எஸ்.ஐ.ஆர். (SIR) இருட்டடிப்பு: மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் பீதியும் ஆட்சியாளர்களின் பாசாங்குத்தனமும் - ஃப்ரண்ட்லைன் கட்டுரைகள்

தமிழில்: வெண்பா

எஸ்.ஐ.ஆர். (SIR) இருட்டடிப்பு: மக்களிடையே  ஏற்படுத்தியிருக்கும் பீதியும் ஆட்சியாளர்களின் பாசாங்குத்தனமும் - ஃப்ரண்ட்லைன் கட்டுரைகள்

1

எஸ்.ஐ.ஆர். (SIR) இருட்டடிப்பு

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தயாராகி வரும் வேளையில், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளர் பட்டியல்களின் சர்ச்சைக்குரிய சிறப்புத் தீவிர திருத்தம் (SIR), சிக்கலகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தேர்தல் போட்டியானது மாநில எல்லைகளைத் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது, ஏனெனில் SIR-ஐ நாடு முழுவதும் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் 24 அன்று, மாநிலத்தின் SIR-ஐ ECI அறிவித்ததிலிருந்து, பீகார் அரசியல் கொந்தளிப்பைக் கண்டு வருகிறது. மக்கள் தாங்கள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் என்பதை நிரூபிக்க, படிவங்களை நிரப்பவும், சமர்ப்பிக்கவும், தேவையான ஆவணங்களைப் பெறவும் அவசரப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய வழக்கமான கூட்டங்கள், ரோட்ஷோக்கள், ஆட்சியிலிருக்கும் அரசின் மீதான அதிருப்திகள், புதிய புதிய வாக்குறுதிகள் ஆகியவை கவனம் பெறுவதற்கு மாறாக, SIR தேர்தலுக்கு முந்தைய அரசியல் உரையாடலில் ஆதிக்கம் செலுத்தியது. செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டதோடு இந்த செயல்முறை நிறைவடைந்தது. இருப்பினும், இது தொடர்ந்து தேர்தலின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் இந்தப் பட்டியலைச் சுத்திகரிப்பதில் இது வெற்றி பெற்றதா? இந்தச் செயல்பாட்டின் அடிப்படைக் குறிக்கோள்—தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளாரா, தகுதியற்ற ஒவ்வொரு வாக்காளரும் நீக்கப்பட்டுள்ளாரா—என்பது அடையப்பட்டதா? என்பதில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

வாக்காளர்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் முறைகள், தேவையான ஆவணங்கள் இல்லாத ஏழைகள், ஒதுக்கட்டப்பட்டவர்களின் வாக்களிக்கும் உரிமையை இது பறிக்குமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. SIR என்பது பெரிய அளவில் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் ஒரு முயற்சி என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. மாற்றப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் (குறிப்பாக போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளில்) என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் நிலவுகிறது.

'காணாமல் போன' வாக்காளர்கள்

ஜூன் 24 அன்று, SIR அறிவிக்கப்பட்ட நாளில், பீகாரில் 7.89 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 7.24 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த பட்டியலில் தேவையான ஆவணங்களுடனோ அல்லது ஆவணங்கள் இல்லாமலோ, படிவங்களைச் சமர்ப்பித்த வாக்காளர்கள் இருந்தனர்; வரைவுப் பட்டியலில் உள்ள உள்ளீடுகள் தொடர்பான உரிமைகோரல்களும் ஆட்சேபனைகளும் செப்டம்பர் 1-க்குள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.

ECI-இன் கூற்றுப்படி, வரைவுப் பட்டியலிலிருந்து விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களில், 22 லட்சம் பேர் இறந்தவர்கள்; 7 லட்சம் பேர் வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள்; மற்றும் 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டறியப்படாதவர்கள். இறுதியில், 3.66 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர், மேலும் 21.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தச் சேர்க்கைகளில் 14 லட்சம் முதல் முறை வாக்காளர்களும் அடங்குவர். செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஜூன் 24 அன்று இருந்த வாக்காளர் பட்டியலுக்கும் இறுதிப் பட்டியலுக்கும் இடையே 47 லட்சம் வாக்காளர் வேறுபாடு உள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அக்டோபர் 5 அன்று பாட்னாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், SIR மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இந்தச் செயல்பாடு 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலை “சுத்திகரித்துள்ளது” என்று அவர் கூறினார். இருப்பினும், பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் (நவம்பர் 6 மற்றும் 11) அறிவிக்கப்பட்ட மறுநாளான அக்டோபர் 7 அன்று, உச்ச நீதிமன்றம் ECI-யிடம், “வெளிப்படைத்தன்மை மற்றும் தகவலுக்கான அணுகல் ஆகியவை வெளிப்படையான ஜனநாயகத்தின் அடையாளங்கள்” என்று நினைவூட்டியது. வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ECI ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று SIR-ஐ எதிர்த்த மனுதாரர்கள் எழுப்பிய கேள்விகளிலிருந்து, விசாரணையின் போது இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

வெளிப்படைத்தன்மை இல்லாமை

SIR செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்காக ECI விமர்சிக்கப்பட்டுள்ளது. வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், அந்தத் தகவலைப் பகிரங்கப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் ECI-க்கு உத்தரவிட்ட பின்னரே வெளியிடப்பட்டன. SIR-க்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது எழுத்துப்பூர்வ மனுவில், தற்போது பீகாரின் வயது வந்தோர் மக்கள்தொகையின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 8.22 கோடி என இருக்கும்போது, இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

“இதனால், 80 லட்சம் பேர், அதாவது பீகாரின் மொத்த வயது வந்தோர் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளனர். வயது வந்தோர் மக்கள்தொகைக்கும் வாக்காளர்களுக்கும் உள்ள விகிதத்தில் இத்தகைய மோசமான குறைபாடு இந்தியாவுக்கும் பீகாருக்கும் சாதனையாகும்” என்று பூஷன் கூறினார். மேலும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் கடுமையான சரிவை பூஷன் சுட்டிக் காட்டினார். “SIR-க்குப் பிறகு, செப்டம்பர் 2025 இல் பீகாரின் பாலின விகிதம் 934 ஆக இருக்கும்போது, இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள பாலின விகிதம் கடுமையாகச் சரிந்து 892 ஆக உள்ளது. இது 17 லட்சம் பெண்கள் காணாமலாக்கப்பட்டதைக் குறிக்கிறது” என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

முஸ்லிம்கள் அராஜகமான முறையில் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். “பெயர் அறிதல் மென்பொருளின் அடிப்படையிலான எங்கள் பகுப்பாய்வு, வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் முஸ்லிம்கள் 25 சதவீதமாகவும், இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களில் 34 சதவீதமாகவும் இருந்ததைக் காட்டுகிறது.... இந்தச் நியாயமற்ற நீக்கம் சுமார் 6 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களை குறைத்துள்ளது” என்றும் அவர் கூறினார். அக்டோபர் 16 அன்று, ECI தனது பதிலில், மனுதாரரின் நோக்கம் “பீகார் மாநிலத்திற்கான SIR செயல்பாட்டையும், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பையும் சீர்குலைப்பதுடன், இந்தியாவின் பிற மாநிலங்களில் SIR நடத்தப்படுவதைத் தடுப்பதாகும்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் (affidavit), முஸ்லிம்கள் பட்டியலில் இருந்து நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டையும் ECI நிராகரித்தது. “இக்குற்றச்சாட்டு பெயர் அறிதல் மென்பொருளின் அடிப்படையிலானது, அதன் உண்மைத் தன்மை, துல்லியம் அல்லது பொருத்தப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. இந்த மதவாத பார்வை கண்டிக்கத்தக்கது,” என்று அது கூறியது.

இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதைக் கட்டுப்படுத்த பல காரணிகள் இருந்தன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்: நீதிமன்றத்தின் ஆய்வு மற்றும் அது வழங்கிய வழிமுறைகள்; சமூக அமைப்புகளால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள்; அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்ட அழுத்தம்; ஊடக அறிக்கை ஆகியவை ஆகும். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் முன்னணி மனுதாரராக உள்ள 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின்' தலைவரான மேஜர் ஜெனரல் அனில் வர்மா (ஓய்வு) கூறுகையில்: “உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாகவே ஆதார் SIR ஆவணங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது, மேலும் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை ஆணையம் பொதுவெளியில் வெளியிட்டது,” என்று தெரிவித்தார்.

பீகாரில் SIR நடத்துவது தொடர்பாக ECI தனது சொந்த விதிமுறைகளை கூட பின்பற்றவில்லை என்று வர்மா கூறினார். இதற்கு முன் நடத்தப்பட்ட SIR செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு இணக்கமானவையாக இருந்தன, ஆனால் பீகார் SIR வாக்காளர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார். குடியுரிமைச் சோதனையினால் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை ECI வெளியிடவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். “SIR-ஐ நடத்துவதற்கு ஆணையம் கூறிய அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், எத்தனை குடியுரிமை இல்லாதவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருக்கலாம் என்று மதிப்பீடுகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

SIR-இன் அரசியல் தாக்கம்

SIR குறித்த எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அரசியல் தாக்கத்தை வெளிப்படுத்தியது. SIR குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக ECI நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்றது, இது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் தனது வாக்காளர் ஆதார் யாத்திரையை (வாக்காளர் உரிமைகள் நடைப்பயணம்) தொடங்கிய நாள் ஆகும். இந்த யாத்திரையின் போது, மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதே SIR-இன் உண்மையான நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். மாநில எதிர்க்கட்சிகளும், SIR-ஐயும், வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்குவதற்கான ஆளும் தரப்பின் நடவடிக்கையையும் இணைத்துப் பார்க்கின்றன. இதன்மூலம் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களும் நலத்திட்டங்களிலிருந்து இறுதியில் விலக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நீலாஞ்சன் முகர்ஜி கூறுகையில், ஆதாரபூர்வமான தரவுகள் இல்லாத நிலையில் வாக்காளர் உணர்வின் மீது SIR-இன் தாக்கத்தை மதிப்பிடுவது கடினம் என்றாலும், பீகார் மக்கள், குறிப்பாக, தங்கள் வாக்களிக்கும் உரிமையின் மீது தீவிரமாக உரிமை கொண்டாடுகிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரியும். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்காத கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள பெயர்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி SIR அல்ல என்று மக்களை நம்பவைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்த முறை தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்குப் பிறகுதான் வாக்களிப்பு நடைபெறும். பண்டிகைக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பி, சில நாட்கள் தங்கியிருப்பார்கள் என்று அறியப்படுகிறது. இவர்களில் சிலரது பெயர்கள் பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். தேர்தல் நடைமுறை சிதைக்கப்பட்டுள்ளது என்றும், ‘வாக்குத் திருட்டு’ (vote chori) நடந்துள்ளது (இது ஒருவகை கவர்ச்சியான சொற்றொடர்தான் என்றாலும்) என்றும் தகவல் பரவினால் மக்கள் தேர்தலின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவார்கள்” என்றும் அவர் கூறினார். 

அரசியல் வியூகவாதியும் தேர்தல் ஆய்வாளருமான அமிதாப் திவாரி கூறுகையில்: “கடந்த சில மாதங்களாக SIR ஒரு பெரிய பிரச்சினையாக மாறியதால், இது மகாகத்பந்தன் (மாபெரும் கூட்டணி)-இன் வாக்கு வங்கியை பலப்படுத்தியுள்ளது. மேலும், ‘ஊடுருவல்காரர்களை’ (ghuspaithiyas) பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக NDA அதன் வாக்காளர்களிடையே கதையைப் பரப்ப முயற்சித்ததால், NDA-இன் வாக்கு வங்கியையும் பலப்படுத்தியுள்ளது,” என்றார். இதுவே தேர்தலில் SIR ஏற்படுத்திய மிக முக்கியமான தாக்கம் என்று அவர் கூறினார். கவனம் இப்போது “அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள்” பக்கம் மீண்டும் திரும்பிவிட்டது என்றும் அவர் கூறினார்.

