தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உயர்கல்வி உரிமையை பறிக்கும் சங்பரிவாரங்கள்

விஜயன் (தமிழில்)

தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உயர்கல்வி உரிமையை பறிக்கும் சங்பரிவாரங்கள்

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்வி உரிமையை பறிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

கலபுர்கி அருகே கடகஞ்சியில் உள்ள கர்நாடகா மத்திய பல்கலைக்கழகத்தை நோக்கி புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

முற்போக்காளரும், சமூக செயல்பாட்டளருமான ஆர்.கே ஹட்கி வலதுசாரி சித்தாந்தத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ்) அதன் முன்னணி அமைப்புகளும் கல்வி நிறுவனங்களை, குறிப்பாக உயர்நிலை மையங்களை சீரழிப்பதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில், தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும், சிறுபான்மையின மக்கள் என எவரும் உயர்கல்வி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இபோன்ற சீர்குலைவு வேலைகளைச் செய்து வருககிறார்கள்.

“இந்தியாவில் சுமார் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. எல்லா நிறுவனங்களிலும் அறிவியல் சிந்தனையை மழுங்கடிப்பதோடு, மூடநம்பிக்கை மற்றும் பிற்போக்கு சிந்தனையையும் மாணவர்களிடையே ஆர்எஸ்எஸ் புகுத்தி வருகிறது. ஏனெனில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் உயர்கல்வி உரிமையை பறிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளுக்கு எப்படி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வியைப் பெற்ற டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலையும்  இதற்கு எதிராக திருப்பிக் காட்டினார். தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்லோருமே உயர்கல்வி பெற்று, சமூக கட்டமைப்பின் அடிமட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மீது ஒரு சில உயரடுக்கில் உள்ள, சலுகை பெற்ற வர்க்கத்தினரின் மேலாதிக்கத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்பினால் என்ன நடக்கும் என்றே அவர்கள் பயப்படுகிறார்கள்”என்றார் ஹட்கி.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணன் மற்றும் பேராசிரியர்களாக பணியாற்றும் பசவராஜ் டோனூர் மற்றும் ரோஹினாக்ஷா ஷிர்லாலு ஆகியோரைக் கண்டித்தும், பல்கலைக்கழக வளாகத்தை சாதிவாதம், மதவாதம் உள்ளிட்ட வகுப்குவாத அரசியலுக்கான இடமாக மாற்றும் முயற்சிகளைக் கண்டித்தும் புதன்கிழமை கலபுராகி மாவட்டத்தில் கடகஞ்சி அருகே உள்ள கர்நாடகா மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களிடம் பேராசிரியர் ஹட்கி உரையாற்றினார்.

“பல்கலைக்கழகத்தை காவிமயமாக்க உங்கள் பின்னால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இருக்கலாம். ஆனால், உங்களை எதிர்த்துப் போராடும் மக்களின் பின்னால் புத்தர், பசவண்ணா, அம்பேத்கர் போன்ற உன்னதமான தலைவர்கள் வழிகாட்டியாக உள்ளனர். மக்களைப் பிளவுபடுத்தி, பெரும்பான்மையினரின் மேல் ஒரு சிலரின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு மனுஸ்மிருதியை நீங்கள் கையிலெடுக்கலாம். ஆனால், மக்களை ஒன்றிணைக்கவும், பாகுபாடுகளுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராக போராடவும் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் எங்களிடம் உள்ளது,” என்றார்.

அறிஞரும் செயல்பாட்டாளுருமான மீனாட்சி பாலி, கல்யாண கர்நாடகாவில் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் பிற்போக்கான வகுப்புவாத சித்தாந்தத்தை பரப்புவதற்கு எதிராக பேராசிரியர் சத்யநாராயணாவை எச்சரித்ததோடு, கல்யாண கர்நாடகா என்பது பன்முக கலாச்சார பாரம்பரியம் கொண்ட பல்வேறு சமூகங்களின் சகோதர சகவாழ்வுக்கு பெயர் பெற்ற பகுதி என்பதையும் அழுத்தமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.

“இது மோடியின் குஜராத்தோ அல்லது யோகியின் உத்தரப்பிரதேசமோ அல்ல. இது பசவண்ணாவின் மண். பாகுபாட்டை எதிர்த்துப் போராடி, மனிதர்களின் ஒற்றுமைக்காக, சமத்துவத்தை முன்னிறுத்திய ஷரணர்கள் மற்றும் சூஃபி துறவிகளின் பூமி இது. உங்கள் பிரிவினைவாத சித்தாந்தம் இங்கு வேலை செய்யாது. மதவெறியை பரப்பவும், அமைதிப் பூங்காவாக இருக்கும் கல்யாண கர்நாடகாவை வன்முறைக் காடாக மாற்றுவதற்கு நாங்கள் உங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், ”என்று அவர் கூறினார்.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/national/karnataka/rss-is-destroying-universities-to-deprive-dalits-and-backward-communities-of-higher-education/article67408345.ece