ஒரே தேர்தல் - பல சிக்கல்கள்

கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகிற போதிலும், ஒரே தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என காவி கட்சி துடிக்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் இதற்கு போதுமான ஆதரவை பெறுவதென்பது சவாலான விசயமாக இருக்கும். - ஆனந்த் மிஷ்ரா, பிரன்ட்லைன்

ஒரே தேர்தல் -  பல சிக்கல்கள்

செப்.18,ல் தற்போதைய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ அவர்களிடம் ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையை அதன் தலைவரும், முன்னாள் குடியரசு தலைவருமான ராம்நாத் கோவிந்த் வழங்கினார். உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருந்தார்.

நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் சென்றாண்டு செப்டம்பர் மாதத்தில் உயர் மட்ட குழுவொன்று நரேந்திர மோடி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.  ஓராண்டு கழித்து, செப்டம்பர் 18ல், புதியதாக மோடி தலைமையில் அமைந்துள்ள கேபினட் அமைச்சரவை  உயர் மட்ட குழுவின் பரிந்துரைகளை, அதாவது இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தலாம் என்பதை ஏற்பதாக அறிவித்தது(முதற்கட்டமாக, சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது, இரண்டாம் கட்டமாக பொதுத் தேர்தல் நடந்து முடிந்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது). கடந்த ஓராண்டாக, பலதரப்பட்ட பிரிவினருடன் பற்பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, கருத்துக் கேட்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, ஒரே தேர்தல் முறையை கொண்டு வரும் விவகாரத்தில் அரசியல் கட்சிகளுடன் உடன்பாடு காண்பதற்காக பலமுறை கலந்தாலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பாஜகவின் தில்லி தலைமையகத்தில் இருந்துகொண்டு 2017ம் ஆண்டு தீபாவளி பரிசு என்ற பெயரில் முதல் முறையாக மோடியால் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது இருந்த அதே அளவிற்கான கருத்து வேறுபாடுகள் தற்போதும் நீடிக்கவே செய்கின்றன.

அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர், “சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள்” நடத்துவதற்கு உரிய வழிமுறை “உருவாக்கப்படும்” என்று 2014ல் நடந்த மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் முனபு பாஜக குறிப்பிட்டிருந்தது.

ஒரே தேர்தல் திட்டத்திற்கான எதிர்ப்புகள்

அரசாட்சியில் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமை பறிக்கப்படும், ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை தகர்க்கப்படுவது மட்டுமல்லாது கிடைக்கும் நன்மைகளைவிட பலமடங்கு பாராதூரமான நிர்வாகச் சிக்கல்கள் உருவாகும் என்று ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற ஆட்சி முறையிலிருந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுவதற்கான முதற்படியாக இத்திட்டம் அமைந்துவிடக்கூடும் என சிலர் அஞ்சுகின்றனர். இன்னும் சிலர், தேசிய கட்சிகளின் மேலாதிக்கத்திற்கு இத்திட்டம் வழிவகுப்பதோடு, மாநில கட்சிகளுக்கு மரண சாசனமாக அமையும் என்று கருதுகின்றனர்.

ஜூன் 2019ல், இந்தப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசாங்கம் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அச்சமயத்தில், காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி போன்ற முக்கிய எதிர்கட்சியினர் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் கூட்டணி கட்சியாக இருந்த ஒன்றுபட்ட சிவசேனா கட்சியும், தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துளள தெலுங்கு தேச கட்சியும்கூட புறக்கணித்திருந்தன. 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 21 கட்சிகள் மட்டுமே பங்கேற்றிருந்தன என்று மூத்த பாஜக தலைவரும், இராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூட்டம் முடிந்த பிறகு தெரிவித்திருந்தார்.