கடுமையான போட்டிகள்

பொதுவாகவே பீகாரின் பல தொகுதிகளில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன. 2020 சட்டமன்றத் தேர்தலில், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முடிவு 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டது. 52 தொகுதிகளில், வெற்றி வித்தியாசம் 5,000 வாக்குகளுக்குக் குறைவாக இருந்தது. NDA மற்றும் மகாகத்பந்தன் இடையே மொத்த வாக்கு வித்தியாசமே வெறும் 12,768 வாக்குகள்தான் - இது மொத்த வாக்குகளில் 0.03 சதவீதம் மட்டுமே. சேர்ப்புகளோ அல்லது நீக்கங்களோ களத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சிகள் கவலை கொண்டுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியலில் இருந்து 1 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டாலும் கூட, 35 தொகுதிகளின் முடிவுகள் பாதிக்கப்படலாம் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், வரவிருக்கும் தேர்தலில் SIR-இன் தாக்கத்தை அறிய விரும்பினால், வாக்காளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுவதற்கு அடிப்படை ஆண்டாக முந்தைய சட்டமன்றத் தேர்தல் நடந்த 2020-ஐ எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, 2025-ஐ அல்ல என்று திவாரி சுட்டிக் காட்டினார். அவர் கூறியதாவது: “அக்டோபர் 2020 இல், பீகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.36 கோடியாக இருந்தது. எனவே, இந்த எண்ணிக்கை உண்மையில் 7.42 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது ஒரு சிறிய அதிகரிப்புதான்,” என்று திவாரி கூறினார். நாடு முழுவதும் இந்தச் செயல்பாட்டைச் செயல்படுத்த ECI தயாராகி வரும் நிலையில், பீகாரில் SIR-இன் போது அது கற்றுக்கொண்ட பாடங்களுக்கு கவனம் செலுத்துவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

அக்டோபர் 9 அன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி சூர்யா காந்த் வாய்மொழியாகப் பதிவு செய்தபோது, உச்ச நீதிமன்றமும் இதையே கூறியது: “நீங்கள் அகில இந்திய அளவில் SIR-ஐ மேற்கொள்ள முடிவு செய்துள்ளீர்கள். எனவே, இந்த அனுபவம் [பீகார் SIR] இப்போது உங்களுக்கு அறிவூட்டியிருக்கும்.... நீங்கள் அடுத்த முறை SIR-ஐ நடைமுறைப்படுத்தும்போது, இப்போது நீங்கள் அனுபவித்தவற்றின் காரணமாக, சில மேம்பாடுகளையும் கொண்டு வருவீர்கள்” என்றார்.

https://frontline.thehindu.com/politics/sir-bihar-electoral-rolls-disenfranchisement-fears/article70159889.ece

======================================================

2

வாக்காளர் பட்டியல் திருத்தம்: குடியுரிமைக்கான ஆதாரம் மற்றும் வாக்காளர்கள் மீதான சுமை

பீகாரின் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR), முன்மாதிரிக்கு (precedent) எதிராக, குடியுரிமையை நிரூபிக்கும் சுமையை ஏழைகள் மீது திணிக்கிறது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பை (burden of proof) வாக்காளர் மீது தேர்தல் ஆணையம் சுமத்த முடியுமா? பீகார் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) குறித்த விவாதத்தில் இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. 1995-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இதற்கான விடை கிடைக்கலாம். அந்த வழக்கில், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள சில தொகுதிகளில் வசிப்பவர்கள், தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க, தேர்தல் ஆணையம் கட்டளையிட்ட ஒரு நடவடிக்கையின் கீழ் ஆதாரங்களை வழங்குமாறு அழைக்கப்பட்டனர்.

1994 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களின் அடிப்படையில் அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹ்மதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கு லால் பாபு ஹுசைன் மற்றும் பலர் Vs. வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பலர் என்று அறியப்படுகிறது. 1992, ஆகஸ்ட் 12 அன்று, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும் திருத்துவதற்கும் யாரேனும் வெளிநாட்டவராக இருக்கிறார்களா என்பதைக் கண்டறியுமாறு நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தேர்தல் ஆணையம்  வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் மீது பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த வழிகாட்டுதலைத் தொடர்ந்து 1994 செப்டம்பர் 9 அன்று, வெளிநாட்டினரின் பெயர்களைக் கண்டறிந்து நீக்குமாறு வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு (ERO) தேர்தல் ஆணையம் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது.

மும்பையில் உள்ள 39 காவல் நிலையங்களில் விரிவான தேடுதல் நடத்தப்பட்டது. 1.67 லட்சம் பேருக்குக் காவல்துறையினர் கடிதங்களை அனுப்பினர். அதில், குடியுரிமைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது: அது பிறப்புச் சான்றிதழ், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), குடியுரிமைச் சான்றிதழ் அல்லது இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் குடியுரிமைப் பதிவேட்டில் உள்ள பதிவு ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இது சிறுபான்மை சமூகத்தைத் துன்புறுத்தி, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் நடவடிக்கை என்று கருதப்பட்டதால் இவ்வாறு நிகழ்ந்தது.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுக்கள் (Writ petitions) தாக்கல் செய்யப்பட்டன. அதே காலகட்டத்தில், புது டெல்லி பஹர்கஞ்ச் பகுதியின் மோதியா கான் இடத்திலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், தீர்ப்பில் நீதிமன்றத்தால் "ஏழைகள், அறியாதவர்கள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாத சேரிவாசிகள்" என்று விவரிக்கப்பட்டனர். டெல்லி வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை இந்தியக் குடியுரிமையை நிரூபிக்குமாறு அழைத்ததுதான் அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. மோதியா கான் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவில், தாங்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வாழ்வாதாரத்தைத் தேடி டெல்லிக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்றும், பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும் கூறினர். தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் தங்களிடம் இல்லாவிட்டாலும், தாங்கள் அந்தப் பகுதியின் உண்மையான (bonafide) குடியிருப்பாளர்கள் என்பதைக் காட்ட ரேஷன் அட்டை, கடந்த காலத் தேர்தல்களின் வாக்காளர் பட்டியல், பள்ளிப் பதிவுகள் போன்ற பல ஆவணங்கள் தங்களிடம் இருந்ததாகவும், ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டெல்லியின் மதியா மஹால் தொகுதிக்கு உட்பட்ட சஞ்சய் அமர் ஜுகி ஜோம்பரி காலனியில் வசிக்கும் சில குடியிருப்பாளர்கள், அப்பகுதியில் உள்ள 18,000 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்தி மற்றொரு நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர். அவர்களும், தாங்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வேலை தேடி டெல்லிக்கு மாறியதாகவும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அப்பகுதியில் வாக்காளர்களாக இருப்பதாகவும் வாதிட்டனர். அந்தக் காலனிவாசிகள் அனைவரையும் வெளிநாட்டினராகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறி, தங்கள் குடியுரிமைக் கோரிக்கைக்கு ஆதரவாக உறுதியான ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு ERO ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ரேஷன் அட்டை, டெல்லி அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கிராமப் பிரதான்களால் (தலைவர்கள்) வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் (affidavits) போன்ற அவர்கள் வழங்கிய ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில், 18,000 வாக்காளர்களில், 300 பேரின் பெயர்கள் மட்டுமே திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றன.

இந்த மனுக்களின் விளைவாக, குடியுரிமை கோரலில் சந்தேகம் உள்ள நபர்களின் பெயர்களைப் பதிவுசெய்வது, நீக்குவது தொடர்பான விஷயங்களில் ERO-களுக்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வெளியிட்டது. வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்பட்ட அனைவருக்கும் எதிராகத் தொடங்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அது வகுத்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் புதிய நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, யாருடைய குடியுரிமை சந்தேகிக்கப்படுகிறதோ, அவர் அதற்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், அதை விசாரிக்கும் ERO அல்லது வேறு எந்த அதிகாரியும், வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான அனைத்துச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, அறிவிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர், அந்தக் காரணிக்குத் தேவையான நிரூபண மதிப்பு (probative value) அளிக்கப்பட வேண்டும்.

"ஏற்கனவே உள்ள பெயரை நீக்க வேண்டியிருக்கும் போது, பெயர் ஏற்கனவே உள்ளதால், அந்தப் பெயரைச் சேர்ப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி சட்டத்தின் கீழான நடைமுறைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்". “இது ஆதாரச் சட்டத்தின் (Evidence Act) பிரிவு 114(e)-இன் கீழும் பொருந்தும்" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் ஒரு நபர், குடியுரிமைக்கான தகுதியானவராகக் கருதப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. வாக்காளரின் தகுதியைச் சந்தேகிப்பதற்குக் காரணங்கள் இருக்கும் சூழ்நிலைகளில், இதற்கு மாறாக நிரூபிக்கும் பொறுப்பை (onus of proving) தேர்தல் அதிகாரிகளின் மீது அது வைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, குடியுரிமை பிரச்சினையின் அடிப்படையில் ஒரு வாக்காளர் பட்டியலில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்குக் உரிமை கோரப்படுவதற்கான நியாயமான வாய்ப்பை (reasonable opportunity of being heard) வழங்கிய பின்னரே இந்த விவகாரம் தீர்மானிக்கப்பட வேண்டும். பெயர் நீக்கப்படுவதற்கு முன்னர் கோரப்படும் வாய்ப்பு அர்த்தமுள்ளதாகவும் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் இருக்க வேண்டுமானால், அவர் இந்தியக் குடிமகன்தானா என்பது குறித்து சந்தேகம் ஏன் எழுந்தது என்பதை சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. அப்போதுதான், சந்தேகத்திற்கான அடிப்படை தவறானது என்பதை அவரால் நிரூபிக்க முடியும்.

விசாரணையை நடத்தும் அதிகாரி, அந்த விசாரணை பகுதியளவு-நீதித்துறை (quasi-judicial) தன்மை கொண்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. எனவே, பாதிக்கப்பட்ட நபர் ஆதாரமாகச் சமர்ப்பிக்க விரும்பும் அனைத்துவகை சான்றுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், அந்த அதிகாரியும் நபர் மீதான சந்தேகங்களுக்கான  அனைத்து கோப்புகளையும் வெளியிட வேண்டும். இதன் மூலம்தான் சம்பந்தப்பட்ட நபர் அத்தகைய ஆதாரங்களைத் தகர்த்து பதிலளிக்க (rebutting) நியாயமான வாய்ப்பு கிடைக்கும். வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு உரிமை கோரப்படுவதற்கான நியாயமான வாய்ப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். "இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரி, அரசியலமைப்புச் சட்டம், குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றின் விதிகள் மற்றும் குடியுரிமை தொடர்பான அனைத்து விதிகளையும் மனதில் வைத்து, பொருத்தமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் (ஏனெனில் மேல்முறையீடு செய்ய வழிவகை உள்ளது)" என்று நீதிமன்றம் கூறியது.

SIR அரசியலமைப்பை மீறுகிறது

வாக்காளர் பட்டியல்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் 2024 கையேடு கூறுகிறது: முதன்முறையாகத் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரும் விண்ணப்பதாரர் மீதுதான் குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பு ஆரம்பத்தில் இருக்கும். இருப்பினும், ஒரு சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டால், நிரூபிக்கும் பொறுப்பு முதலில் ஆட்சேபனையாளர் தரப்பில் இருக்கும். "ஒரு நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக் கோரி படிவம் 7-இன் கீழ் ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டால், நிரூபிக்கும் பொறுப்பு ஆரம்பத்தில் ஆட்சேபனையாளரிடம் இருக்கும். இது சட்டத்தின்படி முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட நபர் இந்தியக் குடிமகன் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டக் கோருவதற்கு வாக்காளர் பதிவு அலுவலருக்கு நியாயம் உண்டு," என்று அந்தக் கையேடு கூறுகிறது.

முக்கியமாக, விண்ணப்பதாரரின் குடியுரிமை பிரச்சினையை ERO-ஆல் தீர்மானிக்க முடியாவிட்டால், லால் பாபு ஹுசைன் வழக்கில் அதன் உத்தரவின் மூலம் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை அவர் குறிப்பிட வேண்டும் என்று அந்தக் கையேடு கூறுகிறது. ஆனால், "பீகார் SIR மூலம் தேர்தல் ஆணையம் முதன்முறையாக நிரூபிக்கும் பொறுப்பை வாக்காளர் மீது சுமத்தியுள்ளது. மேலும் நிலைமையை மோசமாக்க தேர்தலுக்குச் சற்று முன்பு நடத்தப்பட்டுள்ளது. 2003-க்குப் பிறகு வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட அனைவரும் – அந்த எண்ணிக்கை 2.97 கோடியாக உள்ளது – தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க ஆவணங்களை வழங்க வேண்டும். எதற்காக? குடியுரிமை இல்லாத ஒரு சிலரை நீக்குவதற்காக மட்டுமேவா?" என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கேட்டுள்ளார்.

பீகார் SIR-க்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் மனுதாரர்கள் லால் பாபு ஹுசைன் தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளனர். பீகார் SIR-க்கு எதிரான மூன்று மனுக்களில் 10 தரப்பினருக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நிரூபிக்கும் பொறுப்பை SIR தலைகீழாக மாற்றும் "முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை" சுட்டிக்காட்டினார். "தேர்தல் ஆணையம் முன்வந்து, இன்னின்ன நபர் குடிமகன் அல்ல, தங்கள் கோரிக்கையை ஆதரிக்கத் தங்களிடம் ஆதாரங்கள் உள்ளன, அந்த நபருக்கு நோட்டீஸ் கொடுத்து அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என்று சொல்லவில்லை. வாக்காளர்தான் தான் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்," என்ற நிலையை சிங்வி சுட்டிக்காட்டினார். லால் பாபு ஹுசைன் தீர்ப்பைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக நீதிமன்றம் அந்த வழக்கில் எடுத்துரைத்துள்ளது என்றார். 

ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தாக்கல் செய்த மனுவில், SIR, வாக்காளர்களைத் தங்கள் குடியுரிமை மற்றும் அவர்களது தாய் அல்லது தந்தையின் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களைக் கோருவதன் மூலம் அரசியலமைப்பின் சரத்து 326-ஐ மீறுவதாகக் கூறியது. அப்படிச் செய்யத் தவறினால், அவர்களது பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாது. முதன்முறையாக, குடியுரிமை குறித்த நடைமுறை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது என்றும், வாக்காளர்கள் தாங்கள் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் அல்ல என நிரூபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக, 2003 வாக்காளர் பட்டியலின் நகல் அல்லது பிறப்பு அல்லது வசிப்பிட ஆதாரம் என யாராக இருந்தாலும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய சுமையைக் கொண்டுள்ளனர்.

