சிறு விவசாயிகளின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிராக நிறுத்தப்படும் பகாசுர நிறுவனங்களின் "போலியான காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரல்"

குளோபல் ரிசர்ச்

சிறு விவசாயிகளின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிராக நிறுத்தப்படும் பகாசுர நிறுவனங்களின் "போலியான காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரல்"

உணவு மற்றும் விவசாயத் துறையில் அதிகரித்து வரும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், பல்வேறு தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்க கூடாது, எனவே சரியான கொள்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியும்.

உணவு மற்றும் பண்ணை துறைக்கான முன்னுரிமைகளையும் அதனுடன் இணைந்த கொள்கைகளையும்  கவனிப்பதன் மூலம் இது தெளிவாகிறது:

  •      பண்ணைகளில் ஆரோக்கியமான, சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு உற்பத்தி,
  •      தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள்  இல்லாத இயற்கை வழிகளில் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தை பராமரிக்கும் வழிகளில் உற்பத்தி,
  •      மண்ணின் பாதுகாப்பு, அதன் கரிம சத்துக்கள் மற்றும் நீரிருப்பை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  •      நீரைப் பாதுகாத்தல், அத்தியாவசிய பாசனத்தை செய்தல், அதே நேரத்தில் அதிகப்படியான வீணான நீர்ப்பாசனத்தைத் தவிர்த்தல் மற்றும் எந்தப் பகுதிக்கும் அதிக தண்ணீர் தேவைப்படும் வணிகப் பயிர்களைத் தவிர்த்தல்,
  •      மண் மற்றும் நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளைப் பாதுகாத்தல், நன்மைபயக்கும் அனைத்து பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் மகரந்தச் சேர்க்கைகளைப் பாதுகாத்தல். சிலந்திகள், ஆந்தைகள் மற்றும் கழுகுகளும் கூட அவற்றின் பயனுள்ள பாத்திரங்களை வகிக்குமாறு இயற்கையின் சூழலில் சமநிலையைப் பேணுதல்.
  •      உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலை தங்கள் பகுதி நேர அல்லது முழு நேர வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுக்கும் அனைவருக்கும் நிலையான, ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான மற்றும் திருப்திகரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்தல்,
  •      உள்ளூர், கிராமம் சார்ந்த குடிசை மற்றும் சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் திறனை அதிகப்படுத்துதல்,
  •      முதலாவதாக விவசாயிகள் மற்றும் இரண்டாவதாக குடிசை மற்றும் சிறு உணவு பதப்படுத்துபவர்கள் (இரண்டு செயல்பாடுகளும் ஒரே பண்ணை குடும்பம் அல்லது பண்ணை யூனிட்டில் இணைக்கப்படலாம்) சில்லறை விலையில் பெரும்பகுதியை நியாயமான பங்குடன் பெறும் வகையில் உணவு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல்.
  •      அதிகபட்ச உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் விவசாயத் தொழில்நுட்பம் முடிந்தவரை தன்னிறைவு பெற வேண்டும், அதே நேரத்தில் விவசாயிகளுக்கான உள்ளீடு செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.
  •      டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்கள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் பயன்பாடுகள் குறைக்கப்பட வேண்டும். முக்கியமாக இவற்றுக்கு மானியம் வழங்கப்படக்கூடாது,
  •      அனைத்து சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் அனைத்து மானியங்களும் நேரடியாக வழங்கப்பட வேண்டும், மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை உற்பத்தி செய்பவர்களுக்கும் இவை அதிகமாக கொடுக்கபட வேண்டும்.
  •      பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உற்பத்தி செய்யும் அனைத்து சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவை உள்ளூர் கிராமங்கள், அருகிலுள்ள நகரங்கள் மற்றும் இடையக சேமிப்புகளுக்கு அரசாங்க கொள்முதல் அமைப்புகள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும்.
  •      உணவு விநியோக தொலைவுகளை குறைக்கும் கருத்தை கவனமாக பின்பற்ற வேண்டும்,
  •      இயன்றவரையில் விவசாயம் செய்ய ஆர்வமுள்ள நிலமற்ற அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் விளைநிலங்களையாவது ஒதுக்கி அவர்களின் மூலம் உணவு பயிர் தோட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
  •      கிராமத்தில் இன்னும் சில விவசாய நிலங்களை பெற முடியாத நிலமற்ற குடும்பங்கள் பழங்கள், உலர் பழங்கள், தீவனம், மருந்துகள், எண்ணெய் வித்துக்கள் அல்லது சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கும் பயிர்வகைகளை வளர்ப்பதற்கு கிராமத்திலோ அல்லது அருகிலோ உள்ள தரிசு நிலங்களை அரசாங்க ஆதரவுடன் பயன்படுத்தி தங்களது சமூக பங்களிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், அவர்கள் அந்த நிலத்தின் மீதான உரிமைகளையும் பெற செய்ய வேண்டும்.
  •      பண்ணை விலங்குகளுக்கு போதுமான ஆரோக்கியமான தீவனம் மற்றும் புண்ணாக்குகள் கிராம அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். மேலும் சிறந்த மேய்ச்சல் நிலங்களைக் கொண்டிருப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  •      உள்நாட்டு விதைகள் மற்றும் ரகங்களின் பரவலான பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதோடு, பல்வேறு வகையான கலப்பின பயிர்களை (மரங்கள் உட்பட) இணக்கமான  விவசாய முறைகள் மற்றும் பயிர் சுழற்சி முறைகளில் வளர்த்து, உள்ளூர் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முதன்மையான முன்னுரிமை அளித்து உற்பத்தி செய்ய வேண்டும்.