அநேகமாக குளிர்கால கூட்டத் தொடரில், ஒரே தேர்தல் திட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கு வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து கட்சிகளையும் உடன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இதற்கான பொறுப்பாளராக இருக்கும் ராஜ்நாத் சிங் செப்.22 அன்று தெரிவித்திருந்தார். தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பிகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலுள்ள எதிர்கட்சித் தலைவர்கள் ராஜ்நாத் சிங்கின் முயற்சிக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கூட்டாட்சி முறையை குழிதோண்டி புதைப்பதற்கான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தனர்.

கூட்டாட்சி முறையில்  ஏற்படும் பாதிப்புகள்

நாட்டின் கூட்டாட்சி முறையிலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்திலும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் கொண்டு வரப்போகும் முக்கியமான பாதிப்புகள் குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், சமூக அறிவியல் துறைகளுக்கான பிரிவில் அமைந்துள்ள, அரசியல் ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஹரிஷ் எஸ். வாங்கடே பிரன்ட்லைன் பத்திரிகையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.

“ஒரே தேர்தல் நடக்கும் போது நாடு தழுவிய பிரச்சனைகள் மட்டுமே அதிகம் விவாதிக்கப்பட்டு பிராந்திய அளவிலான பிரச்சனைகள் ஓரங்கட்டப் படும் நிலை உருவாகும் என்பதால் அந்தந்த மாநிலத்திற்கு உரிய பிரச்சனைகளை மீதான கவனம் குறைந்துவிடும். ஒடிசா, மத்திய பிரதேஷம், ஜார்கண்ட், வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் மாநில/பிராந்திய தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட சமூக குழுக்களின் பிரச்சனைகள் குறிப்பாக பழங்குடி மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசுவதுகூட இனி நாடு தழுவிய அளவில் ஒருமித்து செயல்படுவது என்ற பெயரில் நீர்த்துபோகச் செய்யப்படும். உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சில மாநிலங்களில் வழங்ககப்பட்டுள்ள தன்னாட்சி அதிகாரம்கூட நாட்டுப் பிரச்சனை என்ற போர்வையில் செல்லாக்காசாக்கப்டும்” என்றார் ஹரிஷ் எஸ். வாங்கடே.

அதேபோல, மிகப்பெரிய, பலதரப்பட்ட வேற்றுமைகளை கொண்ட நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும்போது ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் எழும் என்கிறார் வாங்கடே. “வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, பாதுகாப்பாக தேர்தல் நடத்தி முடிப்பது, சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் முழுவீச்சில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இதுமட்டுமல்ல, இதில் பல்வேறு சட்டச் சிக்கல்களும், அரசியலமைப்பிற்கு எதிரான பிரச்சனைகளும் உருவாகும். ஏதேனும் ஒரு மாநிலத்தின் ஆட்சி இடையிலேயே கலைக்கப்பட்டால் என்ன நடக்கும்? தேசிய அளவில் ஒரே தேர்தல் நடத்தும் வரை குறிப்பிட்ட மாநிலத்தின் ஆட்சி நீட்டிக்கப்படுமா அல்லது எஞ்சிய ஆட்சிக்காலம் ஜனநாயக முறைக்கு விரோதமாக பறிக்கப்படுமா?” என்கிறார் வாங்கடே.

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சிக்கல்

தற்சமயத்தில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் சட்ட மன்றத்திற்கான தேர்தல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டுமென்கிற போது ஆட்சிகாலம் எஞ்சியிருக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டியிருக்கும். ஆளும் கட்சி தானாக முன்வந்து அரசாங்கத்தை கலைப்பதற்கு ஆளுநரிடம் பரிந்துரை செய்து, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாலோ அல்லது அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆட்சி நடக்கிறதென்ற பெயரில் மத்திய அரசாங்கம் வழங்கிய பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவதன் மூலமாகவோத்தான் சட்டமன்றங்களை கலைக்க முடியும். ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர வேண்டுமெனில் குறைச்தபட்சம் அரசியலமைப்பில் உள்ள ஐந்து சரத்துகளை அதாவது சரத்து 83, 85, 172, 174, 356 ஆகியவற்றை திருத்த வேண்டியிருக்கும்.  மாநில சட்ட மன்றங்களை கலைப்பது பற்றி சரத்து-174 விளக்குகிறது. மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது பற்றி சரத்து 356 பேசுகிறது. குறைந்தபட்சம் செம்பாதி மாநிலங்களின் சட்டப் பேரவையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டியிருக்கும் என்று 2018ல் ஒரே தேர்தல் திட்டம் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் வரைவறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்தால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் விரயமாவது சேமிக்கப்படும், அதை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறியதை கேட்டு எதிர்கட்சியினர் மயங்கவில்லை என்றே தெரிகிறது.

ஒரே தேர்தல் திட்டமெல்லாம் ஜனநாயக நாட்டிற்கு ஒத்து வராது, தேர்தல்களுக்கான தேவை எழுகிற போது அவசியம் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களும், இடதுசாரி கட்சியினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் பேசி வருகின்றனர்.

பாஜகவிற்கான ஆதரவு

இருந்தபோதிலும், தெலுங்கு தேச கட்சி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சி, பிறகு பிகாரில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளையும்(ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி–ராம் விலாஸ், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா–மதச்சார்பற்ற) ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவாக மாற்றியுள்ளது பாஜக. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இத்திட்டத்தை ஏற்கும் நிலைக்கு வந்துள்ளது.

இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது அவ்வளவு எளிதல்ல. மொத்த அவை உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையும், அவையில் பங்கேற்று வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறையாத பெரும்பான்மையினரின் ஆதரவும் கிடைத்தால் மட்டுமே எந்தவொரு அரசியலமைப்பு சரத்துகளிலும் திருத்தங்களை கொண்டு வரமுடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் 293 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், மக்களவையில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை அதாவது 362 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத 69 உறுப்பினர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு தேவைப்படும்; நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பங்கு பெறாமல் வெளிநடப்பு செய்ய வைக்க வேண்டும் அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நட்பு பாராட்டும் சக்திகளை அணிதிரட்ட வேண்டும் என்பதெல்லாம் சாதாரண விசயமல்ல.

‘அடிப்படையிலேயே மிக ஆபத்தான திட்டம்’

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தில் பெரிதும் முக்கியத்துவமற்ற சில நன்மைகள் இருக்கலாம், இந்தியச் சூழலில் இத்திட்டம் கணிசமான பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு, “அடிப்படையிலேயே மிக ஆபத்தான” திட்டமாக இருக்கிறது என்று முன்னாள் தலைமை தேர்தல ஆணையர் எஸ்.ஒ. குரோசி பிரன்ட்லைன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

“இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கே உரித்தான அரசியல் பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்தால் கூட்டாட்சி உரிமை கடுமையாக பாதிக்கப்படும். சில எம்.எல்.ஏ.க்கள் கட்சி விட்டு கட்சி தாவும் போது பெரும்பான்மையை இழக்கும் நிலை ஒரு மாநிலத்தில் உருவாகும் போது என்ன செய்வீர்கள்?  இதுபோன்ற சூழ்நிலைமைகளில் ஒரே தேர்தல் திட்டத்தை எப்படி தொடர்ந்து செயல்படுத்துவீர்கள்?” என்கிறார் குரோசி.

மேலும் அவர் கூறுகிறார்: “முதலில், மக்களவை ஐந்தாண்டு காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்? இருக்கிற எல்லா சட்டமன்றங்களையும் கலைத்துவிடுவோமா? கோட்பாட்டளவிலும் சரி, நடைமுறையிலும் சரி, ஜனநாயக முறைக்கு ஒத்துவராது என்பதை நன்றாகவே புரிந்துகொள்ள முடியும்.”

சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து முடிந்த 100 நாள்களுக்குள் தனியாக உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவது இத்திட்டத்தின் சாராம்சத்தையே கேலிக்கூத்தாக்குகிறது; இது மட்டுமல்லாமல் உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 லட்ச பிரநிதிகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோசி. “இதேபோல், இத்தேர்தலை நடத்துவதற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதால் கடுமையான நிதிச் சிக்கலும், நடைமுறைச் சிக்கலும் உருவாகும்,” என்கிறார் குரோசி.

அடிக்கடி தேர்தல் நடத்துவதனால் அரசியல்வாதிகளை அதிகம் கேள்வி கேட்க முடியும், அடிமட்ட அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும், பிரச்சனைகளை உள்ளூர் அளவில், பிராந்திய அளவில், தேசிய அளவில் என்று பிரித்து பார்த்து தீர்வு காண முடியும் என்பது குரோசியின் கருத்தாக இருக்கிறது. “ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு பதிலாக, பணநாயகப் பிரச்சனையை தீர்க்கலாம், வேண்டுமென்றே நீண்ட காலத்திற்கு நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரங்களின் கால அளவை குறைக்கலாம்,” என்கிறார் குரோசி.

ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள்கூட பிரச்சனைக்குரியதாகத்தான் இருக்கிறது. ஏனெனில், முன்னாள், இன்னாள் தேர்தல் ஆணையர்கள் எவரும் இடம்பெறவில்லை; பிராந்திய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர்களே இவர்கள்தான். இதுபோன்ற பெரிய மாற்றத்தை கொண்டு வருகிற போது இவர்கள் அக்குழுவில் இருந்திருந்தால்தான் உகந்த பரிந்துரைகளை வழங்கியிருக்க முடியும்.

எதிர்கட்சிகள் மத்தியிலும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலிருந்தும்கூட கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்த போதிலும், இவை எதுவுமே பாஜகவின் ஒரே தேர்தல் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அரசாங்கத்தின் செலவினங்களை குறைப்பதற்காக, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தும் முறையை கொண்டு வருவோம் என்று 2019 ஆண்டு வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இருந்தபோதிலும், ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்ட குழு அமைப்பதற்கே நான்காண்டுகள் பாஜகவிற்கு தேவைப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி உட்பட 15 கட்சிகள் இந்தக் குழு அமைப்பதற்கேகூட கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். 2024ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நிச்சயமாக ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும் என மீண்டும் வாக்குறுதியளிப்பதாக குறிப்பிட்டிருந்ததோடு, “கோவிந்த் கமிட்டி வழங்கியுள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவோம்” என்றும் சேர்த்துக் கூறப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக பிரதமராகியிருக்கும் மோடி, நாட்டின் முனனேற்றத்திற்காக “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் கனவுத் திட்டத்தை நனவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றினார். அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக மாறி வருகிறது என்றுகூட பேசியிருக்கிறார்.

முந்தைய குழுக்கள்

ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரலாம் என்று கோவிந்த் குழு மட்டும் பரிந்துரைக்கவில்லை. இரண்டு கட்டமாக ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று 2015ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்த்தல், சட்டம் மற்றும் நீதி துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 79–வது அறிக்கையிலும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

அதற்கு முன்னதாகவே, 1999ம் ஆண்டு பல்வேறு தேர்தல் விதிகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்த 15–வது இந்திய சட்ட ஆணையத்தின் 170வது அறிக்கையில் மாறிமாறி தொடர்ச்சியாக தேர்தல் நடத்த வேண்டியதில்லை என்று வலுவாக எடுத்துக் கூறப்பட்டதோடு, 1951 முதல் 1967 வரையிலான காலக்கட்டத்தில் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் எப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடந்ததோ அதேபான்று ஒரே தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தது.

ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு முன்பாக சில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால்தான் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தனித் தனியாக தேர்தல்களை நடத்த வேண்டிய நிலை உருவானது. 1971ல், காங்கிரஸ் கட்சி உடைவதற்கு முன்பாகவே மக்களவைத் தேர்தலை நடத்தியதும்கூட தனித் தனி தேர்தல்கள் நடப்பதற்கு வழிவகுத்தது.