"அரசியலமைப்பின் சரத்துகள் 324 மற்றும் 326 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 16 ஆகியவை தனித்து நிற்பதில்லை. குடியுரிமைச் சட்டங்கள் உள்ளன, இந்த வேலையைச் செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் அளிக்கும் குடியுரிமைச் சட்டம் உள்ளது. இந்தியக் குடிமக்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்க முடியும் என்பதற்காக, தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் குடியுரிமை அந்தஸ்தைச் சரிபார்க்க அதிகாரம் பெறவில்லை," என்று ADR-இன் நிறுவன உறுப்பினர் மற்றும் அறங்காவலர் ஜகதீப் எஸ். சோக்கர் கூறினார். ராவத்தின் கூற்றுப்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் குடியுரிமை குறித்த நடைமுறையிலிருந்து பீகார் SIR விலகிச் சென்றதால், அது மிகப் பெரிய அளவிலான சிக்கல்களில் சிக்கியது.

"ஜூன் 24 அன்று பீகார் SIR உத்தரவுக்குப் பிறகு, தான் தவறு செய்துவிட்டதை தேர்தல் ஆணையம் விரைவில் உணர்ந்தது. களத்தில் இருந்து வந்த கருத்துகள் ஆறுதல் அளிப்பதாக இல்லை. அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, ஜூலை 6 அன்று, தேவையான ஆவணங்கள் இல்லாமல் மக்கள் தங்கள் கணக்கெடுப்புப் படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்று கூறி ஒரு விளம்பரத்தை அது வெளியிட்டது. படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியான ஜூலை 25-க்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அது கூறியது" என ராவத் தெரிவித்தார். பீகார் SIR-இல் வாக்காளர் மீதான நிரூபிக்கும் பொறுப்பைத் தலைகீழாக மாற்றியது வெளிப்படையாகவே நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முக்கியமாக, சட்டச் சிக்கல்களையும் அது உருவாக்கியுள்ளது.

https://frontline.thehindu.com/news/election-commission-bihar-sir-citizenship-dispute-supreme-court/article69830886.ece

===================================================================

3

மரணங்கள், அச்சம், அரசியல்: மேற்கு வங்காளத்தின் சிறப்பு தீவிர திருத்த (SIR) நெருக்கடி

தேர்தல் வரவிருக்கும் மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆரம்பம் முதலே பதற்றம், கவலை மற்றும் மரணங்களால் சூழப்பட்டுள்ளது. SIR செயல்பாடு நவம்பர் 4 அன்று தொடங்கியது, மேலும் அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 7-க்கு இடையில், குறைந்தது 11 மரணங்கள்—இதில் ஆறு தற்கொலைகளும் ஒரு தற்கொலை முயற்சியும் அடங்கும்—SIR செயல்முறை மூலம் வாக்காளர் உரிமையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தால் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மரணங்களும், அதனுடன் ஏற்பட்ட அளவு கடந்த அச்சமும் வங்காள அரசியலில் மையப் பிரச்சினைகளாக மாறிவிட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் பிரதான எதிர்க்கட்சியான BJP-யும் 2026-ல் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தங்கள் நலன்களுக்காக அச்சத்தையும் பொய்களையும் பரப்புவதாக ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன.

SIR அச்சத்துடன் தொடர்புடைய மரணங்கள் மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் நிகழவில்லை. அக்டோபர் 28 அன்று, வடக்கு 24 பர்கானாஸில் உள்ள பானிஹாட்டி என்ற இடத்தில், 57 வயதான பிரதீப் கர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது மரணத்திற்கு “NRC” தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த ஒரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டது. அவர் முன்னதாக ஒரு விபத்தில் நான்கு விரல்களை இழந்திருந்ததால், அவரால் அந்தக் குறிப்பை எப்படி எழுத முடிந்தது என்று அவரது குடும்பத்தினர் கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், அவர் SIR நடவடிக்கை குறித்து கவலை கொண்டிருந்தார் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

அடுத்த நாள், கூச் பெஹார் மாவட்டத்தின் தின்ஹாடாவில், 63 வயதான கைருல் ஷேக் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 2002 ஆம் ஆண்டு பட்டியலில் இருந்த ஒரு எழுத்துப் பிழையின் காரணமாக தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுமோ என்று கவலைப்பட்டதாக அவர் பின்னர் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 31 அன்று, 95 வயதான க்ஷிதிஷ் மஜும்தார், பீர்பூமின் இலாம்பஜாரில் தூக்கிலிட்டுக்கொண்டார். 2002 வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால், 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்த வங்காளதேசத்திற்கே மீண்டும் அனுப்பப்படுவாரோ என்று அவர் அஞ்சியதாக அவரது பேத்தி கூறினார்.

அதே நாளில், SIR நடவடிக்கையுடன் தொடர்புடையதாகத் தோன்றும் மேலும் இரண்டு மரணங்கள் நிகழ்ந்தன. வடக்கு 24 பர்கானாஸின் டிடாகரில், 32 வயதான காகோலி சர்க்கார் தனது வீட்டில் தீக்குளித்து இறந்தார். அவர் தனது தற்கொலைக் குறிப்பில், “எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. நான் இங்கே சரியாக உணரவில்லை. எனது இரண்டு மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்,” என்று எழுதினாலும், அவர் வங்காளதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவோமோ என்று அதிகளவில் அஞ்சியதாக அவரது மாமியார் கூறினார். பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளியான பிமல் சந்த்ரா, சென்னையில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இறந்தார். SIR-ஐத் தொடர்ந்து தனது வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடுவோமோ என்று அவர் கவலைப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

SIR தொடர்பான மன அழுத்தத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மேலும் இரண்டு மரணங்கள் நவம்பர் 2 அன்று பதிவாகின. பூர்போ மேதினிபூர் மாவட்டத்தின் ஏக்ராவைச் சேர்ந்த ஷேக் சிராஜுதீன் மற்றும் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஹசீனா பேகம் ஆகியோர் SIR பற்றிய கவலைகளால் மாரடைப்பால் இறந்தனர். 2002 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாததால் அவர்கள் கவலையால் பாதிக்கப்பட்டதாக இறந்த இருவரின் குடும்ப உறுப்பினர்களும் கூறினர். அடுத்த நாள், ஹவுரா மாவட்டத்தின் உலுபேரியாவைச் சேர்ந்த 30 வயதான ஜாஹிர் மால் தூக்கிலிட்டுக்கொண்டார். SIR நடவடிக்கையைத் தொடர்ந்து வங்காளதேசத்திற்கு விரட்டப்படுவோம் என்று அவர் அஞ்சியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நவம்பர் 6 அன்று SIR தொடர்பான மரணங்கள் மேலும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. முர்ஷிதாபாத்தில் உள்ள குடியிருப்புக்கு அருகில் ஒரு மரத்தில் 52 வயதான தரக் சாஹாவின் உடல் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது; வடக்கு 24 பர்கானாஸைச் சேர்ந்த 35 வயதான ஷஃபிவுல் காஸியும் அதே முறையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். தெற்கு 24 பர்கானாஸின் குல்பி பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஷாஹாபுதீன் பைக், ஒரு மதரஸா ஆசிரியர். 2002 வாக்காளர் பட்டியலில் தனது மற்றும் அவரது மனைவியின் பெயர்கள் இல்லாதது குறித்து கவலைப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட மூளை பக்கவாதத்தால் அவர் இறந்தார். மேலும் பீர்பூமில், பிமன் பிரமாணிக் மாரடைப்பால் இறந்தார். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் SIR நடவடிக்கையால் மனமுடைந்து போயிருந்தனர்.

பேரணி மற்றும் பிரசாரம்

SIR தொடர்பான குழப்பமும் மரணங்களும் இன்று வங்காள அரசியலின் எரியும் பிரச்சினையாக உள்ளது. SIR நடவடிக்கை தொடங்கிய நவம்பர் 4 அன்று, முதலமைச்சர் மமதா பானர்ஜியும், அவரது மருமகனும் - திரிணாமுலின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் செல்லும் பேரணி நடத்தினர். இந்த பேரணி மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஒரு சட்டப்பூர்வ வாக்காளரின் பெயர் கூட விடுபட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அமைந்தது. அந்தப் பேரணியில் பேசிய அபிஷேக், “SIR அறிவிக்கப்பட்ட பிறகு, ஏழு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். டெல்லி அதற்குக் கணக்குச் சொல்ல வேண்டும். தயாராக இருங்கள்” என்று கூறினார்.

BJP-யின் தலைமை மற்றும் தேர்தல் ஆணையம் மீது காத்திரமான தாக்குதலைத் தொடுத்த மமதா பானர்ஜி, SIR நடவடிக்கையின் “அவசரகதி” குறித்தும் கேள்வி எழுப்பினார். இது BJP ஆட்சி செய்யாத மாநிலங்களில் அவர்களுக்கு பயனளிக்கும் ஒரு தந்திரம் என்றும் அவர் கூறினார். “2002 ஆம் ஆண்டின் SIR நடைமுறைக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், 10 கோடி மக்களை உள்ளடக்கிய பட்டியல் அனைத்தையும் வெறும் மூன்று மாதங்களில் முடிப்பது சாத்தியமா? இதைத் தேர்தலுக்குப் பிறகு செய்திருக்கலாம். நான்கு தேர்தல் வரவிருக்கும் மாநிலங்கள் உள்ளன—வங்காளம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மூன்று மாநிலங்களில் SIR-ஐச் துவங்கிவிட்டு, ‘இரட்டை எஞ்சின் மாநிலமான’ [அசாம்] அங்கு நீங்கள் செய்யவில்லையே?” என்று அவர் வினவினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை BJP மறுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பட்ட மரணங்களை தேர்தல் நோக்கங்களுக்காக அரசியலாக்க முயல்கிறது என்றும், மாரடைப்புகள் மற்றும் நோய் தொடர்பான மரணங்களுக்கும் SIR நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.

அரசியல் ஆயுதமயமாக்கல்

இரண்டு கட்சிகளும் SIR-ஐ அதனதன் நலன்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. திரிணாமுல் இதை NRC-க்கு இணையாக மதிப்பிட்டு, SIR மூலம் NRC-யை சூழ்ச்சியாக அமல்படுத்தும் BJP-யின் திட்டம் இது என வாக்காளர்களுக்கு எச்சரித்துள்ளது. அதேசமயம், ஆளும் கட்சியால் தேர்தல்களில் வெற்றி பெற பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான “போலி வாக்காளர்கள்” பட்டியலிலிருந்து அழிக்கப்படுவார்கள் என்பதால் திரிணாமுல் பதட்டமடைகிறது என்று காவி கட்சி (BJP) கூறியுள்ளது.

தேர்தல் ஆய்வாளர் பிஸ்வநாத் சக்ரவர்த்தியின் கூற்றுப்படி, SIR தொடர்பான இந்த மோதலில், திரிணாமுல் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. “இந்த முழு SIR நடவடிக்கையும் திரிணாமுல், BJP - இரண்டுக்கும் ஓர் அரசியல் உத்தியாகும். திரிணாமுல் மிகவும் யதார்த்தமான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது,” என்று சக்ரவர்த்தி கூறினார். “SIR பணிகளுக்கா, ஒவ்வொரு சாவடி நிலை அதிகாரிக்கும் ஒரு சாவடி நிலை முகவரை நியமித்து, களத்தில் முழு நிர்வாகத்தையும் திரிணாமுல் ஏற்பாடு செய்துள்ளது. மறுபுறம், அடுத்தடுத்து நிகழும் மரணங்களின் எண்ணிக்கையைக் கொண்டு, வாக்காளர்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கவும் முயற்சிக்கிறது” என்றும் அவர் கூறினார். “அவர்கள் வங்காள அடையாளப் பிரச்சினையை வலுப்படுத்துகிறார்கள். இது திரிணாமுல்-க்கு எதிரான மற்ற பிரச்சினைகளான—ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஊழல், சட்டம் மற்றும் ஒழுங்கு, வேலைவாய்ப்பு இல்லாமை—ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவுகிறது” என்று சக்ரவர்த்தி கூறினார். அவரது கூற்றுப்படி, பள்ளி கல்வி ஆணையத்தின் ஆட்சேர்ப்பு ஊழல் மற்றும் பிற ஊழல் பிரச்சினைகளுக்குப் பிறகு பதட்டமாக இருந்த திரிணாமுல், 2019-ல் CAA எதிர்ப்புப் போராட்டங்களில் செய்தது போலவே இன்று SIR மூலமாக சரிவை சரிகட்ட முயற்சிக்கிறது.

திரிணாமுலின் பாசாங்குத்தனம்

இருப்பினும், SIR-க்கு எதிரான திரிணாமுலின் நிலைப்பாடு பாசாங்குத்தனமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். ஆரம்பத்தில், திரிணாமுல் தலைமை மேற்கு வங்காளத்தில் SIR நடவடிக்கை நடைபெற அனுமதிக்காது என்று கூறியிருந்தது. ஒருபக்கம், எதிர்ப்புகளும் கண்டனங்களும் தெரிவித்தபோதிலும், SIR-ன் தடையற்ற செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. “களத்தில் சாவடி நிலை அதிகாரியுடன் கூட்டாக பணிபுரிகிறது, ஆனால் மேல்மட்டத்தில், மமதா பானர்ஜியும் அபிஷேக்கும் SIR-ஐ எதிர்க்கின்றனர். இது அப்பட்டமான பாசாங்குத்தனம்,” என்று சக்ரவர்த்தி கூறினார்.