இந்த வகையில் இன்னும் ஏராளமாக  பட்டியலிடலாம். மேலுள்ளவை  பயனுள்ள முன்னுரிமைகள் பற்றிய சரியான யோசனைகளை அளிக்கிறது. இந்தியாவின் நிலைமைகளை நன்கு அறிந்திருப்பதால், இந்த எழுத்தாளர் இந்தியாவின் சூழலுக்கேற்ற தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார், இருப்பினும் இந்த யோசனைகள் பல நாடுகளுக்கும் பொருத்தமானதே.

இந்த முன்னுரிமைகளும் கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்ட இரண்டு குறிப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன. முதலாவதாக, ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, இந்தக் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நிறைவோடு  ஒத்துப்போகின்றன. பொதுவாக இவை ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதோடு இவைகளுக்குள் முரண்பாடும் ஏதும் இருக்காது.

அனைத்து மக்களின் நீதி, அமைதி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனைத்து வகையான வாழ்க்கையின் பாதுகாப்பு போனறவை உணவு மற்றும் விவசாயத் துறையில் பயன்படுத்தப்படுவதால் இது  ஒரு விரிவான சிந்தனையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இரண்டாவதாக, காலநிலை மாற்றம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு முனபேபுகூட இந்த முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும், இதே கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் தான்  காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசிய - பொருத்தமான கொள்கைகளாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு - கரியமிலவாயு உமிழ்வை வெகுவாகக் குறைத்தல் போன்ற காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் போன்கறவற்றுக்கு இணையாக சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, மண் மற்றும் நீர் பாதுகாப்பு, நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கும் (பல தலைமுறை விவசாயிகளின் ஞானத்திலிருந்து உருவானதன் விளைவாக இது பாரம்பரிய நடைமுறைகள் என்றும் அழைக்கப்படும்) இக்கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் நன்மை விளைவிக்கின்றன.

எனவே பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதும், அதை விவசாயம் மற்றும் உணவுப் பின்னணியில் எவ்வாறு மாற்றியமைப்பதும் என்றும் பல தலைமுறை விவசாயிகள் ஏற்கனவே நன்கு அறிந்திருந்த போதிலும் அதிகரித்து வரும் பெருவணிக நலன்களின் தாக்கத்தினால் சமீப காலங்களில் அந்த பாராம்பரிய முறைகளை நிராகரித்து வருகின்றனர்.

புதைபடிவ எரிபொருள் பயன்பாடு, மாசுபாடு, ஒற்றைப் பயிர்கள், நீர் மற்றும் மண வளததை  அதிகமாகச் சுரண்டுதல், பாரம்பரிய விதைகளின் பன்முகத்தன்மையை  ஒழித்தல், கலப்பு விவசாய முறைகள் மற்றும் விரைவான பயிர் சுழற்சிகள், சிறு விவசாயிகளிடையே கடன் சுமை மற்றும் நிலபறிப்பு மூலம் பெருக வணிக நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுவதை நோக்கமாக கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே காலநிலை மாற்றத்தைத் தணித்தல்  என்பது பெருவணிக நலன்களுக்காக  திணிக்கப்பட்ட கேடான தாக்கங்களிலிருந்து விடுபடுவதாகும்.

இவ்வளவு பரவலாக ஆவணப்படுத்தப்பட்ட பதிவு இருந்தபோதிலும், பெருவணிக நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கு மற்றும் ஏகபோகங்களுக்காக , பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதிலும், இந்தத் துறையின் பின்னணியில் தகவமைப்பதிலும் தலைமைப் பாத்திரம் வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றன, இதனால் அவர்கள் முழு நிகழ்ச்சி நிரலையும் கூட முழுவதும் சிதைக்க முடியும்..

இதுவே உணவு மற்றும் விவசாயத் துறையில் இன்று இருக்கும் முக்கிய அச்சுறுத்தலாகும் - மரபனு மாற்று பயிர்களைப் போன்ற அதிக சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்ட பெருவணிக நலன்களால் சிறு விவசாய முறையின் பயனுள்ள கொள்கைகளின் முழு நிகழ்ச்சி நிரலும் சிதைக்கப்படும். இந்த அச்சுறுத்தலே இன்று பரவலாக எதிர்க்கப்பட வேண்டியது.

(பாரத் டோக்ரா - குளோபல் ரிசர்ச்சில் தொடர்ந்து பங்களித்து வரும் கெளரவ எழுத்தாளர். இப்போது பூமியை காப்பதற்கான பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது சமீபத்திய புத்தகங்களில் இந்தியாவின் நிலையான விவசாயம் மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான தேடுதல், மேன் ஓவர் மெஷின் மற்றும் வென் தி டூ ஸ்ட்ரீம்ஸ் மெட் ஆகியவை அடங்கும்.)

குளோபல் ரிசர்ச்

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.globalresearch.ca/heritage-practices-small-farmers-helping-check-climate-change-but-threatened-by-big-business/5824908

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு