உத்திர பிரதேச வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கும் வேளையில் அமைச்சரின் திமிர் பேச்சு

பாதங்கள் தூய்மை செய்ய வாசலிற்கே வந்த கங்கை - வெள்ளத்தில் தத்தளிக்கும் உ.பி.யில் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

உத்திர பிரதேச வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கும் வேளையில் அமைச்சரின் திமிர் பேச்சு

லக்னோவின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் சஞ்சய் நிஷாத்தின் காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதில், பாதங்களைத் தூய்மை செய்வதற்கு கங்கை நதியே வீட்டு வாசலிற்கு வந்துள்ளதாக அவர் கூறிய கருத்து சர்ச்சையானது.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவரும் நிலையில், மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், லக்னோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர், கங்கை நதியின் வெள்ள நீர் **'வீட்டு வாசலுக்கே வந்து பாதங்களைத் தூய்மை செய்வதாக'**க் குறிப்பிட்ட கருத்து, சர்ச்சையானது. மக்களின் துயரங்களை சற்றும் கண்டுகொள்ளத இத்தகைய பொறுப்பற்ற பேச்சு, சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சிகளிடையே பெரும் கண்டனத்தை எதிர்கொண்டது.

லக்னோவின் கான்பூர் தேஹாத் பகுதியில் அமைச்சர் நிஷாத் மேற்கொண்ட ஆய்வு குறித்த காணொளி வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது. அக்காணொளியில், அவரைச் சுற்றி குழுவாக சிலர் நிற்கிறார்கள், அவர்களிலொருவர் வீட்டுக்குள் வெள்ள நீர் எந்தளவிற்கு புகுந்துள்ளது என்பது பற்றி விவரிப்பதைக் காண முடிகிறது.

அப்போது நிஷாத், "கங்கை அன்னை உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து உங்கள் பாதங்களைத் தூய்மை செய்கிறாள்; இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்" என்று கூறியிருந்தார்.

நிஷாத்தின் இக்கருத்து, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து உடனடியாகக் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது. அவர்கள் இக்காணொளியை X தளத்தில் பகிர்ந்து, "மாண்புமிகு அமைச்சர் லக்னோவின் ஆடம்பர பகுதியில் வசித்து வருகிறார்; அங்கு கங்கை அன்னையை எங்கேயும் காண முடியவில்லை. அவரது வாசற்படியை ஒரு சாக்கடை நீர் கூட எட்டுவதில்லை. அப்படியானால், மாண்புமிகு அமைச்சர் நேராக... சொர்க்கத்திற்கு... செல்லத் தேவையில்லையா?" என்று கேலியாக சாடியிருந்தனர்.

இக்காணொளி வைரலாகப் பரவிய பிறகு,  தான் இக்கருத்தை நகைச்சுவையாகக் கூறியதாக விளக்கமளித்திருக்கிறார். "நான் நிஷாத் சாதி மக்கள் வாழும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியொன்றைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு அவர்களுடன் உரையாடும்போது, மோட்சத்தை வேண்டிப் பலரும் வெகு தொலைவு கடந்து கங்கையில் நீராட வருகின்றனர்; ஆனால் இங்கோ, கங்கை அன்னை அவர்களது வாசலிற்கே வந்திருக்கிறாள் என்று நான் கூறினேன்," என்று அமைச்சர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விளக்கமளித்திருக்கிறார்.

"நாங்கள், நிஷாத் சாதியினர், ஆறுகளைப் புனிதமாகப் போற்றி வணங்குகிறோம்; அவை எங்கள் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. ஆகவே, இக்கருத்துக்குப் வேறொரு அர்த்தம் இருக்கிறது," என்று அமைச்சர் மேலும் விளக்கியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைப் போலவே, சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்வேந்திர பிக்ரம் சிங்கும் அமைச்சர் நிஷாத்தின் கருத்துக்களுக்கு எதிராக தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். "அவருக்குக் கள யதார்த்தம் பற்றியோ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலை குறித்தோ எள்ளளவும் புரிதல் இல்லை. மாநில அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறிவிட்டது; அதன் அமைச்சர்களோ வெற்று விளம்பரங்களுக்காக மட்டுமே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்; வெள்ளத்தால் மக்கள் தங்கள் இல்லங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து செய்வதறியாது தவிக்கும் இப்பேரிடர் சூழலில், இதுபோன்ற பேச்சுக்கள், உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கள நிலவரத்திலிருந்து எந்த அளவுக்குத் விலகி நிற்கின்றனர் என்பதைத் தெள்ளத்தெளிவாகப் அம்பலப்படுத்துகின்றன," என்று பிடிஐ செய்தி நிறுவனம் பிக்ரம் சிங் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.

லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருமளவு நீர் தேக்கத்தாலும், வெள்ளப் பெருக்காலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- செந்தாரகை (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.hindustantimes.com/india-news/ganga-at-your-door-to-clean-feet-up-ministers-remark-amid-flooding-sparks-row-101754467921807.html