“போலி வாக்காளர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை நீக்குவது எனும் பெயரில் தாங்கள் அனுபவிக்கப் போகும் நன்மை குறித்து BJP ஆரம்பத்தில் குதூகலமடைந்தது” என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மூத்த அரசியல் ஆய்வாளர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா ஃபிரண்ட்லைனிடம், “SIR பலன்கள் குறித்து BJP தவறாகக் கணக்கிட்டிருக்கலாம். 1952 முதல் இன்று வரை, குடிமக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யும் பணியால் சுமையாக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950-ன் பிரிவுகள் 22(b) மற்றும் 23(2) ஆகியவை, இது வாக்காளர் பதிவு அதிகாரியின் வேலை என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன,” என்று பட்டாச்சார்யா கூறினார். மாநிலம் முழுவதும் முழுமையான குழப்பம் நிலவுகிறது என்றும், குறிப்பாக ஏழைகள் மற்றும் கீழ்நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்தக் குழப்பம் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். அச்சம் மற்றும் கவலை நிறைந்த இந்தச் சூழல், தேர்தலுக்கு முன்னதாக BJP-க்கு “சாதகமான மனநிலையை” உருவாக்கவில்லை. “இது திரிணாமுலின் வாக்கு வங்கியாக இருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அகற்றும் என்று BJP தலைவர்கள் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில், அவர்கள் குறிப்பிடும் சட்டவிரோத வங்காளதேசத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பல இளம் வாக்காளர்கள் இந்த செயல்முறையால் எரிச்சலும் வெறுப்பும் அடைந்துள்ளனர்,” என்று பட்டாச்சார்யா கூறினார்.

இந்த முழு நடவடிக்கையின் மிகவும் துரதிர்ஷ்டவசமான அம்சம் என்னவென்றால், பொது மக்கள் குழப்பத்திலும் பயத்திலும் தடுமாறி, மன அமைதியையும், சில சமயங்களில் தங்கள் உயிரையும் இழக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் மக்களின் கவலைகளைத் தணிப்பதற்குப் பதிலாக, தேர்தல் ஆதாயத்திற்காக இதை பயன்படுத்திக் கொள்கின்றன.

https://frontline.thehindu.com/politics/west-bengal-sir-fears-deaths-political-fallout/article70255876.ece/amp/

==================================================

4

எஸ்.ஐ.ஆர். (SIR): வாக்குரிமை மீதான வரலாறு காணாத தாக்குதல் - யோகேந்திர யாதவ்

அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், பீகார் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார். இதை வாக்குரிமை மீதான வரலாறு காணாத தாக்குதல் என்று அழைக்கிறார். இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள யாதவ், ஒரு பிரத்யேக நேர்காணலில், 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 கோடிக்கும் அதிகமானோர் தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களின் தன்மையால் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்றும் கூறுகிறார்.

இந்த சர்ச்சை, இந்திய தேர்தல் நடைமுறையில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தைச் சுற்றியுள்ளது. அதாவது, குடிமக்கள் (வாக்களிக்க) தகுதியுடையவர்கள் என்று கருதப்படுவதற்குப் மாறாக, இப்போது தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஆதார் அட்டைகள் போன்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை நிராகரித்துவிட்டு, பெரும்பாலான குடிமக்களிடம் இல்லாத சான்றிதழ்களைக் கோருவதாக அவர் கூறுகிறார்.

எஸ்.ஐ.ஆர். மீதான யாதவின் கடுமையான விமர்சனம், 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக "வாக்குத் திருட்டு" (vote chori) பற்றிய அரசியல் புயலுக்கு மத்தியில் வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் ஆணையமோ போலியான, நகல் பதிவுகளை நீக்குவதற்கான அத்தியாவசியமான நடைமுறை என்று பேசுகிறது. ஆனால் விமர்சகர்களோ, இது ஒதுக்கப்பட்ட சமூகங்களை குறிவைத்து, பாரிய வாக்குரிமை நீக்கத்திற்கு வழிவகுக்கிறது என்று வாதிடுகின்றனர்.

எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. யாதவ், தேர்தல் ஆணையத்தால் "இறந்துவிட்டதாக" அறிவிக்கப்பட்ட மூன்று வாக்காளர்களை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தி, தேர்தல் ஆணையத்தின் தோல்விகள் குறித்த தனது வாதத்தை எடுத்துக் காட்டினார்.

அவருடனான உரையாடலில் இருந்து:

வாக்காளர் பட்டியல்கள் குறித்த சிக்கல்கள் சூழ்ந்த நிலையிலும் பீகார் எஸ்.ஐ.ஆர்.-ன் குழப்பங்களுக்கு மத்தியிலும், தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அதில், பல கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், அந்தச் சந்திப்பு ஆணையத்தின் பிம்பத்தை மீட்டெடுக்க உதவவில்லை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த அசாதாரணமான செய்தியாளர் சந்திப்பு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலை குறித்து நமக்கு என்ன சொல்கிறது?

'அசாதாரணமான' என்பது சரியான வார்த்தை. தேர்தல் ஆணையம் இதற்கு முன் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியதில்லை என்பதாலல்ல – அவர்கள் நடத்தியிருக்கிறார்கள், நடத்த வேண்டும். உண்மைகளை மக்களுக்கு வழங்குவதும், தவறான எண்ணங்களைத் தெளிவுபடுத்துவதும் அவர்களின் கடமை. ஆனால் சூழலை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களும் "வாக்குத் திருட்டு" என்று பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் அதே ஞாயிற்றுக்கிழமை இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. இது மிகவும் அசாதாரணமானது – தேர்தல் ஆணையம் பொதுவாக அவ்வாறு செய்வதில்லை. ஊடகங்களைப் புரிந்துகொண்டவர்கள், இது மற்ற செய்திகளைத் தலைப்புச் செய்திகளிலிருந்து திசைதிருப்பும் உத்தி என்று சொல்லலாம். "வாக்குத் திருட்டு" தலைப்புச் செய்தியாக இருக்கக் கூடாது. கட்சிகள் ஊடகத்தை நிர்வாகம் செய்கின்றன; அரசியலமைப்புச் சபைகள் அவ்வாறு செய்வதில்லை.

ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து மிக முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டபோது இது நடந்ததால், இதுவும் அசாதாரணமானது. அந்த அதிகாலையில், 'தி இந்து'வில் வெளியான CSDS [சமூக ஆய்வு மையம்] ஆய்வறிக்கை, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30-40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதைக் காட்டியது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்த பின்பு இது நிகழ்ந்தது.

இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தது. நம்பகமானதொரு நீதிபதி தலைமையில் தேர்தல் ஆணையம் வெளிப்படையான விசாரணையை அறிவிக்கலாம் என்று நான் நினைத்தேன். தேர்தல் ஆணையம் மல்லுக்கட்டாமல், அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்க முடியும். ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை.

தேர்தல் ஆணையம் அதன் தொனி, உள்ளடக்கம், நிலைப்பாடு, மௌனம் ஆகியவற்றில் ஓர் அரசியலமைப்புச் சபைக்குப் பொருத்தமில்லாத ஒன்றை செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சு (அவர் மட்டுமே பேசினார், மற்றவர்கள் சிலைகள் போல் அமர்ந்திருந்தனர்) - அது ஓர் அரசியல் வர்ணனையாளரின் மொழி; ஓர் அரசியல் தலைவரின் மொழி; அரசியலமைப்பு அதிகாரியின் மொழி அல்ல. அவர் மிகவும் தீவிரமான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் நடத்த முற்றிலும் மறுத்துவிட்டார். பீகாரில் எஸ்.ஐ.ஆர். நடைமுறை குறித்த முழுமையான உண்மைகளை வழங்க அவர் மறுத்துவிட்டார். அவருக்கு முன்வைக்கப்பட்ட துல்லியமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவே இல்லை.

வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் அரசியல் கட்சிகளால் பெரும்பாலும் தாமதமாகவே எழுப்பப்படுகின்றன, எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார். இதற்கு உங்கள் பதில் என்ன?

"ஏன் இதை இப்போது சொல்கிறீர்கள்? ஏன் முன்பே சொல்லவில்லை?" என்று கேட்பது முற்றிலும் சரி. ஆனால் நீங்கள் ஒரு அரசியலமைப்புச் சபை. அனைத்து அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை எழுப்பத் தவறினால் கூட – ஒவ்வொரு கட்சியும் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யத் தவறினால் கூட – அதைச் செய்வது உங்கள் பொறுப்பு இல்லையா?

யாரோ வந்து உங்கள் பத்திரிகையில் பல பிழைகள் உள்ளன என்று சொன்னால், நீங்கள், "ஏன் ஒரு மாதம் கழித்து இதைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறீர்கள். சரி, நான் முன்பே சொல்லாததற்கு மன்னிக்கவும். ஆனால் ஆசிரியராகிய நீங்கள் கவலைப்பட வேண்டாமா? யாரோ ஒருவர் தீவிரமான கேள்விகளை எழுப்பும்போது, அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, கேள்விகளை எழுப்புபவர்களை நீங்கள் கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள் என்றால், உங்கள் நோக்கங்கள் தீங்கானவை என்று வெளிப்படுத்துகிறீர்கள்.

மேலும், இதுபோன்ற ஆதாரங்களை உருவாக்குவது எளிதல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை முறையற்று வழங்குகிறது. பகுப்பாய்வு செய்ய எளிதான இயந்திரம் படிக்கக்கூடிய மின்னணு வாக்காளர் பட்டியல்களை கூட வழங்க மறுக்கிறது. இந்த பட்டியல்கள் வெளியிடப்படும் நேரத்தை நினைவில் கொள்ளுங்கள் – பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல்களில் சண்டையிடுவதில் மும்முரமாக இருக்கின்றன. பெரும்பாலும் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள். இதுபோன்ற ஒன்றை அவர்களால் செய்ய முடியாத தருணம் அது. ஆனால் அவர்கள் தங்கள் கடமையில் தவறியிருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் சொந்த கடமையில் தவறுவதற்கு இந்த வாதம் நியாயமாகாது.

வாக்காளர் பட்டியல்கள் குறித்து சமீபத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளால் பீகார் எஸ்.ஐ.ஆர். குறிப்பாக அவசியமானது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.

இது ஒரு அபத்தமான வாதம். 'யெஸ் மினிஸ்டர்' என்ற பிரிட்டிஷ் தொடரில் மூன்று அரசியல்வாதிகள் நின்றிருக்கும் ஓர் அத்தியாயம் உள்ளது. ஒருவர், "மிகவும் தீவிரமான விஷயம், ஏதாவது செய்ய வேண்டும்" என்று சொல்வார். இரண்டாமவர், "சரி, இங்கே ஒன்று இருக்கிறது" என்பார். மூன்றாமவர், "சரி, அதைச் செய்வோம்" என்பார். இது ஒரு தர்க்கப் பிழை. செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறதா? எஸ்.ஐ.ஆர்.தான் அதற்குப் பதிலா? என்று யாராவது கேட்க வேண்டும். 

மருந்தை ஸ்டீராய்டு-விஷத்துடன் கலக்கிறது எஸ்.ஐ.ஆர்.. வாக்காளர் பட்டியலில் நமக்கு ஒரு சிக்கல் உள்ளது. வருடாந்திர திருத்தம் மிகவும் நன்றாக இல்லை, ஏனெனில் இதில் வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் செயல்முறை இல்லை. எனவே, பூத் நிலை அதிகாரி (BLO) ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தனிப்பட்ட முறையில் சரிபார்த்து, ஆட்சேபனை படிவங்களை வழங்கி, முழுமையான திருத்தங்களைச் செய்து பட்டியலை மாற்றியமைக்கும் தீவிர திருத்தம் நமக்குத் தேவைதான். ஆம், அது நமக்குத் தேவை.

ஆனால் பீகாரில் நடப்பது அதுவல்ல. முதலாவதாக: தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் குப்பையில் போடப்பட்டுள்ளது. அது திருத்தப்படவில்லை – அது குப்பையில் போடப்பட்டுள்ளது. இரண்டாவதாக: வாக்காளர் பட்டியலில் இருப்பதற்கான பொறுப்பு இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக வாக்காளர் மீது மாற்றப்பட்டுள்ளது. 2003 இல் நாங்கள் கணக்கெடுப்புப் படிவங்களைக் கேட்டோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் திரும்பத் திரும்பச் சொன்னது பொய். ஐயா, அத்தகைய படிவங்கள் எதுவும் கேட்கப்படவில்லை.

