துக்காட்டியதால் குப்பையில் வீசியெறியப்பட்டது. 

இன்னும் சொல்வதென்றால், ஒவ்வொரு மாதமும் செல்லச் செல்ல உலகு தழுவிய பொருளாதார மந்த நிலை அச்சுறுத்தும் வகையில் பெருகிக்கொண்டே செல்கிறது. நடப்பு நிதியாண்டிற்கான (2022-23) GDP வளர்ச்சி குறித்து RBI அனுமானித்திருந்த விகிதமான 16.2% என்ற வீதத்தை விடஇந்த காலண்டிற்கான GDP 13.5% என்ற அளவில் குறைந்தே காணப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட GDP வளர்ச்சியான 7.2% என்பது ஏற்பட வாய்ப்பில்லை என்பதையே இது காட்டுகிறது. இது மட்டுமல்ல, 2020-21ம் நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் ஏற்பட்ட GDP வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டிற்கான காலாண்டு GDP வளர்ச்சியென்பது 4% என்றவாறே அதிகரித்துள்ளது. (அதாவது மூன்று ஆண்டுகளில் 4% வளர்ச்சி) இதை எப்படி வளர்ச்சி என்று சொல்ல முடியும். 

GDP வளர்வது போல இந்தத் தரவுகள் காட்டியிருந்தாலும், இந்த வளர்ச்சியினால் விளையும் பயன் வெகுஜன மக்களுக்கு சென்றடைவதில்லை. சில உதாரணங்களை பார்ப்போம். 

மனிதவளம் இழக்கப்படுவதால், அரிய வாய்ப்புகளும் இழக்க நேரிடுகிறது 

நாட்டில் நடக்கும் தற்கொலைகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட சமீபத்திய தரவுகளில் குடும்பங்களின் நிதிநிலைமை எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

2021ம் ஆண்டு அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்ததற்கு பொருளாதார நெருக்கடியே காரணமாக அமைந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களில் 25.6% தினக்கூலிகளாக இருக்கின்றனர்; 12.3% சுயதொழில் செய்தவர்களாக இருக்கின்றனர்; 8.35% வேலைவாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர்; 6.6% பேர் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும் இருக்கின்றனர். இதை மொத்தமாகச் சேர்த்தால்(52.85%) தலைசுற்றும் அளவிற்கு அதிர்ச்சியளிக்கிறது. 

தற்கொலை செய்துக் கொள்பவர்களின் எண்ணிக்கைகூட 2015 முதல் தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது:

2015ல் 59,498 பேரும்; 2016ல் 61,223 பேரும்; 2017ல் 65,426 பேரும்; 2018ல் 65,584 பேரும்; 2019ல் 71,174 பேரும்; 2020ல் 81,327 பேரும்; 2021ல் 86,830 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2015 முதல் 2021 வரையிலான  ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்ளும் தினக்கூலிகளின் எண்ணிக்கை 2.2 லட்சத்தை தாண்டிவிட்டது. 1 லட்சத்திற்கும் மேலான சுயதொழில் செய்வோர் இந்த காலக்கட்டத்திற்குள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். 90,000 மேலான வேலைவாய்ப்பற்றவர்களும் இறந்துள்ளனர். இதே ஆண்டுகளில் 76,824 விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தற்கொலை செய்துகொண்டனர் (இது கடந்த காலங்களில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்ததது). 2017ம் ஆண்டு முதல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், விவசாயக் கூலிகளின் எண்ணிக்கையை விட தினக்கூலிகள், சுயதொழிலில் ஈடுபடுவோர் வேலைவாய்ப்பற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 