1999ல், பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையமும்கூட ஒரே தேர்தல் நடத்துவதற்கு ஆதரவளித்தது. 2016ல் அப்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியும் ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்று கூறியதோடு, இந்தியத் தேர்தல் ஆணையம் இதை செயல்படுத்துவதற்கு ஆக வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் வழங்கினார். 2017ல், அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஆட்சி நடத்துவதில் தடைகள் உருவாகிறது என்பதால் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி(NITI) ஆயோக் அமைப்பும் ஆலோசனை கூறியிருந்தது.

2018ல், இத்திட்டத்திற்காக சட்ட ஆணையம் சார்பில் இரண்டு நாள் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ஷிரோமனி அகாலி தள், அனைத்திந்திய அதிமுக,  சமாஜ்வாதி கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(தற்போது பாரத ராஷ்டிர சமிதி) ஆகிய  நான்கு கட்சிகள் மட்டுமே ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவளித்தன. திரினாமூல் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திமுக, தெலுங்கு தேசக் கட்சி, சிபிஐ, சிபிஎம், பார்வேர்ட் பிளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவின் கூட்டணியில் இருந்த கோவா பார்வேர்ட் கட்சி உட்பட 9 கட்சிகள் ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. “ஜனநாயக விரோத”, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தனர். அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரான நடவடிக்கை என்று சிபிஎம் கட்சி விமர்சித்திருந்தது.

2022ல், ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையமும் தயாராக இருப்பதாக அறிவித்தது, ஆனால், அதற்கு அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டுயது அவசியம் என்று கூறியிருந்தது.

இந்தாண்டு, ஏப்ரல் 19 முதல் ஜீன் 1 வரை ஏழு கட்டங்களாக 44 நாள்கள் கால அளவில் மக்களவை தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. 1951–52ல் நடத்தப்பட்ட தேர்தலுக்கு அடுத்தபடியாக அதிக கால அளவில் நடந்த இரண்டாவது தேர்தலாக இது அமைந்துள்ளது.

அடுத்தபடியாக, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்ட்ரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு கட்டமாக நடந்தது. அதிலும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்தது.

இவையனைத்திலுமே, நடைமுறைச் சிக்கல்கள், போதுமான பாதுகாப்பு பணியாளர்கள் இல்லாமை, நிர்வாகச் சிக்கல்கள் இருந்ததென்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இதை வைத்து பார்க்கும்போது, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென பாஜக துடிப்பதற்கு நடைமுறைத் தேவையைவிட கொள்கை ரீதியான காரணங்களே அதிகம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. 281 பக்கங்கள் கொண்டு ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர் மட்ட குழு வழங்கிய அறிக்கையில் ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு “சட்டப்படி ஏற்கத்தக்க வழிமுறைகளை” அரசாங்கம் உருவாக்க வேண்டுமென பரிந்துரைத்திருந்தது. 2029ம் ஆண்டு முதல் ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என கோவிந்த் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், சில வல்லுநர்கள் 2034ல் நடக்கும் மக்களவை தேர்தலின்போது மட்டுமே இத்திட்டம் சாத்தியப்படும் என்கிறார்கள். 1999 மற்றும் 2015ல் ஒரே தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்த அறிக்கைகளையும் இக்குழு மேற்கோள் காட்டியிருந்தது.

இதற்காக பணிக்குழு ஒன்றை தனியாக அமைக்கும்படி கோவிந்த் குழு கூறிய நிலையில், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் என அனைவரிடமும் கலந்துபேசி ஒத்த கருத்தை உருவாக்கும் பொறுப்பை ராஜ்நாத் சிங், கிரன் ரிஜ்ஜிஜூ, அர்ஜூன் மேக்வால் ஆகிய மூன்று மூத்த அமைச்சர்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: 

https://frontline.thehindu.com/politics/one-nation-one-election-analysis-bjp-plan-opposition-ram-nath-kovind-panel-report/article68689574.ece