இரண்டாவது அசாதாரணமான, வரலாற்றிலில்லாத சட்டவிரோதமான விஷயம் என்னவென்றால், இது ஒவ்வொரு நபர் மீதும் பொறுப்பை சுமத்தியுள்ளது. நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், அடுத்த நாளுக்குள் அதைத் திருப்பித் தரவில்லை என்றால், உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் கூட இருக்காது. மூன்றாவதாக, இந்திய வரலாற்றில் முதல்முறையாக, குடியுரிமையின் நடைமுறை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் ஆவணங்களைக் காட்டுங்கள் என்று கேட்கப்படுகிறீர்கள். இது ஒருபோதும் நடந்ததில்லை. கடந்த காலத்தில், சந்தேகம் இருந்தால் - குடியுரிமையைப் பற்றி சந்தேகிக்க குறிப்பிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே ஆவணங்கள் கோரப்பட்டன. ஆனால் எல்லோரிடமும் மொத்தமாக ஆவணங்களைக் கேட்கிறார்கள் – மக்களுக்கு ஆவணங்கள் இல்லை என்று அரசாங்கத்திற்கே தெரியும் – அதே நேரத்தில் எல்லோரிடமும் இருக்கும் ஆவணங்களை ஏற்க மறுப்பதானது வாக்காளர் உரிமையைப் பறிக்கும் திட்டமாக மாறியுள்ளது.

"வாக்குத் திருட்டில்" ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளால் தேர்தல் ஆணையம் வருத்தமடைந்ததாகத் தோன்றுகிறது. அவர்களின் தற்காப்புத் தொனியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. அரசியல் கட்சிகள் எதிர்-குற்றச்சாட்டுகளுடன் எதிர்கொள்கின்றன. அரசியலமைப்பு அதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை. நீங்கள் அரசியலமைப்பு பதவியில் இருக்கும்போது, தாக்குதல்களை சந்திக்கிறீர்கள். இது முதல்முறை அல்ல.

சமீபத்திய வரலாற்றில் (2002 ஆம் ஆண்டில்) தேர்தல் ஆணையத்தை மிகவும் மோசமாகத் தாக்கியவர் மோடிதான். குஜராத் தேர்தலின் போது அவர் ஒருமுறை அல்ல, டஜன் கணக்கான பொதுக் கூட்டங்களில் தாக்கினார். அவர் ஆணையத்தை மட்டுமல்ல, தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோவை குறிப்பிட்டு தாக்கினார். அவர் அவரது பெயரை, "ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ" என்று கேலி செய்தார். அவர் கிறிஸ்தவர் என்பதை கேட்பவர்களுக்கு நினைவூட்ட முயன்றார். அவர் ரோமில் இருந்து அறிவுறுத்தல்களைப் பெறுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் என்ன செய்தது? லிங்டோ செய்தியாளர் சந்திப்பை நடத்தினாரா? மோடியை அச்சுறுத்தினாரா? மன்னிப்பு கேட்கச் சொன்னாரா? எதுவுமில்லை. அவர் தனது வேலையைச் செய்து கொண்டே சென்றார். அரசியலமைப்பு அதிகாரிகள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள்.

வருத்தப்பட அனைவருக்கும் காரணங்கள் உள்ளன. குற்றஞ்சாட்டப்படும்போது ஒவ்வொரு மனிதனும் வருத்தப்படுகிறான், அதற்காகத்தான் நெறிமுறைகள் உள்ளன. தெருச் சண்டையில் ஈடுபடுவது தலைமைத் தேர்தல் ஆணையரின் வேலை அல்ல. அவர் குறிப்பாக வருத்தமடைந்து, நாட்டிற்கு பதில் தேவை என்றும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் நினைத்தால், அவர் ராஜினாமா செய்து, வீதிக்குச் சென்று, ஒரு பேரணியை நடத்தி ராகுல் காந்தியை எதிர்கொள்ள வேண்டும். அது ஒரு குடிமகனாக அவரது உரிமை, தலைமைத் தேர்தல் ஆணையராக அல்ல. ஒரு நடுவராக (umpire) அல்ல. ஒரு நடுவராக, ஒரு வீரர் உங்களைப் பற்றி மோசமாக நினைத்தால், நீங்கள் களத்தில் சண்டையைத் தொடங்க மாட்டீர்கள்.

தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், "போதுமான பதிலளிக்காமை" என்று விவரிக்கப்படுபவை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தும் ஆணையத்தின் மீதான சாதாரண வாக்காளர்களின் நம்பிக்கைக்கு என்ன அர்த்தம்?

"போதுமான பதிலளிக்காமை" என்பது மிகவும் நாகரீகமான சொல். தேர்தல் ஆணையம் போதுமான விளக்கத்தை வழங்கவில்லை – அது விளக்கம் வழங்க மறுக்கிறது. விளக்கம் கோருபவர்களை அச்சுறுத்துகிறது.

நான் 13 ஆண்டுகளுக்கு முன்பு CSDS [சமூக ஆய்வு மையம்] உறுப்பினராக இருந்தேன் – அது மூன்று தசாப்தங்களாகத் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையைக் கண்காணித்து வருகிறது. சேஷன் சகாப்தம், லிங்டோ சகாப்தம் ஆகியவற்றில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இந்திய இராணுவத்தின் மீதான நம்பிக்கைக்கு இணையாக இருந்தது. இந்திய நீதித்துறையை விட அதிகமாக இருந்தது.

இன்று அனைத்து தேர்தல்களும் அந்த நம்பிக்கை வேகமாகச் சரிந்து வருவதைக் காட்டுகின்றன. கடந்த வாரம் 'தி இந்து'வில் வெளியான அறிக்கை ஐந்து மாநிலங்களில் அந்த நம்பிக்கை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதைக் காட்டியது. தேர்தல் ஆணையம் செய்வதைப் பார்க்கும்போது, நம்பிக்கை மேலும் குறைகிறது.

அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைப்பது பொதுமக்களின் நம்பிக்கை நிலையைப் பாதிக்காது. ஆனால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கும்போது, உண்மையைச் சொல்ல மறுக்கும்போது, சினிமா பாணியில் வசனங்களை பேசி எதிர் தாக்குதலைத் தொடங்கும்போது, செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காதபோது, பொதுமக்களின் நம்பிக்கை குறையவே செய்யும். ஒரு ஆய்வு நிறுவனம் நம்பிக்கை நிலைகள் குறைந்து வருவதாக அறிக்கை வெளியிடுபோது - அந்த நிறுவனத்தின் மீதே நீங்கள் வழக்குப் பதிவு செய்தால் பொதுமக்களின் நம்பிக்கை மேலும் குறையத்தான் செய்யும்.

CSDS-க்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மேலும் ICSSR [இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்] நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. உங்கள் கருத்துகள்?

தேர்தல் ஆணையமும் அரசாங்கமும் இணைந்து வந்துவிட்டதற்கான தெளிவான அறிகுறி. தேர்தல் ஆணையத்தின் விமர்சகர்களை மௌனமாக்க அரசாங்கத்தின் கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நான் தெளிவுபடுத்த விரும்புவது – பாஜக ஆதரவு பதிவுகள் CSDS-ஐத் தாக்கும்போது, "யோகேந்திர யாதவின் CSDS" என்று அவர்கள் எனது பெயரையும் குறிப்பிட்டார்கள். 2013 இல், நான் CSDS இலிருந்து விடுப்பில் சென்றேன். 2016 இல், நான் ராஜினாமா செய்தேன். 13 ஆண்டுகளாக, CSDS ஆய்வுகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது, நாங்கள் 32 இடங்களைப் பெறுவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர், ஆனால் CSDS ஆய்வு நான்கு இடங்கள் மட்டுமே என்று கூறியது. ஒவ்வொருவரும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று இந்த நபர்களுக்குத் தெரியவில்லை.

CSDS-ஐத் தாக்கப் பயன்படுத்தப்படும் காரணத்தைக் குறித்து நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் குறித்த ஆய்வு அல்ல - அதன் முறையியல் அல்லது ஆய்வுகள் பற்றி எந்த பிரச்சினையும் இல்லை; சஞ்சய் குமார் வெளியிட்ட ஒரு ட்வீட்தான் காரணம். அவர் ஆய்வின் முடிவுகளை விமர்சிக்கவில்லை – ஒரு பொது எழுத்தாளராக அவர் மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூறினார். சஞ்சய்யின் கூற்றுக்கள் உண்மையாக இருந்தால், அது ராகுல் காந்திக்கு எதிராக அமைந்திருக்கும்.

பொது விவாதம் எவ்வளவு குழப்பப்பட முடியும்? அந்த ட்வீட் சரியாக இருந்தால், அது பாஜகவுக்கு உதவியிருக்கும்; ராகுல் காந்திக்கு எதிராகச் சென்றிருக்கும். வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்று ராகுலின் தரப்பு கூறிக்கொண்டிருந்தது; அந்த ட்வீட் அவர்கள் குறைந்துவிட்டதைக் காட்டியது. மகாராஷ்டிரா பற்றிய புள்ளிவிவரங்களை CSDS காங்கிரஸுக்கு அளிக்கிறது என்பதை விட அபத்தமானது வேறு எதுவும் இருக்க முடியாது.

தங்கள் நற்பெயர் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பதைக் கண்டு தேர்தல் ஆணையம் வருத்தப்படுகிறது. முதலில்: கண்ணாடியில் பாருங்கள். ஒருவேளை நீங்கள் சில விஷயங்களைச் செய்வதனால் நற்பெயர் குறையலாம். இரண்டாவது: செய்தியாளரை தாக்குவது. தேர்தல் ஆணையம், ஒரு ஊடக ஆய்வு நிறுவனத்திற்கு எதிராக அபத்தமான வழக்கைத் தொடர காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.

ICSSR ஒரு விளக்கம் கோரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு கொள்கை ஆராய்ச்சி மையத்திற்கு (Centre for Policy Research) என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் – இயக்குநரை மாற்றாவிட்டால் உங்கள் மையத்தை மூடிவிடுவோம் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இயக்குநர் வெளியேற வேண்டியிருந்தது; மையம் கிட்டத்தட்ட மூடப்பட்டது. இது கல்வி சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இது தேர்தல் ஆணையத்திற்கு உண்மையை வெளிப்படுத்தக்கூடிய குரல்களை அடக்குவதற்கான ஒரு முயற்சி.

பீகார் எஸ்.ஐ.ஆர். மீதான உச்ச நீதிமன்ற வழக்கின் மனுதாரர்களில் நீங்களும் ஒருவர். இது உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய வாக்குரிமை நீக்க நடவடிக்கை என்று நீங்கள் கூறினீர்கள். விளக்க முடியுமா?

சாதாரண பார்வையாளருக்கு, பீகார் வாக்காளர் பட்டியலில் ஏதோ சிக்கல் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் அதைச் சுத்திகரிக்க முயற்சி செய்கிறது என்றும் தோன்றலாம். அது தவறானது. இது வாக்காளர் பட்டியலின் திருத்தம் அல்ல. முதலாவதாக: இது தேர்தல் பட்டியலைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் எழுதுவதாகும் (de novo rewriting). இரண்டாவதாக: இது வாக்காளர் பட்டியல்களை உருவாக்கும் விதிகளை மாற்றியமைக்கிறது. இந்த நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வாக்காளர் பட்டியலில் இருப்பதற்கான பொறுப்பு வாக்காளர் மீது மாற்றப்பட்டுள்ளது. முதல்முறையாக, குடியுரிமையின் அனுமானம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விஷயங்களும் ஒன்று சேர்ந்தால் ஒரே ஒரு விளைவுதான் ஏற்படும். அரசால் கணக்கிடப்படும் பதிவுக்குப் பதிலாக, மக்கள் தாங்களாகவே நிரூபிக்கும் வகையில் எங்கெல்லாம் பதிவு செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் விகிதம் வியத்தகு முறையில் குறைகிறது. இந்தியாவை அமெரிக்காவுடன் ஒப்பிடுங்கள். இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் இருந்தால், வாக்காளர் பட்டியல் 99 சதவீதம் உள்ளது. அமெரிக்காவில், அது 74 சதவீதம் மட்டுமே. நீங்கள் பொறுப்பை வாக்காளர்கள் மீது மாற்றும் எங்கேயும் இதுதான் நடக்கப் போகிறது. கீழ்மட்டத்தில் உள்ள 20 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.

பலருக்கு ஆவணங்கள் இல்லாத ஒரு நாட்டில் கோரப்படும் ஆவணங்களின் தேவை –அத்தகைய ஆவணங்கள் வழங்கப்படவே இல்லை; சாதாரண மக்கள் அந்த ஆவணங்களை வைத்திருக்க வழியில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் மக்கள் வைத்திருக்கும் ஆவணங்களை ஏற்க மறுக்கிறது. சாதாரண மக்களிடம் என்ன ஆவணங்கள் உள்ளன? ஆதார், ரேஷன் அட்டை, தேர்தல் ஆணையத்தின் புகைப்பட அடையாள அட்டை. மன்னிக்கவும், தேர்தல் ஆணையம் அதன் சொந்த அடையாள அட்டை உட்பட இவற்றில் எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறுகிறது. பிறப்புச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், படிப்பு பட்டத்தை (degree) கொண்டு வாருங்கள் என்கிறது. எத்தனை பேரிடம் அது உள்ளது? பீகாரில் 18-40 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் குறைந்தது 50 சதவீதம் பேரிடம் இந்த ஆவணங்களில் ஒன்று கூட இல்லை என்று நாங்கள் கணக்கிட்டோம்.