எத்தனை காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance policies) முழுத் தவணையும் செலுத்தப்படாமல் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குடும்பங்களின் சீர்குலைந்த நிதிநிலைமையை குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது. 2020-21 நிதியாண்டில் 72.35 லட்சம் காப்பீட்டுத் திட்டங்கள் இடையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலை 2021-22 ஆம் நிதியாண்டில் 69.78 லட்சமாகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் 2.3 கோடி என்பதாகவும் இருக்கிறது. முந்தைய நிதியாண்டோடு (2021-22) ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் 3.3 மடங்கிற்கும் அதிகமான காப்பீட்டுத் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா காலத்திற்கு முந்தைய நிலவரப்படி 2020-21 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் தற்போது 3.1 மடங்கிற்கும் அதிகமான காப்பீட்டுத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கு மத்தியில்தான் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. சட்டத்தில் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச கூலிக்கும் (நடப்பு நிதியாண்டில் ஒரு நாளைக்கே சராசரியாக 213 ரூபாய் என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது). குறைவான ஊதியம் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் கூட சேருபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையும் வேலையில்லாத திண்டாட்டத்தை படம்பிடித்துக்காட்டுகிறது. 2020-21 நிதியாண்டில் 7 கோடியே 88 லட்சம் பேர் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியுள்ளனர். நடப்பு நிதியாண்டில் குறிப்பாக ஏப்ரல்-1 முதல் செப்டம்பர் வரை பார்த்தோமானால் 10 கோடியே 62 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் 60% பேர் அதாவது 6 கோடியே 38 லட்சம் பேர் முந்தைய நிதியாண்டிலும் (2021-22) இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களாக இருக்கின்றனர். 

ஆகஸ்ட் 2022ல் வேலையின்மை விகிதம் தொடர்சியாக 8% என்ற நிலையிலேயே இருந்து வருவதாக இந்தியப் பொருளதாரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் மையத்தின் (CMIE) இணையதளம் தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு வீதம் அல்லது வேலை செய்வோரின் விகிதம் (WPR) குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் (15-24 வயதிற்குட்பட்டவர்கள்) தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருவதோடு மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்த நிலையிலே உள்ளது. 2017-2018 நிதியாண்டில் 20.9% என்றிருந்த வேலை செய்யும் இளைஞர்களின் விகிதம் நடப்பு நிதியாண்டில் (2022-23) 10.4% என்றிருந்த நிலைக்கு சரிந்துள்ளது. பெரும்பாலானவர்கள் நினைப்பது போல, இது ஏதோ அதிகளவிலான இளைஞர்கள் உயர்படிப்பிற்கு செல்ல விரும்புகிறார்கள்; வேலையில் சேர்வதை ஒத்திப்போட விரும்புகிறார்கள் என்பதானல் அல்ல; இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றுக்கொண்டு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 13.4% (2019-20) என்ற நிலையிலிருந்து 12.2% (2021-22) என்ற நிலைக்கு சரிந்துள்ளது. ஏனெனில் அவர்கள் எல்லோருக்குமான வேலை என்பது உருவாக்கப்படவில்லை என்றும் இந்தியா ஒரு இருண்ட காலத்தை எதிர்கொண்டு வருவதாக CMIE மையத்தைச் சேர்ந்த மகேஷ் வியாஸ் கூறுகிறார். 

உற்பத்தியில் தொழிலாளர்கள் பங்கெடுப்பு வீதம் (WPR) வீழ்ந்து வருகிறது. உழைப்பாளர்களின் கல்வித் தரமும் வீழ்ந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் முன்னேறிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை; திறன் மிகுத் தொழிலாளர்களையோ அல்லது செயல்திறமிக்க உற்பத்தியையோ உருவாக்கவில்லை என்பதையே இந்த வீழ்ச்சிநிலைகள் உணர்த்துகிறது. அவ்வகையில் பார்த்தால், உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்பது “வளர்ச்சியடைந்த” பொருளாதாரத்தையே உருவாக்கியுள்ளது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

இதுமட்டுமல்ல, இந்த ஆண்டில் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 62.5% மக்களுக்கு வழங்கிவரும் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்குவதை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 62.5% மக்களுக்கு குறைந்த விலையில் 35 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கி வந்தபோதிலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (2013)கீழ் கூடுதலாக இந்த 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்க வேண்டியுள்ளது. பெரும்பாலான மக்கள் இன்றளவும் கூட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை நம்பியே வாழ்கின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும். இன்னும் சரியாக சொல்வதென்றால், மக்களின் நல்வாழ்வை (தனிமனித / குடும்ப வருமானங்களின் அடிப்படையிலும், வேலைவாய்ப்பின் அடிப்படையிலும்) தெளிவாக வெளிக்காட்டக்கூடிய அளவீடுகளை கொண்டு வளர்ச்சியை கணக்கிடுவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை : Fortune India