ஏற்கனவே 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பீகாரின் வயது வந்தோர் மக்கள் தொகை 8 கோடியே 18 லட்சம். எஸ்.ஐ.ஆர். தொடங்கியபோது, பீகாரில் 7 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். எனவே எஸ்.ஐ.ஆர். 28-29 லட்சம் வாக்காளர்களை கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அது 64.5 லட்சம் பெயர்களை வெளியே வீசியுள்ளது. இரண்டாம் சுற்று நடந்து வருகிறது; இன்னும் அதிகமானோர் நீக்கப்படுவார்கள். இருபத்தி ஒன்பது லட்சம் ஏற்கனவே பற்றாக்குறையில் இருந்தனர், 65 லட்சம் வெளியேற்றப்பட்டுள்ளனர், 20-30-40 லட்சம் பேர் மேலும் வெளியேற்றப்படுவார்கள்.

இந்தியா அல்லது உலகில் ஒரே ஒரு நடவடிக்கையில் கிட்டத்தட்ட 10 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒரு உதாரணத்தை எனக்குக் காட்டுங்கள். இது வெறும் ஆரம்பம் – பீகார் முதல் மாநிலம் மட்டுமே. இந்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் பொருந்தும்.

7.24 கோடி சேர்க்கை படிவங்களில் எத்தனை படிவங்கள் தேவையான ஆவணங்களுடன் வந்திருக்கும்?

இந்த எண்ணிக்கையை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. நீதிமன்றத்தில், அவர்களின் வழக்கறிஞர் 1 கோடி பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகப் பெருமை பேசினார். ஆனால் அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: 7.24 கோடியில், 1 கோடி பேர் மட்டுமே ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். 7.24 கோடியில், சிலரின் பெயர்கள் 2003 வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவர்கள் தவிர்ப்பிக்கப்படுவார்கள். 2003 பட்டியலில் இருந்ததால் 4.96 கோடி பேர் கவர் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் பெருமை பேசியது – அவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கலாம், வெளியேறியிருக்கலாம் என்று கூட அவர்கள் கணக்கிடவில்லை. தற்போதைய மதிப்பீடு 3 கோடிக்கும் சற்று குறைவாக உள்ளது.

அந்த 3 கோடியைத் தவிர்த்து விடுங்கள். ஆவணங்களைக் கொடுக்க வேண்டிய 4.24 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களில், 1 கோடி பேர் ஆவணங்களைக் கொடுத்துள்ளனர் – தேர்தல் ஆணையம் விரும்பிய வகையான ஆவணங்களா என்று நமக்குத் தெரியாது. கள அனுபவத்திலிருந்து, பெரும்பாலான மக்கள் ஆதார் அட்டை கொடுத்தால் போதும் என்று நினைத்து, ஆவணங்களைக் கொடுத்துவிட்டதாகவும், அவை பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் நினைத்தார்கள். அவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி செயல்பட்டால் – ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது, EPIC [வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை] ஏற்றுக்கொள்ளப்படாது, ரேஷன் அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது – மேலும் 2 கோடி பேர் வாக்காளர் உரிமையை இழக்க நேரிடும். அதைச் செய்ய தேர்தல் ஆணையத்திற்குத் தைரியம் இல்லை, எனவே அவர்கள் தங்கள் சொந்த உத்தரவைத் தவிர்ப்பதற்குப் பின்வாசல் வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு பின்வழியைத் தேர்தல் ஆணையம் வகுப்பதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புகாரளித்தது: 2003 வாக்காளர் பட்டியலில் உங்கள் உறவினர் யாராவது இருந்ததைக் காட்ட முடிந்தால், நாங்கள் உங்களுக்குத் தளர்வு அளிப்போம்.

இந்தத் தளர்வு வழங்கப்பட்டால் நான் ஆட்சேபிக்கக் கூடாது. ஆனால் வாக்காளர் பட்டியலில் உறவினர்களைக் காட்டுமாறு உங்களைக் கேட்பது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்பு உங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பெற்றோரை மட்டுமே அங்கீகரிக்கிறது. வேறு எந்த உறவினரின் குடியுரிமையையும் நிரூபிக்கத் தேவையில்லை.

ஆதாரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்வதுதான் எளிதான வழி. ஆதார் குடியுரிமைக்கு ஆதாரம் இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விசித்திரமான தர்க்கம். எனது கேள்வியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்வியும்: மெட்ரிகுலேஷன் சான்றிதழ் குடியுரிமைக்கு ஆதாரமா? சாதிச் சான்றிதழ்? நிலப் பட்டா? இவை அனைத்தும் குடியுரிமைக்கு ஆதாரமா? நாய் மற்றும் டிராக்டர் பெயரில் வழங்கப்பட்ட "நிவாஸ் பிரமாண் பத்ரா" (வசிப்பிடச் சான்றிதழ்) ஆதாரம் என்றால் – ஏன் ஆதாரை மட்டும் நீங்கள் விலக்குகிறீர்கள்? சாதாரண மக்கள் வைத்திருக்கும் ஆவணத்தை ஏற்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் பிடிவாதமாக உள்ளது.

இந்த விளையாட்டின் பெயர் வடிகட்டுதல்; நீக்குதல். ஒரு மாத கால நடவடிக்கைக்குப் பிறகு, 8 கோடி மக்களைச் சந்தித்ததாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் சேர்க்கப்பட வேண்டிய ஒரு நபரைக் கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது வேடிக்கையானது அல்லவா? நீக்குவதற்கு 65 லட்சம் பெயர்களைக் கண்டுபிடித்தீர்கள் – சேர்ப்பதற்கு ஒரு நபர் கூடவா இல்லை. வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டிய ஆனால் விடுபட்ட ஒருவரைக் கூட நீங்கள் சந்திக்கவில்லையா? இது வாக்குரிமை நீக்கத்திற்கானதொரு நடவடிக்கையாகவே இருந்தது.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வாக்காளர்களை நீங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தீர்கள். அந்தத் தருணத்தை பற்றி?

அந்த 65 லட்சம் பேர் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்தது. "நாங்கள் என்ன செய்ய முடியும்?" 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினர். நாங்கள், "இறந்தவர்களின் பட்டியலை எங்களுக்குக் கொடுங்கள்" என்று சொன்னோம். தேர்தல் ஆணையம் தரவில்லை. நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம், சில பூத் நிலை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மிகுந்த சிரமங்களுக்கிடையே எங்களுக்கு ஒரு சில பஞ்சாயத்துகளின் பட்டியல்களை வழங்கினர். நாங்கள் இறந்த பெயர்களைச் சரிபார்த்தோம் – பலர் உயிருடன் இருந்தனர்.

நீதியரசர் சூர்யா காந்த், முந்தைய விசாரணையில், "கவலைப்பட வேண்டாம். 15 பேர் உயிருடன் இருந்து, அவர்களைத் தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக நினைத்தாலும், அவர்களை எங்களிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அவர், அவர்களை உண்மையில் கொண்டு வர வேண்டும் என்று அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் இந்த பொய்யை உடைக்க ஒரே வழி அந்த மக்களை உண்மையில் கொண்டு வருவதுதான் என்று நாங்கள் நினைத்தோம்.

எங்களிடம் 22 பெயர்கள் இருந்தன. அரசியல் கட்சிகள் மூலம் யாராவது நீதிமன்றத்திற்கு வர முடியுமா என்று கேட்டேன். 36 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தது. சுமார் 10 பேர் டெல்லிக்கு வந்தனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைவுச் சீட்டுகளைப் பெறுவது கடினமாக இருந்தது, நீதிமன்ற அறைக்குள் நுழைவது இன்னும் கடினமாக இருந்தது. இறுதியாக மூன்று பேர் மட்டுமே உள்ளே செல்ல முடிந்தது. அது கூட பொய்யை உடைக்கப் போதுமானதாக இருந்தது. காகிதப் பொய்யை காகிதங்களால் உடைப்பது ஒரு விஷயம். காகிதப் பொய்யை உண்மையான மனிதர்கள் மூலமாக உடைப்பது முற்றிலும் வேறுபட்டது. தேர்தல் ஆணையத்தின் எதிர்வினை – அதை "நாடகம், நாடகமேடை" என்று அழைத்தது – அவர்களால் உண்மையைத் தாங்க முடியவில்லை என்பதைக் காட்டியது. உண்மை அவர்களுக்கு முன்னால் நின்றது.

அதிர்ஷ்டவசமாக, நீதியரசர் சூர்யா காந்த், இந்த நாட்டின் சாதாரண மக்கள் நீதிமன்றத்திற்கு வருவது நல்ல விஷயம் என்று கூறினார். அந்த அங்கீகாரத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளவனாக இருக்கிறேன். காகிதங்கள் மூலம் உண்மை பேசத் தேவையில்லாத அரிய தருணங்களில் இதுவும் ஒன்றாகும். உண்மை அங்கேயே நிலை நின்றது.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு எந்தளவுக்கு பயளிக்கும்?

அது ஒரு நேர்மறையான நடவடிக்கை. ஆனால் அந்த இடைக்கால உத்தரவு முற்றிலும் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரைப் பற்றியது மட்டுமே. வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள மீதமுள்ள 7.24 கோடி மக்கள், அவர்களின் பெயர்கள் இன்னும் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும், அவர்கள் இன்னும் ஆவணங்களை வழங்க வேண்டும், அவர்கள் நிலை இன்னும் அப்படியே உள்ளது. அது வெள்ளிக்கிழமை அடுத்த விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றம் அது குறித்தும் இடைக்கால உத்தரவுகளை வெளியிடும் என்று நம்புகிறோம்.

எஸ்.ஐ.ஆர். நாடு முழுவதும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதை பீகாருக்கு அப்பால் நீட்டிப்பது குறித்து உங்கள் பார்வை என்ன?

வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு பெயரையும் இரண்டு முறை, மூன்று முறை சரிபார்க்கும் கணக்கெடுப்பைத் தேர்தல் ஆணையம் செய்ய விரும்பினால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கும் செய்யுங்கள். போதுமான நேரத்தை ஒதுக்குங்கள், வெளிப்படையான வழிகாட்டுதல்களை வைத்திருங்கள், சரியான அறிவிப்பு, விசாரணை இல்லாமல் யாரும் நீக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சேர்த்தலுக்கு எவ்வளவு கவனம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு கவனம் நீக்குதலுக்கும் கொடுங்கள், ஏனென்றால் வாக்காளர் பட்டியலில் இல்லாத தகுதியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. செய்ய வேண்டியவற்றுக்கும், செய்யத் தவறியவற்றின் மீதும் கவனம் தேவை.

தேர்தல் ஆணையம் அதைச் செய்ய விரும்பினால், அது வரவேற்கப்பட வேண்டும், எளிதாக்கப்பட வேண்டும். அனைவரும் பங்களிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்-ஐ தற்போதைய வடிவத்தில் – இது பொறுப்பை வாக்காளர் மீது மாற்றுவது, குடியுரிமையை பறிப்பது – கொண்டு செல்ல விரும்பினால், அது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தைத் தகர்க்கும் ஒரு ஆபத்தான நடவடிக்கையாகும். இதை சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியரும் எதிர்க்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உடனடியாக என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும்?

முதலாவதாக: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவர் குறைந்தபட்சம் 1 லட்சம் ஆவணங்களைத் திரட்டியுள்ளார். விசாரணைக்கு உத்தரவிடுங்கள் – உள் விசாரணை அல்ல. நல முரண்பாடு கொள்கைகளின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலை உருவாக்குவதில் ஈடுபட்ட ஒருவரே அதைப் பற்றி விசாரணை நடத்த முடியாது. ஒரு முன்னாள் நீதிபதியை அழைக்கவும். இது வெறும் சடங்கை முடிப்பது அல்ல – தேர்தல் ஆணையம் உண்மையாக அதன் மீதான நம்பிக்கையைத் தக்க வைப்பதில் ஆர்வமாக இருந்தால், மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஒரு முன்னாள் நீதிபதியை விசாரிக்கச் சொல்லுங்கள். தேர்தல் ஆணையம் பின்வாங்கி, சாத்தியமான ஒவ்வொரு காகிதத்தையும் வழங்கும்.

இரண்டாவதாக: எஸ்.ஐ.ஆர். விஷயத்தில், தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள். கால அவகாசம் கொடுங்கள். அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆரம்பத்திலாவது, எஸ்.ஐ.ஆர்-ஐ பீகார் தேர்தலிலிருந்து பிரிக்கவும். மிக மோசமான அரசியல் குற்றச்சாட்டுகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, பின்வாங்குங்கள். நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அதைச் செய்யுங்கள், அது எப்படி முறையாக செய்யப்பட வேண்டுமோ அப்படி செய்யுங்கள்.

மூன்றாவதாக: இந்தியாவில் வாக்காளர் பட்டியல் பதிவு முறையை மேம்படுத்தவும். நான் இரண்டு தசாப்தங்களாகப் பரிந்துரைக்கும் ஒரு விஷயம் எளிமையான மாதிரிச் சோதனை (sample check). உலகின் மிகச் சிறந்த புள்ளிவிவர அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு நபரின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவும் நம்மிடம் உள்ளது. பிழைகள் இருக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும், எனவே ஒரு சுதந்திரமான மாதிரிச் சோதனையாக – 1% சதவிகித அளவுக்கு இரண்டு புள்ளிவிவரங்களும் ஒவ்வொரு ஆண்டும் பொதுவில் வெளியிடப்படலாம். நான் 1 சதவீதம் கூட சொல்ல மாட்டேன் – 0.1 சதவீதம் போதுமானது. அப்படி ஒரு மாதிரி சோதனையை தேர்தல் ஆணையம் செய்ய முடியாதா என்ன?

NSSO [தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்], இந்திய அரசின் அலுவலகங்கள், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் ஆகியோரைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல்களின் தரத்தைச் சரிபார்க்க முடியும். நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை? இவை அனைத்தும் நம்பிக்கையைத் தூண்டும். ஆனால், மேம்போக்கான கட்சி சார்பு அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதும், திரைப்பட வசனங்களைப் பேசுவதும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மற்றும் சுயாட்சியின் மீதான நம்பிக்கையை உருவாக்காது.

https://frontline.thehindu.com/interviews/election-commission-bihar-disenfranchisement/article69963785.ece

=======================================================

5 

அரசியலமைப்பின் மீதான மிக மோசமான தாக்குதலாக இருக்கலாம் SIR: தீபங்கர்

பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision - SIR), ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்கும் திட்டமிட்ட முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளரான தீபங்கர், இதை “துல்லியமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை” என்று அழைக்கிறார். இது சர்வஜன வாக்குரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

சபா நக்விக்கு அளித்த இந்த நேர்காணலில், SIR எவ்வாறு ஜனநாயக மறுவடிவமைப்பின் ஓர் பகுதியாக உள்ளது? பீகாரில் பாஜக நேரடியாக ஆட்சியைக் கைப்பற்ற சிரமப்படுவது உள்ளிட்ட அரசியல் ரீதியான பங்குகள் என்ன? இது "அரசியலமைப்பின் மீதான மிகப்பெரிய தாக்குதல்" என்று அவர் ஏன் கருதுகிறார்? என்பதைப் பற்றி விவாதிக்கிறார். 

அதன் பகுதிகள்:

இந்தியத் தேர்தல் ஆணையம் பீகாரில் சோதனை ஓட்டமாக சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் நமது ஜனநாயகம் மறுவடிவமைக்கப்படுகிறதா? பீகாருக்கும், சொத்துக்களும் ஆவணங்களும் இல்லாத மக்களின் உரிமைகளுக்கும் என்ன நேரும்?

தேர்தல் ஆணையம் இதை சிறப்புத் தீவிரத் திருத்தம் என்று அழைக்கிறது. பீகார் மக்கள் இதை வாக்குரிமைத் தடை (Vote Bandi) என்று அழைக்கின்றனர், இது பணமதிப்பிழப்பைப் (demonetisation) போன்றது. நான் இதை துல்லியமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று காண்கிறேன். இது தீவிரமானது அல்ல; இது முற்றிலும் ஆக்கிரமிப்புத் தன்மையுடையது, மேலும் இது வெறும் திருத்தம் அல்ல; இது வாக்காளர் பட்டியலின் முழுமையான மறுசீரமைப்பு ஆகும். வாக்குரிமையைப் பறிப்பதானது ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் போதுமான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு உண்மையான அச்சுறுத்தலாகும். வளர்ச்சி குன்றியவர்கள் ஆவணங்களும் அற்றவர்களாக இருக்கின்றனர். பீகார் சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலம் ஆகும், எனவே அது டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் ஆவணப்படுத்தலின் அடிப்படையிலும் பின்தங்கியுள்ளது.

ஆனால் மக்கள் தங்கள் ஜனநாயகத்தை உண்மையாக நேசிக்கும் மாநிலம்தான் பீகார். அவர்களுக்கு இந்த ஜனநாயகம் தேவை. 1989 தேர்தலை நான் நினைவு கூர்கிறேன். அப்போதுதான் மக்கள் முதன்முறையாக வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதை காண முடிந்தது. தேர்தல் நடைமுறையின் மீதான நிலப்பிரபுத்துவத்தின் இறுக்கமான பிடியை எதிர்த்துப் போராட முடிந்தது, தங்களின் வாக்குகளைச் செலுத்த முடிந்தது, அதற்குக் கடுமையான விலையையும் கொடுத்தனர். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, மக்கள் தங்கள் சொந்த பிரதிநிதிக்கு வாக்களிக்கத் துணிந்ததற்காக, வாக்குப்பதிவு நாளன்று சுமார் 22 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். நாங்கள் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தோம். எனவே மக்களுக்கு ஒரு வாக்கின் மதிப்பு தெரியும். அதை அவர்கள் அவ்வளவு எளிதில் தியாகம் செய்ய மாட்டார்கள்.

இந்தி பேசும் பகுதிகளில், பாஜக நேரடியாக ஆட்சிக்கு வராத ஒரே மாநிலம் பீகார் தான். தரவுகள் காட்டுவதாவது: பணக்காரர்கள், அதிக நிலம் வைத்திருப்பவர்கள், சலுகை பெற்ற சாதியினர் பாஜகவுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகம், அதே சமயம் ஏழைகள் வாக்களிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இது அதன் ஒரு பகுதியாக இருக்குமா? அல்லது வெறும் அலுவல் நடவடிக்கையாக இருக்குமா?

நாங்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தபோது எங்களிடம், மகாராஷ்டிராவில் பல சிக்கல்கள் எழுந்தன, அதனால்தான் இதைச் செய்கிறோம் என்று கூறினார். எனவே நான் அவரிடம், மகாராஷ்டிரா சிக்கல்களுக்கு மகாராஷ்டிராவிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். உங்களால் மகாராஷ்டிராவைப் பீகாருடன் சமநிலைப்படுத்த முடியாது. இது ஒரு தேர்தலுக்காக மட்டும் என்று நான் நினைக்கவில்லை. இது அகில இந்திய அளவில் உள்ளது—இந்தியாவில் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும், வாக்காளர் பட்டியல்கள் எவ்வாறு தயாரிக்கப்படும் என்பதற்கு இது ஒரு புதிய வழி என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது, மேலும் இப்போது நடக்கும் ஒரே தேர்தல் இது என்பதால் பீகாரில் தொடங்கி உள்ளனர்.

இது ஒரே ஒரு பீகார் தேர்தலை வெல்வதற்காக மட்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் பாஜக எப்படியும் ஆட்சியில் தான் உள்ளது. இது ஒரு இரட்டை என்ஜின் அரசாங்கம். SIR செய்வதன் நோக்கம் பீகாரில் அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றுவதற்கான அவர்களின் விரக்தி மட்டும் என்று நான் நினைக்கவில்லை. இது அதற்கு அப்பாற்பட்டது. இந்தியாவில் ஜனநாயகம் மறுவடிவமைக்கப்படுவதாக நீங்கள் சரியாகக் குறிப்பிட்டீர்கள்.

இந்த மூன்று விஷயங்களைப் பாருங்கள்: முதலாவதாக, தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம். மோடி அரசு ஒரு சட்டத்தை முன்வைத்த பிறகு நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையம் இதுதான். அதில் மூன்று பேர் கொண்ட குழுவில், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கும் என்று தெளிவாகக் கூறுகிறது. இப்போதெல்லாம் மோடியும் அமித் ஷாவும் தான் தங்கள் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்கிறார்கள்.

பிறகு, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற ஒட்டுமொத்த உந்துதல் உள்ளது. மூன்றாவது விஷயம் வாக்காளர் பட்டியல் ஆகும். இதுவே மிக முக்கியமான விஷயம், ஏனென்றால் உங்களுக்கு சர்வஜன வாக்குரிமை தேவையெனில், அது வாக்காளர் பட்டியலை உருவாக்குவதில் இருந்து தொடங்க வேண்டும். 1980களில், மக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருந்தனர், ஆனால் சாவடிகளைக் கைப்பற்றியதால் (booth capturing) அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. இருப்பினும், தங்கள் பெயர்களே பட்டியலில் இருக்காது என்ற மோசமான நெருக்கடி அப்போது இல்லை. இப்போது அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களிடம் உள்ளது. இது அரசியலமைப்பின் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இருக்கலாம். இது ஒவ்வொரு வீட்டிற்கும் நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளது. நமது அரசியலமைப்பின் முக்கியமன அஸ்திவாரமான சர்வஜன வாக்குரிமை தற்போது ஆபத்தில் உள்ளது.

நீங்கள் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" பற்றிப் பேசும்போது, அது கூட்டாட்சி ஒழிப்பு, வாக்குரிமையைப் பறித்தல், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்தல் ஆகியவற்றை செய்யும் ஒரு முழுமையான மறுவடிவமைப்பைக் காண்கிறீர்கள். இன்று இடதுசாரிகளால் வலதுசாரிகளை உண்மையில் எந்த அளவிற்கு எதிர்கொள்ள முடியும்?

பீகார் இந்தக் கூத்தினால் மகிழவில்லை. பீகார் இதை இலகுவாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவசரநிலை வருவதற்கு முன்பே, 1974 இயக்கம் நடந்த ஒரு மாநிலம் பீகார். அவசரநிலை (Emergency) அரங்கேறியபோதே - 1977 இல், அது நடைமுறையில் இருந்தபோதே - தேர்தல்கள் நடந்தன. மக்கள் அந்த அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் இடங்கள் கிடைத்த ஒரே மாநிலம் பீகார் தான்.

பீகார் பிரச்சனை முழுக்க முழுக்க குடியேற்ற மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றியது. காலனித்துவ காலத்தில் இருந்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் (indentured labourers) பெரும்பாலும் பீகாரைச் சேர்ந்தவர்கள். பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். கொரோனா [கோவிட்-19] ஊரடங்கின் போது, பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் முழுத் தாக்குதலின் சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. அவர்கள் கால்நடையாக வீட்டிற்கு நடக்க வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இது, பீகாரின் ஆத்மாவான புலம்பெயர் தொழிலாளர்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களையும் பாதிக்கும். 

இந்த SIR என்ன சொல்கிறது என்று பாருங்கள்: 2003 க்குப் பிறகு, அது ஒரு புதிய தலைமுறை. 40 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். இது முழுக்க முழுக்க உங்கள் குடியுரிமையை நிரூபிப்பதைப் பற்றியது. தேர்தல் ஆணையம் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் (அவர்கள் இதை வெறும் தகுதிச் சோதனை (eligibility testing) என்று அழைக்கிறார்கள்) உண்மையில் பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு [NRC] நடவடிக்கையில் இறங்குகிறார்கள். 40 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர், பீகாரின் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் - இவர்கள் அனைவரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். எனவே மக்கள் நிச்சயமாக எதிர்த்துப் போராடுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் போராட்டம் இடதுசாரிகளுக்கு ஆற்றலை அளிக்கும். போராட்டமே பீகார் மக்களுக்கான ஜனநாயகத்தின் இருப்பாகும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 19 இடங்களில் 12 இடங்களை வென்றீர்கள். நீங்கள் வென்ற பகுதிகளில், பாஜக பெரும்பாலும் உங்களிடம் தோற்றது. அதன்பின்னர், சமன்பாடுகள் வேறுபட்டுள்ளன—நிதிஷ் குமார் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார், லாலு யாதவ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார், சிராக் பாஸ்வான் களத்தில் நுழைந்துள்ளார். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தெற்கு பீகார் பகுதியில் தான் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். தெற்கு பீகாரில் தான் பாஜக மிக மோசமாகச் செயல்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். ஷாஹாபாத்தில் இருந்து நான்கு இடங்கள் உள்ளன. நான்கிலும் வெற்றி பெறப்பட்டுள்ளது — இரண்டு எங்கள் கட்சி, ஒன்று காங்கிரஸ், ஒன்று RJD. அண்டை மார்கத் பிராந்தியத்தில் மூன்று இடங்கள் உள்ளன. எனவே இந்தியா கூட்டணி வென்ற 10 இடங்களில், ஏழு ஷாஹாபாத் மற்றும் மகத் பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு பீகாரில் இருந்து வந்தவை. பாஜக அதிக கவனம் செலுத்துவதை நீங்கள் காணலாம். பிரதம மந்திரி பீகாருக்கு வந்த முதல் முறையாக இருக்கலாம், மோடியின் இரண்டாவது பேரணி பீகாரில் இருந்தது. அதற்குப் பிறகு, அரா (Ara) பகுதியில் சிராக் பாஸ்வானின் பேரணி நடந்தது, இது அடிப்படையில் தெற்கு பீகார் முழுவதையும் அணிதிரட்டுவதாகும். நான் 243 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறேன் என்று அவர் கூறினார், மேலும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடும் என்ற பேச்சுகளும் உள்ளன.

ஆனால் நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்திருந்தாலும், அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சட்டம் ஒழுங்கில் கட்டுப்பாடு இழந்திருந்தாலும், அவர்கள் அவரைக் கைவிடப் போவதில்லை என்று நினைக்கிறீர்களா?

இப்போது பீகாரில் ஒரு பயங்கர ஆட்சி நிலவுகிறது. இது குற்றவாளிகளின், குற்றவாளிகளால் நடத்தப்படும், குற்றவாளிகளுக்கான அரசாங்கம். பாராஸ் மருத்துவமனையில் நடந்த அந்தக் கொலை CCTV காட்சியை நீங்கள் பார்த்திருந்தால், அந்த ஐந்து இளைஞர்கள் எப்படி வந்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் சென்றார்கள். யாரும் தங்கள் முகத்தை மறைக்க முயற்சிக்கவில்லை. இது தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அவர்களுக்கு ஆதரவு உள்ளது என்பதையும் அறிந்திருப்பதால், பயம் அறவே இல்லாததைக் காட்டுகிறது. நிதிஷ் குமாரின் முக்கிய கோஷம் சுஷாசன் (Sushasan), அதாவது நல்லாட்சி. குற்றவாளிகள் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இந்த நிலைதான் நல்லாட்சி என்றால், அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.

ஆனாலும் பாஜகவுக்கு நிதிஷ் குமார் இன்னும் தேவைப்படுகிறார். நிதிஷ் குமார் இல்லாமல், மோடி 3.0 நடந்திருக்காது. அதனால்தான் தேர்தலுக்கு சற்று முன்பு அவர் திசை திருப்பப்பட வேண்டியிருந்தது. இப்போதும், ஒடிசாவையும் பீகாரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் - ஒடிசாவில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலையைப் பற்றித்தான் மோடி மிகவும் கவலைப்பட்டார். ஆனால் இங்குள்ள அனைவரும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நிதிஷ் குமாரின் உடல்நிலை, அவரது பொது நடத்தை, ஆகியவற்றால் நிதிஷ் குமார் இனி ஆட்சியில் இல்லை என்று கருதுகிறார்கள். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) யாரும் அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஒருவேளை, இப்போதைக்கும் - தேர்தலுக்கும் அவர்களுக்கு நிதிஷ் குமார் தேவைப்படலாம். ஆனால் வேறு ஏதோ சதி நடக்கிறது என்று மக்களுக்குத் தெரியும்.

ராகுல் காந்தி கேரளாவில் இடதுசாரியை ஆர்.எஸ்.எஸ் உடன் சமன்படுத்தும் ஒரு அறிக்கையை கூட வெளியிட்டார். இருப்பினும், RJD தலைமையில் உள்ள எதிர்க்கட்சி கூட்டணியைப் (gathbandhan) பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதில் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மற்றும் நீங்களும் இருக்கிறீர்கள்? 

நான் அதை சமன்படுத்துதல் என்று அழைக்க மாட்டேன், ஆனால் எப்படியோ அவர் இரண்டையும் ஒன்றாக இணைப்பதற்கான ஒன்றை கண்டுபிடித்துள்ளார், அது தேவையற்றது. மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் புவியியல் ரீதியான மாறுபட்ட அரசியலை கருத்தில் கொண்டு, முற்றிலும் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டணியை கொண்டிருக்க முடியாத சில மாநிலங்களைக் காண முடிகிறது.

இந்தியா கூட்டணி அடிப்படையில் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் அனைத்து முக்கிய அரசியல் நீரோட்டங்களும் ஒன்றிணைவதாகும். நாங்கள் பகத் சிங்கின் வாரிசுகள். இந்திய இடதுசாரி இயக்கம் வேறு ஒன்றும் இல்லை. பகத் சிங் தான் இந்தியாவின் முதல் உண்மையான இடதுசாரி தலைவராக இருந்தார். எனவே பகத் சிங்கின் பாரம்பரியம், அம்பேத்கரின் பாரம்பரியம், காந்தி மற்றும் நேருவின் பாரம்பரியம், பெரியாரின் பாரம்பரியம்—இந்த அனைத்து பாரம்பரியங்களும் சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாகும். சுதந்திர இயக்கத்தில் ஒருபோதும் பங்கேற்காத, சுதந்திர இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட இந்த சக்தியை எதிர்த்துப் போராட நாம் ஒன்றாக இணைய வேண்டும்.

வேறுபாடுகள் இருக்கலாம். வங்காளத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் எதிரெதிர் நிலையில் இருப்பதைக் காண்பீர்கள். கேரளாவில், இடதுசாரி ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பாஜக அல்லாத சக்திகள் அனைத்தும் பாஜக எதிர்ப்புச் சக்திகளாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் பாஜக அனைவரையும் தனதாக்கிக் கொள்கிறது. பாஜக அல்லாத கட்சிகள் - பாஜக அல்லாதவையாக இருப்பது மட்டும் போதாது. நீங்கள் பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தியா கூட்டணியில், நாங்கள் ஒன்றாக அணிவகுத்து ஒன்றாகத் தாக்குவது என்று முடிவு செய்துள்ளோம்.

கட்டமைப்பு ரீதியாகவே, சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLOs) தற்காலிக அரசு ஊழியர்கள், சாவடி நிலை முகவர்கள் (Booth Level Agents - BLAs) ஆகியோர் பொதுவாகவே ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களாக இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய தொண்டர் அமைப்பை RJD, காங்கிரஸ், சிபிஐ(எம்-எல்)எல் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?

நான் உங்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். 

முதலாவது, வங்கதேசம் - மியான்மர் - நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிப் பேசப்படுகிறது. சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடு வீடாகச் சென்று பார்க்கும்போது இதுபோன்ற விஷயங்களைக் கண்டுபிடிப்பதாகப் பேசப்படுகிறது. ஆனால் ஜூலை 10, 2019 அன்று ரவி சங்கர் பிரசாத் சட்டம் மற்றும் நீதி அமைச்சராக இருந்தபோது, அவர் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் கூறினார்: 2016 முதல் 2019 வரை, வாக்காளர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவர்கள் குறித்து இந்தியா முழுவதும் இருந்து மூன்று புகார்கள் மட்டுமே வந்தன. அந்த மூன்று வழக்குகளும் 2018 இல் இருந்தன - ஒன்று தெலுங்கானா, ஒன்று மேற்கு வங்கம், ஒன்று குஜராத், பீகாரில் ஒன்று கூட இல்லை. எனவே பீகார் கிராமங்களில் வெளிநாட்டு பிரஜைகளின் உட்புகுதல் பற்றிய இந்த திடீர் கண்டுபிடிப்பு நம்பகத்தன்மையை மீறுகிறது.

இரண்டாவதாக, அவர்கள் பின்வாசல் வழியாக NRC-ஐ அறிமுகப்படுத்துகிறார்கள். பிப்ரவரி 25, 2020 அன்று, பீகார் சட்டமன்றம் ஏகமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது (அப்போதும் நிதிஷ் குமார் பாஜகவுடன் இருந்தார்) - பீகாருக்கு NRC தேவையில்லை. பீகாரில் ஒருபோதும் NRC இருக்காது. இப்போது அவர்கள் இந்த வாக்காளர் பட்டியல் வழியாக NRC-ஐ பீகாரில் அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர். பீகாரில் உள்ள மக்கள் இதை ஏற்கப் போவதில்லை.

சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் சாவடி நிலை முகவர்கள் (BLAs) அழுத்தத்தில் உள்ளனர். BLO-கள் நீக்கம் செய்வதற்கான கருவிகளாக இருக்கும்போது, அவர்கள் மக்களை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் வெறும் வாக்குரிமையைப் பறிப்பதற்கான கருவிகளாக செயல்பட்டால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

பீகாரில் நீங்கள் 40 ஆண்டுகள் பணியாற்றியதன் நோக்கம் என்ன? உலகம் நிலப்பிரபுத்துவ கட்டத்திலிருந்து சமூக ஊடகங்கள் மற்றும் பண பொருளாதாரத்திற்கு மாறியுள்ளதை நீங்கள் எவ்வாறு மாற்றியமைக்கிறீர்கள்?

நாங்கள் தொடங்கியபோது, 1970களில் முக்கிய பிரச்சினைகள் மூன்று: நிலம், கூலி, மற்றும் கண்ணியம். கண்ணியம் தான் மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது—யாராவது ஒரு கட்டிலில் உட்கார முடியுமா, செய்த வேலைக்கு கூலி கேட்க முடியுமா என்பது தான். பின்னர் படிப்படியாக 1980களில், நாங்கள் வாக்குரிமைக்காகப் போராடினோம். இப்போது, கண்ணியம் என்பது உங்களுக்கு உரிமைகள் இருக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வது—கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மற்றும் கண்ணியமான கூலியுடன் பாதுகாப்பான வேலைவாய்ப்பு. நிகழ்ச்சி நிரல் பெரியதாகிவிட்டது. இதில் செழுமைப்படுத்தல் ஏற்பட்டுள்ளது.

தங்கள் வாக்களிக்கும் உரிமைக்காக, அடிப்படை மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தற்போதைய தலைமுறை அந்த விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறது. ஆனால் அவர்கள் கல்வி, வேலைகள், கண்ணியமான கூலி தேவை என விரும்பும் ஒரு தலைமுறை. நாங்கள் இதை ஒரு தொடர்ச்சியாகக் காண்கிறோம்.

உலகம் மாறியுள்ளது, ஆனால் முடிவில், முக்கியமானது மக்கள் தான். குறிப்பாக பீகார், மக்களின் வாழ்க்கை இன்னும் துடிப்புடன் இருக்கும் ஒரு மாநிலம் அது. பாஜக பீகாரில் வகுப்புவாதம் (communalism) மேற்கொள்ளும் கட்சியாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது நிலப்பிரபுத்துவ சக்திகளைக் குறிக்குமொரு கட்சியாகவும் இருக்கிறது. எனவே பாஜகவின் எழுச்சி பீகாரில் நிலப்பிரபுத்துவ மறுசீரமைப்பின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.

அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) சீமாஞ்சல் பகுதியில் சில இடங்களை வென்றது, மேலும் RJD உடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. காசா இனப்படுகொலை, பஹல்காம் தாக்குதல் போன்ற உலக நிலைமைகள் பற்றி உங்கள் கருத்துக்கள்?

AIMIM ஒரு அகில இந்தியக் கட்சி. கடந்த தேர்தலில் அவர்கள் ஐந்து இடங்களை வென்றனர், ஆனால் மக்களவைத் தேர்தலில் அவர்கள் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் முஸ்லிம் வாக்குகளை மட்டும் குறிவைப்பவர்களால் போதுமான அளவு கவனிக்கப்படுவதில்லை என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அவர்கள் முஸ்லிம் வாக்குவங்கியை மட்டுமல்லாமல் அவர்களின் பிரச்சனைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்திற்குப் பிறகுதான் AIMIM பீகாரில் நுழைந்தது.

பஹல்காம் - இப்போது 90 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதையெல்லாம் செய்த அந்த நான்கு / ஐந்து பயங்கரவாதிகள் எங்கே என்று தெரியவில்லை. அவர்களை நீதிக்கு முன் நிறுத்துவது தான் முக்கிய கேள்வி. துணை நிலை ஆளுநர், மனோஜ் சின்ஹா, ஒரு நேர்காணலில், இது பெரிய பாதுகாப்பு தோல்வி, நான் பொறுப்பேற்கிறேன் என்று கூறுகிறார். நாற்காலியில் அமர்ந்து கொண்டு எப்படிப் பொறுப்பேற்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது பாதுகாப்புத் தோல்வி என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டால், காஷ்மீரின் மாநில அந்தஸ்தைப் பறித்தது ஒரு பெரிய தவறு என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். காஷ்மீர் அதன் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற வேண்டும்.

இந்த வெளியுறவுக் கொள்கை தனிமைப்படுத்தலுக்கு முதன்மையான காரணம் என்னவென்றால், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் கூட்டுக்கு அடமானம் வைத்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இனப்படுகொலையை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கண்டனம் தெரிவிக்க உங்களுக்கு தைரியம் இல்லை என்றால், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளும் அதைச் செய்யும்போது, நாம் வாக்களிக்காமல் விலகினோம் என்றால் - பஹல்காம் பற்றி உலக மக்கள் கவலைப்படுவார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதுதான் நமக்கு இந்தத் தனிமைப்படுத்தலையும், இந்திய வெளியுறவுக் கொள்கையின் முழுமையான தடம் புரளலையும் கொண்டு வந்துள்ளது.

இது முழுமையானதொரு துரோகம் ஆகும். பொருளாதாரம் முதல் ஆளுகை, வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் ஒற்றுமை வரை ஒவ்வொரு துறையிலும் ஒரு முழுமையான தோல்வி ஆகும். தேசிய இயக்கம்தான் இந்தியாவை ஒன்றிணைத்தது. அரசியலமைப்புதான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய அடிப்படை ஆகும். ஆனால், நீங்கள் ஒரு மொழியை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தினால், ஒரு மதத்தை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தினால், நாட்டைப் பிரித்துக் கொண்டே இருந்தால், SIR உள்ளிட்ட இவை அனைத்தின் மூலம், பாஜக இன்னும் தெளிவாக பரவலான மக்களுக்கு தன் முகத்தை வெளிப்படுத்துகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த ஒரு வருடத்தின் இந்த முழு அனுபவமும் இந்திய மக்களுக்கு அதிக அனுபவத்தை அளித்துள்ளது. மக்கள் நிச்சயமாக தங்கள் இறுதித் தீர்ப்பை வழங்குவார்கள்.

(சபா நக்வி)

https://frontline.thehindu.com/interviews/dipankar-cpiml-bihar-sir-bjp-migrant-voters-indian-constitution/article69858367.ece

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு